Thursday, February 9, 2023

பேரிடர்களும் நாம் பெற வேண்டிய பாடங்களும்

 

கடந்த நான்கு நாட்களாக அனைத்து ஊடகங்களையும் ஆக்கர மித்திருப்பது துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்த செய்திகள் தான். அந்த அதிர்ச்சி செய்தியும் அதன் புகைப் படங்களும் அனைவரின் உள்ளங்களையும் நடுங்கச் செய்து விட்டது. அந்த மக்களின் மரண ஓலங்களும் அவர்கள் விட்ட கண்ணீர்த் துணிகளும் கல்நெஞ்சம் கொண்டவர்களின் இதயங்களையும் கரையச் செய்து விட்டது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முடிந்து உறங்கப்போன துருக்கி மக்கள் பலருக்கு மறுநாள் விடியாமலேயே போய் விட்டது. நிலநடுக்கம் அதிகாலை ஃபஜ்ருக்கு முன் என்பதால் தப்பிக்க வாய்ப்பில்லாமல் பல ஆயிரம் பேர் அப்படியே ஷஹீதாகி விட்டார்கள்.

36 மணி நேரத்தில், தென்கிழக்கு துருக்கியில் 81 தடவை 4 ரிக்டர் அளவு நிலநடுக்கமும், 20 தடவை 5 ரிக்டர் அளவு நிலநடுக்கமும், மூன்று தடவை 6 ரிக்டர் அளவு நிலநடுக்கமும் இரண்டு தடவை 7 ரிக்டர் அளவு நிலநடுக்கமும் ஏற்பட்டிருக்கிறது. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இயற்கை பேரிடராக இதை உலக நாடுகள் கருதுகின்றன.

துருக்கியையும்  சிரியாவையும் சேர்த்து 10000 கும் அதிகமானோர் இறந்து விட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் இடிபாடுகள் இன்னும் அகற்றப்படாத நிலையில் இறப்பு எண்ணிக்கை 20000 ஐ தாண்டலாம் என்று கூறப்படுகிறது. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ دَخَلَ عَلَى عَائِشَةَ وَرَجُلٌ مَعَهُ، فَقَالَ لَهَا الرَّجُلُ: يَا أُمَّ الْمُؤْمِنِينَ، حَدِّثِينَا عَنِ الزَّلْزَلَةِ، فَقَالَتْ: " إِذَا اسْتَبَاحُوا الزِّنَا، وَشَرِبُوا الْخَمْرَ، وَضَرَبُوا بِالْمَغَانِي، وَغَارَ اللَّهُ عَزَّ وَجَلَّ فِي سَمَائِهِ فَقَالَ لِلْأَرْضِ: تَزَلْزَلِي بِهِمْ. فَإِنْ تَابُوا وَنَزَعُوا، وَإِلَّا هَدَمَهَا عَلَيْهِمْ. قَالَ: قُلْتُ: يَا أُمَّ الْمُؤْمِنِينَ، أَعَذَابٌ لَهُمْ؟ قَالَتْ: بَلْ مَوْعِظَةٌ وَرَحْمَةٌ وَبَرَكَةٌ لِلْمُؤْمِنِينَ، وَنَكَالٌ وَعَذَابٌ وَسَخَطٌ عَلَى الْكَافِرِينَ ". قَالَ أَنَسٌ: مَا سَمِعْتُ حَدِيثًا بَعْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَا أَشَدُّ فَرَحًا مِنِّي بِهَذَا الْحَدِيثِ

அனஸ் பின் மாலிக் ரலி அவர்களும் இன்னொரு மனிதரும் ஆயிஷா ரலி அவர்களிடம் சென்றனர். அப்பொழுது அனஸ் ரலி அவர்களுடன் வந்த அந்த மனிதர் முஃமின்களின் அன்னையே! நிலநடுக்கம் ஏன் ஏற்படுகிறது? என்பதைப் பற்றி எங்களுக்குக் கூறுங்கள் என்றார். அப்போது அன்னை ஆயிஷா ரலி அவர்கள் கூறினார்கள் :

மக்கள் விபச்சாரத்தை ஆகுமாக்கிக் கொண்டால்,மது அருந்தினால், இசைக் கருவிகளை இசைக்க ஆரம்பித்தால் அல்லாஹ் கோபமுற்று  மக்களுக்கு நடுக்கத்தைத் தருமாறு பூமிக்கு உத்தரவிடுகிறான். அவர்கள் தவ்பா செய்து இறைவன் அளவில் மீண்டு விட்டால் தப்பித்துக் கொள்வார்கள்.இல்லையெனில் நிலநடுக்கம் அவர்களை  அழித்து விடும்.

