Thursday, November 11, 2021

மழை சொல்லும் செய்தி

 


உலகத்தில் அல்லாஹுத்தஆலா எண்ணற்ற படைப்பினங்களையும் ஜீவராசிகளையும் படைத்திருக்கிறான். கண்ணுக்கு தெரியாத உயிரினங்கள், உருவத்தில் மிகப்பெரிய உயிரினங்கள், நம் சிந்தனைக்கும் அறிவுக்கும் எட்டும் உயிரனங்கள்,சிந்தனைக்கும் அறிவுக்கும் எட்டாத உயிரனங்கள்,நாம் கேள்விப்பட்ட உயிரனங்கள்,நாம் இதுவரை கேள்விப்படாத உயிரினங்கள்,பார்ப்பதற்கு சாதாரணமாக தெரிகின்ற உயிரனங்கள், பார்ப்பவர்களை பிரம்மிக்க வைக்கிற உயினங்கள் என்று எத்தனையோ உயிரங்களை படைத்த இறைவன் அந்த உயிரினங்களிலெல்லாம் மிகச்சிறந்த உயிரினமாக அந்த படைப்புக்களிலெல்லாம் மிக உயர்ந்த படைப்பாக அற்புத படைப்பாக மனிதனை படைத்திருக்கிறான்.

والتين والزيتون وطور سينين وهذاالبلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم

அத்தியின் மீது சத்தியமாக! ஜைத்தூனின் மீது சத்தியமாக! தூர்ஸினாவின் மீது சத்தியமாக! அபயமளிக்கும் இந்த நகரத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக நாம் மனிதனை அழகிய அமைப்பில் படைத்தோம். (அல்குர்ஆன் : 95 ; 1,2,3,4)

திருக்குர்ஆனில் அல்லாஹுத்தஆலா ஏதாவது ஒரு விஷயத்தை மிக அழுத்தமாக சொல்ல நினைத்தால், அல்லது அந்த விஷயத்தின் ஆழத்தையும் அதன் வீரியத்தையும் சமூகத்திற்கு உணர்த்த நினைத்தால் சத்தியம் செய்து சொல்வதுண்டு.அந்த வகையில் அல்லாஹ் இங்கே நான்கு சத்தியங்கள் செய்து சொல்கிறான்.

அழகுஎன்பது கண்ணோட்டங்களைப் பொருத்தது. ஒருவருக்கு அழகாய்த் தெரிவது, இன்னொருவருக்கு அலங்கோலமாகத் தெரியலாம்,ஒருத்தருக்கு கவர்ச்சியாக தெரிவது இன்னொருவருக்கு அசிங்கமாகத் தெரியலாம். ஆனால் இந்த வசனத்தில்  அழகிய அமைப்புஎன்று குறிப்பிடுகிறான்.எனவே மனிதன் அழகில் மட்டுமல்ல அமைப்பிலும் சிறந்தவன் என்பதை இந்த வசனம் உணர்த்துகிறது.

அழகிலும் அமைப்பிலும் மட்டுமல்ல அந்தஸ்திலும் மனிதன் மற்ற எல்லா படைப்பினங்களை விட உயர்ந்தவன் என்பது குர்ஆன் கூறும் செய்தி.

ولقد كرمنا بني ادم

நிச்சயமாக ஆதமின் மக்களை நாம் சங்கைபடுத்தினோம். (அல்குர்ஆன் : 17 ; 70)

எனவே மனிதன் அழகானவன் மட்டுமல்ல சங்கையானவன். கண்ணியமானவன், மனிதன் எந்த வகையில் சங்கையானவன்,எந்த வகையில் கண்ணியமானவன்,எந்த வகையில் சிறந்தவன் என்று அதற்கான விளக்கத்தை தேடுகிற போது அல்லாஹ் ஒரு வசனத்தின் வழியாக அதற்கான விளக்கத்தைத் தருகிறான்.

