Friday, September 11, 2020

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை

 

மோசமான ஒரு காலகட்டத்தில் மிகவும் ஆபத்தான காலச்சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.குற்றங்கள் பெருகி விட்ட, சமூக விரோதச் செயல்கள் அதிகரித்து விட்ட, சிறுபான்மைச் சமூகத்திற்கு எதிராக உரிமை மீரல்கள் மலிவாகி விட்ட, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், வன்கொடுமைகள் எல்லாம் சர்வ சாதாரணமாகிப் போன, பெண்ணாகப் பிறந்தவர்கள் இங்கு வாழவே முடியாதோ! சுதந்திரமாக இருக்கவே முடியாதோ! தங்கள் மானங்களை பாதுகாக்கவே முடியோதோ! என்று அஞ்சுகிற அளவுக்கு மோசமான நாடாக இந்திய நாடு உருவெடுத்திருக்கிறது.

மார்ச்  8 ஆம் தேதி  உலகம் முழுக்க International Women’s Day உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகின்ற அன்று அனைத்து தொலைக்காட்சிகளிலும் செய்திதாள்களிலும்,ஊடகங்களிலும் பெண்கள் சமூகத்தின் கண்கள்,  பெண்கள் போற்றப்பட வேண்டும், பெண்கள் மதிக்கப்பட வேண்டும், பெண்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றெல்லாம் பரப்புரை செய்யப்படும். ஆனால் அது வெறும் வார்த்தைகள் தான். யதார்த்தத்தில் நம் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சில வருடங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை செய்தி நம் இதயங்களை பதைபதைக்க வைத்தது. தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவையே உலுக்கிய இந்த சம்பவம் தான் அன்றைக்கு அத்தனை ஊடகங்களிலும் மிகப்பெரும் ஹைலட்டாக இடம் பிடித்திருந்தது.

 

இணையதளங்கள் வழியாக இளம்பெண்களிடம் பழக்கங்களை ஏற்படுத்திக் கொண்டு காதல் என்ற பெயரில் ஆசை வார்த்தைகளைக் கூறி அவர்களை தங்கள் ஆசைக்கு இணைங்க வைத்து அதை படம் பிடித்து அதன் மூலம் அவர்களை மிரட்டி மீண்டும் மீண்டும் அவர்களை வன்கொடுமை செய்தது ஒரு கேடுகெட்ட கும்பல்.நாடு முழுக்க இப்பாலியல் சம்பவத்தை கண்டித்து போராட்டங் களும்ஆர்ப்பாட்டங்களும் நடந்ததை நாம் அறிவோம்.

 

இப்போது ஹத்ராஸில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டாள். அப்பெண்ணின் உடலை உறவினா்கள் கூட இல்லாமல் மாநில காவல் துறையினா் அவசர அவசரமாக நள்ளிரவில் எரியூட்டியது அதை விடக் கொடுமை. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்த சம்பவம் மிகவும் கொடூரமானது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்தும், பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யக் கோரியும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

ஹத்ராஸில் மட்டுமல்ல இந்தியாவின் எல்லா மூலைமுடுக்குகளிலும் இப்படி பெண்களுக்கு எதிரான வன்கொடுகள் தினமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. நம்நாட்டில் ஆண்டுதோறும்  7 வயது தொடங்கி 77 வயது வரையிலான பெண்களில்  20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வன் கொடுமைக்குள்ளாக்கப்படுகிறார்கள் என்பது ஐ.நா. சொல்லுகிற  புள்ளி விபரம்.கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் நாட்டில்   2,78,886  பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

 

