Thursday, November 18, 2021

இறைவன் ஒருவரை நேசித்தால்.....

 எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மகத்தான அருளால் இஸ்லாமிய ஆண்டின் வசந்தமான மாதங்கள் என்று சொல்லப்படுகிற இரண்டு மாதங்களில் ரபீவுல் அவ்வல் மாதத்தை நிறைவு செய்து விட்டு இரண்டாம் வசந்தம் என்று சொல்லப்படுகின்ற ரபீவுல் ஆகிரில் நாம் அமர்ந்திருக்கிறோம். உலக முஸ்லிம்களால் போற்றப்படுகிற உயர்த்திப் பேசப்படுகிற பரிசுத்தமான வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட உலகத்திலுள்ள இறைநேசர்கள் வலிமார்களுக்கெலாம் தலைவரான குத்புல் அக்தாப் கௌஸுல் அஃலம் என்று எல்லோராலும் அழைக்கப்படுகிற ஹள்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் நினைவுகூறப்படுகிற மாதம் இந்த ரபீவுல் ஆகிர் மாதம். கௌஸுல் அஃலம் பிறந்த இந்த மாதத்தில் இறைநேசம் குறித்து நாம் சிந்திக்கலாம்.

உலகில் வாழும் அனைத்துப் படைப்பினங்களுக்கும்  அன்பு இருக்கிறது. இரக்கம் இருக்கிறது. மனிதர்கள் முதல் பறவைகள்,மிருகங்கள்,சிறு எறும்பு வரை அனைத்துப் படைப்புகளும் தங்களுக்குள் அன்பையும், இரக்கத்தையும் வெளிப்படுத்தும் ஜீவன்களாகத்தான் இருக்கிறது. இரத்த உறவு, திருமண உறவு, நட்பு, இவைகள் மூலம், கல்வியின் மூலம், இப்படி அன்புக்கான காரணம் வேறுபடலாம், அன்பின் அளவு வித்தியாசப்படலாம். ஆனால் எல்லாரிடத்திலும் அன்பு இருக்கிறது. இன்றைக்கு அன்புக்கு ஏங்கக்கூடிய எத்தனையோ பேரைப் பார்க்கிறோம். காசு காசு என்று சொல்லி கணவனும் மனைவியும் வேலைக்குப் போய் விடுகிறார்கள்.வீட்டில் பிள்ளைகள் அன்புக்கு ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.எங்கள் பிள்ளைகளுக்கு எங்கள் மேல அன்பே இல்லை என்று கண்ணீர் வடிக்கும் எத்தனையோ பெற்றோர்கள். என் மேல் என் கணவருக்கு அக்கரையே என்று வேதனைப்படுகிற எத்தனையோ பெண்கள். இப்படி கிடைக்க வேண்டிய அன்பு கிடைக்காமல் ஏங்கிக் கொண்டிருக்கிற எத்தனையோ பேரைப் பார்க்கிறோம். 

சிலருக்கு அவர்கள் எதிர்பார்க்கும் அன்பு கிடைத்து விடும். சிலருக்கு கிடைக்காமல் போய் விடும்.ஆனால் உலகில் யாருடைய அன்பு நமக்கு கிடைக்கிறதோ இல்லையோ நம்மைப் படைத்த ரப்புடைய அன்பு நிச்சயம் கிடைக்க வேண்டும்.  இவ்வுலகில் மனிதர்களின் அன்பைப் பெறுவதை விட படைத்தவனின் அன்பைப் பெறுவது மிக மிக முக்கியமானது பாக்கியமானது. உலகத்தில் எதையதையோ இன்பம் என்று நினைக்கிறோம். மகிழ்ச்சி என்று கருதுகிறோம்.ஆனால் அல்லாஹ்வின் அன்பை விட மிகப்பெரிய இன்பமும் மகிழ்ச்சியும் வேறெதுவும் இல்லை.

قال يحيى بن أبي كثير رحمه الله: "نظرنا فلم نجد شيئًا يتلذَّذ به المتلذِّذُون أفضل من حبِّ الله تعالى

அல்லாஹ்வின் அன்பைத்தவிர வேறு எதையும் நாங்கள் இன்பமாகப் பார்க்க வில்லை என்று யஹ்யா பின் அபூகஸீர் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

மிகப்பெரும் இன்பமாக இருக்கிற அந்த அன்பைத்தான் இறைவனும் கேட்கும் படி சொன்னான்.

