Friday, November 22, 2024

ஜும்ஆ உரைக்கு முன் அனுமதியா?

 இஸ்லாம் மண்ணுக்கேற்ற மார்க்கம் மக்களுக்கு ஏற்ற மார்க்கம் மனிதனை மனிதனாக மதிக்க கற்றுக் கொடுத்த மார்க்கம் மனித உயிர்களையும் மனித உரிமைகளையும் மனித உணர்வுகளையும் புரிந்து கொண்டு அதற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று உணர்த்திய மார்க்கம். மனித உரிமை  என்ற சொல்லுக்கு பல விதமான விளக்கங்களும் வியாக்கியானங்களும் சொல்லப்படுகிறது.இருந்தாலும் உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும், தான் எவ்வாறு வாழ வெண்டும் என்று விரும்புவானோ, ஒவ்வொரு மனிதனும் தனக்கு எதுவெல்லாம் கிடைக்க வேண்டும் என்று எதிர் பார்ப்போனோ ஆசைப்படுவானோ அவை அனைத்திற்கும் பெயர் தான் மனித உரிமைகள். 


மனிதன் எதிர்பார்க்கின்ற ஆசைப்படுகின்ற அத்தனை உரிமைகளையும் சரியாக வழங்கியிருக்கிறது.

பிறப்புரிமை வாழ்வுரிமை  சொத்துரிமை,    கல்வியில் உரிமை, திருமண உரிமை  தேவைப்பட்டால் பிரிந்து கொள்ளும் உரிமை என்று அத்தனையையும் வழங்கியிருக்கிறது. அவ்வாறு மனிதனுக்கு இஸ்லாம் வழங்கிய உரிமைகளில் ஒன்று கருத்துரிமை கருத்துச் சுதந்திரம்.


ஒருவர் தன்னுடைய சிந்தனையில் உதிக்கின்ற செய்திகளை கருத்துக்களை யாரையும் புண்படுத்தாத வகையில் யாரையும் காயப்படுத்தாத வகையில் அதை வெளிப்படுத்தி சொல்வதற்கும் எழுதுவதற்குமான சுதந்திரத்தை, உரிமையை இஸ்லாம் வழங்கியிருக்கிறது. 


சொல்லக்கூடிய கருத்துக்கள் அது அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களாக இருந்தாலும் அரசாங்க அதிகாரிகளுக்கு அல்லது ஆட்சியாளர்களுக்கு எதிரான கருத்துக்களாக விமர்சனங்களாக இருந்தாலும் நியாயமான முறையில் நாகரீகமான முறையில் அதை எடுத்து சொல்வதற்கான சுட்டிக்காட்டுவதற்கான உரிமையையும் சுதந்திரத்தையும் இஸ்லாம் வழங்கியிருக்கிறது.



وحين ولي عمر الخلافة خطب ذات يوم فقال: “يا معشر المسلمين، ماذا تقولون لو ملت برأسي كذا” (وميل رأسه)؟ فقام إليه رجل فقال: أجل كنّا نقول بالسيف كذا (وأشار إلى القطع) فقال عمر: إياي تعني؟ فقال الرجل: نعم إيّاك أعني بقولي. فقال عمر رضي الله عنه: رحمك الله، الحمد لله الذي جعل في رعيتي من إذا اعوججت قوّمني


ஹஜரத் உமர் ரலி அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட அந்த நேரத்தில் மக்களை பார்த்து கேட்டார்கள் நான் ஏதாவது நேரத்தில் நியாயம் தவறி நடந்தால் அநீதத்திற்கு துணை போய்விட்டால் மக்களிடையே சமத்துவம் பேணாமல் ஒரு பக்கமாக சாய்ந்து விட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து அப்படி நீங்கள் செய்தால் நாங்கள் எங்கள் வாளால் பேசுவோம் என்றார் என்னையா குறிப்பிடுகிறீர்கள் என்று உமர் ரலி அவர்கள் கேட்க ஆம் உங்களைத்தான் சொல்கிறோம் நீங்கள் ஒருவேளை அப்படி நடந்து கொண்டால் நாங்கள் எங்கள் வார்த்தைகளால் உங்களை வெட்டி விடுவோம் அதாவது எதிர்த்து குரல் கொடுப்போம் என்று சொன்னார் அதைக் கேட்ட உமர் ரலி அவர்கள் சந்தோஷப்பட்டு நான் தடுமாறுகின்ற பொழுது என்னை சரி படுத்துகின்ற மக்களை தந்த அல்லாஹ்வை புகழ்கிறேன் என்று சொன்னார்கள்.


