Wednesday, September 15, 2021

ஹதீஸ் எண் ; 3- لا هجرة بعد الفتح

 

عن عائشة رضي الله عنها قالت: قال النبي صلى الله عليه وسلم «لَا هِجْرَةَ بَعْدَ الْفَتْحِ، وَلَكِنْ جِهَادٌ وَنِيَّةٌ، وَإِذَا اسْتُنْفِرْتُمْ فَانْفِرُوا». متفق عليه

மக்கா வெற்றிக்குப் பிறகு ஹிஜ்ரத் என்பது கிடையாது. என்றாலும் அல்லாவின் பாதையில் போர் புரிவதும் தூய எண்ணமும் இருக்கிறது. போருக்காக நீங்கள் அழைக்கப்பட்டால் போருக்கு நீங்கள் கிளம்பி விடுங்கள். (புகாரி ; 4312)

 

ஹிஜ்ரத் என்பதற்கு இரண்டு பொருள் தரப்படுகிறது. அதனுடைய முதல் பொருள் அல்லாஹ் தடுத்ததை வெறுத்து விட்டு விடுவது.

الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ، وَالْمُهَاجِرُ مَنْ هَجَرَ مَا نَهَى اللَّهُ عَنْهُ

யாருடைய நாவு மற்றும் கரத்தினுடைய தீங்கிலிருந்து பிற முஸ்லிம்கள் நிம்மதியாக இருக்கிறார்களா அவரே உண்மையான முஸ்லிம். யார் அல்லாஹ் தடுத்த விஷயத்தை மனதால் வெறுத்து விட்டு விடுகின்றாரோ அவரே ஹிஜ்ரத் செய்யக்கூடியவர் ஆவார். (புகாரி ; 6484)

ஹிஜ்ரத் என்ற வார்த்தையின் இரண்டாவது பொருள் ;  ஒரு ஊரில் இறை நிராகரிப்பும் நிராகரிப்பாளர்களும் நிறைந்திருந்தது அங்கே ஈமானைப் பாதுகாப்பதும் இஸ்லாத்தை நிலை நிறுத்துவதும் மார்க்கத்தின் கடமைகளை செய்வதும் சிரமமாக இருந்தால் அதற்கான சூழ்நிலை இருக்கக்கூடிய இன்னொரு ஊருக்கு இடம் பெயர்ந்து செல்வதற்கு ஹிஜ்ரத் என்று சொல்லப்படும்.

لا تَنْقَطِعُ الْهِجْرَةُ حَتَّى تَنْقَطِعَ التَّوْبَةُ، وَلَا تَنْقَطِعُ التَّوْبَةُ حَتَّى تَخْرُجَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا

தவ்பா முடியும் வரை ஹிஜ்ரத் முடியாது. சூரியன் மேற்கிலிருந்து உதயமாகும் வரை தவ்பா என்பது முடியாது. (ஸஹீஹுல் ஜாமிவு ; 7469)

இந்த நபிமொழியில் ஹிஜ்ரத் என்பது கியாமத் வரைக்கும் நீடிக்கும் என்று வந்துள்ளது. மேலே வாசித்த முதல் ஹதீஸில் மக்காவின் வெற்றிக்கு பிறகு ஹிஜ்ரத் இல்லை என்று வந்திருக்கிறது.இந்த ஹதீஸ்களுக்கு விளக்கம் தரும் அறிஞர்கள், மக்கா வெற்றிக்குப் பிறகு ஹிஜ்ரத் இல்லை என்பது, அது பொதுவானதல்ல. மாறாக மக்காவிலிருந்து ஹிஜ்ரத் என்பது இல்லை என்பது அதனுடைய பொருள் ஆகும். ஏனென்றால் ஆரம்பத்தில் நபியவர்களுக்கு நபித்துவம் கிடைத்ததிலிருந்து 13 ஆண்டுகள் மக்காவில் இருக்கின்ற வரை எதிரிகளால் நபியவர்களும் அவர்களோடு சேர்ந்த இஸ்லாமியர்களும் எண்ணற்ற துன்பங்களையும் இன்னல்களையும் கொடுமைகளையும் சந்தித்தார்கள். ஈமானை பாதுகாப்பதும் இஸ்லாத்தை நிலை நிறுத்துவதும் அல்லாஹ்வை வணங்குவதும் மிகவும் சிரமமாக இருந்தது. ஒரு கட்டத்தில் அவர்களது உயிருக்கு ஆபத்து என்கின்ற நிலை வருகின்ற பொழுது அல்லாஹ் அங்கிருந்து மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் செய்யும்படி உத்தர விட்டான். நபியவர்கள் அவர்களோடு இருந்த இஸ்லாமியர்களோடு மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்டார்கள். அங்கே சென்று எட்டு ஆண்டுகளில் ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு மக்கா வெற்றி கொள்ளப்பட்டது. அதுவரை எதிரிகளின் பிடியிலிருந்த மக்கா அப்போது நபியவர்களின் அதிகாரத்திற்குள் வந்தது. மக்கா எப்போது வெற்றி கொள்ளப்பட்டதோ, எப்போது மக்காவின் ஆட்சி அதிகாரம் இஸ்லாமியர்களின் கரத்தில் வந்ததோ அதற்குப் பிறகு அது நிம்மதியான பூமியாக ஆகி விட்டது. அதனால் அங்கிருந்து ஹிஜ்ரத் செய்ய வேண்டிய தேவையும் அவசியமும் இனி இல்லை. எனவே தான் நபியவர்கள் அந்த ஹதீஸில் மக்காவின் வெற்றிக்குப் பிறகு ஹிஜ்ரத் இல்லை என்றார்கள்.