அன்னையவர்களே! இது அவர்களுக்கு தரப்படும் வேதனையா என்று கேட்டார். அதற்கு அன்னையவர்கள் முஃமின்களுக்கு உபதேசமாகவும் ரஹ்மத்தாகவும் இருக்கிறது. காஃபிர்களுக்கு இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து அளிக்கப்படும் தண்டனையாக இருக்கிறது எனக் கூறினார்கள்.

நான் நபி அவர்களுக்குப் பின் கேட்ட ஹதீஸ்களில் இந்த ஹதீஸை விட வேறு எந்த ஹதீஸின் மூலம் இவ்வளவு மகிழச்சி அடைந்ததில்லை என்று அனஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள். (அல் உகூபாத்)

அல்லாஹ்வின் திருநாமங்களில் ஹகீம் என்ற திருநாமம் இருக்கிறது. குர்ஆனில் சுமார் 91 இடங்களில் அந்த பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்குப் பொருள் ;

والحكيم: الذي يضع الأمور في مواضعها، ويوقعها مواقعها، ولا يأمر إلا بما فيه الخير، ولا ينهى إلا عما فيه الشر، ولا يعذب إلا من استحق، ولا يقدر إلا ما فيه حكمة وهدف، فأفعاله سديدة، وصنعه متقن، فلا يقدِّر شيئاً عبثاً، ولا يفعل لغير حكمة؛ بل كل ذلك بحكمة وعلم، وإن غاب عن الخلائق

ஒவ்வொரு காரியங்களையும் மதிநுட்பத்தோடு நேர்த்தியாக கனக் கச்சிதமாக செய்யக்கூடியவன். யாருக்கு எந்த நேரத்தில் எதை செய்வது பொருத்தமோ அவருக்கு அந்த நேரத்தில் அதை சரியாக, முறையாக செய்பவன். அவன் ஏவுகின்ற அனைத்திலும் நன்மைகள் இருக்கும். அவன் தடுத்த விஷயங்களில் உலக மக்களுக்கு தீமைகள் இருக்கும். தண்டிப்பதற்கு தகுதியானவர்களை மட்டுமே தண்டிப்பான். அவனுடைய செயல்பாடுகள் எதுவும் பொருத்தமில்லாததாகவோ வீணானதாகவோ இருக்காது. அவனுடைய செயல்பாடுகள் ஒவ்வொன்றிலும் மதி நுட்பங்கள் ஒளிந்திருக்கும். படைப்பினங்கள் வேண்டுமானால் அதை அறியாமல் இருக்கலாம்.

உலகில் அல்லாஹ் ஏற்படுத்துகின்ற அனைத்திலும் எண்ணற்ற நுட்பங்கள் ஒளிந்திருக்கும். மனித சமூகம் தெரிந்து கொண்டு படிப்பினை பெற வேண்டிய பல செய்திகள் மறைந்திருக்கும். ஒரு முஸ்லிம் எதையும் படிப்பினைக் கண் கொண்டு பார்க்க வேண்டும்.   இந்த துயரச் சம்பவத்திலும் நமக்கு நிறைய பாடங்களும் படிப்பினைகளும் இருக்கிறது.

1, எல்லாம் இறைவன் விதித்த விதிப்படியே நடக்கின்றன.

உலகில் நடப்பவை அனைத்தும் இறைவனின் விதிப்படியே நடக்கிறது. இறைவனின் நாட்டப்படியே நடைபெறுகிறது. பிறப்பு இறப்பு வாழ்வாதாரம் மற்றும் மனித வாழ்வில் நிகழுகின்ற  சுக துக்கங்கள் ஏற்ற இறக்கங்கள் வெற்றி தோல்விகள் என அனைத்தும் இறை விதிக்குட்பட்டே நடக்கிறது. இறை விதியைத் தாண்டி எதுவும் நடை பெறாது.

