Thursday, June 16, 2022

இது இந்தியாவா ? இல்லை இஸ்ரேலா ?

இஸ்லாம் மனித வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை வழிகாட்டுதல்களையும் வாழ்வியல் நெறிமுறைகளை தெளிவாக வழங்கியிருக்கிறது. மனிதன் எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது, எதைப் பெற வேண்டும் எதைப் பெறக்கூடாது, எப்படி நடக்க வேண்டும் எப்படி நடக்கக் கூடாது, எப்படி வாழ வேண்டும் எப்படி வாழக் கூடாது, இப்படி அத்தனை விஷயங்களையும் தெளிவாக சுட்டிக் காட்டியிருக்கிறது.

அந்த அடிப்படையில் இஸ்லாமியப் பார்வையில் மனிதன் செய்யக் கூடாத விஷயங்களின் வரிசையில் அநியாயமும் ஒன்று. ஒருவன் எப்போதும் எந்த சூழ்நிலையிலும் யாருக்கும் எந்த அநீதத்தையும் செய்து விடக் கூடாது.

يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا».

ஹதீஸே குதுஸி ஒன்றில் அல்லாஹ் கூறுகின்றான் ; என் அடியார்களே அநீதத்தை என் மீது நான் தடை செய்து விட்டேன். உங்களிடையேயும் அதை நான் தடுத்திருக்கிறேன். எனவே நீங்கள் ஒருவருக்கொருவர் அநீதம் செய்யாதீர்கள்.  (முஸ்லிம் 2577)

அநீதம் என்று வருகின்ற போது இஸ்லாம் அதை மூன்று வகையாக வகைப்படுத்துகிறது. 1,மனிதன் இறைவனுக்குச் செய்கின்ற அநீதம். இரண்டாவது மனிதன் தனக்குத் தானே செய்து கொள்கின்ற அநீதம். 3, மனிதன் பிற மனிதர்களுக்கு செய்கின்ற அநீதம்.

இறைவனுக்கு செய்கின்ற அநீதம் என்பது இறைவனுக்கு இணை கற்பிக்கும் காரியங்களைச் செய்வது, இறைவனுக்கு இணை வைக்கும் செயல்களில் ஈடுபடுவது.

وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ}

لَمَّا نَزَلَتْ هَذِهِ الآيَةُ: {الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ} شَقَّ ذَلِكَ عَلَى أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالُوا: أَيُّنَا لَمْ يَظْلِمْ نَفْسَهُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لَيْسَ كَمَا تَظُنُّونَ، إِنَّمَا هُوَ كَمَا قَالَ لُقْمَانُ لِابْنِهِ: {يَا بُنَيَّ لاَ تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ})[4]

யார் ஈமான் கொண்டு பின்பு தங்கள் ஈமானை அநீதத்தைக் கொண்டு களங்கப்படுத்த வில்லையோ அவர்களுக்கே பாதுகாப்பு உண்டு.மேலும் அவர்கள் தான் நேர்வழி பெற்றவர்கள்” என்ற (6 : 82) இறை வசனம் இறங்கிய போது ஸஹாபாக்களுக்கு அது கவலையை ஏற்படுத்தியது. எங்களில் யார் தான் தனக்கு அநீதம் செய்யாமல் இருக்கிறார்? (அதாவது எங்களில் யார் தான் பாவம் புரியாமல் இருக்கிறார்? இந்த வசனத்தின் படி எங்களில் யாருமே நேர்வழி பெற்றவர்கள் இல்லையா என்ற சந்தேகம் அவர்களுக்கு ஏற்பட்டு நபியிடம் அதற்கான விளக்கத்தைக் கேட்டார்கள்) அதற்கு நபி  அவர்கள் இந்த வசனத்தில் நீங்கள் நினைப்பதைப் போன்ற அநீதத்தை அல்லாஹ் கூற வில்லை.  நிச்சயமாக இணை வைத்தல் பெரும் அநீதமாகும் என்று லுக்மான் அலை அவர்கள் தன் மகனைப் பார்த்துக் கூறிய இணை வைப்பைத்தான் குறிப்பிடுகிறான் என்றார்கள். (முஸ்லிம் : 124)

