Thursday, March 25, 2021

நம் ஓட்டு யாருக்கு ?



 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது.ஆளும் கட்சி எதையாவது ஒன்றை செய்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளுமா அல்லது புதிய ஆட்சி அமையுமா என்று அனைவரும் தேர்தல் நாளை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிற பரபரப்பான இவ்வேளையில் தேர்தல் குறித்த ஒரு சில செய்திகளை பார்க்கலாம்.

واعتصموا بحبل الله جميعا

அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் : 3 ; 103)

وقال عبد الله بن مسعود رضي الله عنه: (حبل الله الجماعة

இந்த வசனத்தில் அல்லாஹ்வுடைய கயிறு என்பதற்கு ஜமாஅத் என்று இப்னு மஸ்வூத் ரலி அவர்கள் விளக்கம் தருகிறார்கள்.

قال القرطبي رحمه الله: «فإن الله تعالى يأمر بالألفة وينهى عن الفرقة، فإن الفرقة هلكة، والجماعة نجاة

இந்த வசனத்தில் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுவதை அல்லாஹுத்தஆலா ஏவுகிறான். பிரிவினையைத் தடுக்கிறான். ஏனென்றால் பிரிவினை அழிவை ஏற்படுத்தும். ஒரே ஜமாஅத்தாக ஒன்றிணைந்திருப்பது வெற்றிக்கான காரணமாக இருக்கும் என்று அல்லாமா குர்துபீ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

ஒரு குடும்பமாக இருக்கட்டும் ஒரு சமூகமாக இருக்கட்டும் அல்லது ஒரு நாடாக இருக்கட்டும் பிரிவினை இல்லாமல் பிழவுகள் இல்லாமல் சண்டை சச்சரவுகள் இல்லாமல் ஒற்றுமையோடு பயணிக்க வேண்டும். அப்போது தான் அந்த குடும்பத்திலும் அந்த சமூகத்திலும் அந்த நாட்டிலும் அமைதி நிலவும். அவைகளுக்கு பலமும் ஏற்படும்.அதில் அல்லாஹ்வின் உதவியும் கிடைக்கும்.

وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ  وَاصْبِرُوا إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ

அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கட்டுப்படுங்கள்.கருத்து வேற்றுமை கொள்ளாதீர்கள். (அவ்வாறு கருத்து வேற்றுமை கொண்டால்) நீங்கள் கோழையாகி விடுவீர்கள். உங்கள் பலம் போய் விடும். பொறுமையை மேற்கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான். (அல்குர்ஆன் : 8 ; 46)

وما أعظم حكمة ذلك الرَّجل الذي شارف على الموت، وأحبَّ أن يختمَ حياته بوصيّة خالدة يوصي بها أبناءه، تكن لهم من بعده منهاجاً ينتهجونه، وطريقاً قويماً يسلكونه لا يحيدون عنه قِيد أُنملة فأعلمهم أن الاتحاد والتعاون قوة ونجاح:

فقد جمع أبناءه وأعطاهم تباعاً حزمةً من السِّهام، وطلب منهم أن يكسروها، فما استطاعوا، فأخذها وفرَّقها آحاداً بينهم، فكسر كلّ واحد منهم سهمه بكلِّ يُسرٍ وسهولة، فأدركوا حكمة أبيهم

ஒரு பெரியவருக்கு நான்கு மகன்கள், அந்த நான்கு பேரும் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். அதனைக் கண்டு அவர் மிகவும் வருத்தம் அடைந்தார். ஒற்றுமையாக இருங்கள் என்று கூறியும் அவர்கள் கேட்க வில்லை.  ஒரு நாள் அவருக்கு உடல் நலம் சரி இல்லாமல் போனது. மரணிப்பதற்கு முன்பு அவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்தார்.

