Tuesday, April 26, 2022

நாங்கள் தொழக்கூடியவர்களாக இல்லை

 

ما سلككم في سقر قالوا لم نك من المصلين

அவர்கள் சுவனத்தில் இருந்து கொண்டு குற்றவாளிகளை நோக்கி உங்களை நரகத்தில் புகுத்தியது எது என்று கேட்பார்கள். அதற்கவர்கள், நாங்கள் தொழ வில்லை என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் ; 74 : 40,41)

 

தொழுகை இஸ்லாமியக் கடமைகளில் மிகவும் முக்கியமானது. மிகவும் பிரதானமானது. ஈமானுக்கு அடுத்து இஸ்லாத்தின் மிக முக்கிய கடமைகளாக இருக்கிற நான்கு கடமைகளில் தொழுகை தான் முதன்மையானது என்பது அநேகமான இமாம்களில் கருத்து. ஏனென்றால் நோன்பைப் பொருத்த வரை 8 பிரிவினருக்கு நோன்பை விட்டுக் கொள்வதற்கு இஸ்லாம் அனுமதி வழங்கியிருக்கிறது. ஜகாத்தைப் பொருத்த வரை எல்லோர் மீது கடமையில்லை. பொருளாதாரத்தில் குறிப்பிட்ட அளவை எட்டாதவர்கள் ஜகாத்தை கொடுக்கத் தேவையில்லை. ஹஜ்ஜை எடுத்துக் கொண்டால் உடலாலும் பொருளாலும் வசதியுள்ளர் மீது தான் கடமை. மற்றவருக்கு இல்லை. இவ்வாறு மற்ற கடமைகளில் சிலருக்கு சலுகைகள் வழங்கப் பட்டிருப்பதைப் போல் தொழுகையில் சலுகை வழங்கப்பட வில்லை. பயணங்களில் 4 ஐ 2 ஆக தொழுவது அல்லது அவசியத் தேவையிருந்தால் கொஞ்சம் நேரம் தாமதித்து தொழுவது அல்லது பள்ளிக்கு வர முடியாததற்கு இஸ்லாம் கூறுகிற காரணங்களில் ஏதேனும் ஒன்று இருந்தால் வீட்டில் தொழுவது நிற்க முடியாதவர் அமர்ந்து தொழுவது இப்படித்தான் சலுகைகள் வழங்கப்பட்டிருக்கிறதே தவிர தொழுகையை விடுவதற்கு அனுமதி வழங்கப்பட வில்லை. ஒருவன் பருவ வயதை அடைந்ததிலிருந்து மரணம் வரை தொழுவது அவன் மீது கட்டாயக் கடமையாகும். அந்த வகையில் மற்ற கடமைகளை விட தொழுகை மிக உயர்ந்தது.

 

தொழுகையில் நிறைய நன்மைகள் இருப்பதாக எண்ணற்ற பிரயோஜனங்கள் இருப்பதாக குர்ஆனூம் ஹதீஸும் நமக்கு கூறுகிறது. இன்றைக்கு தராவீஹில் ஓதப்பட்ட ஒரு வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான் ;

 

اذا مسه الشر جزوعا واذا مسه الخير منوعا الا المصلين

மனிதன் அவசரக்காரணாக படைக்கப்பட்டுள்ளான்.அவனை ஒரு தீங்கு தொட்டு விட்டால் பதறுகிறான். அவனை ஒரு நன்மை தொட்டால் (அது பிறருக்கு கிடைக்காதவாறு) தடுத்துக் கொள்கிறான்.தங்கள் தொழுகையின் மீது நிலைத்திருக்கிற தொழுகையாளிகளைத் தவிர. (அல்குர்ஆன் : 70 ; 19,20,21,22,23)

 

இன்றைக்கு வாழ்க்கை பதட்டம் என்றாகி விட்டது. எங்கும் பதட்டம்,எதிலும் பத்தட்டம், பதட்டமில்லாதவர்களைப் பார்ப்பது மிக மிக அரிதாகிப்போனது.ஆனால் அந்தப் பதட்டம் தொழுகையாளிகளுக்கு இருக்காது என்று அல்லாஹ் கூறுகிறான். எனவே வாழ்க்கையில் நிம்மதியும் அமைதியும் தொழுகையில் இருக்கிறது.

