Monday, June 29, 2020

இஸ்லாத்தின் பார்வையில் விரைவாக செய்ய வேண்டிய காரியம் 4 ; திருமணம்



வாழ்க்கையில் அவசரமாக செய்ய வேண்டும் என்று இஸ்லாம் அடையாளப்படுத்திய வலியுறுத்திய விஷயங்களை நாம் பார்த்து வருகிறோம். அதில் ஒன்று திருமண வயதை அடைந்த பெண்ணை மணமுடித்து வைப்பது,ஒரு பெண் திருமண வயதை அடைந்து விட்டால் அந்தப் பெண்ணுக்கு தகுந்த ஜோடி அமைந்து விட்டால் அந்தப் பெண்ணை மணமுடித்து வைப்பதில் அவசரம் காட்ட வேண்டும்.


حديث حاتم الأصم: العجلة من الشيطان إلا في خمسة فإنها من سنة رسول الله صلى الله عليه وسلم: إطعام الطعام، وتجهيز الميت، وتزويج البكر، وقضاء الدين، والتوبة من الذنب
அவசரம் என்பது ஷைத்தானின் குணமாகும். ஆனால் ஐந்து விஷயங்களில் தவிர, அந்த ஐந்து விஷயங்கள் நபியின் சுன்னத்துகள். 1, பசித்தவருக்கு உணவளித்தல். 2, மய்யித்தை அடக்கம் செய்தல். 3, வயதுக்கு வந்த பெண்ணிற்கு மணமுடித்து வைத்தல். 4, கடனை நிறைவேற்றுதல். 5, தவ்பா செய்தல் என்று ஹாதம் ரஹ் அவர்கள் கூறினார்கள். (தபகாதுல் குப்ரா (6/309)
ثلاثة لا تؤخرها: الصلاة إذا أتت، والجنازة إذا حضرت، والأيم إذا وجدت كفؤا
நபி அவர்கள் ஹள்ரத் அலி ரலி அவர்களைப் பார்த்து சொன்னார்கள் ; மூன்று விஷயங்களை பிற்படுத்தாதே. 1, நேரம் வந்து விட்டால் தொழுகையை. 2, மரணித்து விட்டால் அடக்கம் செய்வதை. 3, பெண்ணிற்கு தகுந்த ஜோடி அமைந்து மணமுடிப்பதை. (திர்மிதி : 1075)

திருமண வயதை அடைந்து விட்ட பெண்ணை குறிப்பிட்ட காலத்தில் மணமுடித்து வைக்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. அவ்வாறு செய்யாமல் அதில் காலம் தாழ்த்துவதை அல்லது சுனங்கல் காட்டுவதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.

காரணம் இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இன்றைய காலம் மிக மிக மோசமான காலம், திரும்பிய பக்கமெல்லாம் அனாச்சாரங்களும் அசிங்கங்களும் ஆபாசங்களும் மலிந்து போன ஒரு காலம்.நமது ஈமானையும் ஒழுக்கத்தையும் பதம் பார்க்கிற மோசமான கலாச்சாரங்கள் பெருகி விட்ட ஒரு காலம்,கொஞ்சம் கூட இறையச்சம் இல்லாமல் கூச்சமில்லாமல் வெட்கமில்லாமல் காதல் என்ற பெயரில் நம் இஸ்லாமிய பெண்கள் மாற்றார்களோடு கைகோர்த்து திரிகின்ற ஆபத்தான காலம்,இரண்டு வருடம் பழகிய ஒருத்தனை நம்பி அவன் பேசுகிற ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி அரும்பாடு பட்டு 20 வருடங்கள் வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களை உதாசினப்படுத்தி விட்டு அவர்களுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி விட்டு வீட்டை விட்டு கிழம்புகிற மோசமான காலம். இப்படி இன்றைய காலத்தின் ஆபத்துக்களைப் பற்றியும் விபரீதங்களைப் பற்றியும் அடுக்கிக் கொண்டே போகலாம்.சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் நமக்கும் நம் ஈமானுக்கும் பாதுகாப்பில்லாத காலம்.

உலகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு எது என்று சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று சர்வே எடுத்து அதில் 10 நாடுகளை முதன்மைப்படுத்தியது.அதில் முதல் இடத்தில் இருப்பது இந்தியா தான்,கடந்த நான்கு வருடங்களில் மட்டும் 110300 கற்பழிப்புகள் நம் நாட்டில் நடந்திருப்பதாக ஆய்வு சொல்கிறது.

