Monday, June 29, 2020

இஸ்லாத்தின் பார்வையில் விரைவாக செய்ய காரியம் 2 ; கடனை அடைப்பது.



இஸ்லாம் எதிலும் அவசரம் கூடாது, எதையும் நிதானத்தோடு செய்ய வேண்டும், நிதானமாக முடிவு எடுக்க வேண்டும் என்று சொன்ன அதே நேரத்தில் ஒரு சில காரியங்களை துரிதமாகச் செய்ய வேண்டும், சற்றும் தாமதிக்காமல் அதை தள்ளிப் போடாமல்  விரைவாகச் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறது.அதில் ஒன்று கடனாளிகள் குறித்தது.


கடன் பெற்றவர் அதை திருப்பிச் செலுத்துவதற்குரிய தவனை வந்து விட்டால் அல்லது குறிப்பிட்ட தவனை வருவதற்கு முன்பே கடனை அடைப்பதற்குத் தேவையான பொருளாதாரம் கிடைத்து விட்டால் தாமதிக்காமல் உடனே அந்தக் கடனை அடைத்து விட வேண்டும்.கடனாளிகள் கடனை அடைப்பதில் அவசரம் காட்ட வேண்டும் விரைவு காட்ட வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

கொடுக்கல் வாங்கலில் ஈடுபடக்கூடிய மனித வாழ்க்கையில் கடன் என்பது தவிர்க்க முடியாத ஓன்றாகிப்போனது.வியாபாரத்திற்கும் கடனுக்கும் நிறைய தொடர்பு உண்டு.சமூகத்தில் கடனில்லாத வியாபாரிகள் இல்லை என்று சொல்கின்ற அளவுக்கு அனைத்து வியாபாரிகளின் வாழ்விலும் கடன் வியாபித்திருக்கிறது.குடும்பங்களை எடுத்துக் கொண்டால் சிறிய குடும்பம் நடுத்தர குடும்பம் நல்ல வசதியான குடும்பம் என்று யாரையும் கடன் விட்டு வைக்க வில்லை,கண்ணீர் இல்லாத வாழ்க்கைக் கூட சிலருக்கு அமைந்து விடலாம்.ஆனால் கடன் இல்லாத வாழ்க்கை அமையுமா என்பது சந்தேகம் தான். குறிப்பாக நம் வீடுகளில் நடக்கிற திருமண வைபவங்கள். திருமணம் நடைபெறுகிற வீடுகளில் மகிழ்ச்சி இருக்கிறதோ இல்லையோ கடன் நிச்சயம் இருக்கும்.ஆரம்பமாக ஸ்கூலுக்கு செல்லக்கூடிய மாணவர்களுக்கு கணக்குப் பாடம் நடத்துகின்ற போது கழித்தல் கணக்கிலே ஒரு கட்டத்தில் பக்கத்து எண்ணிலிருந்து கடன் வாங்க வேண்டும் என்று சொல்லித்தரப்படும். ஸ்கூலுடைய ஆரம்பப் பருவத்தில் கடன் வாழ்க்கையில் நுழைகின்ற மனிதனால் மரணம் வரை அதிலிருந்து வெளிவர முடியவில்லை.மனித வாழ்க்கை கடனோடு பிண்ணிப் பிணைந்திருக்கிறது.

நம் குடும்ப வாழ்க்கையைக் கடந்து நம் சமூகத்தைக் கடந்து நம் நாட்டை உற்று நோக்கினால் அங்கே இதை விட கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. எண்ணிப் பார்க்க முடியாத அளவு கடனை வாங்கி அதை அடைக்க வழி இல்லாமல் திணரிக் கொண்டிருக்கிறது நம் நாடு. யாரெல்லாம் கடன் தருவார்களோ, அவர்கள் அத்தனை பேரிடமும் கைநீட்டிக் கடன் வாங்குவதற்குத் தயக்கமே காட்டாத நாடு நம் இந்தியத் திருநாடு. தேவையில்லா திட்டங்களுக்கும், வீண் ஆடம்பரங்களுக்கும்,பிரதமர், மந்திரிகள் முதல் அரசாங்கத்தின் கடைநிலை ஊழியர்கள் வரை ஊழல் செய்வதற்கும் அநியாயங்கள் செய்வதற்கும் தான் கடனாக வாங்கப்படும் அந்தப் பணம் பயன்படுத்தப்படுகிறது. மத்தியில் ஆட்சி செய்யக்கூடிய மோடி அரசாங்கம் கடந்த நான்கு ஆண்டுகளில் விளம்பரத்திற்காக மட்டும் 4300 கோடி ரூபாயை செலவு செய்திருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. விளம்பரத்திற்காக வீண் செலவு செய்த இந்த பணத்தை வைத்து 3 ஆண்டுகள் 10 குழந்தைகளுக்கு வயிறு நிறைய உணவு வழங்க முடியும் என்று சொல்லப்படுகிறது.

