Monday, June 29, 2020

இஸ்லாத்தின் பார்வையில் விரைவாக செய்ய வேண்டிய காரியம் 3 ; விருந்தோம்பல்



வாழ்க்கையில்  எந்தக் காரியத்தை செய்தாலும் எந்தக் காரியத்தை செய்வதாக இருந்தாலும் அது உலகம் சார்ந்த காரியமாக இருந்தாலும் மறுமையை நோக்கமாகக் கொண்ட காரியமாக இருந்தாலும் அதிலே நின்று நிதானமாக அமைதியாக பக்குவமாக பொறுமையாக யோசித்து, செய்யலாமா? வேண்டாமா? அது நன்மையா? தீமையா? நமக்கு அது தேவையா? தேவை இல்லையா? என்று தீர்க்கமாக முடிவு செய்து அதற்குப் பிறகு தான் செய்ய வேண்டும். அந்த நிதானமும் பொறுமையும் தான் அந்த காரியத்தில் நமக்கு வெற்றியைப் பெற்றுத்தரும்.



வாழ்க்கையில் எந்த DECISION எடுப்பதாக இருந்தாலும் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் அதிலே நிதானத்தைக் கையாள வேண்டும். ஒருவேளை நிதானமாக யோசித்தும் அதற்கான தீர்வு கிடைக்க வில்லையென்றால் நம்மை விட அறிவிலும் அனுபவத்திலும் உயர்ந்தவர்களிடம் அது குறித்து மஷ்வரா செய்ய வேண்டும். அதிலும் தீர்வு கிடைக்காத போது அல்லாஹ்விடம் இரண்டு ரக்கஅத் தொழுது இஸ்திகாரா செய்ய வேண்டும். இது தான் வாழ்க்கையில் ஒரு காரியத்தை செய்வதற்கு இஸ்லாம் காட்டித்தந்த அழகிய வழிகாட்டுதல்.

அவசரமாக ஒரு காரியத்தை செய்கிற போது அல்லது முடிவெடுக்கிற போது அது நமக்கு எண்ணற்ற விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

أنَّ النَّبيَّ صلَّى اللَّهُ علَيهِ وسلَّمَ عادَ رجلًا قد جُهِدَ حتَّى صارَ مثلَ فَرخٍ فقالَ لهُ أما كُنتَ تدعو أما كُنتَ تسألُ ربَّكَ العافيةَ قال كُنتُ أقولُ اللَّهمَّ ما كُنتَ مُعاقبي بهِ في الآخرةِ فعجِّلهُ لي في الدُّنيا فقالَ النَّبيُّ صلَّى اللَّهُ علَيهِ وسلَّمَ سُبحانَ اللَّهِ إنَّكَ لا تطيقُهُ أو لا تستَطيعُهُ أفلا كنتَ تقول اللَّهمَّ آتِنا في الدُّنيا حَسنةً وفي الآخرةِ حَسنةً وقِنا عَذابَ النَّارِ .
குஞ்சைப் போன்று மாறும் அளவுக்கு மிகவும் நோய் வாய்ப்பட்ட ஒரு நபித்தோழரை நபி அவர்கள் சந்திக்க சென்றார்கள்.நீ இறைவனிடத்தில் எதுவும் துஆ செய்தாயா என்று கேட்டார்கள். ஆம், என்னை மறுமையில் தண்டிப்பதாக இருந்தால் அந்த தண்டனையை உலகத்திலேயே கொடுத்து விடு என்று கேட்டேன் என்றார். அதைக் கேட்டு ஆச்சரியமடைந்த நபி அவர்கள் அப்படி தந்து விட்டால் உன்னால் அதை தாங்க முடியாது. அப்படி கேட்க வேண்டாம். உலகத்திலும் மறுமையிலும் நல்வாழ்க்கையை கொடு என்று கேட்டிருக்கலாமே என்று சொன்னார்கள். (திர்மிதி : 3487) 

எதிலும் அவசரம் கூடாது. அல்லாஹ்விடம் நமக்கான கோரிக்கையை முன் வைக்கிற போது அதிலும் கூட நிதானம் தேவை என்பதை இந்த நிகழ்வு நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

இஸ்லாம் அவசரம் கூடாது என்று சொன்ன அதே நேரத்தில் சில காரியங்களை விரைவாகச் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. அந்த காரியங்களை மட்டும் பிரத்யேகமாக பிற்படுத்தாமல் தாமதிக்காமல் பிறகு செய்யலாம் பிறகு பாத்துக் கொள்ளலாம் நாளைக்கு செய்யலாம் என்று  தள்ளிப் போடாமல் அதை விரைவாக செய்ய வேண்டும் என்று சில காரியங்களை இஸ்லாம் கோடிட்டுக் காட்டியிருக்கிறது. அதில் ஒன்று اكرام الضيوف விருந்தாளிகளை உபசரித்தல். 

வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்தால் அவருக்கு என்னன்ன தேவை என்று பார்த்து உடனே செய்து கொடுக்க வேண்டும்.ரொம்ப நேரம் TRAVEL செய்து வந்ததினால் கலைப்பாக இருக்கலாம், ரொம்ப பசியாக இருக்கலாம், ரொம்ப தாகமாக இருக்கலாம், பாத்ரூம் போக வேண்டிய தேவை இருக்கலாம்.இப்படி எத்தனையோ சொல்ல முடிந்த, சொல்ல முடியாத எண்ணற்ற தேவைகளை தன் உள்ளத்தில் அவர் சுமந்திருக்கலாம்.அதனால் அவருக்கு இந்த நேரத்தில் என்ன தேவை என்ன அவசியம் அவர் இப்போது எதை எதிர் பார்ப்பார் என்று நாமாக யூகித்து அல்லது அவரிடத்தில் கேட்டு அவருக்கான காரியங்களை தாமதப்படுத்தாமல் உடனே செய்து கொடுக்க வேண்டும். இதற்குப் பெயர் தான் விருந்தாளிகளை உபசரித்தல்.

ஆனால் இன்றைக்கு நம் வீடுகளில் என்ன நடக்கிறது? வீட்டுக்கு வந்தவரிடம் உட்கார்ந்து மணிக்கணக்காக பேசுவது, வீட்ல எல்லாரும் எப்டி இருக்காங்க, உங்க வீட்டம்மா எப்டி இருக்காங்க,உங்க பிள்ளைங்க எப்டி இருக்காங்க, உங்க ஊர் எப்டி இருக்குது,உங்க ஜமாஅத் எப்டி இருக்குது,உங்க வியாபாரம்லாம் எப்டி போகுது, இப்டி ஒவ்வொன்னா கேட்டு அப்புறம் நாட்டு நடப்பு அரசியல் என்று மணிக்கணக்காக பேசி கடைசியில் அவர் ஏண்டா இங்க வந்தோம் வராமயே இருந்திருக்கலாமே என்று நினைக்கிற அளவுக்கு அல்லது அன்னைக்கே கிளம்புற அளவுக்கு கொண்டு போய் விட்டு விடுவோம்.

இன்னும் சில பேர் இதில் ரொம்ப வித்தியாசமாக இருப்பார்கள், அவர் பயணத்தில் சாப்பிடாமல் பசியாக வந்திருப்பாரு, ஆனா அவரிடம் வர்ர வழியில எங்கேயோ நல்ல சாப்பிட்டு வந்திட்டீங்க போல என்று கேட்பது, அவரு இங்க தங்கலான்னு வந்திருப்பாரு, ஆனால் அவரிடம், தங்குறதுக்கு லாட்ஜ் எங்கேயும் புக் பன்னிட்டீங்க போல என்று கேட்பது, அப்பத்தான் வந்து இறங்கிருப்பாரு, என்ன ரிட்டன் டிக்கட்லாம் போட்டாச்சா? நான் எதுவும் போட்டு தரனுமா? நம்ம ஃபிரண்ட் டிராவல்ஸ் தான் வச்சிருக்காரு, வேணும்ணா சொலுங்க, டிக்கட் போடச் சொல்றேன் என்று சொல்வது, வீட்டுக்கு வந்தவரிடம் இப்படியெல்லாம் சொன்னால் அவருக்கு எப்படி அங்க இருக்க வேண்டும் என்று மனசு வரும், திருப்பி எப்படி அங்க வர வேண்டும் மனசு வரும். 

