Thursday, August 14, 2025

இது சுதந்திர நாடா?

 

இந்திய நாடு தனது 79 வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றது.

சுதந்திரம் மனித குலத்தின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று. மனிதன் சுதந்திரவானாகவே பிறக்கிறான். அவன் பாவத்தை சுமந்து கொண்டோ அடிமையாகவோ பிறப்பதில்லை. மனிதன் தான், தன்னை ஒன்றுக்கு அடிமையாக்கிக் கொள்கின்றான். அல்லது அடுத்த மனிதர்களை அடிமைப்படுத்துகிறான். இதனை இஸ்லாம் ஏற்றுக்கொள்வதில்லை.

قال الإمام علي بن أبي طالب رضي الله عنه: "لا تكن عبد غيرك وقد جعلك الله حراً

உன்னை அல்லாஹ் சுதந்திரமானவனாக ஆக்கியிருக்கின்ற போது நீ இன்னொருவருக்கு அடிமைப்படாதே என்று அலி ரலி அவர்கள் கூறுவார்கள்.

ஒருவர் யாருக்கும் அடிமைப்படக்கூடாது,யாரையும் அடிமைப்படுத்தவும் கூடாது. இது இஸ்லாமியச் சட்டம்.


قالَ اللَّهُ: ثَلاثَةٌ أنا خَصْمُهُمْ يَومَ القِيامَةِ: رَجُلٌ أعْطَى بي ثُمَّ غَدَرَ، ورَجُلٌ باعَ حُرًّا فأكَلَ ثَمَنَهُ، ورَجُلٌ اسْتَأْجَرَ أجِيرًا فاسْتَوْفَى منه ولم يُعطِه أجرَه

மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்காடுவேன்’ என்று அல்லாஹ் கூறுகிறான். ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்து விட்டு அதில் மோசடி செய்தவன். இன்னொருவன், சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்.. மூன்றாமவன் ஒரு கூலியாளியிடம் வேலை வாங்கிக்கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன் (புகாரி 2227)

பிறப்பின் அடிப்படையில் அனைவரையும் அல்லாஹ் சுதந்திரமானவர்களாக ஆக்கியிருக்கின்ற போது ஒருவரை அடிமைப்படுத்துவதையோ அதிகாரத் திமிரில் அத்துமீறுவதையோ இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்காது.

تسابق مع رجلٍ من أهل مصر فسبقه الرجل، فضربه ابن عمرو بن العاص، فأتى الرجل إلى أمير المؤمنين عمر بن الخطَّاب، وشكى له ما كان من ابن عمرو بن العاص، فاستدعى عمر عمرو بن العاص وابنه، وحضرا إليه، فأمر عمر بن الخطَّاب الرجل المصري بأن يضرب ابن عمرو بن العاص كما ضربه، وقال عمر مقولته الشَّهيرة التي غدت مثلاً يتردَّد في مواقف عدَّة: (مذ كم تعبدتم الناس وقد ولدتهم أمهاتهم أحرارا

 

ஒரு தடவை எகிப்தில் கவர்னராக இருந்த அம்ரிப்னுல் ஆஸ் (ரழி) அவர்களது மகன்  குதிரை ஓட்டப்போட்டியொன்றில் ஒரு மனிதரிடம் தோல்வியடைந்ததை தாங்கிக் கொள்ள முடியாத அம்ரிம்னுல் ஆஸ் (ரழி) அவர்களது மகன் அந்த மனிதரை சாட்டையால் அடித்து விட்டார். கலீபா உமர் ரலி அவர்களை  சந்தித்து நடந்த விஷயத்தைக் கூறினார் அவர், உமர் (ரழி) அவர்கள், ' மக்களை அவர்களது தாய்மார்கள் சுதந்திரவான்களாக பெற்றெடுத்திருக்க நீங்கள் எப்போது அவர்களை அடிமைப்படுத்தினீர்கள்' எனக்கேட்டு கவர்னரின் மகனுக்கு உடன் தண்டனை வழங்கினார்கள். தனது கையிலிருந்த சாட்டையை அந்த மனிதரிடம் வழங்கி 'உனக்கு அடித்தது போலவே நீயும் அடி' என்று கூறினார்கள். (ஹயாதுஸ் ஸஹாபா ; 88/2)

சில வரலாற்று நூட்களில் : நீ அவரது தந்தையான கவர்னரையே அடித்திருந்தாலும் நான் உன்னைத் தடுத்திருக்க மாட்டேன். ஏனெனில்  தந்தையிடத்தில் அதிகாரம் இருக்கிறது என்ற தைரியத்தில் தான் அவருடைய மகன் உன்னை அநீதமாக அடித்திருக்கிறார். எனவே இதற்கு ஒரு வகையில் கவர்னரும் பொறுப்பாக வேண்டும் என்று உமர் ரலி அவர்கள் கூறினார்கள்.

 

சுதந்திரமாக பிறந்த மக்களை எப்போது அடிமைப்படுத்தினீர்கள்' என்ற உமர் (ரழி) அவர்களின் கூற்றும் 'அல்லாஹ் உங்களை சுதந்திரவானாக படைத்திருக்கும் நிலையில் நீங்கள் மற்றவர்களின் அடிமையாக இருக்க வேண்டாம்' என்ற அலி (ரழி)யின் கருத்தும் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது.

ஸஹாபாக்களுக்கும் அதைத்தான் போதித்தார்கள். சென்ற இடங்களிலெல்லாம் அந்த ஸஹாபாக்கள் சொன்ன பிரகடனம் இது தான்.

عندما دخل ربعي بن عامر رضي الله عنه 

على كسرى ملك الفرس

فقال له كسرى: "ما الذي جاء بكم ؟؟"

فقال: "جئنا لنخرج العباد من عبادة العباد إلى عبادة رب العباد ؛ 

ومن ضيق الدنيا إلى سعة الآخرة ؛ 

ومن جور الأديان إلى عدالة الإسلام.."

ரிப்ஈ பின் ஆமிர் ரலி அவர்கள் பாரசீக மன்னன் கிஸ்ராவிடம் தூதராக சென்ற போது நீங்கள் வந்த நோக்கம் என்ன என்று கிஸ்ரா கேட்ட போது, அல்லாஹ்வைத் தவிர நாம் வேறு யாருக்கும் அடிமையல்ல நாம் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்கக்கூடாது, யாரையும் அடிமைப்படுத்தக்கூடாது என்று கூறி அதை நடைமுறைப்படுத்தவே வந்தோம் என்று கூறினார்கள்.

 

ஆதம், ஹவ்வா அலை அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த சுதந்திரம்.

وَيٰۤاٰدَمُ اسْكُنْ اَنْتَ وَزَوْجُكَ الْجَـنَّةَ فَـكُلَا مِنْ حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هٰذِهِ الشَّجَرَةَ فَتَكُوْنَا مِنَ الظّٰلِمِيْنَ‏

(பின்னர், இறைவன் ஆதமை நோக்கி) ‘‘ஆதமே! நீர் உமது மனைவியுடன் இச்சோலையில் வசித்திரும். நீங்கள் இருவரும் விரும்பிய இடத்திலெல்லாம் (சென்று விரும்பியவற்றையெல்லாம்) புசியுங்கள். எனினும், இந்த மரத்தின் சமீபத்தில்கூட நீங்கள் செல்லாதீர்கள். (அவ்வாறு சென்றால்) அதனால் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொண்டவர்களாக ஆகிவிடுவீர்கள்'' (என்று கூறினான்.) (அல்குர்ஆன் : 7:19)

விரும்பியதை சாப்பிடுங்கள் என்பது சுதந்திரமாகும். அந்த மரத்துக்கருகில் செல்லாதீர்கள் என்பது கட்டுப்பாடாகும்.

வரையறையற்ற சுதந்திரத்தை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. பகுத்தறிவும் அனுமதிக்காது. எந்த நாடும் ஒருபோதும் அனுமதிக்கப் போவதுமில்லை. அப்படி அனுமதிப்பது சாத்தியமான ஒன்றுமல்ல.

இஸ்லாம், சுதந்திரம் தொடர்பில் சில நிபந்தனைகளை விதிக்கின்றது. அடுத்தவர்களின் சுதந்திரம் ஆரம்பிக்கும் இடத்தில் உனது சுதந்திரம் முடிவடைகின்றது என்பார்கள். சுதந்திரம் என்று கூறிவிட்டு அடுத்தவனை மிதிக்க முடியாது.

 

இஸ்லாத்தில் மனித சமூகத்திற்கு சுதந்திரம் இல்லை. மனிதனை இஸ்லாம் அடிமைப்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு உண்டு. சுதந்திரம் என்ற வார்த்தைக்கான சரியான பொருளை அவர்கள் புரிந்து கொள்ள வில்லை.

சுதந்திரம் என்பது ஒருவர் இன்னொருவரின் குறுக்கீடுகளின்றி தான் நினைத்த பிரகாரம் தனது செயல்பாடுகளை அமைத்துக்கொள்வதாகும். இது அடிமைத்துவத்துக்கு எதிரானது, ஒரு மனிதன் சட்டம், நீதி போன்றவற்றுக்கு முரண்படாத வகையிலும் அடுத்தவர்களுக்கு தீங்கிழைக்காத அமைப்பிலும் தான் நினைத்ததை பேசுவதற்கும் செயற்படுவதற்குமான உரிமை சுதந்திரம் எனப்படுகிறது.

ஒருவர் எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி தான் விரும்பியபடியெல்லாம் வாழ்வதற்குப் பெயர் சுதந்திரமல்ல. எனவே  ஒரு மனிதன் சுதந்திரம் என்ற பெயரில் அவன் கடமையான  தொழுகையை  விட முடியாது. கடமையான நோன்பை விடமுடியாது மதுபானம்அருந்த  முடியாது, விபச்சாரம்செய்ய முடியாது,  ஒருபெண் தான்  விரும்பியபடி தன் அழகை பெருமைக்காக அன்னிய ஆடவர்களுக்குவெளிக்காட்டும்  விதத்தில் உடை உடுத்த முடியாது,பிறருடைய சொத்துக்களை அபகரிக்க முடியாது,பிறருடையமானத்தை பங்கப்படுத்த முடியாது. இவைகளை இஸ்லாம் தடை செய்கிறது. இவைகளை தடுத்திருப்பதால் இஸ்லாத்தில் சுதந்திரம் இல்லை என்று கூறி விட முடியாது. சுதந்திரம் என்பது வேறு. கட்டுப்பாடு என்பது வேறு. கட்டுப்பாடு இல்லையெனில் மனிதன் மிருகமாக மாறி விடுவான்.

                 

இஸ்லாம் மனித சமூகத்திற்கு அனைத்து சுதந்திரங்களை வழங்கியிருக்கிறது.

வாழ்வதற்கே சுதந்திரம் பிற மதங்களில் இல்லை! ஆனால் இஸ்லாத்தில் வாழ, பேச, படிக்க, வியாபாரம் செய்ய, சொத்துக்களை தன் பெயரில் வைத்துக் கொள்ள சுதந்திரம்! பிடித்த மணமகனை தேர்வு செய்ய சுதந்திரம்! கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற தத்துவத்தை உடைத்தெறிந்து பிடிக்கவில்லை என்றால் நீ புல்லுதான்! என்று விவாகரத்து செய்ய சுதந்திரம்! திருமணத்தில் மஹர் என்ற உரிமை! தந்தை சொத்தில் உரிமை! கணவன் சொத்தில் உரிமை! மகன் சொத்தில் உரிமை! இப்படி இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள சுதந்திரம் ஏராளம்!

 

மத சுதந்திரம்

وَلَوْ شَآءَ رَبُّكَ لَاٰمَنَ مَنْ فِى الْاَرْضِ كُلُّهُمْ جَمِيْعًا‌  اَفَاَنْتَ تُكْرِهُ النَّاسَ حَتّٰى يَكُوْنُوْا مُؤْمِنِيْنَ

(நபியே!) உமது இறைவன் விரும்பினால், பூமியிலுள்ள அனைவருமே நம்பிக்கையாளர்களாக ஆகிவிடுவார்கள். ஆகவே, மனிதர்கள் (அனைவருமே) நம்பிக்கையாளர்களாகிவிட வேண்டுமென்று அவர்களை நீர் நிர்ப்பந்திக்க முடியுமா? (அல்குர்ஆன் : 10:99)

لا اكراه في الدين

மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை. (அல்குர்ஆன் ;  2:256)

نَزَلَتِ الْآيَةُ فِي رَجُلٍ مِنَ الْأَنْصَارِ يُقَالُ لَهُ أَبُو حُصَيْنٍ كَانَ لَهُ ابْنَانِ، فَقَدِمَ تُجَّارٌ مِنَ الشَّامِ إِلَى الْمَدِينَةِ يَحْمِلُونَ الزَّيْتَ، فَلَمَّا أَرَادُوا الْخُرُوجَ أَتَاهُمُ ابْنَا الْحُصَيْنِ فَدَعَوْهُمَا إِلَى النَّصْرَانِيَّةِ فَتَنَصَّرَا وَمَضَيَا مَعَهُمْ إِلَى الشَّامِ، فَأَتَى أَبُوهُمَا رَسُولَ اللَّهِ ﷺ مُشْتَكِيًا أَمْرَهُمَا، وَرَغِبَ فِي أَنْ يَبْعَثَ رَسُولُ اللَّهِ ﷺ مَنْ يَرُدُّهُمَا فَنَزَلَتْ: "لا إِكْراهَ فِي الدِّينِ

சிரியாவிலிருந்து மதீனாவிற்கு சில வியாபாரிகள் வந்தார்கள். வந்த அவர்கள் தங்களுடைய கிருத்து கொள்களைகளைப் பற்றி அங்கே பேசினார்கள். அதனால் ஈர்க்கப்பட்டு ஒரு நபித்தோழரின் இரு மகன்கள் மதம் மாறி அவர்களோடு சென்று விட்டார்கள். இதனை அந்த நபித்தோழர் நபி ஸல் அவர்களிடம் முறையிட்டு அவர்களை திருப்பி அழைத்து வர வேண்டும் என்று கூறினார். அப்போது இந்த வசனம் அருளப்பட்டது. ஒருவர் தான் விரும்பிய மதத்தை பின்பற்றலாம். அது அவரது மதஉரிமை. அவரை மதம் மாறச் சொல்லி நிர்பந்திக்க முடியாது என்பது அந்த வசனத்தின் பொருள். (தஃப்ஸீர் குர்துபீ)

தனக்கானதை கேட்டுப் பெரும் சுதந்திரம்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ

أَنَّ رَجُلًا تَقَاضَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَغْلَظَ لَهُ فَهَمَّ بِهِ أَصْحَابُهُ، فَقَالَ: «دَعُوهُ، فَإِنَّ لِصَاحِبِ الحَقِّ مَقَالًا، وَاشْتَرُوا لَهُ بَعِيرًا فَأَعْطُوهُ إِيَّاهُ» وَقَالُوا: لاَ نَجِدُ إِلَّا أَفْضَلَ مِنْ سِنِّهِ، قَالَ: «اشْتَرُوهُ، فَأَعْطُوهُ إِيَّاهُ، فَإِنَّ خَيْرَكُمْ أَحْسَنُكُمْ قَضَاءً»

ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம், அவர்களுக்குத் தான் கொடுத்த (ஒட்டகத்)தைக் திருப்பித் தரும்படி கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் கடுமையாகப் பேசினார். எனவே, நபித் தோழர்கள் அவரை தண்டிக்க விரும்பினார்கள், அப்போது நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, ‘(அவரை தண்டிக்க வேண்டாம்;)விட்டு விடுங்கள்; ஏனெனில், ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகச் பேச உரிமையுண்டு. அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாங்கி அவரிடமே கொடுத்து விடுங்கள்’ என்று கூறினார்கள்.

நபித்தோழர்கள், ‘அவருக்குத் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதை விட அதிக வயதை உடைய ஒட்டகம் தான் எங்களிடம் இருக்கிறது’ என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அதையே வாங்கி அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகிறவரே உங்களில் சிறந்தவர்’ என்று கூறினார்கள். (புகாரி: 2390)

 

கருத்து சுதந்திரம்

ஒருவர் தன்னுடைய சிந்தனையில் உதிக்கின்ற செய்திகளை, கருத்துக்களை யாரையும் புண்படுத்தாத வகையில், யாரையும் காயப்படுத்தாத வகையில் அதை வெளிப்படுத்தி சொல்வதற்கும் எழுதுவதற்குமான சுதந்திரத்தை, உரிமையை இஸ்லாம் வழங்கியிருக்கிறது.

சொல்லக்கூடிய கருத்துக்கள் அது அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களாக இருந்தாலும் அரசாங்க அதிகாரிகளுக்கு அல்லது ஆட்சியாளர்களுக்கு எதிரான கருத்துக்களாக விமர்சனங்களாக இருந்தாலும் நியாயமான முறையில் நாகரீகமான முறையில் அதை எடுத்து சொல்வதற்கான சுட்டிக்காட்டுவதற்கான உரிமையையும் சுதந்திரத்தையும் இஸ்லாம் வழங்கியிருக்கிறது.

وحين ولي عمر الخلافة خطب ذات يوم فقال: “يا معشر المسلمين، ماذا تقولون لو ملت برأسي كذا” (وميل رأسه)؟ فقام إليه رجل فقال: أجل كنّا نقول بالسيف كذا (وأشار إلى القطع) فقال عمر: إياي تعني؟ فقال الرجل: نعم إيّاك أعني بقولي. فقال عمر رضي الله عنه: رحمك الله، الحمد لله الذي جعل في رعيتي من إذا اعوججت قوّمني

ஹள்ரத் உமர் ரலி அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட அந்த நேரத்தில் மக்களைப் பார்த்து கேட்டார்கள் நான் ஏதாவது நேரத்தில் நியாயம் தவறி நடந்தால் அநீதத்திற்கு துணை போய் விட்டால் மக்களிடையே சமத்துவம் பேணாமல் ஒரு பக்கமாக சாய்ந்து விட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து அப்படி நீங்கள் செய்தால் நாங்கள் எங்கள் வாளால் பேசுவோம் என்றார் என்னையா குறிப்பிடுகிறீர்கள் என்று உமர் ரலி அவர்கள் கேட்க ஆம் உங்களைத்தான் சொல்கிறோம். நீங்கள் ஒருவேளை அப்படி நடந்து கொண்டால் நாங்கள் எங்கள் வார்த்தைகளால் உங்களை வெட்டி விடுவோம் அதாவது எதிர்த்து குரல் கொடுப்போம் என்று சொன்னார் அதைக் கேட்ட உமர் ரலி அவர்கள் சந்தோஷப்பட்டு நான் தடுமாறுகின்ற பொழுது என்னை சரி படுத்துகின்ற மக்களைத் தந்த அல்லாஹ்வை புகழ்கிறேன் என்று சொன்னார்கள்.

أن عمر بن الخطاب - رضي الله عنه - خطب في رعيته قائلاً: (ألا إني - والله - ما أرسل عمالي إليكـم ليضـربوا أبشـاركم، ولا ليأخذوا أموالكم، ولكن أرسلهم إليكم ليعلِّموكم دينكم وسُنَّتكم؛ فمن فُعِل به شيء سوى ذلك فَلْيرفعه إليَّ؛ فوالذي نفسي بيده إذاً لأقصنه منه

உமர் ரலி அவர்கள் நாட்டு மக்களிடத்தில் ஆற்றிய உரையில் உங்களை அடிப்பதற்கோ அல்லது உங்களின் உடமைகளை பிடுங்குவதற்கோ நான் என் அதிகாரிகளை உங்களிடத்தில் அனுப்ப வில்லை. மாறாக மார்க்கத்தையும் மாநபி அவர்களின் மேலான சுன்னத்துகளையும் உங்களுக்கு கற்றுத் தருவதற்காகவே அவர்களை அனுப்புகிறேன். இதல்லாத வேறு காரியத்தை என் அதிகாரிகள் செய்தால் தாராளமாக என்னிடத்தில் வந்து முறையிடுங்கள். நான் அவர்களின் மீது தக்க நடவடிக்கைகளை எடுப்பேன் என்று கூறினார்கள்.