ஆட்சிக்கு வருகின்ற பொழுது நான் இப்படித்தான் நடப்பேன் இதைத்தான் செய்வேன் எல்லோரும் வாயை மூடிக்கொண்டு சொல்வதை கேட்க வேண்டும் என்றெல்லாம் சொல்லாமல் நானே தவறு செய்தாலும் என் தவறை சுட்டிக்காட்ட வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்து ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள் உமர் ரலி அவர்கள் அவ்வாறே நடந்தும் காண்பித்தார்கள்.


عن مسروق قال : ركب عمر بن الخطاب منبر رسول الله صلى الله عليه وسلم ثم قال : أيها الناس ما إكثاركم في صداق النساء وقد كان رسول الله صلى الله عليه وسلم وأصحابه وإنما الصَّدُقات فيما بينهم أربع مائة درهم فما دون ذلك ، ولو كان الإكثار في ذلك تقوى عند الله أو كرامة لم تسبقوهم إليها فلا أعرفنَّ ما زاد رجل في صداق امرأة على أربع مئة درهم ، قال : ثم نزل فاعترضته امرأة من قريش فقالت : يا أمير المؤمنين نهيتَ النَّاس أن يزيدوا في مهر النساء على أربع مائة درهم ؟ قال : نعم ، فقالت : أما سمعت ما أنزل الله في القرآن ؟ قال : وأي ذلك ؟ فقالت : أما سمعت الله يقول { وآتيتُم إحداهنَّ قنطاراً } الآية ؟ قال : فقال : اللهمَّ غفراً ، كل النَّاس أفقه من عمر ، ثم رجع فركب المنبر ، فقال : أيها الناس إني كنت نهيتكم أن تزيدوا النساء في صدقاتهن على أربع مائة درهم ، فمن شاء أن يعطى من ماله ما أحب . قال أبو يعلى : وأظنه قال : فمن طابت نفسه فليفعل .


ஒரு நாள் உமர் ரலி அவர்கள் மிம்பரில் ஏறி நின்று ஏன் நீங்கள் பெண்களுக்கான மஹரை அதிகப்படுத்துகிறீர்கள். நபி ஸல் அவர்கள் மற்றும் அவர்களின் தோழர்களிடத்தில் மஹர் என்பது 400 திர்ஹமை விட அதிகமாக இருந்ததில்லை. அதை விட அதிகப்படுத்துவது இறையச்சத்திற்குரிய காரியமாக இருக்குமானால் அந்த இறையச்சத்தில் அவர்களை விட நீங்கள் முந்தியவர்கள் இல்லை. எனவே யாரும் 400 திர்ஹமை விட மஹரை அதிகமாக கொடுக்க வேண்டாம் என்று கூறினார் கள். அதை அறிந்த ஒரு பெண்மனி உமர் ரலி அவர்களை குறிக்கிட்டு அல்லாஹ் குர்ஆனில் நிஸா என்ற அத்தியாத்தின் 20 வது வசனத்தில் மஹரைக் குறித்து பொற்குவியல் என்று கூறுகிறான். எனவே மஹரை அதிகமாக தர வேண்டாம் என்று நீங்கள் எவ்வாறு கூறலாம் என்று கேட்டாள். உடனே உமர் ரலி அவர்கள் இறைவன் என்னை மன்னிப்பானாக அனைவரும் இந்த உமரை விட அதிகம் மார்க்கம் தெரிந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்று கூறி மீண்டும் மிம்பரில் ஏறி நான் அதிகப்படுத்த வேண்டாம் என்று கூறினேன். ஆனால் இப்போது கூறுகிறேன் ; உங்களில் ஒருவர் எவ்வளவு விரும்புகிறாரோ அதை கொடுக்கட்டும் என்று கூறினார்கள். சில அறிவிப்புகளில் உமர் தவறிழைத்து விட்டார். அந்த பெண் சரியாக சொன்னாள் என்று கூறியதாக வருகிறது. (தஃப்ஸீர் இப்னு கஸீர்)


பெண்களுக்கான மஹரை இஸ்லாம் சரியான முறையில் கொடுக்கச் சொல்கிறது. அதனை மாற்றி அமைக்கின்ற உரிமையோ, அதிகாரமோ ஒரு ஜனாதிபதிக்குக் கூட கிடையாது என்று இச்சம்பவத்தின் மூலம் உணருகின்ற அதே நேரத்தில் ஒரு ஜனாதிபதியின் கருத்துக்கு எதிராக தன் கருத்தை பதிவு செய்கின்ற உரிமையை ஒரு சாதாரன பெண்ணுக்கும் இஸ்லாம் வழங்குகிறது என்பதை நாம் விளங்க முடிகிறது. ஹதீஸ்களில் அப்பெண்மனி யார் அவளின் பெயர் என்ன என்றெல்லாம் குறிப்பிடப்பட வில்லை. அப்படியென்றால் முன்பின் அறிமுகமில்லாத ஒரு பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்று நம்மால் யூகிக்க முடிகிறது. ஆக சாதாரண ஒரு பெண்மனி தனக்கு எதிராக பேசிவிட்டார்கள் என்று யோசிக்காமல் வேகப்படாமல் அப்பெண்மனி சரியானதை சொல்லி விட்டாள்.நான் தான் தவறாக சொல்லி விட்டேன் என்று உமர் ரலி அவர்கள் சொன்னார்கள். 


أن عمر بن الخطاب - رضي الله عنه - خطب في رعيته قائلاً: (ألا إني - والله - ما أرسل عمالي إليكـم ليضـربوا أبشـاركم، ولا ليأخذوا أموالكم، ولكن أرسلهم إليكم ليعلِّموكم دينكم وسُنَّتكم؛ فمن فُعِل به شيء سوى ذلك فَلْيرفعه إليَّ؛ فوالذي نفسي بيده إذاً لأقصنه منه


உமர் ரலி அவர்கள் நாட்டு மக்களிடத்தில் ஆற்றிய உரையில் உங்களை அடிப்பதற்கோ அல்லது உங்களின் உடமைகளை பிடுங்குவதற்கோ நான் என் அதிகாரிகளை உங்களிடத்தில் அனுப்ப வில்லை. மாறாக மார்க்கத்தையும் மாநபி ﷺ அவர்களின் மேலான சுன்னத்துகளையும் உங்களுக்கு கற்றுத் தருவதற்காகவே அவர்களை அனுப்புகிறேன். இதல்லாத வேறு காரியத்தை என் அதிகாரிகள் செய்தால் தாராளமாக என்னிடத்தில் வந்து முறையிடுங்கள். நான் அவர்களின் மீது தக்க நடவடிக்கைகளை எடுப்பேன் என்று கூறினார்கள்.   


أخرج مروانُ المنبرَ في يومِ عيدٍ فبدأ بالخُطْبَةِ قبل الصَّلاةِ فقام رجلٌ فقال يا مروانُ خالفتَ السُّنةَ أخرجْتَ المنبرَ في يومِ عيدٍ ولم يكن يُخْرَجُ فيه وبدأتَ بالخطبةِ قبل الصلاةِ فقال أبو سعيدٍ الخدريُّ مَنْ هذا قالوا فلانُ بنُ فلانٍ فقال أما هذا فقد قضى ما عليه سمعتُ رسولَ الله صلى الله عليه وسلم يقولُ من رأى منكرًا فاستطاع أن يُغَيِّرَه بيدِهِ فلْيُغَيِّرْه بيدِهِ فإن لم يَسْتَطِعْ فبلسانِه فإنْ لمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ وذلك أضعفُ الإيمانِ


