Wednesday, August 26, 2020

அன்பளிப்புகளைக் கொண்டு ஒற்றுமையை ஓங்கச் செய்வோம்

 

ஒற்றுமை தான் நமக்கான பலம், ஒற்றுமை தான் நமக்கான அடிப்படை. அந்த ஒற்றுமை சீர்குலைந்து விட்டால் நாம் பலம் குன்றிப் போய் விடுவோம். ஸஹாபாக்களிடம் அந்த ஒற்றுமை இருந்ததினால் அவர்கள் சொற்பமாக இருந்தும் குறுகிய காலத்தில் அவர்களால் மிகப்பெரிய வெற்றியைப் பெற முடிந்தது. இன்றைக்கு உலகில் நாம் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருந்தும் பலத்தில் சிறுபான்மையாகத்தான் இருக்கிறோம். அதற்கு காரணம் ஒற்றுமை இல்லாமல் போனது என்று கடந்த வார ஜும்ஆவில் குறிப்பிட்டோம்.

நமக்குள் ஒற்றுமை இல்லை, ஒற்றுமை இல்லை என்று பேசிக் கொண்டே இருப்பதை விட அதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும். ஒற்றுமை வேண்டும் ஒற்றுமை வேண்டும் என்று முழங்குவதை விட நம்மிடம் இல்லாமல் போன ஒற்றுமையை உருவாக்குவதற்கும் அதை வளர்ப்பதற்கும் என்ன செய்யலாம் என்று யோசிப்பது தான் புத்திசாலித்தனம்.அது தான் காலத்தின் கட்டாயம். இஸ்லாம் ஒற்றுமை வேண்டும் என்று சொல்லி அதன் அவசியத்தை உணர்த்துவதோடு ஒற்றுமைக்கான வழிகளையும் நமக்குக் கோடிட்டுக் காட்டுகிறது.இஸ்லாம் கோடிட்டுக் காட்டுகிற ஒற்றுமைக்கான வழிகளை ஒற்றுமைக்கான சாத்தியக்கூறுகளை நாம் பின்பற்றினால் நம்மிடம் ஒற்றுமை மலர ஆரம்பித்து விடும்.அந்த அடிப்படையில் நம்மில் ஒற்றுமை ஓங்க இஸ்லாம் காட்டித்தரும் முதல் விஷயம் அன்பளிப்பு.

ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் இவ்வுலக வாழ்க்கையில் நம்மிடையே ஒற்றுமையும், பாசமும் மேலோங்க வேண்டும் என்பதற்காக, இஸ்லாம் அடையாளப்படுத்திய அற்புதமான விஷயம் தான் அன்பளிப்பு.

تهادوا تحابوا

ஒருவருக்கொருவர் அன்பளிப்புகளை பரிமாரிக் கொள்ளுங்கள். அன்பாக இருங்கள். (ஸஹீஹுல் ஜாமிவு ; 3004)

நம்மிடையே அன்பும் பிரியமும் ஒற்றுமையும் ஏற்பட வேண்டுமென்றால் நமக்கு மத்தியில் அன்பளிப்புகள் பரிமாறப்பட வேண்டும். அன்பளிப்புகள் அன்பை வளர்க்கிறது. பிரியத்தை உருவாக்கிறது. ஒற்றுமையை ஓங்கச் செய்கிறது.

