கடந்த வாரம் குடியரசு தினத்தை முன்னிட்டு மக்களாட்சி எப்படி இருக்க வேண்டும். மக்களுக்கு ஆட்சி செய்யக்கூடியவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை குறிப்பிடும் போது ஆட்சியாளர்கள் குடிமக்கள் மீது இரக்கமுள்ளவர்களாக இருக்க வேண்டும். மக்களுக்கு நலவை நாடுபவர்களாக இருக்க வேண்டும். மக்கள் நலனில் அக்கரை செலுத்துபவர்களாக இருக்க வேண்டும் என்றெல்லாம் பார்த்தோம். இன்ஷா அல்லாஹ் அதன் தொடராக ஒரு சில விஷயங்கள இந்த வாரம் பார்க்க இருக்கிறோம்.
நாம் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறுவதற்கும்
வாழ்வில் உயர்வதற்கும் மார்க்கம் நமக்கு எண்ணற்ற வழிகாட்டுதலை
வழங்கியிருக்கிறது.எண்ணற்ற உயர்ந்த பண்புகளை நமக்கு
கற்றுத்தந்திருக்கிறது.மார்க்கம் வழங்கியிருக்கிற அந்த வழிகாட்டிதல்களை மார்க்கம்
கற்றுத்தந்திருக்கிற அந்த உயர்ந்த பண்புகளை நாம் பின்பற்றினால் அல்லாஹ்வின்
நெருக்கத்தைப் பெற்று விடலாம், வாழ்வில் உயர்ந்து விடலாம். மார்க்கம் கூறியிருக்கிற அந்த அரும்பண்புகளில்
ஒன்று சுயநலமில்லாமல் பொது நலச்சிந்தனையோடு வாழ்வது.தன்னலமில்லாமல் பொதுநலத்தோடு
வாழ்வது.ஆனால் இன்றைக்கு பொதுநலம் என்ற பெயரில் சமூக சேவை என்ற பெயரில் ஆங்காங்கே
ஒரு சில காரியங்கள் நடந்து கொண்டிருந்தாலும் சுயநலம் என்பது ஏதோ ஒரு விதத்தில் ஏதோ
ஒரு வடிவத்தில் நம் அத்தனை பேரிடத்திலும் ஒட்டிக் கொண்டு தான் இருக்கிறது.
சுயநலமில்லாமல் யாருமில்லை என்று சொல்லுமளவுக்கு
உறவுகள், நட்புகள், அரசியல், ஆன்மீகம் என அத்தனை விஷயங்களிலும் இன்றைக்கு
சுயநலம் புகுந்து விட்டது.ஒரு குடும்பத்தில் தாய்,தந்தை, சகோதர சகோதரி மாமன், மச்சான் என்று ஒன்றாக இருந்தாலும்
வாழ்ந்தாலும் அன்பு பாசம் என்பது அனைவரிடத்திலும் ஒரே மாதிரி இருப்பதில்லை.அந்த
அன்பும் பாசமும் அவரவர்களுடைய வருமானம், பணம், பதவி, புகழ் இவைகளை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது.ஒருவரிடம் அந்த
காரில் போரவர், உங்க சொந்தக் காரர் தானே என்று கேட்டால் ஆமாம். ஆனால் அவர் எங்களை
கண்டு கொள்வதில்லை என்று சொல்வார். அந்த கூலி வேலை செய்பவர் உங்க சொந்தக்காரர்
தானே என்று கேட்டால் ஆமாம். ஆனால் நாங்க அவர்களை கண்டு கொள்வதில்லை என்று
சொல்வார். ஆக புனிதமான உறவுகள் இன்று பணத்தை வைத்தும் சுயநலத்தை அடிப்படையாகக்
கொண்டும் தான் நிலைபெறுகிறது.
அதேபோன்று தான் நட்பும். ஏழ்மையிலும் இயலாமையிலும்
இருக்கும் இவனை நண்பன் என்று சொல்லிக் கொள்வதில் எந்த புண்ணியமும் இல்லை என்று
சொல்லி பணத்திற்காகவும் புகழுக்காகவும் இன்று நட்பு பரிமாறப்படுகிறது.