ஆளுக்கொரு கொம்புகளை கொண்டு வர சொன்னார்,  அவர்களும்  கொண்டு வந்தார்கள்.அந்த நான்கு கொம்புகளையும் ஒன்றாகக் கட்ட சொன்னார். பிறகு ஒவ்வொருவரையும் அழைத்து அந்த கட்டிய கொம்புகளை உடைக்க சொன்னார். யாராலும் முடிய வில்லை. பிறகு கட்டுகளை அவிழ்த்து ஒவ்வொன்றாக கொடுத்து உடைக்க சொன்னார், அனைவரும் சுலபமாக உடைத்தார்கள். ஒற்றுமையோட பலம் என்னான்னு இப்போ தெரியும்னு நினைக்கிறன். நீங்கள் நாலு பெரும் நான்கு கொம்புகளை போலத்தான். ஆனால் ஒற்றுமையாக இருந்தால் யாராலும் உங்களை அசைக்க முடியாது  என்று கூறினார்.

عن عبد الله ابن عمر رضي الله عنهما قال ,قال رسول الله صلى الله عليه وسلم" يد الله مع الجماعة"

إن الله لا يجمع أمتي أو قال : أمة محمد على ضلالة ويد الله مع الجماعة ، ومن شذ شذ إلى النار

"அல்லாஹ்வின் உதவி ஒன்று  பட்டு செயல்படுவதில் இருக்கிறது.

என் சமூகம் வழிகேடுகளில் ஒன்றிணையாது. யார் ஒன்றுபடுவதிலிருந்து விலகி தனித்திருப்பாரோ அவர் நரகிலும் தனித்திருப்பார்" (திர்மிதி ; 2167)

ஒரு சமூகத்தின் அடிப்படை ஒற்றுமை.ஒற்றுமை தான் ஒரு சமூகத்தின் பலம். ஒற்றுமை இல்லாமல் போனால் ஒரு சமூகம் அடையாளம் தெரியாமல் போய் விடும் என்ற  இந்த வசனத்தின் பொருள் எந்தளவு உண்மையானது என்பதை இன்றைக்கு நாம் பார்த்துக் கொண்டிருக்கிற நிதர்சனங்கள் நமக்கு கோடிட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறது. ஒற்றுமையை இழந்து எல்லா விஷங்களிலும் பிரிந்து சின்னாபின்னமாகிக் கிடக்கிறோம்.

நபித்தோழர்கள் இந்த இறைவசனத்தை புரிந்து கொண்டு அதற்கேற்ப தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள்.அதனால் தான் அவர்கள் வீரத்தில் சிறந்து விளங்கினார்கள். பலம் மிக்க சமூகமாக காட்சி தந்தார்கள். பல நாடுகளை மட்டுமல்ல எண்ணற்ற மக்களின் இதயங்களையும் வென்றார்கள். இன்றைக்கும் போற்றப்படுகிறார்கள்.

இன்றைக்கு பதவியையும் மக்களிடத்தில் தனக்கான அந்தஸ்தையும் மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படக்கூடிய தலைவர்களைப் பார்க்கிறோம் மக்களுடைய ஒற்றுமை என்ன ஆனாலும் பரவாயில்லை. அந்த ஒற்றுமை சீர் குறைவதால் என்ன விளைவுகள் ஏற்பட்டாலும் அதைப்பற்றி கவலயில்லை. ஆனால் எங்களுக்கு உதவி வேண்டும் எங்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிற தலைவர்களைத்தான் இன்றைக்கு பார்க்கிறோம். இதில் இஸ்லாமியத் தலைவர்களும் விதிவிலக்கில்லை என்பது மனதை கனமாக்குகின்ற செய்தி. ஆனால் பொறுப்பும் பதவியும் முக்கியமல்ல, மக்களுடைய ஒற்றுமையும் அதன் மூலம் ஏற்படக்கூடிய பலமும் இறைவனுடைய உதவியும் மட்டுமே முக்கியம் என்பதை உலகத்திற்கு உணர்த்தியவர்கள் சஹாபாக்கள். இந்த ஒற்றுமையை ஓங்கச் செய்வதற்காக பல சமயங்களில் தங்களுக்கான அந்தஸ்தையும் அடையாளத்தையும் விட்டுக் கொடுத்த வரலாறுகள் நிறைய உண்டு.