ஸஃப்வான் என்பவர் நபி அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கு எண்ணற்ற தொந்தரவுகளையும் இன்னல்களையும் கொடுத்த உமய்யா பின் கலஃப் என்பவனுடைய மகன்.உமய்யா பின் கலஃப் பத்ர் போர் களத்தில் கொல்லப்பட்டான்.தந்தை கொலைக்கு பழிவாங்க வேண்டும் என்று கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக நபியைக் கொல்வதற்காக திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார்.ஆனால் முடிய வில்லை. ஹிஜ்ரி 8 ஃபத்ஹ் மக்காவிற்கு பிறகு மக்கா நகரம் முழுக்க நபி அவர்களின் கட்டுப்பாட்டுக் கீழ் வந்த பிறகு இத்தனை காலங்களாக நாம் நபிக்கும் அவர்களது தோழர்களுக்கும் எண்ணற்ற துயரங்களைக் கொடுத்திருக்கிறோம். இப்போது மக்காவே அவரது கையில் வந்து விட்டது.இப்போது நம்மை எண்ண செய்வார்களோ என்று மக்காவாசிகள் கதிகலங்கிப் போய் நின்ற அந்த நேரத்தில் நபி அவர்கள் அத்தனை பேருக்கும் பொது மன்னிப்பை வழங்கினார்கள். ஆனால் நான்கு பேரை மட்டும் குறிப்பிட்டு அவர்களை எங்கு கண்டாலும் கொன்று விடுங்கள் என்று சொன்னார்கள்.அதில் ஸஃப்வானுடைய பெயர் இல்லா விட்டாலும் பயந்து போய் கடலில் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்தார். அப்போது தான் அவரின் சகோதரர் அவருக்கான பாதுகாப்புக் கடிதத்தை நபியிடமிருந்து பெற்றுக் கொண்டு அவரை சந்தித்து அவரை நபியிடம் அழைத்து வந்தார்.இங்கே உனக்கு முழுமையான பாதுகாப்பு உண்டு என்று அவரை அங்கே தங்க வைத்தார்கள். அதே வருடத்தில் ஹுனைன் போர்களம் நடந்து அதில் எண்ணற்ற கனீம்த் பொருட்கள் கிடைத்தது. அதில் பெரும் பகுதியை ஸஃபானுக்கு நபி அவர்கள் கொடுத்தார்கள்.அதனால் ஈர்க்கப்பட்டு அவர் இஸ்லாத்தைத் தழுவினார்.

 

أنَّ صَفْوَانَ قالَ: وَاللَّهِ لقَدْ أَعْطَانِي رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ ما أَعْطَانِي، وإنَّه لأَبْغَضُ النَّاسِ إلَيَّ، فَما بَرِحَ يُعْطِينِي حتَّى إنَّه لأَحَبُّ النَّاسِ إلَيَّ

நபி அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். மக்களிலேயே எனக்கு மிகவும் வெறுப்பானவராக அவர்கள் தான் இருந்தார்கள். ஆனால் அவர்கள் எனக்குக் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். இறுதயாக மக்களிலேயே நபி அவர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்களாக ஆகி விட்டார்கள் என ஸஃப்வான் ரலி அவர்கள் கூறுகிறார்கள். (முஸ்லிம் ; 2313)

தன்னைக் கொல்ல வந்த ஒரு மனிதரையும் தனக்கு பிரியமானவராக நபி அவர்கள் மாற்றினார்கள் என்று விளங்குகிற அதே நேரத்தில், அதற்காக அவர்கள் கையாண்ட யுக்தி அன்பளிப்பு. மக்களிலேயே மிக மிக வெறுப்பிற்குரிய இருந்த நபிகள் பெருமானார் அவர்கள் மக்களிலேயே மிக மிக பிரியத்திற்குரியதாக அவருக்கு மாறுகிறார்கள் என்றால் இங்கே தான் நாம் அன்பளிப்பின் ஆற்றலை புரிந்து கொள்ள வேண்டும்.

உள்ளங்களை இணைத்து பிரியத்தை உருவாக்கும் ஆற்றல் அன்பளிப்புக்கு உண்டு.

تهادوا فان الهدية تذهب وحر الصدر

உங்களுக்குள் அன்பளிப்புகளை பரிமாரிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அன்பளிப்பு என்பது உள்ளத்தில் இருக்கும் வெறுப்பை நீக்கி விடும். (திர்மிதி ; 2130)

எங்கே ஒற்றுமை சிதைந்து போய்க்கிடக்கிறதோ  உள்ளங்கள் உடைந்து போய் இருக்கிறதோ அங்கே கொடுக்கப்படுகிற சின்ன சின்ன அன்பளிப்புகள் சிதைந்து போன ஒற்றுமையை சீர் செய்து விடும். உடைந்து போன உள்ளங்களை இணைத்து விடும்.