அரசியல்வாதிகளைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியமே
இல்லை.
மட்டுமல்ல இன்றைக்கு நாட்டில் நடக்கிற தவறுகள்,
குற்றங்கள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அனைத்திற்கும் காரணம் இந்த சுயநலம்
தான். மற்றவர்கள் என்ன ஆனாலும் பரவாயில்லை, மற்றவர்களது வாழ்க்கை அழிந்து போனாலும்
பரவாயில்லை, தான் நல்லா இருக்க வேண்டும்,தன் ஆசை நிறைவேற வேண்டும் என்ற சுயநலச்
சிந்தனையால் தான் அனைத்து தவறுகளும் நடக்கிறது.இப்படி எல்லோரிடத்திலும் எல்லா
விஷயங்களிலும் சுயநலம் பெருகி விட்டதை நாம் பார்க்கிறோம்.
ஆனால் இஸ்லாம் இந்த சுயநலத்தை வன்மையாக
கண்டிக்கிறது.ஒரு முஸ்லிம் என்றைக்கும் சுயநலமில்லாமல் பொதுநலத்தோடு வாழ வேண்டும்,
தனக்காக மட்டும் வாழாமல் பிறருக்காகவும் வாழ வேண்டும், தனக்கு பயன் தரும்
விதத்தில் மட்டும் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாமல் பிறருக்கும் பயன் தரும்
விதத்தில் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக பொறுப்பில் இருக்கும் தலைவர்களிடம்
அவசியம் இந்த பண்பு இருக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.
நபி ﷺ அவர்கள்
நபித்துவத்திற்கு வருவதற்கு முன்பே மக்களுக்கு தேவையான வேலைகளை செய்வதில் ஈடுபட்டிருந்தார்கள்.மக்களும்
அவர்களை நம்பி தங்கள் பொருள்களையும் வேலைகளையும் கொடுத்தார்கள். அதுமட்டுமில்லாமல்
அந்த நேரத்தில் மக்களுக்கான பிரச்சனைகளை தீர்ப்பது , அவர்களுக்கு பாதுகாப்பு தருவது, அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுப்பது,
அநியாயம் செய்யப்பட்டோருக்கு உதவி செய்வது போன்ற திட்டங்கள் தீட்டப்பட்ட ஒரு சங்கத்திலும் அவர்கள் உறுப்பினராக
இருந்தார்கள். அதில் கலந்துக்கொள்வது தனக்கு பிரியம் என்றும் சொன்னார்கள்.
عقد "حلف الفضول" قبل البعثة
النبوية بسنوات، وشهده محمد -صلى الله عليه وسلم- قبل النبوة، وكان الزبير بن عبدالمطلب
أول من دعا إليه،
أن رجلا من زبيد (بلد باليمن) قدم مكة ببضاعة
فاشتراها منه العاص بن وائل ومنعه حقه، فاستعدى عليه الزبيدي أشراف قريش فلم يعينوه
لمكانة العاص فيهم، وقف الرجل عند الكعبة واستغاث بآل فهر وأهل المروءة، فقام الزبير
بن عبد المطلب فقال: ما لهذا مترك، فاجتمعت بنو هاشم وزهرة وبنو تَيْم في دار عبد الله
بن جدعان فصنع لهم طعاما، وتحالفوا في شهر حرام وهو ذو القعدة، فتعاقدوا وتحالفوا بالله
ليكونُنّ يدًا واحدة مع المظلوم على الظالم حتى يُرد إليه حقه فسمّت
قريش ذلك الحلف «حلف الفضول» وقالوا: لقد دخل هؤلاء في فضل من الأمر، ثم مشوا إلى العاص