காலத்தின் இந்த மாற்றங்களில் சிக்கி தங்கள் வாழ்க்கையை தொலைக்காமல் நம் வீட்டு மங்கைகளை காக்க வேண்டுமென்றால் அவர்களை மணமுடித்து வைப்பதில் அவசரம் காட்ட வேண்டும், அதில் தீவிரம் காட்ட வேண்டும்.மணமுடித்து வைப்பதில் அவசரம் காட்ட வேண்டும் தீவிரம் காட்ட வேண்டும் என்கிற இந்த விஷயம் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பொருந்தும்.திருமண வயதை அடைந்து தகுந்த ஜோடி அமைந்து விட்டால் படிப்பு என்றோ வேலை என்றோ சம்பாத்தியம் என்றோ காரணம் காட்டி தள்ளிப்போடாமல் நம் ஆண் மக்களுக்கும் விரைவாக மணமுடித்து வைப்பது நம் தலையாய கடமை.

திருமணம் தான் ஒரு ஒரு மனிதனை தூய்மைப்படுத்துகிறது, பரிசுத்தப்படுத்துகிறது. ஒரு மனிதன் சிறந்தவனாக உயர்ந்தவனாக அல்லாஹ்வின் திருப்பொருத்தம் பெற்றவனாக மாற வேண்டுமென்றால் அவனுக்கு கற்பொழுக்கம் இருக்க வேண்டும். கற்பொழுக்கம் இல்லாதவனை சிறந்தவன் என்று கூற முடியாது.

والذين هم لفروجهم حفظون
முஃமின்கள் யாரென்றால் அவர்கள் தங்கள் மானங்களை பாதுகாப்பவர்கள். (அல்குர்ஆன் ; 23 : 5)

ஒரு மனிதனுக்கு அந்த ஒழுக்கத்தையும் பேணுதலையும் நல்ல பண்புகளையும் கொடுத்து இறையச்சமுள்ளவனாக மாற்றி அவனை அல்லாஹ்வோடு இணைக்கிற பணியை திருமணம் தான் செய்கிறது.

من سره ان يلقي الله طاهرا مطهرا فاليتزوج الحرائر
இறைவனை பரிசுத்தமான நிலையில் சந்திப்பது எவருக்கு மகிழ்ச்சி யளிக்குமோ அவர் திருமணம் முடித்துக் கொள்ளட்டும். (இப்னுமாஜா : 1862)
قال عمر من دعاك الي غير الزواج فقد دعاك الي غير الاسلام
திருமணம் வேண்டாம் என்று திருமணம் செய்ய வேண்டாம் என்று குடும்ப உறவை விட்டும் உன்னை தூரமாக்கி தனிமனித வாழ்வின் பக்கம் உன்னை ஒருவன் அழைக்கிறான் என்றால் உன்னை இஸ்லாத்தை விட்டே தூரமாக்க நினைக்கிறான் என்று உமர் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

திருமணத்திற்கும் இஸ்லாத்திற்கும் நிறைய தொடர்புண்டு, திருமணத்திற்கும் ஈமானுக்கும் நிறைய தொடர்புண்டு, திருமணத் திற்கும் ஒழுக்கத்திற்கும் நிறைய தொடர்புண்டு, திருமணத்திற்கும் தூய்மையான வாழ்வுக்கும் நிறைய தொடர்புண்டு. அதனால் இஸ்லாம் திருமணத்தை மனித சமூகத்திற்கு அவசியமாக்கியிருக்கிறது. உலகத்திற்கு அனுப்பப்பட்ட அத்தனை தீர்க்க தரிசிகளும் செய்து கொண்ட,அந்த தீர்க்கதரிசிகளுக் கெல்லாம் முன்னோடியாக முத்தாய்ப்பாக அகிலத்தில் அவதரித்த  அருமை நாயகம் அவர்கள், தான் விரும்பி செய்ததோடு தன் சமூகத்திற்கும் அதன் முக்கியத்துவத்தை அதன் அகமியத்தை எடுத்துக்கூறி அவர்களை ஆர்வப்படுத்திய மிகச்சிறந்த  மிக உயர்ந்த சுன்னத்துகளில் ஒன்று திருமணம்.

