Friday, January 13, 2023

பைத்தியங்கள் பல விதம்

மனித வாழ்வில் மூன்று பருவங்கள் உண்டு.மூன்று பருவங்களைக் கொண்டு மனித வாழ்வை இறைவன் அமைத்திருக்கிறான். குழந்தைப்பருவம், இளமைப்பருவம், முதுமைப்பருவம். இறைவன் தந்திருக்கிற இந்த மூன்று பருவங்களில் மிக முக்கியமான எல்லா வகையான சிறப்பம்சங்களைப் பெற்ற எல்லா வகையான பாக்கியங்களையும் பெற்ற ஒரு பருவம் இளமைப்பருவம்.ஏனென்றால் குழந்தைப் பருவம் விளையாட்டுப் பருவம். அதில் கொஞ்சம் ஆற்றல் இருக்கும். ஆனால் அதற்குத்தேவையான அறிவும் பக்குவமும் இருக்காது. முதுமைப்பருவத்தில் கொஞ்சம் அறிவும் பக்குவமும் இருக்கும்.ஆனால் அதனை செயல்படுத்துவதற்குத் தேவையான ஆற்றல் இருக்காது. ஆனால் அறிவும் பக்கவமும் ஆற்றலும் நிறைவாக ஒரு சேர அமையப் பெற்றிருக்கிற ஒரு பருவம் வாலிபப்பருவம் தான்.எனவே குழந்தைப் பருவம் அறியாமைக்கும் விளையாட்டுக்கும் சொந்தமானது,வயோதிகப்பருவம் இயலாமைக்கும் பலவீனத்திற்கும் சொந்தமானது, வாலிபம் தான் ஆற்றலுக்கும் சாதனைக்கும் சொந்தமானது. 

இன்னும் அதைத் தொடாதவர்கள் சீக்கிரம் தொட வேண்டுமே என்று துடிக்கிற பருவமும் இளமைப்பருவம் தான்.அதைக் கடந்து வந்தவர்கள் கடந்து விட்டோமே என்று ஏங்குகிற பருவமும் இளமைப்பருவம் தான்.மீசை முளைக்காத சின்ன பசங்களுக்கு சீக்கிரம் அந்த பருவத்திற்கு வர வேண்டுமே என்று ஆசையாக இருக்கிறது.தள்ளாத வயதை அடைந்து விட்டவர்களுக்கு மீண்டும் அந்த பருவத்திற்கு திரும்ப வேண்டுமே என்று ஆசையாக இருக்கிறது.என் வாலிபமும் என் இளமையும் திரும்ப வேண்டுமே என்று ஆசைப்படாதவர்கள் உலகில் யாரும் இருக்க முடியாது. அந்தளவு மிகவும் பாக்கியம் பெற்ற பருவம் இந்த இளமைப்பருவம்.

உலகில் சாதனையாளர்களாக வெற்றியாளர்களாக  வலம் வரக்கூடிய அத்தனை பேரும் அந்த சாதனைக்கான, அந்த வெற்றிக்கான விதையைத் தூவியது தங்களின் வாலிபப்பருவத்தில் தான். தங்கள் சாதனைக்கான பயணத்தை, தங்கள் வெற்றிக்கான பயணத்தை வாலிபத்திலிருந்து தான் தொடங்கினார்கள்.தங்கள் வெற்றிக்கான முதற்படிக்கட்டாக வாலிபத்தைத்தான் ஆக்கிக் கொண்டார்கள்.

எனவே இந்த வாலிபப்பருவம் எதையும் சாதிக்கிற பருவம், நினைத்ததை அடைந்து கொள்கிற ஆற்றல் பெற்ற பருவம்.எதையும் எதிர்கொள்கிற திறன் பெற்ற பருவம்.

اَللّٰهُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ ضُؔعْفٍ ثُمَّ جَعَلَ مِنْ بَعْدِ ضُؔعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِنْ بَعْدِ قُوَّةٍ ضُؔعْفًا وَّشَيْبَةً  ‌ يَخْلُقُ مَا يَشَآءُ ‌ وَهُوَ الْعَلِيْمُ الْقَدِيْرُ‏

அல்லாஹ் உங்களை (ஆரம்பத்தில்) பலவீனமான நிலைமையில் உற்பத்தி செய்கிறான். அந்தப் பலவீனத்திற்குப் பின்னர் அவனே (வாலிப) பலத்தையும் கொடுக்கிறான். அந்த பலத்திற்குப் பின்னர் வயோதிகத்தையும், பலவீனத்தையும் கொடுக்கிறான். (இவ்வாறெல்லாம்) அவன், தான் விரும்பியவாறு உங்களை ஆக்குகிறான். அவன் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் மிக்க ஆற்றலுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 30:54)

இரண்டு பலவீனமான பருவத்திற்கு மத்தியில் மிகவும் பலம் பெற்ற பருவம் என்று இளமைப் பருவத்தைத்தான் அல்லாஹ் அடையாளம் காட்டுகிறான்.

Give me the Youth I SHALL make heaven on earth”  “என்னிடம் துடிப்புள்ள  இளைஞர்களைக் கொடுங்கள்.  நான்  இந்த உலகத்தை  சுவர்க்கப் பூஞ் சோலையாக மாற்றிக் காண்பிக்கிறேன் என்றான் ஓர் ஆங்கிலேய அறிஞன்.  என்னிடம் நூறு இளைஞர்களைக் கொடுங்கள். நான் வலிமையான பாரதத்தை உருவாக்கிக் காட்டுகிறேன்' என்றார் விவேகானந்தர். 


عن عمر بن الخطاب ، أنه قال لأصحابه : تمنوا ، فقال رجل : أتمنى لو أن لي هذه الدار مملوءة ذهبا أنفقه في سبيل الله . ثم قال : تمنوا ، فقال رجل : أتمنى لو أنها مملوءة لؤلؤا وزبرجدا وجوهرا أنفقه في سبيل الله وأتصدق . ثم قال : تمنوا ، فقالوا : ما ندري يا أمير المؤمنين ، فقال عمر : أتمنى لو أن هذه الدار مملوءة رجالا مثل أبي عبيدة بن الجراح .  حلية الاولياء

ஒரு நாள் உமர் ரலி அவர்கள் தன் தோழர்களிடத்தில் உங்களது ஆசைகளைக் கூறுங்கள் என்றார்கள். ஒரு தோழர், இந்த வீடு முழுக்க தங்க கட்டிகள் இருக்க வேண்டும். அதை நான் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்ய வேண்டும் என்றார். பின்பு இன்னொரு தோழர், இந்த வீடு முழுக்க முத்து மரகதம் மாணிக்கம் இருக்க வேண்டும். அதை நான் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்ய வேண்டும் என்று கூறினார். அப்போது உமர் ரலி அவர்கள், அபூஉபைதாவைப் போன்ற மனிதர்கள் இந்த வீடு முழுக்க நிரம்பி இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் என்றார்கள். (ஹுல்யத்துல் அவ்லியா)

வாலிபர்களால் தான் இந்த தீன் உயிர் பெற்றது. இந்த தீனுக்கு உரம் சேர்த்தவர்கள் வாலிபர்கள் தான். இஸ்லாமிய  வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால் அண்ணலம் பெருமானார் நபி அவர்களின் 23 ஆண்டு கால நபித்துவ வாழ்க்கையில்  அவர்களோடு இந்த சத்திய சன்மார்க்கத்தை நிலை  நிறுத்தும்  பணியில்  முன்  வரிசையில் நின்றவர்களில் அதிகம் இளைஞர்கள் தான் என்பதை  யாரும் மறுக்க முடியாது.

இளமைப்பருவம் துடிப்புள்ள பருவம்,ஆற்றல் மிக்க பருவம்,ஒரு சமூகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்க பருவம் என்பதைத்தான் இதுபோன்ற விஷயங்கள் நமக்கு வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. அந்த வாலிபத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று நபி அவர்கள் கூறினார்கள்.