بن وائل، فانتزعوا منه سلعة الزبيديّ، فدفعوها إليه
யமன் நாட்டின், ஜுபைத் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தனது வணிகப்
பொருட்களுடன் மக்கா வந்தார். மக்காவின் பனூ ஸஹ்ம் கோத்திரத்தைச் சேர்ந்த ஆஸ் இப்னு
வாயில் என்பவர் அந்த யமன்வாசியிடமிருந்து சில பொருட்களை விலை பேசி வாங்கிக் கொண்டு
அதற்கான தொலையைக் கொடுக்க மறுத்து விட்டார். பறிகொடுத்தவர் தனது
நட்புக் கோத்திரத்தார்களான பனூ அப்துத் தார், பனூ மக்ஜூம், பனூ ஸஹ்ம் ஆகியோரிடம் சென்று உதவி கேட்ட போது எவரும் அவரது கோரிக்கையை ஒரு பொருட்டாகவே மதித்திட வில்லை. உடனே அவர் அபூ குபைஸ் மலையில் ஏறிக்கொண்டு தனக்கிழைக்கப்பட்ட அநியாயத்தை
உரத்த குரலில் முறையிட்டார். அங்கிருந்த அண்ணலாரின்
பெரிய தந்தை ஜுபைர் இப்னு அப்துல் முத்தலிப் – “ஏன் இவர் இவ்வாறு கைவிடப்பட்டார்?” எனக் கேட்டார்கள்.
இந்தப் பின்னணியில் தான் ‘ஹில்ஃபுல் ஃபுளூல்’ எனும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதில் கலந்து கொண்ட குறைஷி கோத்திரத்தவர்கள் - பனூ ஹாஷிம், பனூ முத்தலிப், பனூ அஸத், பனூ ஜுஹ்ரா, பனூ தைம் ஆகியோர் ஆவர்.
அனைவரும் அப்துல்லாஹ் இப்னு ஜத்ஆன் அத்தைமீ என்ற
பெரியவர் ஒருவரின் வீட்டில் ஒன்று கூடினர்.
அநீதி இழைக்கப்படுபவர் எவராயினும், அவருக்கு நீதி கிடைக்கச் செய்வதில் அனைவரும் ஒன்றிணைந்து
பாடுபட வேண்டும் எனும் உடன்படிக்கை அங்கே அப்போது
உருவானது. இவ்வுடன்படிக்கையில் நபி ﷺ அவர்களும் கலந்து கொண்டார்கள். அதன் பின் அந்த யமன்வாசியின் உரிமை மீட்டுத் தரப்பட்டது.
(சீரத்து இப்னு கஸீர் ; 1/257)
இவ்வுடன்படிக்கையில் கலந்து கொண்டது பற்றி நபி ﷺ
அவர்கள் கூறினார்கள்:
شهِدتُ -غُلامًا- مع عُمومَتي حِلفَ المُطَيَّبينَ،
فما أُحِبُّ أنَّ لي حُمرَ النَّعَمِ، وأنِّي أنكُثُهُ
வாலிபனாக இருக்கும் நிலையில் அப்துல்லாஹ் இப்னு
ஜத்ஆன் வீட்டில் நடந்த ஒப்பந்தத்தில் நான் கலந்து கொண்டேன். அந்த ஒப்பந்தத்தை முறித்து
விட்டு எனக்கு செந்நிற ஒட்டகைகள் கிடைப்பதைக்கூட நான் விரும்ப மாட்டேன். (முஸ்னத் அஹ்மது ; 3 /136)
سيد القوم خادمهم
ஒரு சமூகத்தின் தலைவன் அந்த சமூக மக்களின் ‘பணியாளன் – சேவகன். (அல்ஜாமிவுஸ்
ஸகீர் ; 1/481)
நபிகள் நாயகம் ﷺ தலைமை பதவியை ஏற்கின்ற ஒவ்வொரு தலைவனுக்கும் இருக்க
வேண்டிய அவசியமான முதன்மைப் பண்பு மக்களுக்கு சேவை செய்வது. குறிப்பாக மக்கள் பிரதிநிதிகளாக
இருக்கிற அரசியல்வாதிகள் ஆட்சியாளர்கள் சுயநலம் பார்க்காமல் மக்களுக்கு பணி
செய்பவர்களாக மக்களுக்கு தொண்டு செய்பவர்களாக இருக்க வேண்டும் என்று கூறினார்கள்.அவ்வாறு வாழ்ந்தும் காட்டினார்கள்.
