Wednesday, August 26, 2020

ஒற்றுமையே நம் பலம்

 


ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்டு நபி அவர்கள் மதினமாநகரம் சென்றவுடன் அவர்கள் ஆரம்பமாக நான்கு காரியங்களை செய்தார்கள்.1 அல்லாஹ்வை தொழுவதற்கு ஒரு பள்ளியை கட்டியெழுப்பினார்கள். 2வது மார்க்கத்தை கற்றுக் கொள்வதற்கும் கற்றுக் கொடுப்பதற்கும் ஒரு மதரஸாவை உருவாக்கினார்கள். இவ்விரண்டும் படைத்தவனோடு தொடர்புடையவை.

இன்னும் 2 விஷயங்களை செய்தார்கள்.அது தான் மிக முக்கியமானவை. சமூகத்தை வழிநடத்தும் ஒரு தலைவர், சமூகத்தின் வாழ்வு தாழ்வுகளுக்கும் பொறுப்பேற்றிருக்கும் ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருந்தால் அவர் சிறந்த தலைவராக போற்றுதலுக்குரிய தலைவராக இருக்க முடியும் என்பதற்கான அடையாளங்கள் தான் அந்த 2 விஷயங்கள். அதிலே ஒன்று தன் குடும்பத்தை இழந்து தன் சொத்துக்களை இழந்து ஒன்றும் இல்லாமல் மதீனாவிற்கு வந்த முஹாஜிர்களை அன்சாரிகளோடு இணைத்தார்கள். அவர்களின் குடும்பத்திலும் அவர்களின் சொத்திலும் அவர்களின் வியாபாரத்திலும் அவர்களின் நல்லது கெட்டது அனைத்திலும் பங்கெடுத்துக் கொள்ளும் ஒரு சூழ்நிலையை முஹாஜிர்களுக்கு ஏற்படுத்தித் தந்தார்கள். இதனால் அவர்களின் எதிர்காலம் பிரகாசமானது.

இன்றைக்கு ஒரு நாட்டை விட்டு இன்னொரு நாட்டிற்கு அல்லது ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு அகதிகளாக போகிற மக்கள் படும் கஷ்டங்களை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் சொந்த நாட்டைத் துறந்து வந்தவர்கள் என்ற உணர்வே இல்லாத அளவுக்கு முஹாஜிர்கள் வாழ்க்கை ஒளிமயமானது.மதீனா வந்த எத்தனையோ பேர் பெரும் செல்வந்தர்காளாக பெரும் கோடீஸ்வரர்களாக உலா வந்தார்கள். அதற்குக் காரணம் நபி அவர்கள் மேற்கொண்ட அந்த முயற்சி. 4 வது அவர்கள் மேற்கொண்ட மிக முக்கியமான பணி அதுவரை பிரிந்து கிடந்த மக்களை ஒன்றிணைந்தார்கள். பிழவுபட்டுப்கிடந்த சமூகத்திற்கு மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தினார்கள்.அவர்கள் செய்த அந்த அறும்பணிகள் தான் பின்னாளில் இஸ்லாம் வளர்ந்தோங்குவதற்கும் செழித்தோங்குவதற்கும் அடிப்படையாக அமைந்தது.

பொதுவாக ஒரு குடும்பமாக இருக்கட்டும் ஒரு சமூகமாக இருக்கட்டும் அல்லது ஒரு நாடாக இருக்கட்டும் பிரிவினை இல்லாமல் பிழவுகள் இல்லாமல் சண்டை சச்சரவுகள் இல்லாமல் ஒற்றுமையோடு பயணிக்க வேண்டும்.அப்போது தான் அந்த குடும்பத்திலும் அந்த சமூகத்திலும் அந்த நாட்டிலும் அமைதி நிலவும்.அவைகளுக்கு பலமும் ஏற்படும்.

وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ ۖ وَاصْبِرُوا ۚ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ

அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கட்டுப்படுங்கள்.கருத்து வேற்றுமை கொள்ளாதீர்கள். (அவ்வாறு கருத்து வேற்றுமை கொண்டால்) நீங்கள் கோழையாகி விடுவீர்கள்.உங்கள் பலம் போய் விடும். பொறுமையை மேற்கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான். (அல்குர்ஆன் : 8 ; 46)

ஒரு சமூகத்தின் அடிப்படை ஒற்றுமை.ஒற்றுமை தான் ஒரு சமூகத்தின் பலம்.ஒற்றுமை இல்லாமல் போனால் ஒரு சமூகம் அடையாளம் தெரியாமல் போய் விடும் என்ற  இந்த வசனத்தின் பொருள் எந்தளவு உண்மையானது என்பதை இன்றைக்கு நாம் பார்த்துக் கொண்டிருக்கிற நிதர்சனங்கள் நமக்கு கோடிட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறது.

