(குடியுரிமைப் பிரச்சனையின் போது பேசிய ஜும்ஆ உரை)
நம் நாட்டில் நடைபெறுகின்ற பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, நாட்டு மக்களின் வாழ்வுரிமையை கேள்விக்குறியாக்கும் வகையில் இயற்றப்பட்ட சட்டங்களையும் மசோதாக்களையும் கருத்தில் கொண்டு இது மாதிரியான சட்டங்களால் நாட்டுமக்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் என்ன அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன அதை எதிர் கொள்வதற்கு நாம் எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், இந்த மாதிரியான சட்டங்களால் நாம் பாதிக்கப்படாமல் வரும் காலங்களில் பாதுகாப்பான வாழ்க்கையைப் பெற நாமென்ன அணுகுமுறைகளை கையாள வேண்டும் என்று சிந்திப்பதும் யோசிப்பதும் காலத்தின் கட்டாயம்.
ஆரம்பமாக, நாம் செய்யக்கூடிய பாவங்களால் தான் இது
மாதிரியான அநியாயக்கார, மக்கள் நலனில் அக்கறை
செலுத்தாத, மக்களை கண்டு கொள்ளாத ஆட்சியாளர்களை அல்லாஹ் ஏற்படுத்தி நம்மை சோதிக்கின்றான்.
எனவே நாம் நம் பாவங்களிலிருந்து விலகி நம்மை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். இரண்டாவதாக,
இறை வனிடத்திலே கரம் ஏந்த வேண்டும். நிறைய
அசாதாரணமான சூழ்நிலைகளில் அச்சுறுத்தலான சமயங்களில் இஸ்லாமிய சமூகத்திற்கு வெற்றியும்
பாதுகாப்பும் இறைவனுடைய உதவியும் கிடைத்தது பிரார்த்தனைகளால் தான். எனவே இறைவனிடத்தில்
அதிகம் பிரார்த்தனைகள் செய்ய வேண்டும்.மிக முக்கியமான மூன்றாவது விஷயம், இறை நம்பிக்கை நமக்கு வேண்டும். இறைவன் நம்மோடு இருக்கிறான். இறைவன் நமக்கு உதவி
செய்வான். இறைவன் நமக்கு வெற்றியையும் பாதுகாப்பையும் தருவான் என்ற நம்பிக்கையும் உணர்வும்
நம் உள்ளத்தில் ஆழமாக இருக்க வேண்டும். அந்த நம்பிக்கையும் அந்த உணர்வும் உள்ளங்களில் மேலோங்கியிருந்த காரணத்தினால் தான்
நபி ﷺ
அவர்களுக்கும்
சஹாபாக்களுக்கும் அல்லாஹுத்தஆலா பல்வேறு வெற்றிகளைத் தந்தான் என்பது வரலாற்று
உண்மை. அந்த இறை நம்பிக்கையில்
நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில செய்திகள் உண்டு.
பொதுவாக இந்த உலகம் என்பது ஆலமுல் அஸ்பாப். காரணங்களை
அடிப்படையாகக் கொண்டு இயங்கக்கூடியது. எந்தக் காரியம் நடைபெறுவதாக இருந்தாலும்
அதன் பின்புலத்தில் அதற்கு ஒரு காரணம் இருக்கும். பூமி செழிக்க வேண்டும் என்றால் தண்ணீர்
இருக்க வேண்டும். தண்ணீர் தான் பூமிக்கு ஆதாரம். பூமிக்கு தண்ணீர் கிடைக்க வேண்டும்
என்றால் வானம் மழையைப் பொழிய வேண்டும்.வானம்
மழையை பொழிய வேண்டும் என்றால் மேகங்கள் கூட வேண்டும். மேகங்கள் கூட வேண்டும் என்றால்
காற்றடிக்க வேண்டும். காற்றடிக்க வேண்டுமென்றால் மரங்கள் இருக்க வேண்டும். மரங்கள்
இருக்க வேண்டும் என்றால் பூமி செழிப்பாக இருக்க வேண்டும். பூமி செழிக்க தண்ணீர் காரணம்.