ஒருவர் ஒரு உதவி என்றாலோ அல்லது ஒரு பிரச்சனை
என்றாலோ உடனே முன்னால் வந்து நிற்பது நபி ﷺ அவர்கள் தான்.
وذات يوم، أقبل رجل من بلد اسمها (إراش) إلى مكة،
فظلمه أبو جهل، وأخذ منه إبله، فذهب الرجل إلى نادي قريش يسألهم عن رجل ينصره على
أبي جهل، وهنا وجد الكفار فرصة للتسلية والضحك والسخرية
من رسول الله صلى الله عليه وسلم، فأمروا الرجل أن يذهب إلى الرسول صلى الله عليه وسلم
ليأخذ له حقه، فذهب الرجل إلى رسول الله صلى الله عليه وسلم، وأخذوا ينظرون إليه ليروا
ما سيحدث، فقام النبي صلى الله عليه وسلم مع الرجل ليعيد له حقه من أبي جهل، فأرسلوا
وراءه أحدهم؛ ليرى ما سوف يصنعه أبوجهل مع رسول الله صلى الله عليه وسلم، فذهب الرسول
صلى الله عليه وسلم إلى بيت أبي جهل، وطرق بابه، فخرج أبو جهل من البيت خائفًا مرتعدًا،
وقد تغير لونه من شدة الخوف، فقال له رسول الله صلى الله عليه وسلم: (أعطِ هذا الرجل
حقه) فرد أبو جهل دون تردد: لا تبرح حتى أعطيه الذي له، ودخل البيت مسرعًا، فأخرج مال
الرجل، فأخذه، وانصرف.
وعندما أقبل أبو جهل على قومه بادروه قائلين: ويلك!
ما بك؟ فقال لهم: والله ما هو إلا أن ضرب عليَّ وسمعت صوته فملئت منه رعبًا، ثم خرجت
إليه، وإن فوق رأسه لفحلا من الإبل ما رأيتُ مثلَه قط، فوالله لو أبَيتُ لأكلني. [البداية
والنهاية
இராஷ் என்ற ஊரிலிருந்து ஒரு வியாபாரி மக்கா நகருக்கு
வந்திருந்தார். அபூஜஹ்ல் அவரிடமிருந்து ஒரு ஒட்டகத்தை வாங்கி விட்டு அதற்கான விலையை
தராமல் அநீதம் செய்து விட்டான். அதனால் மக்காவில் இருக்கிற முக்கிய தலைவர்களை சந்தித்து
தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று முறையிட்டார். நபியவர்களை கேலி செய்வதற்கும்
பரிகாசம் செய்வதற்கும் அவகாசத்தை தேடிக்கொண்டிருந்த மக்கா வாசிகளுக்கு இது ஒரு நல்ல
சந்தர்ப்பமாக அமைந்தது. எனவே மக்காவாசிகள் அந்த வியாபாரியை நபியிடத்தில் சென்று நீ
முறையீடு. அவர் உனக்கு உதவி செய்வார் என்று சொல்லி அனுப்பினார்கள். அவரும் நபியிடத்தில்
சென்றார். அங்கே என்ன நடக்கிறது என்பதை பார்ப்பதற்காக ஒருவரையும் அவருக்கு பின்னால்
அனுப்பி வைத்தார்கள். அந்த வியாபாரி தனக்கு நடந்ததை நபியிடத்தில் எடுத்துச் சொன்னதும்
நபியவர்கள் அந்த வியாபாரியை அழைத்துக்கொண்டு அபூஜஹ்லின் வீட்டிற்கு சென்றார்கள். சென்று
அவனுடைய வீட்டின் கதவைத் தட்டி தன் குரலை எழுப்பினார்கள். நபியின் அந்த கம்பீரமான குரலைக்
கேட்டவுடன் முகமெல்லாம் மாறியவனாக உடல் நடுங்கியவனாக பயந்த நிலையில் வெளியே வந்தான்.