மனிதன் தனக்குத் தானே அநியாயம் செய்து கொள்வது என்பது இறைக் கட்டளையை மீறுவதுஇறைவனுக்கு மாறு செய்வது. பாவமான காரியங்களில் ஈடுபடுவது. ஒருவன் இறைக்கட்டளையை மீறுகின்ற போது இறைவனுக்கு மாறு செய்கின்ற போது பாவமான காரியங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கின்ற போது இறைவனின் கோபத்திற்கும் அதிருப்திக்கும் ஆளாகிறான்அதனால் இறைவனிடம் தண்டனையையும் பெறுகிறான். அந்த அடிப்படையில் தான் தனக்கு தானே அநீதம் செய்து கொண்டான் என்று சொல்லப்படுகிறது.

இந்த கருத்தைக் குறிப்பிடுகின்ற வசனங்கள் குர்ஆனில் நிறைய உண்டு.

وَتِلْكَ حُدُودُ اللَّهِ وَمَن يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَقَدْ ظَلَمَ نَفْسَه

அவைகள் அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வின் வரம்புகளை எவர் மீறுகிறாரோ அவர் தனக்குத் தானே அநீதம் இழைத்து விட்டார். (65 1)

பிற மனிதர்களுக்கு செய்கின்ற அநீதம் என்பது அவர்களின் உரிமைகளை பறிப்பது. அவர்களின் மான மரியாதைகளில் கை வைப்பது. அவர்களது பொருட்களை அபகரிப்பது,குறிப்பாக அநாதைகளின் பொருட்களை கையாடல் செய்வது, அவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்குவது, பிற மனிதர்களின் நிலங்களை கைப்பற்றுவது, முதலாளியிடத்தில் விசுவாசம் இல்லாமல் நடந்து கொள்வது, தொழிலாலர்களுக்கு சரியான ஊதியம் கொடுக்காமல் மோசடி செய்வதுஅநியாயக் காரர்களுக்கு உதவுவது,ஒரு நாடு தன்னை நம்பி தன்னிடத்தில் நாட்டை ஒப்படைத்த மக்களுக்கு துரோகம் செய்வது. இப்படி அநீதத்தின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இந்த மூன்று வகை அநீதங்களில் எதுவாக இருந்தாலும் இஸ்லாம் அதை தடுக்கிறது. கூடாது என்று சொல்கிறது. அதை வன்மையாக கண்டிக்கிறது.அநீதம் இழைப்பவர்களின் மீது இறைசாபம் ஏற்படும் என்று குர்ஆன் எச்சரிக்கிறது.

قال ميمون بن مهران: «إن الرجل يقرأ القرآن، وهو يلعن نفسه، قيل له: وكيف يلعن نفسه؟ قال: يقرأ: {أَلاَ لَعْنَةُ اللَّهِ عَلَى الظَّالِمِينَ} ، وهو ظالم»[8]

மனிதன் தன்னை சபித்துக் கொண்டே குர்ஆனை ஓதுகிறான் என்று மைமூன் பின் மிஹ்ரான் ரலி அவர்கள் சொன்னார்கள். எப்படி என்று கேட்கப்பட்ட போது அநீதம் இழைத்தவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகும் என்ற வசனத்தை ஓதுகிறான். அவன் அநீதம் செய்தவனாக இருக்கிற போது அந்த சாபம் அவன் மீதே ஏற்பட்டு விடுகிறது என்றார்கள். (தன்பீஹுல் ஙாஃபிலீன்)

நபி  அவர்கள் யாருக்கும் அநீதம் செய்து விடக்கூடாது, யாரின் உரிமையையும் பறித்து விடக்கூடாது என்பதில் அதிக கவனத்தை எடுத்துக் கொண்டார்கள்.

