Thursday, May 11, 2023

விபத்துக்களும் பாதுகாப்பு வழிமுறைகளும்

 

நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த அவசர யுகத்தில் பரபரப்பான சூழலில் பயணங்கள் என்பது இன்றியமையாததாக ஆகிவிட்டது. படிப்பிற்காக, தொழிலுக்காக, குடும்பத்தின் அலுவல்களுக்காக, சொந்த காரியங்களுக்காக அல்லது சமூகக் காரியங்களுக்காக, சுகத் துக்கங்களுக்காக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அல்லது ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு அல்லது ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு, இப்படி ஒவ்வொரு நாளும் நாம் பயணம் மேற்கொள்கிறோம். மனிதர்களும் மனிதர்கள் மேற்கொள்கிற பயணங்களும் அதிகரித்து விட்ட இந்த காலகட்டத்தில் வாகனங்களும் பெருத்து விட்டது.

ஒட்டகங்கள் குதிரைகள் மற்றும் கழுதைகளை உங்களுக்கான வாகனங்களாக நாம் ஆக்கியிருக்கிறோம் என்று அல்லாஹ் திருமறையில் கூறுகிறான். ஒரு நேரத்தில் அவைகள் தான் வாகனங்களாக பயன்பட்டன. ஆனால் இன்றைய நவீன யுகத்தில் விதவிதமான அதி வேகமாக செல்லக்கூடிய மிகவும் விலை உயர்ந்த வாகனங்கள் தோன்றி விட்டன. அதிகரித்து விட்டன.

எந்தளவு வாகனங்கள் அதிகரித்து விட்டதோ அதே அளவிற்கு அதனால் ஏற்படக்கூடிய விபத்துகளும் ஆபத்துகளும் இழப்புகளும் அதிகரித்து விட்டது. வீட்டை விட்டு வெளியில் சென்றால் மீண்டும் வீட்டிற்கு திரும்புவது நிச்சயமில்லைஎன்று சொல்லுமளவிற்கு இன்று சாலை விபத்துகள் அதிகமாக நடப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.  அரசும் அதிகாரிகளும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்த, அதனால் ஏற்படும் உயிர் சேதங்களை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டங்களை மேற்கொண்டாலும், அது சம்பந்தமான பிரசுரங்களை விநியோகித் தாலும் சாலை விபத்துகளை கட்டுப்படுத்த முடிய வில்லை.

2021 - ம் ஆண்டில்  வெளியிடப்பட்ட தேசிய குற்றவியல் ஆவண காப்பக அறிக்கையில், சாலை விபத்துகள் குறித்த சில கவலைதரத்தக்க புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.

2021 - ம் ஆண்டில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் 15,384 உயிரிழப்புகளுடன் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. 21,792 உயிரிழப்புகளுடன் உத்தர பிரதேச மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.

2021 - ம் ஆண்டில் 53 பெருநகரங்களில் 55,442 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில், 5,034 விபத்துகள் சென்னையில் மட்டுமே நிகழ்ந்துள்ளன. அதிக சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ள பெரு நகரங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது.

அதேசமயம், சாலை விபத்துகள் அதிகம் பதிவான மாநிலங்களில் 55,682 விபத்து சம்பவங்களுடன் முதலாவது இடத்தில் உள்ளது தமிழ்நாடு.

இருசக்கர வாகன ஓட்டிகளால் ஏற்பட்ட விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டதிலும் தமிழ்நாடு (8,259) முதலிடத்தில் உள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளில் 5,360 உயிரிழப்புகள் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளன.

18,560 விபத்து நிகழ்வுகளுடன் மாநில நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்த விபத்துகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

அதிவேகமாக வாகனங்களை இயக்குவதால் நிகழ்ந்துள்ள உயிரிழப்புகளில் 11,419 உயிரிழப்புகளுடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

சாலை விபத்துகளும் அதனால் ஏற்படுகின்ற உயிர் சேதங்களும் அதிகரித்து விட்ட இந்த நேரத்தில் அது குறித்து இந்த ஜும்ஆவில் நாம் சிந்திப்போம். குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் அதற்கான தீர்வைக் காண்போம்.

சாலை விபத்துகளுக்கான காரணங்கள்

1. தரமற்ற சாலைகள்:

மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை 1.3 சதவீதம் மோசமான சாலைகளே விபத்துகளுக்கு காரணம் என்று கூறுகிறது.

