Monday, October 25, 2021

ஹதீஸ் எண் 55 دع ما يريبك

 

عَنْ أَبِي مُحَمَّدٍ الْحَسَنِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُمَا، قَالَ: حَفِظْتُ مِنْ رَسُول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعْ مَا يَرِيبُكَ إِلَى مَا لَا يَرِيبُكَ؛ فَإِنَّ الصِّدْقَ طُمَأْنِينَةٌ، وَالْكَذِبَ رِيبَةٌ»[1]؛ رواه الترمذي

உனக்கு சந்தேகமானதை விட்டு விட்டு உனக்கு சந்தேகம் இல்லாததின் பக்கம் நீ செல். நிச்சயமாக உண்மை என்பது அமைதியைத் தரும். பொய் என்பது சந்தேகத்தை ஏற்படுத்தும். (திர்மிதி ; 2518)

பேணுதலான, தூய்மையான வாழ்க்கையின் அடிப்படை இந்த ஹதீஸில் உணர்த்தப்படுகிறது. சந்தேகமானதை செய்யாமல் விட்டு விடுவது தான் பேணுதலின் அடிப்படையாகும். ஒரு உணவு, அது ஆகுமானதா இல்லையா என்கிற சந்தேகம் வந்து விட்டால் அதை உண்ணக்கூடாது. ஒரு பொருள் நமக்கு ஆகுமாதா இல்லையா என்பதில் ஐயம் இருந்தால் அதை பயன் படுத்தக் கூடாது. சந்தேகமானதை விட்டு விட வேண்டும். சந்தேகத்தை தெளிவுபடுத்தி விட வேண்டும்.

ஒரு ஆடையில் அசுத்தம் பட்டு விட்டது. கீழ் பகுதியிலும் பட்டிருக்கிறது. மேல் பகுதியிலும் பட்டிருக்கிறது. அதன் கீழ்ப்பகுதியில் பட்டது நமக்கு உறுதியாக தெரிகிறது மேல் பகுதியில் அசுத்தம் பட்டதா இல்லையா என்பதில் நமக்கு ஐயம் இருக்கிறது என்றால், இரண்டையும் கழுவுவது தான் பேணுதலாக இருக்கும்.

ஒருவர் தொழுகையின் இடையில் இரண்டு ரக்கஅத் தொழுது இருக்கிறோமா அல்லது மூன்று ரக்கஅத் தொழுது இருக்கிறோமா என்பதில் சந்தேகம் எழுந்தால் இரண்டாக அதை கணக்கிட்டு விட்டு மீதி உள்ளதை பூர்த்தி செய்ய வேண்டும். ஏனென்றால் இரண்டு ரக்கஅத் தொழுதது உறுதியாக இருக்கிற காரணத்தினால் அதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மார்க்கம் நமக்கு சட்டம் வகுத்துக் கொடுத்திருக்கிறது.

சந்தேகமானதை விட்டு விட வேண்டும் என்று ஏன் மார்க்கம் சொல்கிறது என்றால், அது நம்மை ஹராமில் கொண்டு போய் விட்டு விடும். ஹராமான பொருள் நம் உடம்புக்குள் போய் விட்டால் அதன் மூலம் நம்முடைய பிரார்த்தனைகள் இறைவனிடத்தில் அங்கீகரிக்கப்படாமல் போய் விடும். எனவே அதில் மிக மிக கவனம் தேவை.

كان لأبي بكر الصديق - رضي الله عنه - غلام يخرج له الخراج، وكان أبو بكر يأكل من خراجه، فجاء يومًا بشيء فأكل منه أبو بكر، فقال له الغلام: تدري ما هذا؟ فقال أبو بكر: وما هو؟ فقال: كنت تكهنت لإنسان في الجاهلية، وما أحسن الكهانة، إلا أني خدعته، فلقيني فأعطاني لذلك هذا الذي أكلتَ منه، فأدخل أبو بكر يده، فقاءَ كل شيء في بطنه

ஹஜரத் அபூபக்கர் சித்திக் ரலி அவர்களுக்கு அடிமை ஒருவர் இருந்தார். சில நேரங்களில் அவர் எதையாவது ஒன்றை கொண்டு வருவார் அதை அபூபக்கர் சித்தீக் ரழி அவர்கள் சாப்பிடுவார்கள். அன்று ஒருநாள் வழமை போல் ஒரு பொருளைக் கொண்டு வரும் போது அவர்கள் அதை எடுத்து சாப்பிட்டு விடுகிறார்கள். சாப்பிட்டு முடித்த பிறகு இது என்ன பொருள் என்று உங்களுக்கு தெரியுமா என்று அந்த அடிமை கேட்டார். இல்லை, தெரியாது என்று சொன்ன போது, நான் இஸ்லாத்திற்கு வருவதற்கு முன்பு ஜாஹிலிய்யாக் காலத்தில் ஒருவருக்கு ஜோசியம் பார்த்தேன். அதற்கு அவர் எனக்கு கூலி எதையும் தர வில்லை. இப்போது என்னை சந்தித்த போது அதற்கான கூலியாக இதை என்னிடத்திலே கொடுத்தார்.. அதைத் தான் நீங்கள் சாப்பிட்டிருக்கிறீர்கள் என்று சொன்னவுடன் தன் வாய்க்குள் கையை விட்டு உள்ளே சென்ற அனைத்து உணவையும் வெளியே எடுத்து விட்டார்கள்.

உண்மை என்பது அது அமைதியைத் தரும். பொய் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தும் கலகத்தை ஏற்படுத்தும் என்று சொன்னார்கள்.  ஒருவர் பொய் ஒன்றைச் சொல்லி விட்டால், அதை சொன்ன பிறகு அவர் பதட்டத்தில் இருப்பார். பொய் சொல்லி விட்டோம். இதை யாரும் கண்டுபிடித்து விடுவார்களோ, கண்டுபிடித்து அதன் மூலம் நமக்கு ஏதாவது பிரச்சினை வந்து விடுமோ என்ற அச்சத்திலும் பீதியிலும் அவர் இருப்பார். ஆனால் உண்மை பேசியவருக்கு அந்த அச்சம் இருக்காது. அவர் நிம்மதியாக இருப்பார்.

பொய் சொல்லக் கூடியவரை அவர் பேசும் போதே அதன் அடையாளத்தை தெரிந்து கொள்ள முடியும். அவர் பேச்சிலேயே அது வெளிப்பட்டு விடும். கொஞ்சம் தடுமாற்றத்தோடு பேசுவார். அடிக்கடி சத்தியம் செய்வார். அவ்வாறு அவர்கள் பேச்சை வைத்து அவர் பொய் சொல்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்

No comments:

Post a Comment