كنتُ أخدُمُ النَّبيَّ صلَّى اللَّهُ علَيهِ وسلَّمَ فقالَ لي النَّبيُّ صلَّى اللهُ علَيهِ وسلَّمَ: يا ربيعةُ ألا تتزوَّجُ ؟ قال فقُلتُ: لا واللَّهِ يا رسولَ اللهِ ما أريدُ أن أتزوَّجَ ما عِندي ما يُقيمُ المرأَةَ وما أُحِبُّ أن يَشغَلَني عنكَ شَيءٌ قال: فأعرَضَ عنِّي قال: ثُمَّ راجَعتُ نَفسي فقُلتُ واللهِ يا رَسولَ اللهِ أنتَ أعلَمُ بما يُصلِحُني في الدُّنيا والآخِرةِ قالَ: وأنا أقولُ في نَفسي لئِن قالَ لي الثَّالثَةَ لأقولَنَّ نعَم قال فقال لي الثَّالثةَ يا ربيعَةُ ألا تتزوَّجْ ؟ قال فقُلتُ: بلَى يا رسولَ اللهِ مُرني بما شِئتَ أو بما أحبَبتَ قال: انطلِقْ إلى آلِ فلانٍ إلى حيٍّ منَ الأنصارِ فيهِم تَراخي عَن رسولِ اللهِ صلَّى اللهُ علَيهِ وسلَّمْ فقُلْ لهم إنَّ رسولَ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّم يُقرئكُم السَّلامَ ويأمرُكُم أن تُزوِّجوا ربيعةَ فلانةً امرأةً منهُم قال: فأتيتُهُم فقلتُ لهُم ذلكَ فقالوا: مرحَبًا برَسولِ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّم وبرَسولِ رَسولِ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّمَ واللهِ لا يرجِعُ رسولُ رسولِ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّمَ إلا بِحاجتِهِ قال: فأكرَموني وزوَّجوني وألطَفوني ولم يسأَلوني البيِّنةَ فرجَعتُ حزينًا فقالَ رسولُ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّم: ما بالُكَ ؟ فقُلتُ: يا رسولَ اللهِ أتيتُ قومًا كِرامًا فزوَّجوني وأكرَموني ولَم يَسألوني البَيِّنةَ فمِن أينَ لي الصَّداقَ ؟ فقالَ رسولُ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّم لبُرَيدَةَ الأسلَميَّ: يا بُريدةُ اجمَعوا له وَزنَ نواةٍ مِن ذهَبٍ قال: فجمَعوا لي وَزنَ نواةٍ من ذَهبٍ قالَ فقالَ النَّبيُّ صلَّى اللهُ عليهِ وسلَّم: اذهَب بهذِهِ إليهِم وقُل هذا صداقُها فذهَبتُ به إليهِم فقُلتُ هذا صَداقُها قال فقالوا كَثيرٌ طيِّبٌ فقبِلوا ورَضوا بهِ قال فقُلتُ: مِن أينَ أولِمُ ؟ قال فقال يا بريدَةُ: اجمعوا له في شاةٍ قال فجمَعوا لي في كبشٍ فَطيمٍ سَمينٍ قال: وقالَ النَّبيُّ صلَّى اللهُ عليهِ وسلَّم: اذهَب إلى عائشَةَ فقل انظُري المكتَلَ الذي فيه الطَّعامُ فابعَثي به قالَ فأتيت عائشَةَ رضيَ اللهُ عَنها فقُلتُ لها ذلكَ فقالَت: ها هو ذاكَ المكتلُ فيه سَبعةُ آصُعٍ مِن شَعيرٍ واللهِ إن أصبَحَ لنا طعَامٌ غيرُهُ قال فأخذته فجئتُ به إلى النَّبيِّ صلَّى اللهُ عليهِ وسلَّم فقالَ: اذهَب بها إليهِم فقُل ليَصلُح هذا عندَكُم خبزٌ قال فذهَبتُ به وبالكَبشِ قال فقبِلوا الطَّعامَ وقال: اكفونا أنتُم الكبشَ قال: وجاءَ ناسٌ مِن أسلَم فذَبَحوا وسلَخوا وطبخُوا
ஒரு நாள் நபி அவர்கள் ரபீஆ ரலி அவரிடம் "உனக்குத் திருமணம் புரிந்து கொள்ள ஆசை இல்லையா?" என்று கேட்டார்கள்.ஆனால் அவர் "தங்களுக்கு சேவை செய்வதிலிருந்து எனது கவனத்தைத் திருப்பும் எதையும் நான் விரும்பவில்லை அல்லாஹ்வின் தூதரே! தவிர ஒரு மணப்பெண்ணுக்கு மணக்கொடை அளிக்க, அவளை வாழவைக்க என்று என்னிடம் பணமும் இல்லை" என்று பதிலளித்தார் ரபீஆ. நபி அவர்கள் அமைதியாக இருந்து விட்டார்கள்.சில நாட்கள் கழிந்தன. மீண்டும் நபி அவர்கள் அவரிடம் கேட்டார்கள். "உனக்குத் திருமணம் புரிந்து கொள்ள ஆசை இல்லை, ரபீஆ?"
ரபீஆவும் அதே பதிலை மீண்டும் கூறிவிட்டார். ஆனால் பின்னர் தனிமையில் இருக்கும் போதுதான் இவ்விதம் நபியவர்களிடம் மறுதலித்துப் பேசியிருக்கக் கூடாதோ என்று ரபீஆவிற்கு மன உளைச்சல் ஏற்பட்டது. அது அவருக்கு மிகுந்த வெட்கத்தை அளித்தது. மனதுடன் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

