Thursday, December 22, 2022

இறைவன் கொடுத்த அறிவுக்கு இறைவனிடமே கூலியா ?

 

அல்லாஹுத்தஆலா பூமியில் மனிதனைப் படைத்து மனித வாழ்க்கைக்குத் தேவையான மனிதன் உயிர் வாழ்வதற்கு அவசியமான அனைத்தையும் அவனே வழங்கியிருக்கிறான். பூமியில் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிற அனைத்தும் ரப்புல் ஆலமீன் தந்தவை. உண்ணும் உணவு, தங்கும் இருப்பிடம், உடுத்தும் உடை,செலவழிக்கும் பணம், அறிவு,ஆற்றல்,திறமை,நம் பேச்சு முதல் மூச்சு வரை அனைத்தும் இறைவன் அளித்தவை. நம் கையில் இருப்பவை அனைத்தும் நம் உடமை அல்ல, இறைவுடைமை. இந்த சிந்தனை நமக்கு வேண்டும்.

குர்ஆன் நெடுகிலும் பல வசனங்களின் வழியாக இறைவன் இந்த சிந்தனையை மனித உள்ளங்களில் விதைக்கிறான்.

وَآتُوهُم مِّن مَّالِ اللَّهِ الَّذِي آتَاكُمْ 

அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருளிலிலிருந்து அவர்களுக்குக் கொடுங்கள். (அல்குர்ஆன் : 24 ; 33)

لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ وَمَا بَيْنَهُمَا وَمَا تَحْتَ الثَّرٰى‏

வானங்களிலும், பூமியிலும், இவைகளுக்கு மத்தியிலும், இன்னும் பூமிக்குக் கீழ் புதைந்து கிடப்பவைகளும் அவனுக்கே சொந்தமானவை. (அல்குர்ஆன் : 20:6)

اٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَاَنْفِقُوْا مِمَّا جَعَلَـكُمْ مُّسْتَخْلَفِيْنَ فِيْهِ‌ فَالَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ وَاَنْفَقُوْا لَهُمْ اَجْرٌ كَبِيْرٌ‏

ஆகவே, (மனிதர்களே! நீங்கள்) அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்ளுங்கள். இன்னும், அல்லாஹ் உங்களுக்கு முன் சென்றவர்களின் எப்பொருள்களுக்கு உங்களைப் பிரதிநிதிகளாக ஆக்கினானோ அப்பொருள்களிலிருந்து நீங்கள் தானம் செய்யுங்கள். உங்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு தானம் செய்கின்றார்களோ, அவர்களுக்குப் பெரியதொரு கூலி உண்டு. (அல்குர்ஆன் : 57:7)

وَأَنفِقُوا مِن مَّا رَزَقْنَاكُم

நாம் உங்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து செலவு செய்யுங்கள். (அல்குர்ஆன் : 63 ; 10)

இதுபோன்ற வசனங்கள் நமக்கு உணர்த்தும் செய்தி என்னவென்றால் நம் கையிலுள்ளவை அனைத்தும் நமக்கு சொந்தமல்ல. அவை இறைவனுக்கு சொந்தம். அவைகளுக்கு உண்மையான உரிமை யாளர்கள் நாமல்ல. அவற்றிற்கு உரிமையாளன் இறைவன் தான்.

இந்த உணர்வு இறை நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். இந்த உணர்வு வந்து விட்டால் உலகத்தில் போட்டி, பொறாமை இருக்காது.சண்டை,சச்சரவுகள் இருக்காது. யாரும் யாருக்கும் மோசடி செய்ய மாட்டார்கள்.யாரும் யாருடைய பொருளையும் அபகரிக்க மாட்டார்கள்,திருட மாட்டார்கள். யாரும் யாரையும் ஏமாற்ற வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். யாரும் யாரையும் அடித்து சாப்பிட வேண்டும் என்று கருத மாட்டார்கள். அந்த உணர்விருந்தால் நாம் எதற்கும் கவலை கொள்ள மாட்டோம். என் பணம் போய் விட்டது என்று வருந்த மாட்டோம். எனக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டான் என்று யாரின் மீதும் பகைமை கொள்ள மாட்டோம். குறிப்பாக பொருளின் மீது பேராசை நமக்கு அறவே இருக்காது.

