Thursday, October 20, 2022

நபி ﷺ அவர்களின் கண்ணியமே மேலானது

 

اِنَّاۤ اَرْسَلْنٰكَ شَاهِدًا وَّمُبَشِّرًا وَّنَذِيْرًا ‏

(நபியே!) நிச்சயமாக நாம் உங்களை (நம்பிக்கையாளர்களின் ஈமானைப் பற்றி) சாட்சி கூறுவதற்காகவும், (அவர்களுக்கு) நற்செய்தி கூறுவதற்காகவும், (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும் அனுப்பி வைத்தோம். (அல்குர்ஆன் : 48:8)

لِّـتُؤْمِنُوْا بِاللّٰهِ وَ رَسُوْلِهٖ وَتُعَزِّرُوْهُ وَتُوَقِّرُوْهُ  وَتُسَبِّحُوْهُ بُكْرَةً وَّاَصِيْلًا

ஆகவே, (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டு, அவருக்கு உதவி புரிந்து, அவரை கண்ணியப்படுத்தி வைத்து, காலையிலும் மாலையிலும் அவனை துதி செய்து வாருங்கள். (அல்குர்ஆன் : 48:9)

இந்த வசனத்தில்  அல்லாஹ் அண்ணல் நபி அவர்களின் வருகை மற்றும் அதன் நோக்கத்தை கூறி விட்டு அவர்களின் சமூகமான  நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை வரிசைபடுத்துகிறான். அதில் முதலாவது அல்லாஹ்வையும் ரசூலையும் ஈமான் கொள்ள வேண்டும். நபி அவர்களை எப்படி ஈமான் கொள்ள வேண்டும். நபியின் தோழர்களான அருமை ஸஹாபாக்கள் அவர்களை எப்படி ஈமான் கொண்டார்கள் என்பதை கடந்த வாரம் பார்த்தோம். அடுத்து இரண்டாவதாக அல்லாஹ்  பெருமானார் அவர்களுக்கு கண்ணியம் அளிக்க வேண்டும் என்பதையும் மூன்றாவதாக காலையிலும் மாலையிலும் இறைவனையும் தஸ்பீஹ் செய்ய வேண்டும் என்பதையும் அல்லாஹு குறிப்பிடுகிறான்.

இந்த சமூகம் செய்யக்கூடிய செய்ய வேண்டிய மூன்று விஷயங்களை வரிசைப்படுத்தும் ரப்புல் ஆலமீன் அவைகளில் ஈமானுக்கும் அமலுக்கும் இடையில் நபியின் கண்ணியத்தைக் சொல்லியிருக்கிறான். எனவே ஈமான் கொண்டவருக்கு அவர் செய்யக்கூடிய அமல்கள் பயன் தர வேண்டுமென்றால் அதற்கு நிபந்தனை நபியின் கண்ணியம் அவரது உள்ளத்தில் இருக்க வேண்டும். நபியிடத்தில் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். நபியிடத்தில் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும். அவ்வாறு நடந்து கொள்பவர்களின் அமல்கள் தான் ஏற்றுக் கொள்ளப்படும். நபியின் கண்ணியத்தை விளங்காதவர் நபியிடத்தில் கண்ணியமாக, ஒழுக்கமாக நடந்து கொள்ளாதவர், எத்தனை பெரிய அமல்களை செய்பவராக இருந்தாலும் அந்த அமல்கள் அவருக்கு பயன் தராது என்பதை இந்த வசனத்தின் வாசக அமைப்பின் வழியே நாம் தெரிந்து கொள்கிறோம். இதற்கு நபி அவர்களின் காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை உதாரணமாக சொல்ல முடியும்.

