தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தேர்தல் நாள் நெருங்க நெருங்க தேர்தல் களம் மிகவும் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது.
பல காலங்களாக மாறி மாறி ஆட்சியைப் பிடித்துக் கொண்டிருந்த இரு பெரும் கட்சிகள் தங்களின் மாபெரும் தலைமையை இழந்ததற்குப் பிறகு முதன் முதலாக மோதிக் கொள்கின்ற களம் காணுகின்ற தேர்தல் என்பதால் மிகவும் பரபரப்பிற்கும் எதிர் பார்ப்பிற்கும் இடையில் இந்த தேர்தல் நடக்க இருக்கிறது.வழமை போல் இந்த தேர்தலிலும் அரசியல் கட்சிகள் 'நாங்கள் வெற்றி பெற்றால் அதை செய்வோம், இதை செய்வோம் என தேர்தல் வாக்குறுதிகளை
தேர்தல் அறிக்கைகளை அள்ளித் தெளித்துக் கொண்டு இருக்கின்றன. ஒரு கட்சி ஒரு
அறிக்கையை வெளியிட்டால் அதற்குப் போட்டியாக இன்னொரு கட்சி இன்னொரு அறிக்கையை
வெளியிடுகிறது. தேர்தல் அறிக்கைகள் மக்களை கவரும் விதமாகவும், எதிர்கட்சிகளின் வாயை அடைக்கும் விதமாகவும் இருக்க
வேண்டும் என்பதில் ஒவ்வொரு கட்சியும் தீவிரம் காட்டுவதைப் பார்க்க முடிகிறது.
1000 என்றும் 1500 என்றும் அனைவருக்கும் வீடு என்றும் பேருந்தில்
மகளிருக்கு சலுகை என்றும் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் என்றும் கல்லூரி மாணவர்களுக்கு
ஆண்டு முழுவதும் 2 ஜி இலவசம் என்றும்
வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி என்றும் விலையில்லா அரசு கேபிள் என்றும் அம்மா வாஷிங்
மெஷின் திட்டம் என்றும் நீ்ட்தேர்வு ரத்து செய்யப்படும் எனறும் பால் விலை லிட்டருக்கு
ரூ.3 குறைக்கப்படும்,
பெட்ரோல் விலை ரூ.5 குறைக்கப்படும், டீசல் விலை ரூ.4 குறைக்கப்படும் என்று ஒவ்வொரு கட்சிகளும் மக்களை
கவர்ந்து ஓட்டுக்களைப் பெற்று ஆட்சி பீடத்தில் அமர்ந்து விட வேண்டும் என்று விதவிதமான
தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறது.
முதலில் தேர்தல் சமயத்தில் கொடுக்கப்படுகின்ற இதுமாதிரியான
வாக்குறுதிகள் அவர்களின் மோசமான ஆட்சிக்கும் அவர்களின் ஆட்சியின் மீது மக்களுக்கு இருக்கும்
அதிர்ப்தியின் அடையாளம் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் தங்கள் ஆட்சியின் மீது
மக்களுக்கு அந்த அளவு அபிப்ராயம் இல்லை என்று உணரும் போது தான் இதுமாதிரியான வாக்குறுதிகளை
அள்ளித் தெளிக்கிறார்கள். மக்களுக்கான நல்லாட்சியை அவர்கள் கொடுத்திருந்தால்
அவர்களின் நேர்மையைப் பார்த்தே மக்கள் ஓட்டுப் போட்டு விடுவார்கள். அவர்களை
தங்களுக்கான தலைவர்களாக தேர்ந்தெடுத்து விடுவார்கள். இதுமாதிரியான அறிவிப்புகளுக்கு
தேவையே இல்லாமல் போயிருக்கும். அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது
மக்களுக்கான நல்லாட்சியைக் கொடுக்காத காரணத்தினால் தான் எப்படியும் நமக்கு ஓட்டுப்
போட மாட்டார்கள். எனவே இப்படியாவது ஏமாற்றி அவர்களிடம் ஓட்டு வாங்கி விடலாம் என்ற
எண்ணத்தில் கவர்ச்சி கரமான தேர்தல் வாக்குறுதிகளை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
உலகத்தில் மிகச்சிறந்த ஆட்சியை நிறுவிய நம் இஸ்லாமிய
ஆட்சியாளர்களில் யாரும் மக்களிடம் வாக்குறுதிகளையோ இதுமாதிரியான பொய்யான அறிக்கைகளையோ
கொடுத்து ஆட்சிக்கு வர வில்லை. இவ்வாறு ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசையும்
அவர்களுக்கு இருந்ததில்லை. மாறாக அவர்களின் சேவைகளையும் அவர்களின் நல்ல எண்ணங்களையும்
அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த அந்தஸ்துகளையும் பார்த்துத்தான் மக்கள் அவர்களை தேர்ந்தெடுத்தார்கள்.
