Thursday, March 23, 2023

அருளான மாதத்தில் அல்லாஹ்வின் அருளைத் தேடுவோம்

பாக்கியங்களில் மிக உயர்ந்த பாக்கியத்தை நாம் பெற்றிருக்கிறோம். இரண்டு மாதங்களாக எந்த மாதத்தை அடைய வேண்டும் என்று அல்லாஹ்விடம் கரம் ஏந்தி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தோமோ அந்த அருள் மிக்க மாதத்தை நாம் அடைந்து விட்டோம். அருள்மிக்க இந்த ரமலானை நாம் அடைந்து கொண்டதற்காகவும் நம் துஆவை கபூல் செய்ததற்காகவும் ரப்புல் ஆலமீனுக்கு நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். காரணம், கடந்த வருடம் நம்மோடு ரமலானை சந்தித்த எத்தனையோ பேர் இப்போது இல்லை. கடந்த வருடம் பகலெல்லாம் நோன்பிருந்து இரவெல்லாம் நின்று தொழுத எத்தனையோ பேர் மண்ணுக்குள் சென்று விட்டார்கள். அல்லாஹ் நமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பைத் தந்திருக்கிறான். நாம் நம்மை சரிபடுத்திக் கொள்வதற்கும் கடந்த கால பாவங்களுக்காக அல்லாஹ்விடம் தவ்பா செய்து தூய்மையடைந்து கொள்வதற்கும் நம்முடைய நன்மைகளின் தட்டை கனமாக்குவதற்கும் நம் வாழ்வில் இன்னொரு சந்தர்ப்பத்தை அல்லாஹ் வழங்கிருக்கிறான்.மாபெரும் பொக்கிஷமாக நமக்கு கிடைத்திருக்கின்ற இந்த மாதத்தின் எந்த நிமிடத்தையும் வீணடிக்காமல் ஒவ்வொரு நொடிப்பொழுதையும் பயனுள்ளதாக ஆக்க வேண்டும். அது தான் இந்த சந்தர்ப்பத்தை வழங்கிய ரப்புல் ஆலமீனுக்கு நாம் செலுத்துகின்ற நன்றிக் கடனாகும்.

நாம் இருப்பது ரமலான் மாதத்தின் முதல் நாள். ரமலானின் முதல் பகுதி ரஹ்மத் என்று நபி அவர்கள் கூறினார்கள். இந்த முதல் பகுதி அருளாளன் அல்லாஹ்விடம் அவனுடைய அருளைத் தேடுகின்ற மகத்தான் நாட்கள். இந்த நேரத்தில் அல்லாஹ்வின் அருள் எவ்வளவு விசாலமானது. அல்லாஹ்வின் கருணை எவ்வளவு மகத்தானது என்பதை நாம் பார்க்க வேண்டும்.

அல்லாஹ்வின் கருணை என்பது இந்த உலகை இயக்கும் ஓர் இயந்திரம். இறைவனின் கருணை இல்லாமல் இங்கு எதுவும் இயங்காது.அல்லாஹ்வின் கருணையின்றி ஒரு அணுவும் அசையாது. நடப்பவை அனைத்தும் அவனுடைய கருணையின் வெளிப்பாடு. அவனுடைய விசேஷமான ஒரே ஒரு கருணையின் மூலம் தான் இந்த உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது.

عن أبي هريرة -رضي الله عنه- قال: سمعت رسول الله -صلى الله عليه وسلم- يقول: (جعل الله الرحمة في مائة جزء، فأمسك عنده تسعة وتسعين جزءاً، وأنزل في الأرض جزءاً واحداً، فمن ذلك الجزء يتراحم الخلق حتى ترفع الفرس حافرها عن ولدها خشية أن تصيبه) رواه البخاري

