Wednesday, September 2, 2020

ஸலாமின் வழியே ஒற்றுமையை வளர்ப்போம்

 


ஒற்றுமை ஏற்பட இஸ்லாம் வழிகாட்டும் அடுத்த விஷயம் ஸலாம்.ஸலாமைப் பரப்புதல்.

لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم‏؟‏ أفشوا السلام بينكم

நீங்கள் ஈமான் கொள்ளும் வரை சுவனத்தில் நுழைய முடியாது.நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பு கொள்ளும் வரை ஈமான் கொண்டவர்களாக ஆக முடியாது. எதை நீங்கள் செய்தால் ஒருவருக்கொருவர் அன்பு கொள்வீர்களோ அத்தகைய ஒரு காரியத்தை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? உங்களிடையில் ஸலாமைப் பரப்புங்கள். (முஸ்லிம் ; 54)

நமக்கு மத்தியில் பிரியம் ஏற்படுவதற்கான அழகான வழிகாட்டுதலை இதன் மூலம் நபி அவர்கள் சமூகத்திற்கு உணர்த்தி விட்டார்கள்.  

ஒருவருக்கொருவர் அதிகம் ஸலாம் கூற வேண்டும், ஸலாமைப் பரப்ப வேண்டும்.அறிந்தவர் அறியாதவர், சிறியவர் பெரியவர்,வரியவர் செல்வந்தர்,உயர்ந்தவர் தாழ்ந்தவர் என பாரபட்சமின்றி சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஒருவரை சந்திக்கும் பொழுதெல்லாம் ஸலாம் கூற வேண்டும். நமக்குள் சொல்லிக் கொள்கிற இந்த ஸலாம் நமக்கு மத்தியில் இருக்கிற விரோதங்களை குரோதங்களை மன இருக்கங்களை ஒருவரைப் பற்றிய தவறான எண்ணங்களை இப்படி தேவையில்லாத உள்ளத்தின் கசடுகளை நீக்கி நம் உள்ளங்களில் அன்பையும் பரஸ்பர ஒற்றுமையையும் வேரூண்றச் செய்யும்.

இன்றைக்கு உலகத்தில் ஒருவரை ஒருவர் சந்திக்கிற போது சொல்லிக் கொள்கிற முகமன்கள் நிறைய உண்டு. தமிழர்கள் வணக்கம் என்று சொல்கிறார்கள். ஹிந்தி பேசுபவர்கள் நமஸ்தே என்று சொல்கிறார்கள்.ஆங்கிலம் படித்தவர்கள் GOOD MARNING என்றும் GOOD AFTERNOON என்றும் GOOD EVENING என்றும்  GOOD NIGHT என்றும் சொல்கிறார்கள். இப்டி உலகில் முகமன்கள் நிறைய உண்டு. ஆனால் இஸ்லாம் ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை சந்திக்கிற போது அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்லும்படி கற்றுத்தருகிறது. மற்ற மதங்களிலும் மற்ற கலாச்சாரங்களிலுமுள்ள வார்த்தைகளுக்கும் இஸ்லாம் சொல்லுகிற இந்த வார்த்தைக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.

மற்ற கலாச்சாரத்தில் உள்ளவைகள் எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் பொருந்தாது. GOOD MARNING என்பது காலையில் மட்டும் தான் சொல்ல முடியும். GOOD NIGHT இரவில் மட்டும் தான் சொல்ல முடியும். சில நேரங்களில் எதுவுமே சொல்லவே முடியாது. ஒருவருடைய மனைவியோ அல்லது வேறு உறவினரோ இறந்து அவர் சோகத்தில் மூழ்கியிருக்கிற நேரத்தில அவரிடம் சென்று  Good Morning  என்றோ  Good Evenining  என்றோ எதுவும் சொல்ல முடியாது. ஆனால் நல்லது கெட்டது வெற்றி தோல்வி, லாப நஷ்டம், சுக துக்கம் அனைத்திலும் ஒருவருக்கு ஒருவர் ஸலாம் சொல்ல முடியும்.