أَلَمْ تَرَوْا أَنَّ اللَّهَ سَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ

நிச்சயமாக அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியில் உள்ளதை உங்களுக்கு வசப்படுத்தியுள்ளான் என்பதை நீங்கள் காண வில்லையா? (அல்குர்ஆன் : 31 ; 20)

வானம் பூமி சூரியன் சந்திரன், நட்சத்திரங்கள், மலைகள், மரங்கள், காடுகள், கடல்கள், விலங்கினங்கள்,  நீர் நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்சபூதங்கள் அத்தனை வஸ்துக்களையும் மனிதனுக்காக படைத்திருக்கிறான் மட்டுமல்ல மனிதனுக்கு அவைகளை வசப்படுத்தியும் கொடுத்திருக்கிறான்.மனிதன் அவன் நாடிய விதத்தில் அவன் எண்ணுகிற அமைப்பில் அவைகளை உருவாக்கிக் கொள்ளவும் மாற்றிக் கொள்ளவும் சக்தி பெற்றிருக்கிறான்.அதுவும் அந்த மனிதனிடம் ஈமானிய பலம் இருந்து அந்த ஈமானின் அடையாளமாக அவன் முழுமையாக அல்லாஹ்வுக்கு கட்டுபட்டு நடப்பவனாக இருந்தால் அவனுக்காக படைக்கப்பட்ட அத்தனை வஸதுக்களும் அவனுக்கு கட்டுப்பட ஆரம்பித்து விடும்.இதற்கு எண்ணற்ற உதாரணங்கள் சான்று.

قال الرازي في تفسيره: وقعت الزلزلة في المدينة فضرب عمر الدرة على الأرض وقال: اسكني بإذن الله.

فسكنت وما حدثت الزلزلة بالمدينة بعد ذلك

மதீனாவில் பூகம்பம் ஏற்பட்டது. தன் கையிலிருந்த சாட்டையை கொண்டு பூமியின் மீது உமர் ரலி அவர்கள் அடித்தார்கள். அல்லாஹ்வின் உத்தரவைக் கொண்டு அமைதியாக இரு என்று சொன்னார்கள். அது அமைதியாகி விட்டது. அதற்கு பிறகு மதினாவில் நில அதிர்வு என்பது ஏற்பட்டதில்லை. (தஃப்ஸீர் ராஸீ)

أن رسول الله صلى الظهر بالصهباء من أرض خيبر، ثم أرسل عليا في حاجة، فجاء وقد صلى رسول الله العصر، فوضع رأسه في حجر علي ولم يحركه حتى غابت غربت الشمس.

فقال رسول الله : « اللهم إن عبدك عليا احتبس نفسه على نبيه فرد عليه شرقها 

قالت أسماء: فطلعت الشمس حتى رفعت على الجبال، فقام علي فتوضأ، وصلى العصر، ثم غابت الشمس.

ஒருநாள் நபி ஸல் அவர்கள் அஸர் தொழுது விட்டு ஹஜரத் அலி ரலி அவர்களது மடியில் தலை வைத்து படுத்திருந்தார்கள். சூரியன் மறைந்து விட்டது. அலி அவர்கள் அஸர் தொழ வில்லை. எழுத்து அவர்களிடம் அஸர் தொழுதாயா என்று கேட்டார்கள். இல்லை என்று அவர்கள் சொன்னார்கள். அப்போது நபி ஸல் அவர்கள் இறைவா உன்னுடைய இந்த அடியார் தன்னுடைய நபிக்காக தன்னை தொழாமல் தடுத்துக் கொண்டார். எனவே சூரியனை திருப்பிக் கொண்டு வா என்றார்கள். அஸ்மா ரலி அவர்கள் கூறுகிறார்கள் ;  சூரியன் மீண்டும் உதித்தது. அலி அவர்கள் அஸர் தொழுதார்கள். பின்பு மறைந்து விட்டது. (அல்பிதாயா வன் நிஹாயா)