மர்வான் என்ற ஆட்சியாளர் பெருநாள் அன்று தொழுகைக்கு முன்னால் குத்பா ஓத ஆரம்பித்தார். (பெருநாள் குத்பா என்பது தொழுகைக்குப் பிறகு ஓதுவது தான் நபியின் வழிமுறை. அதற்கு மாற்றமாக அவர் செய்தார்) உடனே ஒரு மனிதர் மர்வான் அவர்களே நீங்கள் நபியின் வழிமுறைக்கு மாற்றம் செய்து விட்டீர்கள் என்றார். சபையில் இருந்த அபூஸஈதுல் குத்ரீ ரலி அவர்கள் யார் இவர் என்று கேட்டார்கள். அவர் யார் என்று அருகில் உள்ளவர் அறிமுகப்படுத்தினார்கள். அப்போது அபூஸஈதுல் குத்ரீ ரலி அவர்கள், அவரின் மீது இருந்த கடமையை அவர் பூர்த்தி செயது விட்டார். ஏனெனில் உங்களில் ஒருவர் ஒரு தவறைக் கண்டால் தன் கரத்தால் அதைத் தடுக்க வேண்டும். முடியாத போது தன் நாவால் தடுக்க வேண்டும்.முடியாத போது தன் உள்ளத்தால் அதை வெறுக்க வேண்டும். அது தான் மிகக்குறைந்த ஈமான் என்று நபி ﷺ அவர்கள்  சொன்னதை நான் கேட்டிருக்கிறேன் என்றார்கள்.  (அபூதாவூது ; 1140)


ஆட்சியாளர்களை தப்பு செய்தாலும் மீதம் தவறி நடந்தாலும் குடிமக்கள் எதிர்த்து கேள்வி கேட்டார்கள் அந்த உரிமையை இஸ்லாம் மக்களுக்கு வழங்கியது.



கருத்துச் சுதந்திரம் என்பது நாம் அனைவரும் நம்மை வெளிப்படுத்தும் சுதந்திரம். அரசியல், கலை மற்றும் சமூக வாழ்க்கையில் பேசுவதற்கும், கேட்பதற்கும், பங்கேற்பதற்கும் உரிமை உள்ளது. இது 'தெரியும் உரிமை'யையும் உள்ளடக்கியது: எந்த ஊடகத்தின் மூலமாகவும் தகவல்களைத் தேட, பெற மற்றும் பகிர அனைவருக்கும் உரிமை உண்டு. 


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில்,  'அனைத்து குடிமக்களுக்கும் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் உண்டு' என்று கூறும் பிரிவு 19(1)(a) இன் கீழ் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் வரையறுக்கப்பட்டுள்ளது. இது ஒரு அடிப்படை உரிமையாகும், இது இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் தங்கள் எண்ணங்கள், நம்பிக்கைகள், கருத்துகள் மற்றும் யோசனைகளை வெளிப்படுத்த வழிவகை செய்கிறது. 


இந்திய அரசியலமைப்பின் பிரிவு 19(1)(a) இல் உள்ள பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் தொடர்பான சில அம்சங்கள்


பத்திரிக்கை சுதந்திரம்

வர்த்தக பேச்சு சுதந்திரம்

ஒளிபரப்பு உரிமை

தகவல் அறியும் உரிமை

விமர்சிக்கும் உரிமை

தேசிய எல்லைகளுக்கு அப்பால் கருத்து வெளியிடும் உரிமை

பேசாத உரிமை அல்லது மௌனமாக்கும் உரிமை. இவை அனைத்தும் இந்த பிரிவின் கீழ் அடங்கும்.


ஆனால் இன்று அந்த கருத்து சுதந்திரத்தை பறிப்பதற்கான முயற்சிகள் நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது. 


சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 

பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையின் போது மார்க்கச் சொற்பொழிவு நடத்துவதற்கு வக்பு வாரியத்தின் அனுமதி பெற வேண்டும் என்கிற உத்தரவை சத்தீஸ்கர் மாநில வக்பு வாரியம் பிறப்பித்திருக்கிறது. 


ஆற்றப்படும் உரையை முன்கூட்டியே வக்ப் வாரியத்திற்கு அனுப்பி ஒப்புதல் பெற்ற பிறகே உரை நிகழ்த்தப்பட வேண்டும் என்று சத்தீஸ்கர் வக்ப் வாரியம் உத்தரவிட்டிருப்பது அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயல்.


இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் 

வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகைகளில் சொற்பொழிவு ஆற்றுவது கட்டாயக் 

கடமையாகும். அதற்கு வாரியத்திடம் அனுமதி பெறவேண்டும் என்பது அப்பட்டமான 

மனித உரிமை மீறல். அரசமைப்புச் சட்டத்தின் 25ம் பிரிவு அளித்துள்ள உரிமையையும் பறிக்கும் செயலாகும். 