தண்ணீருக்கு மழை காரணம். மழைக்கு மேகங்கள் காரணம். மேகத்திற்கு காற்று காரணம். காற்றிற்கு
மரங்கள் காரணம். மரங்களுக்கு பூமி காரணம்.
அதே போன்று பூமியில் மனித சஞ்சாரம் பெருக வேண்டும் என்றால் உலகத்திலே மனிதன் பிறக்க
வேண்டும். மனிதன் பிறக்க வேண்டும் என்றால் ஒரு பெண்ணுடைய வயிற்றிலே கருத்தரிக்க வேண்டும்.
கருத்தரிக்க வேண்டும் என்றால் அவள் ஒரு ஆணோடு சேர வேண்டும். மனித சஞ்சாரம் பெருகுவதற்கு
மனிதப்பிறப்பு காரணம். மனிதன் பிறப்பதற்கு பெண்ணின் கருத்தரிப்பு காரணம், பெண்ணின்
கருத்தரிப்புக்கு ஆணுடைய சேர்க்கை காரணம்.
இப்படி ஒவ்வொரு காரியங்களுக்கு பின்னாலும் ஒவ்வொரு
காரணங்கள் இருக்கிறது.அந்தந்த காரணங்களை அடிப்படையாகக் கொண்டு தான் அந்த காரியங்கள்
நடக்கிறது.ஆனால் வெளிப் படையான எந்தக் காரணங்களும் இல்லாமலும் இறைவனால்
எல்லாவற்றையும் செய்ய முடியும். தனக்கு அந்த ஆற்றல் உண்டு என்பதை உலகிற்கும்
வெளிப்படுத்தும் முகமாகத்தான் மர்யம் அலை அவர்களுக்கு ஆண் துணையில்லாமல் ஹள்ரத்
ஈஸா அலை அவர்களைக் கொடுத்தான்.எனவே அதற்கான ஆற்றலும் வல்லமையும் இறைவனுக்கு
உண்டு.இருந்தாலும் உலகத்தின் யதார்த்தம் இது தான்.
மனிதனின் சிந்தனையும் எண்ணமும் அந்த காரணங்களை நோக்கித்தான்
இருக்கும். காரணம் இருந்தால் அந்த காரியம் நடக்கும், காரணம் இல்லை என்றால் அந்த காரியம்
நடக்காது என்று நம்புவான். ஆனால் ஒரு இறை நம்பிக்கை உள்ளவனின் சிந்தனையும் எண்ணமும்
எப்படி இருக்க வேண்டும் என்றால், எல்லாவற்றையும் தாண்டி இறைவனின் நாட்டப்படி, இறைவனின்
எண்ணப்படி, இறைவனின் விதிப்படி தான் எல்லாம் நடக்கிறது. உலகில் நடக்கிற எல்லா காரியங்களையும்
எழுதி அதை நடத்துபவன் அல்லாஹ் என்று நம்ப வேண்டும். வெளிப்படையாகத் தெரிகின்ற காரணங்களை
நோக்கி ஒரு முஸ்லிமின் பார்வை செல்லக்கூடாது ஒரு முஸ்லிமின் சிந்தனை போகக்கூடாது.
وما
النصر الا من عند الله العزيز الحكيم
கண்ணியமும் நுட்பமும் மிக்க அல்லாஹ்வின் புறத்திலிருந்தே
தவிர வெற்றி இல்லை. (அல்குர்ஆன் : 8 ; 10)
அல்லாஹ் குர்ஆனில் பத்ர் போர்க்களம் குறித்து
பேசி வருகின்ற வசனங்களின் தொடரில் இந்த வார்த்தையை குறிப்பிடுகின்றான். நமக்கெல்லாம்
தெரியும் இஸ்லாத்தின் முதல் போர்க்களமான பத்ர் போர்க்களத்தில் அல்லாஹ்
இஸ்லாமியர்களுக்கு வெற்றியைக் கொடுத்தான்.அந்த வெற்றிக்கு மிக முக்கியமான காரணம்
அன்றைய இரவு நபி ﷺ
அவர்கள் கேட்ட உருக்கமான துஆ. அதைக்குறித்து இறைவன் குர்ஆனில்
اذ
تستغيثون ربكم فاستجاب لكم اني ممدكم بالف من الملائكة مردفين
உங்கள் இறைவனிடம் நீங்கள் உதவி தேடிய போது அணி
அணியாக உங்களைப் பின்பற்றி வரக்கூடிய ஆயிரம் மலக்குகளைக் கொண்டு உங்களுக்கு உதவி
புரிவேன் என இறைவன் உங்களுக்கு பதில் அளித்தான். (அல்குர்ஆன் : 8 ; 9)
313 பேர் கொண்ட அந்த சிறு படையை
உறுதிபடுத்துவதற்கும் வலுப் படுத்துவதற்கும் அல்லாஹ் மலக்குமார்களை அனுப்பி உதவி
செய்தான். முஸ்லிம்களுக்கு வெற்றியைத் தர வேண்டும் என்று நாடி விட்டால் அல்லது
அவர்களின் பிரார்த்தனையை கபூல் செய்ய வேண்டும் என்று நாடி விட்டால் அல்லாஹ்
எப்படியும் வெற்றியைக் கொடுப்பான் என்பதற்கு பத்ர் களம் மிகச்சிறந்த சான்று. ஸஹாபாக்களோடு
அன்றைக்கு மறைமுகமாக மலக்குமார்களும் போரில் கலந்து கொண்டார்கள். அவர்களும்
எதிரிகளை வீழ்த்தினார்கள்.அவர்களும் எதிரிகளை கைது செய்தார்கள். சரியாக சொல்ல
வேண்டும் என்றால் அன்றைக்கு எதிரிகளை வீழ்த்தியதும் எதிரிகளை கைது செய்ததும்
ஸஹாபாக்கள் அல்ல. மலக்குமார்கள் தான்.
قال ابو داود المازني إني لأتبع رجلا من المشركين
لأضربه، إذ وقع رأسه قبل أن يصل إليه سيفي، فعرفت أنه قد قتله غيري
பத்ரில் கலந்து கொண்ட அபூதாவூது மாஜினி ரலி
அவர்கள் கூறுகிறார்கள் ; ஒரு எதிரியைத்
தாக்குவதற்கு வாளேந்திக் கொண்டு அவனைப் பின் தொடந்து சென்றேன். ஆனால் என் வாள்
அவன் மீது படுவதற்கு முன்பு அவன் தலை கீழே விழுந்து விட்டது. (தாரீஹ் தப்ரீ)
فقال العباس : ( يا رسول الله إن هذا والله ما أسرني،
لقد أسرني رجل أجلح (انحسر الشعر عن جانبي رأسه) من أحسن الناس وجها، على فرس أبلق(به
سواد وبياض) ما أراه في القوم
நபியின் சிறிய தந்தை அப்பாஸ் ரலி அவர்கள்
பத்ரில் எதிரிப் படையில் இருந்தார்கள். அவர்களை ஒரு ஸஹாபி கைது செய்து பிடித்து
வந்தார்கள்.ஆனால் அப்பாஸ் ரலி அவர்கள் அந்த ஸஹாபியை சுட்டிக்காட்டி இவர் என்னை
கைது செய்ய வில்லை. நல்ல முக அழகுள்ள வெள்ளை கருப்பு கலந்த குதிரையில் வந்த ஒருவர்
தான் என்னை கைது செய்தார். அவரை இதற்கு முன்பு நான் பார்த்ததே இல்லை என்று கூறுகிறார்கள்.ஆனால்
அந்த ஸஹாபி நான் தான் கைது செய்தேன் என்று சொன்னார்கள். அப்போது நபி ﷺ அவர்கள் உமக்கு
அல்லாஹ் ஒரு மலக்கைக் கொண்டு உதவி புரிந்திருக்கிறான் என்று கூறினார்கள். (முஸ்னது அஹ்மது : 2/193)
جاء جبريل إلى النبي ـ صلى الله عليه وسلم ـ فقال:
ما تعدون أهل بدر فيكم؟، قال: من أفضل المسلمين ـ أو كلمة نحوها ـ قال: وكذلك من شهد
بدرا من الملائكة
நபி ﷺ
அவர்களிடம் வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, 'உங்களிடையே பத்ருப்போரில் பங்கெடுத்தவரைப் பற்றி
என்ன கருதுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு நபி ﷺ அவர்கள், '(பத்ரில் கலந்து கொண்டோர்)
முஸ்லிம்களில் சிறந்தவர்கள்'
என்றோ அல்லது அது போன்ற வேறொரு
வார்த்தையையோ கூறினார்கள். (உடனே) ஜிப்ரீல் (அலை) அவர்கள், 'இவ்வாறு தான் வானவர்களில் பத்ருப்போரில் பங்கெடுத்தவர்கள்
(எங்களில் சிறந்தவர்கள் என்று நாங்களும் கருதுகிறோம்)' என்று கூறினார்கள்.(புகாரி :3992)
நபி ﷺ அவர்கள் கேட்ட துஆவுக்கு
பிரதிபலனாக மலக்குமார்களை போராளிகளாக கலத்தில் இறக்கி போர் செய்ய வைத்து அதன்
மூலம் பத்ரில் அல்லாஹ் வெற்றியைக் கொடுத்தான்.அந்த நிகழ்வை சொல்லும் போது தான்
இந்த வார்த்தையை (வெற்றி இறைவன்
புறத்திலிருந்தே தவிர இல்லை) இறைவன் சுட்டிக்
காட்டுகிறான். அந்த வார்த்தைக்கு பொருள் என்னவென்றால் மலக்குமார்கள் களத்தில்
இறங்கி போர் செய்த காரணத்தால் பத்ரில் வெற்றியை மலக்குமார்கள் தான் கொடுத்தார்கள்
என்று யாரும் சொல்லி விடக்கூடாது.நினைத்து விடக்கூடாது. அந்த வெற்றிக்கு
மலக்குமார்கள் ஒரு காரணம் தானே தவிர வெற்றியைக் கொடுத்தது அவர்களல்ல நான் தான்
என்பதை உணர்த்தும் முகமாகத்தான் அந்த வார்த்தையை இறைவன் குர்ஆனில் பதிவு
செய்திருக்கிறான்.
இந்த கருத்தை பின் வரும் வசனமும் தெளிவுபடுத்துகிறது.
وما جعله
الله الا بشري لكم ولتطمئن قلوبكم به
உங்களுக்கு சுபச்செய்தியாகவும் உங்கள் உள்ளங்கள்
அமைதி பெறுவதற்காகவுமே தவிர அதை மலக்குகளின் உதவி அல்லாஹ் ஆக்க வில்லை. (அல்குர்ஆன் : 8 ; 10)
எனவே நம் சிந்தனையும் எண்ணமும் எப்போதும்
இறைவனை நோக்கித்தான் இருக்க வேண்டுமே தவிர புறக்காரணங்களை நோக்கி போய்
விடக்கூடாது.
காலித் பின் வலீத் என்ற ஒரு ஸஹாபி.ஆரம்பத்தில் எதிரிகளின் படையில் அவர்களுக்கு பக்கபலமாக இருந்த மிகச்சிறந்த வீரர். ஹுதைபியா உடன்படிக்கைக்குப் பிறகு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிறகு இஸ்லாமியப் படைகளின் மிகச்சிறந்த வீரராக மட்டுமல்ல படைத்தளபதியாகவும் காட்சி தந்தார்கள். அவர்களின் வீரத்தை பாராட்டும் வகையில் நபி ﷺ அவர்கள் அவர்களுக்கு ஸைஃபுல்லாஹ் என்று பெயர் சூட்டினார்கள். அவர்கள் கலந்து கொண்ட எந்தப் போரிலும் இஸ்லாமியர்கள் தோற்றதில்லை என்று சொல்லப்படும் அளவுக்கு மிகச்சிறந்த போர்ப்படை தளபதியாக திகழ்ந்தவர்.நபி ﷺ அவர்களின் காலத்திலும் ஹள்ரத் அபூபக்கர் உமர் ரலி அவர்கள் காலத்திலும் 100 க்கும் மேற்பட்ட போர்க்களங்களில் போர்த் தளபதியாக சென்றிருக்கிறார்கள். அதில் எந்தப் போரிலும் இஸ்லாமியர்கள் தோற்றதில்லை. அந்தளவு இஸ்லாத்திற்கு மிகப்பெரும் வெற்றிகளை தேடித்தந்தவர் காலித் பின் வலீத் ரலி அவர்கள்.