மற்ற மதங்கள் அடையாளப்படுத்திய முகமன்கள் வெற்று வார்த்தைகளாகத் தான்  இருக்கிறதே தவிர அதில் பொருள் ஒன்றும் இல்லை.ஆனால் அஸ்ஸலாமு அலைக்கும் என்றாலோ வ அலைக்குமுஸ் ஸலாம் என்றாலோ அதில் உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்.உங்களுக்கு அமைதி கிடைக்கட்டும். உங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கட்டும்,உங்களுக்கு ஈடேற்றம் கிட்டட்டும் என்ற அற்புதமான பொருள் அதில் அடங்கியிருக்கிறது. ஒருவரை சந்திக்கிற போதே அவருக்கு நலவை நாடும் விதமாக அவருக்கு துஆ செய்து அதன் மூலம் நாம் இருவரும் சகோதரர்கள், நண்பர்கள், நமக்குள் விரோதங்களோ குரோதங்களோ வெறுப்புணர்ச்சியோ இல்லை என்ற உன்னதமான உணர்வை ஸலாம் சொல்லிக் கொள்கிற ஒவ்வொருவருக்கும் அது தருகிறது.

மிக உயர்ந்த அற்புதமான அர்த்தங்களையும் பிரார்த்தனைகளையும் தாங்கி இருப்பதால் தான் அந்த ஸலாம் எனக்கு கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள் ஸஹாபாக்கள்.

 

زارنا رسول اللهِ صلى الله عليه وسلم في منزلنا فقال : السلام عليكم ورحمة الله فرد سعد ردا خفيا ، قال قيس : فقلت : ألا تأذن لرسول اللهِ له صلى الله عليه وسلم ، فقال : ذره يكثر علينا من السلام ، فقال رسول اللهِ له صلى الله عليه وسلم : السلام عليكم ورحمة الله فرد سعد ردا خفيا ، ثم قال رسول اللهِ له صلى الله عليه وسلم : السلام عليكم ورحمة الله . ثم رجع رسول اللهِ صلى الله عليه وسلم ، واتبعه سعد ، فقال : يا رسول اللهِ ، إني كنت أسمع تسليمك ، وأرد عليك ردا خفيا ، لتكثر علينا من السلام

கைஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள் ; ஒருநாள் நபி அவர்கள் எங்களை சந்திக்க எங்கள் இல்லத்திற்கு வந்தார்கள்.ஸலாம் சொன்னார்கள்.என் தந்தை ஸஃத் ரலி அவர்கள் மெதுவாக பதில் ஸலாம் சொன்னார்கள்.நபியவர்களை உள்ளே அனுமதிக்க வில்லையா? என்று நான் கேட்டேன்.இல்லை, இன்னும் அதிகமாக அவர்கள் ஸலாம் சொல்லட்டும் விட்டு விடு என்றார்கள்.நபி அவர்கள் மூன்று முறை ஸலாம் சொன்னார்கள். என் தந்தை மூன்று முறையும் மெதுவாகவே ஸலாமுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். உள்ளிருந்து பதில் வர வில்லை என்ற காரணத்தினால் நபியவர்கள் திரும்பினார்கள்.உடனே என் தந்தை ஸஃத் ரலி அவர்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! உங்கள் ஸலாமை நான் கேட்டேன். நான் சப்தமாக பதில் கூறினால் உங்களின் ஒரு ஸலாம் தான் எங்களுக்கு கிடைக்கும். உங்களிடமிருந்து அதிகமான ஸலாம்கள் என் இல்லத்தாருக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் அமைதியாக பதில் கூறிக் கொண்டிருந்தேன் என்றார்கள். (அபூதாவூது ; 5185)

இந்த நேரத்தில் வீட்டில் நுழையும் போது நாம் வேண்டிய சுன்னத்துகளை தெரிந்து கொள்ள வேண்டும்.

