Monday, June 29, 2020

மனத்தூய்மை



அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான் :
ان الذين امنوا وعملو الصلحات كانت لهم جنات الفردوس نزلا
நிச்சயமாக ஈமான் கொண்டு நல் அமல்களைச் செய்தவர்களுக்கு தங்கும் இடமாக ஃபிர்தவ்ஸ் எனும் தோட்டங்கள் இருக்கிறது” (அல்குர்ஆன் : 18 ; 107)


நல் அமல்கள் நமக்கு சுவனத்தைப் பெற்றுத்தரும் என்று இறைவன் சொல்கிறான். ஆனால் எந்த மாதிரியான அமல்கள் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.எல்லோரும் அமல்கள் செய்கிறோம்.ஆனால் எந்த அமல்கள் நமக்கு ஈடேற்றத்திற்குக் காரணமாக அமையும், எந்த அமல்கள் நமக்கு இறைவனின் பொருத்தத்தைப் பெற்றுத் தந்து நம்மை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்யும் என்பது மிக மிக முக்கியமானது. எல்லோரும் வியாபாரம் தொடங்கலாம்.ஆனால் எந்த வியாபாரம் வெற்றியைத் தரும் என்று யோசித்து சிந்தித்து அதில் இறங்குவது தான் புத்திசாலித்தனம்.

அல்லாஹ்வுடைய கிருபையால் நன்மைகளை அள்ளித்தருகிற புனிதமான ரலமலான் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது. மற்ற காலங்களில் இல்லாத அளவுக்கு அமல்களில் ஆர்வமும் ஒரு தேட்டமும் ரமலானில் நமக்கு இருக்கும்.நிச்சயம் இருக்க வேண்டும்.பள்ளியை விட்டும் தூரமாக இருப்பவர்கள் பள்ளியை நெருங்கி விடுவார்கள். ஃபர்ளான தொழுகையில் கொஞ்சம் அசட்டையாக இருந்தவர்கள் அதை திறுத்திக் கொள்வார்கள், குர்ஆனுடைய தொடர்பே இல்லாதவர்கள் குர்ஆனோடு ஐக்கியமாகி விடுவார்கள்.லுஹாத் தொழாதவர்கள் லுஹா தொழுவார்கள், தஹஜ்ஜத் தொழாதவர்கள் தஹஜ்ஜத் தொழுவார்கள். இப்படி அமல் செய்யாதவர்கள் அமல் செய்வதும், அமல் செய்து கொண்டிருந்தவர்கள் தங்கள் அமல்களை அதிகப்படுத்திக் கொள்வதும் இந்த மாதத்தில் தான்.எனவே அமல்களுக்கான மாதம் இந்த ரமலான்.

அந்த அடிப்படையில் நாம் செய்கிற அமல்கள் நமக்குப் பயன் தர வேண்டுமென்றால், இஸ்லாம் அதற்கு சில கன்டிஷன்களை முன் வைக்கிறது.முதல் விஷயம், ஈமான் இருக்க வேண்டும். ஈமான் இல்லாமல் எத்தனை அமல்களைச் செய்தாலும் அது பயனற்றுப் போய் விடும்.இரண்டாவது, அந்த அமல்களுக்கு ஷரீஅத்தின் வழிகாட்டுதல் இருக்க வேண்டும். அல்லது ஷரீஅத்தின் அனுமதி இருக்க வேண்டும்.ஷரீஅத் வழிகாட்டாத ஷரீஅத்தின் அனுமதியில்லாத ஒரு அமல், அது பித்அத்தாக ஆகி விடும்.அதுவும் பயனற்றுப் போய் விடும். மூன்றாவது, மார்க்கம் வகுத்துத் தந்த சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதாக அந்த அமல் இருக்க வேண்டும். ஃபர்ளுகள் வாஜிபுகள், சுன்னத்துக்கள், முஸ்தஹப்புகள் மக்ரூஹுகள், ஹராம்கள் போன்ற அமல்களின் அத்தனை ஒழுங்கு முறைகளையும் பேணப்பட வேண்டும்.இந்த ஒழுங்குகள் பேணப்பட வில்லையென்றால் அது பயனில்லாமல் போய் விடும்.