اِنَّ اللّٰهَ بَالِغُ اَمْرِهٖ‌  قَدْ جَعَلَ اللّٰهُ لِكُلِّ شَىْءٍ قَدْرًا‏

நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தில் மிகைத்தவன். (தன் காரியத்தை நிச்சயமாக செய்து முடிப்பான்) அல்லாஹ் ஒவ்வொன்றிற்கும் (ஒரு காலத்தையும்) அளவையும் ஏற்படுத்தி விட்டான். (அதன்படியே நடைபெறும்.)  (அல்குர்ஆன் : 65:3)

وَمَا يَعْزُبُ عَنْ رَّبِّكَ مِنْ مِّثْقَالِ ذَرَّةٍ فِى الْاَرْضِ وَلَا فِى السَّمَآءِ وَلَاۤ اَصْغَرَ مِنْ ذٰ لِكَ وَلَاۤ اَكْبَرَ اِلَّا فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ‏

பூமியிலோ, வானத்திலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் (நபியே!) உங்களது இறைவனுக்குத் தெரியாமல் தவறிவிடுவதில்லை. இவற்றைவிட சிறிதோ அல்லது பெரிதோ (எதுவாயினும்) அவனுடைய விரிவான பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமலில்லை. (அல்குர்ஆன் : 10:61)

وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهٖ‌ وَيُرْسِلُ عَلَيْكُمْ حَفَظَةً حَتّٰٓى اِذَا جَآءَ اَحَدَكُمُ الْمَوْتُ تَوَفَّتْهُ رُسُلُـنَا وَهُمْ لَا يُفَرِّطُوْنَ

அவன் தன் அடியார்களை அடக்கியே ஆளுகின்றான்; அன்றி உங்களுக்குப் பாதுகாப்பாளர்களையும் ஏற்படுத்துகின்றான். அவர்கள் உங்களில் ஒவ்வொருவரையும் மரண (கால)ம் வரும் வரையில் பாதுகாத்து, பின்னர் அவரை இறக்கச் செய்கின்றனர்.அவர்கள் (குறித்த காலத்திற்கு முன்னரோ, பின்னரோ உயிரைக் கைப்பற்றி) ஏதும் தவறிழைப்பதில்லை. (அல்குர்ஆன் : 6:61)

இந்த பூமியில் ஒரு அணு அசைவதாக இருந்தாலும் இறைவனின் நாட்டம் இல்லாமல் அசையாது. வாழ்வோ மரணமோ அவன் குறித்த தேதியில் குறித்த நேரத்தில் சரியாக நடைபெறும். 

மரணத்திலிருந்து தப்பியவர் உலகில் யாரும் இல்லை. பூமிக்கு மேலே ஆட்டம் போட்டவர்களெல்லாம் பூமிக்கு கீழே போய் விட்டார்கள். பூமியில் பெருமையடித்துத் திரிந்தவர்களெல்லாம் காணாமல் போய் விட்டார்கள். மக்கள் மீது அக்கிரமங்களையும் அநீதங்களையும் கட்டவிழ்த்து விட்டவர்களெல்லாம் அடையாளம் தெரியாமல் அழிந்து போனார்கள். என்னை மிஞ்சிய ஆளில்லை என்று தம்பட்டம் அடித்தவர்களெல்லாம் மண்ணுக்கு இரையாகி விட்டார்கள். மரணம் யாரையும் விட்டு வைக்காது.

மரணத்தை வென்றவர் உலகில் யாரும் இல்லை. அமெரிக்காவின் மிகப்பெரிய பாடகராகவும் நடனக்கலைஞராகவும் இருந்த மைக்கேல் ஜாக்சன் 150 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று விரும்பினார். தன் வீட்டில் 12 மருத்துவர்களை நியமித்தார், அவர்கள் தினமும் முடி முதல் கால் நகங்கள் வரை அவரை பரிசோதிப்பார்கள். உண்பதற்கு முன்பு அவரது உணவு எப்போதும் ஆய்வகத்தில் சோதிக்கப்படும்.அவரது தினசரி உடற்பயிற்சியைக் கவனிக்க மேலும் 15 பேர் நியமிக்கப் பட்டிருந்தார்கள். அவரது படுக்கையில் ஆக்ஸிஜன் அளவைக் கட்டுப்படுத்தும் தொழில் நுட்பம் இருந்தது. அவருக்காக உறுப்பு தானம் செய்வதற்கு சுமார் 200  நன்கொடையாளர்கள் தயாராக இருந்தனர். இந்த நன்கொடையாளர்களின் பராமரிப்பையும் அவர் கவனித்துக் கொண்டார். அவர் 150 ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற கனவுடன் எல்லா முயற்சிகளையும் தொடர்ந்தார். ஆனால் அந்த முயற்சிகள் அனைத்தும் வீணானது. 50 வயதில், அவரது இதயம் செயல்படுவதை நிறுத்தியது. ஜாக்சன் மரணத்தை சவால் விட்டு ஜெயிக்க முயன்றார். ஆனால் மரணமோ அவருக்கு சவால் விட்டு அவரை ஜெயித்து விட்டது.