فقال قل اللهم إني أسألك حبك وحب من يحبك وحب عمل يقرب الي حبك

யா அல்லாஹ்! உன் பிரியத்தையும் உன் அன்பர்களின் பிரியத்தையும் உன் அன்பின் அளவில் நெருக்கி வைக்கும் அமலின் பிரியத்தையும் நான் உன்னிடம் கேட்கிறேன் என்று நபி ﷺ அவர்களை துஆ கேட்கும்படி அல்லாஹ் கூறினான். (திர்மிதி ; 3235) 

நபி ஸல் அவர்கள் மட்டுமல்ல இறைவனால் அனுப்பப்பட்ட எல்லா நபிமார்களும் தங்கள் வாழ்வில் இதைத்தான் பிரதானமாக கேட்டார்கள். ஆசைப்பட்டார்கள்.

كان من دعاء داود يقول اللهم إني أسألك حبك وحب من يحبك والعمل الذي يبلغني حبك اللهم اجعل حبك أحب إلي من نفسي وأهلي ومن الماء البارد 

யா அல்லாஹ்! உன் பிரியத்தையும் உன் அன்பர்களின் பிரியத்தையும் உன் அன்பை எனக்குத்தரும் அமலின் பிரியத்தையும் நான் உன்னிடம் கேட்கிறேன்.என்னையும் என் குடும்பத்தையும் குளிர்ந்த நீரையும் விட உன் அன்பை எனக்கு மிகப்பிரியமானதாக ஆக்கு என்பது தாவூத் நபியின் துஆவாக இருந்தது. (திர்மிதி ; 4089)

இறைவனின் பிரியம் நமக்கு வேண்டும். அவன் யாரைப் பிரியப்படுகிறானோ  அவர்களின் பிரியமும் வேண்டும். எந்த அமல்களால் அவன் பிரியத்தை நாம் பெற முடியுமோ அந்த அமல்களின் பக்கம் தேட்டமும் நமக்கு வேண்டும்.அது தான் நம் வாழ்வின் மிக உயர்ந்த இலட்சியமாக இருக்க வேண்டும்.அருமை ஸஹாபாக்கள் அதைப் பெறுவதற்குத்தான் ஆசைப்பட்டார்கள். முயற்சித்தார்கள்.

قَالَ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ يَومَ خَيْبَرَ: لَأُعْطِيَنَّ الرَّايَةَ غَدًا رَجُلًا يُفْتَحُ علَى يَدَيْهِ، يُحِبُّ اللَّهَ ورَسولَهُ، ويُحِبُّهُ اللَّهُ ورَسولُهُ، فَبَاتَ النَّاسُ لَيْلَتَهُمْ أيُّهُمْ يُعْطَى، فَغَدَوْا كُلُّهُمْ يَرْجُوهُ،

கைபர் போர்க்களத்தின் முந்தைய இரவு நபி ஸல் அவர்கள் நாளைய தினம் ஒரு மனிதரின் கையில் இந்தக் கொடையை நான் கொடுப்பேன். அவர் கையில் தான் அல்லாஹ் வெற்றியைத் தருவான். அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் அவர் நேசிக்கிறார். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவரை நேசிக்கிறார்கள் என்று கூறினார்கள். யார் கையில் கொடுப்பார்கள் என்று இரவு முழுக்க ஸஹாபாக்கள் அதைப்பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். அதைப்பற்றியே யோசித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் அதை தன் கையில் கொடுக்க வேண்டும் என்று எதிர் பார்த்தார்கள்.

قال عمر ما أحببت الإمارة قط حبي إياه يومئذ رجاء أن أكون صاحبها

ஹள்ரத் உமர் ரலி அவர்கள் அன்றைக்கு மாதிரி நான் என்றக்கும் அதிகாரத்திற்கு ஆசைப்பட்டதில்லை என்று சொன்னதோடு தன் முகத்தைப் பார்த்து தன்னை நபியவர்கள் அழைக்க வேண்டும் என்பதற்காக கால்களை உயர்த்தி நின்று கொண்டிருந்தார்கள். 

பொதுவாக ஸஹாபாக்கள் தலைமைக்கோ பதவிக்கோ ஆசைப்படுபவர்களல்ல. அப்படி அவர்கள் வளர்க்கப்படவும் இல்லை.உருவாக்கப்படவும் இல்லை. உயிர் போகும் வேளையில் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் தருணத்தில் ஒரு மிடர் தண்ணீர் யாரும் தர மாட்டார்களா அதைக் கொண்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று ஏங்கக் கூடிய அந்த நேரத்திலும் தனக்கு குடிப்பதற்கு தண்ணீர் இருந்தும் பிறருக்காக அதை விட்டுக் கொடுத்த உத்தமர்கள் அல்லவா ஸஹாபாக்கள். அவர்களா பதவிக்கு ஆசைப்படப் போகிறார்கள். இருந்தாலும் அன்றைக்கு அத்தனை பேரும் அந்த தலைமைக்கு ஆசைப்படுவதற்குக் காரணம் நபி ﷺ  அவர்கள் சொன்ன அந்த  வார்த்தை. 