عن سفينة مولى النبي (صلى الله عليه وسلم) قال لقيني الأسد فقلت أنا سفينة مولى رسول الله (صلى الله عليه وسلم) قال فضرب بذنبه الأرض وقعد سيرة ابن كثير تاريخ دمشق

ஒரு நாள் சிங்கம் ஒன்று எனக்கு முன்னால் வந்து நின்றது. அப்போது நான் ஸஃபீனா. அல்லாஹ்வுடைய தூதரின் அடிமையாகும் என்று சொன்னேன். உடனே அந்த சிங்கம் தன்னுடைய வாளால் பூமியிலே அடித்துக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டது. (தாரீஹே திமிஷ்க்)

இப்படி மனிதனுக்காக படைக்கப்பட்ட வஸ்துக்கள் அந்த மனிதனின் ஈமானின் பலமும் ஈமானின் தரமும் உயர்வாக இருக்கிற போது அந்த மனிதனின் உத்தரவுகளுக்கும் கட்டுப்படும் என்பதற்கு இதுபோன்ற ஹதீஸ்களும் வரலாறுகளும் நமக்கு மிகப்பெரும் சான்றாக இருக்கிறது.

ஆனால் அதே மனிதன் சில சமயங்களில் இறையச்சமின்றி வரம்பு மீறி நடக்கின்ற பொழுது பாவங்களில் காரியங்களில் மூழ்கிவிடுகிற போது அல்லாஹ்வுக்கு மாற்றமான காரியங்களில் தன்னை ஈடுபடுத்திக கொள்கிற போது  அல்லாஹ்வின் கோபம் ஏற்பட்டு அந்த கோபத்தின் விளைவாக அதே வஸ்துக்கள், எந்த வஸ்துக்கள் மனிதனுக்காக படைக்கப்பட்டதோ எந்த வஸ்துக்கள் மனிதனுக்கு வசப்படுத்தி தரப்பட்டதோ அதே வஸ்துக்கள் அவனுக்கு எதிராக மாறி அவன் அழிவதற்கு காரணமாகவும் ஆகிவிடும்.

தற்போது தமிழகத்தில் பரவலாக மழை பெய்து அணைகளெல்லாம் நிரம்பி வழிகிறது. பல்வேறு பகுதிகள் மழை நீரால் சூழ்ந்துள்ளது.வெள்ள எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. சென்னையின் பல்வேறு பகுதிகள் மழை நீரின் பிடியில் இருக்கிறது. இதற்கு முன்பு இருந்த ஆட்சி இதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது. இந்த பிரச்சனையை சீர் செய்வதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை சிலர் ஊழல் செய்து விட்டார்கள். தண்ணீர் வழிந்து செல்வதற்கு வழியில்லாத வகையில் இன்றைக்கு பிரமாண்டமான கட்டிடங்கள் உருவாகி விட்டது. இப்படி அதற்கு வெளிப்படையாக பல காரணங்கள் சொல்லப்படுகிறது.

எல்லா விஷயங்களிலும் பாடங்களும் படிப்பினைகளும் இருப்பதைப் போன்று இந்த கனமழையிலும் அதன் மூலம் ஏற்பட்ட சேதத்திலும் நமக்கு நிறைய பாடங்களும் படிப்பினைகளும் உண்டு.

1, மழை என்பது அல்லாஹ்வின் கையில் இருக்கிறது.

 ان الله عنده علم الساعة وينزل الغيث

மழை எப்போது பெய்யும். எங்கே பெய்யும். எவ்வளவு பெய்யும் என்று மழை குறித்த அத்தனை செய்திகளும் அல்லாஹ்வைச் சார்ந்தது,அவன் நாடினால் மழை பெய்யும். அவன் நாடினால் மழை துண்டிக்கப்படும். பொதுவாக மனிதனின் இயல்பு நல்லது நடக்கிற போது அதற்கு காரணம் நான் தான், என்னால் தான் நடந்தது என்று அதை தன் பக்கம் இணைத்துக் கொள்வான், ஏதாவது தீய காரியம் நடந்தால் பிறர் பக்கம் இணைத்துக் கொள்வான், ஆனால் நன்மை தீமை, லாபம் நஷ்டம், வெற்றி தோல்வி, வளர்ச்சி வீழ்ச்சி, முன்னேற்றம் பின்னடைவு இப்படி மனித வாழ்வில் ஏற்படுகிற அத்தனையும் அவன் புறத்தில் உள்ளது என்பதை நாம் உணர வேண்டும்.

