Saturday, September 5, 2020

வாய்ப்புக்களை பயன்படுத்துவோம்

 

அல்லாஹுத்தஆலா நம்மை உலகத்தில் படைத்து நமக்கு அழகானதொரு  வாழ்க்கையைக் கொடுத்து அந்த வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை  விஷயங்களையும் அமைத்துத் தந்திருக்கிறான். அந்த வாழ்கையை அனுபவிப்பதற்குத் தேவையான அறிவையும் தெளிவையும் சாதுர்யத்கையும் வழங்கியிருக்கிறான். மட்டுமல்ல வாழ்வின் ஒவ்வொரு அம்சங்களையும் பெற்றுக் கொள்வதற்கு சில சந்தர்ப்பங்களையும் வாய்ப்புக்களையும்  அவ்வப்போது தருகிறான். அப்படி அல்லாஹ் தருகிற சந்தர்ப்பங்களையும் சூழ்நிலைகளையும் சரியாக முறையாக பயன்படுத்திக் கொள்பவர்கள் தான் உண்மையில் புத்திசாளிகள். வெற்றியாளர்கள். கிடைக்கிற சந்தர்ப்பங்களை நவுவ விடுபவர்கள் புத்திசாளிகளாகவும் இருக்க முடியாது. வெற்றியாளர்களாகவும் திகழ முடியாது.

சாதாரண வீரனாக தன் வாழ்க்கையைத் தொடங்கிய  நெப்போலியன் தன் அறிவாலும் புத்திசாலித்தனத்தாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திய காரணத்தால் மிகப்பெரும் பேரரசை நிறுவும் அளவுக்கு வாழ்வில் உயர முடிந்தது.

நமது வாழ்வில் ஒவ்வொரு     நாளும் வாய்ப்புகள் ஏதேனும் ஒரு வடிவில் நம்மை கடந்து சென்று கொண்டே தான் இருக்கின்றன. அவற்றை இனம் கண்டு, பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு பயன்படுத்திக் கொண்டவர்கள் தான் உலகத்தில்  உச்சத்தைத் தொட்டிருக்கிறார்கள். தன் லட்சியங்களை அடைந்திருக்கிறார்கள். சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்திக் கொண்ட காரணத்தினால்  வாழ்க்கையில் கிடைப்பதற்கரிய சில பாக்கியங்கள், யாருக்கும் கிடைக்காத சில பொக்கிஷங்கள் சிலருக்கு கிடைத்திருக்கிறது என்பதை குர்ஆனும் ஹதீஸும் நமக்கு கோடிட்டுக் காட்டுகிறது.

தள்ளாத வயதில் சாதாரணமாக உலக நடைமுறையில் குழந்தை பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அனைத்தையும் இழந்து விட்ட அந்த நேரத்திலும் குழந்தையை பெற்றெடுத்ததாக ஹள்ரத் ஜகரிய்யா அலை அவர்களின் வரலாற்றை அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான்.

قال رب اني وهن العظم مني واشتعل الراس شيبا

இறைவா என் எழும்புகள் பலவீனமாகி விட்டது.என் தலை நரையால் இலங்குகிறது. (அல்குர்ஆன் :19;4)

எழும்பு பலவீனமாகி விட்டது.தலையில் நரை விழுந்து விட்டது.என் மனைவியும் குழந்தை பெற்றெடுப்பகற்கு தகுதியற்றவளாக இருக்கிறாள் என்றெல்லாம் ஜகரிய்யா அலை அவர்கள் கூறினார்கள். அதாவது குழந்தை பெறுவதற்கான எந்த சாத்தியக்கூறுகளும் இல்லை என்று பொருள். 