ராமநாடு மாவட்டம் வழுதூரில் இறைஇல்லம் ஒன்று திறப்பு விழா கண்டது. வெளிநாட்டு மஸ்ஜித்களுக்கு நிகரான நவீன தொழில் நுட்பக் கலையுடன் மிக பிரமாண்டமான முறையில் வடிவமைத்து கடந்த ஐந்து ஆண்டுகளாக கட்டுமானப்பணி நடந்து கடந்த 18 ம் தேதி பள்ளிவாசல் திறக்கப்பட்டது. பால்பாண்டியன் என்ற சகோதர சமயத்தைச் சார்ந்த ஒரு இன்ஜினியர் அந்தப் பள்ளிவாசல் டிஸைனை வரைந்து கொடுத்திருக்கிறார். அதற்காக அவருக்கு பள்ளி நிர்வாகம் 8 இலட்ச ரூபாய் வழங்கியிருக்கிறது. ஆனால் அந்த சகோதரர் என் அறிவின் மூலம் இதனை வடிவமைத்தேன். அந்த அறிவை இறைவன் தான் எனக்குக் கொடுத்தான். இறைவன் கொடுத்த அறிவுக்கு இறைவனிடமே எப்படி கூலி வாங்குவது என்று கூறி, அந்த 8 இலட்சத்தையும் பள்ளிவாசலுக்கே திருப்பிக் கொடுத்த அந்த செய்தி ஓரிரு நாட்களாக பரபரப்பாக பேசப்படுகிறது. இப்படி ஒரு சகோதரர் அல்ல பல ஆயிரம் சகோதரர்கள் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்றைக்கு நாம் சிந்தனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய செய்தி, மறுமையை நம்பாத அந்த மாற்று மத சகோதரருக்கு இருக்கின்ற அந்த உணர்வும் நல்லெண்ணமும் மறுமையை நம்பிக்கை கொண்டிருக்கிற நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது? அந்த உணர்வு நம்மிடம் அறவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். என் வீடு, என் சொத்து, நான் திரட்டிய செல்வங்கள்,நான் உருவாக்கிக் கொண்ட வலிமை, நான் பெருக்கிக் கொண்ட அறிவு, நான் வளர்த்துக் கொண்ட திறமை என்று அனைத்தையும் நம் பக்கம் இணைத்துக் கொள்கிறோம். அவை அனைத்தையும் இறைவன் தான் நமக்களித்தான் என்பதை மறந்து விடுகிறோம். அதன் விளைவாகத்தான் பொருளாசை நம்மிடம் மேலோங்கி நிற்கிறது. நம்மிடையே போட்டியும் பொறாமையும் பகைமையும் வளர்ந்து நிற்கிறது. காசு பணத்தை பிறருக்கு கொடுக்க வேண்டும், நல்ல வழிகளில் செலவு செய்ய வேண்டும் என்ற மனம் இல்லாமல் போனது.  

அனைத்தும் இறைவனுக்கே சொந்தம். அனைத்திற்கும் உரிமையாளன் அவன் தான் என்று உணர வேண்டும். ஸஹாபாக்களிடம் அந்த உணர்வு ரொம்பவும் வீரியமாகவே இருந்தது. அதனால் அல்லாஹ்விற்காக எதையும் கொடுப்பதற்கு முன்வந்தார்கள்.

وعَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ رحمه الله قَالَ: «لَمَّا أَقْبَلَ صُهَيْبٌ مُهَاجِرًا نَحْوَ النَّبِيِّ صلى الله عليه وسلم، فَاتَّبَعَهُ نَفَرٌ مِنْ قُرَيْشٍ نَزَلَ عَنْ رَاحِلَتِهِ وَانْتَثَلَ مَا فِي كِنَانَتِهِ، ثُمَّ قَالَ: يَا مَعْشَرَ قُرَيْشٍ لَقَدْ عَلِمْتُمْ أَنِّي مِنْ أَرْمَاكُمْ رَجُلاً، وَايْمُ اللهِ لاَ تَصِلُونَ إِلَيَّ حَتَّى أَرْمِيَ بِكُلِّ سَهْمٍ مَعِي فِي كِنَانَتِي، ثُمَّ أَضْرِبُ بِسَيْفِي مَا بَقِيَ فِي يَدِي مِنْهُ شَيْءٌ، افْعَلُوا مَا شِئْتُمْ، دَلَلْتُكُمْ عَلَى مَالِي وَثِيَابِي بِمَكَّةَ وَخَلَّيْتُمْ سَبِيلِي؟ قَالُوا: نَعَمْ. فَلَمَّا قَدِمَ عَلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم الْمَدِينَةَ قَالَ: "رَبِحَ الْبَيْعُ أَبَا يَحْيَى، رَبِحَ الْبَيْعُ أَبَا يَحْيَى". قَالَ: وَنَزَلَتْ: {وَمِنَ النَّاسِ مَنْ يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللهِ} [البقرة: 207]