1, ஸலாம் சொல்லி விட்டு உள்ள வரலாமா என்று கேட்க வேண்டும்.அதுவும் வலது இடது புறமாக நின்று தான் கேட்க வேண்டும்.வாசலுக்கு நேராக நின்று கேட்கிற போது பார்ப்பதற்கு தடை செய்யப்பட்டவர்களைப் பார்க்க வேண்டிய நிலை ஏற்படும்.

أتى سعدُ بنُ معاذٍ النبيَّ صلَّى اللهُ عليهِ وسلمَ فاستأذن عليه وهو مستقبلٌ البابَ ، فقال النبيُّ صلَّى اللهُ عليهِ وسلمَ بيدِه هكذا : يا سعد ُ! فإنما الاستئذانُ من النظرِ

ஸஃத் பின் முஆத் ரலி அவர்கள் நபியிடம் வந்து வாசலுக்கு நேராக நின்று உள்ளே வர அனுமதி கேட்டார்கள். நபி அவர்கள் ஓரமாக நிற்க வேண்டும் என்று தன் கரத்தால் சுட்டிக்காட்டினார்கள். பின்பு அனுமதி கேட்பது என்பதே ஹராமான பார்வையைத் தடுப்பதற்குத்தான் என்றார்கள். (அஸ்ஸுனனுல் குப்ரா ; 339/8)

ஹராமான விஷயங்களைப் பார்த்து விடக்கூடாது என்பது தான் அனுமதிக்கான நோக்கமே. வாசலுக்கு நேராக நின்று கேட்பதினால் அதன் நோக்கம் தவறிப் போகிறது.

مَنِ اطَّلَعَ فِي بَيْتِ قَوْمٍ بِغَيْرِ إِذْنِهِمْ ، فَقَدْ حَلَّ لَهُمْ أَنْ يَفْقَئُوا عَيْنَهُ "

ஒருவர் அனுமதியின்றி ஒரு வீட்டை உற்று நோக்கினால் அவரின் கண்ணைப் பிடுங்குவது அவ்வீட்டாருக்கு ஆகுமாகி விடும். (முஸ்லிம் ; 2158)

2, மூன்று தடவை அனுமதி கேட்க வேண்டும். மூன்று தடவை ஸலாம் சொல்ல வேண்டும். அதில் அனுமதி கிடைத்தால் உள்ளே போக வேண்டும், இல்லையென்றால் திரும்பி விட வேண்டும்.அதற்குப் பிறகு அங்கே நிற்கக்கூடாது.

إِذَا اسْتَأْذَنَ أَحَدُكُمْ ثَلاَثاً فَلَمْ يُؤْذَنْ لَهُ ، فَلْيَرْجِعْ

உங்களில் ஒருவர் மூன்று முறை அனுமதி கேட்டும் அவருக்கு அனுமதி கிடைக்க வில்லையெனில் அவர் திரும்பி விட வேண்டும். (புகாரி : 6245(

இந்த காலகட்டத்தில் அனுமதியும் கேட்க முடியாது ஸலாமும் சொல்ல முடியாது. ஏனென்றால் பெரிய பெரிய வீடுகளும் பங்களாக்களும் பெருகி விட்ட காலம். வாசல் இங்கே இருக்கும். அவர்கள் உள்ளே ரொம்ப தூரத்தில் இருப்பார்கள்.அதனால் எதுவும் கேட்காது. அதற்குத்தான் இன்றைக்கு காலிங்பெல் வைத்திருக்கிறார்கள். அது தான் இன்றைக்குள்ள அனுமதி. மூன்று முறை காலிங்பெல்லை அழுத்த வேண்டும். உள்ளிருந்து எந்த பதிலும் வர வில்லையென்றால் திரும்பி விட வேண்டும்.