உலகில் யாராக இருந்தாலும் மரணத்தை தடுக்கவோ தள்ளிப்போடவோ எத்தனை முயற்சிகள் மேற்கொண்டாலும் குறித்த நேரத்தில் மரணம் வந்தே தீரும்.அதே போன்று ஒருவர் வாழ வேண்டும் என்று இறைவன் நாடி விட்டால் எத்தனை சக்திகள் நினைத்தாலும் அந்த இறை நாட்டத்தைத் தடுக்க முடியாது.

மிகப்பெரும் மாமேதை இமாம் ராஸி ரஹ் அவர்கள் ஒரு முறை மயக்கமுற்று கீழே விழுந்து விட்டார்கள்.நீண்ட நேரம் உணர்வற்று இருந்ததினால் இறந்து விட்டதாக அவ்வூர் மக்கள் முடிவு செய்து அவர்களை அடக்கம் செய்து விட்டார்கள். அதற்குப் பிறகு அவர்களுக்கு கப்ரில் வைத்து மயக்கம் தெளிந்தது.தான் புதைக்குழியில் இருப்பதை உணர்ந்து கொண்ட இமாம் அவர்கள்,எப்படி வெளியே வருவது என கவலைப்பட்டார்கள். யா அல்லாஹ் வெளியே வருவதற்கு எனக்கு உதவி செய்தால் உனக்காக ஒரு மகத்தான காரியம் செய்வதாக நிய்யத் செய்து துஆச் செய்தார்கள். கொஞ்ச நேரத்தில் கஃபன் துணியைத் திருடுவதற்காக அங்கு வந்து ஒருவன் அந்தக் கப்ரை தோண்டினான். பின்பு அங்கிருந்து இமாம் ராஸி ரஹ் அவர்கள் உயிருடன் வெளியே வந்தார்கள்.வெளியே வந்ததும் இமாம் அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதற்காக எழுத ஆரம்பித்தது தான் தஃப்ஸீருல் கபீர் என்னும் மாபெரும் திருக்குர்ஆன் விரிவுரை நூல் என்று ஒரு குறிப்புண்டு.  

வாழ்வும் மரணமும் இறைவனின் கையில் இருக்கிறது. அவன் நினைத்தால் யாரையும் எப்படியும் வாழ வைப்பான். அவன் நினைத்தால் யாரையும் எப்படியும் மரணிக்கச் செய்வான். அல்லாஹ்வின் விதியை யாராலும் மாற்றியமைக்க இயலாது.

துருக்கியில் நடந்த அந்த துயரச்சம்பவத்திலிருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டிய முதல் பாடம் அது தான். அவர்கள் அனைவரும் மரணிக்க வேண்டும் என்று இறைவன் நாடினான். ஆகையால் அவர்கள் மரணித்து விட்டார்கள். அந்த இடிபாடுகளுக்கு இடையிலும் ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என்று அவன் நாடினான். அதுவும் நடந்தது.

துருக்கியைச் சேர்ந்த ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண் நிலநடுக்கத்தின் போது மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கே ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கட்டிடம் இடிந்து விழுந்தது. அப்போது அதில் சிக்கிய அந்தப் பெண்ணுக்கு ஒரு  அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை தற்போது நலமுடன் இருக்கிறது. ஆனால் அந்தப் பெண் இறந்ததாக கூறப்படுகிறது.

எனவே அல்லாஹ் விதித்த விதியை யாராலும் மாற்ற இயலாது.