"அட ரபீஆ! உனது ஆன்மீகத்திற்கும் இவ்வுலகிற்கும் மறுமைக்கும் எது சிறந்தது என்று நபியவர்கள் உன்னைவிடச் சிறப்பாய் அறிய மாட்டார்களா? உன்னுடைய ஏழ்மையும் பொருளாதார நிலைமையும்கூட அவர்கள் அறிந்ததுதானே. ஆம். அல்லாஹ்வின் மீது ஆணையாக! மீண்டும் ஒருமுறை நபியவர்கள் என்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி பரிந்துரைத்தால் நிச்சயம் கட்டுப்படுவேன்" என்று இறுதியில் அவரது மனம் சமரச உடன்படிக்கை செய்து கொண்டது.

மீண்டும் சில நாட்கள் கழிந்தன. மீண்டும் முஹம்மது நபி அவரிடம் கேட்டார்கள்: "உனக்குத் திருமணம் புரிந்து கொள்ள ஆசை இல்லையா, ரபீஆ?""நிச்சயமாய் திருமணம் செய்து கொள்கிறேன் அல்லாஹ்வின் தூதரே! ஆனால் நான் இன்று இருக்கும் நிலையில் யார் எனக்குப் பெண் தருவார்கள்?" என்று கவலை தெரிவித்தார் ரபீஆ.

ஒரு குறிப்பிட்ட குடும்பத்தைச் சொல்லி, அவ்வீட்டிலுள்ள ஒரு குறிப்பிட்ட பெண்ணைச் சொல்லி, "அவர்கள் வீட்டிற்குப் போ. அல்லாஹ்வின் தூதர் உங்களின் இந்தப் பெண்ணை எனக்குத் திருமணம் செய்து தரும்படி கட்டளையிட்டார் என்று கூறு" என்று தெரிவித்தார்கள் முஹம்மது நபி.

மிகவும் கூச்சமாய் இருந்தது ரபீஆவிற்கு. மெதுவாய் அவர்களின் வீட்டிற்குச் சென்றார். தயக்கமாய்த் தெரிவித்தார். "அல்லாஹ்வின் தூதர் என்னை அனுப்பி வைத்தார்கள். உங்களின் இந்தப் பெண்ணை எனக்கு மணமுடித்துத் தருவீர்களாம்" என்று அந்தக் குறிப்பிட்ட பெண்ணின் பெயரைத் தெரிவித்தார்."அந்தப் பெண்ணையா!?" என்று அவர்கள் ஆச்சரியமாகக் கேட்க, "ஆம்" என்றார் ரபீஆ."அல்லாஹ்வின் தூதர் எங்களது வீட்டில் சிறப்பு விருந்தினராய் வரவேற்கப்படுபவர். அதேபோல்தான் அல்லாஹ்வின் தூதரின் தூதரும். அல்லாஹ்வின் மீது ஆணையாக, இந்தத் தூதர் ஏமாற்றத்துடன் திருப்பி அனுப்பப்பட மாட்டார்என்று உற்சாகப்பட்ட அந்தக் குடும்பத்தினர் உடனே அந்தக் குறிப்பிட்ட பெண்ணை இவரது மனைவியாக்கி, திருமண உடன்படிக்கை எழுதிவிட்டனர். இருந்தாலும் மனைவியாகி வரும் பெண்ணுக்கு எப்படி உணவளிப்பது என்றுதான் கவலைப்படுகிறார்.