நான்காவது மிக முக்கியமான விஷயம், அது தான் இக்லாஸ். செய்கின்ற காரியம் எதுவாக இருந்தாலும் அதில் இக்லாஸ் இருக்க வேண்டும்.வேறு எந்த உலகியல் ரீதியான நோக்கங்களோ பெருமைகளோ இல்லாமல் அல்லாஹ்வுக்காக மட்டும் அந்த காரியம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلاً
உங்களில் யார் செயலால் மிகவும் அழகானவர் என்று சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் ஜீவிதத்தையும் படைத்தான்” (அல்குர்ஆன் : 67 ; 2 )

قال الفضيل بن عياض في هذه الآية: "أخلصه وأصوبه". قيل: "يا أبا علي ما أخلصه وأصوبه؟" قال: أن العمل إذا كان خالصا ولم يكن صوابا لم تقبل وإذا صوابا ولم يكن خالصا لم يقبل، حتى يكون خالصاً صواباً؛ والخالص أن يكون لله، والصواب أن يكون على السنة".
ஃபுளைல் பின் இயாள் (ரஹ்) அவர்கள், இந்த வசனத்திற்கு விளக்கம் கூறும் போது, அக்லஸ், அஸ்வப் என்று கூறினார்கள். அக்லஸ், அஸ்வப் என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது. அக்லஸ் என்பது, அந்தக் காரியத்தை அல்லாஹ்விற்காக செய்வது. அஸ்வப் என்பது, நபி அவர்களின் வழிமுறையின் படி அமைவது. ஒரு அமலில் மனத்தூய்மை இருந்து சரியாக இல்லை என்றாலும், சரியாக இருந்து மனத்தூய்மை இல்லாவிட்டாலும் ஏற்றுக்கொள்ளப்படாது. எனவே எந்த அமலாக இருந்தாலும் சரியாகவும் இருக்க வேண்டும். மனத்தூய்மையுடனும் இருக்க வேண்டும் என்று கூறினார்கள்.

இன்றைக்கு நம்மில் அதிகம் இல்லாமல் போன விஷயம் இது தான், நம்மிடம் ஈமான் இருக்கிறது. ஷரீஅத்தின் வழிகாட்டுதல் இருக்கிறது.அமல்களின் ஒழுங்குகள் ஓரளவுக்கு இருக்கிறது. மனத்தூய்மை தான் மிகவும் குறைவு. ஏதாவது ஒரு வகையில் நம் அமல்களில் முகஸ்துதி நுழைந்து விடுகிறது. அவர் பார்க்க வேண்டும், அவர் பாராட்ட வேண்டும், அவர் நம்மை நல்ல விதமாக நினைக்க வேண்டும்,நாம் செய்கின்ற அமல் நான்கு பேருக்குத் தெரிய வேண்டும் என்ற எண்ணமும் சிந்தனையும் நம்மில் அதிகரித்து விட்டது. இந்த எண்ணம், நம் அமல்கள் அனைத்தையும் பாழாக்கி விடும்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُبْطِلُوا صَدَقَاتِكُم بِالْمَنِّ
ஈமான் கொண்டவர்களே! கொடுத்ததை சொல்லிக் காட்டி உங்கள் தானதர்மங்களை பாழாக்கி விடாதீர்கள்” (அல்குர்ஆன் : 2 ; 264 )

قال بعضُ الحُكماء: "مثَل مَن يعمل رياءً وسُمعة، كمثَل مَن ملأ كيسَه حصًى، ثم دخَل السوق؛ ليشتريَ به، فإذا فتَحَه بين يدي البائع افتضح، وضرَب به وجهه، فلم يحصل له به منفعةٌ سوى قولِ الناس: ما أملأَ كيسه، ولا يُعطَى به شيء، فكذلك مَن عمِل للرياء والسُّمعة، لا منفعةَ له في عمله سوى مقالة الناس، ولا ثوابَ له في الآخرة".
ஞானிகள் கூறுகிறார்கள் : முகஸ்துதிக்காக அமல் செய்பவன், பையில் பொடிக் கற்களை நிறப்பிக் கொண்டு கடைவீதிக்குப் பொருட்களை வாங்கச் செல்பவனைப் போல. பொருட்களை வாங்கி விட்டு வியாபாரிக்கு முன்பு அந்தப் பையைத் திறந்தால் அவனுக்கு தலைகுனிவு தான் ஏற்படும். சில நேரங்களில் அடியும் விழும்.கடைவீதியில் அவனுக்கு எந்தப் பொருளும் கிடைக்காது.அதேபோன்று தான் முகஸ்துதித்தாக அமல் செய்தவனுக்கு மறுமையில் எந்தப் பலனும் கிடைக்காது.

நம்மில் பலருடைய நிலை இப்படித்தான் இருக்கிறது. அமல்கள் அமல்களாக இல்லை. வெறும் விளம்பரங்களாக மட்டுமே இருக்கிறது.