இருபதுகளின் ஆரம்ப வயதில் தான் ஆண், பெண் இருவரும், 100 சதவீதம் குழந்தைப் பேறுக்கான உடல் மற்றும் மனத்தகுதிகளோடு இருக்கின்றனர். இந்த வயதில் ஒரு பெண்ணிற்கு, 10 லட்சத்திலிருந்து 20 லட்சம் முட்டைகள் வரை கருவில் உருவாகிறது.இருபதுகளின் கடைசிகளில், பெண்களுக்கு கருத்தரிப்பதற்கான உடல் வலிமை குறைய ஆரம்பித்து விடும்.  முப்பதுகளின் ஆரம்ப வயதில் இருந்து ஒவ்வொரு மாதவிடாய் காலத்திலும், பெண்களின் கருமுட்டைகளின் எண்ணிக்கை, ஆயிரக்கணக்கில் குறையத் துவங்கும். இதுதான் பெண்களுக்கு 30 வயதில், குழந்தைப்பேறுக்கான வாய்ப்புகள் குறைய காரணம். ஆனால் ஜகரிய்யா அலை அவர்களுக்கு 99 வயது என்றும் அப்போது அவர்களின் மனைவியின் வயது 98 என்றும் கூறப்படுகிறது.அந்த தள்ளாத வயதிலும் யஹ்யா என்ற அழகான குழந்தை பிறந்தது.அதுவும் பிற்காலத்தில் நபியாக வரக்கூடிய ஒரு குழந்தை. வேறு யாருக்கும் இதுவரை அந்தப் பெயர் இல்லை என்று யஹ்யா நபியைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்.

குழந்தை பிரக்காத அந்த சூழ்நிலையிலும் குழந்தை பிறந்தது என்றால் அதற்கு பல காரணங்கள் உண்டு. அதிலே ஒன்று : மர்யம் அலை அவர்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து விஷேசமான பழங்கள் கிடைத்திருப்பதைப் பார்த்த ஜகரிய்யா நபியவர்கள் அல்லாஹ்விடம் தனக்கு குழந்தைக்காக பிரார்த்தித்தார்கள்.அதை அல்லாஹ் குர்ஆனில்

هنالك دعا زكريا

அங்கே ஜகரிய்யா நபி அலை அவர்கள் துஆ செய்தார்கள். (அல்குர்ஆன் : 3 ; 38) 

عن ابن عباس، قال: فلما رأى ذلك زكريا - يعني فاكهة الصيف في الشتاء، وفاكهة الشتاء في الصيف - عند مريم قال: إنّ الذي يأتي بهذا مريمَ في غير زمانه، قادرٌ أن يرزقني ولدًا،

மர்யம் அலை அவர்களிடம் அந்த அதிசயத்தைப் பார்த்த போது இந்த்த அற்புதத்தை நிகழ்த்துவதற்கு சக்தி ஆற்றல் உள்ள இறைவன் எனக்கு  இந்த வயதில் குழந்தையைத் தருவதற்கும் நிச்சயம் ஆற்றல் பெற்றவன் தான் என்பதை ஜகரிய்யா அலை அவர்கள் உணர்ந்த்தார்கள். அதன் பிறகு  துஆ செய்தார்கள் என ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள். (தஃப்ஸீர் தப்ரீ)

இறைவன் இங்கே هنالك என்று கூறுகிறான்.அதற்கு அந்த இடம் என்றும் அந்த காலம்,என்றும் வைத்துக் கொள்லலாம்.எப்படி இருந்தாலும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்கிக் கொண்டு அல்லாஹ்விடம் கேட்டார்கள். அந்த பாக்கியத்தைப் பெற்றார்கள்.

ஹள்ரத் அபூஹுரைரா ரலி அவர்களை பற்றி நமக்கு நன்றாக தெரியும்.மிகச் சிறந்த ஸஹாபி.,நபியின் பிரத்யேகமான அன்பைப் பெற்ற ஸஹாபி, மாநபியின் ஹதீஸ்களை அறிவித்ததில் அவர்களுக்குத் தான் முதல் இடம்.மொத்தம் 5374 ஹஜீஸ்களை நபியிடமிருந்து அறிவித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிறகு நபியோடு இருந்த காலம் ரொம்ப ரொம்ப  குறைவு. ஹிஜ்ரி 7 ம் ஆண்டு தான் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். நபி அவர்களுடன் 3 வருடங்கள் தான் இருந்திருக்கிறார்கள். இவ்வளவு குறைந்த அவகாசத்தைப் பெற்ற அவர்களால் இவ்வளவு ஹதீஸ்களை அறிவிக்க முடிந்ததற்குக் காரணம், அவர்கள் எப்போதும் நபியோடு இருந்தார்கள் என்பதைத் தாண்டி அதற்கு காரணம் ஒரு துஆ.