2, அல்லாஹ் நமக்கு செய்து கொண்டிருக்கிற உபகாரங்களையும் நம்மீது அவன் வெளிப்படுத்துகின்ற கருணையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

وَالْاَرْضَ فَرَشْنٰهَا فَنِعْمَ الْمٰهِدُوْنَ‏

பூமியை நாம் (விசாலமாக) விரித்தோம். விரிப்பவர் களிலெல்லாம் மிக்க மேலான விதத்தில் விரிப்பவர் நாமே. (அல்குர்ஆன் : 51:48)

وَلَقَدْ مَكَّـنّٰكُمْ فِى الْاَرْضِ وَجَعَلْنَا لَـكُمْ فِيْهَا مَعَايِشَ  قَلِيْلًا مَّا تَشْكُرُوْنَ‏

(மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களுக்குப் பூமியில்  எல்லா வசதிகளையும் அளித்து, அதில் உங்களுக்கு வாழ்வதற்குத் தேவையான காரணங்களை ஏற்படுத்தினோம். (இவ்வாறிருந்தும்) நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகக் குறைவு. (அல்குர்ஆன் : 7:10)

நம் வாழும் இந்த புவி மண், பாறை, களிமண் என பல அடுக்குகளை உள்ளடக்கியது. இந்த அடுக்குகள் நகரும் தன்மை கொண்டவை. அது நகரும் போது, ஒன்றோடு ஒன்று உராயும் பொழுது, அவை அதிர்வுகளை உருவாக்குகின்றன. இந்த அதிர்வுகளே நில நடுக்கம் என்றும் பூகம்பம் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த நகர்வு ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. இலேசானது முதல் கடும் நிலநடுக்கம் வரை சுமார் 10 லட்சம் நிலநடுக்கங்கள் ஆண்டு தோறும்  உலகில் ஏற்படுகின்றன. அவற்றில் ஒரு சிலது மட்டும் தான் மனிதர்களால் உணர்ந்து கொள்ளப்படுகிறது. மனித சமூகத்திற்கு பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூமியை மனிதர்கள் வாழ்வதற்கும் மிருகங்கள் வசிப்பதற்கும் தாவரங்கள் முளைப்பதற்கும் ஏற்ற வகையில் இறைவன் அமைத்திருக்கிறான். பூமிக்கு அடியில் இத்தனை விஷயங்கள் நடந்தாலும் அவைகளால் நமக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வண்ணம் அல்லாஹ் நம்மைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறான். இது நமக்கு அல்லாஹ் செய்கின்ற மாபெரும் உபகாரம்.

قال ابن القيم: الله سبحانه يحب أن يشكر، ولذا فاوت بين عباده في صفاتهم الظاهرة والباطنة في خلقهم وأخلاقهم وأديانهم وأرزاقهم ومعايشهم وآجالهم، فإذا رأى المعافى المبتلى والغنيُّ الفقيرَ والمؤمنُ الكافرَ عظُم شكره لله، وعرف قدر نعمته عليه، وما فضَّله به على غيره، فازداد شكرا وخضوعا واعترافا بالنعمة، فالضد يظهر حسنه الضد، وبضدها تتبين الأشياء، ولولا خَلق القبيح لما عرفت فضيلة الجمال والحسن، ولولا خَلقُ الظلام لما عرفت فضيلة النور، ولولا خلق أنواع البلاء لما عرف قدر العافية، ولولا الجحيم لما عرف قدر الجنة، ولو جعل الله -سبحانه- النهار سرمدا لما عرف قدره، ولو جعل الليل سرمدا لما عرف قدره، وأعرف الناس بقدر النعمة من ذاق البلاء.

இப்னுல் கய்யிம் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ; அல்லாஹுத்தஆலா அடியார்கள் தனக்கு நன்றி செலுத்த வேண்டும் என்பதை விரும்புகிறான். எனவே தான் தன்மைகளிலும் படைப்பிலும் குணங்களிலும் இறை நம்பிக்கையிலும் வாழ்வாதாரத்திலும் வாழ்க்கையின் அனைத்து விஷயங்களிலும் மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தியிருக்கிறான். சோதனைக்குள்ளாக் கப்பட்டவர்களைப் பார்க்கின்ற போது சுகமாக வாழக்கூடியவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்று எண்ணம் பிறக்கும். ஏழைகளைப் பார்க்கின்ற செல்வந்தர்களுக்கும் இறை மறுப்பாளர்களைப் பார்க்கின்ற இறை நம்பிக்கையாளர்களுக்கும் நன்றி செலுத்த வேண்டும் என்ற உணர்வு உதயமாகும்.

