Friday, December 8, 2023

எங்கும் ஊழல் எதிலும் ஊழல்

நாளை டிசம்பர் 9 ம் தேதி. சர்வதேச அளவில் ஊழலை ஒழிக்கும் நோக்கத்திற்காக 2003 - ம் ஆண்டு அக்டோபர் 31 ம் தேதி ஐ.நா. சபையால் டிசம்பர் 9 ம் நாள் சர்வதேச ஊழல் ஒழிப்பு தினமாக அறிவிக்கப்பட்டது. ஊழல் ஒழிப்பு பணிகளில் ஈடுபடுவதுடன், ஊழல் மற்றும் மோசடி பற்றிய  விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதும் எதிர் காலத்தில் ஊழல் இல்லாத ஒரு சமூகத்தைக் கட்டமைப்பதும் தான் இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

வழங்கப்பட்ட பதவியையோ அதிகாரத்தையோ தவறாகப் பயன்படுத்தி முறைகேடாக ஒன்றை பெற்றுக் கொள்வதற்கு, அனுபவிப்பதற்கு ஊழல் என்று சொல்லப்படுகிறது.இலஞ்சம் கையாடல் என்பதும் இதில் உள்ளடங்கும்.

லஞ்சம், ஊழல் என்பது எங்கு, யாரால், எப்போது தொடங்கியது என்று தெரிய வில்லை. ஆனால் ஊழல் இல்லாத அதிகாரிகள் இல்லை என்று கூறும் அளவிற்கு புற்று நோயைப்போல பரவி, இன்றைக்கு சமூகத்தைப் பாதிக்கும் முக்கியப் பிரச்னையாக உருவெடுத்து நிற்கிறது. சாமான்யன் தொடங்கி நாடு வரை வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் தடைக்கல்லாக மாறிவிட்டன. ஒவ்வொரு தனிமனிதனையும் பாதிக்கும் ஊழல், சமூகத்தின் ஆணிவேர் வரை புரையோடிக் கிடக்கிறது.

அரசினால் கிடைக்கும் சலுகைகள் நன்கொடைகள் உரிய முறையில் ஏழை எளிய மக்களுக்கும் நடுத்தர மக்களுக்கும் சென்றடைவது ஊழல் மோசடிகளினால் தடுக்கப்படுகின்றது. அதேபோன்று தவறுகள் கண்டு கொள்ளாமல் விடப்படுகின்றன. முன்பெல்லாம் கடமையை மீறுவதற்குத்தான் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது, கடமையைச் செய்யவே லஞ்சம் தர வேண்டிய அவல நிலை ஏற்பட்டது மிகவும் வேதனையான விஷயம். இப்படி சமூகத்தில் அடி ஆழம் வரை ஊடுருவியிருக்கிறது ஊழலும் இலஞ்சமும்

2010 காமன்வெல்த் ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல், தேசிய பொருள்கள் பரிமாற்ற சந்தையில் ஊழல், ஏர் இந்திய நிறுவன விமானக் கொள் முதலில் ஊழல், ஐ.பீ.எல் விளையாட்டில் ஊழல் என நீளுகின்றது நம் நாட்டில் நடைபெறுகின்ற ஊழல்கள்.

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனம், உலகின் 180 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டு ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்தப் பட்டியலில் 2016 ல் 79 - வது இடத்திலும், 2017ல் 81 - வது இடத்தையும், 2018 - ல் 78 வது இடத்தையும் இந்தியா பெற்றுள்ளது.

ஒரு நாள் மழையால் இன்று தமிழகத்தின் தலைநகரான சென்னை நீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. நான்கு நாளாகியும் சென்னையின் பல பகுதிகளில் நீர் வடியாமல் மக்கள் பெரும் சிரமத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.பல குடும்பங்கள் வீடுகளை இழந்து விட்டார்கள். சொத்துக்களை இழந்து விட்டார்கள். வீட்டு உபயோகப் பொருட்களை இழந்து விட்டார்கள். ஒரு நாள் மழை சென்னை மக்களின் தலை விதியையே மாற்றி விடுகிறது. இது இன்றல்ல, நேற்றல்ல... ஒவ்வொரு கன மழையின் போதும் இதே நிலை தான். கடந்த காலங்களிலும் மழை பெய்யத்தான் செய்தது. ஆனால் இந்த மாதிரியான பாதிப்புக்களை அது ஏற்படுத்த வில்லை. சென்னை மக்களின் இந்த பரிதாப நிகழ்வுக்கும் ஊழலும் இலஞ்சமும் தான் காரணம்.நீர் வடிகால் அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் முறைகேடு, வீடு கட்டுவதற்கு அனுமதியில்லாத நீர் ஓடக்கூடிய இடங்களில் இலஞ்சத்தை வாங்கிக் கொண்டு முறையின்றி கொடுக்கப்பட்ட அனுமதி.இதில் அரசு அதிகாரிகள், ஊழியர்களின் மெத்தனம் இவைகள் தான் இந்த இழப்புகளுக்கெல்லாம் காரணம்.

عن عبد الله بن عمرو قال: لَعن رسول الله ـ صلى الله عليه وسلم ـ الرَّاشي والمرْتشي

இலஞ்சம் வாங்குபவன் இலஞ்சம் கொடுப்பவன் இருவரையும் நபி அவர்கள் சபித்தார்கள். (திர்மிதி ; 1337)

தவறு செய்பவன் மட்டும் குற்றவாளியல்ல. அதற்கு உடந்தையாக இருப்பவனும் குற்றவாளி தான். எனவே இலஞ்சம் கொடுப்பவனையும் குற்றவாளி என்று இஸ்லாம் சொல்கிறது.அந்த வகையில் பணத்தை வாங்கிக் கொண்டு வீடு கட்டுவதற்கு அனுமதியளித்தவர்கள் மட்டுமல்ல, முறைகேடாக அந்த அனுமதியைப் பெற்று வீடுகளைக் கட்டியவர்களும் குற்றவாளிகள் தான்.

முறைகேடாக சம்பாதிப்பதையும் முறையின்றி ஒரு பொருளை அனுபவிப்பதையும் இஸ்லாம் தடை செய்கிறது.

وَلَا تَاْكُلُوْٓا اَمْوَالَـكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ وَتُدْلُوْا بِهَآ اِلَى الْحُـکَّامِ لِتَاْکُلُوْا فَرِيْقًا مِّنْ اَمْوَالِ النَّاسِ بِالْاِثْمِ وَاَنْـتُمْ تَعْلَمُوْنَ‏

(மேலும்,) உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். (உங்கள் வாதம் பொய்யானதென) நீங்கள் அறிந்திருந்தும் (இதர) மனிதர்களின் பொருள்களில் எதையும் பாவமான வழியில் (அநியாயமாக லஞ்சம் கொடுத்து) அபகரித்துக்கொள்ள அதிகாரிகளிடம் செல்லாதீர்கள். (அல்குர்ஆன் : 2:188)

பொறுப்பு வகித்த நம் முன்னோர்கள் அதில் மிகவும் இறையச்சத்தோடும் பேணுதலோடும் இருந்தார்கள். கொடுக்கப்பட்ட பொறுப்புக்களை முறையாகச் செய்தார்கள். பொன்னுக்கும் பொருளுக்கும் ஆசைப்பட்டு அமானிதமாக கொடுக்கப்பட்ட பொறுப்பில் மோசடி செய்யும் இன்றைய அதிகாரிகள் பார்த்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய தூய்மையாக வரலாற்றுக்குரியவர்கள் நம் முன்னோர்கள்.

கைபர் போர்க்களத்தில் இஸ்லாமியர்களுக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது. கைபரில் இருந்த அத்தனை கோட்டைகளும் முஸ்லிம்கள் வசம் வந்தன, அங்கே இருக்கும் சொத்துகளும் முஸ்லிம் ஆட்சியின் கீழ் வந்தன. அந்த வெற்றி இஸ்லாமியர்கள் வாழ்வில் மாபெரும் வசந்தத்தைக் கொண்டு வந்தது.

இப்னு உமர் ரலி அவர்கள் கூறினார்கள் : கைபரை வெற்றி கொள்ளும் வரை நாங்கள் வயிறாற உண்டதில்லை. கைபர் வெற்றி கொள்ளப்பட்டதற்கு பிறகு தான் நாங்கள் வயிறாற பேரீத்தம் பழம் சாப்பிடுகிறோம்.” (ஸஹீஹுல் புகாரி)

கைபர் வெற்றிக்குப் பிறகு அங்கே இருக்கும் யூதர்களை கைபரில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நபித்தோழர்கள் முன் வைத்தனர். ஆனால், அவர்களோ வெளியேற மறுத்தார்கள், அதாவது வெளியேறாமல் அங்கேயே இருக்கிறோம் என்று கெஞ்சி கோரிக்கை வைத்தார்கள்.

முஹம்மதே எங்களை இப்பூமியில் தங்க விடுங்கள். நாங்கள் இப்பூமியை சீர்படுத்துகிறோம் உங்களை விட இந்த பூமியைப் பற்றி நாங்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறோம்.என்று கூறினார்கள்.

அந்த பூமியை சீர் செய்யும் அளவுக்கு யாரும் இல்லை. போர் முடிந்து விட்டது, இனி முஸ்லிம்கள் இங்கே தங்கி இந்த பூமியை சரி செய்து கொண்டு இருக்க முடியாது, மதீனாவை நோக்கி புறப்பட வேண்டும் என்ற எண்ணமே நபி அவர்களுக்கு தோன்றியது.எனவே அவர்களின் அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்கள்.

விவசாயத்திலும் தோட்டங்களிலும் விளையும்  மகசூலில் ஒரு பகுதியைத் தர வேண்டும் என்ற நிபந்தனையிலும், குறிப்பிட்ட காலம் மட்டுமே இங்கு தங்க வேண்டும் என்ற நிபந்தனையிலும் கைபர் பூமியை நபி அவர்கள் யூதர்களிடம் கொடுத்தார்கள். அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரலி அவர்களை கைபருடைய விளைச்சல்களின் கண்காணிப் பாளராக கைபரில் நியமித்தார்கள்.

وبعث النبي ـ صلى الله عليه وسلم ـ عبد الله بن رواحة إلى أهل خَيْبر ليُقدِّر الزكاة الواجبة عليهم، فأرادوا أن يُرْشوه فقال: تُطعموني السُّحت؟ والله لقد جئتكم من عند أحب الناس إلىَّ، ولأنتم أبغض إليَّ من عِدَّتكم من القردة والخنازير، ولا يَحْملني بُغْضي لكم وحبِّي إياه ألَّا أعدل بينكم فقالوا: بهذا قامت السموات والأرض ” زاد المعاد لابن القيم

நபித் தோழர் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்களை கைபர் பகுதியில் வசிக்கும் யஹூதிகளிடம் பேரீத்தம் பழ அறுவடையில் கிடைப்பவற்றில் தோராயமாகக் கணக்கிட்டு வரியை வசூல் செய்வதற்காக நாயகம் அவர்கள் நியமனம் செய்து அனுப்புகிறார்கள். வரி வசூல் செய்வதற்காக சென்ற அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்களிடம், நாங்கள் செலுத்த வேண்டிய வரியில் சற்றுக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுங்கள், நாங்கள் தருவதை மட்டும் எடுத்துச் செல்லுங்கள், அதற்குப் பதிலாக அப்துல்லாஹ்வே இந்த ஆபரணங்களை முழுமையாக நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என தங்கள் பெண்களின் தங்க ஆபரணங்களை இலஞ்சமாக தருவது குறித்துப் பேசினார்கள். அதற்கவர்கள், இலஞ்சத்தை வாங்கிக்கொண்டு உங்கள் வரியில் என்னை சமரசம் செய்யச் சொல்கிறீர்களா? இந்த உலகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள் நபி அவர்கள். இந்த உலகத்திலேயே எனக்கு அதிகம் வெறுப்பிற்குரியவர்கள் நீங்கள் தான். இறைவனின் மீது சத்தியமாக இதில் நான் நீதம் தவற மாட்டேன். சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என மறுத்து விட்டார்கள். (ஜாதுல் மஆத்)

أخرج الحافظ أبو نعيم في حلية الأولياء عن عمرو بن مهاجر قال: اشتهى عمر تفاحاً، فقال: لو أن عندنا شيئاً من التفاح فإنه طيب؟ فقام رجل من أهله فأهدى إليه تفاحاً، فلما جاء به الرسول قال: ما أطيبه وأطيب ريحه وأحسنه، ارفع يا غلام واقرأ على فلان السلام وقل له: إن هديتك قد وقعت عندنا بحيث تحب، قال عمرو بن مهاجر: فقلت له: يا أمير المؤمنين ابن عمك رجل من أهل بيتك وقد بلغك أن النبي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كان يأكل الهدية ولا يأكل الصدقة، قال: إن الهدية كانت للنبي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هدية، وهي لنا رشوة.