இப்படி கடன் வாங்கி வாங்கி இப்போது இந்தியாவின் கடன்சுமை 35 லட்சம் கோடியை நெருங்கிவிட்டது. இதன் விளைவாக பெருமைமிக்க ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் தலையிலும் சராசரியாக 30ஆயிரம் ரூபாய் கடன்சுமை விழுந்திருக்கிறது.

இப்படி தனிமனிதன் முதல் குடும்பம் சமூகம் நாடு வரை அத்தனை பேரின் வாழ்விலும் கடன் என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. எனவே தான் அல்லாஹுவும் அவனது தூதரும் கடன் கொடுக்கல் வாங்கலுக்கான சட்டங்களையும் முறைகளையும் நமக்கு வகுத்துத் தந்திருக்கிறார்கள். குர்ஆனில் உள்ள 6666 வசனங்களிலேயே மிகப்பெரிய வசனம் பகரா சூராவில் கடன் குறித்த சட்டங்களை விரிவாகச் சொல்லும் அந்த வசனம் தான். இஸ்லாம் வகுத்துத்தந்திருக்கிற கடன் குறித்த சட்டங்களையும் அதன் தெளிவையும் அறிவது காலத்தின் கட்டாயம் என்ற அடிப்படையில் கடன் குறித்த கடனாளிகள் குறித்த ஒரு சில செய்திகளை உங்கள் கவனத்திற்கு தர ஆசைப்படுகிறேன்.

நம் சமூகத்தில் கடன் கொடுப்பவர்களும் உண்டு கடன் வாங்குபவர்களும் உண்டு.கடன் கொடுப்பவர்களும் ஒரு சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்,கடன் வாங்குபவர்களும் ஒரு சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த இரு சாராரும் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களை நாம் பார்க்கலாம்....

கடன் வாங்குபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முதல் விஷயம்,

கடன் என்பது மனித வாழ்வின் நிர்பந்தம் கருதி இஸ்லாம் ஏற்படுத்தி யிருக்கிறது,தன் சொந்தக் காலில் நிற்க முடியாமல் அவனை தூக்கி விடுவதற்கும் ஆளில்லாமல் மனிதன் நிற்கதியாக நிற்கிற போது அந்த மனிதன் வாழ்வில் துவண்டு விடாமல் காப்பதற்கும் வேறு மோசமான முடிவுகளின் பக்கம் அவன் எண்ணம் செல்லாமல் அவனை தடுப்பதற்கும் தான் இஸ்லாம் கடன் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. எனவே இயன்றவரை கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.அவசியத் தேவை இருந்தால் மட்டுமே கடன் வாங்க வேண்டும்.ஏனென்றால் கடன் குறித்தும் கடனாளிகள் குறித்தும் குர்ஆனில் ஹதீஸிலும் எண்ணற்ற எச்சரிக்கைகள் இடம் பெற்றிருக்கிறது.

வாங்கிய கடனை நிறைவேற்றாமல் மரணித்து விட்டால் அவர் அல்லாஹ்வுடைய பாதையில் போர் செய்த தன் இன்னுயிரை கொடுத்த ஷஹீதாஹவே இருந்தாலும் அவரை அல்லாஹ் மன்னிப்பதில்லை.

