Thursday, September 17, 2020

போனால் வராது

 


மனிதனுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கிற பருவங்களில் மிக முக்கியமான, பல வகையான சிறப்பம்சங்களைக் கொண்ட, எல்லா வகையான நற்பாக்கியங்களைப் பெற்ற பருவம் வாலிபப் பருவம். மிகவும் துடிப்பும் ஆற்றலும் எழுச்சியும் மிக்க பருவம்.உலகில் உலா வருகின்ற சாதனையாளர்களும் வெற்றியாளர்களும் தங்களுடைய சாதனைக்கான, வெற்றிக்கான பயணத்தைத் தொடங்கிய பருவம்.

ஆனால் சிறந்த பருவமான அந்த வாலிபப் பருவத்தை அடைந்த இன்றைய காலத்து வாலிபர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள்? தங்களுக்கு வழங்கப்பட்ட மிகப்பெரும் பாக்கியமான அந்த வாலிபப்பருவத்தை சரியான முறையில் பயன்படுத்துகிறார்களா? இதில் அவர்கள் செய்யும் தவறுகள் என்ன? அவர்களிடம் இருக்கின்ற பலவீனங்கள் என்ன? நபி அவர்கள் உருவாக்கிய அன்றைய காலத்து வாலிபர்களுக்கு இவர்கள் எந்த வகையில் மாறுபடுகிறார்கள்? என்பது நாம் அறிய வேண்டிய விஷயம்.

ஏனென்றால் ஒரு சமூகத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் அந்த சமூகத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான அடித்தளமும் வாலிபர்கள் கையில் தான் இருக்கிறது. வாலிபர்கள் சீராகி விட்டால் சமூகம் சீராகி விடும்.வாலிபர்கள் கெட்டு விட்டால் சமூகம் கெட்டு விடும்.ஒரு சமூகத்தின் வெற்றியும் தோல்வியும் தீர்மானிக்கப்படுவது அந்த சமூகத்தில் உள்ள வாலிபர்களை வைத்துத்தான்.அதனால் வாலிபர்களை சரி செய்ய வேண்டிய அவர்களிடம் இருக்கிற தவறுகளை கலைய வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது.

அந்த அடிப்படையில் இன்றைய இளைய சமூகத்திடம் எண்ணற்ற தவறுகள் இருக்கிறது.மார்க்கம் அனுமதிக்காத, மார்க்கம் விரும்பாத நிறைய செயல்பாடுகள் இருக்கிறது.அதில் மிக முக்கியமான விஷயம் நேரங்களையும் காலங்களையும் வீணடிப்பது.மறுமைக்கு பயன் தரும் காரியங்களிலும் ஈடுபடாமல் உலகிற்கு பயன்படும் காரியங்களிலும் ஈடுபடாமல் நேரங்களை வீணாக கழிப்பது.நாம் செய்யும் காரியம் ஒன்று மறுமைக்கு பயன் தர வேண்டும் அல்லது உலகிற்கு பயன் தர வேண்டும்.இரண்டுக்கும் பயன் தராத காரியமாக அமைந்து விடக்கூடாது.

ஆனால் இன்றைய வாலிபர்கள் செய்யக்கூடிய அவர்கள் ஈடுபடக்கூடிய காரியங்களைப் பார்த்தால் அது மறுமைக்கும் பயன் தராது.உலகத்திற்கும் பயன் தராது.இப்படி நேரங்களையும் காலங்களையும் வீணாக கழிக்கின்ற ஒரு பழக்கம் இன்றைய அநேக வாலிபர்களிடம் இருப்பதைப் பார்க்கலாம்.

பொதுவாக உலகத்தில் அல்லாஹ்வின் படைப்புக்களில் தீயதை நல்லதாகவும் நல்லதைத் தீயதாகவும் ஆக்கிக் கொள்ளும் விசேஷத் தன்மை மனிதனுக்கு மட்டுமே உண்டு. எத்தனையோ பிரச்சினைக்குரிய சூழ்நிலைகளையும்,தன்னிடம் இருக்கின்ற குறைபாடுகளையும் தனக்கு சாதகமாக்கி சாதிக்கவும் முடியும். அதேபோல் எத்தனையோ சாதகமான சூழ்நிலைகளையும், தன்னிடம் இருக்கும் சிறப்பம் சங்களையும் அலட்சியப்படுத்தி, வீணடித்து பாழாய்ப் போவதற்கும் வாய்ப்பு உண்டு.ஆனால் இன்றைய காலத்து வாலிபர்களை பொறுத்த வரை தீயதை நல்லதாக்கி சாதித்தவர்களை விட நல்லதையும் தீயதாக்கி பாழாய்ப் போனவர்கள் தான் அதிகம்.

