Thursday, October 14, 2021

ஹதீீஸ் எண் 40 لا يتمنين احدكم الموت

 

فعن أنس -رضي الله تعالى عنه- قال: قال رسول الله -صلى الله عليه وسلم-: ((لا يتمنينّ أحدكم الموت لضُر أصابه، فإن كان لابدّ فاعلاً فليقل: اللهم أحيني ما كانت الحياة خيراً لي، وتوفني إذا كانت الوفاة خيراً لي))([1]) متفق عليه

உங்களில் ஒருவர் தனக்கு ஏற்பட்ட சோதனைக்காக மரணத்தை ஆசைப்பட வேண்டாம். அப்படி ஒருவேளை அவர் செய்வதாக இருந்தால், இறைவா உயிரோடு இருப்பது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை வாழச் செய்வாயாக. மரணிப்பது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை மரணிக்கச் செய்வாயாக என்று கூறட்டும். (புகாரி ; 5671)

மரணிக்க வேண்டும் என்று ஆசைப்பட வேண்டாம். மரணத்தை இறைவனிடத்தில் கேட்க வேண்டாம் என்று சொன்னதற்கு மிக முக்கியமாக மூன்று காரணங்கள் உண்டு. ஒன்றாவது அமல்களை அதிகப்படுத்திக் கொள்வதற்காக.

أن خير الناس من طال عمره وحسن عمله

யார் நீளமான ஆயுள் காலத்தைப் பெற்று அவருடைய அமலும் நல்லதாக இருக்கிறதோ அவரே மக்களில் சிறந்தவர் என்று நபி ஸல் அவர்கள் சொன்னார்கள்.

எனவே ஆயுட்காலம் அதிகமாக இருந்தால் தான் அதிகம் அமல் செய்ய முடியும். விரைவாக மரணித்து விட்டால் செய்ய வேண்டிய அமல்களை செய்ய முடியாமல் போய் விடும். எனவே தான் மரணத்தை விரும்பக் கூடாது என்று சொல்லப்படுகிறது.

இரண்டாவது, தவ்பா செய்ய வேண்டும் என்பதற்காக. எத்தனையோ பாவங்களை செய்து கொண்டிருக்கிறோம். பாவங்களிலேயே நாம் மூழ்கிக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் இறைவனை தூய்மையாக சந்திக்க வேண்டும் என்றால் அல்லாஹ்விடம் தவ்பா செய்ய வேண்டும். ஆயுட்காலம் நீளமாக இருந்தால் தான் தவ்பா செய்வதற்கான அவகாசம் நமக்கு கிடைக்கும்.

மூன்றாவது சோதனைகளின் போது பொறுமையாக இருந்தால் தான் அல்லாஹ்விடத்தில் நன்மையையும் உயர்ந்த அந்தஸ்தையும் பெற்றுக் கொள்ள முடியும். பொறுமையிழந்து அல்லாஹ்விடத்தில் மரணத்தைக் கேட்டு அந்த மரணம் நம்மை அடைந்து விட்டால் பொறுமைக்கு கிடைக்க வேண்டிய நன்மையும் உயர் அந்தஸ்தும் கிடைக்காமல் போய் விடும். இந்த மூன்று காரணங்களுக்காகத்தான் சோதனையின் போது மரணத்தை விரும்பக் கூடாது என்று இஸ்லாம் சொல்கிறது.

இன்றைக்கு குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை என்றாலோ கணவன் மனைவிக்கு இடையில் ஏதாவது தகராறு என்றாலோ கடன் சுமை என்றாலோ சிலர் உடனே தற்கொலைக்கு முயலுகிறார்கள். அவ்வாறு தற்கொலை செய்து கொள்பவர்கள் உண்மையில் மார்க்கத்தை சரியாக புரிந்து கொள்ளாத முட்டாள்கள் என்று தான் சொல்ல வேண்டும். இங்கே சந்திக்கின்ற சிறிய பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் அந்த முடிவைத் தேடி செல்பவர்கள் மறுமையில் ஏற்படுகின்ற வேதனையை எப்படித் தாங்கிக் கொள்வார்கள். எதைக் கொண்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்டாரா அதே வேதனை அவருக்கு நரகத்தில் நிரந்தரமாக தரப்படும் என்பது ஹதீஸின் கருத்தாக இருக்கிறது. இதை புரியாதவர்கள் தான் தற்கொலை என்ற முடிவுக்கு செல்வார்கள்.