விருந்தாளிகளை உபசரிப்பதும் அவர்களை கண்ணியப்படுத்துவதும் இஸ்லாம் போற்றி பாராட்டுகின்ற மிக உயர்ந்த பண்புகளில் ஒன்று. இறைத்தூதர்கள் அத்தனை பேரிடத்திலும் காணப்பட்ட மிக அழகிய குணங்களில் ஒன்று. நமக்கிடையே  சகோதரத்துவம் மென்மேலும் வளர்ச்சியடைவதற்கும் நமக்கு மத்தியில் நட்புறவு நீடிப்பதற்கும் நமது உறவுப் பாலங்கள் விரிசல் அடையாமல் பாதுகாப்பதற்கும் நம்மிடையே விருந்தோம்பல் என்ற பண்பு நிச்சயம் இடம் பெற வேண்டும்.

விருந்தினரை உபசரிப்பது, அது நல்ல பண்பு நல்ல குணம் என்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் அதை இறை நம்பிக்கையின் ஒரு அங்கமாக இஸ்லாம் சித்தரிக்கிறது.

مَن كان يُؤْمن بالله واليوم الآخر فلْيُكرم ضَيْفه
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் விருந்தாளிகளை உபசரிக்கட்டும். (முஸ்லிம் : 47)

நம் ஈமான் உறுதியானது என்பதற்கும் நாம் உண்மையான முஃமின்கள் என்பதற்கும் அடையாளம் விருந்தாளிகளை உபசரிப்பதும், அவர்களை கண்ணியப்படுத்துவதும் தான்.

هَلْ أَتَاكَ حَدِيثُ ضَيْفِ إِبْرَاهِيمَ الْمُكْرَمِينَ

ஹள்ரத் இப்ராஹீம் அலை அவர்களது வரலாறை அல்லாஹ் குர்ஆனில் பதிவு செய்திருக்கிறான். ஒரு நாள் அல்லாஹுத்தஆலா சில மலக்குமார் களை ஹள்ரத் இப்ராஹீம் அலை அவர்களிடத்தில், உங்களுக்கு மகன் பிறக்கப் போகிறான் என்று சுபச்செய்தி சொல்வதற்காக அனுப்பி வைத்தான். அவர்கள் மனித தோற்றத்தில் வந்தார்கள். ஹள்ரத் இப்ராஹீம் அலை அவர்களுக்கு வந்தவர்கள் யாரென்று தெரியாது, முன்ன பின்ன அவர்களைப் பார்த்ததில்லை, முன்பின் அறிமுகம் இல்லா விட்டாலும் வந்தவர்கள் விருந்தாளிகள் என்பதால் அவர்களை ஸலாம் சொல்லி வரவேற்று அவர்களை கண்ணியப்படுத்தி ஒரு கன்றை அறுத்து உணவு சமைத்து அவர்களுக்கு பரிமாறுவதற்காக  அவர்களுக்கு முன்னால் கொண்டு வந்து வைத்தார்கள்.அப்போது தான் மனிதத் தோற்றத்தில் வந்த மலக்குகள் நாங்கள் மனிதர்களல்ல,அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட மலக்குகள் என்று சொன்னார்கள்.

விருந்தாளிகள் குறித்தும் விருந்தாளிகளை எப்படி கண்ணியப்படுத்த வேண்டும் என்பது குறித்தும் பல்வேறு பாடங்களை அல்லாஹுத்தஆலா இந்த நிகழ்வின் வழியே உலகத்திற்கு சொல்லி விட்டான்.

வந்தவர்களை ஸலாம் சொல்லி வரவேற்க வேண்டும்,அவர்களை கண்ணியத்தோடு அமர வைக்க வேண்டும், சற்றும் தாமதிக்காமல் அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்ய வேண்டும். அதுவும் நமக்கு மிகவும் பிடித்தமான உணவாக இருக்க வேண்டும், நம் குடும்பத்தில் ஒருவரையோ நம் பணியாளர்களையோ ஏவாமல் நாமே முன் நின்று அவர்களுக்கு பரிமாற வேண்டும்.فقربه اليهم  என்று வருகிறது.

இன்றைக்கு நாம் என்ன செய்வோம் என்றால், நம்மைப் பார்ப்பதற்கு யாராவது விருந்தாளிகள் வந்தால் நம்ம வீட்டில் உள்ளவர்களிடமோ அல்லது நம்மிடம் வேலை செய்கின்ற பணியாளர்களிடமோ இவர்களை கவனித்துக் கொள்ளுங்கள், அவர்களுக்கு தேவையானதை வாங்கிக் கொடுங்க என்று சொல்லி விட்டு, நாம நம்ம வேலையை பார்க்க போய் விடுவோம். இது விருந்தாளிகளை உபசரிக்கும் பண்பல்ல, நம்ம விருந்தாளியை நாமே கவனிக்க வேண்டும், அவர்களுக்கு தேவையானதை நாமே முன்னிருந்து செய்ய வேண்டும்.