عن عبدِ اللَّهِ بنِ مسعودٍ قالَ كُنَّا يومَ بدرٍ كلُّ ثلاثةٍ على بعيرٍ كانَ أبو لبابةَ وعليُّ بنُ أبي طالبٍ زميلَي رسولِ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وعلى آلِه وسلَّمَ قالَ وكانت عُقبَةُ رسولِ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وعلى آلِه وسلَّمَ قالَ فقالا نحنُ نمشي عنكَ قالَ ما أنتما بأقوى منِّي ولا أنا بأغنى عنِ الأجرِ منكما

பத்ர் பயணத்தின் போது ஒட்டகங்கள் குறைவாக இருந்ததினால்  மூன்று நபர்களுக்கு ஒரு ஒட்டகம் என்று பிரித்து கொடுக்கப்பட்டது.மூவரும் முறை வைத்து அதில் பயணிக்க வேண்டும். அதனடிப்படையில் அபூலுபாபா ரலி, அலி ரலி, நபி  அவர்கள் ஆகிய மூவருக்கும் ஒரு ஒட்டகம் ஒதுக்கப்பட்டது.இருவர் ஒட்டகத்தின் மீது அமர வேண்டும். ஒருவர் ஒட்டகத்தை வழிநடத்த வேண்டும். இது தான் முறை. ஆனால் அந்த இரு ஸஹாபாக்களும் யாரசூலல்லாஹ்! நீங்கள் இறங்க வேண்டாம். நாங்கள் இருவர் மட்டும் மாறி மாறி இறங்கிக் கொள்கிறோம் என்று சொன்னார்கள். அதைக் கேட்ட நபி  அவர்கள் நீங்கள் இருவரும் என்னை விட பலசாலிகள் அல்ல.மேலும் நன்மையைப் பெறுவதில் நான் தேவையற்றவனும் அல்ல என்று கூறினார்கள். (முஸ்னத் அஹ்மது 841)

மூன்று நபர்கள் முறை வைத்து பயனிப்பதற்கு ஒரு வாகனம் இருக்கிறது. அதில் இரண்டு நபர்கள் தங்கள் முறையை விட்டுக் கொடுப்பதற்கு முன் வருகிறார்கள். அவர்களின் முறைகளையும் சேர்த்து எடுத்துக் கொண்டு தொடர்ந்து பயணிப்பதற்கு நபி  அவர்களுக்கு எல்லா தகுதிகளும் உண்டு. இருந்தாலும் அதில் கூட நியாயம் தவறிவிடக்கூடாது அநியாயமாக அவர்களது முறையைப் பறித்து விடக் கூடாது என்று யோசிக்கிறார்கள் என்றால் யாருக்கும் எந்த அநீதத்தையும் செய்து விடக்கூடாது என்பதில் எந்தளவுக்கு கவனம் செலுத்தி இருக்கிறார்கள் என்பதை இந்த வரலாறு கோடிட்டுக் காட்டுகிறது.

ஆனால் இன்றைக்கு நாட்டிலே அநீதம் பெருகி விட்டது. நாட்டில் இருக்கிற அரசியல் தலைவர்கள் நாட்டு மக்களின் நலனில் அக்கறை செலுத்துவதை விட்டு விட்டு அந்த மக்களுக்கு அநீதங்களையும் துரோகங்களையும் செய்து கொண்டிருக் கிறார்கள். நாட்டில் நடக்கிற அக்கிரமங்களைத் தடுத்து நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டிய காவல் துறையே அக்கிரமங்களை செய்து கொண்டிருக்கிறது.