2, இது அல்லாஹ்வின் குத்ரத்தின் வெளிப்பாடு.அல்லாஹ்வின் குத்ரத்தின் வெளிப்பாடு என்னவென்றால், ஒரே பொருள்,அதில் ஆக்கமும் இருக்கும்,அழிவும் இருக்கும். காற்று சுவாசத்திற்கு அவசியம். இந்த பிரபஞ்சத்தில் காற்று இல்லையென்றால் எந்த உயிரனமும் வாழ முடியாது.ஆனால் அதே காற்று தான் ஆத் கூட்டத்தை அழித்தது.நீர் மிக அத்தியாவசிய பொருட்களில் ஒன்று.நீரின்றி அமையாது உலகு என்று சொல்வார்கள். وجعلنا من الماء كل شيئ حي ஆனால் அந்த நீர் தான் நூஹ் நபியின் கூட்டத்தை அழித்தது.நெருப்பு கறிக்கும் தன்மை கொண்டது.ஆனால் அதே நெருப்பு இப்ராஹீம் நபிக்கு குளிராக மாறியது. நிலத்தின் மீது நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.மண் நம்மை காக்கிறது.ஆனால் அதே மண் தான் காரூனை விழுங்கியது.ஒரே கடல் தான் மூஸா நபியைக் காத்தது.அதே கடல் தான் பிர்அவ்னை அழித்தது.எந்த அஸாவைக் கொண்டு மூஸா நபி அலை தன் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து கொண்டிருந்தார்களோ அதே கம்பு தான் அவர்களே பார்த்து அஞ்சுகிற அளவுக்கு பாம்பாக மாறியது. அதே போன்று ஒரே மழை தன் செழிப்பாகவும் இருக்கிறது. சேதத்தை ஏற்படுத்தும் ஒன்றாகவும் இருக்கிறது.

3, செல்வத்தைக் கொண்டு எதையும் சாதித்து விடலாம் எதையும் செய்து விடலாம் எதையும் வாங்கி விடலாம் என்ற இறுமாப்பில் இருப்பவர்களுக்கு இது ஒரு படிப்பினை. அவர்கள் பார்த்து பார்த்து கட்டிய அவர்கள் வீட்டில் அவர்களே வசிக்க முடியாத அளவு மழை நீர் சூழ்ந்துள்ளது. அதனை தடுக்க வழியில்லாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

4, நாம் செய்த பாவங்கள் தான் இதுமாதிரியான சோதனைக்கான காரணம். நாம் அல்லாஹ்வின் பக்கம் மீண்டு அவனிடமே உதவி தேட வேண்டும்.

 وَلَنُذِيقَنهُم منَ العَذَابِ الأدنَى دُونَ العَذَابِ الأكبَرِ لَعَلهُم يَرجِعُونَ

நாம் செய்த பாவங்களை உணர்ந்து அல்லாஹ்வின் பக்கம் மீள வேண்டும் என்பதற்காகத்தான் அல்லாஹ் இந்த சோதனைகளைத் தருகிறான்.

5, எல்லாவற்றுக்கும் மேலாக நம்மை பரிசோதிப்பதற்குத்தான் இதுமாதிரியான சோதனைகள். இங்கே இரண்டு சோதனை உண்டு.மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதில் அவர்கள் பொறுமையாக இருக்கிறார்களா என்று அவர்களை சோதிப்பதற்காக, நம் சகோதரர்கள் சிரமப்படுகிற போது நாம் உதவி செய்கிறோமா என்று நம்மை சோதிப்பதற்காக.