بيْنَما نَحْنُ عِنْدَ رَسولِ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ وهو يَقْسِمُ قَسْمًا، أَتَاهُ ذُو الخُوَيْصِرَةِ -وهو رَجُلٌ مِن بَنِي تَمِيمٍ- فَقالَ: يا رَسولَ اللَّهِ، اعْدِلْ، فَقالَ: ويْلَكَ! ومَن يَعْدِلُ إذَا لَمْ أَعْدِلْ؟! قدْ خِبْتَ وخَسِرْتَ إنْ لَمْ أَكُنْ أَعْدِلُ. فَقالَ عُمَرُ: يا رَسولَ اللَّهِ، ائْذَنْ لي فيه فأضْرِبَ عُنُقَهُ؟ فَقالَ: دَعْهُ، فإنَّ له أَصْحَابًا يَحْقِرُ أَحَدُكُمْ صَلَاتَهُ مع صَلَاتِهِمْ، وصِيَامَهُ مع صِيَامِهِمْ، يَقْرَؤُونَ القُرْآنَ لا يُجَاوِزُ تَرَاقِيَهُمْ، يَمْرُقُونَ مِنَ الدِّينِ كما يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ

நாங்கள், இறைத்தூதர் அவர்கள்  போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டுக் கொண்டிருந்த போது அவர்களின் அருகே இருந்தோம். அப்போது 'பனூ தமீம்' குலத்தைச் சேர்ந்த 'துல் குவைஸிரா' என்னும் மனிதர் வந்து, "இறைத்தூதர் அவர்களே! நீதியுடன் நடந்து கொள்ளுங்கள்" என்று கூறினார். உடனே நபி அவர்கள், 'உனக்குக் கேடுண்டாகட்டும்! நான் நீதியுடன் நடந்து கொள்ள வில்லையென்றால் வேறு யார் தான் நீதியுடன் நடந்து கொள்வார்கள்? என்று பதிலளித்தார்கள். உடனே, உமர் ரலி அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! எனக்கு இவர் விவகாரத்தில் அனுமதி கொடுங்கள். இவரின் கழுத்தைக் கொய்து விடுகிறேன்" என்று கூறினார்கள். அதற்கு நபி அவர்கள், 'இவரை விட்டு விடுங்கள். நிச்சயமாக, இவருக்குத் தோழர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களின் தொழுகையுடன் உங்களுடைய தொழுகையையும், அவர்களின் நோன்புடன் உங்களுடைய நோன்பையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களுடைய தொழுகையையும் உங்களுடைய நோன்பையும் அற்பமானவையாகக் கருதுவீர்கள். (அந்த அளவிற்கு அவர்களின் வழிபாடு அதிகமாக இருக்கும். என்றாலும்,) அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் கழுத்தெலும்பை (தொண்டையை) தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியை விட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபக்கம்) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போல் மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறிச் செல்வார்கள் என்று கூறினார்கள். (புகாரி ; 3610)

எப்படி அமல் செய்ய வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக இருந்தவர்கள் ஸஹாபாக்கள். அந்த சஹாபாக்களையே ஓவர்டேக் செய்கிற அளவிற்கு அவர்கள் அமல்கள் செய்வார்கள்.  இருந்தாலும் இஸ்லாத்தை விட்டும் வெளியே போய் விடுவார்கள் என்று ஏன் சொன்னார்கள் என்றால்  அவர்களிடம் நபியின் கண்ணியம் இல்லை. நபியிடத்தில் கண்ணியமாக பேச வில்லை. நபியிடத்தில் கண்ணியமாக நடந்து கொள்ள வில்லை. எனவே ஒருவரிடம் அமல்கள் இருந்து நபியின் கண்ணியம் இல்லையெனில் அந்த அமல்கள் புண்ணியம் இல்லாமல் போய் விடும்.

இன்றைக்கு ஒரு கூட்டத்தினர் நபியைப் பற்றி கண்ணியக் குறைவாக பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். ஹதீஸுக்கு விளக்கம் சொல்லுகிறோம் என்ற பெயரில், சமூகத்தில் இருந்து பித்அத்தை ஒழிக்கிறோம் என்ற பெயரில் நபியின் கண்ணியத்தையும் நபியின் மரியாதையையும் நபியைப் பற்றியுண்டான உயர்ந்த எண்ணங்களையும் மக்கள் மனதிலிருந்து  அப்புறப்படுத்துவதற்கான துடைத்தெறிவதற்கான முயற்சியை சர்வதேச அளவில் செய்து கொண்டிருக்கிருக்கிறார்கள். இந்த நேரத்தில் நபியின் கண்ணியம் என்ன என்பதை நாம் புரிய வேண்டும்.