தலைமை விரும்பாதவர்கள் அன்றைக்கு விரும்பினார்கள் என்றால் நபி ﷺ அவர்கள் சொன்ன அந்த வார்த்தை தான். அல்லாஹ்வின் அன்பு கிடைக்க வேண்டும். நாம் அல்லாஹ்வை நேசிக்கலாம். ஆனால் அவன் நம்மை நேசிக்க வேண்டும். அது தான் முக்கியமானது.அவன் நம்மை நேசித்து விட்டால் அதை விட சிறந்த பாக்கியம் வேறு எதுவும் இருக்க முடியாது. ஆனால் அவன் நம்மை நேசிக்கிறானா என்பதை எப்படி அறிந்து கொள்வது ?

உலகத்தில் எல்லாவற்றையும் அளப்பதற்கு ஒரு அளவுகோல் இருக்கிறது. கருவி இருக்கிறது. பெய்கின்ற மழையை அளந்து விடுகிறார்கள். வீசுகின்ற காற்றை அளந்து விடுகிறார்கள். ஏற்படுகின்ற பூகம்பந்தை அளந்து விடுகிறார்கள்.கிரிக்கெட்டில் பந்து வீசுபவன் எவ்வளவு வேகத்தில் வீசியிருக்கிறான் என்பதை அளந்து சொல்லி விடுகிறார்கள். இன்னும் ஒரு படி மேல போய் மனித உணர்வுகளையும் துல்லியமாகக் கணக்கிட  app  ஒன்றை  அமெரிக்காவின் வெர்மான்ட் பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். ஹெடோனோமீட்டர்' என்று அந்த app கு பெயர்.  டுவிட்டர் சமூக வலைதளப் பக்கங்களை ஆராய்ந்து,  அந்த வலைதளத்தில் மக்கள் பதிவிடும் கருத்துகளில் உள்ள சொற்களை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவர்கள் சோகமாக இருக்கிறார்கள், அவர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள், அவர்கள் கடுமையான அச்சத்தில் இருக்கிறார்கள் என்றெல்லாம் அவர்களின் மனநிலையை அந்த app  கணக்கிடுகிறது. இப்படி எல்லாவற்றையும் அளப்பதற்கு அளவுகோல் இருக்கிறது. கருவி இருக்கிறது. இறைவன் ஒருவனை நேசிக்கிறான். இறைநேசத்தை ஒருவன் பெற்று விட்டான் என்பதற்கு அளவுகோல் என்ன. எப்படி அறிந்து கொள்வது. சாதாரணமாக இறைநேசர்கள் யார் என்பதை அறிந்து கொள்ள முடியாது.அல்லாஹ் அதை மறைத்து வைத்திருக்கிறான். சில வலிமார்களை அல்லாஹ் உலகத்தின் பார்வைக்கு கொண்டு வந்து விடுகிறான். ஆனால் எண்ணற்ற வலிமார்கள் மக்களால் அறியப்படுவதில்லை.

ان اولياءه الا المتقون ولكن اكثرهم لا يعلمون

நிச்சயமாக அவனுடைய வலிமார்கள் இறையச்சமுள்ளவர்கள். என்றாலும் அவர்களில் அதிகமானோர் அறிந்து கொள்ள மாட்டார்கள்.

எனவே இறைநேசர்கள் யார் என்பதை அறிந்து கொள்ள முடியாது. ஆனால் யார் இறைநேசத்தைப் பெற்றவர் என்பதை சில அடையாளங்களை வைத்து அறிந்து கொள்ள முடியும்.