 

ولقد نعلم انك يضيك صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين

அவர்கள் சொன்ன வார்த்தைகளால் உமது உள்ளம் நெருக்கடியாவதை நாம் அறிவோம்.எனவே நீங்கள் உங்கள் இறைவனை புகழ்ந்து துதிப்பீராக! ஸுஜூது செய்பவர்களில் நீங்களும் ஆகி விடுவீராக. (அல்குர்ஆன் 15 ;97,98)

 

மன இறுக்கத்திற்கும் நிம்மதியின்மைக்கும் பதட்டமான சூழ்நிலைக்கும் அருமருந்தாக தொழுகையை இறைவன் இவ்வசனத்தில் குறிப்பிட்டுக் காட்டுகிறான்.

 

நபி  அவர்கள் இந்த உலகை விட்டுப் பிரிகின்ற அந்த கடைசி தருணத்தில் அவர்கள் தன் சமூகத்திற்கு வலியுறுத்திக் கூறிய மிக முக்கியமான விஷயமாக தொழுகை தான் இருந்தது.  அருமை ஸஹாபா பெருமக்களின் சிந்தனையும் எண்ணமும் கவலையும் முழுக்க முழுக்க தொழுகையில் தான் இருந்திருக்கிறது.

 

إن يخرج وأنا فيكم ! فأنا حجيجه دونكم ، وإن يخرج ولست فيكم ، فامرؤ حجيج نفسه ، والله خليفتي على كل مسلم ، فمن أدركه منكم فليقرأ عليه فواتح سورة الكهف ، فإنها جواركم من فتنته . قلنا : وما لبثه في الأرض ؟ قال : أربعون يوما : يوم كسنة ويوم كشهر ، ويوم كجمعة ، وسائر أيامه كأيامكم فقلنا : يا رسول اللهِ : هذا اليوم الذي كسنة أتكفينا فيه صلاة يوم وليلة ؟ قال : لا ، اقدروا له قدره ، ثم ينزل عيسى بن مريم ، عند المنارة البيضاء شرقي دمشق فيدركه عند بًاب لد فيقتله

 

அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம்  அவர்கள்நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ஒரு வருடம் போன்றும்மற்றொரு நாள் ஒரு மாதம் போன்றும்,அடுத்த நாள் ஒரு வாரம் போன்றும்ஏனைய நாட்கள் இன்றைய நாட்களைப் போன்றும் இருக்கும்” என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஒரு வருடத்தைப் போன்ற அந்த நாளில் ஒரு நாள் தொழுகை எங்களுக்குப் போதுமா?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்போதாதுஅதற்குரிய அளவை அதற்காக (தொழுகைக்காக) கணித்துக் கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள். (அபூதாவூது 4321)

 

கியாமத்தின் அடையாளங்களில் ஒன்றான தஜ்ஜாலைக் குறித்து நபி  அவர்கள் கூறும் போது, அந்த நேரத்தில் கூட ஸஹாபாக்களின் சிந்தனையும் எண்ணமும் தொழுகையைக் குறித்துத்தான் இருந்தது என்பதை இந்த ஹதீஸ் விவரிக்கிறது. 

 

இஸ்லாத்தின் இரண்டாம் ஜனாதிபதியும் நீதத்தின் மறுஉருவமும் யாரின் நாவில் அல்லாஹ் பேசுகிறான் என்று அண்ணலம் பெருமானார்  அவர்களால் சோபனம் சொல்லப்பட்டார்களோ அத்தகைய ஹள்ரத் உமர் ரலி அவர்கள் எதிரியால் குத்தப்பட்டு அவர்கள் ஷஹீதாகுவதற்கு காரணமான அந்த எதிரியால் அவர்கள் தாக்கப்பட்டது தொழுகையில் தான் என்பது நமக்கெல்லாம் தெரிந்த செய்தி.அதில் நமக்குத் தெரியாத ஒரு செய்தி என்னவென்றால் மரணத்தின் விழிம்பில் இருந்த அவர்கள் அடிக்கடி மயக்கமுற்று விடுவார்கள். ஆனால் தொழுகை என்ற வார்த்தை அவரின் காதில் விழுந்தவுடன் மயக்கம் தெளிந்து எழுந்து விடுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

 

قال مصعب : سمع عامر بن عبد الله المؤذن وهو يجود بنفسه ، فقال : خذوا بيدي فقيل : إنك عليل ، قال : أسمع داعي الله ، فلا أجيبه ، فأخذوا بيده ، فدخل مع الإمام في المغرب ، فركع ركعة ، ثم مات . المنتقي شرح مؤطا مالك