அல்லாஹ்வினால் இந்த உலகத்திற்கு தரப்பட்ட மிகச் சிறந்த மார்க்கம், மிக உயர்ந்த வாழ்க்கை நெறிமுறை இஸ்லாம். இஸ்லாம் மனித வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் தன்னுள் வைத்திருக்கிறது. மனிதன் உயர்வதற்கு மனிதன் உயர்ந்த இடத்திற்கு செல்வதற்கு மனிதன் இறைவனை நெருங்குவதற்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் வழிகாட்டுகிறது. அந்த அடிப்படையில் மனிதன் இறைவனை நெருங்குவதற்கு இஸ்லாம் வழிகாட்டுகிற அற்புதமான விஷயங்களில் ஒன்று, அவன் தனக்காக மட்டும் வாழாமல் பிறருக்காகவும் வாழ வேண்டும் தனக்கு நன்மை தரும் விஷயங்களில் கவனம் செலுத்துவதைப் போன்று பிறருக்கு நன்மை தரும் விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். தனக்கு இடையூறு தரும் விஷயங்களை அப்புறப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதைப் போன்று பிறருக்கு இடையூறு தரும் விஷயங்களை அப்புறப்படுத்துவதிலும் முனைப்பு காட்ட வேண்டும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் சமூக நலனில் அக்கறை செலுத்த வேண்டும். சமூகத்தின் சுக துக்கங்களில் பங்கெடுக்க வேண்டும். சமூகத்தின் உயர்வுக்காக பாடுபட வேண்டும். சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.சமூகத்திற் காக தன்னை அர்ப்பணிக்க வேண்டும்.

ஒரு முஸ்லிமிடம் வெறும் தொழுகை நோன்பு போன்ற வணக்கங்களை மட்டுமல்லாமல், சமூக சேவைகளையும் இஸ்லாம் எதிர் பார்க்கிறது.சமூக நலனில் அக்கறை செலுத்தும் காரியம் பார்ப்பதற்கு அர்ப்பமான காரியமாக தெரிந்தாலும் அந்த அர்ப்பமான காரியம் கூட ஒருவரின் சுவனத்தை தீர்மானித்து விடும்.

مر رجل بغصن شجرة على ظهر طريق ، فقال : والله لأنحّين هذا عن المسلمين لا يؤذيهم ، فأدخل الجنة

பாதைக்கு மத்தியில் கிடந்த ஒரு மரக்கிளையில் ஒரு மனிதர் கடந்து சென்றார். அல்லாஹ்வின் மீது சத்தியமாக முஸ்லிம்களுக்கு இடையூறு தராத வகையில் இதை நான் அப்புறப் படுத்துவேன் என்று சொல்லி அதை செய்தார் அதனால் அவர் சுவனத்தில் நுழைவிக்கப்பட்டார். (முஸ்லிம் ; 1914)

போகிற போக்கிலே வழியில் மக்களுக்கு இடையூறாக கிடந்த ஒரு மரக்கிளையை அகற்றியதால் ஒருவருக்கு சுவனம் கிடைக்கிற தென்றால் சமூகத்திற்காக தொண்டாற்ற வேண்டும், சமூகத்திற்காக சேவைகள் செய்ய வேண்டும், சமூகத்திற்காக தன்னை அர்ப்பணிக்க வேண்டும் என்று களமிறங்கும் ஒருவருக்கு எத்தனை கோடி புண்ணியம் கிடைக்கும் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அந்தளவு எண்ணற்ற நன்மைகளும் அநதஸ்துக்களும் சமூக சேவைகளில் ஈடுபடக் கூடியவர்களுக்கு உண்டு.