انما يعرف الشيئ بضده

ஒரு பொருள் அதற்கு எதிரான பொருளைக் கொண்டு தான் அறியப்படும் என்று சொல்வார்கள். அருவருப்பான விஷயங்கள் இந்த பூமியில் இல்லையென்றால் அழகான விஷயங்கள் அறியப்பட்டிருக்காது. இருள் இல்லையென்றால் ஒளியின் மகத்துவம் விளங்கப்பட்டிருக்காது. சோதனைகள் இல்லையென்றால் சுகமான வாழ்க்கையின் உன்னதம் புரியப் பட்டிருக்காது. நரகம் இல்லையென்றால் சொர்க்கத்தின் செழுமைகளை புரிந்திருக்க முடியாது.

அல்லாஹ் மனித சமூகத்திற்கு, தான், செய்து கொண்டிருக்கிற உபகாரங்களை நினைவுபடுத்துவதற்குத் தான் அவ்வப்போது இதுமாதிரியான அசம்பாவிதங்களை பூமியில் நிகழ்த்துகிறான். இதுபோன்ற நில அதிர்வுகளும் அதன் மூலம் ஏற்படும் இழப்புக்களும் அல்லாஹ்வின் அளப்பெரும் உபகாரங்களை நமக்கு உணர்த்துகின்றது.

3, இது அல்லாஹ்வின் மகத்தான ஆற்றலின் வெளிப்பாடு என்று உணர வேண்டும்.

اَللّٰهُ الَّذِىْ خَلَقَ سَبْعَ سَمٰوٰتٍ وَّمِنَ الْاَرْضِ مِثْلَهُنَّ  يَتَنَزَّلُ الْاَمْرُ بَيْنَهُنَّ لِتَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ ۙ وَّاَنَّ اللّٰهَ قَدْ اَحَاطَ بِكُلِّ شَىْءٍ عِلْمًا‏

ஏழு வானங்களையும், அவைகளைப் போல் பூமியையும் அல்லாஹ் தான் படைத்தான். இவைகளில் (தினசரி நிகழக்கூடிய) எல்லா விஷயங்களைப் பற்றிய கட்டளை இறங்கிக்கொண்டே இருக்கின்றது. (ஆகவே, நம்பிக்கையாளர்களே!) நிச்சயமாக அல்லாஹ் சகலவற்றின் மீதும் ஆற்றலுடையவன் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் தன் ஞானத்தால், எல்லாவற்றையும் ஆழமாக அறிந்துகொண்டிருக்கின்றான் என்பதையும் நீங்கள் திட்டமாக அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இவைகளை படைத்தான். (அல்குர்ஆன் : 65:12)

அல்லாஹ்வின் ஆற்றலுக்கு முன்பு நாம் ஒன்றுமில்லை என்பதை புரிய வேண்டும். இன்றைக்கு எத்தனை விஞ்ஞான வளர்ச்சியும் அறிவியல் புரட்சியும் நவீன சாதனங்களும் தோன்றியிருந்தாலும் இதுபோன்ற அழிவிலிருந்து நாம் நம்மை காத்துக் கொள்ள இயல வில்லை. இயற்கைச் சீற்றங்கள் தரும் இதுபோன்ற பேரழிவுகளிலிருந்து நம்மைக் காக்க இன்றைய விஞ்ஞானம் நமக்கு உதவ வில்லை. இங்கே தான் படைத்தவனின் வல்லமையும் படைப்பினங்களின் இயலாமையும் வெளிப்படுகிறது.