 رجلا جاء زيد بن ثابت فسأله عن شيء ، فقال له زيد : عليك بأبي هريرة ، فإنه بينا أنا وأبو هريرة وفلان في المسجد ذات يوم ندعو الله تعالى ، ونذكر ربنا خرج علينا رسول الله صلى الله عليه وسلم حتى جلس إلينا ، قال : فجلس وسكتنا ، فقال : « عودوا للذي كنتم فيه » . قال زيد : فدعوت أنا وصاحبي قبل أبي هريرة ، وجعل رسول الله صلى الله عليه وسلم يؤمن على دعائنا ، قال : ثم دعا أبو هريرة فقال : اللهم إني أسألك مثل الذي سألك صاحباي هذان ، وأسألك علما لا ينسى ، فقال رسول الله صلى الله عليه وسلم : « آمين » ، فقلنا : يا رسول الله ، ونحن نسأل الله علما لا ينسى فقال : « سبقكما بها الدوسي

கைஸ் அல்மதனீ என்பவர் கூறுகிறார்:

ஒருவர் ஸைத் பின் சாபித் (ரலி) அவர்களிடம் வந்து ஒரு விஷயம் குறித்து வினவினார். அதற்கு ஸைத் (ரலி) அவர்கள் அவரிடம் பின்வருமாறு கூறினார்கள்:

நீங்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் செல்லுங்கள். ஏனென்றால் ஒரு நாள் நானும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் இன்னாரும் பள்ளியில் இருந்தோம். எங்கள் இறைவனான அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து அவனை நினைத்துக் கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் எங்களிடம் வந்து அமர்ந்தார்கள். நாங்கள் மௌனமாகி விட்டோம். நீங்கள் முன்பு ஈடுபட்டிருந்த காரியத்தை மீண்டும் தொடருங்கள் என்று கூறினார்கள்.

 

அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு முன்பாக நானும் என்னுடன் இருந்தவரும் பிரார்த்தனை செய்தோம். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் எங்கள் பிரார்த்தனைக்கு ஆமீன் சொன்னார்கள். பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். அவர்கள் (தனது பிரார்த்தனையில்) இறைவா, என்னுடைய இந்த இரு தோழர்கள் கேட்டதை உன்னிடம் கேட்கிறேன். மேலும் மறந்துவிடாத கல்வியையும் உன்னிடம் கேட்கிறேன் என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆமீன் என்று கூறினார்கள்.

 

உடனே நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே மறந்துவிடாத கல்வியை நாங்களும் அல்லாஹ்விடம் வேண்டுகிறோம்' என்று கூறினோம். அதற்கு நபி அவர்கள், "இதில் தவ்சீ குலத்தைச் சாந்த வாலிபர் (அபூஹுரைரா) உங்களை முந்திவிட்டார்' என்றார்கள். ( அல்முஃஜமுல் அவ்ஸத் : 2/54)

 

நபியின் துஆவும் சரி அவர்களின் ஆமீனும் சரி அதற்கு இருக்கிற ஆற்றல் அலாதியானது. அதுவும் ஒருவரின் துஆவிற்கு நபியே ஆமீன் சொல்கிறார்கள் என்றால் அந்த பாக்கியத்தைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அந்த சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்ற அவர்கள் அதை சரியான தருணமாக சரியான வாய்ப்பாக அதை பயன்படுத்திக் கொண்டார்கள். அதனால் தான் யாருக்கும் கிடைக்காத பாக்கியம் அவர்களுக்கு கிடைத்தது.

வாழ்க்கையில் கிடைக்கிற தரணங்களை நழுவ விடாமல் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.வாழ்க்கையில் நமக்கு கிடைக்கிற எந்த தருணங்களையும் வாய்ப்புக்களையும் தவற விட்டு விடக்கூடாது.அவ்வாறு தவற விடுபவர் புத்தசாலியாக இருக்க முடியாது