அவனைப் பார்த்ததும் நபியவர்கள் இவனுக்கு கொடுக்கவேண்டிய பணத்தைக் கொடு என்று சொன்னார்கள்.
உடனே அபூஜஹ்ல் இங்கேயை நில்லுங்கள். நான் எடுத்து
வருகிறேன் என்று சொல்லி வேகமாக சென்று அந்த ஒட்டகத்திற்குரிய பணத்தை எடுத்துக்கொண்டு
வந்து அந்த வியாபாரியிடத்தில் கொடுத்தான். மக்காவாசிகள் அனுப்பிய அந்த மனிதர் இந்த
நிகழ்வுகளையெல்லாம் பார்த்து விட்டு நடந்ததை மக்காவாசிகளிடத்தில் வந்து சொன்னார். உடனே
அவர்கள் அபூஜஹ்லை அழைத்து, உங்களுக்கு என்ன ஆனது? ஏன் இப்படி நடந்து கொண்டீர்கள்? உங்களிடத்திலே நபியை அனுப்பியக் காரணமே, அவரிடம்
நீ ஏதாவது சொல்ல வேண்டும். அதைப் பார்த்து நாங்கள் சிரிக்க வேண்டும். அவர்களை கேலி
செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான். ஆனால் ஏன் இப்படி நடந்து கொண்டீர்கள் என்று
கேட்ட பொழுது, அவருடைய குரலைக் கேட்டவுடன் என் உடலெல்லாம் நடுங்க ஆரம்பித்து விட்டது.
மட்டுமல்ல அவருடைய தலைக்கு மேல் நான் ஒரு ஒட்டகத்தைப் போன்ற ஒரு தோற்றத்தை பார்த்தேன்.
இதுவரை அதைப்போன்ற ஒட்டகத்தை நான் கண்டதில்லை. ஒருவேளை நான் கொடுக்காமல் மறுத்திருந்தால்
என்னை அது கடித்து சாப்பிட்டு விடுவோ என்று நான் பயந்தேன் என அபூஜஹ்ல் கூறினான். (அல்பிதாயா வன்நிஹாயா)
இந்த நிகழ்வை கொஞ்சம் நாம் ஆய்வு செய்து
பார்ப்போம்.வெளியூரிலிருந்து ஒருவர் வந்திருக்கிறார்.அவர் யாரென்று தெரியாது.
அவருடன் நட்போ உறவோ பழக்கமோ எதுவும் இல்லை.அவருக்கு ஒரு பிரச்சனை என்றவுடன்
எதையும் யோசிக்காமல் நபி ﷺ
அவர்கள் செல்கிறார்கள்.அப்படி எதையும் யோசிக்காமல் செல்வார்கள் என்று
மக்காவாசிகளுக்கும் தெரியும்.அதனால் தான் அவரை நபியிடத்தில் அனுப்பி
வைக்கிறார்கள். இங்கே நாம் யோசிக்க வேண்டிய இன்னொரு விஷயம், அபூஜஹ்ல் ரொம்ப
மோசமானவன்.. فرعون هذه الامة இந்த உம்மத்தின் ஃபிர்அவ்ன் என்று
சொல்லப்படுகிற அளவுக்கு ரொம்ப ஆபத்தானவன். ஒவ்வொரு நேரத்தில் நபிக்கு எதிராக
செயல்படக்கூடியவன், எத்தனையோ சமயங்களில் நபியைக் கொல்வதற்கும் திட்டங்கள்
தீட்டியவன்.இவை அனைத்தும் நபிக்கு தெரியும். இருந்தாலும் அவனிடத்தில்
செல்கிறார்கள். இது தான் தன்னைப் பற்றி யோசிக்காமல் பிறர் நலத்தைப்பற்றி
யோசிக்குதல். இதற்குப் பெயர் தான் தன்னலம் இல்லாத பொது நலம்.