ஸுஹைப் அர்ரூமி ரலி அவர்கள் மதீனாவை நோக்கி ஹிஜ்ரத்திற்குப் புறப்பட்ட போது எதிரிகள் பின்தொடர்ந்து அவர்களை சூழ்ந்து கொண்டார்கள். ஸுஹைப் ரலி அவர்கள் தன் வாகனத்திலிருந்து கீழிறங்கி கையிலே அம்பை ஏந்திக் கொண்டு, நான் மிகச்சிறந்த முறையில் அம்பு எய்பவன் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். என் அம்புக் கூட்டிலிருந்து அம்புகள் தீரும் வரை உங்களில் யாரும் என்னை நெருங்க முடியாது. என்னை நெருங்கி வரும் ஒவ்வொருவரும் வீழ்ந்து போவீர்கள். அம்பு தீர்ந்து விட்டால் என்னிடம் உள்ள வாளை வைத்து உங்களிடம் சண்டையிடுவேன். அதற்கும் நிறைய உயிர்கள் பறிபோகும். பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள். அந்த வீரம் செரிந்த வார்த்தைகளைக் கேட்டு எதிரிகள் சற்று மிரண்டு போனார்கள். இருந்தாலும் பெருமானார் அவர்கள் இருக்கும் மதீனாவிற்கு செல்ல வேண்டும் என்ற ஆவலின் மேலீட்டால், வேண்டுமானால் மக்காவில் என் சொத்துக்களும் உடமைகளும் உள்ள இடத்தை உங்களுக்குக் காட்டுகிறேன். அதை எடுத்துக் கொண்டு எனக்கு வழி விடுங்கள் என்று சொன்னார்கள். அவர்களும் வழி விட்டார்கள். ஸுஹைப் ரலி அவர்கள் மதீனா வந்தடைந்ததும் அவர்களைப் பார்த்து நீங்கள் செய்த வியாபாரத்தில் லாபத்தைப் பெற்று விட்டீர்கள் என்று நபி அவர்கள் கூறினார்கள்.

وَمِنَ النَّاسِ مَنْ يَّشْرِىْ نَفْسَهُ ابْتِغَآءَ مَرْضَاتِ اللّٰهِ‌ وَ اللّٰهُ رَءُوْفٌ  بِالْعِبَادِ‏

அல்லாஹ்வின் (திருப்) பொருத்தத்தைப் பெறுவதற்காகத் தன்னுடைய உயிரையே தியாகம் செய்யக்கூடியவர்களும் மனிதர்களில் உண்டு. அல்லாஹ் (இத்தகைய) அடியார்கள்மீது மிகவும் கருணையுடையவன். (அல்குர்ஆன் : 2 : 207)

இந்த வசனம் அவர்களைக் குறித்துத்தான் அருளப்பட்டது. (அத்தபகாத்துல் குப்ரா)

أتيتنا صعلوكا فكثُر مالك عندنا، ثم تريد أن تخرج بنفسك ومالك؟، والله لا يكون ذلك، فقال: أرأيتم إن تركت مالي لكم هل تخلون سبيلي؟، قالوا: نعم، فدلّهم على الموضع الذي خبّأ فيه ماله بمكّة "،