قال النبي إِنَّ اللَّهَ إِذَا أَحَبَّ عَبْدًا دَعَا جِبْرِيلَ فَقَالَ إِنِّي أُحِبُّ فُلَانًا فَأَحِبَّهُ قَالَ فَيُحِبُّهُ جِبْرِيلُ ثُمَّ يُنَادِي فِي السَّمَاءِ فَيَقُولُ إِنَّ اللَّهَ يُحِبُّ فُلَانًا فَأَحِبُّوهُ فَيُحِبُّهُ أَهْلُ السَّمَاءِ قَالَ ثُمَّ يُوضَعُ لَهُ الْقَبُولُ فِي الْأَرْضِ وَإِذَا أَبْغَضَ عَبْدًا دَعَا جِبْرِيلَ فَيَقُولُ إِنِّي أُبْغِضُ فُلَانًا فَأَبْغِضْهُ قَالَ فَيُبْغِضُهُ جِبْرِيلُ ثُمَّ يُنَادِي فِي أَهْلِ السَّمَاءِ إِنَّ اللَّهَ يُبْغِضُ فُلَانًا فَأَبْغِضُوهُ قَالَ فَيُبْغِضُونَهُ ثُمَّ تُوضَعُ لَهُ الْبَغْضَاءُ فِي الْأَرْضِ

அவ்வா ஒரு அடியானை நேசித்தால் ஜிப்ரயீல் அவர்களை அழைத்து நான் இந்த மனிதனை நேசிக்கிறேன் நீங்களும் அவரை நேசியுங்கள் என்று சொல்லுகிறான் எனவே விரைவில் அவர் நேசிக்கிறார் பின்பு வானத்திலே மற்ற மலக்குமார்களை அழைத்து இறைவன் இந்த மனிதரை நேசிக்கிறான் எனவே நீங்கள் நேசியுங்கள் என்று கூறுகிறார் வானத்தில் உள்ளவர்கள் அவரை நேசிக்கிறார்கள் பூமியில் அவருக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது அல்லாஹ் ஒரு அடியானை கோபம் கொண்டால் விரைவில் அவர்களை அழைத்து நான் இந்த மனிதரை கோபம் கொண்டு விட்டேன் நீங்களும் அவர் மீது கோபம் கொள்ளுங்கள் என்று சொல்லுகிறார் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நம்முடைய கோபம் கொள்கிறார்கள் என்பவரை அழைத்து அல்லாஹுத்தஆலா இவர் மீது கோபம் கொண்டு விட்டால் நீங்களும் அவரை கோபப்படும் என்று சொல்கிறார்கள் ஆனால் அதிலுள்ள மலக்குமார்கள் அந்த மனிதர் மீது கோபம் கொள்கிறார்கள் பின்பு பூமியிலே அவருக்கு வெறுப்பை ஏற்படுத்தப்படுகிறது. (முஸ்லிம் ; 2637)

அல்லாஹ்வின் அன்பை ஒருவன் பெற்று விட்டானா படைத்தவனின் அன்பு கிடைத்து விட்டதா என்பதற்கான அளவுகோல் இது தான். சமூகம் ஒருவரை நேசிக்க ஆரம்பித்து விட்டால் ஒருவரை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டால் அவர் அல்லாஹ்வின் அன்பைப் பெற்று விட்டார் என்று பொருள்.சமூகம் ஒருவரை வெறுக்க ஆரம்பித்து அவரை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது என்றால் அவர் அல்லாஹ்வின் அன்பை விட்டும் தூரமாக இருக்கிறார் என்று அர்த்தம்.

قال تعالي في موسي وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِنِّي [طه:39] ما رآه أحد إلا أحبه،

ஹள்ரத் மூஸா அலை அவர்களைக் குறித்து அல்லாஹ், உம்மீது என் பிரியத்தைப் போட்டு விட்டேன் என்று கூறுகிறான்.

அன்னை ஆசியா அம்மையார் அவர்கள் மூஸா அலை அவர்களை குழந்தையாகப் பார்த்த அந்த முதல் பார்வையிலேயே அவர்களின் மீது மையல் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.இது எனக்கு கண்குளிர்ச்சியான குழந்தை என்றார்கள். தன் ஆட்சிக்கும் தன் உயிருக்கும் உலை வைத்து விடும் என்று சொல்லி  ஆயிரக்கணக்கான குழந்தைகளை கொன்று குவித்துக் கொண்டிருந்த ஃபிர்அவ்ன் கூட அந்த குழந்தையைப் பார்த்தவுடன் ஏற்றுக் கொண்டான். அவன் அரண்மனையில் இருந்தவர்கள், மிஸ்ரில் இருந்தவர்கள், குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக வந்த செவிலித் தாய்மார்கள், சிறியவர்கள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள் என அத்தனை பேரும் விரும்பினார்கள். காரணம் அவர்களை அல்லாஹ் நேசித்தான். 

ஆகவே அல்லாஹ்வின் நேசத்தைப் பெற்றவர்களுக்கு உலகத்தாரின் அன்பு கிடைத்து விடும்.