அந்த வகையில் மனிதனின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட செல்போன், இன்டர்நெட், இவைகளெல்லாம் இன்றைக்கு வீணான காரியங்களிலும் தேவையில்லாத காரியங்களிலும் பயன்படுத்தப்பட்டு அதன் மூலம் பொன்னான நேரங்களும் காலங்களும் வீணாகிக் கொண்டிருக்கிறது.குறிப்பாக இன்றைய இளைஞர்கள் இந்த செல்போனுக்கும் இன்டர் நெட்டுக்கும் அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள்.அதன் மூலம் அவர்களுக்கே தெரியாமல் அவர்களின் நேரங்கள் வீணாகிக் கொண்டிருக்கிறது.

நேரம் என்பது அல்லாஹ் நமக்களித்திருக்கிற விலைமதிக்க முடியாத மாபெரும் பொக்கிஷங்களில் ஒன்று.குர்ஆனில் அல்லாஹ் எத்தனையோ விஷயங்களை சத்தியமிட்டுக் கூறி அதன் முக்கியத்துவத்தை சொல்வதைப் போன்றே காலம் என்று ஒரு அத்தியாத்தை இறக்கி அதில் அந்த காலத்தின் மீது சத்தியமிட்டு கூறி காலத்தின் மகத்துவத்தை உலகிற்கு புரிய வைக்கிறான்.

والعصر ان الانسان لفي خسر

காலத்தின் மீது சத்தியமாக நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். (அல்குர்ஆன் : 103 ; 1)

وعن الحسن البصري، تعلمت معنى السورة من بائع الثلج كان يصيح، ويقول: ارحموا من يذوب رأس ماله، ارحموا من يذوب رأس ماله، فقلت: هذا معنى أنّ الإنسان لفي خسر يمرّ به العصر فيمضي عمره ولا يكتسب فإذا هو خاسر(7

ஹஸனுல் பஸரீ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ; இந்த சூராவின் பொருளை நான் ஒரு ஐஸ் வியாபாரியிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன். கடைவீதியில் ஒரு ஐஸ் வியாபாரி, மூலதனம் உருகிக் கொண்டிருக்கிற ஒருவர் மீது இரக்கம் காட்டுங்கள் மூலதனம் உருகிக் கொண்டிருக்கிற ஒருவர் மீது இரக்கம் காட்டுங்கள் என்று சொல்லி வியாபாரம் செய்து கொண்டிருந்தான். அதாவது நான் வைத்திருப்பது ஐஸ். இதை உடனே வாங்கினால் தான் நான் லாபம் பெறுவேன். இல்லையென்றால் ஐஸ் அனைத்தும் உருகி எனக்கு ஒன்றும் இல்லாமல் ஆகி விடும். விற்றாலும் விற்கா விட்டாலும் ஐஸ் உருகிக் கொண்டு தான் இருக்கும். சரியான நேரத்தில் விற்று விட்டால் எனக்கு லாபம் கிடைக்கும். இல்லையென்றால் அனைத்தும் வீணாகி விடும்  என்பது அதன் பொருள்.

அப்போது தான் எனக்கு அஸ்ர் சூராவின் அர்த்தம் புரிந்தது.ஐஸைப் போன்று காலமும் கரைந்து கொண்டு தான் இருக்கும்.அதை உணர்ந்து சரியாக பயன்படுத்தியவன் வெற்றி பெறுவான். இல்லையென்றால் நஷ்டமடைவான். (தஃப்ஸீர் ராஸீ)