நபிகள் நாயகம் அவர்களைப் பற்றி பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிண்டால் ஆகியோர் தெரிவித்த கருத்துகள், நாட்டில் கடும் சர்ச்சையை உருவாக்கிய நிலையில், உலகில் இருக்கிற ஒவ்வொரு முஸ்லிமும் தங்கள் உயிரை விட மேலாக நேசிக்கிற நபிகள் நாயகம் அவர்களை இழிவாகப் பேசிய அந்த இருவரையும் கைது செய்யக் கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தது.  அதில் ஒரு பகுதியாக உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ, அலகாபாத், மொரதாபாத், சஹாரன்பூர் ஆகிய இடங்களிலும் போராட்டங்கள் நடந்தன. இதில்  கடந்த வெள்ளிக்கிழமை மொரதாபாத், அலகாபாத் ஆகிய இடங்களில் நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இதில் உண்மையில் வன்முறையை கட்டவிழ்த்து விட்ட இந்துத்துவாவைச் சார்ந்தவர்களை விட்டு விட்டு முஸ்லிம்களை மட்டுமே குறி வைத்து சுமார் 300 பேரை போலீஸ் கைது செய்தது. கைது செய்யப்பட்ட அந்த இளைஞர்களை உத்தரபிரதேச காவல்துறை கண்மூடித்தனமாக இரக்கமில்லாமல் தாக்குகிற வீடியோக்களை சமூக வலைதளங்களில் பார்க்க முடிந்தது. அதேபோன்று ஜார்கன்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த போராட்டத்தில் அந்த போராட்டத்திற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத இரண்டு இஸ்லாமிய சிறுவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டார்கள்.ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு அப்பாவிச் சிறுவனை அழைத்து அவனை ஓட விட்டு அவன் மீது கல் எறிவது அவனை நோக்கி துப்பாகியால் சுடுவது போன்ற அராஜகச் செயலை காவல்துறை செய்தது. போராட்டம் நடந்த அன்று யோகி ஆதித்நாத்தின் ஊடக ஆலோசகர் ஒருவர் தன் டுவிட்டர் பக்கத்தில் புல்டவுசர் படத்தோடு வெள்ளிக்கிழமை மறுநாள் சனிக்கிழமை வரும் மறந்து விடாதீர்கள் என்று பதிவிட்டிருந்தார். அவர் பதிவிட்டு மறுநாள் போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களின் வீடுகள் புல்டோசர்கள் மூலம் இடித்துத் தள்ளப்பட்டது.குறிப்பாக அலகாபாத்தில் போராட்டத்தை தலைமையேற்று நடத்தியதாக கூறப்படும் ஜாவித் முஹம்மது மற்றும் அவர்களின் மகள் அஃப்ரின் ஃபாத்திமா குடியிருந்த வீடு சட்டவிரோதமாக கட்டப்பட்டிருப்பதாக சொல்லி சனிக்கிழமை இரவோடு இரவாக வீட்டிற்கு முன் நோட்டீஸ் ஒட்டி ஞாயிற்றுக்கிழமையன்று காவல்துறை முன்னிலையில் மாவட்ட நிர்வாகம் புல்டவுசரால் இடித்து தரைமட்டமாக்கியது. இதற்கிடையில் வன்முறையைத் தூண்டியவரின் வீடு தரைமட்டம் , கலவரக்காரர்களின் வீடு இடிப்பு என்று தினகரன் மற்றும் தினத்தந்தி போன்ற பத்திரிக்கைகள் மனசாட்சிக்கு விரோதமாய் செய்தி  வெளியிடுகின்றன.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டிய அரசு நாட்டு மக்களிடம் அநீதமாகவும் அராஜகமாகவும் நடக்கிறது. நாங்கள் உங்கள் நண்பன் என்று சொல்லிக் கொள்கிற காவல்துறை மக்களுக்கு எதிராக செயல்படுகின்றது. இந்திய ஜனநாயகத்தின் தூண் என்று நாம் சொல்லிக் கொள்கிற பத்திரிக்கைகள் ஜனநாயகத்தை மதிக்காமல் மனசாட்சிக்கு விரோதமாக செய்திகளை வெளியிடுகின்றது. நடக்கின்ற அநீதங்களை தட்டிக் கேட்க வேண்டிய நீதிமன்றங்கள் கை கட்டி வேடிக்கை பார்க்கிறது. ஆக மொத்தத்தில் இது இந்தியாவா இல்லை பாலஸ்தீனர்களை அவர்களின் சொந்த மண்ணிலே ஒடுக்கும் இஸ்ரேலா என்று தெரியாத அளவுக்கு அநியாயங்களும் அக்கிரமங்களும் அராஜகங்களும் அரசியல் தலைவர்களாலும் காவல்துறையாலும் கட்டவிழ்த்து விடப்படுகிறது.