إِنْ سَأَلَنِي لأُعْطِيَنَّهُ

என்னிடம் கேட்டால் நான் அவருக்கு தருகிறேன் (புகாரி ; 6502) என்று அல்லாஹ் கூறுகிறான்.

அவர் ஒன்றைக் கேட்டால் அல்லாஹ் உடனே கொடுத்து விடுவான். இதுவும் இறை நேசத்தின் அடையாளம்

عن جابر بن سمرة قال: شكا أهلُ الكوفة سعدًا إلى عمر رضي الله عنه، فعزله، واستعمل عليهم عمارًا، فشكَوْا حتى ذكروا أنه لا يُحسن يُصلي، فأرسل إليه، فقال: يا أبا إسحاقَ، إن هؤلاء يزعمون أنك لا تُحسن تصلي،قال أبو إسحاق: أما أنا والله فإني كنت أصلي بهم صلاة رسول الله صلى الله عليه وسلمما أخرِمُ عنها؛ أصلي صلاة العشاء فأركد في الأُوليَيْنِ (أي أُطوِّل فيهما القراءة)، وأُخِفُّ في الأُخريَيْنِ،قال: ذاك الظن بك يا أبا إسحاق، فأرسل معه رجلًا أو رجالًا إلى الكوفة، فسأل عنه أهل الكوفة، ولم يدَعْ مسجدًا إلا سأل عنه ويثنون معروفًا، حتى دخل مسجدًا لبني عبسٍ، فقام رجل منهم يقال له: أسامة بن قتادة، يكنى أبا سعدةَ، قال: أما إذ نشدتنا فإن سعدًا كان لا يسير بالسَّريَّة، ولا يقسم بالسَّويَّة، ولا يعدِلُ في القضية،قال سعد: أما والله لأدعوَنَّ بثلاثٍ: اللهم إن كان عبدك هذا كاذبًا، قام رياءً وسمعةً، فأطِلْ عُمره، وأطِلْ فقره، وعرضه بالفتن، وكان بعدُ إذا سئل يقول: شيخ كبير مفتون، أصابتني دعوة سعدٍ،قال عبدالملك بن عميرٍ - أحد رواة الحديث -: فأنا رأيتُه بعدُ قد سقط حاجباه على عينيه من الكِبَر، وإنه ليتعرض للجواري في الطُّرق يغمزهن؛ (البخاري - حديث 755