இமாம் ஷாபி ரஹ் அவர்கள், இமாம் மாலிக் ரஹ் அவர்களின் வீட்டிற்கு விருந்தினராக சென்றார்கள். அப்போது அவருக்கான அனைத்து பணிவிடைகளையும் இமாம் மாலிக் அவர்களே செய்தார்கள்.

இப்படி விருந்தாளிகளை உபசரிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் என்று இஸ்லாம் நமக்கு ஒரு சில விஷயங்களை வரையறுத்துச் சொல்கிறது,அவை அத்தனையையும் ஹள்ரத் இப்ராஹீம் அலை அவர்கள் செய்தார்கள்.தாடி வளர்த்தல் மீசையை கத்தரித்தல், கத்னா செய்தல், உள்ஹிய்யா கொடுத்தல் போன்ற நம் வாழ்வில் நாம் செய்கிற பல்வேறு நல்ல காரியங்களுக்கு அடிப்படையாகவும் முன் உதாரணமாகவும் இருப்பதைப் போன்றே விருந்தோம்பல் என்ற பண்பிலும்  ஹள்ரத் இப்ராஹீம் அலை அவர்கள் முன்னுதாரணமாக இருக்கிறார்கள்.

وقال النبي صلى الله عليه وسلم: كان أوَّلَ من أضاف الضيفَ إبراهيمُ
உலகில் முதன்முதலாக விருந்தாளிகளை உபசரித்தது இப்ராஹீம் நபியாகும். (ஸஹீஹுல் ஜாமிவு : 4451)

விருந்தோம்பல் என்றால் என்ன விருந்தோம்பல் எப்படி செய்ய வேண்டும்,விருந்தாளிகளை எப்படி கண்ணியப்படுத்த வேண்டும் என்று உலகிற்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் ஹள்ரத் இப்ராஹீம் அலை அவர்கள் தான். அதனால் தான் அல்லாஹுத்தஆலா அந்த வரலாற்றை குர்ஆனின் பல்வேறு இடங்களில் சிலாகித்துக் கூறுகிறான்.

எனவே விருந்தினர்களை உபசரிக்கிற பண்பு நபிமார்கள், நல்லோர்கள், இறைநேசர்கள் அத்தனை பேரின் உயர்ந்த பண்பாக இருந்திருக்கிறது என்பதை நாம் விளங்க வேண்டும்.

நபி அவர்கள் தன்னுடைய 40 வது வயதில் அல்லாஹ்விடமிருந்து வஹியைக் கொண்டு வந்த ஜிப்ரயீலை அலை அவர்களை முதன்முதலாகப் பார்த்து அதிர்ச்சியில் உரைந்து போய் பயத்தில் நடுங்கியவர்களாக வேர்த்து விருவிருத்து உம்முல் முஃமினீன் அன்னை ஆயிஷா ரலி அவர்களிடம் வந்த போது நபி அவர்களை பக்கத்தில் அமர வைத்து ஆரத்தழுவி அன்னை ஆயிஷா ரலி அவர்கள் சொன்ன வார்த்தைகளை நாம் இங்கே கவனிக்க வேண்டும்.

فَقَالَتْ خَدِيجَةُ كَلَّا وَاللَّهِ مَا يُخْزِيكَ اللَّهُ أَبَدًا إِنَّكَ لَتَصِلُ الرَّحِمَ وَتَحْمِلُ الْكَلَّ وَتَكْسِبُ الْمَعْدُومَ وَتَقْرِي الضَّيْفَ وَتُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقّ
கதீஜா (ரலி) அவர்கள், “அப்படியொன்றும் ஆகாது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான்; (ஏனெனில்) தாங்கள் உறவுகளைப் பேணி நடந்து கொள்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள்; வறியவர்களுக்காகப் பாடுபடுகிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; சத்திய சோதனையில் ஆட்பட்டோருக்கு உதவி செய்கிறீர்கள் (அதனால் நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை)என்று (ஆறுதல்) சொன்னார்கள்.(புகாரி : 3)

இங்கே நமக்கு இரண்டு விஷயங்கள் தெளிவாகிறது. 1, விருந்தோம்பல் என்ற பண்பு நபி அவர்களின் இயற்கைக் குணமாக இருந்தது. 2, அந்த பண்பு யாரியத்தில் இருக்கிறதோ அவருக்கு அல்லாஹ்விடத்தில் மட்டுமல்ல இந்த உலகத்திலும் உயர்ந்த இடமும் அந்தஸ்தும் உண்டு.அவரை நிச்சயம் அல்லாஹ் உயர்த்தி விடுவான்.தன் வாழ்வில் தோற்றுப் போகும் நிலை தலைகுனியும் நிலை நிச்சயம் ஏற்படாது என்பது இங்கே நமக்கு புரிகிறது.