வேகமாக நபியவர்களிடம் திரும்பிய ரபீஆ, "அல்லாஹ்வின் தூதரே! ஒரு மிகச் சிறந்த குடும்பத்தைக் கண்டுவிட்டுத் திரும்பி வந்திருக்கிறேன். என்னை நம்பினார்கள், அன்பொழுக வரவேற்றார்கள், அவர்கள் வீட்டுப் பெண்ணை எனக்கு மணமுடிக்க உடனே திருமண உடன்படிக்கையும் எழுதித் தந்து விட்டார்கள். நான் இப்பொழுது மணக்கொடை பணத்திற்கு என்ன செய்வேன்?" என்றார்.

புரைதா இப்னுல் ஹஸிப் என்பார் பனூ அஸ்லம் எனும் கோத்திரத்தின் தலைவர். ரபீஆவும் அஸ்லமீதான். அந்த புரைதாவை வரவழைத்தார்கள் முஹம்மது நபி. அவர் வந்து சேர்ந்தார்."புரைதா! ரபீஆவிற்குத் திருமணம் செய்ய வேண்டும். தயவுசெய்து ஒரு பேரீச்சம்பழ விதை அளவிற்கான தங்கம் ஏற்பாடு செய்து கொடு" என்று தெரிவித்தார்கள்.அப்படியே ஆகட்டும் என்று அவரும் ஏற்பாடு செய்து கொண்டு வந்து கொடுத்தார். நபியவர்கள் அதை ரபீஆவிடம் கொடுத்து, "இதை அவர்களிடம் எடுத்துச் செல். அவர்களின் மகளுக்கு இது நீ தரும் மஹர்-மணக்கொடை என்று ஒப்படை".வாங்கிக் கொண்டு அவர்களிடம் சென்றார் ரபீஆ. அந்தப் பேரீச்சம்பழ விதை அளவிற்கான தங்கத்தைக் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்ட அவர்களோ அகமகிழ்ந்தார்கள். "இருந்தாலும் ரொம்ப அதிகம் இது. தவிரவும் தரமான தங்கமாகவும் தோன்றுகிறதே"

நபிகளாரிடம் திரும்பி வந்த ரபீஆ கூறினார். "இத்தகைய பெருந்தன்மையான குடும்பத்தை நான் சந்தித்ததே இல்லை. ஏதோ தேற்றி எடுத்துப் போய்க் கொடுத்த அந்த மிகச் சிறிய அளவு தங்கத்தை அவர்கள் அப்படி சிலாகிக்கிறார்கள். மிகவும் அதிகமாம். தரமான தங்கமாம். அது இருக்கட்டும். இப்பொழுது எனக்கு அடுத்த கவலை வந்து விட்டது. எப்படி நான் திருமண விருந்து அளிக்கப் போகிறேன் அல்லாஹ்வின் தூதரே?"

மீண்டும் புரைதாவிடம் பேசினார்கள் நபியவர்கள். பணம் ஏற்பாடு செய்தார் புரைதா. பிறகு அதைக் கொண்டு ஒரு நல்ல கொழுத்த செம்மறியாட்டுக்கடா ஒன்றை வாங்கி வந்தார் ரபீஆ. பிறகு நபியவர்கள் அவரிடம் கூறினார்கள்: "ஆயிஷாவிடம் சென்று வீட்டில் எவ்வளவு வாற்கோதுமை இருக்கிறதோ கேட்டு வாங்கி வா"அதன்படி அவர் ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அம்மையாரிடம் செல்ல, அவர்கள், "அந்தக் கூடையில் ஏழு சாஉ(படி) வாற்கோதுமை இருக்கிறது, எடுத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக, இதைத் தவிர உமக்கு அளிக்கும் வகையில் வீட்டில் வேறு எதுவும் உணவு இல்லை" என்றார்.