நபித்தோழர்கள் இந்த இறைவசனத்திற்கு கட்டுப்பட்டு தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள்.அதனால் தான் அவர்கள் வீரத்தில் சிறந்து விளங்கினார்கள். பலம் மிக்க சமூகமாக காட்சி தந்தார்கள். பல நாடுகளை மட்டுமல்ல எண்ணற்ற மக்களின் இதயங்களையும் வென்றார்கள். அவர்கள் வெற்றி கொண்ட நாடுகளின் படைபலத்துடன் ஒப்பிடும் போது அந்த நபித்தோழர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு தான்.என்றாலும் 30 வருடங்களுக்கும் குறைவான காலகட்டத்தில் கிழக்கிலும் மேற்கிலும் எண்ணற்ற நாடுகளை கைப்பற்றி அங்கே இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவினார்கள்.

இன்றைக்கு ஆசியாவில்- 46 நாடுகள்; ஆப்பிரிக்காவில்- 30 நாடுகள் ; ஐரோப்பாவில் – 4 அமெரிக்காவில் – 2 என மொத்தம்  82  முஸ்லிம் நாடுகள் இருக்கிறது.  இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 17 விழுக்காடு முஸ்லிம்கள் இருக்கிறார்கள் உலக மக்கட்தொகையில் கால் பகுதி முஸ்லிம்கள். அவ்வாறு இருந்தும்,  அரசியல், அதிகாரம், அறிவியல்இராணுவம்ஆயுதம்,பொருளாதாரம்வளர்ச்சி இப்படி எல்லாவற்றிலும் குறிப்பிட்டுச் சொல்லும் இடத்தில் முஸ்லிம்களோ முஸ்லிம் நாடுகளோ இல்லை.

உலகத்தின் கால் பகுதியைப் பிடித்திருக்கிற நம்மால் ஏன் எதிலும் காலூன்ற முடிய வில்லை என்று ஆராய்ந்து பார்த்தால் அன்றைக்கு அந்த ஸஹாபாக்களிடம் இருந்த இறை நம்பிக்கையும் ஈமானும் நம்மிடம் இல்லை என்று உள்ரங்கமான ஒரு காரணம் சொல்லப்பட்டாலும் வெளிப்படையான காரணம் என்னவென்றால் நம்மிடம் ஏற்பட்டிருக்கும் பிரிவினைகளும்,பிழவுகளும்,சண்டை சச்சரவுகளும், உட்பூசல்களும் தான்.

ஸஹாபாக்களிடத்தில் அன்றைக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தது. சிந்தனையிலும் ஆய்விலும் ஸஹாபாக்கள் ஒருவருக்கொருவர் வேறுபட்டிருந்தார்கள்.ஆனால் அவர்கள் அணி அணியாகப் பிரிந்து நிற்க வில்லை. சில்லறைக் காசாகச் சிதறி விடவில்லை. மாறாக, ஒருவருக்கொருவர் இணக்கமாக இருந்தார்கள். எதிரிகளை ஓரணியில் நின்று சந்தித்தார்கள்.

 قَالَ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ يَومَ الأحْزَابِ: لا يُصَلِّيَنَّ أحَدٌ العَصْرَ إلَّا في بَنِي قُرَيْظَةَ فأدْرَكَ بَعْضُهُمُ العَصْرَ في الطَّرِيقِ، فَقَالَ بَعْضُهُمْ: لا نُصَلِّي حتَّى نَأْتِيَهَا، وقَالَ بَعْضُهُمْ: بَلْ نُصَلِّي، لَمْ يُرِدْ مِنَّا ذلكَ، فَذُكِرَ ذلكَ للنبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ فَلَمْ يُعَنِّفْ واحِدًا منهمْ.

அஹ்ஸாப் போர்க்களத்தின் நாளில் நபி அவர்கள் ஸஹாபாக்களிடம் நீங்கள் அனைவரும் பனூகுரைளாவில் தான் அஸர் தொழ வேண்டும் என்றார்கள். ஆனால் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு முன்பே அஸர் நேரம் வந்து விட்டது. அவர்களில் சிலர், நபியின் உத்தரவு அங்கே சென்று தொழ வேண்டும் என்பது தான். எனவே நாங்கள் இங்கே தொழ மாட்டோம் என்று கூறி பயணத்தைத் தொடர்ந்தார்கள். இன்னும் சிலர், அஸர் வக்துக்கு அந்த இடத்திற்குப் போய் விட வேண்டும் என்பது தான் நபியவர்களின் அந்த வார்த்தைக்கான பொருள், இடையில் தொழக்கூடாது எனபதல்ல என்று கூறி இடையிலேயே அஸரைத் தொழுத்தார்கள்.இதைப் பற்றி நபி அவர்களிடம் சொல்லப்பட்ட போது அவர்கள் யாரையும் கடிந்து கொள்ள வில்லை. இரண்டையுமே வரவேற்றார்கள். (புகாரி ; 4119)

