Sunday, September 6, 2020

ஷரீஅத்தை முழுமையாக பின்பற்றுவோம்


 

                           (மூன்று வருடங்களுக்கு முன்பு பேசிய ஜும்ஆ உரை)

ஒரு சில நாட்களாகவே ஒரு விதமான பதட்டமும் பரபரப்பும் நம்மிடையே நிலவி வருகிறது.அமைதியாக தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்து கொண்டிருந்த முஸ்லிம்கள் இன்று வீதிக்கு வந்திருக்கிறார்கள்.

காரணம் இஸ்லாமிய தனியார் சட்டத்தை நீக்கி விட்டு பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதின் மூலம் நம் உயிரை விட மேலாக மதிக்கக் கூடிய இஸ்லாமிய ஷரீஅத்தை நேரடியாக எதிர்க்க வக்கில்லாத துப்பில்லாத திராணியில்லாத இந்திய மத்திய அரசாங்கம் கொல்லை புரம் வழியாக அதை அழிப்பதற்கும் ஒழிப்பதற்கும் அதை நம்மிடமிருந்து இல்லாமல் ஆக்குவதற்கும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதற்கான சூழ்ச்சி வலைகளை பிண்ணி வருகிறது.

முஸ்லிம்கள் ஷரீஅத்தில் தங்கள் கொள்கை கோட்பாடுகளில் மிகவும் உறுதியாக இருப்பார்கள் என்று எல்லோருக்கும் தெரியும்.கடந்த 21 ம் தேதி தி ஹிந்து பத்திரிக்கையில் ; இன்றைய வங்கிகள் அனைத்தும் வட்டியை மையமாக வைத்து செயல்படுகிறது.ஆனால் முஸ்லிம்களோ வட்டியை விரும்ப மாட்டார்கள்.அதனால் அவர்களில் வெறும் 12 % மக்கள் மட்டும் தான் வங்கியை பயன்படுத்துகிறார்கள்.மீதி 88 % முஸ்லிம் மக்கள் வங்கிகளை புறக்கணிக்கிறார்கள்.அம்மக்களையும் வங்கிகளோடு இணைக்க வேண்டும் என்பதற்காக வட்டியில்லா ஒரு பிரிவை ஒவ்வொரு வங்கியிலும் தொடங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி பரிசீலிருந்து வருகிறது என்ற ஒரு செய்தி வந்திருந்தது.

அதனால் தான் நேரடியாக ஷரீஅத்தை எதிர்க்காமல் தலாக்,பெண்கள் உரிமை என்ற பெயரில் அதில் தலையிடுகிறார்கள்.அதன் ஒரு வெளிப்பாடு தான் இந்த பொதுசிவில் சட்ட பிரச்சனை.அதற்காக இன்றைக்கு நாடு முழுக்க எல்லா இடங்களிலும் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகிறது.

இஸ்லாத்திற்கு எதிரான சதித்திட்டங்கள் தீட்டப்படும் இந்த வேளையில் அதற்கான காரணத்தை ஆராய வேண்டிய தருணத்தில் நாம் இருக்கி றோம்.இஸ்லாத்திற்கு எதிரான குரல்களும் எதிரான நடவடிக்கைகளும் ஏற்படுவதற்கு என்ன காரணம் ?

முஸ்லிம் சமூகத்தின் மீது பா.ஜ.க அரசாங்கத்தின் விரோதப்போக்கு ஒரு புறம் இருந்தாலும் ஷரீஅத்தில் பின்பற்றுவதில் மார்க்கத்தின் படி நடப்பதில் நமக்கும் இருக்கும் பலகீனமும் ஒரு காரணம் என்பதை யாரும் மறுக்க இயலாது.

1985 ல் ஷாபானு பிரச்சனையும் இன்று ஏற்பட்டிருக்கிற சாயிரா பானு பிரச்சனையும் நாம் இன்றைக்கு ஷரீஅத்தில் மிகவும் பலகீனமாகவும் பின்தங்கியும் இருக்கிறோம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டி விட்டது. எனவே நாம் நமது ஈமானை புதுப்பிக்க வேண்டிய ஷரீஅத்துடன் இன்னும் அதிகமாக நெருக்கத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

நபியின் வாழ்வில் அனைத்திற்கும் வழிகாட்டுதல் உண்டு.