ஒரு சாஉ என்பது தோராயமாய் இரண்டு கிலோ 350 கிராம். ஆக மாப்பிள்ளை ரபீஆ கிடாவையும் பதினாறேகால் கிலோ வாற்கோதுமையும் எடுத்துக் கொண்டு மணப்பெண் வீட்டிற்கு உற்சாகமாய்ச் சென்றார். அவர்கள், "கோதுமையைக் கொடுங்கள், நாங்கள் வேண்டுமானால் ரொட்டி சுட்டுத் தருகிறோம். ஆனால் நீங்கள்தான் ஆட்டை அறுத்து இறைச்சி எடுத்துக் கொண்டு வரவேண்டும்" என்றார்கள். ரபீஆவும் அவர் கோத்திரத்தின் உறவினர்கள் சிலரும் சென்று ஆட்டை அறுத்து, இறைச்சி சமைத்து எடுத்துவர, விருந்தொன்று பிரமாதமாய் தயாரானது. அளவற்ற நெகிழ்ச்சி ஏற்பட்டது ரபீஆவிற்கு. (முஸ்தத்ரக் ஹாகிம் : 2/526)

வறுமையை காரணம் காட்டி இயலாமையை காரணம் காட்டி மண வாழ்வை விட்டும் தங்களை தூரப்படுத்திக் கொண்ட எண்ணற்ற ஸஹாபாக்கள் ஒரு கட்டத்தில் மணமுடித்து குடும்பமாக மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தினார்கள் என்றால் அதற்குக் காரணம் மண வாழ்க்கை குறித்து குடும்ப வாழ்க்கை குறித்து நபி அவர்கள் ஏற்படுத்திய இந்த விழிப்புணர்வும் வலியுறுத்தலும் தான்.

دخل على رسولِ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم رجلٌ يقالُ له عَكَّافُ بنُ بشرِ التَّميميِّ فقال له رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم يا عَكَّافُ هل لَّكَ مِنْ زوْجَةٍ قال لَا قال وَلَا جَارِيَةٍ قال لا قال وأنتَ موسِرٌ بخيرٍ قال وأَنَا موسِرٌ بخيرٍ قال أنتَ إِذَنْ مِنْ إخوانِ الشياطينِ لو كنتَ منَ النصارى كنتَ من رهبانِهم وإنَّ سُنَّتنَا النكاحُ شرارُكم عُزَّابُكُمْ وأراذِلُ مَوْتَاكُمْ عُزَّابُكُمْ أبالشَّيَاطِينِ تَمَرَّسُونَ ما للشياطينِ سلاحٌ أبلَغُ في الصالحينَ منَ النساءِ إلَّا المتزوِّجينَ أُولئِكَ المطهَّرُونَ المبَرَّؤُونَ مِنْ الخَنَا ويْحَكَ يِا عِكَافُ إنَّهُنَّ صوَاحِبُ أيوبَ وداودَ ويوسفَ وكُرْسُفَ قال له بِشْرُ بنُ عطيةَ من كرسُفُ يا رسولَ اللهِ قال رجلٌ كان يعبدُ اللهَ بساحلٍ من سواحلِ البحرِ ثلاثَمِائَةِ عامٍ يصومُ النهارَ ويقومُ الليلَ ثمَّ إنَّهُ كَفَرَ باللهِ العظيمِ في سببِ امرأةٍ عشَقَهَا وتَرَكَ ما كان عليه مِنْ عبادةِ اللهِ عزَّ وجلَّ ثم استدْرَكَهُ اللهُ عزَّ وجلَّ بِبَعْضِ مَا كان منه فَتَابَ عَلَيْهِ وَيْحَكَ يَا عَكَّافُ تَزَوَّجْ وَإِلَّا فأنتَ من الْمُذَبْذَبِينَ قال زَوِّجْنِي يَا رسولَ اللهِ قال زَوَّجْتُكَ كَريمةَ بنتَ كلثومٍ الْحِمْيَرِيِّ .
அக்காஃப் என்ற நபித்தோழர் நபியிடம் வந்தார்கள்.அவரிடம் உனக்கு மனைவி இருக்கிறாளா என்று நபி அவர்கள் கேட்டார்கள். அதற்கவர் இல்லை என்றார். உனக்கு அடிமைப்பெண் இருக்கிறாளா என்று கேட்க இல்லை என்றார். உனக்கு வசதி இருக்கிறதா என்று கேட்க ஆம் என்றார். அப்படியானால் அக்காஃபே! நீர் ஷைத்தானுடைய சகோதரர். கிருத்தவ மதத்தில் இருந்திருந்தால் அவர்களில் ஒரு துறவியாக இருந்திருப்பீர். திருமணம் செய்வது தான் நம்முடைய நெறிமுறை. உங்களில் மோசமானவர்கள் பிரமச்சாரிகள் தான். இறந்தவர்களில் கேவலமானவர்களும் பிரமச்சாரிகள் தான். ஷைத்தானிய செயல்களில் ஈடுபடுகிறீர்கள்? ஷைத்தானிடத்தில் திருமணமானவர்களைத் தவிர நல்லடியார்களுக்கெதிராக பெண்களை விட காரியமாகக்கூடிய ஆயுதம் வேறெதுவும் கிடையாது. மணமுடித்தவர்களே பரிசுத்தவான்கள். (அவர்கள் தான்) அருவருப்பான பேச்சுக்களை விட்டும் விலகியிருப்பார்கள்.... இது போன்ற கடுமையான எச்சரிக்கைகளைக் கேட்ட அக்காஃப் (ரலி) அவர்கள் உடனடியாக அங்கேயே திருமணமும் முடித்துக் கொண்டார்கள். (முஸ்னத் அஹ்மத் : 5/164)