"ترك العمل من أجل الناس رياء، والعمل من أجل الناس شرك، والإخلاص أن يعافيك الله منهما
மக்களுக்காக ஒரு காரியத்தை விடுவதற்குப் பெயர் முகஸ்துதியாகும்.மக்களுக்காக ஒரு காரியத்தை செய்வதற்குப் பெயர் இணை வைப்பாகும்.இந்த இரண்டும் இல்லை யென்றால் அதற்குப் பெயர் மனத்தூய்மையாகும் என்று மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள்.

யாருக்காக எதையும் விடவும் கூடாது.யாருக்காக எதையும் செய்யவும் கூடாது.ஒரு அமலை செய்வதாக இருந்தாலும், ஒரு பாவத்தை விடுவதாக இருந்தாலும் நம்மைப் படைத்த இறைவனுக்காக மட்டும் தான் இருக்க வேண்டும்.

دخل أعرابي المسجد فصلى صلاة ضيفة فقام إليه علي رضى الله عنه بالدرة وقال أعد الصلاة فأعادها مطمئناً فقال أهذه خير أم الأولى فقال الأعرابي الأولى لأني صليتها لله والثانية صليتها خوفاً من الدرة..
ஒரு கிராமவாசி பள்ளிக்கு வந்து வேகமாக தொழுது முடித்தார். அதைப்பார்த்த அலி (ரலி) அவர்கள் கையில் சாட்டையையுடன் நீ சரியாகத் தொழ வில்லை. திருப்பித் தொழு என்றார்கள். அதற்குப் பிறகு அவர் நிதானமாகத் தொழுது முடித்தார். பிறகு அவரை அழைத்து, இந்த இரண்டு தொழுகைகளில் எது சிறந்தது? என்று கேட்டார்கள். அதற்கு அந்த கிராமவாசி, முதல் தொழுகை தான் சிறந்தது என்று கூறினார். காரணம் கேட்ட போது, முதல் தொழுகையை அல்லாஹ்விற்காக இருந்தது. இரண்டாவது தொழுகை உங்கள் சாட்டைக்கு பயந்து இருந்தது என்று கூறினார்.

எனவே எதற்காகவும் யாருக்காகவும் நம் அமல்கள் அமைந்து விடக்கூடாது என்பதில் நாம் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். முடிந்த வரை அமல்கள் மறைக்கப்பட வேண்டும். மக்களுடைய பார்வையை விட்டும் அது திரை போடப்பட வேண்டும்.அந்த அமல்கள் தான் நம் வெற்றிக்குக் காரணமாக அமையும். நமக்கு சுவனத்தையும் பெற்றுத்தரும்.
ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه
ஏழு மனிதர்களுக்கு அல்லாஹ் தன் அர்ஷின் நிழலைத்தருவான் என்று வருகின்ற ஹதீஸில் அதில் ஒரு மனிதர், வலக்கரம் செய்த ஸதகாவை இடக்கரம் அறியாத அளவுக்கு மறைவாகச் செய்தார் என்று இடம் பெற்றுள்ளது. (புகாரி ; 660)

வலது கரம் செய்வது இடது கரத்திற்குக் கூட தெரியாது என்று நபி சொன்னார்கள். ஆனால் இன்றைக்கு பூமியின் தென்பகுதியில் செய்த ஸதகாக்கள் பூமியின் வடப்பகுதி வரைக்கும் போய் விடுகிறது. அந்த அளவு நம் அமல்கள் வெட்ட வெளிச்ச மாக்கப்படுகிறது.

நம் முன்னோர்கள் செய்த அமல்களை கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும்.அவர்கள் அமல்கள் செய்தார்கள் என்பதே யாருக்கும் தெரியாது.யாருக்கும் தெரியாது என்பது மட்டுமல்ல. அது அவர்களின் குடும்பத்துக்கே தெரியாது.

وهذا داوود بن أبي هند ذُكر في ترجمته أنه صام أربعين سنة لا يعلم به أهله، كان يخرج في مهنته، ويأخذ معه غداءه، فيتوهمون أنه مُفطِر، فيتصدق به في الطريق، فيرجع آخر النهار إلى أهله فيأكل مع اهله
தாவூத் பின் அபூஹின்த் என்ற பெரியார், அவர்களின் குடும்பத்திற்குத் தெரியாமல் நோன்பு வைப்பார். ஏதாவது சாப்பிட்டு ஸஹர் வைத்து விடுவார்.பிறகு காலை உணவை கையில் எடுத்துக் கொண்டு தொழிலுக்கு கிழம்பி விடுவார். குடும்பத்தார், அதனை அவர் தான் சாப்பிடுவார் என்று நினைத்துக் கொள்வார்கள். ஆனால் அதை ஸதகா செய்து விட்டு மாலையில் தன் குடும்பத்தாரோடு இஃப்தார் உணவை சாப்பிடுவார்கள்.இப்படியே 40 வருடங்களாக நோன்பு நோற்றிருக் கிறார்கள்.