بعث رسول الله عمرو بن العاص إلى ذات السلاسل من مشارف الشام في بلي، وعبد الله ومن يليهم من قضاعة

قال عروة بن الزبير: وبنو بلي أخوال العاص بن وائل، فلما صار إلى هناك خاف من كثرة عدوه، فبعث إلى رسول الله يستمده، فندب رسول الله المهاجرين الأولين، فانتدب أبو بكر وعمر في جماعة من سراة المهاجرين رضي الله عنهم أجمعين، وأمر عليهم رسول الله أبا عبيدة بن الجراح

قال عروة: وعمرو يومئذ في سعد الله وتلك الناحية من قضاعة

قال موسى بن عقبة: فلما قدموا على عمرو قال: أنا أميركم، وأنا أرسلت إلى رسول الله أستمده بكم فقال المهاجرون: بل أنت أمير أصحابك، وأبو عبيدة أمير المهاجرين

فقال عمرو: إنما أنتم مدد أمددته، فلما رأى ذلك أبو عبيدة وكان رجل حسن الخلق لين الشيمة، سعى لأمر رسول الله عليه وعهده.

قال: تعلم يا عمرو أن آخر ما عهد إلى رسول الله أن قال: «إذا قدمت على صاحبك فتطاوعا» وإنك إن عصيتني لأطيعنك، فسلم أبو عبيدة الإمارة لعمرو بن العاص.

நபி அவர்கள் காலத்தில் தாதுஸ்ஸலாஸில்என்றொரு போர் நிகழ்ந்தது. ஹளரத் அம்ர் பின் ஆஸ் ரலி அவர்கள் தலைமையில் ஒரு சிறு படையை அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அந்தப்படை போர்க்களம் சென்று பார்த்த போது எதிரிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததைக் கண்டு கொண்டார்கள். இது குறித்து நபியவர்களிடம் செய்தி அனுப்பப்பட்டது. தகவலைப் பெற்றுக் கொண்ட நபி அவர்கள்  அபூ உபைதா ரலி அவர்கள் தலைமையில் மேலும் ஒரு படையை அனுப்பி வைத்தார்கள்.

இரண்டு படைகளும் ஒன்று சேர்ந்த போது, இரண்டும் இணைந்த படைக்கு யார்  தளபதியாக இருப்பது? என்ற பிரச்சனை எழுந்தது. முதலில் வந்த படை தான் அசலானது, எனவே அதன் தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கும் ஹளரத் அம்ர் பின் ஆஸ் ரலி அவர்கள் தான் மொத்த படைக்கும் தளபதி என்று சிலர் சொன்னார்கள். ஆனால் பின்னால் வந்து சேர்ந்த படை தான் அதிக எண்ணிக்கைக் கொண்டது. எனவே அபூ உபைதா ரலி அவர்கள்  தான் மொத்தப் படைக்கும் தலைமையேற்பது நியாயமாகும். மேலும் அபூ உபைதா ரலி அவர்கள் இந்த சமுதாயத்திற்கு நம்பிக்கைப் பெற்றவர்என சிறப்பித்துக் கூறப்பட்டவர். எனவே அவர்கள் தளபதி பொறுப்பேற்பதே சிறப்பைத் தரும் என படை வீரர்கள் பலர் கருத்துத் தெரிவித்தனர். ஹள்ரத்  அம்ர்  பின் ஆஸ் ரலி அவர்கள் என்னைத்  தான் நபியவர்கள் ஆரம்பத்தில் தளபதியாக அனுப்பினார்கள். நீங்கள் எங்களுடன் இணைந்தவர்கள் தான். எனவே  நான் தளபதியாக இருப்பது தான் பொறுத்தமாக இருக்கும் என்று கூறினார்கள்.