لَا تَجْعَلُوْا دُعَآءَ الرَّسُوْلِ بَيْنَكُمْ كَدُعَآءِ بَعْضِكُمْ بَعْضًا‌ 

(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வுடைய தூதரை நீங்கள்  அழைத்தால் அதனை நீங்கள் உங்களுக்குள் ஒருவர் மற்றொருவரை அழைப்பதைப் போல் கருத வேண்டாம். (யா முஹம்மது என பெயர் கூறி அழைக்க வேண்டாம்.) (அல்குர்ஆன் : 24:63)

لَا تَجْعَلُوا دُعَاءَ الرَّسُولِ بَيْنَكُمْ كَدُعَاءِ بَعْضِكُمْ بَعْضًا

மக்காவாசிகள் நபி அவர்களை யா முஹம்மத் யா அபல் காஸிம் என்று நபி அவர்களின் பெயர் மற்றும் பட்டப்பெயர் கூறி அழைப்பவர்களாக இருந்தார்கள். அதைக் கண்டித்து இந்த வசனத்தை இறைவன் அருளினான். நபி அவர்களை நீங்கள் யா ரஸூலல்லாஹ்!, யா நபியல்லாஹ்! என்று அவர்களுடைய சிறப்புப் பெயரைக் கூறித்தான் அழைக்க வேண்டும் என்று கூறினான்.

இதில் வியப்பைத் தரும் விஷயம் என்னவென்றால் நபி அவர்களை இப்படித்தான் அழைக்க வேண்டும் என்று எந்த ஒழுக்கத்தை நமக்கு கற்றுக் கொடுக்கிறானோ அதே ஒழுக்கத்தை அவனும் கடை பிடிக்கிறான். குர்ஆனில் யா மூஸா,யா ஈஸா, யா இப்ராஹீம், யா நூஹ் என்று பல நபிமார்களை பெயர் கூறி அழைக்கும் அல்லாஹ், குர்ஆனில் எந்த இடத்திலும் நபி அவர்களை பெயர் கூறி அழைக்க வில்லை. குர்ஆனில் நான்கு இடங்களில் தான் நபியின் பெயரை அல்லாஹ் குறிப்பிடுகிறான்.அதிலும் அவர்களது சிறப்புப் பெயரை சேர்த்தே தான் கூறுகிறான். தன்னுடைய ஹபீபான முஹம்மத் அவர்களை பெயர் கூறி அழைப்பதற்கான எல்லா உரிமையும் தகுதியும் ரப்புல் ஆலமீனுக்கு இருக்கிறது. அவ்வாறு பெயர் கூறி அழைத்தால் பெருமானார் அவர்கள் சந்தோஷப்படுவார்களே தவிர சங்கடப்பட்டுக் கொள்ள மாட்டார்கள். இருந்தாலும் குர்ஆனைப் பார்க்கும் சமூகம், குர்ஆனைப் படிக்கும் சமூகம், தான் அழைப்பதை போன்று தன் ஹபீபை அழைத்து விடக்கூடாது என்பதற்காகவே அப்படி ஒரு வாசகத்தை குர்ஆனில் இடம் பெறச் செய்யாமல் பாதுகாத்து விட்டான். எனவே மற்றவர்களை அழைப்பதைப் போன்று பெருமானாரை அழைத்து விட முடியாது. மற்றவர்களிடத்தில் பேசுவதைப் போன்று பெருமானாரிடத்தில் பேசி விட முடியாது. அவர்களிடத்திலே பேசுகின்ற பொழுது குரலை உயர்த்திப் பேச கூடாது குரலை தாழ்த்தி தான் பேச வேண்டும்.

 

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَرْفَعُوْۤا اَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِىِّ وَلَا تَجْهَرُوْا لَهٗ بِالْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ اَنْ تَحْبَطَ اَعْمَالُكُمْ وَاَنْـتُمْ لَا تَشْعُرُوْنَ‏

நம்பிக்கையாளர்களே! (நபி பேசும் பொழுது) நபியுடைய சப்தத்திற்கு மேல் உங்களுடைய சப்தத்தை உயர்த்தாதீர்கள். அன்றி, உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் கூச்சலிட்டுச் சப்தமாகப் பேசுவதைப் போல், அவரிடம் சப்தத்தை உயர்த்தி நீங்கள் கூச்சலிட்டுப் பேசாதீர்கள். இதன் காரணமாக உங்களுடைய நன்மைகள் எல்லாம் அழிந்து விடக்கூடும். (இதனை) நீங்கள் உணர்ந்து கொள்ள முடியாது. (அல்குர்ஆன் : 49:2)