ஹதீஸ் கிதாபுகளில் சுவாரஷ்யமான வரலாறு ஒன்று உண்டு

أتى النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم أعرابيًّا فأكرَمه فقال له : ( ائتِنا ) فأتاه فقال له رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم : ( سَلْ حاجتَكَ ) قال : ناقةٌ نركَبُها وأعنُزٌ يحلُبُها أهلي ] فقال رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم : ( أعجَزْتُم أنْ تكونوا مِثْلَ عجوزِ بني إسرائيلَ ) ؟ قالوا : يا رسولَ اللهِ وما عجوزُ بني إسرائيلَ ؟ قال : ( إنَّ موسى عليه السَّلامُ لَمَّا سار ببني إسرائيلَ مِن مِصرَ ضلُّوا الطَّريقَ فقال : ما هذا ؟ فقال علماؤُهم : إنَّ يوسُفَ عليه السَّلامُ لَمَّا حضَره الموتُ أخَذ علينا مَوثقًا مِن اللهِ ألَّا نخرُجَ مِن مِصْرَ حتَّى ننقُلَ عِظامَه معنا قال : فمَن يعلَمُ موضِعَ قبرِه ؟ قال : عجوزٌ مِن بني إسرائيلَ فبعَث إليها فأتَتْه فقال : دُلِّيني على قبرِ يوسُفَ قالت : حتَّى تُعطيَني حُكْمي قال : وما حُكْمُكِ ؟ قالت : أكونُ معكَ في الجنَّةِ فكرِه أنْ يُعطيَها ذلكَ فأوحى اللهُ إليه : أنْ أعطِها حُكْمَها فانطلَقَتْ بهم إلى بُحيرةٍ موضعِ مُستنقَعِ ماءٍ فقالت : أنضِبوا هذا الماءَ فأنضَبوه فقالتِ : احتَفِروا فاحتَفَروا فاستخرَجوا عِظامَ يوسُفَ فلمَّا أقلُّوها إلى الأرضِ وإذا الطَّريقُ مِثْلُ ضوءِ النَّهارِ ) .

நபி அவர்கள் மேற்கொண்ட ஒரு பிரயாணத்தின் போது ஒரு கிராமத்தில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.அப்போது ஒரு கிராமவாசி நபி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தார்.நபி அவர்களை மிகவும் கண்ணியப்படுத்தினார்.இச்செயலை கண்டு அக மகிழ்ந்து போன நபியவர்கள் மதீனா வந்தால் அவசியம் தங்களைச் சந்திக்க வருமாறு அழைப்பு கொடுத்துவிட்டு விடைபெற்றார்கள்.

சிறிது காலம் கழித்து அக்கிராம வாசி மதீனா வந்தார்.நபி அவர்களை மஸ்ஜிதுந் நபவீயில் சந்தித்தார்.அவரை நபி அவர்கள் அன்புடன் உபசரித்தார்கள். அவர் விடைபெற்ற போது என்னிடம் ஏதாவது கேளுங்கள்! என்று நபி அவர்கள் அக்கிராம வாசியிடம் கேட்டார்கள்.அவர் எனக்கு வாகனத்திற்கு ஓர் ஒட்டகமும் என் குடும்பத்தினர் பால் கறந்து கொள்வதற்கு ஒரு ஆடும் வேண்டும் என்று கேட்டார்.

இதைக்கேட்டதும் அண்ணல் நபி அவர்கள்:

(அல்லாஹ்வின் தூதராகிய நான் உமது தேவை குறித்து கேட்டபோது இவ்வளவு மலிவான பொருளை கேட்டு விட்டாரே!) மூஸா (அலை) அவர்கள் காலத்தில் வாழ்ந்த மூதாட்டி போல ஆகுவதற்கு நீங்கள் இயலாமல் ஆகி விட்டீர்களா! என்றார்கள்.

உடனே சுற்றியிருந்த தோழர்கள் யார் அந்த மூதாட்டி? என்ன நடந்தது என்று கேட்டார்கள்.

மூஸா நபியவர்கள் பனூ இஸ்ரவேலவர்களை எகிப்திலிருந்து பைத்துல் முகத்தஸ்ஸிற்கு அழைத்துச் செல்ல முயன்ற போது பாதை தெரியாமல் பயணம் தடைபட்டது. அது குறித்து ஆலோசித்த போது அங்கிருந்த மூத்த வயதுடையவர்கள் இஸ்ரவேலவர்கள் பைத்துல் முகத்தஸ்ஸிற்கு பயணம் மேற்கொள்வதாக இருந்தால் தமது ஜனாஸாவையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும் என நபி யூஸுப் (அலை) அவர்கள் வஸிய்யத் செய்ததாகவும் அதனால் தான் பயணம் தடை படுவதாகவும்சொன்னார்கள். சக நபி யூசுப் (அலை) அவர்களின் அடக்கத்தலம் குறித்து விசாரித்த போது இது குறித்த தகவல் வயது முதிர்ந்த ஒரு மூதாட்டிற்குத்தான் தெரியும் என்று கூறினார்கள்.