மட்டுமல்ல, ஒரே பொருளில் ஆக்கமும் இருக்கும்,அழிவும் இருக்கும். இது அல்லாஹ்வின் ஆற்றல். காற்று சுவாசத்திற்கு அவசியம். இந்த பிரபஞ்சத்தில் காற்று இல்லையென்றால் எந்த உயிரனமும் வாழ முடியாது. ஆனால் அதே காற்று தான் ஆத் கூட்டத்தை அழித்தது. நீர் மிக அத்தியாவசிய பொருட்களில் ஒன்று. நீரின்றி அமையாது உலகு என்று சொல்வார்கள். ஆனால் அந்த நீர் தான் நூஹ் நபியின் கூட்டத்தை அழித்தது.நெருப்பு கறிக்கும் தன்மை கொண்டது.ஆனால் அதே நெருப்பு இப்ராஹீம் நபிக்கு குளிராக மாறியது. நிலத்தின் மீது நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மண் நம்மை காக்கிறது.ஆனால் அதே மண் தான் காரூனை விழுங்கியது.ஒரே கடல் தான் மூஸா நபி அவர்களைக் காத்தது.அதே கடல் தான் பிர்அவ்னை அழித்தது. எந்த தடியைக் கொண்டு மூஸா அலை அவர்கள் தன் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து கொண்டிருந்தார்களோ அதே தடி தான் பாம்பாக மாறி அவர்களை அச்சுறுத்தியது.எனவே இதன் மூலம் அல்லாஹ்வின் வல்லமையை நாம் உணர வேண்டும்.

 

4, இதுபோன்ற அழிவுகள் நமக்கு மறுமையை நினைவுபடுத்துகிறது.

இவ்வுலகில் படைக்கப்பட்ட அனைத்துமே இறைவனின் கட்டுப்பாட்டில் தான் இயங்கி வருகின்றன என்பதையும் இப்பிரபஞ்சம் முழுவதும் ஒரு நாள் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள சக்தியை முற்றிலுமாக இழந்து அழிந்து போகும் என்பதையும் பகுத்தறிவுள்ள ஒவ்வொரு மனிதனும் நம்ப வேண்டும். அது தான் யுக முடிவு நாள்! அந்த நாளில் இதுவரை சுனாமியும் பூகம்பமும் நிகழ்த்திய‌ பேரழிவை விட பல்லாயிரம் மடங்கு பயங்கரமான, நம் சிறு அறிவினால் சிந்தித்துப் பார்க்க முடியாத  பாதிப்புகளும் பேரழிவுகளும் நிகழும்.இன்று இயற்கைச் சீற்றங் களிலிருந்து தப்பியவர்களைப் போல் அன்றைய நாள் இறைவனின் கோரப்பிடியிலிருந்து ஒருவரும் தப்ப முடியாது.

5, மரணத்தை எண்ணிப் பார்த்து அதன் மூலம் நம் வாழ்க்கையை சீர்திருத்திக் கொள்ள வேண்டும்.

عن ابن عمر رضي الله عنهما أنه قال : كنت مع رسول الله صلى الله عليه وسلم فجاءه رجل من الأنصار فسلم على النبي صلى الله عليه وسلم ثم قال : يا رسول الله أي المؤمنين أفضل؟ قال : «أحسنهم خُلُقاً، قال: فأي المؤمنين أكيس قال : أكثرهم للموت ذكرا وأحسنهم لما بعده استعدادا أولئك الأكياس

இப்னு உமர் ரலி அவர்கள் அறிவிக்கின்றார்கள் ; நான் நபி அவர்களுடன் இருந்தேன். அப்போது அன்ஸாரிகளில் ஒருவர் வந்து நபி அவர்களுக்கு ஸலாம் சொல்லி விட்டு அல்லாஹ்வின் தூதர் அவர்களே! முஃமின்களில் யார் சிறந்தவர் என்று கேட்டார். அதற்கு நபி அவர்கள் சிறந்த பண்பாடுடையவர் என்றார்கள். அவர் மீண்டும் முஃமின்களில் யார் புத்திசாலி எனக் கேட்க மரணத்தை அதிகம் நினைவு படுத்துபவரும் அதன் பின்னாலுள்ள வாழ்க்கைக்காக தன்னைத் தயார் படுத்துபவருமே எனக் கூறினார்கள். (இப்னுமாஜா ; 3454)

نقل عن الدقاق أنه قال: "من أكثر من ذكر الموت، أكرم بثلاثة أشياء: تعجيل التوبة، وقناعة القوت، ونشاط العبادة. ومن نسي الموت عوقب بثلاثة أشياء: تسويف التوبة، وترك الرضا بالكفاف، والتكاسل عن العبادة،

தக்காக் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ; யார் மரணத்தை அதிகமாக நினைக்கிறார்களோ அல்லாஹுத்தஆலா அவருக்கு மூன்று விஷயங்களைக் கொண்டு கண்ணியப்படுத்துவான்.

