Sunday, October 24, 2021

ஹதீஸ் எண் 44 بارك الله لكما في ليلتكما

 

عن أنس -رضي الله عنه- قال: كان ابن لأبي طلحة -رضي الله عنه- يشتكي، فخرج أبو طلحة، فَقُبِضَ الصَّبي، فلما رجع أبو طلحة، قال: ما فعل ابني؟ قالت أم سليم وهي أم الصَّبي: هو أسْكَن ما كان، فَقَرَّبَت إليه العشاء فتَعَشَّى، ثم أصاب منها، فلما فَرَغ،َ قالت: وارُوا الصَّبي فلما أصبح أبو طلحة أتى رسول الله -صلى الله عليه وسلم- فأخبره، فقال:«أعَرَّسْتُمُ اللَّيلَةَ؟» قال: نعم، قال: «اللَّهُمَّ بارِك لهما»، فولدت غلامًا، فقال لي أبو طلحة: احْمِلْهُ حتى تأتي به النبي -صلى الله عليه وسلم- وبعث معه بتمرات، فقال: «أمَعَه شيء؟» قال: نعم، تَمَرات، فأخذها النبي -صلى الله عليه وسلم- فمَضَغَها، ثم أخذها من فِيه فجعلها في فِيِّ الصَّبي، ثم حَنَّكَهُ وسماه عبد الله. وفي رواية: قال ابن عيينة: فقال رجل من الأنصار: فرأيت تِسْعَة أولاد كلهم قد قرؤوا القرآن، يعني: من أولاد عبد الله المولود

அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அபூதல்ஹா(ரலி) அவர்களின் மகன் ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். அபூதல்ஹா அவர்கள் (ஏதோ ஒரு பணிக்காக) வெளியே சென்றிருந்தார்கள். அப்பொழுது அந்தச் சிறுவர் மரணம் அடைந்தார். அபூதல்ஹா திரும்பி வந்தபொழுது கேட்டார்கள்: என் மகனின் நிலை என்ன?’ அதற்கு அவர் முன்னைவிடவும் மிக அமைதியாக இருக்கிறார்என்று சிறுவரின் தாயாராகிய உம்மு ஸுலைம்(ரலி) அவர்கள் சொன்னார்கள்;. பிறகு இரவு உணவை அவர்கள் முன்னால் வைத்தார்கள். அபூ தல்ஹா(ரலி) அவர்கள் உணவு உட்கொண்டார்கள். பிறகு மனைவியுடன் தாம்பத்திய உறவும் கொண்டார்கள். அவர்கள் ஓய்வு பெற்றபொழுது உம்மு ஸுலைம் சொன்னார்கள்:எல்லோரும் சிறுவனை அடக்கம் செய்யுங்கள்!பொழுது விடிந்ததும் அபூதல்ஹா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடம் செய்தி சொன்னார்கள். நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள்:இன்று இரவு நீங்கள் வீடு கூடினீர்களா?’ அதற்கு அபூ தல்ஹா ஆம் என்றார்கள். அப்பொழுது நபி(ஸல்) அவர்கள், ‘யா அல்லாஹ்! இவ்விருவருக்கும் அருள்பாக்கியம் புரியாயாக! என்று பிரார்த்தனை செய்தார்கள் அவ்வாறே உம்மு ஸுலைம் அவர்கள் ஓர் ஆண் மகனைப் பெற்றெடுத்தார்கள்.