لقد كان لكم في رسول الله اسوة حسنة

அல்லாஹ்வின் தூதரிடத்தில் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அல்குர்ஆன் : 33 ; 21)

வள்ளல் நபியின் வழிகாட்டலை ஒதுக்கி வைத்து பூமான் நபியின் போதனைகளை புறம் தள்ளி விட்டு நாம் எந்தக் காரியத்தையும் செய்து விட இயலாது.

ஆனால் இன்றைக்கு நம்மில் குர்ஆனுக்கு முக்கியத்துவம் தரும் பலர் நபியின் சுன்னத்துகளுக்கு முக்கியத்துவம் வழங்குவதில்லை.

قال ابن عباس رضي الله عنهما : ثلاث آيات نزلت مقرونة بثلاث لا تقبل منها واحدة بغير قرينتها ( إحداهما ) قول الله تعالى : { أطيعوا الله و أطيعوا الرسول } فمن أطاع الله و لم يطع الرسول لم يقبل منه ( الثانية ) قول الله تعالى : { و أقيموا الصلاة و آتوا الزكاة } فمن صلى و لم يزك لم يقبل منه ( الثالثة ) قول الله تعالى : { أن اشكر لي و لوالديك } فمن شكر الله و لم يشكر لوالديه لم يقبل منه

குர்ஆனில் மூன்று விஷயங்கள் இன்னொரு மூன்று விஷயங்களுடன் இணைக்கப்பட்டது. அவற்றில் ஒன்று இல்லாமல் இன்னொன்றை இறைவன் ஏற்பதில்லை. அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப்படுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். ஒருவர் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு தூதருக்கு வழிப்பட வில்லையெனில் அல்லாஹ்வுக்கு வழிப்படுவதையும் அவன் ஏற்க மாட்டான். தொழுகையையும் ஜகாத்தையும் அல்லாஹ் இணைத்துக் கூறியுள்ளான். ஒருவர் தொழுகிறார். ஆனால் ஜகாத் கொடுக்க வில்லையெனில் அவருடைய தொழுகையும் ஏற்கப்படாது.தனக்கு ஷுக்ர் செய்வதையும் பெற்றோருக்கு ஷுக்ர் செய்வதையும் அல்லாஹ் இணைத்திருக்கிறான். ஒருவர் அவ்விரண்டில் ஒன்றை செய்து மற்றொன்றை விட்டு விட்டால் அவர் செய்ததையும் அல்லாஹ் ஏற்க மாட்டான் என இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள். (அல்கபாயிர் லில் இமாமித் தஹபீ)

நம்புவதிலும் பின்பற்றுவதிலும் இவ்விரண்டையும் அல்லாஹ் இணைத்துக கூறியிருக்கிறான்.எனவே இரண்டையும் பின்பற்ற வேண்டும். குர்ஆனையும் ஹதீஸையும் பின்பற்ற வேண்டும்.குர்ஆன் படியும் வாழ வேண்டும்.ஹதீஸின் படியும் வாழ வேண்டும்.

இவ்விரண்டும் தான் மார்க்கத்தின் அஸல்.ஷரீஅத்தின் அடிப்படை.

تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله

உங்களிடம் இரு விஷயங்களை விட்டுச் செல்கிறேன்.அவ்விரண்டையும் நீங்கள் பற்றிப் பிடித்திருக்கும் வரை நீங்கள் வழிதவற மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வின் வேதம். இன்னொன்று அவனுடைய தூதரின் வழிமுறை. (மிஷ்காத் : 184)

நாம் வாழ்வில் வெற்றி பெற வேண்டுமென்றால் நாம் நபியின் வாழ்வையும் வாக்கையும் பற்றிப் பிடித்து வாழ வேண்டும்.அதில் தான் ஈருல வெற்றி அடங்கி யிருக்கிறது.

ஈருலகத்தின் வெற்றியும் சுபிட்சமும் இதில் தான் அடங்கியிருக்கிறது. அதை நபியின் தோழர்கள் நன்றாக விளங்கியிருந்தார்கள்.

ஸஹாபாக்கள் அவ்வாறு விளங்கிய காரணத்தினால் தான் நபியை நபியின் வாழ்வையும் வாக்கையும் உயிர் மூச்சாக கருதினார்கள்.நபி ஒன்றை செய்தால் செய்வார்கள் விட்டால் விடுவார்கள் ஏன் செய்தார்கள் ஏன் விட்டார்கள் என்று யோசிக்க மாட்டார்கள்.