கஃபாவில் அதிகாரியாக இருந்த) ஸஃது பின் அபீவக்காஸ் (ரலி) மீது கூஃபா வாசிகளில் சிலர் உமர் (ரலி) இடத்தில் புகார் கூறினார்கள். அவர் முறையாகத் தொழுவிப்பதில்லை என்பதும் அவர்களின் புகார்களில் ஒன்றாக இருந்தது. உடனே உமர் (ரலி) அவரை நீக்கி விட்டு அம்மார் (ரலி) அவர்களை அதிகாரியாக நியமித்தார்கள். ஸஃதை (மதீனாவுக்கு) வரவழைத்து அபூஇஸ்ஹாக்! நீங்கள் முறையாகத் தொழுவிப்பதில்லை என்று கூஃபா வாசிகளில் சிலர் கூறுகின்றனரே! என்று கேட்டார்கள். அதற்கு ஸஃது (ரலி) அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி (ஸல்) அவர்கள் தொழுது காட்டிய முறைப்படியே தொழுவித்தேன். அதில் எந்தக் குறையும் வைக்கவில்லை. இஷாவுடைய முதல் இரண்டு ரக்அத்களில் நீண்ட நேரம் ஒதியும் பின் இரண்டு ரக்அத்களில் சுருக்கமாக ஓதியும் தொழுவிக்கிறேன் என்று பதிலளித்தார்கள். உம்மைப் பற்றி நமது கருத்தும் அதுவே என்று உமர் (ரலி) கூறினார்கள். அதன் பின் ஒரு நபரைத் அல்லது சில நபர்களை ஸஃது (ரலி) உடன் கூஃபாவுக்கு அனுப்பி ஸஃதைப் பற்றி கூஃபாவாசிகளிடம் விசாரிக்கச் சொன்னார்கள். ஒரு பள்ளிவாசல் விடாமல் அவரைப் பற்றி விசாரித்தபோது அனைவரும் ஸஃதைப் பற்றி நல்ல விதமாகவே கூறினார்கள். பனூ அப்பாஸ் கூட்டத்தாரின் பள்ளிவாசலில் விசாரித்தபோது அந்த கூட்டத்தை சேர்ந்த அபூஸஃதா எனப்படும் உஸாமா பின் கதாதா என்பவர் எழுந்தார். நீங்கள் விசாரிப்பதால் தான் நான் சொல்கிறேன். ஸஃது அவர்கள் தமது படையிலுள்ளவர்களிடம் எளிமையாக நடப்பதில்லை. (பொருள்களை) சமமாக பங்கிடுவதில்லை: தீர்ப்பு வழங்குவதில் நீதியாக நடப்பதில்லை என்று புகார் கூறினார். இதைக் கேட்ட ஸஃது (ரலி) அல்லாஹ்வின் மீது ஆணையாக! மூன்று பிரார்த்தனைகளை (உமக்கெதிராக) நான் செய்யப் போகிறேன் என்று கூறிவிட்டு இறைவா! உனது இந்த அடியார் (அவரது புகாரில்) பொய்யராகவும் புகழ் விரும்பிப் புகார் கூறுவராகவும் இருந்தால் அவரது ஆயுளை அதிகப் படுத்துவாயாக! அவரது வறுமையையும் அதிகப் படுத்துவாயாக! அவரைப் பல சோதனைகளுக்கு ஆளாக்குவாயாக! என்று பிரார்த்தனை செய்தார்கள். இதன் பிறகு அந்த மனிதரிடம் எவரேனும் நலம் விசாரித்தால் சோதனைக்காளான முதுபெரும் வயோதிகனாகி விட்டேன். ஸஃதின் பிரார்த்தனை என் விஷயத்தில் பலித்து விட்டது எனக் கூறக் கூடியவராகி விட்டார். ஜாபிர் (ரலி) வழியாக அறிவிக்கும் அப்துல் மாலிக் பின் உமைர் அதன் பிறகு நானும் அவரைப் பார்த்திருக்கிறேன். முதுமையில் அவரது புருவங்கள் அவரது கண்களை மறைத்திருந்தன. பாதைகளில் நடந்து செல்லும் பெண்கள் மீது (பார்வை பறி போனதால்) மோதிக் கொள்வார்: இந்த நிலையில் அவரை நான் பார்த்திருக்கிறேன் என்று குறிப்பிட்டார். புஹாரி-755

அல்லாஹ் ஒருவரை நேசம் கொண்டு விட்டால் சில நேரங்களில் அவர் கேட்காமலேயே கொடுத்து விடுவான்.

ان سيدنا ابراهيم عندما القي في النار هبط عليه ملك الرياح قفال الك حاجة عندي حتي اقضيها لك قال حاجتي عند ربي

இப்ராஹீம் அலை அவர்கள் நெருப்பில் போடப்படும் நேரத்தில் உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா என்று வானவர்கள் கேட்ட போது உங்கள் உதவி எனக்கு வேண்டாம் என்று கூறினார்கள். இறைவனிடத்திலும் அவர்கள் உதவி தேட வில்லை. ஆனாலும் அல்லாஹ் அவரைப் பாதுகாத்தான்.

யாராவது நமக்கு உதவிக்கரம் நீட்ட வர மாட்டார்களா! என்று எதிர் பார்த்துக் கொண்டிருக்கிற, உயிர் போகும் அந்த நேரத்தில் உதவி செய்வதற்கு மிகப்பொறுத்தமான அத்தனை மலக்குகளும் வந்து கேட்ட போது கூட, இறைவன் உதவி தான் எனக்கு வேண்டும். உங்கள் உதவி எனக்கு தேவையில்லை என்று சொல்லுகிற வலிமையும் துணிச்சலும் அவர்களுக்கு இருந்தது என்றால் இறைவன் மீது அவர்களுக்கு இருந்த அபாரமான நம்பிக்கையையும் தவக்குலையும் நமக்கு காட்டுகிறது.அதே சமயத்தில் இந்த நிகழ்வு சொல்லக்கூடிய இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இறைவன் ஒருவரை தன் நேசத்திற்குரியவராக ஆக்கி விட்டால் அவர் ஆபத்தில் இருக்கிற போது அவர் கேட்க வேண்டும் என்று கூட அவசியமில்லை. அல்லாஹ் அவனாகவே முன் வந்து உதவி செய்து விடுவான். அவருக்கு தன் உதவிக்கரத்தை நீட்டுவான் என்பது இந்நிகழ்வு சொல்லுகிற அழுத்தமான செய்தி. 