எனவே விருந்தோம்பல் என்பது சாதாரண பண்பல்ல.உலகத்தில் உயர்ந்தவர்கள் அத்தனை பேரிடத்திலும் இருந்த மிக மேலான குணம்.

أنَّ عائشةَ زوجَ النَّبيِّ صلَّى اللهُ عليهِ وسلَّمَ قالت لم أعقِلْ أبويَّ قطُّ إلا وهما يَدِينانِ الدِّينَ ، ولم يمُرَّ علينا يومٌ إلا أتينا فيه رسولُ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّمَ طرَفَي النهارِ بُكرةً وعشِيَّةً ، فلما ابتُلِيَ المسلمونَ ، خرج أبو بكرٍ مُهاجرًا نحو أرضِ الحبشةِ حتى إذا بلغ برْكَ الغَمادِ لقِيَه ابنُ الدَّغِنَةَ وهو سيِّدُ القارَةِ قال : أين تريدُ يا أبا بكرٍ ؟ قال أبو بكرٍ : أَخْرَجَني قومي ، فأريدُ أن أسيحَ في الأرضِ ، وأعبدُ ربي ، قال ابنُ الدَّغِنَةَ : فإنَّ مثلَك – يا أبا بكرٍ – لا يخرجُ ، ولا يخرجُ ، أنت تَكسِبُ المُعدَمَ ، وتَصِلُ الرَّحِمَ ، وتَحمِلُ الكَلَّ ، وتُقرِي الضَّيفَ ، وتُعينُ على نوائبِ الحقِّ ، فأنا لك جارٌ . ارجِعْ واعبُدْ ربَّك ببلدِك ، فرجع ، وارتحل معه ابنُ الدَّغِنَةَ ، فطاف ابنُ الدَّغِنةَ عشيَّةً في أشرافِ قريشٍ ، فقال لهم : إنَّ أبا بكرٍ لا يُخرَجُ مثله ، ولا يَخرُجُ ، أَتُخرِجونَ رجُلًا يُكسبُ المُعدَمَ ، ويَصِلُ الرَّحِمَ ، ويَحمِلُ الكَلَّ ، ويُقرِي الضَّيفَ ، ويعينُ على نوائبِ الحقِّ . فلم تَكذِبْ قريشٌ بجوارِ ابنِ الدَّغِنَةَ ، وقالوا لابنِ الدَّغِنَةَ : مُرْ أبا بكرٍ ، فلْيعبُدْ ربَّه في دارِه ، فلْيُصلِّ فيها ، وليقرأْ ما شاء
முஸ்லிம்கள் (எதிரிகளின் கொடுமைகளால்) சோதனைக்குள்ளாக் கப்பட்ட போது, அபூபக்கர் (ரலி) அவர்கள் தாயகம் துறந்து அபி சீனியாவை நோக்கி சென்றார்கள். பர்குல் ஃகிமாத்எனும் இடத்தை அவர்கள் அடைந்த போது அப்பகுதியின் தலைவர் இப்னு தஃகினா என்பவர் அவர்களைச் சந்தித்தார். அவர் அவர்களிடம், “எங்கே செல்கிறீர்?” என்று கேட்டார். அபூபக்கர் (ரலி) அவர்கள், என் சமுதாயத்தவர் என்னை வெளியேற்றி விட்டனர்; எனவே, பூமியில் பயணம் (செய்து வேறுபகுதிக்குச்) சென்று என் இறைவனை வணங்கப் போகிறேன்! என்று கூறினார்கள்.
தற்கு இப்னு தஃகினா, “உம்மைப் போன்றவர் வெளியேறவும் கூடாது; வெளியேற்றப்படவும் கூடாது! ஏனெனில், நீங்கள் (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்; உறவுகளைப் பேணி நடந்து கொள்கிறீர்; வறியவர்களுக்காகப் பாடுபடுகிறீர்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்; சத்திய சோதனையில் ஆட்பட்டோருக்கு உதவி செய்கிறீர். எனவே, நான் உமக்கு அடைக்கலம் தருகிறேன்! ஆகவே, திரும்பி உமது ஊருக்குச் சென்று இறைவனை வணங்குவீராக! எனக் கூறினார்.