لَمَّا كانَ يَوْمُ خَيْبَرَ، أقْبَلَ نَفَرٌ مِن صَحابَةِ النبيِّ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ، فقالوا: فُلانٌ شَهِيدٌ، فُلانٌ شَهِيدٌ، حتَّى مَرُّوا علَى رَجُلٍ، فقالوا: فُلانٌ شَهِيدٌ، فقالَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ: كَلّا، إنِّي رَأَيْتُهُ في النَّارِ في بُرْدَةٍ غَلَّها، أوْ عَباءَةٍ، ثُمَّ قالَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ: يا ابْنَ الخَطَّابِ، اذْهَبْ فَنادِ في النَّاسِ، أنَّه لا يَدْخُلُ الجَنَّةَ إلَّا المُؤْمِنُونَ، قالَ: فَخَرَجْتُ فَنادَيْتُ: ألا إنَّه لا يَدْخُلُ الجَنَّةَ إلَّا المُؤْمِنُونَ. .
ஹள்ரத் உமர் ரலி அவர்கள் கூறுகிறார்கள் ; கைபர் போர் தினத்தன்று நபித்தோழர்களில் சிலர் "இன்னார் உயிர்த்தியாகி (ஷஹீத்) ஆகி விட்டார், இன்னார் உயிர்த்தியாகி ஆகிவிட்டார்' என்று கூறிக்கொண்டே வந்து இறுதியாக ஒரு மனிதரைப் பற்றி "இன்னாரும் உயிர்த்தியாகி ஆகிவிட்டார்' என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் () அவர்கள் "இல்லை! (போர்ச்செல்வங்கள் பங்கிடப்படும் முன் அவற்றிலிருந்து) கோடுபோட்ட வண்ணப் போர்வை ஒன்றை அவர் எடுத்துக் கொண்ட காரணத்தால் அவரை நான் நரகத்தில் கண்டேன் (எனவே அவரை உயிர்த்தியாகி என்று கூறாதீர்கள்)'' என்றார்கள். பிறகு (என்னிடம்) "கத்தாபின் புதல்வரே! நீங்கள் சென்று, "இறைநம்பிக்கையாளர்கள் தாம் சொர்க்கத்தில் நுழைவார்கள்' என்று மக்களுக்கு அறிவித்து விடுங்கள்!''என்றார்கள். அவ்வாறே நானும் சென்று, "அறிந்து கொள்ளுங்கள்! இறைநம்பிக்கையாளர்கள் தாம் சொர்க்கத்தில் நுழைவார்கள்'' என்று (மக்களிடையே) அறிவித்தேன். (முஸ்லிம் :114)

كان رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم قاعدًا حيث تُوضعُ الجنائزُ فرفع رأسَه قِبلَ السَّماءِ ثمَّ خفض بصرَه فوضع يدَه على جبهتِه فقال سبحانَ اللهِ سبحانَ اللهِ ما أنزل من التَّشديدِ قال فعرفنا وسكتنا حتَّى إذا كان الغدُ سألتُ رسولَ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم فقلنا ما التَّشديدُ الَّذي نزل قال في الدَّيْنِ والَّذي نفسي بيدِه لو قُتِل رجلٌ في سبيلِ اللهِ ثمَّ عاش ثمَّ قُتِل ثمَّ عاش ثمَّ قُتِل وعليه دَيْنٌ ما دخل الجنَّةَ حتَّى يُقضَى دَيْنُه
ஒரு நாள் மய்யித் வைக்கப்படும் இடத்தில் நபி அவர்கள் அமர்ந்திருந் தார்கள். தன் தலையை உயர்ந்தினார்கள். பிறகு தாழ்த்தினார்கள்.தன் கையை தன் நெற்றியின் மீது வைத்து ஆச்சரியமடைந்தவர்களாக எவ்வளவு கடுமையான விஷயம் இறங்கியிருக்கிறது என்றார்கள். அப்படி என்ன இறங்கியிருக்கிறது என்று ஸஹாபாக்கள் கேட்டார்கள்.அப்போது நபியவர்கள் இறைவன் மீது சத்தியமாக! ஒருவர் இறை பாதையில் உயிர் தியாகம் அடைந்து, பிறகு உயிர் பெற்று மறுபடியும் உயிர் தியாகம் அடைந்து, பிறகு உயிர் பெற்று மறுபடியும் உயிர் தியாகம் அடைந்தாலும் அவர் மீது கடன் இருந்தால் அதனை அடைக்கும் வரை அவர் சுவனத்தில் நுழைய மாட்டார் என்றார்கள். (அத்தர்கீர் வத்தர்ஹீப் : 46/3)

ஷஹீதுக்கு அல்லாஹ் கொடுக்கிற அந்தஸ்துகளும் உயர்வுகளும் சாதாரணமானதல்ல, ஆனால் அந்த ஷஹீதைக் கூட சுவனம் செல்ல விடாமல் கடன் தடுத்து விடும் என்றால் கடன் எவ்வளவு பெரிய ஆபத்தானது என்பதை புரிய முடிகிறது.