عن عمر رضي الله عنه أنه جاء إلى الحجر الأسود فقبله فقال إني أعلم أنك حجر لا تضر ولا تنفع

ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட்டு விட்டு அதைப் பார்த்து ஹள்ரத் உமர் ரலி அவர்கள் சொன்னார்கள் :  நீ ஒரு கல். நீ எந்த நன்மையையோ தீமையையோ செய்ய முடியாது என்று எனக்குத் தெரியும். நபி அவர்கள் மட்டும் உன்னை முத்தமிட வில்லையெனில் நானும் உன்னை முத்தமிட மாட்டேன். (ஃபத்ஹுல் பாரி)

.தவாஃபில் ரமல், இள்திபா  என  இரு விஷயங்கள் உண்டு. தவாஃபின் ஏழு சுற்றுகளில் முதல் மூன்று சுற்றில் கால் பாதங்களை நெருக்கமாக வைத்து கொஞ்சம் சுறுசுறுப்பாக வேகமாக நடப்பதற்குப் பெயர் ரமல்.இஹ்ராம் அணியும் போது இடது புஜத்தை மறைத்து வலது புஜம் தெரியிற மாதிரி மேனியில் துண்டு போடுவதற்கு இள்திபா என்று பெயர். இந்த இரண்டு முறைக்கும் ஒரு காரணம் உண்டு.

நபி அவர்கள் ஹிஜ்ரத் போய் விட்டு முதன் முதலாக மக்காவிற்கு உம்ரா செய்த போது இவ்வாறு செய்ய வேண்டும் என்று சொன்னார்கள்.காரணம்.அவர்கள் மதீனாவுக்கு போன நேரத்தில் அங்கே ஸஹாபாக்கள் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டார்கள். நோயினால் பாதிக்கப்பட்ட நபித்தோழர்கள் மெலிந்து போய் இருப்பார்கள், பலமில்லாமல் இருப்பார்கள், ரொம்ப பலவீனமாக இருப்பார்கள், அவர்களைப் பார்த்து ரசிக்கலாம்,கைகொட்டி சிரிக்கலாம் என்று மக்கத்து காஃபிர்கள் தவாஃப் செய்யும் இடத்தில் காத்திருந்தார்கள்.அப்போது தான் நபி அவர்கள் இவ்வாறு செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். உண்மையில் நாம் பலம் குறைவாக இருந்தாலும் நாம் பலவீனமாக இருந்தாலும் நம் பலவீனம் எதிரிகளுக்கு தெரிந்து விடக்கூடாது. நம் பலவீனத்தை அவர்கள் தெரிந்து கொண்டால் அவர்களது கை இன்னும் ஓங்கி விடும். எனவே நாங்கள் பலமிக்கவர்கள் தான் என்பதை காட்டும் விதமாக இவ்வாறு செய்யுங்கள் என்று சொன்னார்கள்.அப்படியே ஸஹாபாக்களும் செய்தார்கள்.

நபி அவர்கள் காலம் முடிந்து ஹள்ரத் அபூபக்கர் ரலி அவர்கள் காலமும் முடிகிறது.ஹள்ரத் உமர் ரலி அவர்களின் காலத்தில் அவர்கள் யோசித்தார்கள்.

 

ما لنا والمرمل إنما كنا رأينا المشركين وقد أهلكهم الله ، ثم قال شيء صنعه النبي - صلى الله عليه وسلم - فلا نحب أن نتركه

அப்போது இஸ்லாமியர்கள் பலவீனமாக இருந்தார்கள். எனவே தான் நபியவர்கள் அவ்வாறு செய்யும்படி உத்தர விட்டார்கள். இப்போது இஸ்லாமியர்கள் பலமிக்கவர்களாக ஆகி விட்டார்கள். உலகத்தின் அனைத்து நாடுகளும் நம்மை பார்த்து பயந்து நடங்கும் அளவு நமக்கு அல்லாஹ் பலத்தைக் கொடுத்து விட்டான். இப்போது நம் பலம் என்ன என்பதை மற்றவர்களுக்கு காட்டத் தேவையில்லை. எனவே இப்போது நாம் ரமல் செய்ய வேண்டுமா என்று யோசித்தார்கள். இருந்தாலும் அது நபியின் சுன்னத் என்ற உணர்வு வந்தவுடன் அதை விட மாட்டேன் என்று கூறி விட்டார்கள்.