இப்னு தஃகினா, தம்முடன் அபூபக்கர் (ரலி) அவர்களை அழைத்துக்கொண்டு குறைஷிக் காஃபிர்களின் பிரமுகர்களைச் சந்தித்தார். அவர்களிடம், அபூபக்கரைப் போன்றவர்கள் வெளியேறவும் கூடாது; வெளியேற்றப்படவும் கூடாது! ஏழைகளுக்காக உழைக்கின்ற, உறவினர்களுடன் இணங்கி வாழ்கின்ற; விருந்தினரை உபசரிக்கின்ற, பிறருக்காகச் சிரமங்களைத் தாங்கிக்கொள்கின்ற, துன்பப்படுவர்களுக்கு உதவுகின்ற ஒரு மனிதரை நீங்கள் வெளியேற்றலாமா?’ என்று கேட்டார். ஆகவே, குறைஷியர் இப்னு தஃகினாவின் அடைக்கலத்தை ஏற்று அபூபக்கர் (ரலி) அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தனர்.

மேலும் இப்னு தஃகினாவிடம், “தமது வீட்டில் தம் இறைவனைத் தொழுது வருமாறும், விரும்பியதை ஓதுமாறும், அதனால் எங்களுக்குத் தொந்தரவு இல்லாமல் பார்த்துக் கொள்ளுமாறும், அதை பகிரங்கமாகச் செய்யா திருக்கும்படியும் அபூபக்கருக்கு நீர் கூறுவீராக! ஏனெனில், எங்களுடைய மனைவி மக்களை அவர் குழப்பி (சோதனைக்குள்ளாக்கி) விடுவார் என நாங்கள் அஞ்சுகிறோம்! என்றனர்.

இதை இப்னு தகினா, அபூபக்கர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தார். பிறகு, அபூபக்கர் (ரலி) அவர்கள் வீட்டிற்கு வெளியே தொழுது, ஓதி பகிரங்கப்படுத்தாமல் தமது வீட்டிற்குள்ளேயே தம் இறைவனை வணங்கிக் கொண்டிருந்தார்கள். (புகாரி : 2297)

நபியைப் போலவே நபியின் தோழர்களும் விருந்தோம்பலில் தன்னிகரில்லாவர்களாக விளங்கினார்கள் என்பதை இந்நிகழ்வு நமக்குச் சொல்லும் அதே நேரத்தில் நபி அவர்கள் தன்னைப் போலவே தன் தோழர்களையும் உருவாக்கினார்கள், வார்த்தெடுத்தார்கள் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. நபி அவர்கள் குர்ஆனின் மறு உருவமாக இருந்தார்கள் என்றால் அந்த நபியின் மறு உருவமாக அருமை ஸஹாபாக்கள் திகழ்ந்தார்கள்.

எனவே விருந்தோம்பலை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.இன்றைக்கு நாம், விருந்தாளிகள் வந்தாலே அய்யோ வந்துட்டாங்களே! நிறைய செலவாகுமே! என்று விருந்தாளிகளை பாரமாக நினைக்கிற சமூகாக நாம் இருக்கிறோம். நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். தங்களிடத்தில் வந்த விருந்தாளிகளை கண்ணியப்படுத்தாமல் அவர்களுக்கு செய்ய வேண்டிய விஷயங்களை செய்யாமல் அவர்களை உதாசினப்படுத்திய காரணத்தினால் ஒரு சமூகமே பழிப்பிற்குள்ளானார்கள்,நஷ்டப்பட்டுப் போனார்கள்.