இஸ்லாம் திருமணத்தை ஆர்வப்படுத்தியிருப்பதைப் போல அதை வலியுறுத்தியிருப்பதைப் போல உலகத்தில் வேறு எந்த சமூகமும் வேறு எந்த சமயமும் இந்தளவு வலியுறுத்தியிருக்க முடியாது,

நாம் இங்கே இன்னொரு விஷயத்தை புரிந்து கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம். பெண் பிள்ளைகள் திருமண வயதை அடைந்து விட்டால் உடனே திருமணம் செய்து கொடுப்பதில் அவசரம் காட்ட வேண்டிய அதே நேரத்தில் மணமகனை தேர்வு செய்வதில் நம் பிள்ளைகளுக்கான வாழ்க்கைத் துணையை தேர்வு செய்வதில் நிதானம் தேவை, பொறுமை தேவை. சீக்கிரம் கல்யாணம் பன்னி வைக்கனுங்குறதுக்காக எதையும் விசாரிக்காமல் எடுத்தோம் கவுத்தோம் என்று யாரோ ஒருவனுக்கு மணமுடித்து வைத்து விடக்கூடாது. அதில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.

இன்றைக்கு எல்லா விஷயங்களுக்கும் QUALIFICATION இருக்கிற மாதிரி தகுதி இருக்கிற மாதிரி மணமகனுக்கும் ஒரு சில தகுதிகள் உண்டு.அந்த தகுதிகள் இருந்தால் தான் அவனை நம் மருமகனாக தேர்வு செய்ய வேண்டும்.

إذا جاءكُم من ترضونَ دينَهُ وخلُقهُ فأنْكحوهُ ، إلا تفعلوا تكن فِتنةٌ في الأرض وفسادٌ . قالوا : يا رسولَ اللهِ ! وإن كانَ فيهِ ؟ قال : إذا جاءكُم من ترضونَ دينهِ وخُلقهُ فأنْكحوهُ . ثلاث مرات .
யாருடைய மார்க்கத்தையும் குணத்தையும் நீங்கள் பொருந்திக் கொள்வீர்களோ அத்தகைய நபர் உங்களிடம் வந்தால் அவருக்கு (உங்கள் பெண்ணை) மணமுடித்து வைய்யுங்கள்.அவ்வாறு செய்ய வில்லையெனில் பூமியில் குழப்பம் நிகழும். (திர்மிதி : 1085)

ஒரு மணமகனிடத்தில் மிக மிகப் பிரதானமாக பார்க்கப்பட வேண்டிய விஷயம் மார்க்கமும் குணமும் தான்.ஆனால் நாம் என்ன பார்க்கிறோம். பையன் நல்ல படிச்சிருக்கானா நல்ல வேலைல இருக்கானா கை நிறைய சம்பாதிக்கிறானா நல்ல அந்தஸ்துல இருக்கானா நல்ல இலட்சணமா இருக்கிறானா என்று தான் பாரக்கிறோமே தவிர மார்க்கம் இருக்கிறதா குணம் இருக்கிறதா என்று பார்ப்பதில்லை. இப்படி பணம் மட்டுமே முக்கியமாக பார்க்கப்படுகிற காரணத்தினால் தான் நம் பிள்ளைகள் செல்லும் இடங்களில் நிறைய பணம் இருக்கிறது.ஆனால் கணவன் மனைவிக்கு மத்தியில் ஒற்றுமை இருப்பதில்லை. சீக்கிரமே அவர்களுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிவினையில் போய் முடிந்து விடுகிறது.