இந்த சூழ்நிலையில், ஹள்ரத் அபூ உபைதா ரலி அவர்கள் ஹள்ரத் அம்ர் பின் ஆஸ் அவர்களிடம் நீங்கள் தளபதியாக இருப்பதிலிருந்து விலகிக் கொள்ள மாட்டீர்களா?’ எனக் கேட்டார்கள். அவர்கள் மறுத்து விட்டார்கள். அப்போது, நபியவர்கள் என்னை அனுப்பும் போது ஒன்று பட்டிருங்கள் என்று சொல்லி அனுப்பினார்கள். எனக்கு நபியின் அந்த வார்த்தை தான் முக்கியம். எனவே  நீங்கள் விலகிக் கொள்ள வில்லை எனில் தளபதியாக இருப்பதிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன்என பகிரங்கமாகக்கூறி தன் கொடியை ஹளரத் அம்ர் பின் ஆஸ் ரலி அவர்களிடம் கொடுத்து விட்டு ஹள்ரத் அபூஉபைதா ரலி அவர்கள் விலகிக் கொண்டார்கள். (அல்பிதாயா வன்நிஹாயா :பக்கம் ; 496)

இந்த நிகழ்வில் தர்மசங்கடமான சூழ்நிலையில் இருவரும் தங்கள் முடிவை மாற்றாமலிருந்திருந்தால் என்னவாகும்?!  ஒருவர் விட்டுக் கொடுத்ததின் விளைவாக ஒரே தலைமையின் கீழ் போர் நடைபெற்றது. இதன் மூலம் இஸ்லாமியப் படையின் ஒற்றுமை அவ்விடத்தில் நிலைநாட்டப்பட்டது.

கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தினால் அங்கே அவர்கள் பதவிக்கு ஆசைப்பட்டார்கள் என்ற எண்ணத்திற்கு நாம் போய் விடக்கூடாது. இன்றைக்கு ஒரு சிலர் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஸஹாபாக்கள் பதவி ஆசை கொண்டவர்கள், பதவி மோகம் கொண்டவர்கள், பதவிக்காக ஒருவருக் கொருவர் அடித்துக் கொண்டவர்கள் என்றெல்லாம் நாகூசாமல் சொல்லிக்  கொண்டிருக்கிறார்கள். ஆனால் எதுவுமே நாம் பார்க்கிற பார்வையில் தான் இருக்கிறது. நம் பார்வை சரியாக இருந்தால் பார்க்கிற விஷயங்களும் சரியாக தெரியும்.

அன்றைக்கு அவர்கள் கருத்து வேற்றுமை கொண்டதற்கு காரணம் என்னவென்றால், பொதுவாக சஹாபாக்கள் நபியினுடைய ஒவ்வொரு சொல்லையும் செயலையும் தங்கள் உயிரை விட மேலாக மதிப்பவர்கள். காரணம், நபியவர்கள் அவர்களாக பேச வில்லை. அல்லாஹ்வின் வார்த்தையை பேசுகிறார்கள். எனவே அவர்களின் ஒவ்வொரு வார்த்தையிலும் இருக்கிற அர்த்தத்தையும் கனத்தையும் புரிந்து கொண்டு அதை அப்படியே செயல்படுத்த வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தக் கூடியவர்கள் அவர்கள்.

இந்த அடிப்படையில் பார்க்கின்ற பொழுது நபியவர்கள் ஒருவரை தளபதியாக அனுப்புகிறார்கள் என்றால், அவர்களாக அனுப்ப வில்லை. இறைவனின் உத்தரவின் பெயரில் அனுப்புகிறார்கள்.இறை விருப்பத்தை நிறைவேற்றுகிறார்கள் என்று பொருள். எனவே அதிலிருந்து ஒருவர் விலகுகின்ற பொழுது நபியுடைய வார்த்தையையும் அல்லாஹ்வுடைய விருப்பத்தையும் செயல்படுத்த முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். அதனால் தான் நபியவர்கள் என்னை தளபதியாக அனுப்பியிருக்கிறார்கள். எனவே நான் இருப்பது தான் பொருத்தம் என்று இருவரும் கருதினார்கள். அதற்காக கருத்து வேற்றுமை கொண்டார்கள் என்பதை நான் புரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகளும் மனக் கசப்புகளும் ஏற்படுவது இயல்பு. கருத்து வேறுபாடுகள் இல்லாமல் மனக்கசப்புகள் ஏற்படாமல் யாராலும் வாழ்க்கையிலே பயணிக்க முடியாது. இதில் சஹாபாக்களும் விதிவிலக்கல்ல. அவர்களிடத்திலும் கருத்து வேறுபாடுகள், சின்ன சின்ன மனக்கசப்புகள் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அவைகள் அவர்களின் பிளவுக்கு காரணமாக ஆக வில்லை. அதனால் அவர்கள் பிரிந்து போய் விட வில்லை.