இன்றைக்கு நாமும் சமூக சேவைகளைச் செய்கிறோம் இல்லாதவர்களுக்கு உதவுகிறோம். வாழ்க்கையில துவண்டு போனவர்களுக்கு ஆறுதல் கூறுகிறோம்.வாழ்வில் பின்தங்கியவர் களை தூக்கி விடுகிறோம். மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்க கூடியவர்களுக்கு நம் ரத்தங்களைக் கொடுத்து உதவுகிறோம். சமூகத்திலே தேங்கி இருக்கிற குமர்களை கரை சேர்க்கிறோம், எல்லாம் செய்கிறோம். ஆனால் அந்த சேவைகளில் தெரிந்தோ தெரியாமலோ முகஸ்துதியும் பெருமையும் நுழைந்து விடுகிறது. வாட்ஸ்அப் ஃபேஸ்புக்லாம் வந்த பிறகு இப்ப எல்லாமே விளம்பரமா மாறி விட்டது. மறைவாக செய்ய வேண்டிய அமல்களெல்லாம் இன்றைக்கு வீதிக்கு கொண்டு வரப்படுகிறது. ஒரு 100 யை கொடுத்து விட்டு செல்ஃபி எடுத்து வளை தளங்களில் போட்டு அதற்கு லைக்ஸையும் கமன்ட்ஸையும் எதிர் பார்க்கிறோம். நாம் செய்யக்கூடிய அமல்களெல்லாம் விளம்பரங்களாக மாறி வருகிற ஆபத்தான காலம் இது.

பிறருக்கு ஆக்கத்தையும் ஊக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக அல்லது உதவி செய்யக்கூடிய இப்படியொரு நிறுவனம் இருக்கிறது என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காக போடுவது தவறல்ல. ஆனால் இன்றைக்கு போடப்படுகிற அதிகமான ஃபோட்டாக்களும் வீடியோக்களும் விளம்பர நோக்கத்திற்காகத் தான் போடப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

இன்றைக்கு உலகில் எந்தத் தலைவர்களாக இருக்கட்டும் இயக்கம் சார்ந்த எந்த மனிதர்களாக இருக்கட்டும் சமூகத்தில் தன் பெயர் நிலைக்க, சமூக அரங்கில் தனக்கொரு இடம் கிடைக்க அவர்கள் ஈடுபடுவது, ஈடுபட நினைப்பது சமூக சேவைகளிலும், களப்பணிகளிலும் தான். இன்றைக்கு விளம்பரத்தின் மறு உருவமாகவே சமூக சேவைகள் மாறி விட்டது.

ஆனால் செய்யக்கூடிய அமல்களில் ஒரு துளி அளவும் முகஸ்துதியோ பெருமையோ வந்து விடக்கூடாது என்பதை இஸ்லாம் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது.

وويل للمصلين الذين هم صلا تهم ساهون الذين هم يراءون

ألا أخبركم بما هو أخوف عليكم عندي من المسيح الدجال؟ قالوا: بلى، قال: الشرك الخفي؛ يقوم الرجل فيصلي فيزين صلاته لما يرى من نظر رجل

நாம் செய்கின்ற காரியங்களில் எந்த வகையிலும் பெருமை நுழைந்து அந்த காரியத்தைக் கெடுத்து விடக்கூடாது என்பதற்காகத்தான் ஒருவருக்கு முன்னால் அவரைப் புகழ வேண்டாம் என்று நபி ஸல் அவர்கள் தடுத்தார்கள். பெருமையும் முகஸ்துதியும் ஒரு காரியத்தை ஒன்றும் இல்லாமல் ஆக்கி விடும்.  எந்தக் காரியமும் இறைவனுக்காக செய்யப்பட வேண்டும். இறை பொருத்தத்தை முன்னிருத்தி செய்யப்பட வேண்டும்.

சமூக சேவைகளில்,மக்களுக்காக ஆற்றும் களப்பணிகளில் முன்னுதாரணமாக, அதில் தனி முத்திரை பதிப்பவர்களாக மட்டுமின்றி மற்ற தலைவர்களைப்போன்று மற்ற இயக்கவாதிகளைப் போன்றில்லாமல் அதை தூய எண்ணத் தோடும் கலப்பற்ற இதயத்தோடும் செய்தவர்கள் அண்ணலம் பெருமானார் ஸல் அவர்களும் அவர்களின் தோழர்களும். குறிப்பாக உமர் ரலி அவர்கள் அதில் தன்னிகரில்லாத வர்களாக விளங்கினார்கள்.