திருமணத்தில் மிக முக்கியமாக மார்க்கம் பார்க்கப்பட வேண்டும் குணம் பார்க்கப்பட வேண்டும்,இறையச்சம் பார்க்கப்பட வேண்டும்.
قال رجل لِلْحَسَنِ : إِنَّ عِنْدِي ابْنَةً لِي وَقَدْ خُطِبَتْ إِلَيَّ فَمَنْ أُزَوِّجُهَا ؟ قَالَ : " زَوِّجْهَا مَنْ يَخَافُ اللَّهَ ، فَإِنْ أَحَبَّهَا أَكْرَمَهَا ، وَإِنْ أَبْغَضَهَا لَمْ يَظْلِمْهَا
ஹஸன் ரஹ் அவர்களிடம் ஒருவர் வந்து என் மகளை பெண் கேட்டு வருகிறார்கள். நான் யாருக்கு மணமுடித்து வைக்க வேண்டும் என்று கேட்டார். இறையச்சமுள்ளவருக்கு மணமுடித்து வை. ஏனென்றால் அவர் அவளை நேசித்தால் அவளுக்கு சங்கை செய்வார். இல்லையென்றால் அவளுக்கு அநீதி செய்ய மாட்டார் என்றார்கள்.

நபி அவர்கள் காலத்து பெண்கள் அன்றைக்கு மார்க்கத்தையும் குணத்தையும் பார்த்துத்தான் தங்களது வாழ்க்கைத்துணையைத் தேர்வு செய்தார்கள்.அரபு நாட்டில் அன்றைக்கு வாழ்ந்த கோத்திரங்களில் ஆக உயர்ந்த கோத்திரம் ஆக மேலான கோத்திரம் குரைஷிக் கோத்திரம்.அந்தக் கோத்திரத்தில் பெண் கிடைக்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டம். ஆனால் அவ்வளவு உயர்ந்த கோத்திரத்துப் பெண்கள் தங்களுக்கான வாழ்க்கைத் துணையை தேர்வு செய்வதற்கு அவர்கள் பார்த்தது குணத்தைத்தான்.ஹள்ரத் பிலால் ரலி அவர்களோடு வாழ்ந்த மூன்று மனைவிமார்களும் குரைஷி குலத்தைச் சார்ந்தவர்கள். பிலால் ரலி அவர்கள் கருப்பினத்தைச் சார்ந்தவர்,ஒரு காலத்தில் அடிமையாக இருந்தவர், எனவே அவர்களிடம் அழகு இல்லை,பணம் இல்லை, அந்தஸ்து இல்லை.இருந்தாலும் அவர்களிடம் இருந்த மார்க்கப்பற்றையும் நற்குணத்தையும் இறை யச்சத்தையும் பார்த்து குரைஷிகள் அவர்களை தங்கள் மருமகன்களாக தேர்வு செய்து கொண்டார்கள்.

அரபுலகத்தின் மிகப்பெரிய செல்வச்சீமாட்டியாகவும் மிகப்பெரும் வணிகராகவும் தொழிலதிபராகவும் வலம் வந்த அன்னை கதீஜா ரலி அவர்கள்  அருமை நாயகம் அவர்களை தங்கள் கணவராக தேர்வு செய்ததற்கு காரணம் நபி அவர்களிடம் இருந்த நற்குணம் தான்.அருமை நாயகம் அவர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை மணம் முடித்துக் கொடுப்பதற்கு ஹள்ரத் உஸ்மான் ரலி ஹள்ரத் அலி  ஆஸிப்னு வாயில் அவர்களை தேர்வு செய்ததும் அவர்களிடம் இருந்த குணங்களையும் இறையச்சத்தையும்  பார்த்துத்தான்.

எனவே நம் பெண் பிள்ளைகளை மணமுடித்து வைப்பதில் அவசரம் காட்டுகின்ற அதே நேரத்தில் அவர்களுக்கான வாழ்க்கைத்துணையை தேர்வு செய்வதில் நாம் நிதானமாக செயல்பட வேண்டும்.மட்டுமல்ல வாழ்க்கையில் நிதானமாக செயல்படக்கூடியவர்களைத் தான் நம் மருமகன்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
 

No comments:

Post a Comment