தீன் என்று வந்து விட்டால் இஸ்லாம் என்று வந்து  விட்டால் அவர்கள் தங்களுக்கு மத்தியில் இருக்கிற எல்லா கருத்து வேறுபாடுகளையும் மனக் கசப்புகளை மறந்து ஓரணியாக ஒன்றிணைந்து விடுவார்கள். இதுதான் அவர்களுடைய தனிச்சிறப்பு.

حينما وقع الخلاف المشهور بين علي بن أبي طالب -رضي الله عنه- ومعاوية بن أبي سفيان، وكان الحقّ مع أمير المؤمنين عليّ، حاول قيصر الروم استغلال الفرصة ليتوصّل إلى مآربه،

فأرسل إلى معاوية يقول: "من قيصر ملك الرّوم إلى معاوية بن أبي سفيان، أمّا بعد، علِمنا بما وقع بينكم وبين علي بن أبي طالب، فلو أمرتني أرسلت لك جيشا يأتون إليك برأسه"،

فردّ عليه معاوية: "من معاوية بن أبي سفيان إلى هرقل، أمّا بعد: أخَوان تشاجرا فما بالك تدخل فيما بينهما، إن لم تخرس، أرسلت إليك بجيش أوله عندك وأخره عندي، يأتونني برأسك أقدّمه لعلي بن أبي طالب".

இஸ்லாத்தின் நான்காவது கலீஃபாவான ஹஜ்ரத் அலீ ரலி அவர்களின் ஆட்சி காலத்தில் அவர்களுக்கும்  ஹள்ரத் முஆவியா ரலி  அவர்களுக்கும் கருத்து வேற்றுமை  ஏற்பட்டிருந்த  அந்த நேரத்தில்   முஆவியா  ரலி  அவர்களுக்கு  ரோமானிய மன்னன் ஹிர்கலிடமிருந்து கடிதம் வந்தது. அதில்  'தான் ஒரு  படையை   அனுப்பி அலீ  ரலி அவர்களின் தலையை  கொண்டு வர உதவுவதாக   எழுதப் பட்டிருந்தது,    அதற்கு    முஆவியா ரலி அவர்கள்,   '"சகோதரர்கள் இருவருக்கு மத்தியில் நடக்கும் உள் பிரச்சினையில் நுழைய நீ யார்?  நீ விலகிக் கொள்ள வில்லை என்றால் நான்  உனக்கு எதிராக  ஒரு  பெரும்படையை அனுப்புவேன். அதன்  என் மண்ணில் இருந்து உன் நாடு வரை பரவியிருக்கும். அவர்கள் உன் தலையை கொய்து வருவார்கள். அதை அலீ ரலி அவர்களிடம் நான்  சமர்ப்பிப்பேன்'" என்று கூறினார்கள்.

மார்க்கம்   என்று  வந்து  விட்டால்  தங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகளை   களைந்து ஒன்றுபட்டு விடுவார்கள் ஸஹாபாக்கள். எனவே தான் கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர்களை   இஸ்லாமிய  எதிரிகளால்   வீழ்த்த  முடிய வில்லை. 

தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. யார் வரக்கூடாது என்று நமக்கு தெரியும். இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிற இந்த ஆட்சியில் தார்மாறான விலைவாசி உயர்வு,சட்ட ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலைபாடு, மதுவால் வீடுதோரும் குடிமகன்கள் குடியை இழந்து கொண்டிருக்கிறார்கள். எல்லாம் தனியார் மயமாக்கப்பட்டு கார்ப்பரேட்டுகள் நாட்டையும் நாட்டு மக்களையும் சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள், விவசாய நிலத்தை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளின் வாழ்வை கேள்விக்குறியாக்கி விட்டார்கள். தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கி விட்டார்கள். நாட்டுக்கும் முஸ்லிம்களுக்கும் மிகப்பெரும் எதிராக இருக்கிற பாசிசத்தோடு கை கோர்த்திருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடே எதிர்த்துக் கொண்டிருந்த நேரத்தில் அந்த சட்டத்திற்கு ஆதரவாக கைய்யெழுத்திட்டு ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்திற்கும் மிகப்பெரும் துரோகம் இழைத்தவர்கள். இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். எனவே யார் வரக்கூடாது என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம். ஆனால் யார் வர வேண்டும் என்பதில் மக்கள் குழம்பிப்போய் இருக்கிறார்கள்.

அவர் நல்ல பேசுறாரு. அதனால் அவருக்கு போடலாம். இவர் நல்ல செய்றாரு, அதனால் இவருக்கு போடலாம் என்று பலருக்கும் பல சிந்தனைகள் ஓடிக் கொண்டிருக்கிறது. நாம் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இப்போது யார் வர வேண்டும் என்பது முக்கியமல்ல. யார் வரக்கூடாது என்பது தான் முக்கியம். அவருக்கு போடலாம்,, இவருக்கு போடலாம் என்றெண்ணி கவனமில்லாமல் நம் ஓட்டை செலுத்தி விட்டால் நாம் யார் வரக்கூடாது என்று நினைக்கிறோமோ அவர்களே வரக்கூடிய சூழல் உருவாகி விடும்.

இன்றைக்குள்ள சூழலில் ஆளும் கட்சிக்கு எதிராக நிற்கிற  பெரிய கட்சிகளைத் தவிர மற்ற அனைத்தும், ஓட்டைப் பிரித்து அதன் மூலம், தான், வந்து விட வேண்டும் என்பதற்காக பா.ஜா.க வினால் மறைமுகமாக நிறுத்தப்பட்டிருக்கிற கட்சிகள் தான் என்பது அனைத்து நடுநிலையாளர் களின் கருத்து. (சில கட்சிகள் விதிவிலக்காக இருக்கலாம்) எனவே மற்ற உதிரிக் கட்சிகளுக்கு நாம் செலுத்துகின்ற ஒவ்வொரு ஓட்டும், ஓட்டுக்களை பிரித்து அதன் மூலம் நம் எதிரியின் கை உயர்ந்து மறுபடியும் அவர்களே ஆட்சியைப் பிடிக்கிற மோசமான சூழ்நிலை உருவாகி விடும். அல்லாஹ் பாதுகாப்பானாக.

நன்கு வீரியமாக செயல்படக்கூடிய நமக்காக குரல் கொடுக்கக்கூடிய கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரக்கூடிய நம் இஸ்லாமிய சொந்தங்களும் போட்டியிடுகிறார்கள். அவர்கள் சட்டமன்றத்திற்கு வர வேண்டும் என்பது தான் என் போன்ற அனைத்து இஸ்லாமியரின் ஆசை. ஆனால் அவர்களுக்கு ஓட்டு போட்டு அவர்களை தேர்ந்தெடுக்க முடியாத இக்கட்டான சூழ்நிலையை நமக்கு அவர்களே ஏற்படுத்திக் கொடுத்து விட்டார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. 

எனவே இந்த நேரத்தில் இஸ்லாம் சொல்லியிருக்கிற ஒற்றுமையை பற்றிப்பிடித்து ஒரே குடையின் கீழ் ஒன்றிணைந்து நம் ஓட்டுக்கள் சிதரி விடாமல் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் வழிகாட்டுதலின் படி ஒரே இலக்கோடு ஒரே குறிக் கோலோடு நாம் அனைவரும் தேர்தலை எதிர் கொள்ள வேண்டும். அல்லாஹ் நமக்கு துணை நிற்பானாக

 

 

 

No comments:

Post a Comment