ஹஜ்ரத் அபூபக்கர் உமர் ரலி போன்றவர்கள் இரவு நேரங்களில் செய்த சமூக சேவைகளை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

உமர் ரலி அவர்கள் செய்த இரவு நேரப்பணிகள் நிறைய உண்டு.நீதத்தின் மறு உருவமாக, பார் போற்றும் தலைவராக சிறந்த அரசியல் வாதிக்கு இலக்கணமாக இப்படி பல்வேறு அடையாளங்களைக் கொண்டிருந்த ஹள்ரத் உமர் ரலி அவர்கள் பகல் நேரத்தில் செய்த சேவைகளை விட இரவு நேரங்களில் செய்த சேவைகளும் உதவிகளும் தான் அதிகம். தான் மிகப்பெரிய சமூகத் தலைவர் என்ற உணர்வோ தான் ஒரு ஜனாதிபதி என்ற உணர்வோ இல்லாமல் செய்கின்ற அமல்களை மக்களுக்கு காட்டி புகழைத் தேடாமல் எத்தனை அரப்பணிகளை செய்தவர்கள் ஹள்ரத் உமர் ரலி அவர்கள்.

روي عنه أنّه كان يقول: (إنّي والله لأكون كالسراج، يحرق نفسه ويضيء للناس

தன்னை அழித்துக் கொண்டு பிறருக்கு ஒளி கொடுக்கும் விளக்கைப் போல நான் என உமர் ரலி அவர்கள் கூறினார்கள்.

இன்றைக்கு விளம்பரத்திற்காக மக்கள் பார்த்து புகழ வேண்டும் என்பதற்காக இல்லாத குப்பையை எடுத்துப் போட்டு அதை பொறுக்குவதைப் போன்று போஸ் கொடுத்து ஊரையும் உலகத்தையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். முழங்கால் வரை கூட இல்லாத தண்ணீரில் போர்ட் ஓட்டி மக்களுக்கு உதவி செய்வதைப் போல் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். அது நடிப்பென்று எல்லாருக்குமே வெட்ட வெளிச்சா தெரிகிறது.ஆனால் அது தெரியாமல் அவர்கள் அப்படி செய்து அதை படம் பிடித்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த அர்ப்பணிப்பு உணர்வும் மனத்தூய்மையும் நம்மிடம் வர வேண்டும்.அப்போது தான் நாம் செய்கின்ற சேவைகள் இறைவன் பொறுத்தத்தைப் பெற்றுத்தரும்.

மழை பெய்து பலரும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிற இவ்வேளையில் அவர்களுக்கு நாம் உதவிக் கரம் நீண்ட வேண்டும்.

 

 

 

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. மாஷாஅல்லாஹ் மாஷாஅல்லாஹ் மாஷாஅல்லாஹ் அருமையான பதிவு அருமையான ஆக்கத்தை உருவாக்கிய ஆசிரியர் அவர்களுக்கு அல்லாஹ் எல்லா விதமான நற் பாக்கியங்களையும் நீடித்த ஆயுளையும் நிறைந்த செல்வத்தையும் பரிபூரண ஆரோக்கியத்தையும் நோய்நொடி இல்லாத வாழ்வையும் பூரண ஈமானையும் இறைவன் வழங்கி இது போன்ற ஆக்கப்பூர்வமான பதிவுகளை மென்மேலும் பதிவு செய்வதற்கு இறைவன் கிருபை செய்வானாக ஆமீன்.

    ReplyDelete
  3. அற்புதமான தகவல் அல்லாஹ் தங்களுக்கும் எனக்கும் நம் அனைவருக்கும் அமல் செய்ய தவ்ஃபீக் செய்வானாக ஆமீன்

    ReplyDelete