நபி ﷺ அவர்களின் மரணத்திற்குப்
பிறகு யாரை கலீஃபாக ஆக்குவது, நபி ﷺ
அவர்கள் செய்து கொண்டிருந்த அந்த உயர்வான பணியை அவர்களுக்குப் பிறகு அவர்களின்
இடத்தில் இருந்து செய்வதற்கு யாரை நிறுத்துவது என்பதில் பெரும் குழப்பம்
ஏற்பட்டது. அங்கே மக்காவிலிருந்து வந்த முஹாஜிர்கள் இருக்கிறார்கள். மதீனத்து
அன்ஸாரிகளும் இருக்கிறார்கள். முஹாஜிர்கள் ஆரம்பமாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள்.
இஸ்லாத்திற்காக பல்வேறு தியாகங்களை செய்தவர்கள். மட்டுமல்ல மிகச்சிறந்த வம்சமான குரைஷி
வம்சத்தைச் சார்ந்த பெரும் பெரும் தலைவர்கள் அதில் இருந்தார்கள். அன்ஸாரிகள்
மக்காவிலிருந்து இடம் பெயர்ந்து வந்த முஹாஜிர்களுக்கு இடமளித்து அடைக்கலமளித்து
நபிக்கும் இஸ்லாத்திற்கும் எண்ணிலடங்கா உதவிகளை செய்தவர்கள். முஹாஜிர்கள்
அன்ஸாரிகள் இருவருமே நபியிடத்தில் உயர்ந்த இடத்தைப் பெற்றவர்கள். இருவருமே அந்த
பொறுப்பிற்கு தகுதி படைத்தவர்கள் தான். எனவே யாரிலிருந்து கலீஃபாவை தேர்வு செய்வது
என்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.
அப்போது அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள்
எழுந்து நின்று நாங்கள் முஹாஜிர்கள் நபிக்கு ஆரம்பத்திலிருந்து மிகவும் நெருக்கமாக
இருந்தவர்கள். நீங்கள் எங்களுடைய சகோதரர்கள். நல்லது கெட்டது அனைத்திலும்
எங்களுடன் பங்கெடுத்த்துக் கொண்டவர்கள்.
والله ما كنا في خير قط إلا كنتم معنا فيه.
எல்லா நலவான காரியங்களிலும் நீங்கள் எங்களோடு
இருந்திருக்கிறீர்கள்.
எனவே அபூஉபைதா அல்லது உமர் இவ்விருவரில் ஒருவரை
தேர்ந்தெடுக்கலாம் என்பது எனது விருப்பம் என்று கூறினார்கள். உமர் ரலி அவர்களைப் பற்றி நம் எல்லோருக்கும்
தெரியும். அபூஉபைதா ரலி அவர்கள் அமீனு ஹாதிஹில் உம்மா – இந்த உம்மத்தின் நம்பிக்கைக்குரியவர்
என்று நபியவர்களால் புகழ்ந்துரைக்கப்பட்டவர், சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்ட
பத்து முக்கிய ஸஹாபாக்களில் ஒருவர். இந்த இருவரையும் முன்மொழிந்தார்கள்.
قال عمر وأبو عبيدة ما ينبغي لأحد من الناس
أن يكون فوقك يا أبا بكر، أنت صاحب الغار ثاني اثنين، وأمرك رسول الله بالصلاة، فأنت
أحق بهذا الأمر،
மக்களில் உங்களுக்கு மேலே வேறு எவரும் இல்லை. ஏனெனில்
நீங்கள் ஹிஜ்ரத்தின் போது ஸவ்ர் கூறுகையில் நபியின் தோழராக இருந்தவர். நபியவர்கள் தனது
இறுதி நேரத்தில் மக்களுக்கு தொழ வைக்கும் படி உங்களைத்தான் ஏவினார்கள். எனவே இந்த பொறுப்பிற்கு
மிகவும் தகுதி படைத்தவர்கள் நீங்கள் தான் என்று உமர் ரலி அவர்களும் அபூஉபைதா ரலி
அவர்களும் கூறினார்கள்.
