Wednesday, September 15, 2021

ஹதீஸ் எண் ; 14- فاني اتوب في اليوم اليه مائة مرة

وعن الاغر بن اليسار المزني رض قال: قال رسولُ الله -صلى الله عليه وآله وسلم-: يا أيّها الناس، توبوا إلى الله، فإني أتوب في اليوم إليه مئة مرة   رواه مسلم

மக்களே நீங்கள் இறைவனிடம் தவ்பாவைத் தேடிக் கொள்ளுங்கள். நிச்சயமாக நான் ஒரு நாளில் அவனிடம் நூறு முறை தவ்பா தேடுகிறேன். (முஸ்லிம் ; 2702)

இன்றைக்கு உலகத்தில் பாவ மன்னிப்பின் ரூபங்கள் பல விதமாக இருக்கிறது. பாவமன்னிப்பின் விதங்கள் பல மாறியாக இருக்கிறது.அதுவும் சில மதங்களில்  பாவமன்னிப்பைப் பெறுவதற்காக செய்யப்படும் காரியங்களைப் பார்த்தால் ரொம்ப வேடிக்கையாக இருக்கும்.கோயிலில் போய் 100 தேங்காய் உடைப்பார்கள், கேட்டால் பாவ மன்னிப்பு என்பார்கள், கோயில் உண்டியலில் 1000 ரூபாய் போடுவார்கள், கேட்டால் பாவமன்னிப்பு என்பார்கள், கங்கை ஆத்தில் மூழ்கி விட்டு வருவார்கள், கேட்டால் பாவமன்னிப்பு என்பார்கள், இதுவெல்லாம் பாவமன்னிப்பைப் பெறுவதற்கு ஹிந்து மதத்தில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகள். கிருத்துவ மதத்தில் பார்த்தால் இன்னும் வேடிக்கையாக இருக்கும். இருக்கிற எல்லா பாவத்தையும் செய்து விட்டு நான் இன்னன்ன பாவங்களை செய்து விட்டேன். என்னை ஆசிர்வதியுங்கள் என்று சொல்வார்கள், அங்கே அவரும் உன்னை கர்த்தர் மன்னிப்பாராக என்று சொல்வார், அதோட அவர்களின் பாவமன்னிப்பு முடிந்து விடும். பாவங்களுக்கான மன்னிப்பைப் பெறுவதை இன்றைக்கு மதங்கள் இந்தளவு கேளிக்கூத்தாக ஆக்கி வைத்திருக்கிறது.

ஆனால் வாழ்வின் அனைத்து விஷயங்களையும் அழகான முறையில் வழிகாட்டிய இஸ்லாம் தவ்பாவையும் அழகாகவே வழிகாட்டி இருக்கிறது.ஒரு மனிதன் பாவம் செய்து விட்டால் அதை பிறரிடத்திலே சொல்ல வேண்டிய அவசியமோ பிறரிடத்தில் வெளிப்படுத்த வேண்டிய தேவையோ இல்லை. அப்படி வெளிப்படுத்துவதை இஸ்லாம் விரும்பவும் இல்லை.

كل أمتي معافى إلا المجاهرين، وإن من المجاهرة أن يعمل الرجل بالليل عملا، ثم يصبح وقد ستره الله عليه فيقول: يا فلان، عملت البارحة كذا وكذا، وقد بات يستره ربه، ويصبح يكشف ستر الله عنه

முஜாஹிர்களைத் தவிர என்னுடைய உம்மத்தினர் அனைவரும் மன்னிக்கப் படுபவர்கள் தான். முஜாஹிர் என்பவர், இரவு நேரத்தில் பாவம் செய்து விட்டு, அதை இறைவனே மறைத்திருக்கும் நிலையில், காலையில் எழுந்து நான் இரவில் இன்ன தவறு செய்தேன் இன்ன குற்றம் புரிந்தேன் என்று வெளிப்படுத்துபவன் ஆகும். (அல்ஜாமிவுஸ் ஸகீர் ; 6261)

 

எனவே பாவம் என்பதும் பாவமன்னிப்பு என்பதும் ஒரு அடியானுக்கும் இறைவனுக்கும் மத்தியில் இருக்கிற விஷயமாகும். ஒருவன் தான் செய்த குற்றத்தை யாருக்கும் தெரியப்படுத்தாமல் தன்னைப் படைத்த இறைவனிடத்தில் மட்டும் ரகசியமாக சொல்லி அழுது பாவமன்னிப்பைத் தேடி விட முடியும். தான் செய்த குற்றம் யாருக்கும் தெரியாமலேயே இறைவனிடத்தில் மன்னிப்பை பெற முடியும். இது தான் பாவ மன்னிப்பு விஷயத்தில் இஸ்லாத்திற்கும் மற்ற மதங்களுக்கும் இடையே இருக்கிற வித்தியாசமாகும்.

