Thursday, April 21, 2022

ஆலோசனை அவசியம்

 

وَالَّذِينَ اسْتَجَابُوا لِرَبِّهِمْ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَمْرُهُمْ شُورَىٰ بَيْنَهُمْ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُون

அவர்கள் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை  நிலை நிறுத்துவார்கள். இன்னும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வார்கள்;  நாம் அவர்களுக்கு அளித்த வற்றிலிருந்து செலவு செய்வார்கள். [அல்குர்ஆன் : 42  ; 38]

அல்லாஹ்வின் நல்லடியார்களை அடையாளப்படுத்தும் அல்லாஹ் அதில் ஒரு அம்சமாக ஆலோசனை செய்வதைக் குறிப்பிடுகிறான்.

உலகத்தில் மற்ற உயிரினங்களை விட மனிதனுக்கு அல்லாஹுத் தஆலா அறிவை விசாலமாக கொடுத்திருக்கிறான்.ஆனால் அவனது அறிவு நல்லதையும்,தீயதையும் தனித்தனியே பிரித்துக் காட்டினாலும் பல சமயங்களில் அவன் தன் மனோ இச்சைக்குக் கட்டுப்பட்டு தவறான வழிகளிலும் தீய பாதைகளிலும் சென்று விடுகிறான்.

அதனால் அவனை நல்வழிப்படுத்தவும், அவனை சரி செய்யவும் பிறரின் உபதேசங்களும், ஆலோசனைகளும் அவனுக்குத் தேவைப்படுகிறது. இவற்றை கவனத்தில் கொண்டு தான் இஸ்லாம் மஷ்வரா அதாவது ஆலோசனை என்ற அருமையான திட்டத்தை அடையாளம் காட்டியுள்ளது.

சில சமயங்களில் சிக்கலான சந்தர்ப்பங்களும், தீர்வு காண முடியாத பிரச்சனைகளும் நம் வாழ்க்கையில் நிகழும். அந்த சிக்கலிலிருந்தும், அந்த பிரச்சனைகளிலிருந்தும் வெளிவரும் வழி தெரியாமல் தவிக்கிற போது அல்லாஹுத்தஆலா நமக்கு நெருக்கமானவர்களின் மூலம் சில ஆலோசனைகளை கூறி நம்மை அந்த சிக்கலிலிருந்து விடுவிக்கிறான்.

அந்நேரத்தில் வயது,அறிவு,அனுபவம் என்று பாராமல் நல்ல ஆலோ சனைகளை யார் வழங்கினாலும் ஏற்று செயல் பட வேண்டும்.நபி அவர்கள் தன் தோழர்களுக்கு பல சமயங்களில் ஆலோசனைகளை வழங்கியும் இருக்கிறார்கள்.சில சமயங்களில் அவர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்றும் இருக்கிறார்கள்.அதன் வழியே பிரச்சனைகளுக்கு தீர்வும் கண்டிருக்கிறார்கள்.

நாம் நமது வாழ்வில் ஒரு காரியத்தை செய்யலாமா?வேண்டாமா?என்று  தடுமாற்றம் வரும் போது  அதிலிருந்து தெளிவான முடிவு  எடுப்பதற்கு இரண்டு  வழிமுறைகளை இஸ்லாம் கற்றுத் தருகிறது.ஒன்று: இஸ்திகாரா  மற்றொன்று  இஸ்திஷாரா. இந்த இரு காரியங்களில் எது எனக்கு இம்மைக்கும் மறுமைக்கும் நலவைத் தருமோ அதை எனக்கு சாதகமாக்கு.எதில் இம்மைக்கும் மறுமைக்கும் எனக்கு நலவில்லையோ அதை எனக்கு பாதமாகமாக்கு என்று தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தை புரிந்து ஒரு காரியத்தை செய்வதற்குப் பெயர் இஸ்திகாரா.

எந்த விஷயத்தைக் கையாளலாம் என்று தடுமாற்றம் வரும் வேளையில் நம்மை விட அறிவிலும் அனுபவத்திலும் சிறந்த அதே சமயம் நம் மீது அக்கரை கொண்டவர்களிடம் ஆலோசனை கேட்டு ஒரு காரியத்தை செய்வதற்குப் பெயர் இஸ்திஷாரா.