நாட்டை ஆளுகின்ற ஆட்சியாளர்கள் நாட்டு மக்களை பாதுகாப்பவர்களாக அவர்களுக்குரிய உரிமைகளை அவர்களுக்குப் பெற்றுத் தருபவர்களாக நாட்டு மக்களுக்கு அநீதங்கள் நடந்தால் அதற்காக குரல் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும்.

ألَا مَن ظلَم مُعاهَدًا أو انتقَصه أو كلَّفه فوق طاقتِهِ أو أخَذ منه شيئًا بغَيرِ طِيبِ نَفْسٍ، فأنا حَجيجُهُ يومَ القِيامةِ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: ஒப்பந்தக்காரர் (இஸ்லாமிய அரசில் உள்ள முஸ்லிம் அல்லாத குடிமகன்) ஒருவனுக்கு ஒரு முஸ்லிம் அநீதியிழைத்து விட்டாலோ, அவன் உரிமையைப் பறித்து விட்டாலோ, அவன் சக்திக்கு மீறிய சுமைகளை அவன் மீது சுமத்தி விட்டாலோ, அவனுடைய பொருள் எதையேனும் பலவந்தமாக எடுத்துக் கொண்டாலோ, மறுமை நாளில் இறைவனின் நீதிமன்றத்தில் அந்த முஸ்லிமுக்கு எதிராகத் தொடுக்கப்படும் வழக்கில் அந்த முஸ்லிமல்லாத குடிமகனின் சார்பில் நானே வாதிடுவேன்.” (அபூதாவூத் ; 3052)

ஒரு பிரச்சனை என்றால் அங்கே அவன் முஸ்லிமா இல்லையா என்று பார்க்க வில்லை. யாரிடத்தில் நியாயம் இருக்கிறதோ அவர்களின் பக்கம் தான் நபி அவர்கள் இருந்தார்கள். அதற்குப் பிறகு வந்த ஆட்சியாளர்களும் அதைத்தான் பின்பற்றினார்கள்.

عمر بن عبدالعزيز - رحمه الله - يأمر مناديَه أن يُنادي: ألا من كانت له مظلمة فليرفعها، قام إليه رجل ذمي من أهل حمص فقال: يا أمير المؤمنين أسألك كتاب الله، قال: وما ذاك؟ قال: العباس بن الوليد بن عبدالملك اغتصبني أرضي، والعباس جالس، فقال له عمر: يا عباس، ما تقول؟ قال: نعم، أقطعنيها أمير المؤمنين الوليد وكتب لي بها سجلاً، فقال عمر: ما تقول يا ذمي؟ قال: يا أمير المؤمنين أسألك كتاب الله تعالى، فقال عمر: نعم، كتاب الله أحق أن يُتَّبع من كتاب الوليد، قم فاردُد عليه ضيْعتَه فردَّها عليه