அல்லாஹ் ரஹ்மத்தை நூறு பங்குகளாக்கி தன்னிடம் 99 ரஹ்மத்துகளை வைத்துக் கொண்டு ஒரு பங்கை இந்த உலகத்திற்கு இறக்கி வைத்தான். அந்த ஒரு பங்கு ரஹ்மத்தைக் கொண்டு தான் படைப்பினங்கள் தங்களுக்கிடையே இரக்கம் காட்டிக் கொள்கின்றன. குதிரை தன் குட்டியின் மீது கால் குளம்பு படாதிருக்க தன் காலை உயர்த்துவதும் இந்த கருணையினால் தான். (புகாரி ; 6000)

فلو يعلم الكافر بكل الذي عند الله من الرحمة لم ييأس من الجنة، ولو يعلم المؤمن بكل الذي عند الله من العذاب لم يأمن من النار

காஃபிர்கள் அல்லாஹ்விடம் உள்ள ரஹ்மத்துக்களை முழுவதுமாக அறிந்திருந்தால் சுவனத்திலிருந்து நிராசையாக மாட்டார்கள். முஃமின்கள் அல்லாஹ்விடம் உள்ள வேதனையை முழுமையாக அறிந்திருந்தால் நரகிலிருந்து நிம்மதியாக இருக்க மாட்டார்கள். (ஸஹீஹுல் ஜாமிவு ; 1763)

மனிதர்கள்,ஜின்கள்,பறவைகள் மிருகங்கள் என உலகில் இருக்கும் அத்தனை படைப்புக்களும் தங்களுக்கிடையில் வெளிப்படுத்திக் கொள்கிற கருணை,அன்பு,பாசம் இரக்கம் அனைத்தும் அல்லாஹ் வுடைய அந்த ஒரு பகுதி ரஹ்மத்தைக் கொண்டு தான்.

ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதுப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்துக் கொண்டிருந்தார். ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலேயே கட்டப்பட்டிருக்கும். இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டுவார்கள்.

வீட்டுச் சுவற்றை பெயர்த்து எடுக்கும் போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதைப் பார்த்தார். அது எப்படி சிக்கியது? என்று அந்த பல்லியை சுற்றி பார்த்தார்,அவர் அப்போது தான் கவனித்தார். வெளிப் பகுதியில் இருந்து ஆணி அடிக்கும் போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிறது.

அவருக்கு பெரிய ஆச்சரியம். காரணம், அந்த ஆணி அடித்து குறைந்தது 3 வருடங்கள் ஆகியிருக்கும். இந்த பல்லி 3 ஆண்டுகள் உயிருடன் எப்படி இருந்தது? இதை நாம் கண்டு பிடித்தாக வேண்டும் என்று மேற்கொண்டு வேலை செய்யாமல் அந்தப் பல்லியை கண்காணித்துக் கொண்டிருந்தார்.அப்போது அவருக்கு இன்னொரு ஆச்சரியம் காத்திருந்தது.

சிறிது நேரம் கழித்து இன்னொரு பல்லி அதனருகில் வந்தது. அந்தப் பல்லி தன் வாயிலிருந்து உணவை எடுத்து சுவற்றில் சிக்கிக் கொண்டிருந்த பல்லியின் வாயில் ஊட்டி விட்டது. 3 ஆண்டுகளாக இந்தப் பல்லி சுவற்றில் சிக்கியிருந்த தன் சக பல்லிக்கு உணவளித்து வந்துள்ளதை உணர்ந்தார்.

இதுவே நமக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது. ஆனால் இவ்வாறு ஒவ்வொரு பிராணியும் தன் இனத்தின் மீது வெளிப்படுத்துகின்ற அன்பு அல்லாஹ்வின் அந்த ஒரு பகுதி கருணையிலிருந்து தான். அல்லாஹ் வின் எல்லையில்லா கருணையை விளங்குவதற்கு இந்த ஒரு ஹதீஸே போதுமானது.