ஒரு கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன் இருந்தான்.வேட்டைக்காரனிடம் அவன் வேட்டைக்கு பயன்படுத்தும் வேட்டை நாய்கள் சில இருந்தன. வேட்டைக்காரனின் நாய்கள் அடிக்கடி வேலி தாண்டி சென்று விவசாயியின் ஆட்டுக்குட்டிகளை துரத்துவதும் கடித்து குதறுவதுமாக இருந்தன. இதனால் கலக்கமுற்ற விவசாயி தன் அண்டைவீட்டுக்காரனான வேட்டைக்காரனை சந்தித்து உன் நாய்களை கொஞ்சம் பார்த்துக்கொள். அவை அடிக்கடி என் பகுதிக்கு வந்து ஆடுகளை தாக்குகின்றன. காயப்படுத்துகின்றனஎன்றான்.  வேட்டைக்காரன் அதை சட்டை செய்யவேயில்லை. செவிடன் காதில் ஊதிய சங்காக அவை எந்த பயனும் இன்றி போனது.

ஒரு முறை நாய்கள் இதே போல வேலி தாண்டி வந்து பட்டிக்குள் புகுந்து பல ஆட்டுக்குட்டிகளை கடித்துக் குதறின.இந்த முறை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்று மீண்டும் வேட்டைக்காரனிடம் புகார் செய்ய சென்றான் விவசாயி.வேட்டைக்காரன் இந்த முறை சற்று கோபத்துடன், “இதோ பார்ஆட்டை துரத்துவதும் கடிப்பதும் நாயோட சுபாவம். அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள்என்றான்.

இதைத் தொடர்ந்து ஊர் பஞ்சாயத்து தலைவரை சென்று சந்தித்த விவசாயி, வேட்டைக்காரனின் நாய்களால் தான் படும் துன்பத்தை எடுத்துக்கூறி, அவன் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். முன்பொரு முறை பஞ்சாயத்து தலைவரின் மகளை ஒரு சிறிய விபத்திலிருந்து விவசாயி காப்பாற்றி யிருப்பதால் பஞ்சாயத்து தலைவருக்கு விவசாயி மீது பெரும் மதிப்பு உண்டு.

விவசாயிக்கும் வேட்டைக்காரனுக்கும் இடையே உள்ள பிணக்கை பற்றி விசாரித்து தெரிந்து கொண்ட பஞ்சாயத்துத் தலைவர், “என்னால் பஞ்சாயத்தை கூட்டச் செய்து அந்த வேட்டைக்காரனை தண்டித்து, அபராதம் விதித்து அவன் நாய்களை கட்டிப்போடச் செய்ய முடியும். ஆனால், நீ தேவையின்றி இதனால் ஒரு எதிரியை சம்பாதிக்க நேரிடும். உனக்கு அது சொந்த வீடு. அவனுக்கும் அது சொந்த வீடு. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் தினமும் பார்க்க வேண்டும். அப்படியிருக்கையில் பக்கத்து வீட்டுக்காரன் நண்பனாக இருப்பதில் உனக்கு விருப்பமா அல்லது எதிரியாக இருப்பதில் விருப்பமா?”

 

பஞ்சாயத்து தலைவர் சொல்வதில் உள்ள யதார்த்தத்தை புரிந்து கொண்ட விவசாயி, அண்டை வீட்டுக்காரனை ஒரு நண்பனாக பார்ப்பதில் தான் தனக்கு விருப்பம் என்றான்.சரிஉன் ஆட்டுக்குட்டிகளும் பத்திரமாக இருப்பது போலவும் அவனும் உன் நண்பனாக இருப்பது மாதிரியும் நான் ஒரு தீர்வை சொல்கிறேன்கேட்பாயா?” என்று கேட்டார்.நீங்கள் எதைச் சொன்னாலும் கேட்கிறேன்என்றான் விவசாயி. பஞ்சாயத்து தலைவர் சில விஷயங்களை அவரிடம் சொன்னார்.வீட்டுக்கு வந்த விவசாயி பஞ்சாயத்து தலைவர் தன்னிடம் சொன்ன விஷயங்களை பரிட்சித்து பார்க்க முற்பட்டான்.