ஒரு நாள் உமர் பின் அப்துல் அஜீஸ் ரஹ் அவர்கள் உங்களில் அநீதியிழைக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் என்னிடம் வந்து முறையிடலாம் என்றார்கள். அப்போது ஹிம்ஸ் பகுதியைச் சார்ந்த ஒரு திம்மீ (இஸ்லாமிய அரசுக்கு கீழ் வசிக்கும் முஸ்லிம் அல்லாத குடிமகன்) அல்லாஹ்வின் வேதமான அல்குர்ஆனை முன் வைத்து நான் கூறுகிறேன். வலீதின் மகன் அப்பாஸ் என்னுடைய நிலம் ஒன்றை அபகரித்து விட்டார் என்றார். அதே சபையில் அமர்ந்திருந்த அப்பாஸை அழைத்து நீ என்ன கூறுகிறாய் என்று உமர் பின் அப்துல் அஜீஸ் ரஹ் அவர்கள் கேட்டார்கள். ஆம் உண்மை தான். ஆனால் அதை என் தந்தை வலீத் எனக்குப் பெற்றுத் தந்தார். அதற்கு ஒரு பத்திரத்தையும் பதிவு செய்து கொடுத்தார் என்றார். இப்போது நீ என்ன கூறுகிறாய் என்று அந்த மனிதரைப் பார்த்து கேட்டார்கள். இப்போதும் நான் அல்லாஹ்வின் வேதமான அல்குர்ஆனை முன் வைத்தே கேட்கிறேன். நீங்கள் தான் சரியான தீர்ப்பை வழங்க வேண்டும் என்றார். அப்போது உமர் பின் அப்துல் அஜீஸ் ரஹ் அவர்கள் வலீதின் அந்த பதிவுப் பத்திரத்தை விட அல்லாஹ்வின் வேதமே பின்பற்றுவதற்கு ஏற்றமானது என்று கூறி அந்த நிலத்தை அவருக்கு திருப்பிக் கொடுக்க அப்பாஸுக்கு உத்தரவிட்டார்கள். (அல்பிதாயா வன் நிஹாயா : 9/213)

அதேபோன்று நபி அவர்களின் காலத்திலும் அவர்களுக்கு பின் வந்த கலீஃபாக்கள் மற்றும் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் காலத்திலும் நாட்டு மக்கள் அனைவரின் உயிருக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பு இருந்தது.

كتب رسول الله كتابا لاهل نجران بسم الله الرحمن الرحيم من محمد النبي للاسقف ابي الحارث 

 وَأَسَاقِفَةِ نَجْرَانَ، وَكَهَنَتِهِمْ، وَرُهْبَانِهِمْ، وَكُلِّ مَا تَحْتَ أَيْدِيهِمْ مِنْ قَلِيلٍ وَكَثِيرٍ جِوَارُ اللهِ وَرَسُولِهِ، لا يُغَيَّرُ أُسقفٌ مِنْ أسقفَتِهِ، وَلا رَاهِبٌ مِنْ رَهْبَانِيَّتِهِ، وَلا كَاهِنٌ مِنْ كَهَانَتِهِ، وَلا يُغَيَّرُ حَقٌّ مِنْ حُقُوقِهِمْ، وَلا سُلْطَانهُمْ، وَلا مَا كَانُوا عَلَيْهِ مِنْ ذَلِكَ، جِوَارُ اللهِ وَرَسُولِهِ أَبَدًا مَا أَصْلَحُوا وَنَصَحُوا عَلَيْهِمْ غَيْر مُبْتَلَيْنَ بِظُلْمٍ وَلا ظَالِمِينَ 

கி.பி. 630 - இல் நஜ்ரான் நாட்டுக் கிறிஸ்தவர்களுடன் நபிகள் நாயகம் அவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் சில பகுதிகள் :

நஜ்ரானிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழும் குடிமக்களின் உயிர், நிலம், உடைமைகள், வணிகம், மதம், வணங்கப்படும் சிலைகள் ஆகிய அனைத்தும் இறைவன் மற்றும் இறைத்தூதரின் பாதுகாப்பில் உள்ளன. அவர்களின் தற்போதைய நிலையில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது. அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட மாட்டாது. எந்த பிஷப்பும் பிஷப் அந்தஸ்திலிருந்தும், எந்தத் துறவியும் துறவு நிலையில் இருந்தும், தேவாலயங்களில் பொறுப்பிலுள்ளவர்கள் எந்தப் பொறுப்புகளிலிருந்தும் அகற்றப்பட மாட்டார்கள். அவர்கள் அக்கிரமம் செய்யக்கூடாது; அவர்கள் மீதும் அக்கிரமம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது. (அஸ்ஸீரத்துன் நபவிய்யா : 4/106)  