பணத்தை செலவழித்தால் தான் குறையும்.கனத்தை இறக்கினால் தான் குறையும். சோப்பை உபயோகித்தால் தான் குறையும். தப்பை உணர்ந்தால் தான் குறையும். ஆனால் நாம் எதுவுமே செய்யாமல் சும்மா இருந்தாலும் நேரம் குறைந்து விடும்.இன்றைக்கு பொழுதை கழிப்பதற்காக பொழுதை போக்குவதற்காக எதையதையோ செய்கிறோம். சுற்றுலா செல்கிறோம்.கடை வீதிக்கு செல்கிறோம். நண்பர்களோடு அரட்டையடிக்கிறோம்.இப்படி எத்தனையோ விஷயங்களை செய்கிற நம்மிடம் அதற்கான காரணத்தைக் கேட்டால் பொழுதைக் கழிப்பதற்காக என்று சொல்வோம். ஆனால் பொழுதுகள் என்பது கழிக்க வேண்டிய விஷயமல்ல. அதை கழிக்க வேண்டிய தேவையும் இல்லை.நாம் எதுவும் செய்யா விட்டாலும் அது தானாக கழிந்து விடும். கரைந்து விடும்.

நாம் வாழ்வில் சந்திக்கிற ஒவ்வொரு மணியும் ஒவ்வொரு நிமிடமும், ஏன் ஒவ்வொரு விநாடியும் மதிப்புமிக்கது.மிக மிக முக்கியமானது.தன் சுகங்களையும் தன் சுதந்திரத்தையும் தான் விரும்பியவைகளையும் இழந்து ஒரு வருடம் கஷ்டப்பட்டு படித்து எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்று அதற்காக கடுமையாக உழைத்து இறுதியில் தேர்வில் வெற்றி பெறாமல் தோற்றுப் போன ஒரு மாணவனுக்குத்தான் தெரியும் ஓர் ஆண்டின் அருமை. தன் பெயர் சொல்ல, தனக்காக உழைக்க, தன் கடைசி காலத்தில் தன்னைத் தாங்கிப் பிடிக்க ஒரு குழந்தை வேண்டும் என்று ஏங்கி அதற்காக காலம் காலமாக அல்லாஹ்விடம் கரம் ஏந்திய ஒரு பெண்மனிக்கு தன் வயிற்றில் ஒரு கரு உருவாகி விட்டால் அவள் அடைகின்ற மகிழ்ச்சிக்கும் ஆனந்தத்திற்கும் அளவே கிடையாது.தன் பெயர் சொல்ல தனக்காக உழைக்க தன் இறுதி காலத்தில் தன்னைத் தாங்கிப் பிடிக்க ஒரு வாரிசு உருவாகி விட்டான் என்ற ஆனந்தப் பெருவெள்ளத்தோடு தன் கற்ப காலத்தின் ஒவ்வொரு மாதத்தையும் மிகப்பெரும் பொக்கிஷமாக கருதி அதில் பாதுகாப்பாக பயணிக்கிற, நன்றாக, ஆரோக்கியமாக குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்று ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்கின்ற அவளுக்கு குறை மாதத்தில் குழந்தை பிறந்து விட்டால், அந்த தாயிடம் தான் கேட்க வேண்டும் ஒரு மாதத்தின் அருமை.வாரம் முழுக்க பாடுபட்டு அதற்காக கஷ்டப்பட்டு தன் நேரங்களை யெல்லாம் அதற்காக கொடுக்கிற ஒரு  வார இதழ் ஆசிரியருக்குத்தான் தெரியும் ஒரு வாரத்தின் அருமை.தன்னை நேசிப்பவர்களுக்காக காத்திருக்கும் ஒருவனுக்குத் தான் தெரியும் ஒரு மணி நேரத்தின் அருமை.வேக வேகமாக வந்தும் ஏற முடியாமல் இரயிலைத் தவற விட்ட பயணிக்குத்தான் தெரியும் ஒரு நிமிடத்தின் அருமை.ஒட்டப்பந்தயத்தில் மூச்சிரைக்க ஓடி வந்தும் ஒரு நொடிப்பொழுதில் வெற்றி வாய்ப்பை தவற விட்டவனுக்குத்தான்     தெரியும் ஒரு நொடிப்பொழுதின் அருமை. எனவே நம் வாழ்வில் சந்திக்கிற ஒவ்வொரு மணித்துளிகளும் பொன்னானவை என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