ஜனாதிபதி உமர் இப்னு அப்துல் அஸீஸ் ரஹ்  அவர்கள் திடீரென ஆப்பிள் பழம் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஆனால் ஆப்பிள் வாங்குவதற்கான பணம் அவர் கைவசம் இல்லை.அப்போது ஒருவர் அவர்களுக்கு ஆப்பில் பழத்தை அன்பளிப்பாக கொடுத்தனுப்பினார். அதை அவர்கள் சாப்பிடாமல் திருப்பிக் கொடுத்து விட்டார்கள்.வேண்டாம் அன்பளிப்பாக வரும் பொருளை நான் சாப்பிட மாட்டேன் என்று கூறினார்கள். நபி அவர்கள் ஸதகா பொருளைத்தான் சாப்பிட மறுத்தார்கள். அன்பளிப்பைப் பெற்றுக் கொண்டார்களே என்று கேட்கப்பட்ட போது,பெருமானார் அவர்களுக்கு இது போன்ற பொருட்கள் தரப்பட்டது. அது அவர்களுக்கு அன்பளிப்பாகும். ஆனால் என்னைப் போன்ற மக்கள் பிரதிநிதியான அரசு ஊழியனுக்கு இன்று வழங்கப்படுகின்ற எல்லா அன்பளிப்புக்களும் தன் சுய தேவையை முன் வைத்து தரப்படுகின்ற இலஞ்சமே ஆகும். எனவே எனக்கு ஆப்பிள் வேண்டாம். அதை திருப்பி அனுப்பி விடுங்கள் என உத்தரவிட்டார்கள். (ஹில்யதுல் அவ்லியா)

தனக்கும் தன் குடும்பத்திற்கும் கிடைக்கும் சலுகைகளைக் கூட உமர் ரலி அவர்கள் மறுத்தார்கள். பொறுப்பிற்கு தரப்படும் இலஞ்சமாக ஆகி விடுமோ என்று அஞ்சினார்கள்.

وروى مَالِكٌ عن زَيْدِ بن أسلم عن أبيه أنه قال: "خَرَجَ عبدُ الله وَعُبَيْدُ الله ابْنَا عُمَرَ بنِ الْخَطَّابِ في جَيْشٍ إلى الْعِرَاقِ فلما قَفَلاَ مَرَّا على أبِي مُوسَى الأَشْعَرِيِّ وهو أَمِيرُ الْبَصْرَةِ فَرَحَّبَ بِهِمَا وَسَهَّلَ، ثُمَّ قال: لو أقدر لَكُمَا على أَمْرٍ أنفعكما بِهِ لَفَعَلْتُ، ثُمَّ قال: بَلَى، هَا هُنَا مَالٌ من مَالِ الله أُرِيدُ أن أبعث بِهِ إلى أَمِيرِ الْمُؤْمِنِينَ فَأُسْلِفُكُمَاهُ فَتَبْتَاعَانِ بِهِ مَتَاعًا من مَتَاعِ الْعِرَاقِ ثُمَّ تَبِيعَانِهِ بِالْمَدِينَةِ، فَتُؤَدِّيَانِ رَأْسَ الْمَالِ إلى أَمِيرِ الْمُؤْمِنِينَ وَيَكُونُ الرِّبْحُ لَكُمَا، فَقَالاَ: وَدِدْنَا ذلك، فَفَعَلَ وَكَتَبَ إلى عُمَرَ بن الْخَطَّابِ أن يَأْخُذَ مِنْهُمَا الْمَالَ، فلما قَدِمَا بَاعَا فَأُرْبِحَا، فلما دَفَعَا ذلك إلى عُمَرَ قال: أَكُلُّ الْجَيْشِ أَسْلَفَهُ مِثْلَ ما أسلفكما؟ قَالاَ: لاَ، فقال عُمَرُ بن الْخَطَّابِ: ابْنَا أَمِيرِ الْمُؤْمِنِينَ فَأَسْلَفَكُمَا، أَدِّيَا الْمَالَ وَرِبْحَهُ، فَأَمَّا عبدُ الله فَسَكَتَ وأما عُبَيْدُ الله فقال: ما ينبغي لك يا أَمِيرَ الْمُؤْمِنِينَ هذا، لو نَقَصَ هذا الْمَالُ أو هَلَكَ لَضَمِنَّاهُ، فقال عُمَرُ: أَدِّيَاهُ، فَسَكَتَ عبدُ الله وَرَاجَعَهُ عُبَيْدُ الله، فقال رَجُلٌ من جُلَسَاءِ عُمَرَ: يا أَمِيرَ الْمُؤْمِنِينَ لو جَعَلْتَهُ قِرَاضًا، فقال عُمَرُ: قد جَعَلْتُهُ قِرَاضًا، فَأَخَذَ عُمَرُ رَأْسَ الْمَالِ وَنِصْفَ رِبْحِهِ، وَأَخَذَ عبدُ الله وَعُبَيْدُ الله ابْنَا عُمَرَ بن الْخَطَّابِ نِصْفَ رِبْحِ الْمَالِ"