மக்காவின் வெற்றிக்கு பிறகு ஹிஜ்ரத் இல்லை என்று சொன்ன நபியின் வார்த்தையிலிருந்து இனி கியாமத் வரை மக்கா இஸ்லாமியர்களின் கரத்தில் தான் இருக்கும். நிம்மதியான பூமியாகத் தான் இருக்கும். கியாமத் வரை வருகின்ற இஸ்லாமியர்கள் மக்காவினுள் நிம்மதியாக அல்லாஹ்வை தொழவும் வணங்கவும் ஈமானைப் பாதுகாக்கவும் முடியும் என்கின்ற சுபச் செய்தியும் இந்த வார்த்தையில் இருக்கிறது.

ஹிஜ்ரத்தின் சட்டம் மூன்றாக பிரிக்கப்படுகிறது. 1, ஒரு ஊரில் ஒருவருக்கு ஈமானைப் பாதுகாக்க முடியவில்லை. நிம்மதியாக அல்லாஹ்வின் கடமைகளை செய்வதற்கு முடிய வில்லை. ஹிஜ்ரத் செய்வதற்கும் ஆற்றல் அவருக்கு இருக்கிறது என்றால், அங்கிருந்து ஹிஜ்ரத் செய்வது அவருக்கு கடமை ஆகி விடும்.

2, ஒரு ஊரில் ஒருவருக்கு ஈமானைப் பாதுகாப்பதிலும் இஸ்லாமியக் கடமைகளை நிலை நிறுத்துவதிலும் எவ்வித சிரமமும் இல்லை. இருந்தாலும் அங்கே குற்றங்கள் பெருகிப் போயிருக்கிறது. எதிரிகளின் சூழ்ச்சியும் நிகழ்ந்திருக்கிறது. இஸ்லாமியர்களின் எண்ணிக்கையும் மிக சொற்பமாக இருக்கிறது. ஆனால் வேறொரு ஊரில் இஸ்லாமியர்கள் நிறைந்திருக்கிற காரணத்தினால் அங்கே இவருக்கு உதவி ஏற்படும். அரவணைப்பும் கிடைக்கும் என்பதோடு ஹிஜ்ரத் செய்வதற்கும் இவருக்கு சக்தி இருக்கிறது என்றால், இவர் அங்கிருந்து ஹிஜ்ரத் செய்வது முஸ்தஹப்பாகும்.

3, யாருக்கு ஹிஜ்ரத் செய்வதற்கு சக்தியும் ஆற்றலும் இல்லையோ அவர் அதே ஊரில் இருந்து கொள்வதற்கும் அனுமதி உண்டு.

தற்போது உள்ள சூழ்நிலையில் நாம் வாழக்கூடிய இந்த பூமியில் நமக்கு ஹிஜ்ரத் செய்ய வேண்டிய தேவை ஏற்பட வில்லை. இருந்தாலும் அந்த ஹிஜ்ரத்தின் முதல் பொருளாக இருக்கக்கூடிய அல்லாஹ் தடுத்த விஷயங்களை மனதால் வெறுத்து விடுதல் என்ற ஹிஜ்ரத்தை நாம் அனைவரும் மேற்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment