இஸ்லாத்தின் பார்வையில்
ஷரீஅத்தின் கண்ணோட்டத்தில் விரைவாக செய்ய வேண்டிய அடுத்து மிக முக்கியமான இறுதிக்
கடமையான ஹஜ்.
இஸ்லாம் மனித சமூகத்திற்கு வகுத்துத் தந்திருக்கிற கடமைகள் வெறும்
கடமையாக மட்டும் இல்லாமல் செய்பவருக்கு நன்மையைத் தரும் ஒரு அமலாக மட்டும் இல்லாமல்
உலகளாவிய அளவில் மனித குலத்தை ஒன்றுபடுத்தும் ஒரு அம்சமாக இருந்து
கொண்டிருக்கிறது. இஸ்லாத்தின் கடமைகளில் சமத்துவம் உண்டு,சகோதரத்துவம் உண்டு, மனித
நேயம் உண்டு, வேறுபாடுகளை கலைந்து முழு மனித சமூகத்தையும் ஓரணியில் ஒன்றுபடுத்தும்
உன்னத வழிகாட்டுதல் இஸ்லாமியக் கடமைகளில் உண்டு.
இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில்
ஒன்றான தொழுகை, வெறும் குனிவதையும்,
நிமிர்வதையும், உதட்டளவில் மந்திரங்களை மொழிவதையும் கொண்ட ஒரு சடங்கோ சம்பிரதாமோ அல்ல. நாள் ஒன்றுக்கு
ஐந்து நேரம், படைத்த இறைவனை வணங்க பள்ளிவாசலில்
ஒன்று கூடும்போது - அங்கு ஏழை, செல்வந்தன் என்ற ஏற்றத் தாழ்வு
களையப்படுகின்றது. உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேற்றுமை வேரறுக்கப்படுகின்றது. முதலில்
வந்தவருக்கு முதல் இடம். அடுத்து வந்தவருக்கு அடுத்த இடம். அரசனும் ஆண்டியும் அருகருகில். இப்படி
பள்ளிவாசல்களில் ஐந்து நேரமும் ஒன்று கூடும்போது தொழுகை நிறைவேற்றப்படுவதோடு அங்கே
சமத்துவமும் பாதுகாக்கப் படுகிறது. வீட்டில் தொழுதாலும் ஜமாஅத்தாக பள்ளியில்
தொழுதாலும் தொழுகை ஒன்று தான்.என்றாலும் ஃபர்ளு தொழுகைகளை வீட்டில்
தொழக்கூடாது,பள்ளியில் தான் தொழ வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்திச் சொல்லியிருப்பதற்கான
காரணம் அந்த சமத்துவத்துவத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
அந்த சமத்துவத்தின்
மாபெரும் அறைகூவலாகவும் அந்த சமத்துவத்தின் மாபெரும் வெளிபாடாகவும் தான் ஹஜ் கடமை
திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஹஜ் கடமையில் இருக்கிற சமத்துவத்துவத்தைப் போன்று சகோதரத்துவத்தைப்
போன்று ஒற்றுமையைப் போன்று உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாது.
இனத்தால், குலத்தால், நிறத்தால், தேசத்தால், உண்ணும் உணவால், உடுத்தும் உடையால், பேசும் மொழியால், பின்பற்றும் கலாச்சாரத்தால் வேறுபட்ட அனைவரும் ஒரே மொழி ஒரே உடை, ஒரே மறை, ஒரே இறை, ஒரே
முறை என்று ஒரே இடத்தில் ஓரணியில் ஒன்று திரண்டு நிற்கும் இடம் தான் ஹஜ் கடமை.
உலகின் அனைத்து கண்டங்களும்
அங்கே சங்கமம். உலகின் அனைத்து நாடுகளும் அங்கே சங்கமம். உலகின் அனைத்து மொழிகளும்
அங்கே சங்கமம். உலகின் அனைத்து நிறங்களும் அங்கே சங்கமம். உலகின் அனைத்து மனிதர்களும்
அங்கே சங்கமம்.