اغتنم خمسًا قبل خمس: شبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وغناك قبل فقرك، وفراغك قبل شغلك، وحياتك قبل موتك

ஐந்துக்கு முன் உள்ள ஐந்தினைப் பேணிக் கொள்.

1) முதுமைக்கு முன் உள்ள வாலிபம்

2) நோய்க்கு முன் உள்ள ஆரோக்கியம்

3) வறுமைக்கு முன் உள்ள செல்வம்

4) வேலைக்கு முன் உள்ள ஓய்வு

5) மரணத்திற்கு முன் உள்ள வாழ்வு. (ஷுஃபுல் ஈமான் : 7/3319)

சொர்க்கம் செல்வதற்காக அல்லாஹ் தேர்வு செய்த பருவமும் இந்த இளமைப்பருவம் தான். ஒருவர் 40 வயதில் மரணித்தாலும் 50 வயதில் மரணித்தாலும் 80 வயதில் மரணித்தாலும் அவர் சொர்க்கம் செல்வது 33 வயதில் தான்.

يدخلُ أهلُ الجنَّةِ الجنَّةَ جُرْدًا مُرْدًا مُكحَّلِينَ أبناءَ ثلاثينَ أو ثلاثٍ وثلاثينَ سنةً

சொர்க்கவாதிகள் சொர்க்கத்தில் மீசை தாடி முளைக்காத கண்ணில் சுர்மா இடப்பட்ட 33 வயதுள்ள நிலையில் நுழைவார்கள். (திர்மிதி ; 2545)

عن الحسن قال : أتت عجوز فقالت : يا رسول الله ادع الله أن يدخلني الجنة . فقال : " يا أم فلان ، إن الجنة لا تدخلها عجوز " . قال : فولت تبكي ، قال : " أخبروها أنها لا تدخلها وهي عجوز ، إن الله تعالى يقول : ( إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا )

ஒரு வயதான மூதாட்டி நபி அவர்களிடத்தில் வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே நான் சொர்க்கம் செல்ல வேண்டும். எனக்காக அல்லாஹ்விடத்தில் துஆ செய்யுங்கள் என்று கூறினார்கள். அப்போது நபி அவர்கள் நிச்சயமாக சொர்க்கத்தில் வயதானவர்கள் நுழைய மாட்டார்கள் என்று கூறினார்கள். அதைக் கேட்டு அந்த மூதாட்டி அழுது கொண்டே திரும்பிச் சென்றார்கள் அப்போது நபி அவர்கள் வயதான நிலையில் சொர்க்கத்தில் அவர்கள் நுழைய மாட்டார்கள் என்பதை அந்த தாயாரிடம் சொல்லி விடுங்கள் என்று கூறினார்கள் பின்பு (அவர்களுடன், கண்ணழகிகளாகிய ஹூருல் ஈன் என்னும் கன்னியர்களும் இருப்பார்கள். அவர்கள் ஒருவராலும் பெற்றெடுக் கப்பட்டவர்கள் அல்லர்.) நிச்சயமாக நாம் அவர்களைச் (சொந்தமாக இவர்களுக்கெனப் புதிதாகவே) படைத்திருக்கின்றோம்.கன்னியர்களாக அவர்களைப் படைத்திருக்கின்றோம்.(அல்குர்ஆன் : 56 :35,36) இந்த வசனத்தை ஓதி காட்டினார்கள். (இப்னு கஸீர்)

எனவே எல்லா வகையான பாக்கியங்களையும் அருள் வளங்களையும் பெற்ற பருவம் இந்த இளமைப்பருவம் தான்.

வாழ்க்கையில் எண்ணற்ற சாதனைகளை செய்த எண்ணற்ற வெற்றிகளைப் பெற்ற சமூகத்திற்காக உழைத்த பாடுபட்ட அல்லாஹ்விற்காக தங்களை அர்பணித்த எத்தனையோ இளைஞர்கள் வாலிபர்கள் வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறார்கள்.குர்ஆனிலும் இடம் பிடித்திருக்கிறார்கள்.