قال الصديق رضي الله عنه لعمر بن الخطاب
رضي الله عنه: ابسط يدك نبايع لك. فقال عمر: أنت أفضل مني. قال أبو بكر: أنت أقوى مني.
قال عمر: فإن قوتي لك مع فضلك
அபூபக்கர் ரலி அவர்கள் உமர் ரலி அவர்களைப்
பார்த்து உங்கள் கரத்தைக் கொடுங்கள். நாங்கள் பைஅத் செய்கிறோம் என்றார்கள். அதற்கு
உமர் ரலி அவர்கள் நீங்கள் தான் என்னை விட சிறந்தவர் என்றார்கள். அதற்கு அபூபக்கர்
ரலி அவர்கள் நீங்கள் என்னை விட ஆற்றல் மிக்கவர் என்ற போது, சிறப்போடு என்னுடைய
ஆற்றலும் உங்களுக்கு இருக்கிறது என்று உமர் ரலி அவர்கள் கூறினார்கள்.
இறுதியாக உமர் ரலி அவர்கள் மக்கள் முன் எழுந்து
நின்று ;
أن عمر بن الخطاب رضي الله عنه قال للناس:
ألستم تعلمون أن رسول الله صلى الله عليه وسلم قدّم أبا بكر للصلاة؟ قالوا: بلى. قال:
فأيكم تطيب نفسه أن يتقدم مَن قدّمه رسول الله صلى الله عليه وسلم؟ قالوا: لا أحد،
معاذ الله أن نتقدم على أبي بكر.
நபி ﷺ அவர்கள் தொழுகைக்கு அபூபக்கர்
ரலி அவர்களைத்தான் முற்படுத்தி னார்கள். நபியவர்கள் முற்படுத்திய ஒருவரை முந்திச்
செல்வதற்கு உங்களில் எவரின் மனம் இடம் கொடுக்கும் என்றார்கள். உடனே அங்கிருந்த அனைவரும்
அல்லாஹ் பாதுகாப்பானாக. அபூபக்கர் ரலி அவர்களை விட முந்திச் செல்பவர் எங்களில்
எவரும் இல்லை என்று அனைவரும் பைஅத் செய்தார்கள்.
ஆட்சியைப் பிடிப்பதற்கும் இருக்கிற ஆட்சியைத்
தக்க வைத்துக் கொள்வதற்கும் எதையும் செய்யத் துணிந்த இன்றைய தகுதியில்லா ஆட்சியாளர்களுக்கு
இடையில் எல்லா தகுதியும் இருந்தும் மற்றவர்கள் அவர்களை முன்மொழிந்தும் பொறுப்பை
ஏற்றுக் கொள்ளாமல் அவர்கள் மற்றவர்களை முன்மொழிகின்ற மிக அருமையான முன்னுதாரணத்தை
ஸஹாபாக்களிடம் தான் பார்க்க முடியும். அதனால் தான் கலீஃபாக்களின் ஆட்சியைக்
குறித்து வரலாற்று ஆசிரியர்கள் எழுதும் போது, அது تكليف ஆக இருந்தது. تشريف ஆக இருந்ததில்லை (தக்லீஃப் என்றால் பிறரால் பொறுப்பில் அமர்த்தப்படுவது. தஷ்ரீஃப் என்றால்
ஒருவர் தன்னை உயர்வுபடுத்தி பொறுப்பில் அமர முற்படுவது) என்று எழுதுகிறார்கள்.
எனவே கலீஃபாக்களில் எவரும் பொறுப்பை எனக்குத்
தாருங்கள் என்று கேட்டுப் பெற்றதில்லை. ஆனால் இன்றைக்குள்ள அரசியல்வாதிகள் அத்தனை
பேரும், தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக என்னென்ன செய்ய வேண்டுமோ
அத்தனையும் செய்கிறார்கள். அதில் ஒன்று தான் இந்த தேர்தல் வாக்குறுதிகள்.