சுஹைப் அர்ரூமி ரலி அவர்கள் நபி அவர்கள் ஹிஜ்ரா சென்ற பின் ஹிஜ்ரத் செல்ல முனைந்த போது குறைஷிக் காஃபிர்கள் இவரைச் சுற்றி வளைத்து ஏ சுஹைபே! நீ எங்களிடம் ஒன்றுமில்லாத பரதேசியாக வந்தாய். எந்த செல்வத்தையும் நீ கொண்டு வர வில்லை. ஆனால், எங்களிடம் வந்தவுடன் செல்வச்செழிப்பு ஏற்பட்டு கொழுத்து விட்டாய். இப்போது நீ உனது செல்வத்துடன் சென்று விடலாம் என்று நினைக்கிறாயா? அல்லாஹ்வின் மீது ஆணையாக! அது ஒருக்காலும் நடக்காதுஎன்று கூறினர். அதற்கு சுஹைப் ரலி நான் எனது செல்வத்தை உங்களுக்குத் தந்து விட்டால் என்னை விட்டு விடுவீர்களா?” என்று கேட்டதற்கு அவர்கள் ஆம்!என்றனர். மக்காவில் அவர்கள் மறைத்து வைத்திருந்த தனது சொத்துக்களை அடையாளப் படுத்தினார்கள்.பின்பு மதீனா வந்து சேர்ந்தார்கள். இச்செய்தி நபி அவர்களுக்கு எட்டிய போது ஸுஹைப் இலாபமடைந்தார்! ஸுஹைப் இலாபமடைந்தார்!என்று கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)

அந்த நேரத்தில் அவர்களிடம் இருந்த வீரத்திற்கும் துணிச்சலுக்கும் அவர்களை எதிர்த்துப் போராடி அவர்கள் அனைவரையும் வீழ்த்தி விட்டு மதீனாவிற்கு வந்திருக்கலாம். இருந்தாலும் அதை அவர்கள் விரும்ப வில்லை. மட்டுமல்ல, தான் சேர்த்து வைத்திருந்த செல்வங்களும் உடமைகளும் தீனுக்கு முன்னால் அவர்களுக்குப் பெரிதாகத் தெரிய வில்லை.காரணம் அவைகள் இறைவன் கொடுத்தவை. அவைகளுக்கு அவனே உரிமையாளன் என்ற எண்ணம் இருந்தது. அதனால் அனைத்தையும் கொடுத்து விட்டு வெறும் கையோடு மதீனாவிற்கு வந்தார்கள்.

فأقبل يومًا إلى رسول الله عليه الصلاة والسلام وعليه ثوبان مخرقان قد لبس الأول فإذا الخروق تظهر بعض جسده فلبس الثوب الثاني فوقه ليغطي خرق هذا بهذا، فلما رآه النبي عليه الصلاة والسلام دمعت عيناه وقال «لقد رأيت هذا وما شاب بمكة أرفه ولا أنعم منه».

முஸ்அப் பின் உமைர் என்ற நபித்தோழர் தீனுக்காக அவர்களின்  சொத்தை, சுகத்தை, வியாபாரத்தை அனைத்தையும் துறந்தார்கள்.                     மதீனாவில் முதலாவதாக ஈமானுடன் கால் வைத்தவர்கள் இவர்கள் தான்.மட்டுமல்ல, மதீனாவில் ஓராண்டு காலம் இவர்கள் மேற்கொண்ட முயற்சியால் 70 க்கும் மேற்பட்டவர்கள் இஸ்லாத்தை தழுவினார்கள். ஒரு நாள் அவர்கள் பெருமானார் அவர்களை சந்திக்க வந்தார்கள். கிழிந்த ஆடையை உடுத்தியதால் உடல் பகுதி தெரிந்தது. அதை மறைப்பதற்கு இன்னொரு ஆடையை அதற்கு மேல் அணிந்திருந் தார்கள். அதுவும் கிழிந்திருந்தது. அந்த நிலையில் அவரைப்பார்த்த நபி அவர்கள்  கண்ணீர் வடித்துக் கொண்டே ஒரு காலத்தில் மக்காவில் இந்த வாலிபர் தான் அதிக சுகபோகத்துடன் வாழ்ந்தார் என்று கூறினார்கள். (சீரத்துஸ் ஸஹாபா)

جاءَ عثمانُ إلى النَّبيِّ صلَّى اللَّهُ علَيهِ وسلَّمَ بألفِ دينارٍ قالَ الحسَنُ بنُ واقعٍ : وفي موضعٍ آخرَ من كتابي ، في كمِّهِ حينَ جَهَّزَ جيشَ العُسرةِ فينثرَها في حجرِهِ . قالَ عبدُ الرَّحمنِ : فرأيتُ النَّبيَّ صلَّى اللَّهُ علَيهِ وسلَّمَ يقلِّبُها في حجرِهِ ويقولُ : ما ضرَّ عثمانَ ما عَمِلَ بعدَ اليومِ مرَّتينِ