ஒரு நிமிடம் என்று நாம் சாதாரணமாக நினைக்கின்ற அந்த 60 நொடிகளில் தான் எண்ணிப்பார்க்க முடியாத, நம் சிந்தனைக்கு எட்டாத எத்தனையோ விஷயங்கள் உலகத்தில் நடக்கிறது.ஒரு நிமிட நேரத்தில் நாம் வாழும் பூமி 950 மைல்கள் தன்னைத்தானே சுற்றுகிறது.  14000 கன அடி மழை ஒரு மாநிலத்தில பொழிந்து விடுகின்றது. 35000 டன் தண்ணீர் கடலில் கலந்து விடுகின்றது. 114 குழந்தைகள் பிறக்கிறது.100 பேர் இறக்கிறார்கள். பல்லாண்டுகளுக்கு முன்னால் ஜெர்மானிய அறிஞர் ஒருவர் வெளியிட்ட புள்ளி விபரம் தான் இது. மிக வேகமாக வளர்ந்து வரும் இன்றைய நவீன காலகட்டத்தில் இதன் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும்.எனவே நம் வாழ்வில் எந்த நமிடத்தையும் எந்த நொடிப்பொழுதையும் சாதாரணமாக எடை போட்டு விடக்கூடாது.

உலகத்தில் எதை வேண்டுமானால் இழந்து விட்டால் அதை திரும்பப் பெற்று விட முடியும். கல்வி, ஆற்றல், செல்வம், பதவி இப்படி எதையும் திரும்ப பெற முடியும்.ஆனால் இழந்த ஒரு நிமிடத்தை அல்லது ஒரு விநாடியை மீண்டும் பெறுவது நடக்காத காரியம்.

Time is gold  என்று சொல்வார்கள்.ஆனால் இது அர்த்தமற்ற வார்த்தை. நேரத்தின் அருமையை புரிய வைப்பதற்கு பொறுந்தாத வார்த்தை.காரணம் தங்கத்தை தேவைப்பட்டால் வாங்கிக் கொள்ளலாம் தேவையில்லையென்றால் அதை விற்று விடலாம்.ஆனால் நேரம் போய் விட்டால் உலகத்தையே கொட்டிக் கொடுத்தாலும் அதை வாங்க முடியாது.விற்கவும் முடியாது. தங்கத்தை சேமித்து வைக்கலாம்.ஆனால் நேரத்தை சேமித்து வைக்க முடியாது. தங்கத்தை தேவையில்லை என்று அதை பயன்படுத்தாமல் பாதுகாத்து வைக்கலாம்.ஆனால் நேரம் நாம் பயன்படுத்தினாலும் பயன்படுத்தா விட்டாலும் அதை பாதுகாத்து வைக்க முடியாது.

எனவே தங்கத்தை விட மேலான கிடைப்பதற்கரிய பொக்கிஷமான நேரத்தை நாம் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.நமக்கோ நம் குடுபத்திற்கா அல்லது நம் சமூகத்திற்கோ பயன் தரும் வகையில் அதை அமைத்துக் கொள்ள வேண்டும்.ஒரு முஸ்லிமின் எந்த நேரமும் வீணாகி விடக்கூடாது என்பதில் இஸ்லாம் காட்டும் அக்கரையைப் போன்று வேறு எந்த மதத்திலும் பார்க்க முடியாது.

وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اسْتَأْذَنَ أَحَدُكُمْ ثَلَاثًا فَلَمْ يُؤْذَنْ لَهُ فَلْيَرْجِعْ

உங்களில் ஒருவர் மூன்று முறை அனுமதி கேட்டும் அவருக்கு அனுமதி கிடைக்க வில்லையெனில் அவர் திரும்பி விட வேண்டும். (புகாரி : 6245(

மூன்று முறைக்கு மேல் ஒரு வீட்டில் நுழைய அனுமதி கேட்க வேண்டாம் என்று சொன்னதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று நேரம் வீணாகும்.

قال ابن القيم اضاعة الوقت اشد من الموت

இப்னுல் கய்யிம் ரஹ் அவர்கள் நேரத்தை வீணடித்தல் மரணத்தை விட கொடியது என்று கூறுவார்கள்.

எனவே எந்த வகையில் நேரத்தை வீணடிப்பதை மார்க்கம் விரும்ப வில்லை.அவ்வாறு வீணடிப்பவர்கள் நிச்சயம் ஒரு நாள் அதற்காக வருத்தப்படுவார்கள்,கைசேதப்படுவார்கள்.

சொர்க்கவாசிகளை குறித்து அல்லாஹ் சொல்கிறான்.