இணைவைப்பின் கூடாரத்தில் பிறந்து   இளமையின் துவக்கத்தில் படைப்புக்களை ஆய்வு செய்து அதன் வழியே படைத்தவன் யார் என்பதை தெரிந்து கொண்டு உலகத்தையே ஆட்சி செய்த கொடுங்கோலன் நம்ரூதுக்கு முன் தன் ஆணித்தரமான கொள்கையை நிலைநாட்டி முஸ்லிம்களுக்கெல்லாம் முன்மாதிரியாக இருந்த இப்றாஹீம் நபி ஒரு இளைஞர் தான்.

தவறு செய்வதற்கு ஒரு சின்ன வாய்ப்பு கிடைக்காதா என்று இன்றைய இளைஞர்கள் காத்துக் கிடக்கின்ற போது தவறில் ஈடுபடுவதற்கு எல்லாவகையிலும் வாய்ப்பும் சந்தர்ப்பமும் கிடைத்த போதும் அதில் ஈடுபடாமல் இதை விட எனக்கு சிறையே விருப்பமானது என்று கூறி பத்தினித்தனத்திற்கும் மேலான ஒழுக்கத்திற்கும் சிறந்த உதாரணமாய் விளங்கிய யூசுப் நபி ஒரு இளைஞர் தான்.

ஒரு காலத்தில் ஒரு சமூகமே தவறான கொள்கையில் இருந்த போது தங்கள் ஈமானிய கொள்கைக்காக அந்த ஊரை எதிர்த்து போராடி இறுதியில் அந்த ஊரை விட்டே கிழம்பி உண்மையான ஈமானுக்கும் உறுதியான கொள்கை கோட்பாடுகளுக்கும் முன் உதாரணமாய் திகழ்ந்து குர்ஆனில் தங்கள் வரலாறுகளை பதிவு செய்திருக்கிற கஹ்ஃப் வாசிகள் இளைஞர்கள் தான்.

இப்படி எத்தனையோ இளைஞர்கள் எத்தனையோ வாலிபர்கள்  வரலாற்றின் வைர வரிகளாலும் குர்ஆனின் சத்திய வார்த்தைகளாலும் அலங்கரிக்கப்பட்டு இன்றைக்கும் நம் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் இன்றைய வாலிபர்களை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். சாதனைகளுக்கும் மகத்தான ஆற்றலுக்கும் சொந்தமான வாலிபப்பருவத்தை இன்றைக்குள்ள வாலிபச் சமூகம் எதில் பயன்படுத்துகிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமானது. வீண் விளையாட்டுக்களிலும் கூத்து கும்மாளங்களிலும் வீணான காரியங்களிலும் தங்கள் வாலிபத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அல்ஜுனூனு ஃபுனூனு என்று ஒரு வார்த்தை சொல்வார்கள். பைத்தியங்கள் பல வகை.இன்றைக்குள்ள வாலிபர்களுக்கு இந்த வார்த்தை சரியாகப் பொருந்தும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தில் பைத்தியமாக இருக்கிறார்கள். மொபைல் பைத்தியங்களாக, இன்டர்நெட் பைத்தியங்களாக, கேம்ஸ் - விளையாட்டுப் பைத்தியங்களாக, சினிமா பைத்தியங்களாக, போதைப் பைத்தியங்களாக, காதல் பைத்தியங்களாக, இப்படி இன்றைக்குள்ள வாலிபச் சமூகம் பல்வேறு விஷயங்களில் பைத்தியம் பிடித்து அலைகின்றது.