கொடுக்கப்படுகின்ற இதுபோன்ற தேர்தல் வாக்குறுதிகள்
எல்லாம் நிறைவேற்றப் படுகிறதா? அப்படி நிறைவேற்றப்பட வில்லையென்றால் அந்த ஆட்சியை நீக்க சட்டத்தில் இடமிருக்கிறதா?
அல்லது அந்த ஆட்சியாளர்கள்
மீது நடவடிக்கை எடுக்க முடியுமா என்றால் எதற்கும் வாய்ப்பில்லை. எனவே கொடுக்கப்படுகின்ற
வாக்குறுதிகள் அனைத்தும் தேர்தல் வெற்றிக்காக சொல்லப்படும் வெற்று வார்த்தைகளாகத்தான்
இருக்கிறதே தவிர அதில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படுவதில்லை. அப்படி நிறைவேற்ற வேண்டும்
என்ற எண்ணத்தில் சொல்லப்படுவதும் இல்லை என்பது தான் யதார்த்தம்.
இது தேர்தலுக்கு மட்டும் விதிவிலக்கல்ல பொதுவாக
அனைவரிடத்திலும் வாக்குறுதி மீறல் என்பது சர்வ சாதாரணமாக காணப்படுகின்றது. இன்றைக்கு
இவ்வாறு செய்து தருகிறேன். இதை செய்கிறேன், அதை செய்கிறேன் என்று சொல்வார். நான்கு
நாட்கள் கழித்து போன் செய்தால் அவரது ஃபோன் நாட் ரீட்சபலா இருக்கும் அல்லது சுவிட்ச்
ஆஃபா இருக்கும். அந்தளவு கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதில் அலட்சியப் போக்கு எல்லோரிடமும்
மலிவாகிப் போனது.
கொடுத்த வாக்கை காப்பாற்றுவது வாக்குறுதிகளை நிறைவேற்றுவது
இறை நம்பிக்கையின் ஒரு பகுதி என்று இஸ்லாம் சொல்கிறது.
وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ
رَاعُونَ
இறை நம்பிக்கையாளர்கள் தமது அமானிதங்களையும்,
உடன்படிக்கையையும் பேணுவார்கள்.
(திருக்குர்ஆன் ; 23 : 8)
لا إيمانَ لِمَن لا أمانةَ له ،
ولا دِينَ لِمَن لا عهدَ له .
‘எவரிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டதை நிறைவேற்றும் தன்மை
இல்லையோ அவரிடம் இறை நம்பிக்கை இல்லை. எவரிடம் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் தன்மை இல்லையோ
அவரிடம் இஸ்லாம் மார்க்கம் இல்லை. (அஹ்மது ; 12567)
இஸ்மாயீல் அலை அவர்களின் நற்பண்புகள் குறித்து இறைவன்
பேசும் போது ‘அவர் வாக்கை காப்பாற்றுபவர்’
என்றும் குறிப்பிடுகின்றான்.
وَاذْكُرْ فِي الْكِتَابِ إِسْمَاعِيلَ
إِنَّهُ كَانَ صَادِقَ الْوَعْدِ وَكَانَ رَسُولًا نَبِيًّا ].
(நபியே) இஸ்மாயீலைப் பற்றியும் இவ்வேதத்தில் (உள்ளதைக்)
குறிப்பிடுவீராக. திண்ணமாக, அவர் வாக்குறுதியை
முழுமையாக நிறைவேற்றுபவராகவும், தூதராகவும், நபியாகவும் இருந்தார்’.
(திருக்குர்ஆன் 19:54)
வாக்குறுதியை காப்பாற்றுவது புகழுக்குரிய பண்பு.
அது இறைவனின் ஒப்பற்ற பண்பாகவும், நபிமார்களின் மாசற்ற பண்பாகவும், உண்மையான இறை நம்பிக்கையாளர்களின் உயர்ந்த பண்பாகவும்
இருக்கிறது.
فعَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي الْحَمْسَاءِ
قَالَ: بَايَعْتُ النَّبِيَّ صلى الله عليه وآله وصحبه وسلم بِبَيْعٍ قَبْلَ أَنْ يُبْعَثَ
وَبَقِيَتْ لَهُ بَقِيَّةٌ فَوَعَدْتُهُ أَنْ آتِيَهُ بِهَا فِي مَكَانِهِ، فَنَسِيتُ،
ثُمَّ ذَكَرْتُ بَعْدَ ثَلَاثٍ، فَجِئْتُ فَإِذَا هُوَ فِي مَكَانِهِ، فَقَالَ
يَا فَتًى، لَقَدْ شَقَقْتَ عَلَيَّ، أَنَا
هَاهُنَا مُنْذُ ثَلَاثٍ أَنْتَظِرُكَ (رواه أبو داود والبيهقي في السنن الكبرى
அப்துல்லாஹ் பின் அபூஹம்ஸா ரலி அவர்கள் கூறுகிறார்:
நபி (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்படுவதற்கு முன்பு நான் அவர்களிடம் ஒரு வியாபாரம்
செய்தேன். அவர்களுக்கு கொடுக்க வேண்டிய பாக்கி தொகை சிறிது இருந்தது. ‘இங்கே நில்லுங்கள், நான் அதை கொண்டு வந்து தருகிறேன்’ என்றேன். நானும் மறந்து போய் விட்டேன். மூன்று நாட்கள்
கழித்து ஞாபகம் வந்ததும் அங்கே சென்றேன். அதே இடத்தில் நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள்.
என்னைப் பார்த்த நபியவர்கள், ‘இளைஞனே, நீ எனக்கு சிரமம்
தந்து விட்டாய். நான் உன்னை எதிர்பார்த்து இங்கேயே மூன்று நாட்கள் காத்திருக்கிறேன்’
என்றார்கள். (நூல்: அபூதாவூத்
4996)
وعن حذيفة بن اليمان رضي الله عنهما قال:
ما منعني أن أشهد بدرًا إلا أني خرجت أنا وأبي حسيل. قال: فأخذنا كفار قريش. قالوا:
إنكم تريدون محمدًا؟ فقلنا: ما نريده، ما نريد إلا المدينة. فأخذوا منا عهد الله وميثاقه
لننصرفنَّ إلى المدينة، ولا نقاتل معه. فأتينا رسول الله صلى الله عليه وسلم فأخبرناه
الخبر. فقال: ((انصرفا، نفي لهم بعهدهم، ونستعين الله عليهم
ஹுதைஃபா பின் அல்யமான் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்;
நான் பத்ருப் போரில் கலந்து
கொள்ளாததற்குக் காரணம், நானும் என் தந்தை
ஹுசைல் (எனும் அல்யமான்) அவர்களும் (பத்ர் நோக்கிப்) புறப்பட்டோம். அப்போது குறைஷிக்
காபிர்கள் எங்களைப் பிடித்துக் கொண்டனர். “நீங்கள் முஹம்ம(துடன் சேர்ந்து எங்களுக்கெதிராகப்
போர் செய்வ)தை நாடித்தானே செல்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். நாங்கள் “(இல்லை) மதீனாவை நோக்கியே செல்கிறோம்” என்று (பேச்சை மாற்றிச்) சொன்னோம். அப்போது குறைஷியர்
“நாங்கள் மதீனாவுக்கே
திரும்பி விட வேண்டும், அல்லாஹ்வின் தூதர்
ﷺ
அவர்களுடன் சேர்ந்து (குறைஷியருக்கெதிராக)
போரிடக் கூடாது” என அல்லாஹ்வின் மீது
ஆணையிட்டு எங்களிடம் வாக்குறுதி பெற்றுக் கொண்டனர். நாங்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர்
ﷺ
அவர்களிடம் சென்று நடந்ததைத்
தெரிவித்தோம். அப்போது அவர்கள், “நீங்கள் இருவரும் (மதீனாவுக்கே) திரும்பிச் செல்லுங்கள். நாம் அவர்களுக்கு ஆதரவாக
அவர்களது வாக்குறுதியை நிறைவேற்றுவோம். அவர்களுக்கெதிராக அல்லாஹ்விடம் உதவி கோருவோம்”
என்று சொன்னார்கள். (முஸ்லிம் ;
1787)
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் என்பதற்கு
மிகச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்கள் உத்தம நபிகளாரும் அவர்கள் உருவாக்கிய
அருமைத் தோழர்களுமே என்பதனையே மேலுள்ள செய்தி எமக்கு அறியப் படுத்துகின்றது,
ஆனால் இன்றைக்குள்ள அரசியல்வாதிகள் கொடுத்த வாக்குறுதிகளை
காற்றில் பறக்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் வெற்றிக்காக எண்ணற்ற இலவசத்
திட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இலவசங்களை அள்ளிக் கொடுத்து தமிழ்நாட்டு நிதி ஆதாரத்தை
அரசுகள் அதள பாதாளத்தில் தள்ளிவிட்டன என்பது ஆ.ர்.பி.ஐ வெளியிட்டுள்ள தகவல்.