சத்தீஸ்கர் மாநில வக்பு வாரிய தலைவர் சலீம் ராஜ் பாஜக அரசின் 

கைக்கூலியாகச் செயல்படுகிறார். சத்தீஸ்கர் மாநிலத்தைத் தாண்டி நாடு முழுவதும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதி தனது அடிமை விசுவாச மனப்பான்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்.


இது எவ்வளவு பெரிய ஆபத்தான முயற்சி என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். மக்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவதற்கும் நாட்டின் சூழ்நிலைகளை மக்களுக்கு புரிய வைத்து மக்களை எச்சரிக்கையோடும் விழிப்புணர்வோடும் இருக்க வைக்க ஜும்ஆ உரைகள் தான் உதவுகின்றன. அதற்கு கடிவாளம் போட்டால் எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சிந்திக்க வேண்டும்.



வலிமை மிக்கவர்கள் வைத்ததே சட்டம் என்ற நிலை மாறி, எல்லோரும் சமம் எனும் நிலை அடைய, மனித இனம் பல நூற்றாண்டுகளை கடந்திருக்கின்றது. அந்நிலையும் கூட, படிப்படியாகத்தான் வந்தது. ஒரு மனிதனின் உள்ளத்தில் தோன்றும் கருத்துக்களைச் சுதந்திரமாக பிறருடன் பகிர்ந்து கொள்ள முடியாத சூழல் ஏற்படுமானால் அதனை விட கொடூரமான நிலை வேறு எதுவும் இருக்க முடியாது. 

அதிகாரத்தில் உள்ளவர்கள், தங்களுக்கு எதிராக கருத்துக்கள் பரவாத வண்ணம் தடுப்பது ஒருபுறமும் - கருத்து சுதந்திரத்துக்குமான போராட்டம் இன்னொருபுறமும் எனத் தொடர்ந்து காலங்காலமாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.


ஆட்சியில் இருப்போர், கருத்துச் சுதந்திரத்தை முடக்குவதும், உரிமை வேட்கை கொண்டோர் அதனை எதிர்த்துப் போராடுவதும் உலகெங்கும் நிலவி வருகிறது. 

குறிப்பாக, கருத்துச் சுதந்திரம் என்பது, அரசு மற்றும் பலம் வாய்ந்த அமைப்புக்களின் ஏராளமான எதிர்ப்புகளை மீறி வளர்ந்து பின்னரே ஏற்று கொள்ளப்பட்ட ஒன்றாக மாறியது.


அரசாங்கம், மக்களின் கருத்து சுதந்திரத்தில் தலையிடுவது என்பது, கி. மு. ஐந்தாம் நூற்றாண்டிலேயே தொடங்கி விட்டது. கருத்துச் சுதந்திரத்துக்காக, மிகப் பெரும் விலையை சாக்ரடீஸ் தந்தார்.

அரசுக்கும் - மதவாதிகளுக்கும் எதிரான கருத்துக்களை மக்களிடையே பரப்பியதற்காக மரண தண்டனை பெற்றார்.

 

ஜனநாயகத்தின் தொட்டில் எனப்படும் இங்கிலாந்தில் 15-ஆம் நூற்றாண்டில், பெரும் வசதியும், செல்வாக்கும் மிக்கவராக விளங்கினார் தாமஸ் மோர் பிரபு. 

இன்றும் பிரபலமாக விளங்கும் உடோபியா எனும் நூலை எழுதினார். ஆனாலும், அரசு -அரசர் - மத அமைப்புக்களைக் கேள்விக்குள்ளாக்கிய காரணத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு, கண்டம் துண்டமாக வெட்டி வீசி எறியப்பட்டார். 


15-ஆம் நூற்றாண்டில், அச்சுக்கூடங்கள் தொடங்கப்பட்ட பின்னர், எழுத்துகளும் - கருத்துகளும் வேகமாக மக்களிடையே பரவின. அதன் மூலம் அரசுக்கு எதிரான கருத்துக்கள் பரவுவதனைத் தடுக்க அரசுகள், கடிவாளம் போட்டன. பல நாடுகளில், அரசு அனுமதியின்றி புத்தகங்கள் அச்சிடக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டது.