இங்கே நமக்கு ஒரு கேள்வி வருகிறது. மரணத்தை ஆசைப்படக்கூடாது மரணத்தை விடக் கூடாது என்று இந்த ஹதீஸ் சொல்கிறது. ஆனால் நபி ஸல் அவர்களின் அறுபத்து மூன்றாம் வயதில் அவர்களின் ஆயுள் காலம் முடிகின்ற அந்த வேளையில் நீங்கள் இதற்குப் பிறகு வாழ விரும்புகிறீர்களா அல்லது மரணிக்க விரும்புகின்றீர்களா என்று இறைவன் கேட்ட போது,, நான் மரணிக்கவே விரும்புகிறேன் என்று சொல்லி அதையே தேர்வு செய்தார்கள். அதேபோன்று இமாம் அஹ்மத் அவர்கள் என் உயிர் மட்டும் என் கைவசம் இருந்திருந்தால் என் உடம்பை விட்டும் அதை நான் விடுவித்திருப்பேன் என்று சொன்னார்கள். அதேபோன்று

فقد ذكرابن جرير الطبري في تاريخه وابن كثير في البداية والنهاية وغيرهما من المؤرخين أن خالداً رضي الله عنه كتب إلى ملك فارس: بسم الله الرحمن الرحيم، من خالد بن الوليد إلى ملوك فارس، فالحمد لله الذي حل نظامكم ووهن كيدكم، وفرق كلمتكم... فأسلموا وإلا فأدوا الجزية وإلا فقد جئتكم بقوم يحبون الموت كما تحبون الحياة. 

பாரசீகத்தை நோக்கி ஒரு படையை அனுப்பி வைக்கிற போது காலித் ரலி அவர்கள், நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். அல்லது வரியை செலுத்துங்கள். இல்லையென்றால் நான் ஒரு படையை உங்களிடத்தில் அனுப்பி வைத்திருக்கிறேன். நீங்கள் வாழ்க்கையை விரும்புவதைப் போல் அவர்கள் மரணத்தை விரும்புவார்கள் என்று அதில் எழுதி இருந்தார்கள். எனவே நபி ஸல் அவர்கள் மரணத்தை விரும்பி தேர்வு செய்ததும் அஹமத் இமாம் அவர்கள் அவ்வாறு சொன்னதும் காலித் ரலி அவர்கள் இவ்வாறு எழுதியதும் மேற்குறிப்பிட்ட ஹதீஸுக்கு முரணாக இருக்கிறதே என்ற கேள்வி வருகிறது.

பதில்  ; மேலே குறிப்பிட்ட ஹதீஸில் தனக்கு ஏற்பட்ட சோதனைக்காகவும் அந்த சோதனையில் பொறுமை கொள்வதற்கு முடியாமலும் மணத்தைத் தேடுவது தான் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் நபியவர்கள் தனக்கு ஏற்பட்ட சோதனைக்காக மரணத்தைத் தேர்வு செய்ய வில்லை. இறைவனை சந்திக்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு தேர்வு செய்தார்கள். அதேபோன்று அஹ்மத் இமாமவர்கள் தன் உடம்பில் ஏற்பட்ட சோதனைக்காக அவ்வாறு கூறவில்லை. மார்க்கத்திலே ஏற்பட்ட சோதனைக்காகவும் தீனில் ஏற்பட்ட குழப்பத்திற்காகவும் தான் அவ்வாறு அந்த வார்த்தையை சொன்னார்கள். அதேபோன்று காலித் ரலி அவர்கள் அவ்வாறு சொன்னதற்கான பொருள், நான் அனுப்பிய இந்த கூட்டம் மரணத்தை பயந்த கூட்டமல்ல. எப்போதும் மரணத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொண்ட ஒரு கூட்டம் என்பதாகும்.

No comments:

Post a Comment