இது ஒரு உதாரணம் தான். இப்படி எண்ணற்ற விஷயங்கள் ஸஹாபாக்களிடம் இருந்தது.ஆனால் இந்த கருத்து வேறுபாடுகளும் கருத்து வேற்றுமைகளும் அவர்களை இரு அணிகளாக பிரிக்க வில்லை.அவர்களுக்கு மத்தியில் பிரிவினையையோ பிழவுகளையோ ஏற்படுத்த வில்லை. அதனால் தான் இரண்டையும் அவர்கள் அங்கீகரித்தார்கள். 

ஆனால் இன்றைக்கு நம்மிடம் கருத்து வேறுபாடுகளோடு கொள்கை வேறுபாடுகளும் இணைந்து நமக்கு மத்தியில் பிரிவினைகளையும் பிழவுகளையும் ஏற்படுத்தி விட்டது.  ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமையே பலம், ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம், தனி மரம் தோப்பாகாது, நான், நீ என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது நாம் என்று சொன்னால் தான் உதடுகள் ஒட்டும் என்றெல்லாம் பலமொழிகளைச் சொல்வதோடு நிறுத்திக் கொள்கிறோம். நம்மிடம் உண்மையான ஒற்றுமை இல்லை.மஹல்லாவை வைத்து பிரிவினை, கொள்கையை வைத்து பிரிவினை, சிந்தனையை வைத்து பிரிவினை, செய்கின்ற அமல்களை வைத்தும் பிரிவினை.எல்லா வகையிலும் பிரிந்து சின்னாபின்னமாகிக் கிடக்கிறோம்.அதனால் தான் நம்மால் எதையும் சாதிக்க முடிய வில்லை.நமக்கான உரிமையை பெற்றுக் கொள்ள முடிய வில்லை.

சர்வதேச அளவிலும் தேசிய அளவிலும் முஸ்லிம்களை அரசியல் ரீதியாக பலகீனப்படுத்துவதில் யூத நஸாராக்களின் சூழ்ச்சிகள் நீண்ட காலமாக அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இரண்டு பேர் கூட ஒற்றுமையாக இருந்து  விடக் கூடாது, என்ற நோக்கில் சதிகளை செய்து கொண்டிருந்தார்கள்.அந்த சதி வலையில் சிக்க நாம் நம் ஒற்றுமை இழந்து கொண்டிருக்கிறோம்.

சமூகத்தை பிரிப்பது அல்லது ஒரு குடும்பத்தை பிரிப்பது ஷைத்தானின் குணம்.

انما يريد الشيطان ان يوقع يينكم العداوة والبغضاء

உங்களுக்கிடையில் விரோதத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துவதற்குத்தான் ஷைத்தான் விரும்புகிறான்.  (அல்குர்ஆன் : 5  ; 91)

إنَّ إبْلِيسَ يَضَعُ عَرْشَهُ علَى الماءِ، ثُمَّ يَبْعَثُ سَراياهُ، فأدْناهُمْ منه مَنْزِلَةً أعْظَمُهُمْ فِتْنَةً، يَجِيءُ أحَدُهُمْ فيَقولُ: فَعَلْتُ كَذا وكَذا، فيَقولُ: ما صَنَعْتَ شيئًا، قالَ ثُمَّ يَجِيءُ أحَدُهُمْ فيَقولُ: ما تَرَكْتُهُ حتَّى فَرَّقْتُ بيْنَهُ وبيْنَ امْرَأَتِهِ، قالَ: فيُدْنِيهِ منه ويقولُ: نِعْمَ أنْتَ.

இப்லீஸ் தன் இருப்பிடத்தை நீரில் அமைத்திருக்கிறான்.தன் படைப்பட்டாளங்களை அனுப்பி வைக்கிறான்.அவர்களில் அதிகம் குழப்பம் செய்பவன் இப்லீஸுக்கு மிகவும் நெருக்கமானவனாக இருக்கிறான்.அவர்களில் ஒவ்வொருவரும், தான் செய்தவற்றை இப்லீஸிடம் வந்து சொல்கின்றனர். அதில் ஒரு ஷைத்தான், நான் கணவன் மனைவிக்கு மத்தியில் சண்டையை ஏற்படுத்தி அவர்களைப் பிரித்து விட்டேன் என்று கூறுவான். அவனை இப்லீஸ் தன் பக்கம் நெருக்கிக் கொண்டு நீ தான் மிக்க நல்லவன் என்று கூறுவான். (முஸ்லிம் ; 2813)