நபிமார்களும் நேசர்களும்  இக்கட்டான நேரங்களில் சிரமமான சந்தர்ப்பங்களில் அல்லாஹுத்தஆலாவுடைய ரஹ்மத்தைக் கொண்டு தான் பாதுகாக்கப்பட்டார்கள்.

இப்ராஹீம் அலை அவர்கள் நெருப்புக் குண்டத்தில் போடப்பட்ட சமயம் அந்த நெருப்பை குளிராக மாற்றி அவர்களைக் காத்தது அல்லாஹ்வின் அருள்.கடலுக்கடியில் மீன் வயிற்றில் இருந்த யூனுஸ் அலை அவர்கள் அந்த பெரும் ஆபத்திலிருந்து காத்தது அல்லாஹ்வின் அருள். கடுமையான பிணியால் சோதிக்கப்பட்ட அய்யூப் அலை அவர்களை அந்தப் பிணியிலிருந்து பாதுகாத்து அவர்கள் சுகம் பெறக் காரணமாக இருந்தது அல்லாஹ்வின் அருள். கடலைக் கடக்க முயன்ற நபி மூஸா அலை அவர்களையும் அவர்களின் கூட்டத்தினரையும், ஃபிர்அவ்னுடைய கூட்டத்தினரிடமிருந்து காப்பாற்றி அவர்களை கறை சேர்த்தது அல்லாஹ்வின் அருள். இக்கட்டான சூழ்நிலைகளில் ஆபத்தான கட்டங்களில் இருக்கின்ற மனிதர்களை இறைவன் தன் கருணையால் காப்பாற்றுகிறான் என்பது மறுக்க முடியாத உண்மை.எனவே அல்லாஹ்வின் அருள் இல்லாமல் உலகில் வாழ முடியாது. நாம் இயங்க முடியாது. அல்லாஹ்வின் அருள் இல்லாமல் உலகமே இயங்காது.

இறைவனின் கருணைகள் வார்த்தைகளால் சொல்லி விட முடியாதது. எழுத்துக்களால் எழுதி விட முடியாதது.

أن موسى عليه السلام، كان هناك رجلاً من قومه يؤذيه بأنواع من الأذى و موسى يحاول أن ينصحه وأن يكف عنه شره وذاك الرجل يزداد سوءاً وشراً فاشتكى موسى إلى الله تعالى قال (ياربِ إن فلان فعل كذا وكذا فيارب خلصني منه ) فأوحى الله تعالى إلى موسى قال له( يا موسى قد جعلت عقابه إليك ) أي أنت تريد به عقوبة معينه فلك ذلك ، فرآه موسى عليه السلام في وسط الطريق يوماً فأقبل ذلك الرجل كعادته يسب موسى عليه السلام ويتنقصه فغضب موسى عليه السلام فقال يا أرض خذيه ، قالوا فانشقت الأرض فدخل الرجل إلى ركبتيه فصاح قال: يا موسى تبت، يا موسى أغثني، فقال موسى: يا أرض خذيه، فانشقت الأرض ودخل إلى حقويه “حوظه” فلا زال يستغيث يا موسى تبت، وموسى عليه السلام لا يستجيب له حتى بلعته الأرض كله، فأوحى الله تعالى إلى موسى ، قال يا موسى: ما أقسى قلبك ، وعزتي وجلالي لو استغاث بي لأغثته .

பனூஇஸ்ரவேலர்களில் ஒருவன் மூஸா அலை அவர்களுக்கு எல்லையில்லா தொந்தரவுகளைக்  கொடுத்துக் கொண்டிருந்தான். பல தடவை அவனை அழைத்து மூஸா அலை அவர்கள் உபதேசம் செய்தும் அது எந்தப் பலனையும் அளிக்க வில்லை. அவன் திருந்த வில்லை. நாளுக்கு நாள் அவன் மூலம் அடைகிற தொல்லைகள் அதிகரித்துக் கொண்டே போனது. இறுதியாக மூஸா அலை அவர்கள் அவனுடைய தொல்லைகள் எல்லை மீறிப்போனது குறித்து அல்லாஹ்விடம் முறையிட்டார்கள். அல்லாஹ் அவன் விஷயத்தை உங்களிடமே ஒப்படைக்கின்றேன். நீங்கள் விரும்புகின்ற படி அவனைத் தண்டித்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டான்.