பெருமானார் அவர்களின் இந்த வாக்குறுதி உண்மையில் நிறைவேற்றப்பட்டது என்பதற்குச் சான்று பகர்கின்றார் வரலாற்று ஆசிரியர் கிப்பன்.

To his Christian subjects Muhammad readily granted the security of their persons, their freedom, their trade, their property, their goods and the tolerance of their worship.

முஹம்மது, தமது ஆட்சிக்கு உட்பட்டிருந்த கிறிஸ்தவ குடிமக்களுக்குப் பாதுகாப்பு அளித்தார். வணிக உரிமை, சொத்து உரிமை, வழிபாட்டுரிமை ஆகியவற்றை வழங்கினார். (The History of the Decline and fall of the Roman Empire p.p. 269 & 270 )

இதுபோலவே நபிகள் நாயகம் அவர்களின் தோழர்களான கலீஃபாக்களின் ஆட்சிக் காலத்திலும் இதே அணுகுமுறைகளே பின்பற்றப்பட்டன. அவர்களின் தேவாலயங்களோ வழிபாட்டுத் தலங்களோ இடிக்கப்பட வில்லை. அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பும் சுதந்திரமும் வழங்கப்பட்டது.

أن عمر بن الخطاب - رضي الله عنه - خطب في رعيته قائلاً: (ألا إني - والله - ما أرسل عمالي إليكـم ليضـربوا أبشـاركم، ولا ليأخذوا أموالكم، ولكن أرسلهم إليكم ليعلِّموكم دينكم وسُنَّتكم؛ فمن فُعِل به شيء سوى ذلك فَلْيرفعه إليَّ؛ فوالذي نفسي بيده إذاً لأقصنه منه

உமர் ரலி அவர்கள் நாட்டு மக்களிடத்தில் ஆற்றிய உரையில் உங்களை அடிப்பதற்கோ அல்லது உங்களின் உடமைகளை பிடுங்குவதற்கோ நான் என் அதிகாரிகளை உங்களிடத்தில் அனுப்ப வில்லை. மாறாக மார்க்கத்தையும் மாநபி அவர்களின் மேலான சுன்னத்துகளையும் உங்களுக்கு கற்றுத் தருவதற்காகவே அவர்களை அனுப்புகிறேன். இதல்லாத வேறு காரியத்தை என் அதிகாரிகள் செய்தால் தாராளமாக என்னிடத்தில் வந்து முறையிடுங்கள். நான் அவர்களின் மீது தக்க நடவடிக்கைகளை எடுப்பேன் என்று கூறினார்கள்.   

وقد فُتِح بيت المقدس صلحاً دون قتال، وكتب -رضي الله عنه- لأهلها حين دخلها: "إنّي قد أمّنتكم على دمائكم وأموالكم وذراريكم وصلاتكم وبيعكم،

கி.பி.637 ஹிஜ்ரி 16 ல் உமர்  ரலி அவர்களின் ஆட்சியில் பைத்துல் முகத்தஸ் வெற்றி கொள்ளப்பட்டது. அப்போது ஜெரூஸலத்திற்கு அவர்களே நேரடியாக வந்து அங்கு வாழக்கூடிய மக்களிடம் உங்கள் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் உங்கள் சந்ததிகளுக்கும் உங்களின் வணக்கஸ்தலங்களுக்கும் பாதுகாப்பளிக்க நான் பொறுப்பு என்று எழுதிக் கொடுத்தார்கள்.  அவர்களின் மத வணக்க வழிபாடுகள், அவர்களின் சின்னங்கள், வணக்கத் தளங்கள் ஆகியவற்றை எக்காரணம் கொண்டும்  ஆக்கிரமிக்கவோ, அகற்றவோ கூடாது என இஸ்லாமியர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