இன்றைக்கு நம்மில் அனைவரும் பாவம் செய்பவர்கள் தான். இரவிலே பாவம் செய்கிறோம். பகலிலே பாவம் செய்கிறோம். தனியாக செய்கிறோம். கூட்டாக சேர்ந்து செய்கிறோம். நாம் செய்யக்கூடிய தொழிலில் பாவம் வந்து விடுகிறது. நம் பேச்சில் பாவம் இருக்கிறது. நம் செயலில் பாவம் இருக்கிறது. நம் எண்ண ஓட்டங்களில் கூட பாவம் இருக்கிறது. பாவத்திலேயே மூழ்கிக் கொண்டிருக்கிற நாம், இறைவனை பரிசுத்தமான நிலையில் சந்திக்க வேண்டும் என்றால் அதற்கு தவ்பா மிக மிக அவசியம்.

كل بني ادم خطاء وخير الخطائين التوابون

மனிதர்கள் அனைவரும் பாவம் செய்யக் கூடியவர்கள் தான். அவர்களில் பாவமன்னிப்பு தேடுபவர்கள் தான் சிறந்தவர்கள். (திர்மிதி ; 2499)

பாவமன்னிப்பு தேடுவதைத் தான் இறைவனும் விரும்புகிறான். பாவமன்னிப்பு தேடுகின்ற தன் அடியானைப் பார்த்து அளவில்லா மகிழ்ச்சி அடைகிறான்.

للهُ أشدُّ فرحًا بتوبة عبده حين يتوب إليه من أحدكم كان على راحلَته بأرضٍ فَلَاة، فانفلتت منه وعليها طعامه وشرابه، فأيسَ منها، فأتى شجرةً فاضطجَعَ في ظلِّها قد أيس من راحِلَته، فبينا هو كذلك إذا هو بها قائمةً عنده، فأخذ بخِطامها، ثمَّ قال مِن شدَّة الفرح: اللهمَّ أنت عبدي وأنا ربُّك، أخطأ من شِدَّة الفَرح

பாலைவனத்தில் பயணம் செய்யும் போது ஒருவரின் வாகனம் தொலைந்து விடுகிறது. அதில் தான் உணவும் தண்ணீரும் இருந்தது. இதனால் மிகவும் கவலையுற்றார். பயணத்தைத் தொடர முடியாத நிலையில் ஒரு மரத்திற்கு அருகில் வந்து அதன் நிழலில் நின்று விட்டார். அப்போது எதிர் பாராத விதமாக அவர் வாகனம் இருக்கிறது. உடனே அதன் கடிவாளத்தைப் பிடித்து மிக மகிழ்ச்சியுடன், இறைவா நீ என் அடிமை. நான் உன் இறைவன் என்று சந்தோஷ மிகுதியால் தவறாக கூறி விடுகிறார். இவரின் சந்தோஷத்தை விட அல்லாஹ் தன் அடியான் தன்னிடம் பாவமன்னிப்புத் தேடும் போது மிக அதிகமாக மகிழ்ச்சி அடைகிறான். (புகாரி ; 6309)

தவறுகளிலிருந்து பாதுகாக்கப்பட்ட அதிலிருந்து மிகவும் தூய்மையாகப்பட்ட நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஒரு நாளைக்கு நூறு தடவை இறைவனிடத்தில் பாவமன்னிப்பு தேடி இருக்கிறார்கள் என்றால், வாழ்க்கை முழுக்க பாவங்களை சுமந்து இருக்கிற நாம் எந்த அளவிற்கு பாவ மன்னிப்பில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பது இந்த  ஹதீஸிலிருந்து நாம் புரிய வேண்டிய செய்தியாக இருக்கிறது. அதுவும் இன்றைக்கு நாம் வாழுகின்ற இந்த வாழ்க்கை நிச்சயம் இல்லாதது. எப்பொழுது யாருக்கு இந்த நேரத்தில் மரணம் வரும் என்று யாருக்கும் தெரியாது. அடுத்த நொடி கூட நிச்சயமில்லாத இந்த வாழ்க்கையில் நாம் செய்கின்ற பாவங்களை நினைத்து அவ்வப்போது அல்லாஹ்விடத்தில் மன்னிப்பைத் தேடி விட வேண்டும். ஏனென்றால் திடீரென்று மரணம் சம்பவித்து விட்டால் நாம் செய்த குற்றங்களுக்கு மன்னிப்பைப் பெறாமலேயே இறைவனை சந்திக்கக் கூடிய நிலை ஏற்படும்.

قال لقمان لابنه: "يا بنيّ، لا تؤخر التوبة؛ فإن الموت يأتي بغتة

லுக்மானுல் ஹகீம் ரஹ் அவர்கள் தன் மகனுக்கு செய்த மிக அற்புதமான உபதேசங்களில் ஒன்று, என் அருமை மகனே நீ பாவமன்னிப்பை தள்ளிப்போடாதே ஏனென்றால் மரணம் திடீர் என்று வந்து விடும் என்று கூறுவார்கள்.

 

  

No comments:

Post a Comment