அகில உலகத்தையும் ஆட்டிப்
படைக்கும் அமெரிக்காவிலிருந்து, ஒரு காலத்தில் சூரியனே அஸ்தமிக்காத நிலப்பரப்பை தன்
கட்டுப்பாட்டில் வைத்திருந்த இங்கிலாந்திலிருந்து, காணும் இடமெல்லாம் காடுகளால்
நிரம்பிய ஆப்பிரிக்காவிலிருந்து, இறைவனை மறுக்கும் சித்தாந்தக் கற்பனையில் மூழ்கிப்போன
கம்யூனிஸ தேசங்களிலிருந்து, முஸ்லிம்கள் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கும் இந்தோனேசியா விலிருந்து,
மனங்குளிரும் மரியாதைக்குப் பேர் போன மலேசியாவி லிருந்து, செல்வச் செழிப்பு மிக்க சிங்கப்பூரிலிருந்து,
இதயம் கவரும் பசுமை நிறைந்த இலங்கையிலிருந்து, வேற்றுமையில் ஒற்றுமை காணும் நம் இந்தியாவிலிருந்து,
இப்படி உலகத்தில் மனிதர் வசிக்கும் அத்தனை தேசங்களிலிருந்தும் மக்கள் கூட்டம்
கூட்டமாக வந்து அங்கே சங்கமிக்கிறார்கள். ஆனால் எந்த குழப்பங்களும் இல்லை,எந்த
வேறுபாடுகளும் இல்லை,எந்த கலாச்சார மோதல்களும் இல்லை,எந்த பிரச்சனைகளும் இல்லை,
சாதாரணமாக இரணடு மனிதர்கள் ஒரு இடத்தில் ஒன்று கூடினாலே அங்கு சண்டை வருவது நிச்சயம். இளைஞன் ஒருவன் ஒரு பெரியவரிடம் உலகத்தில் சண்டை எப்போது ஒழியும் ? என்று கேடடான். உலகில் இரணடு மனிதர்கள் இருக்கும் வரை சண்டை இருக்கத்தான்
செய்யும் என்றார்.இளைஞன் மீண்டும் கேடடான், அவர்களில் ஒருவர் இறந்து விடடால் அப்போதாவது சண்டை ஒழியுமா? அவர் அப்போதும் ஒழியாது என்றார். அதிர்ந்து போன இளைஞன் ஆச்சாயத்தோடு ஏன் என்று கேடடான். அப்போதும் அவனது வலது கை இடது கையோடு சண்டையிடடுக் கொணடிருக்கும் என்றார். ஆக
மக்கள் கூட்டம் அதிகமாக அதிகமாக அங்கே பிரச்சனைகளும் சண்டைகளும் தலைதூக்கும்.ஆனால்
நாற்பது லட்சத்திற்கும் அதிமானோர் சங்கமிக்கிற அந்த இடத்தில் இதுவரை ஏதாவது சண்டை
நடந்ததாக வரலாறு உண்டா? ஏதாவது கலவரம் ஏற்பட்டதாக
சரித்திரம் உண்டா? இது தான் ஹஜ் கடமை நமக்குப் பெற்றுத்தரும்
மிகப்பெரிய பாடமும் படிப்பினையும்.உலகத்தில் மாபெரும் சமத்துவத்தை போதிக்கும் இடம்
ஹஜ் என்று சொன்னால் மிகையாகாது.