தனது பட்டியில் இருக்கும் ஆட்டு குட்டிகளிலேயே மிகவும் அழகான இரண்டு குட்டிகளை எடுத்துச் சென்று, வேட்டைக்காரனின் இரண்டு மகன்களுக்கும் தலா ஒரு குட்டி விளையாட பரிசளித்தான். குழந்தைகளுக்கு தாங்கள் விளையாட புதிய தோழர்கள் கிடைத்ததில் ஒரே குஷி. இருவரும் அந்த குட்டிகளுடன் விளையாடி மகிழ்ந்தார்கள். தன் குழந்தைகளின் புதிய தோழர்களை பாதுக்காக்க, தற்போது வேட்டைக்காரன், நாய்களை சங்கலியில் கட்டிப்போட வேண்டியிருந்தது. யாரும் சொல்லாமலே அவன் நாய்களை சங்கிலியால் பிணைத்தான்.

தனது மகன்களுக்கு விவசாயி ஆட்டுக்குட்டிகள் பரிசளித்ததைத் தொடர்ந்து பதிலுக்கு அவனுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பி, தான் காட்டிலிருந்து கொண்டு வந்த சில அரிய பொருட்களை பரிசளித்தான் வேட்டைக்காரன். ஆக இருவருக்குள்ளும் நல்லுறவு வளர்ந்து நாளடைவில் நல்ல நண்பர்களாகி விட்டனர்.

அன்பளிப்பு ஒற்றுமையை உருவாக்குகிறது. ஒற்றுமைக்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்துகிறது. அதனால் தான் நபி அவர்கள் ஒருவருக்கொருவர் அன்பளிப்புகளை பரிமாரிக் கொள்ள வேண்டும் என்று ஆர்வப்படுத்தினார்கள்.அன்பளிப்புகளை யார் கொடுத்தாலும் அதை மறுக்காமல் யோசிக்காமல் பெற்றுக் கொள்ளும் பழக்க முடையவர்களாக இருந்திருக்கிறார்கள்.

 

جاءَتِ امْرَأَةٌ إلى النبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ ببُرْدَةٍ، فَقالَ سَهْلٌ لِلْقَوْمِ: أتَدْرُونَ ما البُرْدَةُ؟ فَقالَ القَوْمُ: هي الشَّمْلَةُ، فَقالَ سَهْلٌ: هي شَمْلَةٌ مَنْسُوجَةٌ فِيهَا حَاشِيَتُهَا، فَقالَتْ: يا رَسولَ اللَّهِ، أكْسُوكَ هذِه، فأخَذَهَا النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ مُحْتَاجًا إلَيْهَا فَلَبِسَهَا، فَرَآهَا عليه رَجُلٌ مِنَ الصَّحَابَةِ، فَقالَ: يا رَسولَ اللَّهِ، ما أحْسَنَ هذِه، فَاكْسُنِيهَا، فَقالَ: نَعَمْ فَلَمَّا قَامَ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ لَامَهُ أصْحَابُهُ، قالوا: ما أحْسَنْتَ حِينَ رَأَيْتَ النبيَّ صَلَّى اللهُ عليه وسلَّمَ أخَذَهَا مُحْتَاجًا إلَيْهَا، ثُمَّ سَأَلْتَهُ إيَّاهَا، وقدْ عَرَفْتَ أنَّه لا يُسْأَلُ شيئًا فَيَمْنَعَهُ، فَقالَ: رَجَوْتُ بَرَكَتَهَا حِينَ لَبِسَهَا النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ، لَعَلِّي أُكَفَّنُ فِيهَا