الحمد لله الذي اذهب عنا الحزن

எங்களை விட்டும் கவலையைப் போக்கிய இறைவனுக்கு எல்லாப் புகழும் என்று சுவனவாதிகள் கூறுவார்கள். (அல்குர்ஆன் : 35 ; 34)

சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்த பிறகு அவர்களுக்கு எந்த கவலையும் இருக்காது. எந்த கைசேதமும் இருக்காது. ஆனால் அங்கே எல்லா இன்பங்களையும் பார்க்கிற, எல்லா சுகங்களையும் அனுபவிக்கிற அந்த சொர்க்கவாசிகளுக்கு ஒரே ஒரு கவலை மட்டும் இருக்கும்.

ليسَ يتحسَّرُ أَهلُ الجنَّةِ على شيءٍ إلَّا على ساعَةٍ مرَّت بِهِم لم يذكُروا اللَّهَ عزَّ وجلَّ فيها

அல்லாஹ்வை திக்ர் செய்யாமல் கழிந்து விட்ட நேரத்தைப் பற்றியே தவிர வேறு எதன் மீதும் சொர்க்கவாதிகள் கைசேதப்பட மாட்டார்கள். (அல்ஜாமிவுஸ் ஸகீர் : 7682)

ஆக அல்லாஹ்வின் நினைவில்லாமல் எதற்கும் பயனில்லாமல் கழிந்து விட்ட நேரம் குறித்த கவலை சுவனம் வரை நம்மைத் தொடர்கிறது என்றால், நாம் நேரங்களை எந்தளவு கவனமாக கையாள வேண்டும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.நம் நேரங்கள் எந்த வகையிலும் வீணாகி விடக்கூடாது. ஒன்று மறுமைக்கு பயன் தர வேண்டும்.அல்லது உலகத்திற்கு பயன் தர வேண்டும்.

عن ابن مسعود رضي الله عنه قال : إني لأمقت الرجل أراه فارغا ليس في شيء من عمل دنيا ولا آخرة ،

உலகம் அல்லது மறுமையின் எந்த காரியத்திலும் ஈடுபடாமல் நேரத்தை வீணடிப்பவனைப் பார்ப்பதற்கு நான் வெறுக்கிறேன் என இப்னு மஸ்வூத் ரலி அவர்கள் கூறுகிறார்கள். உமர் ரலி அவர்களும் இதே வார்த்தையைக் கூறியிருக்கிறார்கள்.

உலகத்தின் காரியமாக இருந்தாலும் மறுமையின் காரியமாக இருந்தாலும் தங்கள் நேரங்களையும் காலங்களையும் வீணடிக்காமல் பாழ்படுத்தாமல் சரியான முறையில் பயன்படுத்தியவர்கள் தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள், சாதித்திருக்கிறார்கள்.அத்தகைய எண்ணற்ற சாதனையாளர்களை வரலாறு குறித்து வைத்திருக்கிறது.

மிகச்சிறந்த ஸஹாபிகளில் ஒருவர் அபூஹுரைரா ரலி அவர்கள்.அதிகமான ஹதீஸ்களை அறிவித்தவர்களில் இவர்களுக்குத் தான் முதல் இடம்.ஹதீஸ் கிதாபுகளைப் புரட்டினால் ஒரு பக்கத்தில் ஒரு தடவையாவது இவர்களது பெயர் இடம் பெற்றிருக்கும்.வெறும் மூன்று வருடங்கள் மட்டுமே நபியின் தோழமையைப் பெற்றிருந்த அவர்கள் அறிவித்த ஹதீஸ்களின் எண்ணிக்கை 5374.

ஹுஜ்ஜதுல் இஸ்லாம் என்றும் பஹ்ருல் உலூம் என்று அழைக்கப்படுகின்ற, يا رب اعط لنا علما وفهما كما اعطيت يا ربنا للشيخ غزالي  அவர்களுக்கு கொடுத்ததைப் போன்று கல்வியையும் விளக்கத்தையும் எங்களுக்கும் கொடு என்ற வார்த்தை அநேக உலமாக்களின் துஆவில் இடம்பெற்றிருக்கும். அந்தளவு மிகப்பெரும் கல்விக்கடல் இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்கள். அவர்கள் வாழ்ந்தது வெறும் 55 வருடங்கள்.அதிலும் அவர்களது குழந்தை பருவம்,கல்வி கற்பதற்காக என்று 20 வருடங்களைக் கழித்தால் வெறும் 35 வருடங்கள்.ஆனால் அதில் அவர்கள் எழுதிய கிதாபுகளை படிப்பதற்கு கூட நம் முழு வாழ்க்கையும் போதாது.அந்தளவு எண்ணிடலங்காத கிதாபுகளை உலகிற்கு தந்தவர்கள்.