ஒரு நாள் மூஸா அலை அவர்கள் அவனை வீதியில் பார்த்தார்கள். மூஸா {அலை} அவர்களைக் கண்டதும் வழமை போல வசைபாட ஆரம்பித்து விட்டான். கோபமடைந்த மூஸா அலை அவர்கள் பூமியைப் பார்த்து பூமியே! நீ அவனைப் பிடித்துக் கொள்! என்று கூறினார்கள்.

பூமி அவனைப் பிடித்துக் கொண்டது. கொஞ்சம் கொஞ்சமாக அவன் பூமிக்குள் செல்ல ஆரம்பித்தான். தாம் அழியப்போகிறோம் என்பதை உணர்ந்த அவன் மூஸா அவர்களே! நான் மன்னிப்புக் கோருகின்றேன்! எனக்கு உதவி செய்யுங்கள்! என்று மரண ஓலமிட்டான்.

மூஸா அலை அவர்களோ! பூமியே இன்னும் நீ நன்றாகப் பிடித்துக் கொள்! என்றார்கள். பூமிக்குள் முழுவதுமாக அவன் இழுக்கப்படுகின்ற வரை அவன் மூஸா அவர்களே! நான் மன்னிப்புக் கோருகின்றேன்! எனக்கு உதவி செய்யுங்கள்! என்று  ஓலமிட்டுக் கொண்டே இருந்தான். மூஸா அலை அவர்கள் அதைக் கண்டு கொள்ளாமல் பூமியிடம் கட்டளையிட்டுக் கொண்டே இருந்தார்கள்.

இறுதியாக அவன் பூமிக்குள் புதையுண்டு போனான். இப்போது, அல்லாஹ் மூஸா அலை அவர்களை நோக்கி மூஸா அவர்களே! ஏன் உம் உள்ளம் இப்படி கடினமாகி விட்டது? அவன் உங்களுக்குப் பகரமாக என்னிடம் உதவி கோரியிருந்தால் நான் அவனை மன்னித்து அவனுக்கு உதவியிருப்பேன்!என்று கூறினான். (அல் முஸ்தஜாபுத் தஃவா)