உமர் ரலி அவர்களின் சேவகராக இருந்த அஸ்லம் ரலி அவர்கள் ஒரு நிகழ்வைக் குறிப்பிடுகிறார்கள். உமர் ரலி அவர்களின் மைந்தர்களான அப்துல்லாஹ்வும் உபைதுல்லாஹ்வும் ஈராக் நாட்டிற்குச் சென்ற படையுடன் இணைந்து போருக்குச் சென்றார்கள். போர் முடிந்து சகோதரர்கள் இருவரும் மதீனா திரும்பும் போது பஸ்ரா நகரின் ஆளுநராக இருந்த அபூமூஸா அல்-அஷ்அரீயை ரலி சந்தித்தார்கள். அவர்களை வரவேற்றவர், “கலீஃபாவுக்குக் கொடுத்தனுப்ப வேண்டிய அல்லாஹ்வின் செல்வம் என்னிடம் உள்ளது. அதை நான் உங்களிடம் அளிக்கிறேன். அந்தப் பணத்தில் நீங்கள் ஈராக்கில் சரக்கு வாங்கி மதீனாவில் விற்பனை செய்யலாம். கிடைக்கும் இலாபத்தை நீங்கள் எடுத்துக்கொண்டு நான் கொடுத்த பணத்தை கலீஃபாவிடம் கொடுத்துவிடலாம் என்றார். இதை விவரித்து கலீஃபாவுக்கு ஒரு கடிதமும் கொடுத்தனுப்பினார்கள் அபூமூஸா ரலி அவர்கள்.இதில் தவறோ, கையாடலோ இல்லை, நல்ல யோசனை என்று இருவரும் அந்தப் பணத்திற்கு சரக்கு வாங்கிக்கொண்டு மதீனா வந்து சேர்ந்தனர்.

உமர் ரலி அவர்கள்இப்படியான சலுகையை உங்களோடு இருந்த அனைவருக்கும் அபூமூஸா அளித்தாரா?” என்று கேட்டார்கள்.இல்லை என்றார்கள்.அப்படியானால்முதலும் இலாபமும் இரண்டையும் என்னிடம் தாருங்கள் என்றார்கள் உமர் ரலி. தம் தந்தையின் நோக்கத்தையும் சுபாவத்தையும் உணர்ந்த அப்துல்லாஹ் இப்னு உமர் ரலி அமைதியாக இருக்க, உபைதுல்லாஹ்வோ, “நீங்கள் அப்படிச் செய்ய முடியாது அமீருல் மூஃமினீன். இந்த முதல் நட்டமடைந்திருந்தாலோ, தொலைந்திருந்தாலோ நாங்கள் அந்த முழுத்தொகையையும் எங்களது பணத்திலிருந்துதானே தந்திருப்போம் எனவே இந்த லாபம் எங்களுக்குரியது என்றார்.

இரண்டையும் என்னிடம் தாருங்கள் என்று உமர் ரலி அவர்கள் வற்புறுத்த, உபைதுல்லாஹ் மறுத்துக் கொண்டே இருக்க, அப்துல்லாஹ்வோ அமைதியாக இருந்தார்.

 

பிறகு அங்கு அமர்ந்திருந்த ஒருவர், “அமீருல் மூஃமினீன் அவர்களே! வேண்டுமானால் நீங்கள் லாபத்தில் பங்கு பிரித்துக் கொள்ளுங்களேன் என்று ஆலோசனை அளித்தார். அதை ஏற்றுக்கொண்ட உமர், அபூமூஸா அனுப்பிய தொகையையும் இலாபத்தில் பாதியையும் முஸ்லிம்களின் பைத்துல்மாலுக்கு எடுத்துக்கொள்ள, அப்துல்லாஹ்வும் உபைதுல்லாஹ்வும் மீதமிருந்த தொகையில் சரிபாதி பிரித்துக் கொண்டனர். (அல் இஸாபா ; 3/75)