 1. அவர் தவ்பாவை மிக விரைவாக செய்து கொள்வார்.

2. அவரது உள்ளத்தில் போதும் என்ற தன்மை இருக்கும்.

3. வணக்க வழிபாட்டில் உற்சாகம் இருக்கும்.

யார் மரணத்தை மறந்து விடுவாரோ அவர் மூன்று விஷயங்களைக் கொண்டு தண்டிக்கப்படுவார்.

1. நாளை தவ்பா தேடிக் கொள்ளலாம். நாளை தவ்பா தேடிக் கொள்ளலாம் என்று பாவமன்னிப்பைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பார்.

2. போதுமான செல்வத்தைக் கொண்டு வாழ்க்கையில் அவருக்கு திருப்தி ஏற்படாது.  

3. வணக்க வழிபாட்டில் சோம்பேறித்தனமாக இருப்பார்.

وقد روي أن ملك الموت دخل على داود عليه السلام فقال: من أنت؟ فقال ملك الموت: أنا من لا يهاب الملوك، ولا تمنع منه القصور، ولا يقبل الرشوة، قال: فإذًا أنت ملك الموت، قال: نعم، قال: أتيتني ولم أستعد بعد! قال: يا داود، أين فلان قريبك؟ أين فلان جارك؟ قال: مات، قال: أما كان لك في هؤلاء عبرة لتستعد؟!

தாவூத் அலை அவர்களிடம் ஒரு மனிதர் வந்தார். நீங்கள் யார் என்று கேட்டார்கள்.நான் மன்னர்களைப் பார்த்து அஞ்ச மாட்டேன். அரண்மனைகள் என்னை தடுத்து நிறுத்தாது. நான் யாரிடமும் லஞ்சம் வாங்க மாட்டேன் என்று கூறினார். அப்போது தாவூத் அலை அவர்கள் அப்படியென்றால் நீங்கள் மலக்குல் மவுத்தாகத் தான் இருக்க வேண்டும் என்றார்கள். அவரும் ஆம் என்று கூறினார். இன்னும் நான் அதற்கான தயாரிப்பு செய்ய வில்லையே! அதற்குள் என்னிடத்தில் வந்து விட்டீரே! என்றார்கள். அதற்கு மலக்குல் மவுத் தாவூதே! உன்னுடைய இன்ன உறவினர் எங்கே ? உன்னுடைய இன்ன அண்டை வீட்டார் எங்கே என்று கேட்டார்கள். அவர்களெல்லாம் இறந்து விட்டார்கள் என்றார்கள். அவர்கள் இறந்ததை நீங்கள் பார்த்தீர்கள் அல்லவா?  உமக்கு அவர்களிலே படிப்பினை இருக்க வில்லையா ? என்று கேட்டார்கள். (தத்கிரா லில் இமாம் குர்துபீ)

இந்த நேரத்தில் நிலநடுக்கத்தில் மரணித்தவர்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவர்களுக்கு ஷஹாதத்தின் அந்தஸ்து கிடைப்பதற்கும் தங்கள் இருப்பிடங்களையும் உடமைகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்து நிர்கதியாக நிற்கிற அம்மகள் மறுவாழ்வு பெறவும் இறைவனிடம் கரம் ஏந்துவோம்.

14 comments:

  1. بارك الله في علمك

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் அருமையான பதிவு அல்லாஹ் தங்களுக்கு மென்மேலும் பரக்கத் செய்வானாக ஆமீன்

    ReplyDelete
  3. ஆரோக்கியத்தை அல்லாஹ் உங்களுக்கு தருவானாக

    ReplyDelete
  4. பார்க்கத்தான்

    ReplyDelete
  5. மெளலானா சிறந்த தகவல்கள்
    இறைவன் உங்களுக்கு நிறைவான கூலியை தந்தருள்வானாக... ஆமீன்

    ReplyDelete
  6. மாஷா அல்லாஹ் அருமையான வரிகள் உங்கள் வரிகளை போல் உங்கள் வாழ்க்கையை அழகாக்குவானாக

    ReplyDelete
  7. மாஷா அல்லாஹ் ஜஸாகல்லாஹூ கைர் ஹழ்ரத்

    ReplyDelete