ஆனால் இன்றைக்கு எந்த உலக ஆதாயத்தையும்
எதிர்பார்க்காமல் ஒரு காரியத்தை செய்யக்கூடிய ஒரு ஆட்சியாளரையாவது நாம் பார்க்க
முடியுமா? தன் உரிமையை பெறுவதற்காக ஒரு குடிமகன் பணம் கொடுப்பதும்,
தன் கடமையைச் செய்ய வேண்டிய
அரசாங்க ஊழியர்களும் ஆட்சியாளர்களும் அதற்காக பணம் பெறுவதும் வழமையாகி விட்டது.அரசாங்கம்
சம்பந்தப்பட்ட எந்த வேலையாக இருந்தாலும் பணம் கொடுத்தால் தான் நடக்கும்.பணம்
இல்லாமல் நடக்காது என்று சொல்லும் அளவுக்கு இன்றைக்கு சூழ்நிலை இருக்கிறது.
இஸ்லாத்தின் இரண்டாம் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களின்
மனைவிக்கு, அரசவையில் பணி புரிந்த
ஒருவர் இரண்டு தலையணையை அன்பளிப்பாக வழங்குகின்றார். ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் அரசவையில்
அரசர் சாய்ந்து அமர்கின்ற மாதிரியான இரு தலையணையை தம் வீட்டினுள் பார்க்கிறார்கள்.
உடனே, தன் மனைவியிடம்,
இந்த இரண்டும் எங்கிருந்து
வந்தது? அல்லது நீ விலைக்கு
வாங்கினாயா? உண்மையைச் சொல்,
மறைக்காதே என ஜனாதிபதியாக
தன் மனைவியிடம் சற்று வேகப்படுகிறார்கள். இதை இன்ன நபர் நமக்கு அன்பளிப்பாக அனுப்பியுள்ளார்
என தன் மனைவியின் பதில் கேட்டு, “அல்லாஹ் அவருடன் போரிடுவானாக...” எனக் கோபமாக சொல்கிறார்கள்.
அந்த நபர் தனக்கு உண்டான ஒரு தேவையை நிவர்த்தி செய்து
தருமாறு அவைக்கு வந்தார். அதை நான் அனுமதிக்க வில்லை. இப்போது என் குடும்பத்தினர் வழியாக
சமரசம் பேசவே இந்த இரண்டு தலையணையை அன்பளிப்பு என்ற பெயரில் கொடுத்து அனுப்பியுள்ளார்
என சொன்னார்.பின்னர் அந்த இரண்டு தலையணையையும் தன் மனைவியிடமிருந்து பிடுங்கிச் செல்கிறார்கள்.
எதுவும் பேச இயலாது, மனைவி தன் கணவர் உமர்
(ரலி) அவர்கள் பின் சென்று, அதன் மேல் இருக்கின்ற
கம்பளி உறை நம்முடையது என்றதுமே அதை மட்டும் எடுத்துக் கொடுத்து விடுகிறார்கள். பின்பு, ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் அதை மக்கா மற்றும்
மதீனாவின் இரண்டு பெண்களுக்கு அன்பளிப்பாக கொடுத்து விடுகிறார்கள்.
சிறிய தலையணையில் என்ன நேர்ந்து விடப் போகிறது என்
நாம் நினைக்கலாம். அற்ப பொருளுக்குக்கூட ஒரு ஆட்சியாளன், மக்கள் தலைவன் விலை போய் விடக் கூடாது என்பதே இதன்
ஆழமான தத்துவமாகும்.
மட்டுமல்ல, இது போன்ற சிறிய பொருட்களிடமிருந்து தான் அனைத்து வித இலஞ்சத்திற்கும் அடித்தளம் அமைக்கப்படுகிறது.
மக்கள் பிரதிநிதிகளான ஆட்சியாளர்களால் வசூலிக்கப்படுகின்ற பில்லியன் மதிப்பிலான பணப்பரிமாற்றங்
களுக்கான ஊக்கம் இலஞ்சமாய் வழங்கப்படுகின்ற சொற்பக் காசுகளில் தான் துவங்குகிறது.