மஸ்ஜிதுன் நபவிக்கு ஒரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது.நபி அவர்கள் அவரின் மீது கடன் இருக்கிறதா? என்று கேட்டு இருக்கிறது என்று சொல்லப்பட்ட போது அவருக்கு தொழ வைக்க மறுத்து விட்டார்கள் என்பது நாம் அறிந்த செய்தி.கடன் என்பது நமக்கு மறுமையில் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி விடும்.அதனால் ஒருவர் இறந்து அவரது சொத்துக்கள் அவரது வாரிசுகளுக்கு பங்கு வைக்கப்படும் முன்பு மூன்று விஷயங்களை செய்ய வேண்டும் என்று மார்க்கம் சொல்கிறது. 1, அவரது ஜனாஸாவின் காரியங்களை அதைக் கொண்டு செய்ய வேண்டும். 2, அவரது வஸிய்யத்தை நிறைவேற்ற வேண்டும். 3, அவர் கடன்பட்டிருந்தால் அதை அடைக்க வேண்டும்.

إنَّ أخاكَ محتبسٌ بدَينِهِ فاقضِ عنْه فقالَ يا رسولَ اللَّهِ قد أدَّيتُ عنْهُ إلَّا دينارينِ ادَّعتْهما امرأةٌ وليسَ لَها بيِّنةٌ قالَ فأعطِها فإنَّها مُحِقَّةٌ
ஸஃத் பின் அத்வல் ரலி அவர்களின் சகோதரர் 300 திர்ஹம்களை விட்டு விட்டு மரணித்து விட்டார்கள்.அதை அவரின் குடும்பத்திற்காக செலவு செய்ய ஸஃத் ரலி அவர்கள் விரும்பினார்கள்.அப்போது நபி அவர்கள் ஸஃதே! உன் சகோதரர் கடனால் சுவனத்தில் நுழையாமல் தடுக்கப்பட்டிருக்கிறார். எனவே அவரின் கடனை அடைத்து விடு என்றார்கள்.அவரின் எல்லா கடன்களையும் நான் அடைத்து விட்டான். இரு தீனார்கள் மட்டும் அடைக்க வில்லை. ஒரு பெண் அது எனக்குத் தர வேண்டியது என்று முறையிட்டாள். அவளிடம் அதற்குரிய ஆதாரம் எதுவும் இல்லாததினால் அதை கொடுக்க வில்லை என்றார்கள்.அவள் உண்மை தான் சொல்கிறாள். அவளுக்கு அதை கொடுத்து விடு என்று அவர்கள் கூறினார்கள். (இப்னுமாஜா : 1988)

ஒரு மனிதர் என்ன தான் ஏராளமான அமல்களைச் செய்தாலும் கடன் என்பது அவரது மறுமை வாழ்வை கேள்விக் குறியாக்கி விடும்.
மறுமையை மட்டுமல்ல இவ்வுலக வாழ்வையும் கடன் கெடுத்து விடும். கடனாளிகளுக்கு பகல் நேரத்தில் கடன் கொடுத்தவன் வந்து விடுவானே அவனுக்கு பதில் சொல்ல வேண்டுமே என்ற அச்சம் இருக்கும், இரவு நேரத்தில் வாங்கிய கடனை அடைக்க வேண்டுமே என்ற கவலை இருக்கும். ஆக மொத்தத்தில் வாழ்க்கையில் நிம்மதி போய் விடும்.

لا تُخيفوا أنفسكم بعد أمنها ) قالوا : وما ذاك يارسول الله ؟ قال : ( الدين
உங்களை நீங்களே பயமுறுத்த வேண்டாம் என்று நபி அவர்கள் அவர்கள் கூறிய போது அது என்னவென்று கேட்கப்பட்டது. அது தான் கடன் என்றார்கள். (அத்தர்கீர் வத்தர்ஹீப் :3/44)

மனித வாழ்வின் நிம்மதியை கெடுப்பதில் அமைதியைப் பறிப்பதில் கடனுக்கு முதல் இடம் உண்டு.