اذا احب الله عبدا حماه الدنيا

அல்லாஹ் ஒருவரை நேசித்தால் உலகை விட்டும் அவரை பாதுகாத்து விடுவான். (முஸ்னத்)


இறை நேசம் ஒருவருக்கு கிடைத்து விட்டால் உலக ஆசை உலக மோகம் இதுவெல்லாம் அவருக்கு இருக்காது. பற்றற்ற வாழ்க்கை, உலகை ஆசைப்படாத ஒரு தன்மை இதுவெல்லாம் அவருக்கு இறைநேசம் கிடைத்து விட்டது என்பதற்கான அடையாளம். 

عن زيد بن أسلم عن أبيه قال: سمعتُ عمر بن الخطاب رضي الله عنه يقول: أمَرَنا رسول الله صلى الله عليه وسلم أن نتصدق، فوافق ذلك مالاً عندي، فقلتُ: اليوم أسبقُ أبا بكر إن سبقتُه يومًا، قال: فجئتُ بنصف مالي، فقال رسول الله صلى الله عليه وسلم: ((ما أبقيتَ لأهلك؟))، قلت: مثله، وأتى أبو بكر بكل ما عنده، فقال: ((يا أبا بكر، ما أبقيتَ لأهلِكَ؟))، قال: أبقيتُ لهم الله ورسوله، قلتُ: والله لا أسبقه إلى شيء أبدًا سنن الترمذي 3675

உமர் இப்னு கத்தாப் (ரலி)அவர்கள் இந்த ஹதீஸை அறிவிக்கின்றார்கள். அவர்கள் தங்களைப் பற்றி சொல்கிறார்கள்: அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்)அவர்கள் ஒரு நாள் தர்மங்களைக் கொண்டு வந்து நீங்கள்  இங்கு பள்ளியில் ஒன்று சேருங்கள் என்று எங்களுக்கு ஒரு கட்டளை கொடுத்தார்கள். அப்போது என்னிடத்தில் அதிகமாக செல்வம் இருந்தது. (போரிலிருந்து அவர்கள் திரும்பி இருக்கலாம். கனீமத்தில் இருந்து அவர்களுக்கு கிடைத்து இருக்கலாம்.)உடனே உமர் (ரலி)அவர்கள் முடிவு செய்தார்கள்.

இன்று நான் அபூபக்ரை முந்துவதற்கு உண்டான ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று தன்னுடைய செல்வத்தில் பாதியை எடுத்துக்கொண்டு ஸல் அவர்களிடத்தில் வருகிறார்கள். ரஸூலுல்லாஹ் அவர்கள் கேட்கிறார்கள்.

உமரே!உங்களுடைய குடும்பத்திற்கு எதை வைத்து விட்டு வந்தீர்கள்.அல்லாஹ்வின் தூதரே!இங்கு கொண்டு வந்த அளவிற்குஅங்கு என் குடும்பத்திற்கு இருக்கின்றது என்றார்கள்.அடுத்து அபூபக்கர் ரலி அவர்களைப் பார்த்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். அபூபக்கரே!உங்களது குடும்பத்தாருக்கு எதை வைத்து விட்டு வந்தீர்கள்? அபூபக்கர் சித்திக் (ரலி)அவர்கள் நான் அவர்களுக்காக அல்லாஹ்வையும், ரஸூலையும் வைத்து விட்டு வந்தேன் என்றார்கள். அபூபக்ரே!ஒருக்காலும் நான் எதிலும் உங்களை முந்தி விட முடியாது என்று உமர் ரலி அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத் : 1678)

ரஸூல் கேட்டார்கள் என்பதற்காக வீட்டில் எதையும் மிச்சம் வைக்காமல் அனைத்தையும் கொண்டு வந்தார்கள் என்பது வரைக்கும் இந்த வரலாற்றில் நமக்கு தெரியும். ஆனால் உண்மையான இறைநேசத்தைப் பெற்ற ஒருவரால் தான் இவ்வாறு செய்ய முடியும் என்பதையும் இந்த நிகழ்விலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

وبعث إليها ابنُ الزبير رضي الله عنه بمالٍ بلغ مائةَ ألف، فدعَت بطبق؛ فجعلَت تقسم في الناس، فلما أمسَت؛ قالت: هاتي يا جاريةُ فطوري، فقالت: يا أمَّ المؤمنين، أمَا استطعتِ أن تشتري لنا لحمًا بدرهم؟ قالت: "لا تعنِّفيني، لو ذكَّرتيني لفعلت