 

தபூக் போர்க்களத்தின் போது ஸஹாபாக்கள் அனைவரும் தங்களால் முடிந்தளவு பொருளாதாரத்தை நபி அவர்களிடம் வந்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் உஸ்மான் ரலி அவர்கள் ஷாம் நாட்டு வியாபாரத்திற்கு அனுப்புவதற்காக ஒரு குழுவை தயார் செய்து வைத்திருந்தார்கள். அதில் இருநூறு ஒட்டகைகள், அதற்குரிய முழு சாதனங்களுடன் இருந்தன. மேலும், இருநூறு ஊக்கியா வெள்ளிகளும் இருந்தன. அந்தப் பயணத்தை நிறுத்தி விட்டு அவை அனைத்தையும் அந்தப் போருக்காக வழங்கினார்கள். பின்பு மீண்டும் முழு சாதனங்களுடன் உள்ள நூறு ஒட்டகைகளை வழங்கினார்கள்.  இப்படியே தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். இப்போருக்காக மொத்தத்தில் அவர்கள் தொள்ளாயிரம் ஒட்டகை களையும், நூறு குதிரைகளையும் வழங்கினார்கள். இதுமட்டுமின்றி ஏராளமான தங்க வெள்ளி காசுகளையும் வாரி வழங்கினார்கள்.

அப்துர்ரஹ்மான் பின் ஸமுரா ரலி அவர்கள் அறிவிக்கின்றார்கள் :  தபூக் போருக்காக உஸ்மான் ரலி அவர்கள் ஆயிரம்  பொற்காசுகளை வழங்கினார்கள. நபி அவர்கள் அதனை தன் மடியில் பரத்தினார்கள். பின்னர் இன்றைய தினத்திற்குப் பின் உஸ்மான் எக்காரியம் செய்தாலும் அது அவருக்கு எவ்வித இடையூரையும் தராது என்று இரு முறை கூறினார்கள். (திர்மிதி : 3701)

இவ்வாறு அல்லாஹ்வின் பாதையில் தங்கள் பொருளாதாரத்தையும் சொத்துக்களையும் வாரி வழங்கிய நபித்தோழர்களின் வரலாறுகள் நிறைய உண்டு.அவர்களில் யாரும் காசு பணத்தைக் கொடுப்பதற்கு யோசித்ததில்லை. தயங்கியதில்லை. அதற்கு ஒரே காரணம். அந்த காசு பணத்தை தங்களுக்கு சொந்தானதாக என்றைக்கும் அவர்கள் கருதியதில்லை. இறைவன் அளித்ததை இறைவனுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்தார்கள்.

مَاتَ ابْنٌ لأَبِي طَلْحَةَ، مِن أُمِّ سُلَيْمٍ، فَقالَتْ لأَهْلِهَا: لا تُحَدِّثُوا أَبَا طَلْحَةَ بابْنِهِ حتَّى أَكُونَ أَنَا أُحَدِّثُهُ قالَ: فَجَاءَ فَقَرَّبَتْ إلَيْهِ عَشَاءً، فأكَلَ وَشَرِبَ، فَقالَ: ثُمَّ تَصَنَّعَتْ له أَحْسَنَ ما كانَ تَصَنَّعُ قَبْلَ ذلكَ، فَوَقَعَ بهَا، فَلَمَّا رَأَتْ أنَّهُ قدْ شَبِعَ وَأَصَابَ منها، قالَتْ: يا أَبَا طَلْحَةَ أَرَأَيْتَ لو أنَّ قَوْمًا أَعَارُوا عَارِيَتَهُمْ أَهْلَ بَيْتٍ، فَطَلَبُوا عَارِيَتَهُمْ، أَلَهُمْ أَنْ يَمْنَعُوهُمْ؟ قالَ: لَا، قالَتْ: فَاحْتَسِبِ ابْنَكَ، قالَ: فَغَضِبَ، وَقالَ: تَرَكْتِنِي حتَّى تَلَطَّخْتُ، ثُمَّ أَخْبَرْتِنِي بابْنِي، فَانْطَلَقَ حتَّى أَتَى رَسولَ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ، فأخْبَرَهُ بما كَانَ، فَقالَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ: بَارَكَ اللَّهُ لَكُما في غَابِرِ لَيْلَتِكُما