ஒரு ஆட்சியாளர் மக்களுக்கு அவர்களின் உரிமைகளை பெற்றுத்தருபவராக இருக்க வேண்டுமே தவிர அவர்களின் உரிமைகளை பறிப்பவராக இருக்கக்கூடாது. நாட்டு மக்கள் யாராக இருந்தாலும் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கும் அவர்களின் உடமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதைத்தான் நபி அவர்கள் மற்றும் இஸ்லாமிய கலீஃபாக்களின் அழகான ஆட்சிமுறை நமக்கு உணர்த்துகிறது.

இஸ்லாமிய ஆட்சியாளர்கள் யாரும், நாட்டு மக்கள் வேறு மதத்தைச் சார்ந்தவர்கள், தங்களின் சித்தாந்தத்திற்கு எதிரானவர்கள் என்ற காரணத்தினால் அவர்களின் மீது அடக்குமுறைகளை கட்டவழித்து விட வில்லை.மக்கள் நலனை அடிப்படையாக வைத்துத்தான் அவர்கள் ஆட்சி செய்தார்கள்.

இந்தியா பாகிஸ்தான் பிரிந்த போது முஸ்லிம் லீக் கட்சியும் பிரிய நேரிட்டது. இந்தியாவில் காயிதே மில்லத் அவர்களின் தலைமையிலும், பாகிஸ்தானில் முஹம்மது அலி ஜின்னா அவர்களின் தலைமையிலும் செயல்படத் துவங்கிய நேரத்தில் கட்சிப் பணத்தை பிரிப்பது பற்றிய பேச்சு வந்தது. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் காயிதே மில்லத் அவர்களிடம் அது பற்றிப் பேச அழைப்பு விடுத்த போது கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்கள் கூறினார்கள் ; கட்சிப்பணத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். அதை நாங்கள் எப்படியோ சமாளித்துக் கொள்வோம். ஆனால் அதற்குப் பதிலாக நீங்கள் முக்கியமான ஒரு காரியம் செய்ய வேண்டும். உங்கள் நாட்டில் (பாகிஸ்தானில்) வாழும் சிறுபான்மை இந்து மக்களை நீங்கள் நல்ல விதமாக நடத்துங்கள். அவர்களின் உரிமைகளை மதித்து நடந்து கொள்ளுங்கள். அவர்களின் மத உரிமைகளில் தலையிடாதீர்கள். அவ்வாறு செய்தால் அதுவே எங்களுக்குப் போதும். நீங்கள் பணம் தரா விட்டாலும் பரவாயில்லை.

இது தான் சிறந்த ஆட்சியாளர்கள், சிறந்த தலைவர்களுக்கான அடையாளம். ஆனால் இன்றைக்கு ஆட்சி செய்து கொண்டிருக்கிற சிலர் உண்மையில் அவர்கள் மக்களுக்கான தலைவர்களும் அல்ல. சிறந்த ஆட்சியாளர்களும் அல்ல. தலைவர்கள் என்ற போர்வையில் இருக்கிற மனித மிருகங்கள். அவர்களிடமிருந்து இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் அல்லாஹ் பாதுகாப்பானாக! நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் சுதந்திரமாக வாழ வழிவகுப்பானாக! 

6 comments:

  1. மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத் அருமையான பதிவு

    ReplyDelete
  2. ماشاء الله......

    ReplyDelete
  3. மாஷாஅல்லாஹ் தேவையான நேரத்தில் அழகான ஆழமான பதிவு

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ் அருமையான பதிவு ஹஜரத்

    ReplyDelete
  5. ماشاء الله بارك الله في علمك وفي عملك وفي اجتهادك

    ReplyDelete