 

வழிபாட்டு உரிமை

நபி ஸல் அவர்கள் ஹிஜ்ரத் செய்து வந்த போது மதினாவில் காஃபிர்கள், யஹூதிகள், நஸாராக்கள், நெருப்பு வணங்கிகள் என பலரும் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் அவரவர் தெய்வங்களை வழிபடுவதற்கான, அவரவர் முறைப்படி வணக்கம் புரிவதற்கான முழு சுதந்திரத்தையும் நபி ஸல் அவர்கள் அவர்களுக்கு வழங்கினார்கள்.

 

பள்ளிவாசலிலேயே அவர்களை வழிபட அனுமதித்தார்கள்.

 

قَالَ ابْنُ إِسْحَاقَ: وَفَدَ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وآله وَسَلَّمَ وَفْدُ نَصَارَى نَجْرَانَ بِالْمَدِينَةِ، فَحَدَّثَنِي محمد بن جعفر بن الزبير، قَالَ: لَمَّا قَدِمَ وَفْدُ نَجْرَانَ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وآلِهِ وَسَلَّمَ دَخَلُوا عَلَيْهِ مَسْجِدَهُ بَعْدَ صَلَاةِ الْعَصْرِ، فَحَانَتْ صَلَاتُهُمْ، فَقَامُوا يُصَلُّونَ فِي مَسْجِدِهِ، فَأَرَادَ النَّاسُ مَنْعَهُمْ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وآله وَسَلَّمَ: «دَعُوهُمْ»، فَاسْتَقْبَلُوا الْمَشْرِقَ، فَصَلَّوْا صَلَاتَهُمْ

நஜ்ரானிலிருந்து கிருத்துவக் குழு ஒன்று நபியவர்களை சந்திக்க வந்தது. மாலை நேரத்தில் அவர்கள் வணக்கம் புரியவதற்கான நேரம் வந்த போது பள்ளியிலேயே அவர்களின் வணக்கத்தை புரிவதற்கு முற்பட்டார்கள். அவர்களைத் தடுக்க முயன்ற நபித்தோழர்களைப் பார்த்து நபி ஸல் அவர்கள் அம்மக்களை விட்டு விடுங்கள். அவர்கள் வணங்கட்டும் என்றார்கள். அவர்கள் கிழக்கை நோக்கி அவர்களின் வணக்கத்தை புரிந்தார்கள். (தலாயிலுன் நுபுவ்வா)

 

ஜெரூசலம் வெற்றி கொள்ளப்பட்ட அந்த நேரத்தில் கிருத்துவ துறவிகள் உமர் ரலி அவரிடம் ஒரு கோரிக்கை வைத்தனர்.  ஜெரூசலமின் பாதுகாப்பிற்காகவும் நன்மைக்காகவும் சொல்கிறோம். இங்கு ஒரு யூதரைக் கூட அனுமதிக்காதீர்கள். அவர்கள் அனைவரையும் வெளியேற்றி விடுங்கள் என்பதே அந்த கோரிக்கை.

அதற்கு உமர் ரலி அவர்கள் “எங்களுடன் உடன்படிக்கை செய்திருக்கும் எவருக்கும் நாங்கள் அநீதி இழைக்க முடியாது என்று கூறினார்கள், வேண்டுமானால் அவர்கள் உங்களது பகுதியில் வசிக்க அனுமதிக்கப் பட மாட்டார்கள். ஆனால் மற்ற இடங்களில் அவர்கள் தடுக்கப்பட மாட்டார்கள் என்று கூறி எழுதிக் கொடுத்துள்ளார்கள். வரலாற்றின் வைர வரிகளுக்கு சொந்தமான அந்த வாசகம் உமரின் ஒப்பந்தம் என்ற ஆவணத்தில் இப்போதும் இருக்கிறது. மற்ற பகுதிகளில் யூதர்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டார்கள்.