أنَّ رَسولَ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ كانَ يَدْعُو في الصَّلَاةِ: اللَّهُمَّ إنِّي أعُوذُ بكَ مِن عَذَابِ القَبْرِ، وأَعُوذُ بكَ مِن فِتْنَةِ المَسِيحِ الدَّجَّالِ، وأَعُوذُ بكَ مِن فِتْنَةِ المَحْيَا، وفِتْنَةِ المَمَاتِ، اللَّهُمَّ إنِّي أعُوذُ بكَ مِنَ المَأْثَمِ والمَغْرَمِ فَقَالَ له قَائِلٌ: ما أكْثَرَ ما تَسْتَعِيذُ مِنَ المَغْرَمِ، فَقَالَ: إنَّ الرَّجُلَ إذَا غَرِمَ، حَدَّثَ فَكَذَبَ، ووَعَدَ فأخْلَفَ. .
الراوي: عائشة أم المؤمنين المحدث: البخاري - المصدر: صحيح البخاري - الصفحة أو الرقم: 832
நபி அவர்கள் தொழுகையில் துஆ செய்யும்போது "யா அல்லாஹ்! உன்னிடம் பாவத்தை விட்டும், கடனை விட்டும் பாதுகாவல் தேடுகின்றேன்என்று கூறுவார்கள். (இதையறிந்த) ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடன் படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாக பாதுகாப்பு தேடுவதற்கு காரணம் என்ன?” என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் மனிதன் கடன் படும் போது பொய் பேசுகின்றான், வாக்குறுதி அளித்து அதற்கு மாறு செய்கின்றான் என்று பதிலளித்தார்கள். (புகாரி : 832)

இதை நாம் இன்றைக்கு கண்கூடாகவே பார்க்கிறோம்.கடன் வாங்கி விட்டு அதை திருப்பிக் கொடுக்க முடியாமல் கடன் கொடுத்தவரை சமாளிக்க முடியாமல் மனிதர்கள் எத்தனை பொய்களையும்  பித்தலாட்டங்களையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆக மொத்தத்தில் கடன் என்பது வாழ்வின் நிம்மதியைத் தொலைத்து மகிழ்ச்சியைத் தொலைத்து மறுமையையும் பாழ்படுத்தி விடும். இப்படி கடன் குறித்தும் கடனாளிகள் குறித்தும் எண்ணற்ற எச்சரிக்கைகள் வந்திருக்கிற காரணத்தினால் கடன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கொஞ்சம் யோசித்து செயல்பட வேண்டும்.நிர்பந்தத்திற்காக வாங்கிக் கொள்ளலாமே தவிர அதை வாடிக்கையாக்கி விடக்கூடாது.

கடன் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய இரண்டாவது விஷயம் ;

கடன் வாங்குகிற போது அதை நிச்சயம் கூடிய விரைவில் அடைத்து விட வேண்டும் என்ற எண்ணத்தோடு கடன் வாங்க வேண்டும்.இன்றைக்கு சில பேரை பார்க்கிறோம்.பணம் கொடுத்தவனை சுத்தல்ல விட வேண்டும் என்பதற்காகவே கடன் வாங்குறது. இதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது. சீக்கிரம் அடைத்து விடுவேன் என்று உறுதி இருக்க வேண்டும். வாங்கிய கடனை முறையாகவும் குறிப்பிட்ட தவணையிலும் திருப்பிக் கொடுக்க வேண்டுமென்ற நல்லெண்ணமும் ஆர்வமும் உள்ளவருக்கு அல்லாஹ்வின் உதவி நிச்சயம் கிடைக்கும்.

சரியாக முறையாக கடனை திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்ற எண்ணம் இல்லாத போது அதில் அல்லாஹ்வின் உதவி கிடைக்காது என்பதோடு அந்த பொருளில் அழிவும் ஏற்பட்டு விடும்.