அந்த மூதாட்டியை அழைத்து மூஸா (அலை) அவர்கள் யூசுப் நபியின் அடக்கத்தலம் குறித்து விசாரித்தார்கள். நான் அறிவித்து தந்தால் எனக்கு என்ன சன்மானம் தருவீர்கள்?என அம்மூதாட்டி கேட்டார்.என்ன வேண்டும்?எது கேட்டாலும் தருகிறேன் என்று மூஸா (அலை) அவர்கள் பதில் கூறினார்கள்.அப்படியானால், மறுமையில் சுவனத்தில் உங்களுடன் நான் இருக்க வேண்டும் என தமது கோரிக்கையை முன் வைத்தார்கள்.அம்மூதாட்டியின் அந்த கோரிக்கையை ஏற்பதற்கு மூஸா அலை அவர்கள் சற்று தயங்கினார்கள்.அவள் கேட்கிற கோரிக்கையை நிறைவேற்றி வைய்யுங்கள் என அல்லாஹ் வஹி அறிவித்தான். மூஸா நபியும் அதற்கு சம்மதம் தெரிவித்தார்கள் அதன் பிறகு அம்மூதாட்டி காண்பித்த நீரோடை அருகேயிருந்து யூஸுப் (அலை) அவர்களின் பிரேதம் கண்டெடுக்கப்பட்டது,அந்த பிரேதம் வெளியே எடுக்கப்பட்ட பிறகு அவர்கள் செல்ல வேண்டிய பாதை மிக்கத்தெளிவானது. (இப்னு ஹிப்பான் : 723)

இதற்குப் பெயர் தான் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துதல், வாய்ப்புக்களை தக்க வைத்துக் கொள்ளுதல்.அந்த கிராமவாசி தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டார். அதனால் பெரிய பாக்கியம் எதுவும் கிடைக்காமல் போனார்.அந்த கிழவி அதை பயன்படுத்திக் கொண்டாள். அதனால் நபியோடு சுவனத்தில் இருக்கும் பாக்கியத்தைப் பெற்றாள்.

வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்திக் கொள்பவர் புத்திசாலி.அதை தவற விடுபவர் விவரமில்லாதவர் என்பதற்கு இந்த நிகழ்வு மிகச்சிறந்த சான்று.

உலகத்திலே யாருக்கும் வழங்காத வேறு எந்த நபிக்கும் கொடுக்காத தனிப்பெரும் சிறப்பை ஹள்ரத் ஸுலைமான் நபிக்கு அல்லாஹ் கொடுத்தான். அவர்களுக்கு காற்றை வசப்படுத்திக் கொடுத்தான்,ஷைத்தானை வசப்படுத்திக் கொடுத்தான்.

وسمعت رسول الله - صلى الله عليه وسلم - يقول : " إن سليمان سأل الله تعال ثلاثا فأعطاه اثنتين ونحن نرجو أن تكون لنا الثالثة : سأله حكما يصادف حكمه فأعطاه إياه وسأله ملكا لا ينبغي لأحد من بعده فأعطاه إياه وسأله أيما رجل خرج من بيته لا يريد إلا الصلاة في هذا المسجد خرج من خطيئته كيوم ولدته أمه فنحن نرجو أن يكون الله تعالى قد أعطانا إياها

சுலைமான் நபி அல்லாஹ்விடம் மூன்று விஷயங்களைக் கேட்டார்கள். அதில் இரண்டை அல்லாஹ் கொடுத்தான். 3 வது விஷயம் நமக்கு கிடைக்கும் என நான் நம்புகிறேன். முதலாவதாக அல்லாஹ்வின் தீர்ப்புக்கு நிகரான தீர்ப்பைக் கேட்டார்கள். அதை அல்லாஹ் கொடுத்தான். தனக்குப் பிறகு வேறு யாருக்கும் கிடைக்கப் பெறாத ஒரு ஆட்சி அதிகாரத்தைக் கேட்டார்கள். அதையும் அல்லாஹ் கொடுத்தான். மூன்றாவதாக, தொழுயின் நோக்கத்திற்காக மட்டும் ஒருவர் தன் வீட்டை விட்டு வெளியேறி பள்ளிக்கு வந்தால் அவர் அன்று பிறந்த குழந்தையைப் போல பாவங்களை விட்டும் தூய்மையாகி விட வேண்டும் என்பதைக் கேட்டார்கள். இதை அல்லாஹ் நமக்குக் கொடுத்திருக்கிறான் என்று நான் நம்புகிறேன். (முஸ்தத்ரக் ஹாகிம் : 1/188)