ஹள்ரத் உமர் ரலி அவர்கள் காலத்தில் நடந்த ஒரு போர்க்
களத்தில் வழமை போல் அவர்கள் தளபதியாக சென்றிருந்தார்கள். போர் மிக உக்கிரமமாக
நடந்து கொண்டிருக்கிற போது தடீரென்று ஒரு சலசலப்பு. ஏனென்றால் ஜனாதிபதி ஹள்ரத்
உமர் ரலி அவர்களிடமிருந்து ஒரு கடிதம் ஒன்று வந்தது. அதைப் பிரித்துப் பார்த்தால்
இந்தப் போர்க்களத்தில் இதற்குப் பிறகு காலித் பின் வலீத் ரலி அவர்களுக்கு பகரமாக
அபூஉபைதா ரலி அவர்கள் தான் தளபதியாக இருப்பார்கள் என்று எழுதப்பட்டிருந்தது.
காலித் பின் அவர்கள் தான் அதுவரை தளபதியாக இருந்து போரை வழிநடத்திக்
கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கலந்து கொண்டால் நிச்சயம் அதில் வெற்றி கிடைக்கும்
என்பது எல்லாரும் அறிந்த விஷயம். இருந்தாலும் திடீரென்று தளபதியை உமர் ரலி அவர்கள்
மாற்றி அமைக்க வேண்டும் என்று உத்தரவு போடுகிறார்கள். காலித் ரலி அவர்களும்
எதுவும் சொல்லாமல் அபூஉபைதாவின் கையில் கொடியைக் கொடுத்து அவரை தளபதியாக ஆக்கி
போரில் சாதாரண வீரராக கலந்து கொண்டார்கள்.போரில் இஸ்லாமியர்களுக்கு வெற்றியும்
கிடைத்தது.
நாம் இங்கே ஒன்றை யோசித்துப் பார்க்க
வேண்டும்.ஒரு பொறுப்பில் அல்லது ஒரு அதிகாரத்தில் நீண்ட காலமாக இருந்தவர் திடீரென்று
அந்த பொறுப்பிலிருந்து இறக்கப்படுவதை நிச்சயம் விரும்ப மாட்டார். ஒரு அதிகாரத்திலேயே
தன் வாழ்நாளை கழித்தவரால் எக்காலத்திலும் அந்த அதிகாரம் இல்லாமல் இருக்க முடியாது.
அதுவும் அதில் ருசி கண்டவர் அந்த பொறுப்பை தக்க வைத்துக் கொள்வதற்கு எதை
வேண்டுமானாலும் செய்வார்.இன்றைக்குக் கூட நாம் பார்க்கிறோம். நீண்ட காலமாக
ஆட்சியில் இருப்பவர்கள் ஒரு கட்டத்தில் தோற்கும் நிலை வந்தால் தங்கள் ஆட்சியை தக்க
வைத்துக் கொள்வதற்கு எந்த ஃபிராடு வேலையையும் செய்யத் தயங்க மாட்டார்கள்.ஏனென்றால்
அந்த ஆட்சி பொறுப்பு இல்லாமல் அவர்களால் இருக்க முடியாது. ஆனால் இங்கே தளபதியாக காலித் ரலி
அவர்களிடமிருந்து திடீரென்று அந்த அதிகாரம் பறிக்கப்படுகிறது. ஆனால் எந்த
மறுபேச்சும் பேசாமல் கொஞ்சம் கூட வருத்தப்படாமல் போரில் சாதாரண ஒரு வீரராக கலந்து
கொண்டார்கள் என்றால் ஸஹாபாக்கள் என்றைக்கும் எந்தப் பதவிக்கும் ஆசைப்படுபவர்களும்
அல்ல. அதேபோன்று எதாவது பதவி அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டால் அதற்கு
வருந்துபவர்களும் அல்ல என்பதை நாம் இங்கே புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய செய்தி
என்ன வென்றால் திடீரென்று அந்த போரில் தளபதியை ஏன் மாற்றினார்கள்.அதுவும்
மிகச்சிறந்த தளபதியான இஸ்லாத்திற்கு நூற்றுக்கணக்கான வெற்றிகளைப் பெற்றுத்தந்த
காலித் பின் வலீத் ரலி அவர்களை ஏன் மாற்ற வேண்டும் என்ற கேள்வி நமக்கு எழுகிறது.
