Monday, June 29, 2020

ரமலானும் துஆவும்




இது ரமழான் மாதம். ரமழானில் நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு நாட்களும் பாக்கியமானவை, ஒவ்வொரு நேரங்களும் பாக்கியமானவை,  ஒவ்வொரு தருணங்களும் பாக்கியமானவை.


வானவர்களில் ஹள்ரத் ஜிப்ரயீலை (அலை) அவர்களைப் போல, இறை தீர்க்கதரிசிகளில் மாநபி ரசூலுல்லாஹி அவர்களைப் போல, ஸஹாபாக்களில் ஹள்ரத் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களைப் போல, அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்ற இறைநேசர்களில் கௌஸுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்களைப் போல, இறைவேதங்களில் அருள்மறைக் குர்ஆனைப் போல, நாட்களில் ஜும்ஆவைப் போல, இரவுகளில் லைலத்துல் கத்ரைப் போல மாதங்களில் இந்த ரமலான் சிறப்பானது, மேன்மையானது. இந்த மாதத்தில் தவறிப் போகிற ஒரு நாளுக்குப் பகரமாக வருடம் முழுக்க அமல்களைச் செய்தாலும், நல்ல காரியங்களைப்  புரிந்தாலும் அந்த ஒரு நாளை ஈடுகட்டி விட முடியாது.

ஒரு ரமலான் கிடைத்து அதில் அமல்கள் செய்தவருக்கும் அந்த ரமலான் கிடைக்காமல் போனவருக்கும் இடையே அந்தஸ்துகளில் படித்தரங்களில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகள் இருப்பதாக ஹதீஸில் பார்க்க முடிகிறது.

عن طلحة بن عبيد الله، أن رجلين، قدما على رسول الله وكان إسلامهما جميعا وكان أحدهما أشد اجتهادا من صاحبه فغزا المجتهد منهما فاستشهد ثم مكث الآخر بعده سنة ثم توفي قال طلحة فرأيت فيما يرى النائم كأني عند باب الجنة إذا أنا بهما وقد خرج خارج من الجنة فأذن للذي توفي الآخر منهما ثم خرج فأذن للذي استشهد ثم رجعا إلي فقالا لي ارجع فإنه لم يأن لك بعد فأصبح طلحة يحدث به الناس فعجبوا لذلك فبلغ ذلك رسول الله فقال من أي ذلك تعجبون قالوا يا رسول الله هذا كان أشد اجتهادا ثم استشهد في سبيل الله ودخل هذا الجنة قبله فقال أليس قد مكث هذا بعده سنة قالوا بلى وأدرك رمضان فصامه قالوا بلى وصلى كذا وكذا سجدة في السنة قالوا بلى قال رسول الله فلما بينهما أبعد ما بين السماء والأرض‏ (مسند احمد)
நபி அவர்களின் காலத்தில் இரு நபர்கள் ஒரே நேரத்தில் நபியை சந்தித்து ஒரே நேரத்தில் இஸ்லாத்தை தழுவினார்கள்.அதில் ஒருவர் போரில் கலந்து கொண்டு ஷஹீதாகி விட்டார். இன்னொருவர் அதிலிருந்து ஒரு வருடம் கழித்து தன் இல்லத்தில் மரணமடைந்தார்.ஹள்ரத் தல்ஹா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் ; ஒரு கனவு கண்டேன்.அதில் நான் சுவனத்தின் வாயிலில் நிற்கிறேன்.எனக்கு அருகில் அந்த இரண்டு நபித்தோழர்களும் நிற்கிறார்கள். அப்போது சுவனத்திலிருந்து ஒருவர் வெளியே வந்து வீட்டில் சாதாரணமாக மரணமடைந்த வரை உள்ளே அழைத்துச் சென்றார்கள்.பின்பு இன்னொருவர் வெளியே வந்து போர்க்களத்தில் ஷஹீதானவரை உள்ளே அழைத்துச் சென்றார்கள்.பின்பு என்னிடம் வந்து உனக்கு இன்னும் நேரம் வர வில்லை,எனவே நீ திரும்பி விடு என்றார்கள்.இந்த கனவை நான் மக்களிடம் சொன்ன போது அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.(ஷஹீதானவர் தானே முதலில் சுவனத்தில் நுழைய வேண்டும்) இந்த விஷயம் நபியிடம் சொல்லப்பட்டது.அப்போது அவர்கள் இதை ஏன் வியப்பாக நினைக்கிறீர்கள் எனக்கேட்டார்கள்.அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அவ்விருவரில் ஷஹீதானவர் தானே முதலில் சுவனம் செல்ல வேண்டும்.ஆனால் அவரை விட இவர் முந்தி விட்டாரே என்று கேட்டார்கள்.அதற்கு நபியவர்கள், அவரை விட இவர் ஒரு வருடம் அதிகமாக வாழ்ந்து ஒரு ரமழானை அதிகமாகப் பெற்று நோன்பு நோற்று இந்த ஒரு வருடத்தில் அவரை விட அதிகமான தொழுகைகளைத் தொழ வில்லையா ? என்று கேட்டார்கள்.ஆம் யாரசூலல்லாஹ் என்று கூறினார்கள்.அப்போது நபி அவர்கள், அப்படியானால் அவருக்கும் இவருக்கும் மத்தியிலுள்ள வித்தியாசம் வானம் பூமிக்கிடையில் உள்ள தூரத்தை விட அதிகமானது என்றார்கள். (முஸ்னது அஹ்மது ; 2/370)
 