ஒரு வீட்டில் நுழையும் போது அனுமதி கேட்க வேண்டும்.அதுவும் 3 முறை கேட்க வேண்டும், அனுமதி கிடைக்க வில்லையென்றால் திரும்பி விட வேண்டும் என்று சொல்லப்பட்ட இந்த சுன்னத்தில் ஒரு தூரநோக்குப் பார்வை உண்டு. வீட்டில் உள்ளவர்கள் எந்த நிலையில் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஸலாம் சொல்லாமல் அனுமதி கேட்காமல் சட்டென்று உள்ளே நுழைந்தால் அவர்களை பார்க்கக் கூடாத நிலையில் பார்த்து, அதனால் அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும், இவர்களுக்கும் அப்படி பார்த்து விட்டோமே என்று மன உளைச்சல் ஏற்படும். அதனால் இருவரும் ஒருவரையொருவர் அடுத்து பார்ப்பதற்கு கூச்சப்படுகின்ற நிலை கூட ஏற்படலாம். அதனால் தான் அனுமதி கேட்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது.

இந்த காரணத்திற்காகத்தான் நம் தாய், நம் சகோதரிகள் இருக்கிற வீட்டிற்கு போவதாக இருந்தால் கூட அனுமதி கேட்டு விட்டுத்தான் போக வேண்டுமென இஸ்லாம் சொல்கிறது. குறைந்த பட்சம் நாம் உள்ளே வருகிறோம் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்தி விட்டாவது உள்ளை நுழைய வேண்டும்.

أنَّ رجلًا سأل النبيَّ - صلَّى اللهُ عليهِ وسلَّمَ -، فقال : أَستأذنُ على أُمّي ؟ ! فقال : نعمْ، فقال الرجلُ : إني معها في البيتِ ؟ فاستأذِنْ عليها، فقال الرجلُ : إني خادمُها ؟ فاستأذنْ عليها ؛ أتحبُّ أن تراها عُريانةً ؟ ! ؛ قال : لا، قال : فاستأذِنْ عليهَا

ஒரு மனிதர் நபியிடம் வந்து நான் என் தாயிடம் அனுமதி கேட்க வேண்டுமா? என்று கேட்டார்.நபியவர்கள் ஆம் என்றார்கள்.அவர்கள் என்னோடு தான் இருக்கிறார்கள். நான் தான் அவர்களுக்கு பணிவிடை செய்கிறேன். அப்படியிருந்தும் அனுமதி கேட்க வேண்டுமா? என்றார். உன் தாயை நீ ஆடையின்றி பார்ப்பதற்கு விரும்புவாயா? என்று நபி அவர்கள் கேட்டார்கள். இல்லையென்றார். அப்படியானால் நீ அனுமதி கேட்டுச் செல் என்றார்கள். (மிஷ்காத் : 4598)

3 தடவைக்கு மேல் கேட்கக்கூடாது, அனுமதி கிடைக்காத போது திரும்பி விட வேண்டும் என்று சொன்னதிலும் ஆழமான அர்த்தம் உண்டு. வீட்டில் உள்ளவர்கள் அந்த நேரத்தில் வெளியே வர முடியாத சூழ்நிலையில் இருக்கலாம்.தொடர்ந்து அனுமதி கேட்டுக் கொண்டே இருந்தால், நம்மைத் தேடி வந்திருக்கிறார்கள்.நீண்ட நேரம் வெளியே நிற்கிறார்கள். உள்ளே அனுமதிக்க முடிய வில்லையே!, நீண்ட நேரம் நின்றும் அனுமதிக்க வில்லையென்று அவர் நம்மை தவறாக நினைத்து விடுவாரோ என்று அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். இவ்ளோ நேரம் நின்றும் நம்மை அனுமதிக்க வில்லையே! நம்மை மதிக்க வில்லையே! என்று வெளியே இருப்பவருக்கும் மனக்கஷ்டத்தை ஏற்படுத்தும். மட்டுமல்ல நேரமும் வீணாகும். எனவே தான் கனக்கச்சிதமாக 3 முறை ஸலாம் சொல்வதை இஸ்லாம் வரையறுத்துத் தந்துள்ளது. நபி அவர்கள் கற்றுத்தந்த ஒவ்வொரு சுன்னத்துகளிலும் ஒவ்வொரு ஒழுக்கங்களிலும் ஏராளமான நுட்பங்கள் மறைந்திருக்கிறது. தொலை நோக்குப் பார்வை ஒளிந்திருக்கிறது.அது உற்று நோக்கிப் பார்ப்பவர்களுக்குத்தான் தெரியும்.

