Thursday, September 16, 2021

ஹதீஸ் எண் ; 17- من تاب قبل ان تطلع الشمس

 

عن أبي هريرة -رضي الله عنه- قال: قال رسول الله -صلى الله عليه وسلم-: «مَنْ تَابَ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا تَابَ اللهُ عَلَيْهِ

சூரியன் மேற்கிலிருந்து உதயமாகுவதற்கு முன்பு யார் பாவமன்னிப்புத் தேடுகிறாரோ அவரை அல்லாஹ் மன்னிக்கிறான். (முஸ்லிம் ; 2703)

தவ்பாவினுடைய வாசல் எல்லா நேரங்களிலும் திறக்கப்பட்டு தான் இருக்கிறது. தன் அடியார்கள் தன்னிடத்தில் எப்போது பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லாஹ் மன்னிப்பதற்குத் தயாராக இருக்கிறான். இதற்கு முன்பு நாம் படித்த ஹதீஸில் கூட இரவிலும் பகலிலும் அல்லாஹ், பாவம் செய்த தன் அடியார்கள் தவ்பா செய்வதற்காக அவர்களை அழைக்கிறான் என்று வந்தது. இரவு பகல் என எல்லா நேரங்களிலும் அடியார்கள் கேட்கக்கூடிய தவ்பாவை இறைவன் ஏற்றுக் கொள்கிறான்.

ஆனால் இரண்டு தவணைகள் வருவதற்கு முன்பு ஒரு அடியான் இறைவனிடத்தில் தவ்பா தேடி விட வேண்டும். அந்த இரண்டு தவணைகள் வந்து விட்டால் அதற்குப் பிறகு அடியானுடைய தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லை. ஒன்று, அவனுடைய ரூஹ் தொண்டைக் குழியை அடைவதற்கு முன்பு வரை அவனுடைய தவ்பாவை ஏற்றுக் கொள்கிறான்.ரூஹ் தொண்டைக் குழியை அடைந்து விட்டால் அதற்குப் பிறகு செய்யப்படுகின்ற தவ்பாவை இறைவன் ஏற்றுக் கொள்வதில்லை.

وَلَيْسَتْ التَّوْبَةُ لِلَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ حَتَّى إِذَا حَضَرَ أَحَدَهُمْ الْمَوْتُ قَالَ إِنِّي تُبْتُ الآنَ

எவர்கள் பாவங்களை (தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து,முடிவில் அவர்களை மரணம் நெருங்கிய போது நிச்சயமாக இப்போது நான் மன்னிப்புத் தேடுகிறேன் என்று கூறுகின்றார்களோ அவர்களுக்கு பாவமன்னிப்பு இல்லை. (அல்குர்ஆன் : 4 ; 18)

إن الله يقبل توبة العبد ما لم يغرغر

தொண்டைக்குழியை ரூஹ் அடையும் வரை ஒரு அடியானின் பாவ மன்னிப்பை நிச்சயமாக அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். (திர்மிதி ; 3537)

இரண்டாவது, மேலே உள்ள ஹதீஸில் குறிப்பிட்டதைப் போல, கியாமத்தின் மிக முக்கியமான அடையாளமாக இருக்கிற சூரியன் மேற்கிலிருந்து உதயமாகி விட்டால் அல்லாஹ் அடியார்களின் தவ்பாவை ஏற்பதில்லை.

இந்த இரண்டு நேரங்களிலும் பாவமன்னிப்பு மட்டுமல்ல, ஒருவருடைய ஈமானும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

لا تقوم الساعة حتى تطلع الشمس من مغربها ، فإذا طلعت ورآها الناس آمنوا أجمعون ، فذلك حين لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا

சூரியன் மேற்கிலிருந்து உதயமாகும் வரை கியாமத் என்பது நிகழாது. சூரியன் மேற்கிலிருந்து உதயமாகுவதை மக்கள் பார்த்து விட்டால் அனைவரும் அப்போது ஈமான் கொள்வார்கள். ஆனால் இதற்கு முன்பு இறை நம்பிக்கை கொள்ளாமலும் அல்லது இறை நம்பிக்கை கொண்டிருந்தும் எந்த நன்மையையும் சம்பாதிக்காமலும் இருந்து விட்ட ஒரு ஆத்மாவிற்கு அந்நாளில் அதன் ஈமான் எவ்வித பலனையும் அளிக்காது. (இப்னு ஹிப்பான் ; 6838)

عن ابي ذر رض قال رسول الله صلى الله عليه وسلم : " تدري أين تذهب الشمس إذا غربت؟ " قلت : لا أدري ، قال : " إنها تنتهي دون العرش ، ثم تخر ساجدة ، ثم تقوم حتى يقال لها : ارجعي فيوشك يا أبا ذر أن يقال لها : ارجعي من حيث جئت ، وذلك حين : ( لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل

அபூதர் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் ; அல்லாஹ்வின் தூதர் நபி அவர்கள் என்னிடத்திலே சூரியன் மறையும் போது அது எங்கே செல்கிறது என்று உனக்கு தெரியுமா என்று கேட்டார்கள். நான் தெரியாது என்று கூறினேன். அப்போது, நபியவர்கள் கூறினார்கள். அது அர்ஷுக்குக் கீழே சென்று ஸுஜூதில் விழுந்து பின்பு எழுகிறது. முடிவில் நீ திரும்பு என்று அதற்கு சொல்லப்படும். ஆனால் எங்கிருந்து நீ வந்தாயோ அதன் பக்கம் திரும்பு என்று சொல்லப்படும் ஒரு நேரம் வரும்.  அது எந்த ஆத்மாவுக்கும் அதன் ஈமான் பயன் தராத நேரமாக இருக்கும்.

عن النبي صلى الله عليه وسلم قال: لما قال فرعون " لا إله إلا الله "، جعل جبريل يحشو في فيه الطين والتراب

ஃபிர்அவ்னைப் பற்றி நமக்கு நன்றாக தெரியும். கொடுங்கோலனாக இருந்தான். பல அக்கிரமங்களையும் அநியாயங்களையும் செய்து கொண்டிருந்தான். இஸ்ரவேலர்களுக்கு எண்ணிலடங்காத கொடுமைகளை கொடுத்து அவர்களை அடிமைப்படுத்திக் கொண்டிருந்தான். பிறந்த பிள்ளைகளை அநியாயமாக கொன்று குவித்துக் கொண்டிருந்தான். நான் தான் உங்களுடைய உயர்ந்த கடவுள் என்றெல்லாம் மக்களிடத்திலே சொல்லிக் கொண்டிருந்தான். ஹழ்ரத் மூஸா நபியவர்கள் எத்தனையோ அத்தாட்சிகளை காட்டியும் ஈமான் கொள்ளாத அவன், மூழ்கடிக்கபடுகின்ற அந்த நேரத்தில் நான் ஈமான் கொள்வதாக அவன் சொன்ன போது ஜிப்ரயீல் அலை அவர்கள் மண்ணை அள்ளி அவனுடைய வாயிலே போட்டார்கள்.

எனவே ஒருவன் தன்னுடைய முடிவையோ அல்லது இந்த பிரபஞ்சத்தின்  முடிவையோ கண் கூடாக பார்க்கும் அந்த நேரத்தில் அவன் செய்கின்ற பாவ மன்னிப்பும் ஈமானும் ஏற்றுக் கொள்ளப்படாது. இந்த இரு சூழ்நிலைகளும் வருவதற்கு முன்பு தவ்பா செய்து விட வேண்டும்.

 

 

 

No comments:

Post a Comment