சமத்துவம் போதிக்கப்படும்
மாபெரும் பல்கலைக்கழகமான அந்த கஃபாவை நோக்கி உலகத்தின் எல்லா நாடுகளிலிருந்தும்
எல்லா பகுதிகளிலிருந்தும் எல்லா மூலை முடுக்குகளிலிருந்தும் மக்கள் அலை அலையாய்
படையெடுத்துக் கொண்டிருக்கிற பொன்னான நேரம் இது. பூமிப்பந்தில் சுழன்று
கொண்டிருக்கிற மனித இனம் அதன் மைய்யப்பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிற
உயர்வான தருணம் இது.எந்தப் புனித ஆலயத்தை வாழ்வில் ஒரு முறையேனும் காண வேண்டும்
தரிசிக்க வேண்டும் அதைப் பார்த்து தன் உள்ளத்தைப் பரிகொடுக்க வேண்டும் என்று மனித
மனம் ஏங்குமோ அத்தகைய புனித ஆலயத்தை, புனிதத்தலத்தைக் கண்டு
தரிசித்து ஹாஜிகள் எல்லையில்லா ஆனந்தப் பெருவெள்ளத்தில் மூழ்கிப் போய் இருக்கிற
சிறப்பான வேளை இது.
ஹள்ரத் இப்ராஹீம் அலை
அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க தன் மனைவி ஹாஜராவையும் தன் அருமை மகன் ஹள்ரத்
இஸ்மாயீல் அலை அவர்களை மக்காவில் விட்டுச் செல்கின்ற போது அவர்கள் கேட்ட
துஆக்களில் ஒன்று
فاجعل افئدة من الناس تهوي اليهم
மக்களின் உள்ளங்களை
அவர்களின் அளவில் சாய்ந்திடச் செய்வாயாக! (அல்குர்ஆன் : 14 ; 37)
அவர்கள் அன்றைக்கு கேட்ட
அந்த துஆவின் பிரதிபலிப்பைத்தான் இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.இதுவரை
அந்த கஃபதுல்லாஹ் காணாதவர்கள், சீக்கிரம் அதைக் காண வேண்டும், தரிசிக்க வேண்டும்
என்று ஏங்குவதும், அதைக் கண்டு வந்தவர்கள், இனி அடுத்து அங்கே போவதற்கு எப்போது
வாய்ப்பு கிடைக்குமோ என்று துடிப்பதும் ஹள்ரத் இப்ராஹீம் அலை அவர்களின் அந்த
துஆவின் கபூலிய்யத்தை நமக்கு எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கிறது.
உண்மையில் அல்லாஹ்வை
நேசிப்பவர்களுக்கு, அல்லாஹ்வின் மீது உண்மையான காதல் உள்ளவர்களுக்கு அந்த
அல்லாஹ்வின் இல்லத்திற்குப் போக வேண்டும், அதைக் காண வேண்டும், அங்கு தங்க
வேண்டும் என்ற எல்லையில்லா ஆசையும் ஆர்வமும் அந்த நஸீப் நமக்கு கிடைக்க வில்லையே
என்ற பரிதவிப்பும் நிச்சயம் இருக்கும்.
عن عبد العزيز بن أبي روّاد قال : دخل مكة
قومٌ حجاج ومعهم امرأة وهي تقول : أين بيت ربي ؟ فيقولون: الساعة ترينه . فلما رأوه
قالوا : هذا بيت ربك, أما ترينه ؟ فخرجت تشتد وتقول: بيت ربي, بيت ربي, حتى وضعت جبهتها
على البيت . فوالله ما رفعت إلا ميتة
அப்துல் அஜீஸ் ரஹ்
அவர்கள் கூறுகிறார்கள் ; ஒரு கூட்டம் ஹஜ்ஜிக்காக
ஆசையோடும் ஆர்வத்தோடும் மக்காவிற்குள் நுழைந்தது.அதில் ஒரு பெண் என் இறைவனின்
இல்லம் எங்கே என்று மிகவும் ஆசையுடன் கேட்டவாறே நுழைந்தாள்.அவர்கள்
கஃபதுல்லாஹ்வைக் காட்டி இது தான் உன் இறைவனின் இல்லம் என்று கூறினார்கள். இது தான்
என் இறைவனின் இல்லமா என்று ஆச்சர்யத்துடன் சொல்லிக் கொண்டே கஃபத்துல்லாஹ்வின்
அருகில் நெருங்கி தன் முகத்தை அதன் மீது வைத்தாள். ஆனால் அதிலிருந்து தன் முகத்தை
எடுத்ததும் மரணித்து விட்டார்கள். (ஸிஃபதுஸ் ஸஃப்வா)
உண்மையான இறையன்பும் இறைக்காதலும்
உள்ளவர்களின் நிலை இப்படித்தான் இருந்தது. அவர்களின் உள்ளத்தில் தன்னைப்பற்றிய
சிந்தனையோ தன் குடும்பத்தைப்பற்றிய சிந்தனையோ தன் இல்லத்தைப்பற்றிய சிந்தனையோ
இல்லாமல் அவர்கள் உள்ளம் முழுக்க அல்லாஹ்வும் அவனது இல்லமும் தான்
நிறைந்திருந்தது.அதனால் அதற்காக எத்தனை சிரமங்கள் வந்தாலும் எத்தனை கஷ்டங்கள்
வந்தாலும் அதை தாங்கிக் கொள்வதற்கும் பொறுத்துக் கொள்வதற்கும் தயாராக
இருந்தார்கள்.