இவ்வாறு அத்தனை சுதந்திரங்களையும் மனித சமூகத்திற்கு இஸ்லாம் வழங்கியிருக்கிறது.

 

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிற சுதந்திரம்

 

இந்திய அரசியல் சட்டம் அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமை (Equality before law) மற்றும் மத சுதந்திரம் (Freedom of religion) வழங்குகிறது.

அரசியல் சட்டத்தின் 25-28வது பிரிவுகள்: தங்கள் மதத்தை கடைப்பிடிக்க, போதிக்க, பரப்ப சுதந்திரம் உண்டு.

18 வயதுக்கு மேல் அனைவருக்கும் வாக்குரிமை உண்டு.

பேசும் சுதந்திரம்,சங்கம் அமைக்கும் சுதந்திரம், சுதந்திரமாக பயணிக்கும் உரிமை – இந்தியாவின் எங்கும் செல்லலாம். சொத்து சம்பாதிக்கும் சுதந்திரம் – எந்த மாநிலத்திலும் வாழலாம், தொழில் செய்யலாம். எந்த தொழிலையும் செய்வதற்கான சுதந்திரம். குடியுரிமை சுதந்திரம், மத சுதந்திரம் (Freedom of Religion)  மத வழிபாட்டை நடத்த அரசு தடையிட முடியாது. (பொது ஒழுங்கு, நல்வாழ்வு, நெறிமுறைகள் பேணப்படும் வரையிலும்). கலாச்சாரம் & கல்வி சுதந்திரம் - தன் மொழி, எழுத்து, கலாச்சாரம் பாதுகாப்பதற்கான உரிமை. சிறுபான்மை சமுதாயங்கள் தங்களுக்கென பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் இங்கே தொடங்கலாம், நடத்தலாம். தனிப்பட்ட பாதுகாப்பு சுதந்திரம் - அடிமைத்தனம், கட்டாய உழைப்பு, குழந்தை வேலை ஆகியவை தடை.சட்டவிரோதமாக கைது செய்ய முடியாது.

 

நாட்டின் நிலை

சுதந்திரம்' என்ற சொல்லின் எதிர்ப்பதமாக சர்வாதிகாரம், கொடுங்கோன்மை, அடக்குமுறை, அடிமைப்படுத்தல், ஆக்கிரமிப்பு, சுரண்டல், மனித நலன்களுக்கு குந்தகம் ஏற்படும் விதமான அளவுக்கு மீறிய கட்டுப்பாடுகளையும் தடைகளையும் விதித்தல், பொறுப்பற்ற தன்மைகள், செயலற்ற நிலைகள், ஒழுங்கற்ற முறைமைகள் போன்றவற்றை குறிப்பிடலாம். இவை அனைத்தும் இன்றைக்கு இந்த நாட்டில் இஸ்லாமியர்கள் விஷயத்தில் நடந்து கொண்டிருக்கின்றது. பெருநாள் விடுமுறை ரத்து செய்யப்படுகிறது. புர்கா அணிய தடை விதிக்கப்படுகிறது. முஸ்லிம்களின் ஓட்டுரிமை பறிக்கப்படுகிறது.இஸ்லாமிய அடையாளங்களான பள்ளிவாசல்கள் தர்காக்கள் இடிக்கப்படுகிறது. இந்த நிலைகளைப் பார்க்கின்ற போது இந்த நாடு சுதந்திர நாடு என்று எவ்வாறு கூற முடியும்.

இந்த நிலைகள் மாறி எப்போது சிறுபான்மை சமூகங்கள் இந்த மண்ணில் பாதுகாக்கப்படுகிறார்களோ அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகிறதோ அப்போது தான் இது முழு சுதந்திரம் பெற்ற நாடாக மாறும். அல்லாஹ் அத்தகைய நிலையை ஏற்படுத்தித் தருவானாக!

 

 

No comments:

Post a Comment