நபியிடத்தில் பேசுகின்ற அந்த ஒழுக்கம் இன்றைக்கு வரைக்கும் பாதுகாக்கப்படுகிறது. நபிகள் நாயகம் அவர்கள் துயில் கொள்ளும் மதினமாநகரத்தில் சப்தங்களையோ கூச்சல்களையோ இரைச்சல்களையோ பார்க்க முடியாது. மக்கமா நகரத்திற்குள் நுழைந்தால் ஒரு விதமான பரபரப்பு, சலசலப்பு, மக்களுடைய சப்தங்கள், கடைவீதிகளில் உயர்ந்த குரல்கள் இருக்கும். ஆனால் மதினாவில் இதில் எதையும் பார்க்க முடியாது. கடை வீதிகளில் சப்தங்கள் இருக்காது. போக்குவரத்துப் பகுதிகளில் சப்தங்கள் இருக்காது. மக்கள் கூடுகின்ற எந்த இடத்திலும் சப்தங்கள் இருக்காது, நபியவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த புனித பூமியில் சப்தங்கள் எழுவது நபியவர்களின் கண்ணியத்திற்கு உகந்ததல்ல என்பதற்காகவே அல்லாஹ் அந்த நகரத்தையே அமைதிப் பூங்காவாக ஆக்கி விட்டான். இது நபி அவர்களின் கண்ணியம் பாதுகாக்கப்படுவதற்கான நிதர்சன சான்று.

சாதாரணமாக தொழுகையில் நிற்கிற போது நம் பேச்சு அல்லாஹ்வோடு தான் இருக்க வேண்டும். நம்  சிந்தனை அல்லாஹ்வைப் பற்றியதாகத் தான் இருக்க வேண்டும். நம் செயல்பாடுகள் தொழுகைக்குட்பட்டதாகத் தான் இருக்க வேண்டும். அல்லாஹு அக்பர் என்று தக்பீர் கட்டி நின்று விட்டால் நம் தொடர்பு இறைவனோடு மட்டும் ஆகி விட வேண்டும். மனிதத் தொடர்புகள் எதுவும் வந்து விடக்கூடாது. தொழுகைக்கு வெளியே இருக்கும் நன்மையான விஷயங்கள் கூட தொழுகைக்கு உள்ளே தடுக்கப்பட்ட விஷயங்களாக மாறிப்போகும். தொழுகையில் சலாம் சொல்லக்கூடாது சலாம் சொன்னால் பதில் சொல்லக்கூடாது ஒருவர் தும்மி அல்ஹம்துலில்லாஹ் என்று சொன்னால் அவருக்கு பதில் சொல்ல கூடாது. இவ்வாறு மனித தொடர்புகள் அனைத்தும் அருந்து போகிற ஒரு இடம் தான் தொழுகை. ஆனால் அந்தத் தொழுகையில் ஒருவர் நின்றிருந்தாலும் நபி அவர்கள் அழைத்தால் உடனே பதில் தர வேண்டும் என்று ரப்புல் ஆலமீன் கூறுகிறான்.

عن أبي سعيد بن المعلى قال : كنت أصلي في المسجد فدعاني رسول الله صلى الله عليه وسلم فلم أجبه ، ثم أتيته فقلت : يا رسول الله ، إني كنت أصلي . فقال : ألم يقل الله عز وجل استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم

ஹள்ரத் அபூஸயீத் ரலி அவர்கள் கூறுகிறார்கள் ; நான் மஸ்ஜிதில் தொழுது கொண்டிருந்த போது அல்லாஹ்வின் தூதர் நபி அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் பதில் தர வில்லை. (தொழுகை முடிந்த) பிறகு வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நிச்சயமாக நான் தொழுது கொண்டிருந்தேன் என்று சொன்னேன். அப்போது பெருமானார் அவர்கள், நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வும், (அவனுடைய) தூதரும் உங்களுக்குப் புத்துயிர் அளிக்க உங்களை அழைத்தால் (அவர்களுடைய அழைப்புக்குப்) பதில் கூறுங்கள்என்று கூற வில்லையா என்று கேட்டார்கள். (புகாரி ; 5006)

மனிதத் தொடர்புகள் அறுந்து போகின்ற தொழுகையில் ஒருவர் நின்றாலும் நபியின் அழைப்புக்கு அவர் பதில் தர வேண்டும் என்பதிலிருந்து பெருமானார் அவர்கள் மற்ற மனிதர்களைப் போன்று சாதாரண மனிதர் அல்ல, மற்ற மனிதர்களைப் போன்று அவர்களிடம் சாதாரணமாக நடந்து கொள்ளக்கூடாது  என்பதை அல்லாஹுத்தஆலா நமக்கு உணர்த்தி விட்டான்.