இப்படி பெண்களுக்கு எதிரான வன்கொடுகள் தொடர்கதையாகிப்போன இந்த நேரத்தில் அதற்கான காரணம் என்ன? அதற்கான தீர்வு என்ன? இனி வரும் காலங்களில் இது மாதிரியான குற்றங்களை தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன? என்று சிந்தித்து செயல்பட வேண்டிய முக்கியமான தருணத்தில் நாம் இருக்கிறோம்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மட்டுமல்ல இதுபோன்று நாட்டில் நடக்கும் குற்றங்கள் எதுவாக இருந்தாலும் அதைத் தடுப்பதற்கு அல்லது குறைப்பதற்கு இரண்டு முக்கியமான விஷயங்களைச் செய்ய வேண்டும். ஒன்று தவறு செய்வதைத் தூண்டக் கூடிய காரணங்களைக் கண்டறிந்து அதைக் கலைய வேண்டும்.மற்றொன்று தவறுகளுக்கான தண்டனைகள் முறையாக வழங்கப்பட வேண்டும்.இவ்விரண்டையும் செய்து விட்டால் குற்றங்களை முழுமையாக தடுத்து விடலாம்.குற்றங்களைத் தடுக்க இஸ்லாம் சொல்கிற தீர்வு இது தான். ஆனால் இவ்விரண்டிலுமே நம் நாடு பலவீனமாகத்தான் இருக்கிறது என்பது நாம் அறிந்த விஷயம்.

இன்றைக்கு நடக்கும் விபச்சாரங்களுக்கும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கும் காரணம் ஆபாசம் தான். ஆனால் ஆபாசப் படங்களைத் திரையிடுவதற்கும், ஆபாசப் பத்திரிகைகள் வெளிவருவதற்கும், ஆபாசமாக உடையணிவதற்கும் அனுமதி வழங்கப்பட்ட  நாட்டில் விபச்சாரத்தை ஒழிப்பதற்கும் வன்கொடுமைகளைத் தடுப்பதற்கும் எத்தனை திட்டங்கள் தீட்டினாலும், சட்டங்களைக் கொண்டு வந்தாலும் அதனை ஒழிக்க முடியாது.

மது விற்பனைக்கு முழு லைஸன்ஸைக் கொடுத்ததோடு மட்டுமின்றி அரசாங்கமே மது பார்களை எடுத்து நடத்திக் கொண்டிருக்கிற இந்நாட்டில் மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு,குடி குடியைக் கெடுக்கும் என்று விளம்பரம் செய்வதினாலோ அல்லது மது உடல் நலத்திற்கு கேடானது.மது உயிரைக் கொல்லும் என்று மது பாட்டில்களில் எழுதி வைப்பதினாலோ என்ன பயன்? எனவே ஒரு தவறைத் தடுக்க வேண்டுமென்றால் அந்த தவறுக்கு எது காரணமோ அந்த தவறை எது தூண்டுமோ அதை முதலில் தடுக்க வேண்டும்.அப்போது தான் அந்த தவறைத் தடுக்க முடியும்.

அல்லாஹ் அருளிய அருள்மறை வேதத்திலும் அண்ணல் நபி அவர்கள் அருளிய ஹதீஸ்களிலும் குற்றங்களுக்கு தண்டனைகளைச் சொல்லும் வசனங்கள் மிக சொர்ப்பம் தான்.ஆனால் அந்த குற்றங்களுக்கான காரணங்களைச் சொல்லி அதை தடுக்கும் வசனங்கள் ஏராளம் இருப்பதை நாம் பார்க்கலாம்.

விபச்சாரத்திற்கு தண்டனையை சொல்லும் வசனம் ஒன்று தான். ஆனால் ஆண்கள் பெண்களைப் பார்க்க வேண்டாம்,பெண்கள் ஆண்களைப் பார்க்க வேண்டாம்.அந்நியப் பெண்ணோடு தனிமையில் இருக்க வேண்டாம், ஒரு பெண் தனியே பயணிக்க வேண்டாம்.ஒரு பெண் தன்னை அந்நிய ஆண்களுக்கு அலங்காரப்படுத்திக் காட்ட வேண்டாம், திருமண வயதை அடைந்தும் திருமணம் முடிக்காமல் இருக்க வேண்டாம் என்று விபச்சாரத்திற்கான காரணங்களைச் சொல்லி அதைத் தடுக்கும் 100 கணக்கான விஷயங்கள் குர்ஆனிலும் ஹதீஸிலும் நிரம்பி வழிவதைப் பார்க்கலாம்.திருடினால் கையை வெட்ட வேண்டும் என்று சொல்லும் வசனம் ஒன்று தான். ஆனால் செல்வந்தர்கள் தங்கள் பொருளாதாரத்தை ஏழைகளுக்கு கொடுத்து உதவ வேண்டும்,தங்கள் ஜகாத்தை வருடா வருடம் சரியான முறையில் கொடுக்க வேண்டும்,சிரமத்தில் இருப்பவர்களுக்கு கடன் கொடுத்து உதவ வேண்டும் என்று திருட்டை தடுக்கும் 100 கணக்கான விஷயங்கள் குர்ஆனிலும் ஹதீஸிலும் சொல்லப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.