 كان علي بن الحسين زين العابدين يحمل الصدقات والطعام ليلاً على ظهره، ويوصل ذلك إلى بيوت الأرامل والفقراء في المدينة، ولا يعلمون من وضعها، وكان لا يستعين بخادم ولا عبد أو غيره .. لئلا يطلع عليه أحد .. وبقي كذلك سنوات طويلة، وما كان الفقراء والأرامل يعلمون كيف جاءهم هذا الطعام .. فلما مات وجدوا على ظهره آثاراً من السواد، فعلموا أن ذلك بسبب ما كان يحمله على ظهره ، فما انقطعت صدقة السر في المدينة حتى مات زين العابدين
ஹள்ரத் ஹுசைன் (ரலி) அவர்களின் மகன் ஜெய்னுல் ஆபிதீன் (ரலி) அவர்கள் இரவு நேரத்தில் தன் முதுகில் உணவுப் பொருட்களை சுமந்து கொண்டு கிளம்பி விடுவார்கள்.ஊரில் இருக்கிற ஏழைகள், அனாதைகளின் இல்லங்களில் அதை வைத்து விட்டு வந்து விடுவார்கள். செல்கிற பொழுது பணியாளர்களையோ அடிமைகளையோ உதவிக்கு அழைத்துக் கொள்வதில்லை. காலையில் அந்தந்த வீடுகளில் உணவு மூட்டைகள் இருக்கும். ஆனால் வைத்தது யார் என்று அவர்களுக்குத் தெரியாது. இப்படியே பல காலங்களாக பல வருடங்களாக நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் அவர்கள் மரணித்து விடுகிறார்கள். அவர்களது முதுகிலே கருப்புத் தழும்புகள் தென்படுகிறது. அது என்னத் தழும்புகள் என்று மக்களுக்கு அப்போது புரிய வில்லை. ஆனால், அவர்களின் மரணத்திற்குப் பிறகு அதுவரை வந்து கொண்டிருந்த ரகசியமான இரவு நேர உதவிகள் தடைபட்ட பொழுது தான், அவர்களின் அந்தத் தழும்புக்கான காரணம் புரிந்தது. அதுவரை இரவு நேரங்களில் தங்கள் வீடுகளில் உணவுப் பொருட்களை வைத்துச் சென்றது ஜெய்னுல் ஆபிதீன் (ரலி) அவர்கள் தான் என்பதை விளங்கிக் கொண்டார்கள்.
 
وقال رجل التميم الداري رضي الله عنه: "ما صلاتك بالليل ؟ فغضب غضباً شديداً ثم قال: والله لركعة أصليها في جوف الليل في سرّ أحب إلى من أن أصلي الليل كله، ثم أقصّه على الناس". 
ஒரு மனிதர் தமீமுத் தாரி (ரலி) அவர்களிடத்தில்  உங்களின் இரவு நேர வணக்கம் என்ன ? என்று கேட்டார். உடனே அவர்களுக்கு கடுமையான கோபம் வந்து விட்டது. அப்போது அவர்கள், இரவு முழுவதும் நான் தொழுது விட்டு காலையில் எழுந்து அதை மக்களிடத்திலே சொல்வதை விட இரகசியமாக இரவில் ஒரு ரக்கஅத் தொழுவது தான் எனக்கு மிகப் பிரியமானது என்று குறிப்பிட்டார்கள்.

நாம் செய்கின்ற அமல்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், அமல்கள் செய்வதில் நாம் பட்ட சிரமங்கள் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமென்றால், அது அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்யப்பட வேண்டும்.

பிறருக்காக செய்யப்படுகிற காரியங்கள் இணை வைப்பிற்கு நிகரானது.