புனிதமான ரமலான் கிடைப்பதே மிகப்பெரிய பாக்கியம். கிடைத்து அதில் அமல் செய்வது அதை விட பாக்கியம். எனவே கிடைப்பதற்கரிய பொக்கிஷமான நாட்களை நாம் அடைந்திருக்கிறோம்.இதிலுள்ள எந்த நாளையும் எந்த பொழுதுகளையும் வீணாக கழித்து விடாமல் தேவையில்லாத காரியங்களில் செலவழித்து விடாமல் மிக மிக கவனத்தோடு இதை கையாள வேண்டும்.

குறிப்பாக இந்த மாதத்தில் துஆக்களில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். இந்த மாதத்திற்கும் குர்ஆனுக்கும் தொடர்பு இருப்பதைப் போன்றே இந்த மாதத்திற்கும் துஆவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

ثلاثةٌ لا تُرَدُّ دعوتُهم الإمامُ العادلُ والصَّائمُ حينَ يُفطِرُ ودعوةُ المظلومِ
1,நீதமான தலைவரின் பிரார்த்தனை.2,நோன்பு திறக்கும் நேரத்தில் நோன்பாளியின் பிரார்த்தனை.3,அநீதம் இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை இம்மூன்றும் மறுக்கப்படாது என நபி அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் இப்னு ஹிப்பான் ; 7387)

கேட்கப்படும் பிரார்த்தனைகள் தங்கு தடையின்றி அல்லாஹ்வின் அர்ஷின் கதவைத் தட்டும் மிக உயர்ந்த உன்னதமான மாதம் இந்த ரமலான் மாதம். அதனை உணர்த்தும் விதமாகத்தான் அல்லாஹுத்தஆலா ரமதான் மாதத்தின் நோன்பைக் குறித்தும் நோன்பின் சட்டங்கள் குறித்தும் நோன்பு கடமையான விதம் குறித்தும் அந்த ரமலான் மாதத்தில் குர்ஆன் இறக்கப்பட்டது குறித்தும் நோன்பின் கால அளவு குறித்தும்  விரிவாக பேசக்கூடிய பகரா சூராவின் ஒரு இடத்தில் அந்த வசனங்களுக்கு இடையே பிரார்த்தனை குறித்த வசனத்தையும் பதிவு செய்திருக்கிறான்.

إِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ ۖ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ ۖ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ
(நபியே!) எனது அடியார்கள் என்னைப்பற்றி உங்களிடம் கேட்டால் நிச்சயமாக நான் சமீபத்தில் இருக்கிறேன்.பிரார்த்தனை செய்பவர் என்னை அழைத்தால் அவரின் பிரார்த்தனைக்கு பதில் தருகிறேன்.எனவே அவர்கள் என்னிடமே பதிலைத் தேடட்டும்,என்னையே விசுவாசம் கொள்ளட்டும்.அவர்கள் நேர்வழி பெறுவார்கள் (என்று கூறுங்கள்).

அல்குர்ஆனில் பகரா சூராவின் 186 வது வசனமாக இந்த வசனம் இடம் பெற்றிருக்கிறது.இந்த வசனத்தின் முன்பின் தொடரை கொஞ்சம் உற்று நோக்கினால், அல்லாஹுத்தஆலா நோன்பைக் குறித்து பேசிக்கொண்டு வரும் போது அதற்கு இடையில் துஆவைக் குறித்து வரக்கூடிய இந்த வசனத்தை உள்ளே புகுத்தியிருப்பான். ரமலானுக்கும் துஆவிற்கும் ஒரு ஆழமான தொடர்பும் இணைப்பும் இருக்கிறது.ரமலானுக்குள் துஆ இருக்கிறது.துஆவிற்குள் ரமலான் இருக்கிறது என்கிற இரகசியத்தை அல்லாஹுத்தஆலா தன் அழகான இந்த வாசக அமைப்பின் வழியாக சமூகத்திற்கு உணர்த்தி விட்டான்.

பிரார்த்தனை என்பது மனித சமூகத்திற்குக் கிடைத்திருக்கிற மிகப் பெரிய பொக்கிஷம், மிகப்பெரிய வரப்பிரசாதம். காரணம், இதன் மூலம் மனதை வறுத்தும் பாவச் சுமைகளை இறக்கி வைக்க முடியும், உற்ற நண்பனிடம் கூறுவதைப் போல மனக்கஷ்டங்களை எல்லாம் தடையின்றி இறைவனிடம்  கூற முடியும், எல்லாத் தேவைகளையும் கேட்டுப் பெற முடியும், ஆயுளைக் கேட்கலாம், அதிகாரத்தைக் கேட்கலாம், ஆரோக்கியத்தைக் கேட்கலாம், பொருளாதாரத்தைக் கேட்கலாம், நம் வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் உரிமையோடு கேட்டுப் பெரும் வாய்ப்பையும் சந்தர்ப்பத்தையும் அல்லாஹ் துஆவில் நமக்குத் தந்திருக்கிறான்.

இந்த துஆ என்பது உலகத்தில் வேறு எந்த சமுதாயத்திற்கும் வழங்காத நமக்கு மட்டுமே பிரத்யேகமாக அல்லாஹ் வழங்கியிருக்கிற ஒரு பாக்கியம்.

أعطيت هذه الأمة ثلاثا لم تعطهن أمة قبلهم إلا نبي : كان إذا أرسل نبي قيل له : أنت شاهد على أمتك ، وقال تعالى لهذه الأمة : لتكونوا شهداء على الناس وكان يقال للنبي ليس عليك في الدين من حرج ، وقال لهذه الأمة : وما جعل عليكم في الدين من حرج وكان يقال للنبي : ادعني أستجب لك ، وقال لهذه الأمة : ادعوني أستجب لكم
நபியைத் தவிர வேறு எந்த சமூகத்திற்கும் வழங்கப்படாத மூன்று விஷயங்கள் நபி அவர்களின் சமூகத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது.1, ஒரு நபி அவரின் சமூகத்திற்கு சாட்சியாக இருப்பார்கள்.நபி அவர்களின் உம்மத்தை மற்ற சமூகத்திற்கு அல்லாஹ் சாட்சியாக ஆக்கியிருக்கிறான்.2,ஒரு நபியை அல்லாஹ் அனுப்பும் போது மார்க்கத்தில் உங்களுக்கு எந்த சிரமமும் இல்லை என்று சொல்லி அனுப்புவான்.அதே வார்த்தையை இந்த உம்மத்தைப் பார்த்தும் சொல்கிறான்.3,என்னை அழையுங்கள்.உங்களுக்கு நான் பதிலளிக்கிறேன் என்று நபியிடம் அல்லாஹ் கூறுவான்.அதே போன்று இந்த உம்மத்திற்கு சொல்லியிருக்கிறான். (தஃப்ஸீர் குர்துபி)

முந்தைய சமுதாயத்தவர்கள் தங்களுக்கு எந்த தேவையாக இருந்தாலும் நேரடியாக அல்லாஹ்வை அழைக்க முடியாது, அல்லாஹ்விடம் முறையிட முடியாது, அல்லாஹ்விடம் உரிமையாக எதையும் கேட்க முடியாது. ஆனால் நாம் நம்மை படைத்த இறைவனை எந்நேரமும் அழைக்க முடியும், எப்போதும் அழைக்க முடியும்,அவனிடம் முறையிட முடியும், எதையும் உரிமையோடு கேட்டுப் பெற முடியும்,எப்போது அழைத்தாலும் பதில் கொடுக்க அவனும் தயாராக இருக்கிறான்.
மேல்கூறிய அந்த வசனத்தின் படி அல்லாஹ் நம் சமீகத்தில் இருக்கிறான்,நமக்கு மிக மிக அருகாமையில் இருக்கிறான்.ஆனால் நாம் தான் இந்த துஆவை விட்டும் வெகு தூரத்தில் இருக்கிறோம்.

இஸ்லாமிய வரலாறுகளைப் புரட்டிப் பார்த்தால், ஈமான் கொண்ட சமுதாயம் இந்த துஆவின் வழியே எண்ணற்ற நன்மைகளைப் பெற்றிருக்கிறது. அவர்கள் தங்கள் வாழ்வின் இலட்சியங்களை அடைந்தது இந்த துஆவைக் கொண்டு தான், தங்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சியைப் பெற்றது இந்த துஆவைக் கொண்டு தான்,இழந்த பாக்கியங்களை மீட்டெடுத்தது இந்த துஆவைக் கொண்டு தான்,போர்க்களங்களில் வெற்றிக் கனியை சுவைத்ததும் இந்த துஆவைக் கொண்டு தான்.

இஸ்லாத்தின் முதல் போர்க்களம் பத்ரு போர்க்களம்.அந்த நேரத்தில் ஸஹாபாக்களுக்கு போர்களத்தில் எதிரிகளை நேருக்கு நேர் சந்தித்த அனுபவம் கிடையாது,போர்க்களம் குறித்த முறையான பயிற்சி கிடையாது, எதிரிகளை வீழ்த்துகின்ற யுக்திகள் தெரியாது, அவர்களை எதிர்த்து போராட சரியான ஆயுதங்களும் கிடையாது.இப்படி போருக்கான எந்த முன்னேற் பாடுகளும் இல்லை. இருந்தாலும் வெற்றி பெற்றார்கள்.அதற்குக் காரணம் அண்ணல் நபி பெருமான் அவர்களின் உருக்கமான துஆ.

"اللهم أنجز لي ما وعدتني، اللهم آت ما وعدتني، اللهم إن تهلك هذه العصابة من أهل الإسلام لا تعبد في الأرض
இறைவா! எனக்கு வாக்களித்ததை எனக்குக் கொடு.இந்த சிறிய படையை நீ அழித்து விட்டால் பூமியில் நீ வணங்கப்பட மாட்டாய் என்று நபி அவர்கள் பிரார்த்தித்தார்கள். (முஸ்னது அஹ்மது ; 1/112)