எனவே தவறுக்கான காரணம் முதலில் கலையப்பட வேண்டும்.

இரண்டாவது விஷயம் குற்றவியல் தண்டனைகள் முறைப்படுத்தப்பட வேண்டும். இதில் நம் நாட்டின்  நிலை என்ன என்பதை சொல்ல வேண்டிய அவசியமில்லை.

பல குற்றவாளிகள் தங்களிடம் இருக்கும் பணபலத்தால் ஆட்சி அதிகாரத்தால் சட்டத்தில் இருக்கிற ஓட்டைகளை வைத்து இலகுவாக தப்பித்து விடுகிறார்கள். அல்லது அந்த குற்றத்திற்கு நீதமன்றம் தீர்ப்பு சொல்வதற்குள் அவர்கள் மரணித்து விடுவார்கள்,அல்லது பாதிக்கப்படவன் மரணித்து விடுவான். அப்படியே தண்டனை வழங்கினாலும் சில மாதங்களோ, சில வருடங்களோ சிறைத் தண்டனை வழங்கப்படுகின்றது. அந்த சிறையிலும் அவர்களுக்கு வசதியான வாழ்க்கை.

அநியாயங்களையும் அட்டூழியகிங்களையும் செய்த குற்றவாளிகளுக்கு மூன்று வேளை உணவுக்கான உத்தரவாதம் சிறையில் தரப்படுகின்றது. உயர் தரமான மருத்துவ வசதிகள் அவர்களுக்கு அங்கே செய்து தரப்படுகின்றன. அவர்களின் பொழுதைப் போக்குவதற்காக (?) சினிமா போன்ற வசதிகளும் அங்கே உண்டு. இதல்லாமல் பாதிக்கப்பட்டவர்களால் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காக அவர்களுக்குப் பாதுகாப்பு வசதிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.இன்னும் பல.......

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், எந்த மக்களிடமிருந்து ஒருவன் திருடுகிறானோ, எந்த மக்களைக் கொலை செய்கிறானோ, எந்தப் பெண்களைக் கற்பழிக்கிறானோ, அந்த மக்களின் வரிப் பணத்திலிருந்து தான் இந்த அயோக்கியர்களுக்கு இவ்வளவு வசதிகளும் செய்து தரப்படுகின்றன.இத்தனை வசதிகளும் சொகுசுகளும் வழங்கப்படும் ஒரு இடம் எப்படி தண்டனைக்குரிய இடமாக இருக்கும்?

50 முறை சிறை சென்றவர் மீண்டும் கைது! 40 முறை சிறை சென்றவர் மீண்டும் கைது! என்றெல்லாம் நாம் செய்திகளைப் பார்க்கிறோம்.அப்படியென்றால் மனிதர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனைகள் அந்த மனிதர்களை தவறுகளிலிருந்து தடுக்க வில்லை என்று தானே பொருள்.

ஆனால் இஸ்லாம் குற்றவியல் தண்டனைகளில் அதிகம் கவனம் செலுத்துகிறது.திருடினால் கையை வெட்ட வேண்டும் என்று சொல்கிறது, விபச்சாரத்தில் ஈடுபட்டவன் திருமணம் முடிக்காதவனாக இருந்தால் 100 கசையடி கொடுக்க வேண்டும்,திருமணம் முடித்தவனாக இருந்தால் கல்லால் அடித்து கொல்ல வேண்டும் என்று சொல்கிறது. ஒரு பெண் மீது அபாண்டமாக பழி சுமத்தினால் 80 கசையடி கொடுக்க வேண்டும் சொல்கிறது,மது அருந்தினால் 40 கசையடி, அல்லது 80 கசையடி கொடுக்க வேண்டும் என்று சொல்கிறது இப்படி தண்டனைகளை தெளிவாக சொல்லியிருக்கிறது.