من أخذ أموال الناس يريد أداءها أدى الله عنه ، ومن أخذ اموال  الناس  يريد إتلافها أتلفه الله
யார் மக்களின் பொருளை திரும்பக் கொடுக்க வேண்டும் என்று எண்ணி கடன் வாங்குகின்றாரோ, அவர் சார்பாக அல்லாஹ்வே அதனை திருப்பிச் செலுத்துவான். யார் அதை அழித்து விட வேண்டும் என்று எண்ணி (ஏமாற்றி) கடன் வாங்குகின்றாரோ அதை அல்லாஹ் அழித்தே விடுகின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி : 2387)

கடன் வாங்க நினைப்பவர்கள் அதை முறையாக சரியான தவனையில் அடைத்து விட வேண்டும் என்ற எண்ணமும் அதற்கு சக்தியும் இருந்தால் மட்டும் கடன் வாங்க வேண்டும். இல்லையென்றால் கடன் வாங்கக்கூடாது.

கடன் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய மூன்றாவது விஷயம் ;

கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய அவகாசம் வந்து விட்டால் அதை தாமதிக்காமல் தள்ளிப்போடாமல் உடனே செய்து விட வேண்டும். குறிப்பிட்ட தவனை வருவதற்கு முன்பு கொடுப்பதற்கு வசதியும் சந்தர்ப்பமும் கிடைத்து விட்டால் தவனை வரும் வரை காத்திருக்காமல் அப்போதே கொடுத்து விட வேண்டும். மனித வாழ்க்கை கேரண்டியில்லாத வாழ்க்கை.நாம் பிறந்தது முதல் மரணம் நம்மை தொடர்ந்து துரத்திக் கொண்டிருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் நம்மை அது பிடித்து விடலாம்.கடனை அடைப்பதற்கு முன்பு மரணம் வந்து விட்டால் மிகப்பெரிய நஷ்டத்தையும் கைதேசத்தையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

கடன் கொடுப்பவர்கள் கவனிக்க வேண்டிய முதல் விஷயம் ;

கடன் கேட்பவர்களுக்கு தாராளமாக கொடுத்து உதவ வேண்டும். உண்மையான தேவையை முன்வைத்து ஒருவர் கடன் கேட்டால் அவருக்கு கடன் கொடுப்பதற்கு யோசிக்கக் கூடாது.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَنْ قَضَى لِأَحَدٍ مِنْ أُمَّتِي حَاجَةً يُرِيدُ أَنْ يَسُرَّهُ بِهَا فَقَدْ سَرَّنِي، وَمَنْ سَرَّنِي فَقَدْ سَرَّ اللهَ، وَمَنْ سَرَّ اللهَ أَدْخَلَهُ اللهُ الْجَنَّةَ 
ஒருவர் என் உம்மத்திலுள்ள ஒருவரை மகிழ்விக்க வேண்டும் என்ன எண்ணத்தில் அவரின் ஒரு தேவையை நிறைவேற்றி வைப்பாரோ அவர் என்னை மகிழ்வித்து விட்டார். என்னை மகிழ்வித்தவர் அல்லாஹ்வை மகிழ்வித்து விட்டார்.அல்லாஹ்வை மகிழ்வித்தவரை அவன் சுவனத்தில் நுழைவித்து விடுவான். (தைலமி : 5702)

رأيت ليلة أسري بي على باب الجنة مكتوبا الصدقة بعشر أمثالها والقرض بثمانية عشر، فقلت يا جبريل ما بال القرض أفضل من الصدقة؟ قال: لأن السائل يسأل وعنده، والمستقرض لا يستقرض إلا من حاجة
நபி அவர்கள் கூறினார்கள் ; மிஃராஜ் இரவு சுவனத்தின் வாசலில் ஸதகாவிற்கு பத்து மடங்கு கூலி கிடைக்கும். ஆனால் கடன் கொடுப்பதற்கு 18 மடங்கு கூலி கிடைக்கும் என்று எழுதப்பட்டிருந்தது.கடன் என்பது ஸதகாவை விட மிகச் சிறந்ததா? என்று ஜிப்ரயீலிடம் கேட்டேன். ஆம், யாசகம் கேட்பவர், தன்னிடம் வைத்துக் கொண்டே கேட்கிறார். ஆனால் ஒருவர் தன்னிடம் இல்லாத போது தான் கடன் கேட்கிறார் என்றார்கள். (அஸ்ஸுனனு வல் அஹ்காம் : 4/414)


கடன் கொடுப்பவர்கள் கவனிக்க வேண்டிய இரண்டாவது விஷயம் ;


கடன் வாங்கியவர்கள் அதை திருப்பித் தருவதற்குரிய தவனை வந்த பிறகும் அதை கொடுக்க முடியாமல் சிரமப்படுவதை அறிந்தால் அவர்களுக்கு அவகாசம் அளிக்க முடியும். முடிந்தால் அதை தள்ளிபடி செய்து விட வேண்டும்.