நம் நாட்டில் இருக்கக்கூடிய சாலைகள் குண்டும் குழியுமாக மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக வாகன ஓட்டிகளுக்கு மரணக்குழிகளாக காட்சியளிக்கின்றன. மக்களின் ஓட்டுக்களிலும் வரிப்பணங்களிலும் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களும் அமைச்சர்களும் அதிகாரிகளுமே இதற்கு முழு முதற்காரணங்களாகும். அரசாங்கம் சாலைகளுக்கென்று ஒதுக்குகின்ற பணங்களை இடையில் இருக்கின்ற அதிகாரிகள் ஊழல் செய்து தரமற்ற சாலைகளை போட்டு குடிமக்களின் உயிர்களைப் பறித்து விடுகின்றனர். ஆட்சியாளர்களின் மெத்தெனப்போக்கும் பொடுபோக்குத்தனமும் குடிமக்களைக் குறித்து எந்தவிதமான கவலையும் கொள்ளாததுமே விபத்துகளுக்கு காரணமாக அமைந்து விடுகின்றன.

2. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது:

உலகத்தில் 44 முதல் 67 சதவீதம் வரையிலான சாலை விபத்து இறப்புகளுக்கு குடிபோதையில் வாகனம் ஓட்டுவதே முக்கிய காரணம் என்ற அதிர்ச்சித் தகவலை உலக சுகாதார நிறுவனம் ஓர் ஆய்வில் தெரிவித்திருக்கிறது.

சமீபத்தில் திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் அரசு அனுமதி பெற்று மது பரிமாறலாம் எனத் தமிழக அரசின் அரசிதழில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அரசாணையில், "திருமண மண்டபங்கள், விளையாட்டு  மைதானங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் சிறப்பு அனுமதி பெற்று மது பரிமாறலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசே முன்னின்று சாராயக்கடைகளையும் மதுக்கடைகளையும் திறந்து அதற்கு சிறப்பு அனுமதியும் வழங்கி இருக்கிற இந்த நேரத்தில் அதனால் ஏற்படக்கூடிய விபத்துக்களை நிச்சயம் தவிர்க்க முடியாது. 

3.கட்டுப்பாடில்லாத வேகம் :

அசுர வேகத்தில் வாகனங்களை இயக்கி அதன் மூலம் பலர் தங்களின் உயிர்களை பறிகொடுத்து விடுகின்றனர். உண்மையில் வேலை இருக்கிறது, அவசரமாகச் செல்ல வேண்டிய தேவை இருக்கிறது என்றால் பரவாயில்லை. ஆனால் இன்றைக்கு அவசர வேலைகள் எதுவும் இல்லா விட்டாலும் அவசரமாக செல்ல வேண்டிய தேவை எதுவும் இல்லா விட்டாலும் வேகமாக செல்வது, வாகனத்தை இயக்குவது இன்றைக்கு ஃபேஷனாக ஆகி விட்டது. இதில் நீயா நானா என்ற போட்டி வேறு. யார் முதலில் செல்கிறார்கள் என்று பார்க்கலாம் என்று கூறி இன்றைய இளைஞர்கள்  போட்டி போட்டுக் கொண்டு வாகனத்தை மிக வேகமாக ஓட்டுவதைப் பார்க்கிறோம். அதனால் வேகமாக இந்த உலகத்தை விட்டும் முதலாக சென்று விடுகிறார்கள்.

பெற்றோர்களுக்கும் இதில் பங்கு உண்டு.விலை உயர்ந்த வாகனங்களை தங்களின் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுக்கிறார்கள்.  தங்களின் செல்லப்பிள்ளைகளுக்கு கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கும் பழக்கமுள்ள பெற்றோர்கள், பிள்ளைகள் கேட்கிறார்கள் என்பதற்காக இந்த வேகமாக செல்லக்கூடிய விலை உயர்ந்த வாகனங்களை அதன் விபரீதங்கள் புரியாமல் வாங்கித் தந்து விடுகிறார்கள்.அந்த வகையில் சாலை விபத்துகளுக்கு பெற்றோர்களும் ஒரு காரணமாக அமைந்து விடுகின்றனர். 

மொனாக்கோ(Monaco) என்ற சிறிய ஐரோப்பிய நாடு, மிகக் குறைந்த சாலை விபத்துக்களில் முதலிடத்தில் இருக்கின்றது . 100000 பேரில் ஒருவர் தான் சாலை விபத்தில் இறக்கிறார் என்ற விகிதாசாரம் நம்மைப் பெரிதும் வியக்க வைக்கின்றது.