அனஸ்(ரலி)அவர்கள் கூறுகிறார்கள்:அபூ தல்ஹா அவர்கள் என்னிடம் குழந்தையைத் தூக்கிக்கொண்டு நபி(ஸல்)அவர்களிடம் செல்லும்என்று சொன்னார்கள்! அதனுடன் சில பேரீத்தம் பழங்களையும் அனுப்பினார்கள். நபி(ஸல்)அவர்கள் ஏதேனும் உண்டா, அதனிடம்? என்று கேட்டார்கள். ஆம்! பேரீத்தம்பழங்கள் உள்ளனஎன்று சொன்னார்கள் அபூதல்ஹா. அவற்றை எடுத்துத் தங்கள் வாயில் போட்டு மென்றார்கள் நபியவர்கள். பிறகு தங்கள் வாயிலிருந்து எடுத்து குழந்தையின் வாயில் வைத்தார்கள். பிறகு அதை அதன் மேல் வாயிலும் இரு உட்பகுதிகளிலும் தடவினார்கள். அக்குழந்தைக்கு அப்துல்லாஹ் என்று பெயரிட்டார்கள்’ (புகாரி ; 1301)

 

புகாரியின் மற்றோர் அறிவிப்பில் வருகிறது: இப்னு உயைனா (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்: அன்ஸார்களில் ஒருவர் என்னிடம் சொன்னார்: நான் ஒன்பது பிள்ளைகளைப் பார்த்துள்ளேன். அனைவரும் குர்ஆனை கற்றறிந்த அறிஞராகத் திகழ்ந்தார்கள். அதாவது அந்த ஒன்பது பேரும் (உம்மு ஸுலைமுக்கு பிறந்த) இந்த அப்துல்லாஹ்வின் பிள்ளைகளே!

இந்த நிகழ்வின் மூலம் உம்மு சுலைம் ரலி அவர்கள் மனசாட்சி இல்லாமல் இரக்கமில்லாமல் நடந்து கொண்டார்கள் என்று யாரும் விளங்கிக் கொள்ளக் கூடாது. மரணம், வாழ்க்கை அனைத்தையும் தருவது இறைவன். அவன் பொறுப்பில் இருக்கிறது. அவனுடைய அதிகாரத்திற்கு உட்பட்டது. நினைப்பவர் களுக்கு அல்லாஹ் வாழ்க்கைத் தருகிறான். அவன் நாடியவர்களுக்கு மரணத்தையும் தருகிறான். அவன் கொடுத்ததை எப்போது வேண்டுமானாலும் திருப்பி எடுத்துக் கொள்வதற்கான உரிமை அவனுக்கு உண்டு. அவ்வாறு அவன் எடுத்துக் கொள்கின்ற போது அதை முழுமனதோடு கொடுப்பதற்கும் நாம் முன் வர வேண்டும். அது தான் உண்மையான இறை நம்பிக்கையாகும். அது தான் அவர்களிடத்திலே வெளிப்பட்டது.

அந்த தன்மை யார் இறைவனை பொருந்திக் கொள்கிறார்களோ அவர்களுக்குத் தான் இருக்கும். இறைவன் எதை செய்தாலும் பொறுத்துக் கொள்கிற, அதை ஏற்றுக் கொள்கிற மனநிலையில் இருப்பவர்களுக்குத் தான் அந்த தன்மை இருக்கும். மட்டுமல்ல உலகத்திலேயே தனக்கு மிகவும் பிரியமான வரை இறைவன் அழைத்துக் கொள்கிற போது யார் பொறுமையோடும் நன்மையை எதிர் பார்த்தும் அதை பொருந்திக் கொள்கிறாரோ அவருக்கு கிடைக்கின்ற கூலி சொர்க்கம் என்பது நபியினுடைய வாக்குறுதியாக இருக்கிறது. எனவே தான் அவர்கள் அதை பொறுமையோடு ஏற்றுக் கொண்டார்கள். அதேபோன்று அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் எந்த குறையும் ஏற்படாமல் அவர்கள் பார்த்துக் கொண்டார்கள். தனக்குள் இருக்கிற சோகத்தையும் மறைத்துக்கொண்டு கணவனுக்கு செய்ய வேண்டிய எல்லா கடமைகளையும் முழுமையான முறையில் நிறைவேற்றினார்கள். அதனால் தான் அவ்வாறு நடந்து கொண்ட உம்மு ஸுலைம் ரலி அவர்களுக்காக நபியவர்கள் விசேஷமாக துஆச் செய்தார்கள்.