ஹிஜ்ரி 200 களில் வாழ்ந்த மாமேதைகளில் ஒருவர் அல்லாமா இப்னு ஜரீர் ரஹ் அவர்கள். அவர்களால் எழுதப்பட்ட தப்ரீ என்ற நூல் மிகச்சிறந்த தஃப்ஸீர்களில் ஒன்றாக இருக்கிறது. அவர்கள் ஹிஜ்ரி 224 ல் பிறந்து 310 ல் வஃபாத்தானார்கள். அவர்களின் மொத்த ஆயுட்காலத்தில் குழந்தைப் பருவமான 14 ஐ கழித்தால் அவர்களின் வயது 72. அவர்கள் தன் வாழ்நாளில் எழுதிய மொத்த கிதாபுகளின் பக்கங்கள் சுமார் 358000. எனவே ஒரு நாளைக்கு அவர்கள் சராசரியாக 14 பக்கங்களை எழுதியுள்ளார்கள் (14 பக்கங்கள் என்பது வெறுமனே அவர்கள் எடுத்து எழுதிய பக்கங்களல்ல. ஆய்வு செய்து நமக்கு எழுதித்தந்த பக்கங்கள்) என அவர்களின் மாணவர்கள் நமக்கு கணக்கிட்டு கூறுகிறார்கள். (கீமதுஸ்ஸமன்) 

வெறும் மூன்று வருடங்கள் மட்டுமே நபியோடு இருக்கும் வாய்ப்பினைப் பெற்ற அபூஹுரைரா ரலி அவர்களால் அத்தனை ஹதீஸ்களை எப்படி அறிவிக்க முடிந்தது.சுமார் 35 வருடங்கள் என்ற குறைந்த காலகட்டத்தில் இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்களால் அத்தனை கிதாபுகளை எப்படி எழுத முடிந்தது, இப்னு ஜரீர் ரஹ் அவர்களால் தன் வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் 14 பக்கங்களை எவ்வாறு எழுத முடிந்தது , அவர்களது வாழ்வில் எந்த நிமிடமும் எந்த நொடியும் வீணாக வில்லை.ஒவ்வொரு நொடிப்பொழுதையும் பொக்கிஷமாக கருதினார்கள். அதனால் இத்தனை பெரிய சாதனைகளை செய்ய முடிந்தது.

قَدِمَ سُفْيَانُ الثَّوْرِيُّ الْبَصْرَةَ فَلَمَّا نَظَرَ إِلَى حَمَّادِ بْنِ سَلَمَةَ قَالَ لَهُ : حَدِّثْنِي حَدِيثَ أَبِي الْعُشَرَاءِ عَنْ أَبِيهِ فَقَالَ حَمَّادٌ : حَدَّثَنِي أَبُو الْعُشَرَاءِ عَنْ أَبِيهِ الْحَدِيثَ قَالَ : فَلَمَّا فَرَغَ مِنَ الْحَدِيثِ أَقْبَلَ عَلَيْهِ سُفْيَانُ فَسَلَّمَ عَلَيْهِ وَاعْتَنَقَهُ فَقَالَ : مَنْ أَنْتَ ؟ قَالَ : أَنَا سُفْيَانُ . قَالَ ابْنُ سَعِيدٍ ؟ قَالَ : نَعَمْ قَالَ : الثَّوْرِيُّ ؟ قَالَ : نَعَمْ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ ؟ قَالَ : نَعَمْ قَالَ : فَمَا مَنَعَكَ أَنْ تُسَلِّمَ عَلَيَّ ثُمَّ تَسْأَلُ عَنِ الْحَدِيثِ ؟ قَالَ : خَشِيتُ أَنْ تَمُوتَ قَبْلَ أَنْ أَسْمَعَ الْحَدِيثَ مِنْكَ