அப்துல்லாஹ் பின் ஜுபைர் ரலி அவர்கள் ஆயிஷா ரழி அவர்களுக்கு ஒரு லட்சம் திர்ஹம்களை அனுப்பி வைத்தார்கள். உடனே அவர்கள் மக்களையெல்லாம் ஒன்று கூட்டி அவை அனைத்தையும் பங்கிட்டு கொடுத்து விட்டார்கள். மாலை நேரம் வந்ததும் அவர்கள் தன்னுடைய பணிப்பெண்ணிடம் நோன்பு திறப்பதற்கு உணவு எடுத்து வா என்று சொன்னார்கள். அப்போது அந்த பணிப்பெண் காலை மக்களுக்கு நீங்கள் பங்கிட்டு கொடுத்த அந்த ஒரு லட்சம் திர்ஹம்களில் ஒரு திர்ஹமை உங்களுக்காக எடுத்து வைத்திருந்தால் இப்போது நோன்பு திறப்பதற்கு கொஞ்சம் கறியை வாங்கி இருக்கலாமே என்று கேட்டார்கள். (ஹுல்யதுல் அவ்லியா 47/2)

தனக்கு வேண்டும் என்று நினைக்காமல் அனைத்தையும் அள்ளிக் கொடுத்து விட்டார்கள்.

وَإِنَّ اللَّهَ إِذَا أَحَبَّ قَوْمًا ابْتَلاهُمْ 

வாழ்க்கையில் ஏற்படுகின்ற சோதனைகள் இறை நேசத்திற்கான அடையாளங்கள். அல்லாஹ் யாரை தன் நேசத்திற்குரியவராக ஆக்கிக் கொண்டானோ அவர்களைத்தான் சோதிக்கிறான். 

ويقول أبو القاسم القشيري : « البلاء : هو سمة الولاء ، فمن تم بلاؤه صح ولاؤه »

சோதனை என்பது இறை அன்பின் அடையாளம் ஆகும். யாருக்கு அவருடைய சோதனை முழுமை பெற்றுவிட்டதோ அவருக்கு இறை அன்பு கிடைத்து விடும் என்று அபுல் காஸிம் அல்குஷைரி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.


இன்னைக்கு நாம எதாவது சோதனை வந்து விட்டால் வாழ்க்கையில் எதாவது கஷ்டம் வந்து அல்லாஹ் நம்மை கை விட்டு விட்டான் என்று நினைக்கிறோம். ஆனால் அப்போது தான் நம் கையை இறைவன் பிடித்திருக்கிறான் என்பதை உணர வேண்டும்.

كان السلف إذا لم يصابوا بشيء, وكانوا في نعمة وعافية, داخلهم الشك أنهم ليسوا على حق

நம் முன்னோர்களுக்கு எந்த சோதனையும் இல்லாமல் ஆரோக்கியத்திலும் அல்லாஹ்வின் அருளிலும் இருந்து கொண்டிருந்தால் நாம் சத்தியத்தில் தான் இருக்கிறோமா என்ற சந்தேகம் அவர்களுக்கு வந்து விடும்.

இப்படி இறைநேசத்திற்கான அடையாளங்கள் நிறைய உண்டு. ஒருவர் இறைநேசத்தைப் பெற்று விட்டால் அவரைப் பற்றிய நல்ல அபிப்ராயத்தை சமூக மக்களிடத்தில் ஏற்படுத்தி அவர்கள் அனைவராலும் நேசிக்கப்படும் நபராக அல்லாஹ் அவரை ஆக்கி விடுகிறான். அவர் கேட்பவை அனைத்தையும் அல்லாஹ் கொடுக்கிறான். கேட்காமலே அவருக்கு அல்லாஹ் உதவி புரிகிறான்.உலக பற்றற்ற வாழ்க்கையை அவருக்கு கொடுத்து தீனுக்காக எதையும் தியாகம் செய்யும் நல்லுள்ளம் கொண்டவர்களாக அல்லாஹ் அவரை ஆக்கி விடுகிறான். எல்லாவற்றுக்கும் மேலாக வாழ்க்கையில் எண்ணற்ற சோதனைகளைக் கொடுத்து அதில் அவரை பொறுமையாக இருக்க வைத்து அதன் மூலம் அல்லாஹ் அவரது அந்தஸ்தை உயர்த்தி விடுகிறான். எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அவனது மேலான அன்பையும் நேசத்தையும் தருவானாக. தன் நேசத்திற்குரியவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்கிக் கொள்வானாக.இறை நேசர்களை மதிக்கும் மக்களாகவும் அல்லாஹ் நம்மை ஆக்குவானாக.

No comments:

Post a Comment