எனவே வாழ்க்கையில் பிறருக்கு பயன் தரும்
விதத்தில் நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.புல்லாங்குழல் போன்றிருக்க
வேண்டும். கால்பந்து போன்றிருக்கக் கூடாது. காற்றால் இயங்கும் இவைகளில் ஒன்று முத்தமிடப்படுகின்றது, இன்னொன்று எட்டி உதைக்கப்படுகின்றது. தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால்பந்து உதைபடுகிறது - ஆனால் தான் வாங்கிய காற்றை இசையாக புல்லாங்குழல் தருவதால் அது முத்தமிடப்படுகிறது. சுயநலம் உள்ளவன் புறக்கணிக் கப்படுவான், பொதுநலம் உள்ளவன் போற்றப்படுவான் என்பது தான்
இந்த கால்பந்தும் புல்லாங்குழலும் நமக்கு சொல்லும் அருமையான பாடம்.
அகிலத்தில் அல்லாஹ்வால் படைக்கப்பட்ட அனைத்து
படைப்புகளும் எதாவது வகையில் பிறருக்கு பயன் தரும் வகையில் பொதுநலத்தோடு
செயல்படுவதை நாம் பார்க்கலாம்.தனக்கு ஏற்படும் காயங்களைக் கூட பாராமல் தன் எஜமானனை
பாதுகாப்பாக பல மைல் தூரம் சுமந்து செல்லும் குதிரையிடத்தில் பொதுநலம்
இருக்கிறது.நாம் போடுகின்ற ஒரு சில பிஸ்கட்களுக்காக காலம் முழுக்க நன்றி
விசுவாசத்தை வெளிப்படுத்தும் நாயிடத்தில் பொதுநலம் இருக்கிறது. எதுவும் தரா
விட்டாலும் கிடைக்கிற காகிதத்தை திண்று கொண்டு நம் பொதிகளை சுமக்கும்
கழுதையிடத்தில் பொதுநலம் இருக்கிறது.
தன் மேல் சிறுநீர் கழிப்பவனுக்கும் இளநீரைப்
பரிசாக வழங்கும் தென்னை மரத்திடத்தில் பொதுநலம் இருக்கிறது.தன் மேல் கல்
எறிபவனுக்கும் சுவையான பழங்களை தரும் மாமரத்திடத்தில் பொதுநலம் இருக்கிறது. கடலின்
உப்பு நீரை உள்வாங்கிக் கொண்டு நமக்காக மதுரமான நீரை வாரிவழங்கும்
மேகத்திடத்திலும் பொதுநலம் இருக்கிறது.இப்படி உலகத்தின் அத்தனை
வஸ்துக்களிடத்திலும் பொதுநலம் இருக்கிறது உலகத்திலேயே எல்லா விஷயத்திலும்
சுயநலத்தைப் பார்ப்பது மனிதன் மட்டும் தான்.
சுயநலம் இன்றி பொதுநலத்துடன் வாழ்வது இஸ்லாத்தின்
முக்கிய அம்சமாக பார்க்கப்படுகின்றது.
قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ: «الْإِيمَانُ بِضْعٌ وَسَبْعُونَ - أَوْ بِضْعٌ وَسِتُّونَ - شُعْبَةً،
فَأَفْضَلُهَا قَوْلُ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَأَدْنَاهَا إِمَاطَةُ الْأَذَى عَنِ
الطَّرِيقِ، وَالْحَيَاءُ شُعْبَةٌ مِنَ الْإِيمَانِ»
சுயநலம் இல்லாமல் பொது நலத்துடன் வாழ்வதின் மூலம்
நம் ஈமானில் முழுமை பெற்றவர்களாக மாறுவதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக
அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
ReplyDeleteஹஜ்ரத் தங்களது சேவை மென்மேலும் தொடர அல்லாஹ் பேரருள் புரிவானாக ஆமீன்