நபியின் கண்ணியம் என்ன? அவர்களுக்கு நாம் கொடுக்க வேண்டிய மரியாதை என்ன? அவர்களிடத்தில் நாம் நடந்து கொள்ள வேண்டிய ஒழுங்கு முறைகள் என்ன? என்பதை அருமை சஹாபாக்கள் நமக்கு கற்றுத் தருகிறார்கள்.

أنَّ أُنَاسًا مِن بَنِي عَمْرِو بنِ عَوْفٍ كانَ بيْنَهُمْ شيءٌ، فَخَرَجَ إلَيْهِمُ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ في أُنَاسٍ مِن أصْحَابِهِ يُصْلِحُ بيْنَهُمْ، فَحَضَرَتِ الصَّلَاةُ، ولَمْ يَأْتِ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ، فَجَاءَ بلَالٌ، فأذَّنَ بلَالٌ بالصَّلَاةِ، ولَمْ يَأْتِ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ، فَجَاءَ إلى أبِي بَكْرٍ، فَقالَ: إنَّ النبيَّ صَلَّى اللهُ عليه وسلَّمَ حُبِسَ وقدْ حَضَرَتِ الصَّلَاةُ، فَهلْ لكَ أنْ تَؤُمَّ النَّاسَ؟ فَقالَ: نَعَمْ، إنْ شِئْتَ، فأقَامَ الصَّلَاةَ فَتَقَدَّمَ أبو بَكْرٍ، ثُمَّ جَاءَ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ، يَمْشِي في الصُّفُوفِ حتَّى قَامَ في الصَّفِّ الأوَّلِ، فأخَذَ النَّاسُ بالتَّصْفِيحِ حتَّى أكْثَرُوا، وكانَ أبو بَكْرٍ لا يَكَادُ يَلْتَفِتُ في الصَّلَاةِ، فَالْتَفَتَ فَإِذَا هو بالنبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ ورَاءَهُ، فأشَارَ إلَيْهِ بيَدِهِ فأمَرَهُ أنْ يُصَلِّيَ كما هُوَ، فَرَفَعَ أبو بَكْرٍ يَدَهُ، فَحَمِدَ اللَّهَ وأَثْنَى عليه، ثُمَّ رَجَعَ القَهْقَرَى ورَاءَهُ حتَّى دَخَلَ في الصَّفِّ، وتَقَدَّمَ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ، فَصَلَّى بالنَّاسِ، فَلَمَّا فَرَغَ أقْبَلَ علَى النَّاسِ، فَقالَ: يا أيُّها النَّاسُ إذَا نَابَكُمْ شيءٌ في صَلَاتِكُمْ أخَذْتُمْ بالتَّصْفِيحِ، إنَّما التَّصْفِيحُ لِلنِّسَاءِ، مَن نَابَهُ شيءٌ في صَلَاتِهِ، فَلْيَقُلْ: سُبْحَانَ اللَّهِ، فإنَّه لا يَسْمَعُهُ أحَدٌ إلَّا التَفَتَ، يا أبَا بَكْرٍ، ما مَنَعَكَ حِينَ أشَرْتُ إلَيْكَ لَمْ تُصَلِّ بالنَّاسِ، فَقالَ: ما كانَ يَنْبَغِي لِابْنِ أبِي قُحَافَةَ أنْ يُصَلِّيَ بيْنَ يَدَيِ النبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ

ஒருமுறை நபி அவர்கள் மதீனாவில் இருந்த பனு அம்ர் பின் அவ்ஃப் கூட்டத்தாரிடத்தில் ஏற்பட்ட பிரச்சனையை ஒழுங்கு படுத்துவதற்காகச் சென்றிருந்தார்கள். அப்போது தொழுகை நேரம் வந்து விட்டது. அவர்கள் வர வில்லை. ஹள்ரத் பிலால் ரலி அவர்கள், பாங்கு சொன்னார்கள். நபி அவர்கள் வர வில்லை. பிலால் ரலி அவர்கள் ஹள்ரத் அபூபக்கர் ரலி அவர்களிடம் தொழுகை நேரம் வந்து விட்டது. ஆனால் நபி அவர்கள் வர வில்லை.  நீங்கள் மக்களுக்குத் தொழ வைக்கிறீர்களா? என்று கேட்க, அதற்கு அவர்கள் நீங்கள் விரும்பினால் தொழ வைக்கிறேன் என்றார்கள்.அவர்கள் தொழுகைக்காக இகாமத் சொல்ல அபூபக்கர் ரலி அவர்கள் மக்களுக்குத் தொழ வைக்கத் துவங்கி விட்டார்கள். அப்போது நபி அவர்கள் மக்கள் தொழுதுக் கொண்டிருக்கும் அந்த நிலையில் நடந்து சென்று,  முன் வரிசையில் நின்று கொண்டார்கள்.

மக்கள் கைகளைத் தட்டினார்கள். அபூபக்கர் ரலி அவர்களோ தொழுகையில் திரும்பிப் பார்க்காதவர்களாக இருந்துக் கொண்டிருந்தார்கள். மக்கள் கைத்தட்டலை அதிகமாக்கிய போது, அவர்கள் திரும்பியவுடன் நபி அவர்களைக் கண்டார்கள். அப்போது நபி அவர்கள் அபூபக்கர் ரலி அவர்களை தமது இடத்திலேயே இருக்கும் படி சமிக்கை செய்தார்கள். உடனே அவர்கள், அல்லாஹ்வின் தூதர் இதற்காக சமிக்கை செய்து கட்டளை இட்டமைக்காக (அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் வகையில்) தனது இருக் கைகளையும் ஏந்தி அல்லாஹ்வைப் புகழ்ந்தவர்களாக பின்னால் வந்து வரிசையில் சேர்ந்ததார்கள்.

உடனே நபி அவர்கள் முன்னால் சென்று தொழ வைத்து விட்டு, மக்களை நோக்கி உங்களுக்கு தொழுகையில் ஏதேனும் ஏற்படும் போது நீங்கள் ஏன் கை தட்டுகிறீர்கள்? கைத்தட்டல் என்பதெல்லாம் பெண்களுக்குரியதாகும். (ஆண்களுக்கல்ல) ஒருவருக்கு தமது தொழுகையில் கோளாறு ஏற்பட்டு விட்டால், அவர் தஸ்பீஹ் செய்ய வேண்டும். தஸ்பீஹ் செய்தால் அவர் அதனை உணர்ந்து கொள்வார். என்று கூறினார்கள்.    

பின்பு அபூபக்கரே! நான் உம்மை உங்கள் இடத்திலேயே நிற்கும் படி சமிக்கையாக கட்டளையிட்டும் எதற்காக பின்னால் வந்து விட்டீர்கள் என்றார்கள். அதற்கு அபூபக்கர் ரலி அவர்கள் அல்லாஹ்வுடைய ரசூலுக்கு முன்னால் அபூகுஹாஃபாவின் மகன் நின்று தொழ வைப்பதற்கு அருகதை இல்லை என்றார்கள். (புகாரி ; 2690)

நபியினுடைய உத்தரவும் நபியிடத்தில் நாம் நடந்து கொள்ளக்கூடிய ஒழுக்கமும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்ற பொழுது நாம் எதை எடுத்துக் கொள்ள வேண்டும் ? நபியின் உத்தரவை கவனிக்க வேண்டுமா ? அல்லது அந்த ஒழுக்கத்தை கவனிக்க வேண்டுமா ? என்றால், அந்த இடத்தில் நபியின் உத்தரவைக் காட்டிலும் நபியிடத்தில் நடந்து கொள்ள வேண்டிய ஒழுக்கத்திற்குத் தான் முதலிடம் தர வேண்டும் என்பதை இந்த நிகழ்விலிருந்து மார்க்க அறிஞர்கள் சொல்வார்கள்.

