Wednesday, September 15, 2021

ஹதீஸ் எண் ; 6- افاتصدق بثلثي مالي

 

فعن سعد بن أبي وقاص رضي الله عنه قال: (عادني (زارني) رسولُ الله صلى الله عليه وسلم في حجة الوداع، من وجعٍ أشفيتُ (قاربتُ) منه على الموت، فقلتُ: يا رسول الله! بلغني ما ترى من الوجع، وأنا ذو مالٍ، ولا يرثني إلا ابنة لي واحدة، أفأتصدقُ بثلثيْ مالي؟ قال: لا، قلتُ: أفأتصدقُ بشطرِه (نصفه)؟ قال: لا، الثلثُ، والثلثُ كثير، إنك إن تذَرَ ورثتكَ أغنياءَ، خيرٌ من أن تذَرَهم (تتركهم) عالةً (فقراء) يتكففون (يسألون) الناسَ، ولستَ تنفقُ نفقةً تبتغي بها وجه الله، إلا أُجِرْتَ بها، حتى اللقمةَ تجعلُها في فِي (فم) امرأتِك

ஸஃது பின் அபீ வக்காஸ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் ; இறுதி ஹஜ் நடந்த வருடம் எனக்கு கடுமையான வலி இருந்த போது என்னை நலம் விசாரிக்க நபியவர்கள் என்னிடத்திலே வந்தார்கள்.

அப்போது இறைத்தூதர் அவர்களே நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிற வலி எனக்கு ஏற்பட்ட நிலையில் நான் இருக்கிறேன். நான் பொருள் உடையவன். ஒரு மகளைத் தவிர வேறு வாரிசு எனக்கு இல்லை. எனவே நான் என் சொத்தில் மூன்றில் இரண்டு பகுதியை தர்மம் செய்யலாமா என்று கேட்டேன். கூடாது என்று நபியவர்கள் கூறினார்கள். பாதியைக் கொடுக்கலாமா என்று நான் கேட்ட போது, அப்போதும் கூடாது என்று கூறினார்கள். மூன்றில் ஒரு பங்கைக் கொடுக்கலாமா என்று கேட்டேன். மூன்றில் ஒரு பங்கைக் கொடுக்கலாம். மூன்றில் ஒரு பங்கே அதிகம் தான். நிச்சயமாக நீ உன் வாரிசுகளை பணக்காரர்களாக விட்டுச் செல்வது மக்களிடம் யாசகம் கேட்கும் நிலையில் அவர்களை நீ விட்டுச் செல்வதை விட சிறந்ததாகும். உன் மனைவியின் வாயில் நீ வைக்கின்ற ஒரு பிடி உணவு உட்பட அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி நீ செய்கின்ற ஒவ்வொரு செலவுக்கு நிச்சயம் கூலி உண்டு. (புகாரி ; 1925)

பொதுவாக சதக்கா செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஒருவர் தன் பொருளாதாரத்தைக் கொண்டு வந்தால் நபியவர்கள் அவ்வாறு வருபவர்கள் எல்லோரிடத்திலும் ஒரே மாதிரி நடந்து கொள்வதில்லை. சிலரிடமிருந்து அந்த ஸதகாவை ஏற்றுக் கொள்வார்கள். சிலரிடமிருந்து அதை ஏற்றுக்கொள்ள மறுத்து விடுவார்கள். தபூக் போரின் போது அபூபக்கர் ரலி அவர்கள் தன் வீட்டிலிருந்து எல்லா பொருட்களையும் எடுத்து வந்து நபியிடத்தில் சமர்ப்பித்த போது, அவர்களது வீட்டில் எதுவும் இல்லை, எல்லாவற்றையும் கொண்டு வந்து விட்டார்கள் என்பதை தெரிந்து கொண்டும் அதை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் இன்னொரு சமயத்தில் ஒரு மனிதர் தங்கக் கட்டி ஒன்றை ஸதகா செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நபியிடத்தில் வந்து ஒப்படைத்த பொழுது அதை ஏற்க மறுத்து முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். மறுபடியும் வந்த போதும் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். மூன்றாவது முறை வந்த போது நபியவர்கள் அதை எடுத்து கோபத்தில் தூக்கி எறிந்து விட்டு உங்களில் ஒருவர் அனைத்தையும் சதகா செய்ய வேண்டும் என்று நாடுகிறார். ஸதகா செய்து விட்டு பின்பு பிறரிடத்தில் தேவையாகிறார் என்று எச்சரிக்கை செய்தார்கள்.