அல்லாஹ் திருக்குர்ஆனில் நபி  அவர்களின் மகத்தான வெற்றிக்குப் பின் இருக்கும் செயல்பாடுகளை கூறும் போது  மஷ்வராவை  பிரதான மாக எடுத்துரைக்கின்றான்

فَبِمَا رَحْمَةٍ مِنَ اللَّهِ لِنْتَ لَهُمْ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانْفَضُّوا مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ

அல்லாஹ்வின் அருளால் தான் நீங்கள் அவர்களிடம் மென்மையாக நடந்து கொள்கிறீர்கள்.நீங்கள் கடுகடுப்பானவராகவோ கடின சித்தமுடை யவராகவோ இருந்திருந்தால் அவர்கள் உங்களை விட்டும் விரண்டோடியிருப்பார்கள்.எனவே அவர்களின் தவறுகளை மன்னித்து விடுவீராக.அவர்களுக்காக மன்னிப்பு தேடுவீராக.சகல காரியங்களிலும் அவர்களுடன் ஆலோசனை செய்யுங்கள்.நீங்கள் ஒன்றை முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைய்யுங்கள்.நிச்சயமாக அல்லாஹ் தன் மீது நம்பிக்கை வைப்பவர்களை நேசிக்கிறான்.[3;159]

கடந்த கால இன்னும் வருங்கால ஞானங்கள் அனைத்தும் கொடுக்கப்பட்ட நபிகள் நாயகம் அவர்களையே தங்களின் காரியங்களில் ஆலோசனை செய்து கொள்ளும்படி அல்லாஹ் உத்தரவிடும் போது நம்மைப்போன்ற குறுமதி கொண்டவர்கள் கட்டாயமாக ஆலோசனை செய்து கொள்ள வேண்டும் என்பதை இந்த வசனம் அழுத்தமாக பேசுகின்றது.

يقول أبو هريرة رضي الله عنه: "ما رأيت أكثر مشورة لأصحابه من رسول الله صلى الله عليه وسلم لأصحابه

நபி அவர்கள் தம் தோழர்களிடம் ஆலோசனை செய்தது போல வேறு யாரும் தம் தோழர்களிடம் ஆலோசனை செய்ய நான் கண்ட தில்லை என ஹழ்ரத் அபூஹுரைரா ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

وشاور علياً وأسامة فيما رمى به أهل الإفك عائشة رضي الله عنها، فسمع منهما

அன்னை ஆயிஷா ரலி அவர்கள் மீது அன்றைக்கு இருந்த மக்கள் இட்டுக்கட்டிய போது ஹழ்ரத் அலி ரலி, உஸாமா ரலி போன்ற சின்ன வயதினர்களிடம் நபி அவர்கள் ஆலோசனை செய்தார்களென்பதை ஹதீஸ்களில் காணக்கிடைக்கிறது.

إِنْ أَرَادَا فِصَالاً عَنْ تَرَاضٍ مِنْهُمَا وَتَشَاوُرٍ فَلا جُنَاحَ عَلَيْهِمَا

தாய் தந்தை இருவரும் மனம் இணங்கி கலந்தாலோசித்து பால்குடியை நிறுத்த விரும்பினால் அது அவர்கள் இருவர் மீது குற்றமில்லை. (2 ;233)

குழந்தையின் பால் குடியை நிறுத்துவது போன்ற சின்ன விஷயங்களில் கூட ஆலோசனை அவசியம் என்று திருக்குர்ஆன் போதிப்பதை பார்க்க முடிகின்றது.

ஒரு நாள் தினம் நபி அவர்கள் தன் தோழர்களை அழைத்துக் கொண்டு உம்ரா செய்வதற்காக மக்காவை நோக்கி வந்தார்கள். ஆனால் மக்கா வாசிகளோ அவர்களை மக்காவினுல் நுழைய அனுமதி மறுத்தார்கள். அந்நேரத்தில் ஹுதைபியா என்ற இடத்தில் அவர்களுக்கும் மக்கா வாசிகளுக்கும் மத்தியில் ஓர் உடன்படிக்கை கையெழுத்தானது. ஆனால் அந்த உடன்படிக்கையின் நிபந்தனைகள் நபித்தோழர்களுக்கு திருப்தியளிக்க வில்லை.அவர்கள் பெரும் சோகத்தில் மூழ்கிப் போனார்கள். நபி அவர்கள், தோழர்களே எழுந்திருங்கள். உங்களது பிராணிகளை அறுத்துப் பழியிடுங்கள், உங்கள் தலைகளை மழித்துக் கொள்ளுங்கள் என்ற போது யாரும் செவிமடுக்க வில்லை.