இரண்டாம் உலக யுத்தத்துக்கு முன்னர், ஹிட்லரின் ஆலோசகர் கோயபெல்ஸ், சுமார் இருபதாயிரம் புத்தகங்களை ஒரே சமயத்தில் தீயிட்டு சாம்பலாக்கினார்.


சில மதவெறி அமைப்புகள் எழுதுகோலால் வாழ்பவன், வாளால் அழிவான்' என்ற புதிய அச்சுறுத்தலை பல நாடுகளில் முன்னிறுத்துகின்றன. அந்த அளவுக்கு எழுத்துகள் மீதும் கருத்து சுதந்திரத்தின் மீதும் வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகின்றது. 


இப்படியெல்லாம் நிகழ்ந்து கொண்டிருந்தாலும், இன்னொருபுறம் கருத்து சுதந்திரத்துக்கான முன்முனைப்பு நடைபெற்று கொண்டுதான் இருந்தது. 


மிகச் சிறிய நாடான, ஸ்வீடன், எழுத்து சுதந்திரத்தினை சட்டபூர்வமாக அங்கீகரித்து, தணிக்கை முறையை அகற்றி பல நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்கியது. 


இது ஒருபுறமிருக்க, நம்நாடு கடந்து வந்த பாதையை நாம் கவனிப்போம்:

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், மன்னர் எவ்வழி மக்கள் அவ்வழி' எனும் நிலை இருந்தபோது, மன்னர் வணங்கும் தெய்வத்தையே மக்களும் வணங்கும் கட்டாயமும் நிலவியது. 


ஒரு நூற்றாண்டுக்கு முன், ஆங்கிலேய ஏகாதிபத்தியம் நடைபெற்ற போது, நம் நாட்டில் பத்திரிகைகள் பெரும் இன்னலுக்குள்ளாகின. பத்திரிகைகள், புத்தகங்கள் வெளியிட, காவல் துறையின் அனுமதி என்பது கட்டாயமாக்கப்பட்டது. தேச விரோத' எழுத்துகள் என்பவை, நீதித்துறையால் அல்ல, காவல் துறையால் நிர்ணயம் செய்யப்பட்டது.


இரண்டாம் உலக யுத்த காலத்தில், ராணுவத்துக்கு முன்னுரிமை தரப்பட்டு, உணவுப் பொருள்கள் அனுப்பப் பட்டன. இதனால், செயற்கையான பெரும்பஞ்சம் வங்காளத்தில் நிலவியது.

பல லட்சம் பேர்களை பலி வாங்கிய, அரசால் உருவாக்கப் பட்ட பஞ்சம்' குறித்து எழுதிய பத்திரிகைகள் தடை செய்யப் பட்டன. சாமானிய மக்கள் அனுபவித்த கொடுமைகள், பிறருக்குத் தெரியாத வண்ணம் மறைக்கப் பட்டன. 


சில பத்தாண்டுகளுக்கு முன்னர், நம் நாட்டில் நெருக்கடி நிலையின்போது, எழுத்து - பேச்சு உரிமை முழுமையாக மறுக்கப் பட்டது. அச்சு ஊடகங்கள் கடுமையான தணிக்கைக்குப் பிறகே வெளிவந்தன. அப்போது கருத்துரிமைக்காக பலரும் துணிந்து குரல் கொடுத்தனர். 


ஆக, கருத்துச் சுதந்திரத்தினை உயர்த்திப் பிடிக்க, ஏராளமானோர் பெரும் விலை கொடுத்துள்ளனர். அதனை நசுக்குவதற்காக எத்தனையோ அரசுகள் கடும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளன. சில தனி மனிதர்கள், நீதிமன்றங்களுக்குச் சென்று, போராடிப் பெற்ற உரிமைகள் இன்று பலருக்கும் பலனளிக்கின்றன.

பலர் போராடிப் பெற்ற உரிமைகளையும் - கருத்து சுதந்திரத்தையும் சிறப்புறப் பேணி பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும். 


அல்லாஹ் பாதுகாப்பானாக!

3 comments:

  1. வாஹிதியாரின் இந்த வாரப் படைப்பும் வரம்!
    பாரகல்லாஹு லனா வ லகும்

    ReplyDelete
    Replies
    1. அற்புதமான பதிவு பாரகல்லாஹ் இவண் மௌலவி முஹம்மத் ஷமீம் அஸ்ஹரி

      Delete