சின்னச்சிறிய ஒரு படை பென்னம் பெரிய ஒரு படையை வீழ்த்தி வரலாற்றுச் சிறப்புமிக்க பத்ரு போர்க்களத்தில் வெற்றியை முஸ்லிம்களுக்கு பெற்றுத் தந்தது நபியின் இந்த துஆ தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஸஹாபாக்களில் ஹள்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்களைப் பற்றி நம் எல்லோருக்கும் தெரியும்.மற்ற ஸஹாபாக்களே மெச்சுகின்ற அளவுக்கு ஆச்சரியப்படுகின்ற அளவுக்கு நபிகள் நாயகம் அவர்களின் அதிகமான ஹதீஸ்களை அறிவித்த பெருமை அவர்களுக்கு சொந்தம். ஸஹாபாக்களில் அபூபக்கர்,உமர்,உஸ்மான்,அலி (ரலி) போன்ற அண்ணல் நபியின் உற்ற நெருக்கத்தைப் பெற்ற முன்னோடி ஸஹாபாக்கள் அறிவிக்காத எத்தனையோ ஹதீஸ்களை சமூகத்திற்குத் தந்தவர் ஹள்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள். இத்தனை பெரிய ஆற்றலும் மனன சக்தியும் அவர்களுக்கு கிடைக்கக் காரணமாக இருந்ததும் ஒரு துஆ தான்.

انَّ رجُلًا جاء زيدَ بنَ ثابتٍ فسأَله عن شيءٍ فقال له زيدٌ عليكَ بأبي هُرَيْرَةَ فإنِّي بَيْنا أنا وأبو هُرَيْرَةَ وفلانٌ ذاتَ يومٍ في المسجِدِ ندعو ونذكُرُ ربَّنا عزَّ وجلَّ إذ خرَج علينا رسولُ اللهِ حتَّى جلَس إلينا فسكَتْنا فقال عُودوا للَّذي كُنْتُم فيه قال زيدٌ فدعَوْتُ أنا وصاحبي قبْلَ أبي هُرَيْرَةَ وجعَل النَّبيُّ يُؤمِّنُ على دُعائِنا ثمَّ دعا أبو هُرَيْرَةَ فقال اللَّهمَّ إنِّي أسأَلُكَ مِثْلَ ما سأَلكَ صاحبايَ وأسأَلُكَ عِلمًا لا يُنسَى فقال النَّبيُّ آمينَ فقُلْنا يا رسولَ اللهِ نحنُ نسأَلُ اللهَ عِلمًا لا يُنسَى فقال رسولُ اللهِ سبَقكما بها الغُلامُ الدَّوْسيُّ
(அல்முஃஜமுல் அவ்ஸத் ; 2/54)


وأشار الذهبي، في كتابه «سير أعلام النبلاء» إلى أنه «وكان قدر الله أن يموت والد البخاري وهو مازال طفلاً صغيرًا، لينشأ يتيمًا في حجر أمه، لم تكن بداية البخاري الطفل ككل الأبناء، إذ ابتلاه الله عز وجل في صباه بفقدان بصره، ولكنَّ أمه الصالحة لم تنقطع صلتُها بربها، وكانت تتودد إليه ليل نهار، وهي تدعوه سبحانه راجية أن يرد على صبيها بصره، ويشاء الله أن يسمع دعاءها، فيأتيها إبراهيم عليه السلام يبشرها في المنام يقول لها: (يا هذه، قد ردَّ الله على ابنك بصره لكثرة دعائك)».