ஒரு காரியம் நமக்குத் தேவையில்லையென்றாலும் அதன் அவசியம் நமக்கு வர வில்லையென்றாலும் அது நபியின் வழிமுறை என்றால் அதை செய்ய வேண்டும். அது தான் நபியை முழுமையாக பின்பற்றுவதற்கான பொருள்.

بينما رسول اللهِ صلى الله عليه وسلم يصلي بأصحابه إذ خلع نعليه فوضعهما عن يساره فلما رأى ذلك القوم ألقوا نعالهم فلما قضى رسول اللهِ صلى الله عليه وسلم صلاته قال ما حملكم على إلقاء نعالكم قالوا رأيناك ألقيت نعليك فألقينا نعالنا فقال رسول اللهِ صلى الله عليه وسلم إن جبريل صلى الله عليه وسلم أتاني فأخبرني أن فيهما قذرا أو قال أذى وقال إذا جاء أحدكم إلى المسجد فلينظر فإن رأى في نعليه قذرا أو أذى فليمسحه وليصل فيهما

தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் போது நபி அவர்கள் தன் செருப்புக்களை கழற்றி வைத்தார்கள். அதைக்கண்டதும் ஸஹாபாக்களும் தங்கள் செருப்புக்களை கழற்றி விட்டார்கள். தொழுகை முடிந்த பிறகு ஏன் உங்கள் செருப்புக்களை கழற்றினீர்கள் என நபியவர்கள் கேட்ட போது நீங்கள் கழற்றுவதை நாங்கள் பார்த்தோம், எனவே நாங்களும் கழற்றினோம் என்றார்கள். என் செருப்புக்களில் அசுத்தம் இருக்கிறது என ஜிப்ரயீல் அலை அவர்கள் கூறினார்கள். எனவே தான் நான் கழற்றினேன் என்றார்கள். (அபூதாவூது : 650)

بيْنَا النَّاسُ بقُبَاءٍ في صَلَاةِ الصُّبْحِ، إذْ جَاءَهُمْ آتٍ، فَقالَ: إنَّ رَسولَ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ قدْ أُنْزِلَ عليه اللَّيْلَةَ قُرْآنٌ، وقدْ أُمِرَ أنْ يَسْتَقْبِلَ الكَعْبَةَ، فَاسْتَقْبِلُوهَا، وكَانَتْ وُجُوهُهُمْ إلى الشَّأْمِ، فَاسْتَدَارُوا إلى الكَعْبَةِ.

குபா பள்ளி வாசலில் மக்கள் ஸுபுஹ் தொழுது கொண்டிருந்தபோது அவர்களிடம் ஒருவர் வந்து, 'சென்ற இரவில் கஅபாவை முன்னோக்கித் தொழுமாறு நபி அவர்களுக்கு இறைவசனம் அருளப்பட்டது' என்று கூறினார். (பைத்துல் முகத்தஸ் இருக்கும் திசையான) ஷாம் நாட்டை நோக்கித் தொழுது கொண்டிருந்த அவர்கள் அப்படியே கஅபாவை நோக்கித் திரும்பினார்கள். (புகாரி : 403)

لما استوى رسولُ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّمَ يومَ الجمعةِ قال اجلِسوا فسمع ذلك ابنُ مسعودٍ فجلس على باب المسجدِ فرآه رسولُ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّمَ فقال تعال يا عبدَ اللهِ بنَ مسعود .

ஒரு ஜும்ஆ நாளன்று நபி அவர்கள் மக்களை நோக்கி அமருங்கள் என்று சொன்னார்கள். இந்த வார்த்தையைக் கேட்ட இப்னு மஸ்வூத் ரலி அவர்கள் பள்ளியின் வாசலிலேயே அமர்ந்து விட்டார்கள். அதைப் பார்த்த நபியவர்கள் அவர்களை உள்ளே அழைத்தார்கள். (அபூதாவூது : 1091)

முதல் ஹதீஸில் தொழுகையில் நபியின் செயலைக் கண்டதுடன் அப்படியே ஸஹாபாக்கள் பின்பற்றினார்கள். நபி ஏன் செய்தார்கள். அதற்குக் காரணம் என்ன ? என்று யோசிக்க வில்லை. தொழுகை முடிந்த பிறகு கேட்டுக் கொள்ளலாம். அதற்குப் பிறகு செய்து கொள்ளலாம் என்றும் இருக்க வில்லை. உடனே பின்பற்றினார்கள். அடுத்த இரு ஹதீஸ்களில் நபியின் வார்த்தையைக் கேட்டவுடன் சற்றும் யோசிக்காமல் அதற்கு வழிப்பட்டார்கள். இது தான் நபியைப் பின்பற்றுவதற் கான பொருள்.

எனவே எது தேவை எது தேவையில்லை எதை செய்ய வேண்டும் எதை செய்யக் கூடாது எது நன்மை எது தீமை என்பதை முடிவு செய்வதற்கும் தீர்மானிப்பதற்கும் ஸஹாபாக்கள் நபியின் சொல்லையும் செயலையும் தான் அதற்கு அடிப்படையாக எடுத்துக் கொண்டார்கள்.

மார்க்கம் என்பது அறிவார்ந்தது தான். இருந்தாலும் அதன் அஸல் அறிவல்ல.குர்ஆனும் ஹதீஸும் தான்.

قال الإمام الباقر: أنت الذي حولت دين جدي وأحاديثه إلى القياس.

قال أبو حنيفة: أجلس مكانك كما يحق لي، فإن لك عندي حرمة، كحرمة جدك (صلى الله عليه وسلم)، في حياته على أصحابه، فجلس، ثم جثا أبو حنيفة بين يديه، ثم قال: إني أسألك عن ثلاث كلمات فأجبني، الرجل أضعف أم المرأة.

قال الباقر: المرأة أضعف، قال أبو حنيفة: كم سهم المرأة في الميراث، قال الباقر: للرجل سهمان، وللمرأة سهم، قال أبو حنيفة: هذا علم جدك، ولو حولت دين جدك لكان ينبغي القياس أن يكون للرجل سهم، وللمرأة سهمان، لأن المرأة أضعف من الرجل، ثم الصلاة أفضل أم الصوم، قال الباقر: الصلاة أفضل، قال أبو حنيفة: هذا قول جدك، ولو حولت دين جدك، لكان أن المرأة إذا طهرت من الحيض أمرتها أن تقضي الصلاة، ولا تقضي الصوم.

ثم البول أنجس أم النطفة؟

قال الإمام الباقر: البول أنجس، قال أبو حنيفة: لو كنت حولت دين جدك بالقياس، لكنت أمرت أن يغتسل من البول، ويتوضأ من النطفة، ولكن معاذ الله أن أحول دين جدك بالقياس.

فقام الإمام الباقر، وعانقه، وقبل وجهه 


நபியின் குடும்பத்தைச் சார்ந்த முஹம்மது பின் பாகிர் ரஹ் அவர்கள் உம்ராவிற்கு சென்ற சமயம் இமாம் அபூஹனீபா ரஹ் அவர்களை சந்தித்தார்கள். என் பாட்டனார் நபி அவர்களின் மார்க்கத்தை மாற்றியமைத்த அபூஹனீபா நீங்கள் தானா என்று கோபத்துடன் கேட்டார்கள். இமாம் அபூஹனீபா ரஹ் அவர்கள் எதுவும் பேசாமல் ஸஹாபாக்கள் நபியைக் கண்ணியப்படுத்தியதைப் போன்று உங்களை கண்ணியப்படுவது என் கடமை என்று கூறி அவர்களை நாற்காலியில் அமர வைத்து விட்டு தான் தரையில் அமர்ந்து கொண்டார்கள்.பிறகு இமாம் அபூஹனீபா ரஹ் அவர்கள் இப்னு பாகிர் ரஹ் அவர்களிடம் நான் உங்களிடம் சில கேள்விகளைக் கேட்கிறேன். அதற்கு தாங்கள் பதில் தாருங்கள் என்றார்கள். அவர்கள் ஒப்புதல் தெரிவித்ததும்

விந்து, சிறுநீர் இவற்றில் எது அதிக அசுத்தமானது? என்று கேட்டார்கள். அதற்கு இமாம் அவர்கள் சிறுநீர்என்று பதிலளித்தார்கள். ஆனால் மார்க்கச் சட்டப்படி சிறுநீர் வெளிப்பட்டால் அந்த இடத்தை மட்டும் கழுவினால் போதும் என்றும், விந்து வெளிப்பட்டால் அந்தத் இடத்துடன் மட்டுமல்லாது உடல் முழுவதையுமே கழுவ வேண்டும் என்றல்லவா இருக்கிறது. நான் என் சுய அனுமானப்படி தீர்ப்புக் கூறுவதானால் அதிக அசுத்தமாக இருக்கிற சிறுநீரையல்லவா அதிகம் சுத்தம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியிருப்பேன். நான் அவ்வாறு செய்யாமல் மார்க்கச் சட்டப்படி தான் தீர்ப்பு அளித்துள்ளேன் என்று சொன்னார்கள். 

அடுத்து அபூஹனீபா ரஹ் அவர்கள் ஆண், பெண்களில் அதிகப் பலவீனமானவர்கள் யார்? என்று கேட்டார்கள்.பெண்கள்தாம்என்று இமாம் பதிலளித்தார்கள். பாகப் பிரிவினையில் யாருக்கு அதிகப் பங்கு கொடுக்கப்படுகிறது என்று கேட்டார்கள்.ஆண்களுக்குத்தான்.‘- என்று இமாம் அவர்கள்  கூறினார்கள். நான் மட்டும் என் சுய அனுமானப்படி தீர்ப்புக் கூறுவதாயின் பெண்கள் பலவீனமான வர்கள் என்பதலால் அவர்களுக்கு இரண்டு பங்கும், ஆண்களுக்கு ஒரு பங்கும் சொத்து பாகம் பிரிக்கப்பட வேண்டும் என்றல்லவா தீர்ப்பளித்திருப்பேன். ஆனால் நான் மார்க்கச் சட்டப்படி தான் தீர்ப்பளித்திருக்கிறேன் என்றார்கள் அபூஹனீபா ரஹ் அவர்கள்.

கடைசியாக இமாம் அபூஹனீபா அவர்கள் தொழுகை, நோன்பு ஆகிய இரண்டிலும் அதிகம் ஏற்றமானது எது? என்று கேட்டார்கள்.தொழுகைதான்என்று இமாம் அவர்கள் சொன்னார்கள். அப்படியானால் மாதவிலக்கான பெண் நோன்பை களா செய்யாமல் தொழுகையை அல்லவா களா செய்ய வேண்டும். நானோ அப்படிக் கூறாமல் மார்க்கச் சட்டப்படி நோன்பை களா செய்ய வேண்டும் என்றே தீர்ப்பளித்திருக்கிறேன் என்றார்கள் அபூஹனீபா இமாம் அவர்கள்.எனவே நான் முழுக்க முழுக்க ஷரீஅத்தை பின்பற்றித்தான் சட்டங்களைச் சொல்கிறேன் என்று அபூஹனீஃபா ரஹ் அவர்கள் சொன்னார்கள்.

அபூஹனீஃபா ரஹ் அவர்களின் நேர்மையை உணர்ந்த இமாம் அவர்கள் மகிழ்ச்சி அடைந்து அவர்களைக் கட்டித் தழுவி நெற்றியில் முத்தமிட்டார்கள். (அல்இஜ்திஹாத் வத் தக்லீது)

ஸஹாபாக்களும் சரி இமாம்களும் சரி தங்கள் அறிவை விட குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் தான் முக்கியத்துவம் தந்தார்கள்.

எனவே நபியின் சொல்லும் செயலும் தான் அஸல்.அதை நம் வாழ்வின் இலட்சியமாக எடுத்து செயல்படுவோம்.மாநபியின் சுன்னத்துகளுக்கு முக்கியத்துவம் தருவோம். அவர்களின் வார்த்தைகளுக்கு கட்டுப்படுவோம்.ஷரீஅத்தை முழுமையாய் பின்பற்றுவோம். இதன் மூலம் அல்லாஹ் நமக்கு வரும் எல்லா சோதனைகளையும் விலக்கி நம்மையும் நம் ஷரீஅத்தையும் அல்லாஹ் பாதுகாப்பான்.

 

 


No comments:

Post a Comment