ذكر بعض أهل السير أن شقيق البلخي أبصر
في طريق الحج مقعداً يتكأ على إليته يمشي حيناً
و يضعن حيناً يرتاح حيناً و يمشي أخرى كأنه
من أصحاب القبور مما أصابه من وعثاء السفر و كآبة المنظر قال له شقيق يا هذا أين تريد
قال أريد بيت الله العتيق قال من أين أتيت ؟ قال من وراء النهر
قال كم لك في الطريق ؟ فذكر أعواماً تربوا
على عشر سنين قال فنظرت إليه متعجباً قال يا هذا مما تتعجب
قال أتعجب من بعد سفرك و ضعف مهجتك قال
أما بعد سفري فالشوق يقربه و أما ضعف مهجتي
فالله يحملها
ஷகீகுல் பல்ஹீ ரஹ் அவர்கள்
கூறுகிறார்கள் ; ஹஜ்ஜிக்கு செல்லும்
வழியில் கால் ஊனமான ஒரு மனிதரைக் கண்டேன். மிகவும் சிரமப்பட்டு சென்று
கொண்டிருந்தார். நீண்ட தூர பயணத்தினால் அவர் மிகவும் பலவீனமாக இருந்தார். எங்கே
போகிறீர் என்று கேட்டேன். ஹஜ்ஜிக்கு செல்கிறேன் என்றார். எங்கிருந்து வருகிறீர்
என்ற போது வராவுன் நஹ்ரிலிருந்து வருகிறேன் என்றார். வராவுன் நஹ்ர் என்பது மத்திய
ஆசிய கண்டத்தில் இருக்கிற ஒரு நாடு.எவ்வளவு நாட்களாக இவ்வாறு வருகிறீர் என்று
கேட்டேன்.சுமார் 10 வருடங்களாக வருகிறேன் என்றார். அதைக் கேட்டு நான் மிகவும்
ஆச்சர்யமடைந்தேன்.ஏன் ஆச்சர்யப்படுகிறீர்கள் என்று கேட்டார். உங்கள் பயண
தூரத்தையும் உங்கள் உடல் பலவீனத்தையும் கண்டு நான் ஆச்சர்யப்படுகிறேன் என்றேன்.
அதற்கவர், பயணம் தூரமாக இருந்தாலும்
இறை இல்லத்தின் மீது எனக்கிருக்கிற ஆர்வமும் ஆசையும் அந்த தூரத்தை எனக்கு நெருக்கமாக்கி விட்டது. என் உடல் பலவீனத்தை
இறைவன் பார்த்துக் கொள்வான் என்றார்.