கடந்த இரண்டு மூன்று நாட்களாக அனைத்து மீடியாக்களிலும் இரண்டு செய்திகள் வலம் வருவதைப் பார்த்திருப்போம். ஒன்று சேலத்தில் பிரதீப் என்ற வாலிபர் சமீபத்தில் வெளியான ஒரு சினிமாவைப் பார்ப்பதற்கு சென்று கதவு மேல் ஏறி கீழே விழுந்ததில் அவரின் கால் முறிந்து விட்டது. பக்கத்தில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸை வரவழைத்து அவனை சிகிச்சைக்காக அனுப்ப முயற்சித்த போது முடியாது, நான் இந்த சினிமாவின் முதல் காட்சியைப் பார்க்காமல் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தார். அவரை மிரட்டி அடித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் அங்கும் சென்று தன் கால் உடைந்ததைக் கூட பொருட்படுத்தாமல் அந்த சினிமா நடிகரின் பெயரைச் சொல்லிக் கொண்டிருந்தார். உனக்கு உன் குடும்பம் முக்கியமில்லையா? உன் பெற்றோர்கள் முக்கியமில்லையா? என்று கேட்டதற்கு எனக்கு என் குடும்பத்தை விட என் பெற்றோரை விட அவர் தான் முக்கியம் என்று அந்த சினிமா நடிகரைக் குறிப்பிட்டுச் சொன்ன செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மட்டுமல்ல, முதல் காட்சியைத்தான் பார்க்க முடிய வில்லை, இரண்டாவது காட்சியையாவது பார்த்து விட வேண்டும் என்று மருத்துவமனையிலிருந்து தப்பித்து சென்றது அதில் மிகவும் ஹைலட்டானது.

இரண்டாவது செய்தி, சென்னை கோயம்பேடு பகுதியில் சினிமா பார்ப்பதற்காக சென்ற பரத்குமார் என்ற ஒரு வாலிபர் லாரி மீது ஏறி ஆட்டம் போட்டதில் கீழே விழுந்து உயிரிழந்தார். நம் இஸ்லாமிய வாலிபர்களும் அவர்களோடு இணைந்து கொண்டு ஆட்டம் போடுவதும் கட் அவுட் வைப்பதும் கேக் வெட்டி கொண்டாடுவதும் மிகவும் வேதனை தரும் செய்தி. இன்றைக்குள்ள சூழல் என்னவென்றால் பெற்றோர்கள் 1000 ரூபாயை வாங்குவதற்காக வரிசையில் நிற்கிறார்கள். ஆனால் பிள்ளைகள் 1000 கொடுப்பதற்காக வரிசையில் நிற்கிறார்கள் என்று ஒருவர் அழகாக எழுதியிருந்தார்.அந்த வார்த்தை உண்மையானது.

அந்தளவு இன்றைக்குள்ள வாலிபர்கள் எதைப் பற்றியும் யோசிக்காமல் எந்த இலட்சியமும் இல்லாமல் குடும்பத்தைப் பற்றி யோசிக்காமல்  தான்தோன்றித்தனமாக சினிமா நடிகர்களுக்குப் பின்னாலும் போதைப் பொருட்களுக்குப் பின்னாலும் போயிக் கொண்டிருக்கிறார்கள்.     

இந்த நேரத்தில் நபி அவர்களின் காலத்தில் வாழ்ந்த வாலிபர்களை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்கள் முழுக்க முழுக்க தங்கள் உள்ளங்களில் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் சுமந்திருந்தார்கள். இன்றைக்குள்ள வாலிபர்கள் காதல் மயக்கத்தில் நீ மழையில் நனைந்தால் எனக்கு ஜலதோசம் பிடிக்கிறது என்று அந்தப் பெண்ணைப் பார்த்துச் சொல்கிறார்கள். ஆனால் இதை விட பன்மடங்கு உண்மையான காதலையும் பிரியத்தையும் சத்திய ஸஹாபாக்கள் நபி அவர்களின்  மீது கொண்டிருந்தார்கள்.