நபியின் வார்த்தைக்கு மாறு செய்வது நபித்தோழர்களின் நோக்க மல்ல. ஒப்பந்தத்தில் இருக்கும் நிபந்தனைகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பது தான் அவர்களின் எதிர்பார்ப்பு. எனவே தான் யாரும் எழுந்திருக்க வில்லை.அவர்களை எப்படி சமாதானம் செய்வது என்று நபியவர்கள் யோசித்த போது அவர்களின் மனைவி உம்மு ஸலமா [ரலி] அவர்கள் தான், நபியே நீங்கள் முதலில் உங்களது பிராணியை அறுத்து, உங்கள் தலை முடியைக் களையுங்கள் என்ற அருமையான ஆலோசனையை வழங்கினார்கள்.

அவ்வாலோசனையை ஏற்று நபியும் அவ்வாறு செய்தார்கள்.அதைப் பார்த்த பிறகு அத்தனை தோழர்களும் நபிக்கு இணங்கினார்கள். இந்த ஆலோசனை தான் நடக்க விருந்த ஒரு போர் தடுக்கப்பட்டு சமாதானம் ஏற்பட வழிவகை செய்ததாக வரலாறு கூறுகிறது.

ஆலோசனை செய்வது எந்தளவு அவசியம் என்பதையும் அதன் மூலம் தான் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என்பதையும் இந்த நிகழ்வு நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.

ஆலோசனை அவசியம் என்று கூறி அதனை வலியுறுத்திய இஸ்லாம் அதற்கென்று சில ஒழுங்கு முறைகளை கற்றுத்தருகிறது.

1, தகுதியானவர்களிடம் ஆலோசனை தேட வேண்டும். மருத்துவம் பற்றி மருத்துவர்களிடமும் மார்க்கம் பற்றி படித்த ஆலிம்களிடமும் ஆலோசனை தேட வேண்டும். பொறியியல் துறைச்சார்ந்த வேலைகளுக்கு டாக்டரையோ,நோயாளிகளை குணப்படுத்த இஞ்சினியரோ நாம் அனுகினால் நமக்கு சரியாக முறையாக காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற ஆலோசனைகள் வழங்கப்படாது. அதனால் தான் துறை சார்ந்தவர்களிடம் ஆலோசனை கேட்கும்படி இஸ்லாம் கூறும்.

2, இஸ்லாமிய ஷரீஅத்தில் எது கூடும் எது கூடாது எது நன்மை எது தீமை என்று தெளிவாக கூறப்பட்டுள்ளதோ அவைகளில் ஆலோசனை செய்வது கூடாது.தொழலாமா?தொழ வேண்டாமாமதுவை நிறுத்த லாமா? நிறுத்த வேண்டாமா? என்பது போன்ற விஷயங்களில் ஆலோசனை செய்யக்கூடாது.ஏனெனில் அவைகள் அல்லாஹ்வாலும் அவனது தூதராலும் முடிவு செய்யப்பட்டவை.அல்லாஹ்வும் அவனது தூதரும் முடிவு செய்து விட்ட விஷயங்களில் நமக்கு எந்த விருப்பமும் அபிப்ராயமும் கிடையாது என்று அல்லாஹ் கூறிவிட்டான்.

وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّـهُ وَرَسُولُهُ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால்அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை

3.எவரிடம் ஆலோசனை செய்யப்படுகிறதோ அவர் நம்பிக்கைக் குரியவராக இருக்க வேண்டும்.ஆலோசனை செய்யப்பட்ட அந்த விஷயம் அமானிதம் என்பதை விளங்கியவராக இருக்க வேண்டும்.

 

4.எவரிடம் மஷ்வரா தேடப்படுகிறதோ அவர் தேடுபவரின் நன்மையை கருத்தில் கொண்டு சரியான ஆலோசனை வழங்க முற்பட வேண்டும்.எந்த ஒரு மனிதன் தன் சகோதர முஸ்லிமிடம் ஆலோசனை தேடி,அவருக்கு தவறான ஆலோசனை வழங்குவாரானால் அவர் அவருக்கு மோசடி செய்துவிட்டார் என நபி அவர்கள் கூறினார்கள்.

ما خاب من استخار ولا ندم من استشار، ولا عال من اقتصد.

இஸ்திகாரா செய்தவன் நஷ்டப்படமாட்டான்.ஆலோசனை செய்தவன் வருத்தப்படமாட்டான்.பொருளை நடுநிலையாக செலவு செய்தவன் ஏழையாக மாட்டான். (தப்ரானி)

அல்லாஹுத்தஆலா நம் வாழ்வில் ஏற்படும் அனைத்து சிக்கல் களையும் தீர்ப்பதற்கு சிறந்த ஆலோசகர்களை நமக்கு அடையாளம் காட்டுவானாக ஆமீன்.

 

1 comment:

  1. மாஷா அல்லாஹ் அருமையான கட்டுரை

    ReplyDelete