நாட்டிலுள்ள விவசாயிகள் தாங்கள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி காலம் காலமாக ஆர்பாட்டங்கள் செய்து கொண்டிருக்கிற போது அதை கண்டு கொள்ளாமல் நாட்டிலுள்ள பெரும் பெரும் பண முதலைகள் வாங்கிய கோடிக்கணக்கான கடன்களை தள்ளுபடி செய்கின்ற தனியார் நிறுவனங்களைப் போன்றும் அதற்கு சப்போர்ட்டாக இருக்கும் அரசாங்கத்தைப்  போன்றும் இல்லாமல் உண்மையில் சிரமத்தில் இருப்பவர்களுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும்.

இரண்டிற்கும் எண்ணற்ற நன்மைகள் இருப்பதாக ஹதீஸில் பார்க்க முடிகிறது.

عَنْ أَبِي مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إن الملائكة لتلقّت بروح رجل كان قبلكم فقالوا له: هَلْ عَمِلْتَ خَيْرًا قَطُّ؟ قَالَ: لَا، قَالُوا: تَذْكُرُ؟ قَالَ: لَا إِلَّا أَنِّي رَجُلٌ كُنْتُ أُدَايِنُ النَّاسَ فَكُنْتُ آمُرُ فِتْيَانِي أَنْ يُنْظِرُوا الْمُوسِرَ وَيَتَجَاوَزُوا عَنِ الْمُعْسِرِ، قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: تَجَاوَزُوا عَنْهُ»،
உங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மனிதரின் உயிரை வானவர்கள் கைப்பற்றி, அவரிடம் 'நீர் ஏதேனும் நல்லது செய்திருக்கிறீரா?' எனக் கேட்டனர். அதற்கு அம்மனிதர், 'வசதியானவருக்கு அவகாசம் அளிக்கும்படியும் (அவர் கடனைத் திருப்பிச் செலுத்த தாமதம் செய்வதை) கண்டு கொள்ளாமல் விட்டுவிடும்படியும் நான் என்னுடைய ஊழியர்களுக்குக் கட்டளை யிட்டிருந்தேன்!' என்று கூறினார். உடனே, 'அவரின் தவறுகளைக் கண்டு கொள்ளாமல்விட்டு விடுங்கள்!' என்று அல்லாஹ் வானவர்களுக்குக் கட்டளையிட்டான்!' (புகாரி : 2077)


கடன் கொடுப்பவர்கள் கவனிக்க வேண்டிய மூன்றாவது விஷயம் ;


அவர் எந்த விஷயத்திற்காக கடன் கேட்கிறார் என்பதை அறிய வேண்டும். கடன் கேட்பவர்களில் மூன்று சாரார் உண்டு.கல்வி-மருத்துவம்-உணவு, உடை, இருப்பிடம்,தொழில் தொடங்குதல் போன்ற அத்தியாவசிய தேவைக்காக கடன் கேட்பவர்கள். மது- சூதாட்டம் போன்ற தீய காரியங்களில் ஈடுபடுவதற்காக கடன் கேட்பவர்கள்.ஊர் மெச்சவேண்டும் என்பதற்காக ஆடம்பர திருமணத்திற்காக கடன் கேட்பவர்கள். இவர்களில் முதல் சாரார் மட்டுமே நாம் கடன் வழங்க தகுதியானவர்கள். ஏனெனில் அல்லாஹ் கூறுகின்றான்:

وَتَعَاوَنُواْ عَلَى الْبرِّ وَالتَّقْوَى وَلاَ تَعَاوَنُواْ عَلَى الإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُواْ اللّهَ إِنَّ اللّهَ شَدِيدُ الْعِقَابِ
நன்மை மற்றும் இறையச்சத்தில் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்.பாவத்திலும் பகையிலும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளாதீர்கள். (அல்குர்ஆன் : 5;2)


No comments:

Post a Comment