عَنِ ابْنِ مَسْعُودٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " آخِرُ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ رَجُلٌ، فَهُوَ يَمْشِي مَرَّةً، وَيَكْبُو مَرَّةً، وَتَسْفَعُهُ النَّارُ مَرَّةً، فَإِذَا مَا جَاوَزَهَا الْتَفَتَ إِلَيْهَا، فَقَالَ : تَبَارَكَ الَّذِي نَجَّانِي مِنْكِ، لَقَدْ أَعْطَانِي اللَّهُ شَيْئًا مَا أَعْطَاهُ أَحَدًا مِنَ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ، فَتُرْفَعُ لَهُ شَجَرَةٌ، فَيَقُولُ : أَيْ رَبِّ، أَدْنِنِي مِنْ هَذِهِ الشَّجَرَةِ، فَلِأَسْتَظِلَّ بِظِلِّهَا، وَأَشْرَبَ مِنْ مَائِهَا. فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ : يَا ابْنَ آدَمَ، لَعَلِّي إِنْ أَعْطَيْتُكَهَا سَأَلْتَنِي غَيْرَهَا، فَيَقُولُ : لَا يَا رَبِّ، وَيُعَاهِدُهُ أَنْ لَا يَسْأَلَهُ غَيْرَهَا، وَرَبُّهُ يَعْذِرُهُ، لِأَنَّهُ يَرَى مَا لَا صَبْرَ لَهُ عَلَيْهِ، فَيُدْنِيهِ مِنْهَا، فَيَسْتَظِلُّ بِظِلِّهَا، وَيَشْرَبُ مِنْ مَائِهَا، ثُمَّ تُرْفَعُ لَهُ شَجَرَةٌ هِيَ أَحْسَنُ مِنَ الْأُولَى، فَيَقُولُ : أَيْ رَبِّ، أَدْنِنِي مِنْ هَذِهِ لِأَشْرَبَ مِنْ مَائِهَا، وَأَسْتَظِلَّ بِظِلِّهَا لَا أَسْأَلُكَ غَيْرَهَا، فَيَقُولُ : يَا ابْنَ آدَمَ، أَلَمْ تُعَاهِدْنِي أَنْ لَا تَسْأَلَنِي غَيْرَهَا، فَيَقُولُ : لَعَلِّي إِنْ أَدْنَيْتُكَ مِنْهَا تَسْأَلُنِي غَيْرَهَا، فَيُعَاهِدُهُ أَنْ لَا يَسْأَلَهُ غَيْرَهَا، وَرَبُّهُ يَعْذِرُهُ، لِأَنَّهُ يَرَى مَا لَا صَبْرَ لَهُ عَلَيْهِ، فَيُدْنِيهِ مِنْهَا، فَيَسْتَظِلُّ بِظِلِّهَا، وَيَشْرَبُ مِنْ مَائِهَا، ثُمَّ تُرْفَعُ لَهُ شَجَرَةٌ عِنْدَ بَابِ الْجَنَّةِ هِيَ أَحْسَنُ مِنَ الْأُولَيَيْنِ. فَيَقُولُ : أَيْ رَبِّ، أَدْنِنِي مِنْ هَذِهِ ؛ لِأَسْتَظِلَّ بِظِلِّهَا، وَأَشْرَبَ مِنْ مَائِهَا، لَا أَسْأَلُكَ غَيْرَهَا. فَيَقُولُ : يَا ابْنَ آدَمَ، أَلَمْ تُعَاهِدْنِي أَنْ لَا تَسْأَلَنِي غَيْرَهَا ؟ قَالَ : بَلَى يَا رَبِّ، هَذِهِ لَا أَسْأَلُكَ غَيْرَهَا، وَرَبُّهُ يَعْذِرُهُ ؛ لِأَنَّهُ يَرَى مَا لَا صَبْرَ لَهُ عَلَيْهَا، فَيُدْنِيهِ مِنْهَا، فَإِذَا أَدْنَاهُ مِنْهَا، فَيَسْمَعُ أَصْوَاتَ أَهْلِ الْجَنَّةِ. فَيَقُولُ : أَيْ رَبِّ، أَدْخِلْنِيهَا. فَيَقُولُ : يَا ابْنَ آدَمَ، مَا يَصْرِينِي مِنْكَ، أَيُرْضِيكَ أَنْ أُعْطِيَكَ الدُّنْيَا وَمِثْلَهَا مَعَهَا ؟ قَالَ : يَا رَبِّ، أَتَسْتَهْزِئُ مِنِّي، وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ ؟ " فَضَحِكَ ابْنُ مَسْعُودٍ، فَقَالَ : أَلَا تَسْأَلُونِي مِمَّ أَضْحَكُ ؟ فَقَالُوا : مِمَّ تَضْحَكُ ؟ قَالَ : هَكَذَا ضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَقَالُوا : مِمَّ تَضْحَكُ يَا رَسُولَ اللَّهِ ؟ قَالَ : " مِنْ ضِحْكِ رَبِّ الْعَالَمِينَ حِينَ قَالَ : أَتَسْتَهْزِئُ مِنِّي، وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ ؟ فَيَقُولُ : إِنِّي لَا أَسْتَهْزِئُ مِنْكَ، وَلَكِنِّي عَلَى مَا أَشَاءُ قَادِرٌ ".