சுஃப்யானுஸ் ஸவ்ரீ ரஹ் அவர்கள் பஸராவிற்கு வந்தார்கள். அங்கே ஹம்மாத் பின் ஸலமா ரஹ் அவர்களைப் பார்த்தவுடன் அபுல் உஷரா அறிவித்த நபிமொழியை எனக்கு அறிவித்துத் தாருங்கள் என்று கேட்டார்கள். அவர்களும் அந்த ஹதீஸை அறிவித்துக் கொடுத்தார்கள். அதற்குப் பிறகு அவர்களுக்கு ஸலாம் கூறி அவர்களை கட்டியணைத்தார்கள்.நீங்கள் யாரென்று ஹம்மாத் ரஹ் கேட்டார்கள். நான் சுஃப்யான் என்று கூறினார்கள். வந்தவுடன் ஸலாம் சொல்லி கட்டியணைப்பது தானே வழக்கம். ஆனால் நீங்கள் ஹதீஸையெல்லாம் கேட்ட பிறகு ஸலாம் சொல்கிறீர்களே என்று கேட்டார்கள். அதற்கவர்கள், ஹதீஸை உங்களிடமிருந்து நான் கேட்பதற்குள் நீங்கள் மரணித்து விடுவீர்களோ என்று நான் பயந்தேன் என்று கூறினார்கள். (அல்ஜாமிவு லி அக்லாகிர் ராவி வ ஆதாபிஸ் ஸாமிஇ)

ஒரு நபிமொழியை தெரிந்து கொள்வதற்கு அவர்கள் எடுத்துக் கொண்ட சிரமமும் ஆர்வமும் வெளிப்படும் அதே சமயம் நேரத்தைப் பாதுகாப்பதில் அவர்களுக்கு இருந்த கவனத்தையும் இந்த வரலாறு சுட்டிக் காட்டுகிறது.


ونقل عن عامر بن قيس من التابعين [[ أن رجلاً قال له: تعال أكلمك، قال: أمسك الشمس ]] يعني أوقفها لي واحبسها عن المسير لأكلمك، فإن الزمن سريع المضي لا يعود بعد مروره، فخسارته لا يمكن تعويضها واستدراكها.


வாருங்கள் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கலாம் என்று ஒருவர் அழைத்த போது தாபியீன்களில் ஒருவரான ஆமிர் பின் கைஸ் ரஹ் அவர்கள் உன்னால் சூரியனை தடுத்து நிறுத்த முடியுமா? முடியும் என்றால் நான் உன்னோடு பேசத் தயார் என்றார்கள்.

வாழ்வின் எந்த தருணத்தையும் பயனின்றி கழிப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை.

 

ஒவ்வொரு மனிதரிடமும் நேரம் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகிறதென்றால், மனிதர்களிடம் உள்ள செயல்பாடுகளை பொறுத்தே அது வெளிப்படுகின்றது. சமூகத்தில் ஓரங்கப்பட்டப்பட்டு, புறந்தள்ளப்பட்ட சில நபர்கள் தங்களுடைய வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்ற நோக்குடன் பயணிக்கும்போது, அவர்களின் முதல் திட்டமே நேரத்தை எவ்வாறு, எப்படி பயன்படுத்த வேண்டும் என்றே இருக்கின்றது. அதுதான், அவர்களின் வெற்றியை உறுதி செய்கின்றது.


அந்த வகையில், ஆப்ரகாம் லிங்கனை நாம் நேர முக்கியத்துவத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். அமெரிக்காவின் அதிபராக இருந்த ஆப்ரகாம் லிங்கன் செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன். அவர் படிக்கபோகும் இடமோ இருள் சூழ்ந்த காட்டுப்பகுதியாகும். அவருடைய நேர ஓட்டம் எப்படி இருந்தது என்று பார்ப்போம்.


கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, சமூகப் பணியில் இறங்கும்போது ஆப்ரகாம் லிங்கனின் வயது 19 ஆகும். அவர் அமெரிக்க மக்களின் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டும் என்று நினைத்தார். அதனால், அவர் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்திருந்த பணத்தை வைத்து முதலில் ஒரு கடிகாரம் வாங்கினார். எப்பொழுதும் அந்தக் கடிகாரம் அவர் கைகளில்தான் இருக்கும்.


காலையில் இருந்து இரவு வரை நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை, அதில் எதுவெல்லாம் அவசரமாக செய்ய வேண்டும், எதுவெல்லாம் தாமதமாக செய்யலாம் என்பதையும் எழுதி வைத்துக் கொள்வார்.