அந்த கேள்விக்கு அவர்களே விடை தருகிறார்கள்.
ما عزلته عن خيانة، ولكن خشيت أن يقال: إنه صانع
النصر. أو خشية أن يفتن الناس به.
அநியாயமாக அவரை அந்தப் பொறுப்பிலிருந்து நான்
நீக்க வில்லை. மாறாக அவர் செல்லும் போர்க்களங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கிற
காரணத்தினால் அவர் தான் வெற்றியைத் தருகிறார் என்ற எண்ணம் மக்கள் உள்ளத்தில் வந்து
விடக்கூடாது. எனவே அவரை நான் நீக்கினேன் என்று உமர் ரலி அவர்கள் கூறினார்கள்.
வெற்றியைத் தருவது அல்லாஹ் தான். காலித் ரலி
அவர்களை அல்லாஹ் அதற்குக் காரணமாக ஆக்கியிருக்கிறான். ஆனால் அப்போது காலித் ரலி போனாலே
வெற்றி கிடைத்து விடும் என்று மக்கள் பேசினார்கள். இப்படியே அந்த எண்ணம் மிகைத்து
விட்டால் காலித் போனால் தான் வெற்றி கிடைக்கும் காலித் போக வில்லையென்றால் வெற்றி
கிடைக்காது. காலித் தான் வெற்றியைத் தரக்கூடியவர் என்று சொல்ல ஆரம்பித்து
உண்மையில் வெற்றியைத் தரக்கூடிய இறைவனை மக்கள் மறந்து விடுவார்கள் என்ற எண்ணத்தில்
தான் அப்படி ஒரு மாற்றத்தை உமர் ரலி அவர்கள் செய்தார்கள்.
எனவே என்றைக்கும் நாம் வெளித்தோற்றங்களையோ புறக்காரணங்களை
நம்பாமல் எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிற இறைவனை முழுமையாக நம்ப
வேண்டும்.அதற்காக எதையும் செய்யக்கூடாதா என்றால் எல்லாவற்றையும் செய்ய வேண்டும்.
செய்து விட்டு இறைவனை நம்ப வேண்டும்.
قال رجل "يا رسول الله أعقلها وأتوكل أو أطلقها وأتوكل؟" قال
: «اعقلها وتوكل
வாகனத்தை கட்டி வைத்து விட்டு இறைவனை நம்ப
வேண்டுமா அல்லது அதை அவிழ்த்து விட்டு இறைவனை நம்ப வேண்டுமா என ஒரு மனிதர்
கேட்டார். அதை கட்டி விட்டு இறைவனை நம்பு என்று நபியவர்கள் கூறினார்கள். (திர்மிதி : 2517)
எனவே இந்தியாவின் இந்த நிலை மாறுவதற்கு
வெளிப்படையாக எல்லா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். நம் இருப்பை
தக்க வைத்துக் கொள்வதற்குத் தேவையான ஆவனங்கள் அனைத்தையும் தயாரித்து வைத்துக்
கொள்ள வேண்டும். நம் வாழ்வுரிமையை கேள்விக்குறியாக்கும் அந்த சட்டத்தை இல்லாமல்
ஆக்குவதற்கு வெளிப்படையாக எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். ஆனால் நம் நம்பிக்கை இறைவனைச் சார்ந்ததாக இருக்க
வேண்டும்.
No comments:
Post a Comment