أن أهل تلك القرية لما سمعوا نزول هذه الآية استحيوا ، وجاءوا إلى رسول الله -صلى الله عليه وسلم- بحمل من الذهب وقالوا : يا رسول الله نشتري بهذا الذهب أن تجعل الباء تاء ؛ حتى تصير القراءة هكذا : ( فأتوا أن يضيفوهما ) . أي ( أتوا ) لأن يضيفوهما ، أي كان إتيان أهل تلك القرية إليهما لأجل الضيافة ، وقالوا : غرضنا منه أن يندفع عنا هذا اللؤم فامتنع رسول الله -صلى الله عليه وسلم- وقال : إن تغيير هذه النقطة يوجب دخول الكذب في كلام الله ، وذلك يوجب القدح في الإلهية   تفسير الرازي
ஹழ்ரத் கிழ்ர் அலை, ஹள்ரத் மூஸா நபி வரலாற்றில் அவர்கள் இருவரும் ஒரு கிராமத்திற்கு சென்று உணவு கேட்பார்கள். அவர்கள் உணவளிக்க மறுத்து விடுவார்கள். அதை அல்லாஹ் கஹ்ஃப் சூராவில், அவர்கள் இருவருக்கும் அவர்கள் உணவளிக்க மறுத்து விட்டனர் என்று பதிவு செய்திருக்கிறான். இந்த வசனம் இறக்கப்பட்டவுடன் அக்கிராமவாசிகள் நபியிடம் வந்து, திருமறையில் எங்கள் ஊரைப்பற்றி இப்படி ஒரு பழிச்சொல் இடம் பெற்றிருக்கிறது.அது எங்களுக்கு அவமானமாக இருக்கிறது. எனவே அதில் ஒரு புள்ளியை மாற்றி, باء உள்ள இடத்தில் تاء  வை வைக்க வேண்டும்   ( باء வுக்குப் பகரமாக تاء வை வைத்தால் அவர்கள் இருவருக்கும் அந்த மக்கள் உணவளித்தார்கள் என்று பொருள் வந்து விடும்) என்ற கோரிக்கையை முன் வைத்து அதற்கு உபகாரம் செய்யும் முகமாக தங்க கட்டிகளை கொண்டு வந்தார்கள்.ஆனால் குர்ஆனில் ஒரு புள்ளியை மாற்றுவது அல்லாஹ்வின் வேதத்தில் விளையாடியாக ஆகி விடும். மேலும் அது குர்ஆனை கலங்கப்படுத்தியாகி விடும் என்று கூறி நபி அவர்கள் மறுத்து விட்டார்கள். (தஃப்ஸீர் ராஸி) 

எனவே விருந்தாளிகளை நல்ல முறையில் உபசரிக்க வேண்டும், கண்ணியப்படுத்த வேண்டும். விருந்தாளிகளை உபசரிப்பதில் நமக்கு கிடைக்கும் மிகப்பெரிய நன்மை என்னவென்றால் நாம் உண்ணுகிற உணவில் பரக்கத் ஏற்படும்,அந்த உணவின் மூலம் நமக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைக்கும்,

قال صلى الله عليه وسلم ((إنَّ أحبَّ الطَّعام إلى الله ما كثُرَت عليه الأيدي
அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமான உணவு என்பது எதன் மீது அதிக கரங்கள் இருக்கிறதோ அதுவாகும். (ஷுஃபுல் ஈமான் : 7/3153)

وعندما جاءه عددٌ من أصحابه يَشكون إليه عدم الشبع، قال لهم: ((فلعلَّكم تَفترقون))، قالوا: نعم، قال: ((فاجتمِعوا على طعامكم، واذكُروا اسمَ الله عليه يُبارك لكُم فيه
நாங்கள் உண்ணுகிறோம். ஆனால் வயிறு நிரம்புவதில்லை என்று சிலர் நபியிடம் வந்து முறையிட்டார்கள்.அதற்கு நபி அவர்கள் தனித்தனியாக சாப்பிட வேண்டாம். சேர்ந்து சாப்பிடுங்கள். பிஸ்மில்லாஹ் சொல்லி சாப்பிடுங்கள். உங்களுக்கு பரக்கத் கிடைக்கும் என்றார்கள்.

விருந்தாளிகளை நன்கு உபசரிப்போம். அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்.


1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் ஹழ்ரத்
    நபி ஸல் அவர்களுக்கு நுபுவ்வத் கிடைத்த பின்பு அவர்களுக்கு அன்னை கதீஜா ரலி அவர்கள் தான் ஆறுதல் கூறினார்கள். . தங்களது பதில் அன்னை ஆயிஷா ரழி என்று உள்ளது .. மாற்றிவிடங்கள் ஹழ்ரத். .. ஜஸாகுமுல்லாஹ்

    ReplyDelete