அபூ தல்ஹா ரலி அவர்கள் வெளியூர் சென்ற நேரத்தில் அவர்களின் ஆண் குழந்தை ஒன்று இறந்து விட்டது. அப்பொழுது அவர்களின் மனைவி உம்மு ஸுலைம் ரலி அவர்கள் தம் குடும்பத்தினரிடம் சொன்னார்கள்; அபூ தல்ஹாவிடம் அவருடைய மகனைப் பற்றி நீங்கள் எதுவும் சொல்லாதீர்கள். நானே அவரிடம் அவ்விஷயத்தைச் சொல்வேன்! அபூ தல்ஹா ரலி அவர்கள் வந்தார்கள். அவர்கள் முன்னால் இரவு உணவை வைத்தார்கள் உம்மு ஸுலைம் ரலி அவர்கள். அபூ தல்ஹா ரலி அவர்கள் உணவு பானங்களை உட்கொண்டார்கள். பிறகு உம்மு ஸுலைம் ரலி அவர்கள் அபூதல்ஹா ரலி அவர்களுக்காக தம்மை அலங்கரித்தார்கள். அதற்கு முன்பு தம்மை அலங்கரித்ததை விடவும் அழகாக! அபூ தல்ஹா ரலி அவர்கள் உம்மு ஸுலைம் ரலி அவர்களுடன் தாம்பத்திய உறவு கொண்டார்கள். இவ்வாறு அபூ தல்ஹா ரலி நன்றாக உணவு உட்கொண்டு தம்முடன் உடலுறவும் கொண்ட பிறகு உம்மு ஸுலைம் ரலி அவர்கள் சொன்னார்கள் :

அபூ தல்ஹாவே! உங்கள் கருத்து என்ன? ஒரு கூட்டம் தங்களது பொருளொன்றை ஒரு வீட்டாரிடம் இரவலாகக் கொடுத்து வைத்தார்கள்., பிறகு தங்களது பொருளைத் திருப்பிக் கொடுக்குமாறு கேட்கும் பொழுது தர முடியாது என்று சொல்லும் உரிமை அந்த வீட்டாருக்கு உண்டா?’‘கிடையாதுஎன்று அவர்கள் பதிலளித்தார்கள். (அவ்வாறாயின்) உங்கள் மகன் விஷயத்தில் நீங்கள் பொறுமை கொண்டு அல்லாஹ்விடம் கூலியை எதிர்பார்த்திருங்கள்! என்றார்கள். அப்பொழுது அபூ தல்ஹா ரலி அவர்கள் கோபம் கொண்டார்கள். என்னிடம் முன்னரே எதுவும் சொல்லாமல் இருந்து விட்டு நான் இப்படி இப்படி எல்லாம் செய்து பெருந்துடக்கை அடைந்த பிறகு இப்பொழுது என் மகனைப் பற்றி சொல்கிறாயே!’ (அதன் பிறகு) அபூ தல்ஹா அவர்கள் புறப்பட்டு நபி அவர்களிடம் வந்து நடந்த செய்தியை தெரிவித்தார்கள். அப்பொழுது நபி  அவர்கள், ‘உங்கள் இருவரது இந்த இரவில் அல்லாஹ் அருட்பாக்கியம் புரிவானாக!என்று பிரார்த்தனை செய்தார்கள்.  (முஸ்லிம் ; 2144)

மகனை இறைவன் கொடுத்தான். அவனே திருப்பி எடுத்துக் கொண்டான் என்று தன் மகனின் மரணத்தைக் கூட இலகுவாக எடுத்துக் கொண்டார்கள் உம்மு ஸுலைம் ரலி அவர்கள்.