دعا محمد صلى الله عليه وسلم، عليَّ بن أبي طالب ليكتب كتاب الحديبية، فقال له: «اكتب بسم الله الرحمن الرحيم ، فاعترض سهيل واقترح أن تكون «باسمك اللهم» وأقر النبي صلى الله عليه وسلم اقتراحه رغم اعتراض المسلمين من حوله.

ஹுதைபியா உடன்படிக்கையின் போது அதை எழுதுவதற்காக நபி அவர்கள்  அலி ரலி அவர்களை அழைத்தார்கள். அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால்…’ என்று (சமாதான ஒப்பந்தத்திற்கான வாசகத்தை) நபியவர்கள் சொன்னார்கள்.அப்போது சுஹைல், குறிக்கிட்டு அளவற்ற அருளாளன்என்பது என்ன ?, “இறைவா! உன் திருப்பெயரால்…’ என்று நீங்கள் முன்பு எழுதிக் கொண்டிருந்ததைப் போல் எழுதுங்கள்  என்றார். நபி அவர்கள், ” “பிஸ்மிக்க அல்லாஹும்ம இறைவா! உன் திருப்பெயரால்என்றே எழுதுங்கள்என்று சொன்னார்கள்.

ثم أكمل الرسول صلى الله عليه وسلم إملاء علي بن أبي طالب: «هذا ما صالح عليه محمد رسول الله سهيل بن عمرو ، فاعترض الأخير مجددا قائلا: أنهم لو يعلموا بذلك ما صدوه عن البيت ولا قاتلوه، واقترح أن يكتب باسمه فحسب ورد عليه النبي صلى الله عليه وسلم: «والله إني لرسول الله حقا وإن كذبتموني»، ثم أمر عليًا بمحو ما كتب وكتابة محمد بن عبد الله، فامتنع علي تأدبًا، فأخذ رسول الله صلى الله عليه وسلم الصحيفة فمحاها و كتبها بمحمد بن عبد الله

பிறகு நபி அவர்கள், “இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மது அவர்கள் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தம்என்று (எழுதும்படி வாசகம்) சொன்னார்கள். உடனே சுஹைல், “அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் தான் என்று நாங்கள் நம்பியிருந்தால் இறையில்லத்திற்கு வர விடாமல் உங்களைத் தடுத்திருக்க மாட்டோம்; உங்களுடன் போரிட்டிருக்கவும் மாட்டோம். மாறாக, “முஹம்மத் பின் அப்தில்லாஹ் -அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதுஎன்று எழுதுங்கள்என்று கூறினார். அதற்கு நபி அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் நான் பொய் சொல்வதாகக் கருதினாலும் நிச்சயம் நான் அல்லாஹ்வின் தூதர் தான் என்று கூறி விட்டு ஏற்கனவே எழுதியதை அழித்து விட்டு  முஹம்மத் பின் அப்தில்லாஹ் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதுஎன்றே எழுதுங்கள்என்று அலி ரலி அவர்களிடம் கூறினார்கள். ஆனால் அவர்கள் அதை அழிக்க மறுத்து விட்டார்கள்.பின்பு நபி அவர்களே அதை எடுத்து எழுதியிருந்ததை அழித்து விட்டு முஹம்மத் பின் அப்தில்லாஹ் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது என்று எழுதினார்கள். (அல்பிதாயா வன் நிஹாயா)

நபியின் கண்ணியத்தை விளங்கியவர்கள் சஹாபாக்கள். நபியின் மரியாதையை புரிந்தவர்கள் சஹாபாக்கள். நபியிடத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று பயிற்றுவிக்கப்பட்டவர்கள் சஹாபாக்கள். எனவே தான் நபி அவர்கள் அதை அழியுங்கள் என்று சொல்லியும் அழிக்க மனம் இல்லாமல் நின்றார்கள் அலி ரலி அவர்கள். நீங்களே தொழ வையுங்கள் என்று சொல்லியும் பின்னால் வந்து விட்டார்கள் அபூபக்கர் ரலி அவர்கள். நபி அவர்களின் உத்தரவை மீறி விட்டார்கள் என்று சொல்லி விட முடியாது. நபியுடைய கண்ணியமும் மரியாதையும் அவர்களது மனதில் ஆழமாக வேரூன்றி இருந்த காரணத்தினால் அவர்களால் அதை செய்ய முடியாமல் போனது. எனவே நபியினுடைய கண்ணியம் மிக மிக மேலானது. சஹாபாக்கள் நபியின் கண்ணியத்தை பாதுகாத்தார்கள்.