 

மகன் எப்படி இருக்கிறான் என்று அபூ தல்ஹா ரலி அவர்கள் கேட்ட போது அவன் முன்பு இருந்ததை விட அமைதியாக இருக்கிறான் என்று உம்மு சுலைம் ரலி அவர்கள் சொன்னது அது பொய்யைப் போன்று தெரிகிறது. பொய் என்பது இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஒரு விஷயம். இறை நம்பிக்கைக்கு எதிரான விஷயம். உண்மையான முஃமின் பொய் சொல்ல மாட்டான் என்பது நபிமொழியாகும்.

அப்படி இருக்க ஏன் அவர்கள் அவ்வாறு கூறினார்கள் என்ற கேள்வி நமக்கு எழலாம். அவர்கள் அவ்வாறு சொன்னது அது பொய்யல்ல இதற்கு மார்க்கம் தவ்ரியா என்று பெயர் சொல்லுகிறது. தவரியா என்றால் ஒரு விஷயத்திற்கு இரண்டு பொருள் இருக்கும். அதை சொல்பவர் ஒரு நோக்கத்தில் சொல்வார். கேட்பவர் வேறொரு கருத்தை அதிலிருந்து புரிந்து கொள்வார். இவ்வாறு சொல்வதற்கு தவ்ரியா என்று மார்க்கம் பெயர் கொடுத்திருக்கிறது.

இக்கட்டான சூழ்நிலைகளில் ஒரு நன்மைக்காக அல்லது தனக்கு வரவிருக்கும் ஆபத்தை தடுத்துக் கொள்வதற்காக மட்டும் இவ்வாறு செய்வதற்கு இஸ்லாம் அனுமதித்திருக்கிறது. அந்த வகையில் தான் உம்முசுலைம் ரலி அவர்கள் அவ்வாறு குறிப்பிட்டார்கள். முன்பை விட அமைதியாக இருக்கிறான் என்பதற்கு பொருள் மவ்த்தாகி விட்டான் எந்த அர்த்தம். மவ்த்தாகி விட்டால் அமைதியாகத்தான் இருக்கும். எனவே அவர்கள் அந்த எண்ணத்தில் தான் அந்த வார்த்தையை சொன்னார்கள். ஆனால் அதைக் கேட்ட அபூ தல்ஹா ரலி அவர்கள் ஏற்கனவே இருந்த நோய் குணமாகி அதிலிருந்து அவர் சுகம் பெற்று விட்டார் என்று விளங்கிக் கொண்டார்கள்.

உம்மு ஸுலைம் ரலி அவர்களின் மேலான பொறுமையை இந்த ஹதீஸிலிருந்து நாம் அறிய முடிகிறது. சாதாரணமாக தான் பெற்றெடுத்த ஒரு குழந்தைக்கு ஏதாவது நோய் என்றாலும் தாய்மார்கள் பதறிப் போய் விடுவார்கள். என்ன செய்வதென்று தெரியாது திகைத்துப் போவார்கள். மகனுக்கு ஏற்பட்ட அந்த நிகழ்வை நினைத்து அவர்கள் ஒழுங்காக சாப்பிட மாட்டார்கள். குடிக்க மாட்டார்கள். தூங்க மாட்டார்கள். கணவனிடத்தில் மகிழ்ச்சியாக நடந்து கொள்ள மாட்டார்கள். ஆனால் இங்கே அவர்களது மகன் இறந்து போயிருக்கிறான். அந்த சூழ்நிலையிலும் கூட தன் சோகத்தை வெளிப்படுத்தாமல் கணவனிடத்தில் சகஜமாக நடந்து கொண்ட விதம் அவர்களது உச்சபட்சமான பொறுமையை வெளிப்படுத்திக் காட்டுகிறது.

No comments:

Post a Comment