இஸ்லாம் இத்தனை பெரிய தண்டனைகள் சொன்ன காரணம் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்பதோ இழந்ததை மீட்க வேண்டும் என்பதோ நோக்கமல்ல. கொலைக் குற்றம் செய்த ஒருவனுக்கு மரண தண்டனை வழங்குவதால், கொல்லப்பட்டவனின் உயிர் திரும்பக் கிடைத்து விடப் போவதில்லை; கற்பழித்தவனுக்கு மரண தண்டனை வழங்குவதால் போன கற்பு திரும்பி வரப் போவதில்லை; பொருளாதாரம் சம்பந்தப்பட்ட, திருட்டு போன்ற சில குற்றங்களில் வேண்டுமானால் பறி போனவை சில சமயங்களில் கிடைக்கலாமே தவிர பெரும்பாலான குற்றங்களில் குற்றவாளி தண்டிக்கப்பட்டு விடுவதால் அவனால் பாதிக்கப்பட்டவனுக்குப் பயனேதும் கிடையாது.

எனவே தண்டனைகளுக்காக இஸ்லாம் சொல்கிற காரணம்.

1. குற்றம் செய்தவனுக்கு வழங்கப்படும் தண்டனை, மீண்டும் மீண்டும் குற்றம் செய்வதி-லிருந்து அவனைத் தடுக்க வேண்டும்.

2. ஒரு குற்றவாளிக்கு வழங்கப்படும் தண்டனையைக் கண்டு மற்றவர்கள் குற்றம் செய்ய அஞ்ச வேண்டும்.

3. பாதிக்கப்பட்டவனுக்கு நீதி கிடைத்து அவனுக்கு ஆறுதல் கிடைக்க வேண்டும். இது தான் இஸ்லாம் தண்டனைகளை கொடுப்பதற்கான நோக்கம்.

4,தவறு செய்தவனின் அந்த குற்றம் மன்னிப்பட வேண்டும்.

இன்று உலகத்தில் இருக்கிற சட்டங்களும் தண்டனைகளும் குற்றவாளியை தடுப்பதும் இல்லை,மற்றவர்களக்கு அச்சத்தை ஏற்படுத்துவதும் இல்லை, பாதிக்கப்பட்டவனுக்கு ஆறுதலாக அமைவதும் இல்லை.

இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் மிகவும் கொடூரமானவை; மனிதாபிமான மற்றவை என்று ஒரு நேரத்தில் விமர்சித்தவர்கள் கூட இன்றைக்கு இந்த பொள்ளாச்சி நிகழ்விற்கு பிறகு தண்டனைகளை இன்னும் கடுமையாக்க வேண்டும்.அரபு நாடுகளைப் போன்று நம் நாட்டிலும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று சொல்கிறார்கள். இந்நிகழ்வு குறித்து சில பெண்களிடம் கருத்துக்கள் கேட்ட போது இந்த நிலை எனக்கு நடந்தால் அவர்களை நிற்க வைத்து சுடுவேன்.இனிமேல் அந்த தவறை நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு அந்த உறுப்பை வெட்டி எறிந்து விடுவேன் என்று ஆவேசமாக கூறியதை பார்க்க முடிந்தது.

எனவே குற்றங்கள் குறைய குற்றவியல் தண்டனைகள் வெறும் எழுத்து வடிவில் மட்டும் இல்லாமல் அதை நடைமுறைப்படுத்த வேண்டும். தண்டனை என்பதற்கு இஸ்லாம் ஹத் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறது. ஹத் என்றால் வரம்பு என்று பொருள்.அதில் வரம்பு மீறி விடக்கூடாது. அநியாயமாக யாருக்கும் கொடுத்து விடக்கூடாது.சம்பந்தப்பட்டவனுக்கு கூட முறையாக கொடுக்க வேண்டும். குற்றவாளிகளை தப்பிக்க விடக்கூடாது என்று பொருள்.அதனுடைய இன்னொரு பொருள் என்னவென்றால் தடுப்பது.

தண்டனைகள் என்பது குற்றங்களைத் தடுப்பது மட்டுமல்லாமல் உலகத்திற்கு மிகப்பெரும் ரஹ்மத்தாகவும் இருக்கிறது.الحدود رحمة என்றே சொல்வார்கள். 

قال صلى الله عليه وسلم (لحد يقام بالأرض خير لاهل الارض من ان يمطروا ثلاثين صباحا

பூமியில் நிலை நாட்டப்படும் ஒரு தண்டனை பூமியிலுள்ளவர்களுக்கு ஒரு மாதம் மழை பொழிவதை விட சிறந்தது. (ஸஹீஹுத் தர்கீப் : 2350)

எனவே தவறுகளைக் கலைவதற்கு ஒரே வழி தண்டனைகள் முறையாக நிறைவேற்றப்பட வேண்டும்.இஸ்லாம் இதில் கொஞ்சம் கூட தயவு தாட்சனை காட்டக்கூடாது.உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வித்தியாசம் பார்க்கப்படக் கூடாது,தண்டனை என்பது பொது இடத்தில் வைத்து நிறைவற்றப்பட வேண்டும் என்று தண்டனைகள் குறித்து தெளிவாகவே பேசியிருக்கிறது.

أنَّ قُرَيْشًا أهَمَّتْهُمُ المَرْأَةُ المَخْزُومِيَّةُ الَّتي سَرَقَتْ، فَقالوا: مَن يُكَلِّمُ رَسولَ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ، ومَن يَجْتَرِئُ عليه إلَّا أُسَامَةُ بنُ زَيْدٍ، حِبُّ رَسولِ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ، فَكَلَّمَ رَسولَ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ، فَقَالَ: أتَشْفَعُ في حَدٍّ مِن حُدُودِ اللَّهِ ثُمَّ قَامَ فَخَطَبَ، قَالَ: يا أيُّها النَّاسُ، إنَّما ضَلَّ مَن قَبْلَكُمْ، أنَّهُمْ كَانُوا إذَا سَرَقَ الشَّرِيفُ تَرَكُوهُ، وإذَا سَرَقَ الضَّعِيفُ فيهم أقَامُوا عليه الحَدَّ، وايْمُ اللَّهِ، لو أنَّ فَاطِمَةَ بنْتَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عليه وسلَّمَ، سَرَقَتْ لَقَطَعَ مُحَمَّدٌ يَدَهَا

மக்ஸூமி' குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடிவிட்டாள் என்ற செய்தி குறைஷி யருக்குக் கவலையளித்தது. அப்போது அவர்கள் 'இறைத்தூதர் அவர்களின் செல்லப் பிள்ளையான உசாமாவைத் தவிர வேறு யார் துணிந்து (அந்தப் பெண்ணுக்காகப் பரிந்து) பேச முடியும்?' என்றார்கள். அவ்வாறே உசாமா (ரலி) அவர்கள் இறைத்தூதர் அவர்களிடம் (பரிந்து) பேசினார்கள். அப்போது இறைத்தூதர் அவர்கள், 'அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒன்றின் விஷயத்திலா (அதை நிறைவேற்றாமல் விட்டுவிடுமாறு) நீ பரிந்துரைக்கிறாய்?' என்று கேட்டு விட்டுப் பிறகு எழுந்து நின்று (பின்வருமாறு) உரையாற்றினார்கள்:

மக்களே! உங்களுக்கு முன்னால் வாழ்ந்த (பனூ இஸ்ராயீல்) மக்கள் வழிகெட்டுப் போனதற்குக் காரணமே, (அவர்களிடையே உள்ள) உயர் குலத்தார் திருடி விட்டால் அவர்கள், அவரை (தண்டிக்காமல்) விட்டு விடுவார்கள். அவர்களிலுள்ள பலவீனர்கள் திருடி விட்டால் அவர்களின் மீது தண்டனையை நடைமுறைப்படுத்துவார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (இந்த) முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடியிருந்தாலும் முஹம்மத் அவரின் கையைத் துண்டித்தே இருப்பார்.  (புகாரி : 6788)

எனவே தவறுகளை மட்டுமல்ல, அந்த தவறுகளை தூண்டக்கூடிய விஷயங்களைக் கண்டறிந்து அவைகளைக் களைய வேண்டும். நடக்கிற தவறுகளுக்கு இஸ்லாமிய முறைப்படி தண்டனைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இது தான் தவறுகளை தடுப்பதற்கான வழிமுறைகள்.


No comments:

Post a Comment