قال النبي  صلى الله عليه وسلم : ((ألا أخبركم بما هو أخوف عليكم عندي من المسيح الدجال؟: الشرك الخفي أن يقوم الرجل فيصلي، فيزيّن صلاته لما يرى من نظر رجل
தஜ்ஜாலின் வருகையை விட உங்களிடத்தில் நான் அதிகம் பயப்படக்கூடிய விஷயத்தை சொல்லட்டுமா! என்று கேட்டு விட்டு நபி அவர்கள் மறைவான இணைவைப்பு. அதாவது, ஒரு மனிதர், யாரோ ஒருவர் தன்னைப் பார்க்கிறார் என்பதற்காக தன் தொழுகையை அலங்கரித்துக் கொள்வதாகும் என்றார்கள். (ஸஹீஹுல் ஜாமிவு ; 2607)

، عن أبي هريرة رضي الله عنه قال: قال النبي صلى الله عليه وسلم: «إن أولَ الناس يوم القيامة يُقضى عليه رجل استشهد ؛ فأتي به فعرَّفه نعمَه فعرفها ؛ قال: فما عملت فيها؟ قال: قاتلت فيك حتى استشهدت؛ قال الله تعالى: كذبت ولكنك قاتلت لأن يقال: فلان جريء؛ فقد قيل، ثم أمر به فسحب على وجهه حتى ألقي في النار. ورجل تعلّم العلم وعلمه وقرأ القرآن؛ فأتي به فعرَّفه نعمه فعرفها؛ قال: فما عملت فيها؟ قال: تعلمتُ العلم وعلمتُه وقرأت فيك القرآن؛ قال الله تعالى: كذبت ولكنك قرأت القرآن لأن يقال: قارئ فقد قيل ثم أمر به فسحب على وجهه حتى ألقي في النار. ورجل وسع الله عليه وأعطاه من أصناف المال؛ فأتي به فعرفه نعمه فعرفها؛ قال: فما عملت فيها؟ قال: ما تركت من سبيل تحب أن ينفق فيها إلا أنفقتُ فيها لك؛ قال: كذبت ولكنك فعلت ليقال جواد؛ فقد قيل، ثم أمر به فسحب على وجهه حتى ألقي في النار»
மறுமையில், போரில் கலந்து கொண்டு உயிர்த்தியாகம் செய்த ஷஹீத், மார்க்கக் கல்வியைக் கற்று அதை பிறருக்குக் கற்றுக் கொடுத்து குர்ஆனை ஓதிய ஒரு மனிதர், பொருளாதாரத்தை செலவு செய்த ஒரு செல்வந்தர். இந்த மூன்று மனிதர்கள் விசாரணைக்கு நிறுத்தப்படுவார்கள். மூன்று பேரிடத்திலும் நீங்கள் உலகத்தில் என்ன செய்தீர்கள் ? என்று இறைவன் கேட்பான். அவர்கள், உலகில் செய்த அமல்களைக் குறிப்பிடுவார்கள். அப்போது இறைவன், நீங்கள் மூவரும் உங்களை மக்கள் புகழ வேண்டும் என்பதற்குத் தான் அந்த காரியங்களைச் செய்தீர்கள். அந்தப் புகழ் உங்களுக்கு உலகத்திலேயே கிடைத்து விட்டது என்று சொல்லி அவர்களை நரகத்தில் தள்ளும்படி உத்தரவிடுவான். (சுருக்கமான மொழியாக்கம்) (முஸ்லிம் ; 1905)

எனவே அமல்கள் செய்தால் மட்டும் போதாது. அதை பாதுகாக்கவும் வேண்டும். செய்கின்ற அமல்களில் மனத்தூய்மை இல்லையென்றால் அந்த அமல்கள் பாழாகி விடும். நோன்பு நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அந்த நோன்பை பயனுள்ளதாக ஆக்க வேண்டும்.அதில் செய்கின்ற அமல்களும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
رُبَّ صائم ليس له من صوْمه إلا الجُوعُ والعطش، ورُبَّ قائم ليس له مِن قيامه إلا السهر
எத்தனையோ நோன்பாளிகள். அவர்களுக்கு அவர்களின் நோன்பிலிருந்து பசித்திருப்பதையும் தரித்திருப்பதையும் தவிர வேறெதுவும் இல்லை. எத்தனையோ நின்று வணங்கக்கூடிய தொழுகையாளிகள். அவர்களுக்கு அவர்களது தொழுகை யிலிருந்தும் இரவு விழிப்பைத் தவிர வேறு எதுவுமில்லை. அதாவது அதில் பயனில்லை என்று நபி அவர்கள் கூறினார்கள். (அல்ஜாமிவுஸ் ஸகீர் ; 4387)

செய்கின்ற எல்லா அமல்களிலும் வல்லோன் அல்லாஹ் நமக்கு மனத்தூய்மையைத் தருவானாக.


No comments:

Post a Comment