அமிர் பின் அப்துல்லாஹ் ரலி அவர்கள் நோயுற்று எழுந்து நடப்பதற்கு இயலாதவர்களாக இருந்தார்கள்.அப்போது பாங்கு சப்தத்தைக் கேட்டவுடன் என் கையைப் பிடித்து என்னை தொழுகைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்றார்கள். நீங்கள் இயலாமல் இருக்கிறீரே என்று கேட்கப்பட்ட போது அல்லாஹ்வின் அழைப்பை நான் கேட்டு விட்டேன். எப்படி அதற்கு பதில் சொல்லாமல் இருக்க முடியும் என்று சொன்னார்கள். அவரை அழைத்துச் சென்றார்கள். மக்ரிப் தொழுகையின் ஜமாஅத்தில் கலந்து கொண்டு ரூகூவிற்கு சென்றார்கள். அந்த நிலையிலேயே அவர்களுக்கு மரணம் சம்பவித்து விட்டது. (முன்தகா ஷரஹு முஅத்தா மாலிக்)

 

எனவே அருமை ஸஹாபாக்களைப் பொறுத்த வரை தொழுகை என்பது வெறும் கடமையல்ல. தொழுகையை அவர்கள் வெறும் கடமையாக மட்டும் பார்க்க வில்லை.அதை தங்கள் உயிராகக் கருதினார்கள்,தங்கள் உயிர் மூச்சாக நினைத்தார்கள்.அதன் ஆழத்தை விளங்கினார்கள், யாரும் எதிலும் காணாத இன்பத்தையும் சுகத்தையும் அவர்கள் தொழுகையில் கண்டார்கள்.  தொழுகை உயிர் மூச்சாக இருந்த காரணத்தினால் தான் ஹயாத்தாக இருக்கிறார்களா மரணித்து விட்டார்களா என்று தெரியாத அளவு மயக்கத்தில் இருந்த உமர் ரலி அவர்கள் தொழுகை என்ற வார்த்தையைக் கேட்டவுடன் மயக்கம் தெளிந்தார்கள், மரணத்தின் விளிம்பில் நின்ற போதும் கூட தொழ வேண்டும் என்று ஆசைப்பட்டு தொழச்சென்று அந்த தொழுகையிலேயே தன் உயிரை விட்டார்கள்.

 

தொழுகை என்பது வெறும் கடமையென்று தொழாமல் அதில் உள்ள இன்பத்தை உணர்ந்து தொழ வேண்டும்.உண்மையில் ஒருவர் தொழுகையில் இன்பத்தை உணர்ந்து விட்டால் ஒருக்காலும் அந்த தொழுகையை விட மாட்டார்.அப்படியே விட்டு விட்டாலும் அதை சாதாரணமாக நினைக்க மாட்டார்.

 

• ﺳﻠﻴﻤﺎﻥ عليه السلام ﻳﻀﺮبُ ﺃﻋﻨﺎقَ ﺧﻴﻠﻪ ﻭﺳﻮقَها؛ لأنها ﺷﻐﻠَﺘﻪ ﻋﻦ ﺻﻼﺓ ﺍﻟﻌﺼﺮ ﴿ حَتَّى تَوَارَتْ بِالْحِجَابِ ﴾ [ص: 32]؛ إﻧَّﻬﺎ الصلاة.

அஸர் தொழுகை தவறுவதற்கு காரணமாக இருந்த அத்தனை குதிரைகளையும் சுலைமான் நபி அலை அவர்கள் குர்பானி கொடுத்தார்கள் என்று குர்ஆன் கூறுகிறது.

 

عنِ النَّبيِّ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ أنَّهُ قالَ يومَ الأَحزابِ : حَبَسونا عَن صلاةِ الوُسطى صَلاةِ العَصرِ حتَّى غربتِ الشَّمسُ ، ملأَ اللَّهُ قبورَهُم وبيوتَهُم أو قبورَهُم وبطونَهُم نارًا قالَ شعبةُ : ملأَ اللَّهُ قبورَهُم وبيوتَهُم أو قبورَهُم وبطونَهُم نارًا لا أَدري أفي الحديثِ هوَ أم ليسَ في الحديثِ أشُكُّ فيهِ .

அஹ்ஸாப் (அரபுக் குலங்கள் அனைத்தும் ஒன்றுதிரண்டு தாக்க வந்த அகழ்ப்) போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்அல்லாஹ் (எதிரிகளுடைய) வீடுகளையும் புதை குழிகளையும் நெருப்பால் நிரப்புவனாக! அவர்கள் சூரியன் மறையும் நேரம் வரை நடுத் தொழுகை(யான அஸர் தொழுகை) யிலிருந்து நமது கவனத்தைத் திருப்பி விட்டார்கள் என்று கூறினார்கள். (புகாரி 2931)

 

என்றைக்குமே தங்கள் வாழ்வில் யாரையும் பத்வா செய்து பழக்கப்படாத அருமை நாயகம்  அவர்கள் அஸர் தொழ விடாமல் தடுத்த அவர்களுக்கு எதிராக துஆ செய்தார்கள் என்றால் தொழுகையின் மீது அவர்களுக்கு இருந்த அதீத ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் பார்க்க முடிகின்றது.