أَرْسَلَتِ ابْنَةُ النبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ إلَيْهِ إنَّ ابْنًا لي قُبِضَ، فَأْتِنَا، فأرْسَلَ يُقْرِئُ السَّلَامَ، ويقولُ: إنَّ لِلَّهِ ما أَخَذَ، وله ما أَعْطَى، وكُلٌّ عِنْدَهُ بأَجَلٍ مُسَمًّى، فَلْتَصْبِرْ، ولْتَحْتَسِبْ، فأرْسَلَتْ إلَيْهِ تُقْسِمُ عليه لَيَأْتِيَنَّهَا، فَقَامَ ومعهُ سَعْدُ بنُ عُبَادَةَ، ومعاذُ بنُ جَبَلٍ، وأُبَيُّ بنُ كَعْبٍ، وزَيْدُ بنُ ثَابِتٍ ورِجَالٌ، فَرُفِعَ إلى رَسولِ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ الصَّبِيُّ ونَفْسُهُ تَتَقَعْقَعُ - قالَ: حَسِبْتُهُ أنَّهُ قالَ كَأنَّهَا شَنٌّ - فَفَاضَتْ عَيْنَاهُ، فَقالَ سَعْدٌ: يا رَسولَ اللَّهِ، ما هذا؟ فَقالَ: هذِه رَحْمَةٌ جَعَلَهَا اللَّهُ في قُلُوبِ عِبَادِهِ، وإنَّما يَرْحَمُ اللَّهُ مِن عِبَادِهِ الرُّحَمَاءَ.

தன் மகன் மரணத்தை நெருங்கி விட்டான் என்ற செய்தியை நபிகள் நாயகம் அவர்களின் மகள் (ஸைனப்) நபிவர்களுக்குச் சொல்லி அனுப்பி உடனே வர வேண்டும்என்றார்கள். நபிகள் நாயகம் அவர்கள் மகளுக்கு ஸலாம் கூறச் சொல்லி  விட்டு அல்லாஹ் எடுத்துக் கொண்டது அவனுக்குரியது. அவன் கொடுத்ததும் அவனுக்குரியது. அவனிடத்தில் ஒவ்வொன்றும் நேரம் நிர்ணயிக் கப்பட்டதாக உள்ளது. எனவே அவர் பொறுமையைக் கடைப்பிடித்து நன்மையை எதிர் பார்க்கட்டும்என்று செய்தி சொல்லி அனுப்பினார்கள். அதற்கு நபிகள் நாயகம் அவர்களின் மகள் சத்தியம் செய்து கட்டாயம் வந்தே ஆக வேண்டும் என்று மறு செய்தி அனுப்பினார்கள். உடனே நபிகள் நாயகம் அவர்கள் எழுந்தார்கள். அவர்களுடன் ஸஅது பின் உபாதா ரலி, முஆத் பின் ஜபல் ரலி, உபை பின் கஅப் ரலி, ஸைத் பின் ஸாபித் ரலி மற்றும் பலர் புறப்பட்டனர். சிறுவர் (பேரன்) நபிகள் நாயகம் அவர்களிடம் கொடுக்கப்பட்டார். அவருக்கு மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது. நபிகள் நாயகம் அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. அல்லாஹ்வின் தூதரே! இது என்ன?’ என்று ஸஅது பின் உபாதா ரலி கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் அவர்கள் இந்த இரக்க உணர்வை அல்லாஹ் மனித உள்ளங்களில் அமைத்திருக்கிறான். தனது அடியார்களிடம் இரக்கம் காட்டுபவருக்கே அல்லாஹ்வும் இரக்கம் காட்டுவான்என்று விடையளித்தார்கள். (புகாரி ; 1284)   

எனவே நம் கையிருப்பு அனைத்தும் நமக்குரியதல்ல, நம்மைப் படைத்த ரப்புல் ஆலமீனுக்குரியது. அவனே அதற்கு சொந்தக்காரன். உரிமை யாளன் என்ற உணர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த உணர்வு நமக்கு இழப்புக்களையும் நஷ்டங்களையும் இலகுவாக எதிர் கொள்ளும் மனோதிடத்தைத் தரும். நல் வழிகளில் பொருளாதாரத்தை அதிகம் செலவழிக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தரும். அல்லாஹ் அத்தகையை உணர்வையும் எண்ணத்தையும் தருவானாக!

6 comments:

  1. மிக அற்புதமான படைப்பு மௌலானா .
    முஹம்மது இக்பால் காஷிபி MC Road

    ReplyDelete
  2. வழமைபோல் அற்புதமான பதிவு மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத்

    ReplyDelete
  3. நல்ல ஆக்கம். அல்லாஹ் கபூல் செய்வானாக

    ReplyDelete