وعن جرير بن عبدالله أن النبي  دخل بعض بيوته فامتلا البيت ، ودخل جرير فقعد خارج البيت ، فأبصره النبي  فأخذ ثوبه فلفه فرمى به إليه ، وقال : اجلس على هذا ، فأخذ جرير فوضعه على وجهه فقبله

ஜரீர் பின் அப்துல்லாஹ் ரலி அவர்கள் நபியைக் காண நபியின் இல்லத்திற்கு வந்தார்கள். இல்லம் நிரம்பியிருந்த காரணத்தினால் வெளியே அமர்ந்து கொண்டார்கள். அதைப் பார்த்த நபியவர்கள் தன் மேனியில் இருந்த துண்டை எடுத்து அதை சுருட்டி அவரின் பக்கம் எறிந்து இதன் மீது உட்காரும் படி சொன்னார்கள். ஆனால் ஜரீர் ரலி அவர்கள் அதை எடுத்து தன் முகத்தில் ஒத்தி முத்தமிட்டார்கள். (ஸுபுலுல் ஹுதா வர்ரஷாத்)

நபியினுடைய முபாரக்கான மேனியில் பட்ட ஒரு துண்டை கீழே விரித்து அமர்வதற்கு அவர்களின் மனம் எப்படி இடம் கொடுக்கும் எனவே தான் அதை எடுத்து முகத்திலும் கண்களிலும் ஒத்தி கொண்டார்கள்.

இன்றைக்கு நாம் எப்படி நபிக்கு மரியாதை செய்வது என்றால் ? அவர்கள் சொன்ன வார்த்தைக்கு நாம் கண்ணியம் அளிக்க வேண்டும் அவர்களின் வார்த்தைக்கு நாம் கொடுக்கிற கண்ணியம் தான் அவர்களுக்கு நாம் தருகின்ற கண்ணியம். நபியினுடைய வார்த்தை முன் வைக்கப்பட்டு விட்டால் அதற்குப் பிறகு எதிர் கேள்வியோ விவாதங்களோ நம்மிடமிருந்து வெளிப்படக்கூடாது. நபியின் வார்த்தையை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். அதில் கேள்வி கேட்கக்கூடாது.

عن معاذة بنت عبد الله قالت: سألت عائشة رضي الله عنها، فقلت: ما بالُ الحائض تقضي الصوم ولا تقضي الصلاة؟ فقالت: أحرورية أنت؟ فقلت: لست بحرورية، ولكني أسالُ، فقالت: كان يُصيبنا ذلك، فنؤمرُ بقضاء الصوم، ولا نؤمر بقضاء الصلاة

அன்னை ஆயிஷா ரலி அவர்களிடம் ஒரு பெண் மாதத்தீட்டு ஏற்படும் பெண் நோன்பை களா செய்கிறாள். தொழுகையை ஏன் களா செய்வதில்லை என்று கேட்டாள். அதைக் கேட்ட ஆயிஷா ரலி அவர்கள் நீ இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விட்டாயா ? என்று கேட்டார்கள். இல்லை. இல்லை, நான் தெரிந்து கொள்வதற்காக கேட்கிறேன் என்றாள். அதற்கவர்கள், எங்களுக்கு அவ்வாறான நிலை ஏற்படும் போது நோன்பை களா செய்யும் படி நபியவர்கள் ஏவினார்கள். தொழுகையை களா செய்யும் படி ஏவ வில்லை என்றார்கள். (முஸ்லிம் ; 335)

பெருமானார் அவர்கள் கூறிய ஒரு விஷயத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏன் எதற்கு என்று கேள்வி கேட்கக்கூடாது. அதில் ஆராய்ச்சி செய்யக்கூடாது. இது தான் நபி அவர்களின் சொல்லுக்கு நாம் கொடுக்கும் மரியாதை. அல்லாஹ் அத்தகைய மரியாதையையும் ஒழுகத்தையும் நமக்கு தருவானாக

3 comments:

  1. மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத்

    ReplyDelete
  2. Moulavi peer MohameedOctober 21, 2022 at 9:59 AM

    جزاكم الله خيرا كثيرا في الدارين

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ்

    ReplyDelete