சுவனத்தில் இறுதியாக நுழையும் ஒரு மனிதன் அவன், -ஸிராத்- பாலத்தைக் கடந்து செல்லும் வேளை ஒரு தடவை நடந்தும், மற்றொரு தடவை தவழ்ந்தும் செல்லுவான். (வழியில்) நரகத்தின் தீச்சுவாலை அவனை இலேசாக தீண்டி விடும். அவன் அந்தப் பாலத்தைக் கடந்ததும் நரகின் பக்கமாக திரும்பிப் பார்த்து உன்னிலிருந்தும் என்னைப் பாதுகாத்தானே அவன் (அல்லாஹ்) மகத்துவம் நிறைந்தவன், அவன் முதல், மற்றும் இறுதியாக வந்தவர்கள் எவருக்கும் வழங்காத (பல வெகுமதிகளை) எனக்கு அவன் வழங்கியுள்ளான் எனக் கூறுவான்.

அப்போது அவன் முன்பாக (சுவனத்து) மரம் ஒன்று உயர்த்தப்படும், எனது இரட்சகனே! அதன் நிழலில் நிழல் பெறவும், அதன் கீழ் ஓடும் நீரைப்பருகவும் என்னை இந்த மரத்தின் பக்கம் நெருக்கி வைப்பாயாக என வேண்டுவான். ஆதமின் மகனே! நான் இதை உனக்கு வழங்கினால் வேறு எதையும் நீ என்னிடம் கேட்பாயா என அல்லாஹ் கேட்பான். அவன் இல்லை எனது இரட்சகனே! நான் அதைத் தவிர வேறு எதையும் கேட்க மாட்டேன் என வாக்குறுதி அளித்ததும் அல்லாஹ் அதை வழங்குவான். பின்பு அதை விட அழகான மரம் ஒன்று காண்பிக்கப் படுவான். அவன் அதில் ஆசை வைத்து அதன் நீரை அருந்திட, நிழல் பெற மீண்டும் கேட்பான், அல்லாஹ் அவனிடம் ஆரம்ப வாக்குறுதியை நினைவுபடுத்திக் கூறும் போது, இதன் பின் எதையும் கேட்க மாட்டேன் எனக் கூறுவான். அந்த மரத்திலிருந்து ஆரம்பமாகி கொஞ்சம் கொஞ்சமாக அவன் சுவனவாசல் வரை நெருக்கப்படுவான்.

அப்போது அவன் சுவனவாதிகளின் சப்தத்தை செவிமடுப்பான். எனது இரட்சகனே! என்னை அதில் நுழைவிப்பாயாக! எனக் கூறுவான். ஆதமின் மகனே நான் உனக்கு உலகையும், அதை போன்றதொரு மடங்கும் தருவேன். அதைக் கொண்டு நீ பொருந்திக் கொள்வாயா எனக் கேட்பான்,

அப்போது அந்த சுவனவாதி, நீ அகிலங்களின் அதிபதியாக இருந்து கொண்டு என்னைப் பரிகாசம் செய்கின்றாயா? எனக் கேட்பான் எனக் கூறிய இந்த ஹதீஸ் அறிவிப்பாளரான இப்னு மஸ்ஊத் ரலி அவர்கள் சிரித்தார்கள். பின்பு நான் ஏன் சிரித்தேன் என்று நீங்கள் கேட்க மாட்டீர்கள் என்றார்கள். ஏன் என்று கேட்ட போது, நபிகள் நாயகம் அவர்கள் இவ்வாறே சிரித்தார்கள் எனக் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் என்ன அடிப்படையில் சிரித்தார்கள் எனக் கேட்ட போது அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வின் சிரிப்பின் மூலம் எனக் கூறினார்கள். (முஸ்லிம் ; 187)

 

عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : " إِنَّ رَجُلَيْنِ مِمَّنْ دَخَلَ النَّارَ اشْتَدَّ صِيَاحُهُمَا ، فَقَالَ الرَّبُّ : أَخْرِجُوهُمَا ، فَأُخْرِجَا ، فَقَالَ لَهُمَا : لأَيِّ شَيْءٍ اشْتَدَّ صِيَاحُكُمَا ؟ قَالا : فَعَلْنَا ذَلِكَ لِتَرْحَمَنَا ، قَالَ : رَحْمَتِي لَكُمَا أَنْ تَنْطَلِقَا فَتُلْقِيَانِ أَنْفُسَكُمَا حَيْثُ كُنْتُمَا مِنَ النَّارِ ، قَالَ : فَيَنْطَلِقَانِ فَيُلْقِي أَحَدُهُمَا نَفْسَهُ فَجَعَلَهَا اللَّهُ عَلَيْهِ بَرْدًا وَسَلامًا وَيَقُومُ الآخَرُ فَلا يُلْقِي نَفْسَهَ ، فَيَقُولُ لَهُ الرَّبُّ : مَا مَنَعَكَ أَنْ تُلْقِيَ نَفْسَكَ كَمَا أَلْقَى صَاحِبُكَ ؟ فَيَقُولُ : رَبِّ ، إِنِّي لأَرْجُو أَنْ لا تُعِيدَنِي فِيهَا بَعْدَمَا أَخْرَجْتَنِي ، فَيَقُولُ الرَّبُّ : لَكَ رَجَاؤُكَ فَيَدْخُلانِ الْجَنَّةَ جَمِيعًا بِرَحْمَةِ اللَّهِ "

நரகத்தில் இரண்டு மனிதர்களின் சப்தம் மிகக் கடுமையானதாக இருக்கும். எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் அவ்விருவரையும் நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள் என்று சொல்வான். அப்போது அவ்விருவரையும் பார்த்து ஏன் இவ்வளவு அதிகமாக சத்தம் போடுகிறீர்கள் என்று கேட்பான். எங்கள் மீது நீ இரக்கப்பட வேண்டும் என்பதற்குத் தான் இவ்வாறு செய்தோம் என்று அவர்கள் கூறுவார்கள். அப்போது இறைவன், என்னுடைய அருள் உங்களுக்கு வேண்டு மென்றால் மறுபடியும் நரகத்தில் நீங்களாகவே போய் விழுந்து விடுங்கள் என்று கூறுவான். இருவரும் செல்வார்கள். அதில் ஒருவர் உலகத்தில் தான் அவன் சொல்லிற்கு மாறு செய்தேன். இங்கேயாவது கேட்கிறேன் என்று வேகமாக போய் விழுந்து விடுவார். அல்லாஹுத்தஆலா அவருக்கு அந்த நெருப்பை குளிராக மாற்றி விடுவான். இன்னொருவர் தயங்கிக் கொண்டே நிற்பார். உன்னுடைய சகோதரன் விழுந்ததைப் போன்று நீ ஏன் விழ வில்லை என்று அல்லாஹ் கேட்பான். அப்போது அவர், நரகத்திலிருந்து எங்களை வெளியே எடுத்த பிறகு மறுபடியும் நரகத்திற்கு அனுப்ப மாட்டாய் என்று நம்பினேன் என்பார். அப்பொழுது அல்லாஹ் உன்னுடைய நம்பிக்கை வீண் போக வில்லை என்று சொல்லி அவ்விருவரையும் சொர்க்கத்திற்கு அனுப்பவான். (அல்பிதாயா வன் நிஹாயா)

  

6 comments:

  1. மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத்

    ReplyDelete
  2. بارك الله

    ReplyDelete
  3. அல்ஹம்துலில்லாஹ் ஜஸாகல்லாஹுகைரன் ஹழ்ரத்

    ReplyDelete
  4. அல்ஹம்துலில்லாஹ் ஹஜ்ரத் அருமையான கருத்து

    ReplyDelete
  5. Arrahman migavum rahmathanavan innum Bakiyam vudiayavan it was too helpful to me

    ReplyDelete