قال عبد الله بن عمر: شهدت جلولاء -إحدى المعارك ببلاد فارس- فابتعت من المغنم بأربعين ألفًا، فلما قدمت على عمر قال: أرأيت لو عرضت على النار فقيل لك: افتده، أكنت مفتديًا به؟ قلت: والله ما من شيء يؤذي بك إلا كنت مفتديًا بك منه. قال: كأني شاهد الناس حين تبايعوا فقالوا: عبد الله بن عمر صاحب رسول الله، وابن أمير المؤمنين وأحب الناس إليه -وأنت كذلك- فكان أن يرخصوا عليك أحب إليهم من أن يغلوا عليك، وإنى قاسم مسؤول وأنا معطيك أكثر ما ربح تاجر من قريش، لك ربح الدرهم درهم، قال: ثم دعا التجار فابتاعوا منه بأربعمائة ألف درهم، فدفع إليّ ثمانين ألفا، وبعث بالباقي إلى سعد بن أبى وقاص ليقسمه.

உமர் ரலி அவர்களின் கிலாஃபத்தின் போது பாரசீகர்களுடன் நிகழ்ந்த ஜலூலா போர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. அந்தப் போரில் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலி அவர்களும் கலந்து கொண்டார்கள். போரில் முஸ்லிம்கள் பெரு வெற்றியடைந்தனர்.நிறைய கனீமத் பொருட்கள் கிடைத்தன. அந்த கனீமத் பொருள்களில் சிலவற்றை நாற்பதாயிரம் திர்ஹம் விலை கொடுத்து வாங்கினார் அப்துல்லாஹ் இப்னு உமர். அதை அங்கு வாங்கி மதீனாவுக்குக் கொண்டுச் சென்று விற்று லாபம் சம்பாதிக்கும் எளிய வர்த்தகத் திட்டம் அவருக்கு. (ஷரீஅத்தின் பார்வையில் இதில் குற்றம் எதுமில்லை)

பொருள்களைச் சுமந்து கொண்டு மதீனாவுக்கு வந்த போது, கலீஃபா உமர் ரலி அவர்கள், “நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? உனக்கு நரக நெருப்பு காண்பிக்கப்பட்டு, அதிலிருந்து மீள, மீட்புத் தொகை கொடு என்றால் கொடுப்பாயா மாட்டாயா? என்று கேட்டு விட்டு, அங்கு நிகழ்ந்தது அப்படியே என் கண்ணுக்குத் தெரிகிறது. அங்கிருந்தவர்கள், ‘இவர் தாம் அப்துல்லாஹ் இப்னு உமர், நபி அவர்களின் தோழர்; கலீஃபாவின் மகன்; அதுவும் அவருக்கு மிகவும் உவப்பான ஒருவர் என்று கூறியிருப்பார்கள். அவர்களது கூற்று உண்மையும்கூட. அதனால் அவர்கள் மற்றவர்களுக்கு விற்பதை விடச் சகாயமான விலையில் உனக்கு இதை விற்றிருப்பார்கள். போரில் கைப்பற்றப்பட்டவற்றை பிரித்தளிப்பதற்கு நான் தான் பொறுப்பு. குரைஷி வர்த்தகர் ஒருவர் என்ன லாபம் ஈட்டுவாரோ அதை நான் உனக்கு அளிப்பேன். ஒரு திர்ஹத்திற்கு ஒரு திர்ஹம் லாபம். அவ்வளவு தான் என்று தம் மகனிடம் காரசாரமாகக் கூறி விட்டு, வர்த்தகர்களை அழைத்து அப்பொருள்களை விலைபேசி எடுத்துக் கொள்ளச் சொன்னார். நான்கு இலட்சம் திர்ஹத்திற்கு அவற்றை அவர்கள் வாங்கினர்.

இந்தா நீ போட்ட முதல் நாற்பதாயிரத்துக்கு எண்பதாயிரம் என்று அப்துல்லாஹ் இப்னு உமரிடம் எண்பதாயிரம் திர்ஹம் அளித்து விட்டு, மீதமுள்ள அத்தனைப் பணத்தையும் ஸஅத் பின் அபீவக்காஸ் ரலி அவர்களுக்கு அனுப்பி அவற்றைப் போர் வீரர்களுக்குப் பிரித்தளிக்கச் சொல்லி விட்டார்கள் உமர் ரலி அவர்கள். (தாரீகுல் இஸ்லாம் லித் தஹபீ)

 

 

 

1 comment:

  1. லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்!

    ReplyDelete