தமிழகத்தை ஆண்ட, மற்றும் ஆளும் கட்சிகள் ஓட்டுக்காக இலவசங்களை அள்ளிக்
கொடுத்ததன் பயனாக அரசு தற்போது ஓட்டாண்டியாகி நிதிச்சுமையில் சிக்கித்தவிக்கிறது. இதற்கு
முன் உதாரணமாக அமைந்துள்ளது தான் ரிசர்வ் வங்கியின் அறிக்க ; தமிழக அரசு சமூக நலனை சீரழிப்பதற்காகவே
அதாவது இலவசங்களுக்காக இதுவரை ரூ . 78100 கோடிக்கும் மேலாக செலவழித்திருக்கிறது, இதனால் ரூ. 5.7 லட்சம் கோடி கடன் உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறுகிறது.
இந்த புள்ளிவிவரங்கள் மூலம் புலப்படும் விஷயம் என்னவென்றால்,
தமிழகத்தை ஆண்ட அரசுகள் தேவையான
விஷயங்களுக்கு நிதியை செலவிடாமல் இலவசங்களுக்கு கொட்டி கொடுத்துள்ளன என்பது தான். நாட்டின்
மொத்த பொருளாதார வளர்ச்சியான ஜி.டி.பி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய பெருமைக்குரியது
நமது மாநிலம். ஆட்டோமொபைல், கட்டுமானம்,
ஜவுளித் துறை என எந்தத் துறையானாலும்
உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை நல்ல பொருளாதாரம் ஈட்டுகிறோம். ஆனால் தவறான நிதிக் கொள்கை
காரணமாகவே தமிழகத்தின் வளர்ச்சி நிலை தடுமாறி தரைத்தட்டி நிற்பதாக் கூறுகிறார்கள் வல்லுனர்கள்.
இரண்டாவது, அந்த இலவசங்களால் பிற்காலத்தில் பாதிக்கப்படுவது
நாம் தான். அவர்கள் அதை எங்கிருந்து கொடுக்கிறார்கள்? நம் வரிப்பணத்திலிருந்து கொடுக்கிறார்கள். மட்டுமல்ல
அந்த இலவசங்களைத் தருவதற்கு பல ஆயிரம் கோடி ரூபாவை ஒதுக்குகிறார்கள். அதற்குப் பிறகு
அந்த இழப்பை சரி செய்வதற்கு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை ஏற்றுகிறார்கள். கடைசியில்
அது நம் தலையில் தான் வந்து விழுகிறது.
கதை ஒன்று சொல்வார்கள். ஒரு ஊரில் ஓநாய் ஒன்று,
இருக்கிற எல்லா ஆடுகளையும் கடித்து அழித்துக் கொண்டிருந்தது. ஒரு நாள் அவ்வூரிலுள்ளவர்கள்
ஒரு கத்தியில் ஆட்டின் இரத்தத்தை தடவி வைத்தார்கள். இரத்த வாடையைப் பார்த்தவுடன்
அதை நக்க ஆரம்பித்தது. நக்கிக் கொண்டிருக்கின்ற போது அந்தக்கத்தி அதன் நாவை
கிழித்து விட்டது. ஆனால் இரத்தத்தின் சுவையில் மதிமயங்கி இன்னும் வேகமாக நக்க
ஆரம்பித்தது. இறுதியில் அதன் இரத்தத்தையே குடித்து செத்துப் போனது.
நம் இரத்தத்தை உறிஞ்சி நமக்கே தருகின்ற ஒரு
அம்சம் தான் அரசாங்கம் தரும் இலவசங்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். எனவே
இலவசங்களைப் பார்த்தோ அல்லது கவர்ச்சி கரமான தேர்தல் அறிக்கைகளைப் பார்த்தோ
ஏமாந்து விடாமல் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். இறைவன் அத்தகைய விழிப்புணர்வை
நம் இஸ்லாமிய சமூகத்திற்கும் தமிழகத்திலுள்ள அனைத்து குடிமக்களுக்கும் தருவானாக.
No comments:
Post a Comment