ஒரு நாள் ஒரு பெண்மனி தன் கையால் நெய்த ஒரு மேலங்கியை நபி அவர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்தார்கள்.நபி அவர்களும் அதை வாங்கிக் கொண்டு அணிந்து கொண்டார்கள்.அதை ஒரு ஸஹாபி பார்த்து, இது எவ்வளவு அழகாக இருக்கிறது! இதை எனக்கு அணியத் தருவீர்களா என்று கேட்டார். நபியவர்களும் சரி என்று சொன்னார்கள். இதைக் கண்ட மற்ற ஸஹாபாக்கள், என்ன காரியம் செய்து விட்டீர். நபியவர்கள் தனக்கு தேவை இருந்ததால் தான் அதை அணிந்து கொண்டார்கள். அதை கேட்டு விட்டீரே! தன்னிடம் கேட்டால் நபியவர்கள் இல்லையென்று மறுக்க மாட்டார்கள் என்பதினால் கேட்டு விட்டீரோ என்று கூறி ஏசினார்கள். இல்லை, இல்லை, நபியவர்கள் மேனியில் பட்ட அந்த துணியை வாங்கி நான் இறந்து என்னை அடக்கம் செய்கிற போது என்னைப் போர்த்தும் கஃபன் துணியாக அதை ஆக்கிக் கொள்வதற்குத்தான் ஆசைப்பட்டேன் என்று அந்த ஸஹாபி கூறினார்கள். (புகாரி ; 6036)

 

சாதாரணமாக உம்ராவிற்கோ ஹஜ்ஜிற்கோ பயன்படுத்திய இஹ்ராம் துணியை வீணடித்து விடாமல் தூக்கி வீசி விடாமல் அதை நாம் நம்முடைய கஃபன் துணியாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பாதுகாத்து வைத்துக் கொள்கிறோம். இதை நமக்கு கற்றுத்தந்தது ஸஹாபாக்கள் தான் என்பதை இந்த வரலாறு நமக்குக் கூறுகிறது.

இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம் நபி அவர்கள் அன்பளிப்புகள் தரப்பட்டால் அதை மறுக்காமல் வாங்கியிருக்கிறார்கள். பிறருக்கும் கொடுத் திருக்கிறார்கள் என்பது தான்.

எனவே அன்பளிப்புகளைக் கொடுத்துப் பழக வேண்டும். கொடுக்கப்படுகின்ற அன்பளிப்புகளை வாங்கியும் பழக வேண்டும்.வீட்டில் எதாவது விஷேசம் என்றால் ஏதாவது விஷேசமான உணவோ விஷேசமான குழம்போ சமைத்தால் அதை பக்கத்து வீடுகளுக்கு கொஞ்சம் கொடுத்து விட வேண்டும்.அதைப் பார்த்து அவர்களும் அவர்களது விஷேசத்தின் போது அப்படி கொடுத்து விடுவார்கள். இதன் மூலம் இரு வீடுகளுக்கு மத்தியில் அன்பும் ஒற்றுமையும் ஏற்படும்.இப்படியே நண்பர்கள் சகோதரர்கள் கணவன் மனைவி,பெற்றோர் பிள்ளைகள், ஆசிரியர் மாணவர்கள் இப்படி எல்லா உறவுகளுக்குள்ளேயும் அன்பளிப்புகள் பரிமாறப்பட வேண்டும்.அது அந்த உறவுகளை மென்மேலும் பலப்படுத்தும்.இன்றைக்கு அன்பளிப்புகள் குறைந்து போனது.குறைந்து போனது என்று கூறுவதை விட இல்லாமல் காணாமல் போய் விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

இன்றைக்கு உறவுகள் பலமில்லாமல் போனதற்கு காரணம் இது தான். குறிப்பாக கணவன் மனைவி உறவு ரொம்ப பலவீனம் கண்டிருக்கிறது. அதற்கு காரணம் அன்புக்கு அடையாளமாக இருக்கிற அன்பளிப்புகள் காணாமல் போய் விட்டது. அன்பளிப்புகளைக் கொடுத்து அன்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது. இஸ்லாம் கூறும் இந்த பண்பை நாம் நம்மில் உருவாக்கிக் கொள்வதற்கும் அதன் மூலம் நமக்குள் அன்பும் ஒற்றுமையும் மலர்வதற்கு அல்லாஹ் உதவி புரிவானாக

 

 

  

 

 


No comments:

Post a Comment