அவர்களின் கால் ஊனமாக
இருந்தாலும் அவர்களின் உள்ளம் ஊனமாக வில்லை. அதனால் தான் புனிதம் நிறைந்த கஃபாவைக்
காணுவதற்கு அத்தனை சிரமங்களையும் தியாகங்களையும் மேற்கொண்டார்கள்.ஆனால் இன்றைக்கு
நம்மிடத்தில் செல்வம் இருக்கிறது,உடல் ஆரோக்கியம் இருக்கிறது,போவதற்குத் தேவையான
எல்லா வசதிகளும் இருக்கிறது. பயணங்களையும் அல்லாஹ் மிக மிக லேசாக்கி
விட்டான்.இருந்தாலும் நம்மில் பலர் அந்த கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கு
தயாராகுவதில்லை.அதில் தயக்கம் காட்டுகிறோம், பிறகு செய்து கொள்ளலாம் என்று அதைத்
தள்ளிப் போடுகிறோம்.
مَن أرادَ الحَجَّ فلْيَتعَجَّلْ
யார் ஹஜ்ஜை நாடுகிறாரோ
அவர் அதை விரைவாக செய்யட்டும். (அபூதாவூது ; 1732)
இஸ்லாமியக் கடமைகளில்
உடலால் மட்டும் செய்யப்படும் கடமைகள்,பொருளால் மட்டும் செய்யப்படும் கடமைகள்,
உடலாலும் பொருளாலும் செய்யப்படும் கடமைகள் என்று மூன்று வகையாக உண்டு.அதில்
உடலாலும் பொருளாலும் செய்யப்படும் கடமை ஹஜ். ஹஜ் செய்வதற்கு உடல் தகுதியும்
வேண்டும்,பொருளாதார வசதியும் வேண்டும்.இவ்விரண்டும் யாருக்கு
அமையப்பெற்றிருக்கிறதோ அவரின் மீது கடமையாகும்.கடமையாகி விட்டால் அதை
பிற்படுத்தாமல் தாமதப்படுத்தாமல் உடனே செய்து விட வேண்டும்.
உடலாலும் பொருளாலும்
சூழ்நிலைகளாலும் ஹஜ்ஜுக்கு சென்று வர வாய்ப்புகள் அனைத்தும் இருந்தும் ஹஜ்ஜுக்கு
செல்லாமல் அந்த கடமையை நிறைவு செய்யாமல் காலம் தாழ்த்துபவர்களை மார்க்கம் வன்மையாக
கண்டிக்கிறது.
أنَّ الرَّسولَ صلَّى اللهُ عليه وسلَّم
قال: ( قال اللهُ: إنَّ عبدًا صحَّحْتُ له جسمَه ووسَّعْتُ عليه في المعيشةِ يمضي عليه
خمسةُ أعوامٍ لا يفِدُ إليَّ لَمحرومٌ )
ஒருவருக்கு உடல்
ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் கொடுத்தும் அவர் ஐந்து வருடங்கள் என்னிடம் வர
வில்லையோ அவர் என் அருளை விட்டும் தூரமானவர் என்று இறைவன் கூறுகிறான். (இப்னு ஹிப்பான் ; 3703)
قال عمرُ بن الخطاب : لقد هممْتُ أن أبعثَ
رجالا إلى هذهِ الأمصارِ فينظُروا كل من كانَ له جدّةً ولم يحجّ ، فيضربُوا عليهم الجزيةَ
ما هم بمسلمينَ ، ما هم بمسلمينَ
சில மனிதர்களை ஊருக்குள்
அனுப்பி எவர்களுக்கு வசதியிருந்தும் ஹஜ் செய்யாமல் இருக்கிறாரோ அவர்கள் மீது
ஜிஸ்யா வரியை விதிக்க வேண்டும் என்று கருதுகிறேன். அவர்கள் முஸ்லிம்கள் அல்ல,
அவர்கள் முஸ்லிம்கள் அல்ல என்று உமர் ரலி அவர்கள் கூறுகிறார்கள். (அஸ்ஸுனனு வல் அஹ்காம் ; 15/4)
No comments:
Post a Comment