உலகத்தில் குர்ஆனுக்கு அடுத்து எல்லோராலும் ஏற்றுக் கொள்கிற எல்லோராலும் அங்கீகரிக்கப்படுகின்ற ஒரு நூல் புகாரி,எந்தச் .சட்டத்தைச் சொன்னாலும் எந்த மஸ்அலாவைச் சொன்னாலும் புகாரியில் இருக்கிறதா அப்ப ok என்று சொல்கின்ற அளவுக்கு அனைவரின் அங்கீகாரத்தையும் பெற்ற நூல் புகாரி. அந்த பிரசித்துப் பெற்ற ஹதீஸ் தொகுப்புகளை நமக்குத் தந்த அல்லாமா புகாரி ரஹ் அவர்கள் சின்ன புள்ளையா இருக்கும் போது அவர்களுக்கு கண் தெரியாது.ஆனால் அவர்களின் தாய் விடாமல் அல்லாஹ்விடம் முறையிட்டு துஆ செய்ததின் விளைவு தான் ஒரு நாள் அல்லாஹ் அவர்களின் கனவில் ஹள்ரத் இப்ராஹீம் அலை அவர்களை காட்டினான். அவர்கள் அந்த தாயின் கனவில் வந்து நீங்கள் செய்த துஆவின் காரணமாக அல்லாஹ் உங்கள் மகனுக்கு பார்வையை மீட்டித் தந்து விட்டான் என்று சுபச்செய்தி சொன்னார்கள்.அவர்கள் சொன்னதைப் போன்றே புகாரி ரஹ் அவர்களுக்கு பார்வை கிடைத்தது. (ஸியரு அஃலாமின் நுபலா)


زنيرة الرومية‏.‏ كانت من السابقات إلى الإسلام، أسلمت في أول الإسلام، وعذبها المشركون‏.‏ قيل‏:‏ كانت مولاة بني مخزوم، فكان أبو جهل يعذبها‏.‏ وقيل‏:‏ كانت مولاة بني عَبْد الدار، فلما أسلمت عَمِيت، فقال المشركون‏:‏ أعمتها اللات والعزى لكفرها بهما‏!‏ فقالت‏:‏ وما يدري اللات والعزى من يعَبْدهما، إنما هذا من السماء، وربي قادر على رد بصري، فأصبحت من الغد ورد الله بصرها، فقالت قريش‏:‏ هذا من سحر مُحَمَّد‏.‏ ولما رأى أبو بكر رضي الله عنه ما ينالها من العذاب، اشتراها فأعتقها، وهي أحد السبعة الذين أعتقهم أبو بكر

வரலாற்றில் ஜின்னீரா என்ற பெண்மனி இடம் பெற்றிருக்கிறார்கள்.ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தை ஏற்று இஸ்லாத்திற்காக எண்ணற்ற வேதனைகளை சந்தித்த பெண்களில் ஒருவர்.அவர்கள் படும் வேதனையைப் பார்த்து ஹள்ரத் அபூபக்கர் ரலி அவர்கள் தான் அந்த பெண்மனியை விலைக்கு வாங்கி உரிமை விட்டார்கள்.ஹள்ரத் அபூபக்கர் ரலி அவர்களால் உரிமை விடப்பட்ட எழுவரில் இவரும் ஒருவர்.அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற நேரத்தில் அவர்கள் பார்வை பரிபோய் விட்டது.அப்போது மக்கத்து முஷ்ரிக்கள் லாத்”, உஜ்ஜா கடவுகளை மறுத்த காரணத்தினால் தான் உனக்கு பார்வை போய் விட்டது என்று ஏளனம் செய்தார்கள்.இல்லை, இல்லை, இது என் இறைவனான அல்லாஹ்வின் செயல்.அவன் என் பார்வையை திருப்பித் தருவதற்கும் தகுதியானவன் என்று கூறி அல்லாஹ்விடம் அழுது மன்றாடி ஒரே இரவில் தன் பார்வையை திரும்பப் பெற்றார்கள். (உஸ்துல் காபா)


இப்படி வரலாற்றில் எண்ணற்ற சான்றுகள் உண்டு.இத்தனை பெரிய ஆற்றல் மிக்க துஆவின் மகத்துவதை விளங்காமல் நாம் அதை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.அதில் கவனம் இல்லாமல் இருக்கிறோம்.அந்த துஆவில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.வல்ல இறைவன் அத்தகைய நல்லதொரு தவ்ஃபீகைத் தருவானாக


1 comment:

  1. மாஷா அல்லாஹ் அருமையான குறிப்பு

    ReplyDelete