عن عبد الله بن عامر بن ربيعة، قال: سمعت عائشة رضي الله عنها، تقول: كان النبي صلى الله عليه وسلم سَهِر، فلما قدم المدينة، قال: "ليت رجلاً من أصحابي صالحاً يحرسني الليلة"، إذ سمعنا صوت سلاح، فقال: "من هذا؟"، فقال: أنا سعد بن أبي وقاص جئت لأحرسك، ونام النبي صلى الله عليه وسلم

நபி அவர்கள் மதீனாவுக்கு வந்த பின், முதலில் இரவில் கண் விழித்திருந்தார்கள். மதீனாவுக்கு வந்து சிறிது காலம் கழித்து, ‘என் தோழர்களிடையே எனக்கு இரவில் காவல் காப்பதற்கு ஏற்ற மனிதர் ஒருவர் இருந்தால் நன்றாயிருக்குமேஎன்று கூறினார்கள். அப்போது நாங்கள் ஆயுதத்தின் ஓசையைக் கேட்டோம். நபி அவர்கள், ‘யாரது?’ என்று கேட்டார்கள். வந்தவர், ‘நானே ஸஅத் இப்னு அபீ வக்காஸ். தங்களுக்குக் காவல் இருப்பதற்காக வந்துள்ளேன்என்று கூறினார். பிறகு நபி அவர்கள் (நிம்மதியாக) உறங்கினார்கள். (புகாரி ; 2885)

இன்றைக்கு பாதுகாப்பிற்கு ஒரு தோழர் வேண்டுமே என்று நபி அவர்கள் எண்ணுகிறார்கள். அதேவேலையில் நபியவர்களைப் பாதுகாக்க வேண்டுமே என்ற எண்ணம் அந்த நபித்தோழருக்கு ஏற்படுகிறது. இது தான் நபி அவர்களுக்கும் ஸஹாபாக்களுக்கும் இருந்த தொடர்பு.

இன்றைய மோசமான காலகட்டத்தில் நம் வாலிபர்களை சீர்படுத்தும் நோக்கில் தான் இன்ஷா அல்லாஹ் ஈரோட்டில் நடக்கயிருக்கிற மாநாட்டில் வாலிபர்களுக்கென்று தனி அரங்கத்தை மாநில ஜமாஅத்துல் உலமா ஏற்பாடு செய்திருக்கிறது. அதற்கு நம் வாலிபர்களை தயார்படுத்துவோம்.அல்லாஹ் உதவி புரிவானாக

(உடல் நிலை சரியில்லாமல் இரண்டு வாரங்களாக ஊரில் இருந்தேன். நேற்றைக்குத் தான் பணிக்குத் திரும்பினேன். எனவே தாமதத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். அவசரமாக தயார் செய்த குறிப்பு. தவறு இருப்பின் பொறுத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்திற்காக அனைவரும் துஆ செய்யுங்கள்)  

 

 

 

 

15 comments:

  1. جزاك الله؛ لا بأس طهور ان شاء لله

    ReplyDelete
  2. காலத்திற்கு ஏற்றாற்போல் அருமையான பதிவு...

    ReplyDelete
  3. لا بأس طهور إنشاء الله اللهم اشفه اللهم عافه ..

    ReplyDelete
  4. اللهم اشفي لك وعافية

    ReplyDelete
  5. அல்லாஹ் பரிபூரணமான ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தொடர்ந்து சிறப்பான முறையில் சமுதாயத்திற்கு சேவை செய்வதற்கும் அல்லாஹ் தௌஃபிக் செய்வானாக

    ReplyDelete
    Replies
    1. ஆமீன் பி ஹக்கி ஸய்யிதினா முஹம்மதின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வ ஆலி ஸய்யிதினா முஹம்மதின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்...

      Delete
  6. பாரகல்லாஹு

    ReplyDelete
  7. மாஷா அல்லாஹ் சூப்பர்

    ReplyDelete
  8. பெற்றோர்கள் 1000 ரூபாயை வாங்குவதற்காக வரிசையில் நிற்கிறார்கள். ஆனால் பிள்ளைகள் 1000 கொடுப்பதற்காக வரிசையில் நிற்கிறார்கள்..செம

    ReplyDelete
  9. பரிபூரண நலம் பெற அல்லாஹ் அருள்வானாக ஆமீன்

    சிறந்த பதிவு

    ReplyDelete
  10. அல்லாஹ் பரிபூரண சுகத்தை தருவான்

    ReplyDelete
  11. بارك الله فيك وجزاك الله خيرا

    ReplyDelete
  12. Very usefull jazakkumullah khaira

    ReplyDelete