மற்ற மதங்கள் அதை வெறும் சடங்குகளாகத்தான் பார்க்கிறது. ஆனால் இஸ்லாம் ஸலாம் சொல்வதை வணக்கமாக ஆக்கியிருக்கிறது.அதை கடமையாக ஆக்கியிருக்கிறது.

حَقُّ المُسْلِمِ علَى المُسْلِمِ سِتٌّ قيلَ: ما هُنَّ يا رَسولَ اللهِ؟ قالَ: إذا لَقِيتَهُ فَسَلِّمْ عليه، وإذا دَعاكَ فأجِبْهُ، وإذا اسْتَنْصَحَكَ فانْصَحْ له، وإذا عَطَسَ فَحَمِدَ اللَّهَ فَسَمِّتْهُ، وإذا مَرِضَ فَعُدْهُ وإذا ماتَ فاتَّبِعْهُ

ஒரு முஸ்லிமுக்கு இன்னொரு முஸ்லிம் செய்ய வேண்டிய கடமைகள் ஆறு. 1, ஒரு முஸ்லிமை சந்தித்தால் அவனுக்கு ஸலாம் கூறு. 2, உன்னை அழைத்தால் அவன் அழைப்புக்கு பதில் கொடு. 3, உன்னிடம் அவன் அறிவுரையைத் தேடினால் அவனுக்கு அறிவுரை வழங்கு. 4, அவன் தும்மி அல்ஹம்து லில்லாஹ் சொன்னால் நீ அதற்கு பதில் கூறு. 5, அவன் நோயுற்றால் அவனை நலம் விசாரிக்கச் செல். 6, அவன் மரணித்தால் அவனைப் பின் தொடர்ந்து செல். (முஸ்லிம் : 2162)

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் கூட ஸலாம் சொல்வதைத்தான் முதல் கடமையாக சொல்லியிருக்கிறார்கள்.காரணம் சமூகத்தில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான முதல் படியே இந்த ஸலாம் தான்.

தொழுகை நோன்பு ஜகாத் ஹஜ் போன்ற இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகள் மட்டுமல்ல மார்க்கதின் மிக முக்கியமான சட்டதிட்டங்கள் அனைத்தும் இயற்றப்பட்டது நபி அவர்கள் மதீனா சென்ற பிறகு தான்.மதீனா சென்று நாயகம் அவர்கள் செய்த மகத்தான பணிகளும் சேவைகளும் ஏராளம். ஆக்கப்பூர்வமான அத்தனை பணிகளும் மதீனாவில் செய்யப்பட்டாலும் மதீனா சென்று முதன் முதலாக மக்களை சந்தித்த போது அவர்கள் சொன்ன முதல் வார்த்தை ஸலாமைப் பரப்புங்கள் என்பது தான். நபி அவர்கள் அப்போது அந்த மக்களை முதன்முதலாக பார்க்கிறார்கள். அந்த மக்களும் நபியவர்களை முதன்முதலாக அப்போது தான்  பார்க்கிறார்கள். முன்பே ஈமான் கொண்டு நபியின் வருகைக்காக காத்திருந்த மக்கள் அவர்கள்.நபியவர்கள் என்ன சொன்னாலும் செவிமடுத்து உடனே செயல்படுத்துவதற்காக காத்திருந்த மக்கள் அவர்கள்.எனவே அந்த நேரத்தில் எதை வேண்டுமானாலும் சொல்லியிருக்கலாம். ஆனால் அவர்கள் சொன்ன முதல் வார்த்தை.