ஏன் ஒரு வருடத்தில் ஏற்றுக்கொண்டு இன்னொருவரிடத்தில் நிராகரிக்கிறார்கள் என்றால், எல்லோருடைய ஈமானும் நம்பிக்கையும் ஒரே மாதிரி அல்ல. அபூபக்கர் ரலி அவர்களுக்கு இருந்த இந்த பலமான ஈமானும் நம்பிக்கையும் இவருக்கு இல்லை. வீட்டில் எதையும் மிச்சம் வைக்காமல் அனைத்தையும் கொண்டு வந்து கொடுத்த போதும் அபுபக்கர் ரலி அவர்கள் அதனால் பிறரிடத்தில் தேவையாக மாட்டார்கள். அதை முழுமையாக ஏற்றுக் கொள்வார்கள். பொறுமை கொள்வார்கள். அந்த மனோநிலையும் மனோ பக்குவமும் அபூபக்கர் ரலி அவர்களுக்கு இருந்தது. அதனால் அதை ஏற்றுக் கொண்டார்கள். அவர்களுக்கு இருக்கிற அதே ஈமானும் இறை நம்பிக்கையும் இவருக்கு நிச்சயம் இருக்காது. எனவே தான் இவரிடத்திலிருந்து அந்தப் பொருளை ஏற்க மறுத்து விட்டார்கள்.

இந்த ஹதீஸில் என் பொருளில் மூன்றில் இரண்டு பகுதியை ஸதகா செய்ய வேண்டும் என்று சொன்ன பொழுது மறுத்தார்கள். இரண்டில் ஒரு பகுதியை ஸதகா செய்ய வேண்டும் என்று சொன்ன பொழுதும் மறுத்தார்கள். மூன்றில் ஒரு பகுதியை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று அனுமதி தந்தார்கள். ஏனென்றால், பொதுவாக ஒருவர் மரண நேரத்தில் பிறருக்கு வசிய்யத் செய்ய விரும்பினால் தன்னுடைய பொருளில் மூன்றில் ஒரு பகுதியை மட்டும் தான் வசிய்யத் செய்வதற்கு அனுமதி உண்டு. ஏனென்றால் ஒருவர் இறந்த பிறகு அவருடைய சொத்து அவருடைய வாரிசுகளுக்கு சொந்தமானது. அவர்களுக்கு எதையும் விட்டு வைக்காமல் முழுவதையும் வசிய்யத் செய்து விட்டால் அது வாரிசுகளுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய அநீதியாகும். எனவே தான்  நன்மையை சம்பாதிக்க வேண்டும். அதே நேரத்தில் தனக்கு பின்னால் இருக்கின்ற தன் வாரிசுகளுக்கும் கொடுக்க வேண்டும். அவர்களின் எதிர்காலமும் பிரகாசமாக இருக்க வேண்டும் என்கின்ற தூரநோக்கு கண்ணோட்டத்தோடு இஸ்லாம் இந்த சட்டத்தை நமக்கு வகுத்துக் கொடுத்திருக்கிறது.

وإنك لن تنفق نفقة تبتغي بها وجه الله إلا أُجرتَ عليها، حتى ما تجعل في فيّ امرأتك،

உன் மனைவியின் வாயில் நீ வைக்கின்ற ஒரு பிடி உணவு உட்பட அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி நீ செய்கின்ற ஒவ்வொரு செலவுக்கு நிச்சயம் கூலி உண்டு.

மனைவிக்கு உணவை ஊட்டி விடுதல் என்பது மனைவியின் மீது அன்பு கொண்டவர்கள் இயற்கையாக செய்யக்கூடிய ஒரு விஷயம். நல்ல நிய்யத்தினால் அதுவும் நன்மை என்று நபியவர்கள் கூறுகிறார்கள். சாதாரணமாக நாம் இயற்கையாக எதை செய்வோமோ அதுவும் கூட நல்ல எண்ணத்தோடு செய்தால் நன்மையாகி விடும் என்பதைக் காட்டுகிறது.

 

 

No comments:

Post a Comment