 

ثلاثة لا تؤخرها: الصلاة إذا أتت، والجنازة إذا حضرت، والأيم إذا وجدت كفؤا

நபி  அவர்கள் ஹள்ரத் அலி ரலி அவர்களைப் பார்த்து சொன்னார்கள் ; மூன்று விஷயங்களை பிற்படுத்தாதே. 1, நேரம் வந்து விட்டால் தொழுகையை. 2, மரணித்து விட்டால் அடக்கம் செய்வதை. 3, பெண்ணிற்கு தகுந்த ஜோடி அமைந்து மணமுடிப்பதை. (திர்மிதி 1075)

 

 

அல்லாமா இப்னுல் கைய்யிம் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ; தொழுகை விஷயத்தில் மக்கள் ஐந்து வகையாக இருக்கிறார்கள். 1, தண்டனைக்குரியவர், 2, கேள்வி கேட்கப்படுபவர். 3, பாவங்கள் மன்னிக்கப்படுபவர். 4, கூலி வழங்கப்படுபவர். 5, இறை நெருக்கத்தைப பெறுபவர்.

 

1, சரியாக ஒழு செய்யாமல் தொழுகையின் நேரங்களைப் பேணாமல் அதன் வாஜிபுகளை ஃபர்ளுகளைப் பேணாமல் தொழுபவர் தண்டனைக்குரியவர்.

 

2, மேற்சொன்ன விஷயங்கள் சரியாக இருக்கும். ஆனால் தொழுகையில் உலக விஷயங்களை சிந்தித்துக் கொண்டு, அதனால் ஓர்மையின்றி மனக்குழப்பங்களோடு தொழுவார். இவர் அல்லாஹ்விடம் அதற்காக கேள்வி கேட்கப்படுவார்.

 

3, தொழுகையில் வெளிச்சிந்தனைகள் வராமல் இருக்க ஷைத்தானோடு கடுமையாக போராடுவார்.இவரின் பாவங்களை அந்த தொழுகை இல்லாமல் ஆக்கி விடும்.

 

4, தொழுகையின் முஸ்தஹப்புகளை சுன்னத்துக்களை வாஜிபுகளை ஃபர்ளுகளை தொழுகையின் அத்தனை அம்சங்களை முறையாக செய்ய வேண்டும் என்பதில் அவரின் முழுக்கவனமும் இருக்கும். இவர் கூலி வழங்கப்படுபவர்.

 

5, மேற் சொன்ன அனைத்தும் இருப்பதோடு இறைச்சிந்தனை மட்டுமே அவர் உள்ளத்தில் இருக்கும்.படைத்தவனை பார்க்கிறோம் என்ற உணர்வோடு அவர் தொழுகை அமைந்திருக்கும்.இவர் இறை நெருக்கத்தைப் பெற்றவர்.     

 

சரியாக ஒழு செய்யாமல் தொழுகையின் நேரங்களைப் பேணாமல் அதன் வாஜிபுகளை ஃபர்ளுகளைப் பேணாமல் உலக சிந்தனையோடு தொழுபவர்களே தண்டனைக்குரியவர்கள் என்றால் தொழாதவர்களின் நிலை என்ன என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தொழாமல் இருந்த காரணத்தினால் தான் நாங்கள் நரகிற்கு வந்தோம் என்று நரகவாசிகள் கூறுவதாக பார்க்கிறோம்.

இன்றைக்கு நம்மில் நிறைய பேர் தொழுகிறோம். ஆனால் பெரும்பாலும் நம் தொழுகைகளை ரமலானோடு நிறுத்திக் கொள்கிறோம். ரமலான் என்ற குருகிய வட்டத்தோடு நம் தொழுகைகளை சுறுக்கிக் கொள்கிறோம். தொழுகை என்பது  ரமலானுக்கு மட்டுமல்ல.ரமலானுக்குப் பிறகும் நம் அமல்களைத் தொடர வேண்டும். அவ்வோறு தொடரும் போது தான் ரமலான் நமக்கு பாக்கியமானதாக இருக்கும். அல்லாஹ் தவ்ஃபீக் செய்வானாக

No comments:

Post a Comment