துருக்கியின் தலைமையில் கிலாஃபதெ உஸ்மானிய்யா ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. நிறமும் மொழியும் வேறுபட்டிருந்தாலும் இஸ்லாத்தின் போதனைகளை ஏற்றுக் கொண்ட சமுதாயம் ஒற்றுமையுடன் வீர நடை போட்டுக் கொண்டிருந்தது. பாலஸ்தீனை தன்னகபடுத்த இஸ்லாமிய கிலாஃபத்தின் ஆட்சி தடையாக இருந்தது. எனவே அதை வீழ்த்த முடிவெடுத்த யூதர்கள், முதலில் குறிவைத்தது இஸ்லாமிய இளைஞர்களைத்தான். இஸ்லாமிய இளைஞர்களுடன் தாங்களும் முஸ்லிம்களே என நுழைந்த யூதர்கள் கிலாபத் ஆட்சிமுறை சர்வாதிகார ஆட்சி முறை என்று கூறி கிளர்ச்சி செய்ய வைத்து யூதர்கள் தாங்கள் நினைத்ததை சாதித்துக் கொண்டனர்.இறுதியாக, 1924 ஆம் ஆண்டு மார்ச் மூன்றாம் தேதி முழு இஸ்லாமிய உலகின் தலைமையாக இருந்த கிலாஃபதெ உஸ்மானிய்யா தகர்க்கப் பட்டு விட்டது.

எங்கே ஒற்றுமை சீர்குலைகிறதோ அங்கே பலம் குறைந்து தோற்றுப்போகும் நிலை ஏற்படும்.சமீபத்தில் வளைதளத்தில் ஒரு வீடியோவை பார்க்க நேர்ந்தது. ஒரு சிங்கம் ஒரு காட்டெருமையை பிடித்திருக்கிறது.இதைப் பார்த்த மற்ற காட்டெருமைகள் தன் இனத்தைக் காப்பாற்றும் முயற்சியில் ஒன்றாக கூடி சிங்கத்தை சூழ்ந்து கொண்டு விரட்டியது.இதனால் கலங்கிப் போன சிங்கம் ஓடிவிட்டது. 

சிங்கம் என்றாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது அதன் கம்பீரமும் அதன் வீரமும் தான். காட்டுக்கே ராஜாவான அந்த சிங்கம் எதற்கும் அஞ்சாது. யாருக்கும் அஞ்சாது.தன் வீரத்தாலும் பலத்தாலும் தன்னை விட பெரிய அளவில் இருக்கிற யானையைக்கூட வீழ்த்தி விடும். அப்படிப்பட்ட சிங்கத்தையே ஓட ஓட விரட்டியது காட்டெருமைகள். காரணம் அவைகளின் அந்த ஒற்றுமை. பலம் நிறைந்த சிங்கம் தனியாக இருந்ததால் அதன் பலம் குன்றிப் போனது. சிங்கத்தை விட பலம் குறைந்திருந்தாலும் கூட்டமாக இருந்ததினால் அதன் பலம் கூடியது.இது தான் ஒற்றுமையின் பலம்.

 إنِ الشَّيطانَ ذِئبٌ كذئبِ الغَنمِ يأخذُ الشَّاةَ القاصِيَةَ والنَّاحيةَ ، فإيَّاكُم والشِّعابَ ، وعليكُم بالجماعةِ والعامَّةِ والمسجِدِ

கூட்டத்தை விட்டு தனித்து ஓரமாக நிற்கிற ஆட்டைப் பிடிக்கிற ஓநாயைப் போன்று ஷைத்தானும் ஒரு ஓநாயாகும்.பிரிந்து விடுவதை நான் எச்சரிக்கிறேன். ஜமாஅத்தையும் மஸ்ஜிதையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். (அத்தர்கீப் வத்தர்ஹீப் ; 1/176)                                                                                   

நம்மை வழிகெடுக்கும் ஷைத்தானிடமிருந்தும் நம்மை அழிக்க நினைக்கும் யூத ஷைத்தான்களிடமிருந்தும் நாம் நம்மைப் பாதுகாக்க வேண்டுமென்றால் இயக்கங்களாலும் கொள்கைகளாலும் மற்ற எந்த விஷயங்களாலும் பிரிந்து விடாமல் நாம் ஓர் குடைக்குள் ஒன்றிணைய வேண்டும். அல்லாஹ் அத்தகைய வலுவான ஒற்றுமையை நம் சமூகத்திற்குத் தருவானாக


No comments:

Post a Comment