وكان أَوَّلُ شيءٍ تكلم به أن قال أَيُّها الناسُ أَفْشُوا السلامَ، وأَطْعِمُوا الطعامَ، وصَلُّوا والناسُ نِيَامٌ، تَدْخُلوا الجنةَ بسَلَامٍ

மதீனா வந்ததும் நபி அவர்கள் பேசிய முதல் வார்த்தை மக்களே! ஸலாமைப் பரப்புங்கள். பசித்தவர்களுக்கு உணவளியுங்கள். மக்கள் உறங்கும் போது இரவில் நின்று தொழுகுங்கள். நிம்மதியாக நீங்கள் சுவனத்தில் நுழைவீர்கள். திர்மிதி : 1855)

காரணம் அவர்களுக்குள் பல பிரிவுகளும் பிழவுகளும் இருந்தது. அதை ஒன்றுபடுத்த வேண்டும்.மக்காவிலிருந்து வந்திருக்கிற முஹாஜிர்களுக்கும் அவர்களுக்கும் ஒரு இணைப்பும் பிணைப்பும் ஏற்பட வேண்டும்.அவர்களுக்குள் அன்பும் முகமலர்ச்சியும் பெருக வேண்டும். அதற்கு ஒரே வழி ஸலாம் தான்.அதனால் தான் அந்நேரத்தில் மற்ற விஷயங்களுக்கெல்லாம் முக்கியத்துவம் தராமல் ஸலாமிற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.அந்தளவிற்கு ஸலாம் அன்பையும் பிரியத்தையும் ஏற்படுத்தி மனித உள்ளங்களை இணைக்கிறது.

 

أنَّ رَجُلًا سَأَلَ النبيَّ صَلَّى اللهُ عليه وسلَّمَ: أيُّ الإسْلَامِ خَيْرٌ؟ قالَ: تُطْعِمُ الطَّعَامَ، وتَقْرَأُ السَّلَامَ علَى مَن عَرَفْتَ ومَن لَمْ تَعْرِفْ

இஸ்லாத்தில் சிறந்த காரியம் எது என்று ஒரு நபித்தோழர் கேட்ட போது நபியவர்கள் பசித்தவருக்கு உணவளி. அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறு என்றார்கள். (புகாரி : 12)

ஸலாம் மனித உள்ளங்களில் அன்பை விதைத்து ஒற்றுமைக்குக் காரணமாக இருப்பதினால் தான் ஸஹாபாக்கள் அதற்கு அதிகளவு முக்கியத்துவம் தந்தார்கள்.

قال الطفيلُ : فجئتُ عبدَ اللهِ بنَ عمرَ يومًا، فاستتبعَني إلى السوقِ، فقلت له : وما تصنعُ في السوقِ وأنت لا تقفُ على البيعِ، ولا تسألُ عن السِّلَعِ، ولا تسومُ بها، ولا تجلسُ في مجالسِ السوقِ ؟ ! فاجْلس بنا ها هنا نتحدَّثُ، قال : فقال لي عبدُ اللهِ بنُ عمرَ : يا أبا بطنٍ ! - قال : وكان الطُّفيلُ ذا بطنٍ - إنما نغدو من أجلِ السلامِ، نسلِّمُ على من لقِيناهُ

துஃபைல் ரலி அவர்கள் கூறுகிறார்கள் ; நான் அப்துல்லாஹ் பின் உமர் ரலி அவர்களிடம் வந்தேன். அவர்கள் என்னை கடைவீதிக்கு அழைத்துச் சென்றார்கள். இங்கே என்ன செய்கிறீர்கள்? எதையும் வாங்குவதற்காக நிற்பதில்லை. எந்தப் பொருளின் விலையையும் விசாரிப்பதில்லை. கடைவீதியில் எங்கும் நீங்கள் அமருவதில்லை. பிறகு எதற்கு இங்கே வருகிறீர்கள்? வாருங்கள் நாம் இங்கே உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கலாம் என்றேன். அதற்கவர்கள், நான் வருவது ஸலாமுக்காகத்தான். சந்திக்கிற நபர்களுக்கு ஸலாம் சொல்வதற்குத்தான் என்றார்கள். (மிஷ்காத் : 4587)

பாரபட்சமின்றி அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் ஸலாம் கூறி ஒற்றுமையை வளர்ப்போம். அல்லாஹ் அருள் புரிவானாக!


No comments:

Post a Comment