Wednesday, September 15, 2021

ஹதீஸ் எண் ; 16 ان الله يبسط يده

 

عن أبي موسى عبد الله بن قيس الأشعري ، عن النبي قال: إن الله تعالى يبسط يده بالليل ليتوب مسيء النهار، ويبسط يده بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها رواه مسلم

நிச்சயமாக அல்லாஹ் பகலில் குற்றம் இழைத்தவர் தவ்பா செய்வதற்காக இரவில் தன் கரத்தை விரிக்கிறான். இரவில் குற்றம் இழைத்தவர் தவ்பா தேடுவதற்காக பகலில் தன் கரத்தை விரிக்கிறான். இது சூரியன் மேற்கிலிருந்து உதயமாகும் வரை. (முஸ்லிம் ; 2759

இந்த ஹதீஸில் அல்லாஹ்வின் கை என்று வந்திருக்கிறது. வேறு சில ஹதீஸ்களிலும் குர்ஆன் வசனங்களிலும் இறைவனின் கால்களை பற்றி வருகிறது. இறைவனின் முகத்தைப் பற்றி வருகிறது. இறைவன் அர்ஷில் அமர்ந்திருக்கிறான் என்று ஒரு குர்ஆன் வசனத்தில் இடம் பெற்றிருக்கிறது. ஆனால் இறைவன் உருவமற்றவன். எந்த ஒப்பு உவமையும் இல்லாதவன். எனவே இது மாதிரியான வார்த்தைகளுக்கு உலமாக்கள் அதற்கு தகுந்த சில விளக்கங்களை எழுதுவார்கள். ஆட்சியை பிடித்து விட்டார் என்று சொல்லும் போது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விட்டார் என்று சொல்லும் வழக்கம் உண்டு. அந்த அடிப்படையில் அர்ஷில் அமர்ந்திருக்கிறான் என்பதற்கு அவன் ஆட்சி செய்கிறான் என்று விளக்கம் தருவார்கள். இறைவனின் முகம் என்று வரும் இடத்தில் இறைவனின் பொருத்தம் என்று விளக்கம் தருவார்கள். ஏனென்றால் முகம் என்பது பொருத்தத்தின் அடையாளமாக இருக்கிறது. யாரை நாம் பொருந்திக் கொள்கிறோமோ அவர்களைத் தான் பார்ப்போம். யாரை பொருந்திக் கொள்ள வில்லையோ அவர்களை விட்டும் நம் முகத்தை திருப்பிக் கொள்வோம்.

அந்த வகையில் இங்கே கையை விரிக்கிறான் என்பதற்கு அர்த்தம் நம்மை அழைக்கிறான் என்று பொருளாகும். அதுவும் இரக்கத்தோடும் அன்போடும் அழைக்கிறான் என்று பொருள் கொடுப்பார்கள். ஏனென்றால் குழந்தைகளை அன்போடு அழைக்கின்ற போது தான் கரங்களை விரித்து நாம் அழைப்போம். எனவே இந்த ஹதீஸில் இறைவன் பாவம் செய்த தன் அடியார்களை தவ்பா செய்வதற்காக அன்போடு அழைக்கிறான் என்று விளக்கம் தருவார்கள்.

هل من تائب فأتوب عليه؟! هل من مستغفر فأغفر له؟! هل من سائل فأعطيه؟

என்னிடத்தில் தவ்பா தேடுபவர்கள் உண்டா நான் அவர்களது தவ்பாவை ஏற்றுக் கொள்கிறேன். என்னிடத்தில் இஸ்திக்ஃபார் செய்பவர்கள் உண்டா அவர்களது பாவங்களை நான் மன்னிக்கிறேன். என்னிடத்தில் தங்கள் தேவைகளை கேட்பவர்கள் உண்டா அவர்களுக்கு நான் தருகிறேன் என்று ஒவ்வொரு நாள் இரவிலும் முதல் வானத்திற்கு இறங்கி வந்து இறைவன் கேட்கிறான். (முஸ்னத் அஹ்மத் ; 16280)

இரவில் குற்றம் செய்தவர்களுக்காக பகலிலும் பகலில் குற்றம் செய்தவர்களுக்காக இரவிலும் இறைவன் கையை விரிக்கிறான் என்பதிலிருந்து, பகலில் குற்றம் செய்தவர்கள் இரவில் தான் தவ்பா தேட வேண்டும். இரவில் குற்றம் செய்தவர்கள் பகலில் தான் தவ்பா தேட வேண்டும் என்று பொருள் கொள்ளக் கூடாது. இதற்கு அர்த்தம் என்னவென்றால், பகலில் குற்றம் செய்தவர்கள் குறைந்தபட்சம் இரவிலாவது தவ்பா தேடி விட வேண்டும். இரவில் குற்றம் செய்தவர்கள் குறைந்தபட்சம் பகலிலாவது தவ்பா செய்து விட வேண்டும் என்பது பொருளாகும். ஒருவர் எப்பொழுதும் உழைத்துக்கொண்டே இருந்தால் அவர் இரவு பகலாக உழைக்கிறார் என்று சொல்வதுண்டு. இந்த அடிப்படையில் இரவிலும் பகலிலும் இறைவன் அழைக்கிறான் என்றால், நாள் முழுக்க நம்மை அழைத்துக் கொண்டிருக்கிறான் என்றும் பொருள் கொள்ளலாம்.

ஆக பாவம் செய்தவர்கள் முடிந்த வரை உடனுக்குடன் அந்த பாவத்திற்கு இறைவனிடத்தில் மன்னிப்பைத் தேடிக் கொள்ள வேண்டும்.

انما التوبة علي الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فاولئك يتوب الله عليهم

எவர்கள் அறியாமையால் தீமை செய்து விட்டு பின்பு விரைவில் மன்னிப்புத் தேடுகிறார்களோ அவர்களுக்குத்தான் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு உண்டு.அல்லாஹ் அவர்களின் மன்னிப்பை ஏற்றுக் கொள்கிறான். (அல்குர்ஆன் : 4 ; 17)

العجلة من الشيطان إلا في خمسة فإنها من سنة رسول الله صلى الله عليه وسلم: إطعام الضيف، وتجهيز الميت، وتزويج البكر، وقضاء الدين، والتوبة من الذنب

ஐந்து விஷயங்களை உடனே செய்ய வேண்டும் என்று  ஹாதமுல் அஸம் ரஹ் சொல்வார்கள். ஒன்று விருந்தாளிக்கு உணவளித்தல். இரண்டாவது இறந்தவரை அடக்கம் செய்தல். மூன்றாவது திருமண வயதை அடைந்தவருக்கு திருமணம் முடித்து வைத்தல்.. நான்காவது கடனை அடைத்தல் ஐந்தாவது பாவத்திலிருந்து மன்னித்து தேடுதல். (தபகாதுல் குப்ரா ; 6/309)

 

 

 

 

No comments:

Post a Comment