قال الحسن : ما من أحهد إلا ولله عليه تبعة في نعمه غير سليمان بن داود عليه

எந்த மனிதருக்கு ஒரு நிஃமத்தை அல்லாஹ் வழங்கினாலும் அதே நிஃமத்தைப் பெறக்கூடிய மற்ற மனிதர்களும் உலகில் தோன்றுவார்கள். ஆனால் சுலைமான் நபியைத் தவிர. அவர்களுக்கு வழங்கிய ஒரு நிஃமத்தை அல்லாஹ் அவர்களுக்குப் பிறகு வேறு யாருக்கும் வழங்க வில்லை என ஹஸன் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

 

رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لاحد من بعدي

இறைவா என்னை மன்னிப்பாயாக! எனக்குப் பிறகு வேறு எவரும் அடைய முடியாத ஓர் ஆட்சியை எனக்குக் கொடையாகத் தருவாயாக! நிச்சயமாக நீயே மிகப்பெரிய கொடையாளியாக இருக்கிறாய் என்று கேட்டார்கள். (அல்குர்ஆன் : 38 ; 35)

அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அந்த விஷேசமான ஆட்சி என்ன என்பதையும் அவர்களுக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்ட அந்த ஆட்சி அதிகாரம் நபி அவர்களுக்குக் கூட வழங்கப்பட வில்லை என்பதையும் பின் வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

عن أبي هريرة رضي الله عنه عن النبي - صلى الله عليه وسلم - قال : " إن عفريتا من الجن تفلت علي البارحة - أو كلمة نحوها - ليقطع علي الصلاة فأمكنني الله منه وأردت أن أربطه إلى سارية من سواري المسجد حتى تصبحوا وتنظروا إليه كلكم فذكرت قول أخي سليمان : ( رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي

முரட்டு ஜின் ஒன்று நேற்றிரவு என் தொழுகையை (இடையில்) துண்டிப்பதற்காக திடீரென்று வந்து நின்றது - என்றோ, இதைப் போன்ற வார்த்தையையோ கூறினார்கள் - அதன் மீது அல்லாஹ் எனக்கு சக்தியை வழங்கினான். நீங்கள் அனைவரும் காலையில் வந்து அதைக் காணும்வரை இந்தப் பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அதைக் கட்டிவைக்க விரும்பினேன். அப்போது 'இறைவா! எனக்குப் பின் வேறு எவருக்கும் கிடைக்க முடியாத ஓர் ஆட்சியதிகாரத்தை எனக்கு நீ வழங்குவாயாக' (திருக்குர்ஆன் 38:35) என்று என் சகோதரர் சுலைமான் (அலை) அவர்கள் செய்த வேண்டுதல் என் நினைவுக்கு வந்தது. (புகாரி : 4808)

இப்படி யாருக்கும் கிடைக்காத இந்த ஆட்சி அதிகாரம் அவர்களுக்கு எப்படி கிடைத்தது என்றால் அவர்கள் கேட்ட அந்த துஆ.

பொதுவாக செய்த தவறுக்காக வருந்தி பிரார்த்தனை செய்வது,அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவது அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தான காரியம். மட்டுமல்ல ஒரு அமலுக்குப் பின் கேட்கப்படும் துஆவிற்கு அல்லாஹ்விடம் நிச்சயம் அங்கீகாரம் உண்டு.அந்த அடிப்படையில் நபி ஸுலைமான் அலை அவர்கள் அந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு தவ்பாவின் மூலம் அல்லாஹ்வை மகிழ்ச்சிபடுத்தி விட்டு குர்பானி என்ற அமலை செய்து முடித்தவுடன் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள்.அல்லாஹ்வும் அந்த பாக்கியத்தை அவர்களுக்கு கொடுத்தான்.

நம் வாழ்வில் கிடைக்கிற சந்தர்ப்பங்கள் நமக்கான பொக்கிஷங்கள். அதை சரியாக புரிந்து கொண்டு அதை முறையாக பயன்படுத்தினால் நாம் வெற்றி பெறலாம்.

 


No comments:

Post a Comment