ஒவ்வொரு வேலைகளும் முடிந்தவுடன் டிக் செய்து கொள்வார். முடியாத வேலைகள் என்ன என்பதை வரிசைப்படுத்தி, அதில் எதை விரைவாக முடிக்க வேண்டும் என்பதை எழுதி வைத்துக் கொண்டு, அதை முடிப்பதற்குண்டான வேலைகளில் தீவிரமாக இருப்பார்.


அதோடு நாளிதழ் வாசிப்பு, புத்தக வாசிப்பு, கட்டுரைகள் எழுதுதல், மக்களுக்கு உதவி செய்தல் போன்றவற்றுக்கும் நேரத்தை ஒதுக்கி வைத்திருப்பார். அந்தந்த செயல்பாடுகள் முடிந்தவுடன் அதனை ‘டிக்’ செய்து கொள்வார்.


இப்படி ஒரு நாளின் பணிகளை திட்டமிட்டு, அதற்கான நேரம் இவ்வளவுதான் என்பதையும் முடிவு செய்து பயணிப்பார். இதனால், குறுகிய நேரத்தில் அதிகமான வேலைகளையும், செய்யக்கூடிய வேலையில் ஆற்றல் மிக்கவராகவும் மாற முடிந்தது. அதற்கு பெரிதும் உதவிய அந்தக் கைக்கடிகாரம், எப்பொழுதும் நேரத்தை பார்த்தப்படியே இருப்பார். இது, ஆப்ரகாம் லிங்கனுடைய நேர நிர்வாகம்.

இன்னொரு அறிஞர் ஒருவர் அவருடைய வீட்டு வாசலில் ஒரு வாசகம் ஒன்றை எழுதி வைத்திருந்தார்:


அதில், 'வீட்டிற்கு வருபவர்கள், வந்த வேலை முடிந்தவுடன் செல்லவில்லையெனில், என்னுடைய வேலைகளில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்' என்று. என்னவென்றால், நாம் ஒருவரை சந்திக்கச் சென்றுவிட்டு, நம்முடைய வேலைகள் முடிந்தவுடன் திரும்பவில்லையெனில் அவருடைய வேலைகளுக்கு இடையூறாக நாம் இருக்கிறோம் என்பது தான் அதற்கான பொருள்.


நம் நேரங்கள் வீணாகாமல் பாதுகாக்க வேண்டும் என்றால் நாம் ஐந்து விஷயங்களை நம் நினைவில் கொள்ள வேண்டும்.

1, நம் ஆயுட்காலம் மிக மிக குறைவு.

أعمارُ أمَّتي ما بينَ الستينَ إلى السبعينَ وأقلُّهم مَنْ يجوزُ ذلِكَ

என் சமூகத்த்தின் ஆயுட்காலம் 60 க்கும் 70 க்கும் மத்தியில். அதைக் கடப்பவர்கள் மிகவும் சொற்பமானவர்கள். (திர்மிதி : 3550)

 

2, மறுமையை கவனித்து மிக மிக அர்ப்பமானது.

"قَالَ كَمْ لَبِثْتُمْ فِي الأَرْضِ عَدَدَ سِنِينَ <112> قَالُوا لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ فَاسْأَلِ الْعَادِّينَ

ஆண்டுகளின் எண்ணிக்கையில் பூமியில் நீங்கள் எவ்வளவு காலம் வாழ்ந்தீர்கள் என்று கேட்பான். ஒரு நாள் அல்லது ஒரு நாளின் பகுதி நாங்கள் தங்கியிருந் திருப்போம். இதைப்பற்றி கணிப்பவர்களிடம் நீ கேட்பாயாக என்று அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் : 23 ; 112,113)

 

3, நம் வாழ்க்கை முடிவு செய்யப்பட்டது. குறைக்கவும் முடியாது கூட்டவும் முடியாது.

اذا جاء اجلهم لا يستاخرون ساعة

அவர்களின் தவனை வந்து விட்டால் ஒரு கனப்பொழுதும் பிந்தவும் மாட்டார்கள் முந்தவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் : 7 ; 34)

4, அந்த ஆயுட்காலம் எப்போது முடியும் என்று நமக்கு தெரியாது.

5, நம் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்திற்கும் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும்.

எனவே பொன்னான பொழுதுகளை பாதுகாப்போம்,ஈருலகிலும் வெற்றி பெறுவோம்.


No comments:

Post a Comment