வத்திக்கான் நகருக்கு அடுத்ததாக உலகின் மிகச்சிறிய நகர-நாடு என்பது இந்த மொனாக்கோ தான்! இதன் எல்லையின் வடக்கு, மேற்கு, மற்றும் தெற்குப் பகுதிகளில் பிரான்ஸ் நாடு உள்ளது. இதன் பரப்பளவு 1.98 சதுர கிமீ (0.76 சதுர மைல்) ஆகும்.உலகின் மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக உள்ள நாடும், தனி நபர் வாழ்வுக் காலம் (90 ஆண்டுகள்) அதிகமான நாடும் இதுவே.இங்கு வசிப்பவர்களில் 80 சதவீதமானவர்கள் வெளிநாட்டவர்கள் என்பது ஆச்சரியமான இன்னொரு தகவல்! நகரத்தின் பொதுச் சாலையில் (Monaco Grand Prix F1) என்ற கார் ஓட்டப் பந்தயம் நடை பெற்று வருகிறது.  இப்படி மின்னல் வேகத்தில் காரை ஓட்டும் நாட்டில் விபத்துக்கள் மிக மிகக் குறைவு என்பது நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. இங்கே சாலை விதிகளில் உள்ள கடும் கெடுபிடி தான், இந்த நாட்டில் விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் தடுக்கின்றது. நகரத் தெருக்களில் மணிக்கு 70 கி.மீ வேகத்திற்கு அதிகமாக காரை ஓட்ட முடியாது.

எனவே வேகம் என்பது எப்போதுமே ஆபத்து தான். எந்தளவு நிதானம் கடைபிடிக்கப்படுகிறதோ அந்தளவு ஆபத்துக்கள் குறைவாக இருக்கும்.

4. சாலை விதிகளை மீறுதல் :

இந்தியாவை விட அதிகம் மக்கள் தொகையும், மோட்டார் வாகனங்களும் உள்ள நாடு சீனா. ஆனால், அங்கே சாலை விபத்தில் மரணமடையும் நபர்களின் எண்ணிக்கை இந்தியாவோடு ஒப்பிடுகையில் குறைவு தான்.

இந்தியாவை விட அதிக அளவில் வாகனங்கள் இருந்தாலும், வளர்ச்சி அடைந்த நாடுகளில் சாலை விபத்துகள் கணிசமாகக் குறைந்து இருப்பதற்கு முக்கியக் காரணம், அங்கே சாலை விதிகள் மிகவும் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன என்பதும், விபத்துகள் நேராமல் இருப்பதற்கான வழிகளைத் தொடர்ந்து ஆய்வு செய்து திருத்தங்களை அவ்வப்போது கொண்டு வந்தபடி இருப்பதும் தான்.

ஆனால் நம் நாட்டில் சாலை விதிகளை எவரும் கடைபிடிப்பதில்லை. ஒரு அமெரிக்கரும், ஒரு இங்கிலாந்து நாட்டவரும், ஒரு இந்தியரும் பேசிக்கொண்டார்கள்.

அமெரிக்கர் சொன்னார், எங்கள் நாட்டில் வாகனங்கள் வலது புறமாகச் செல்லும்.

இங்கிலாந்துக் காரர் சொன்னார், எங்கள் ஊரில் இடது புறமாகச் செல்லும்.

இந்தியர் கடைசியாக சிரித்துக் கொண்டே சொன்னார், எங்கள் ஊரில் இடைவெளி இருக்குமிடமெல்லாம் செல்லும்.

5.கைப்பேசி:

மக்களின் அத்தியவாசியத் தேவைகளில் முதலிடம் வகிப்பது கைப்பேசி. மக்களின் மூன்றாவது கரம் என்று சொல்லுமளவிற்கு செல்போன் பயன்பாடு அதிகரித்து விட்டது. ஆனால் எப்போது பயன்படுத்த வேண்டும் எந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என்று அதற்கு ஒரு வரைமுறை இல்லாத அளவிற்கு வாகனம் ஓட்டும் போதும் அதை பயன்படுத்துகின்றனர். அதனால் இன்றைக்கு நிறைய விபத்துக்கள் நடந்து கொண்டிருக்கிறது.

6. அல்லாஹ்வின் விதி.

சாலைகள் நன்றாக இருந்து ஒருவர் மது அருந்தாமல் நிதானமாக சாலை விதிகளை மதித்து சரியாக பாதுகாப்பாக பயணம் மேற்கொண்டாலும் சமயங்களில் விபத்துக்கள் நடந்து விடும் காரணம் அல்லாஹ்வின் விதி. அவரின் மரணம் அப்படித்தான் நிகழ வேண்டும் என்று இறைவன் முடிவு செய்து விட்ட பொழுது யாராலும் அதை மாற்ற முடியாது அதை திருத்த முடியாது.

وَاِنْ يَّمْسَسْكَ اللّٰهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهٗۤ اِلَّا هُوَ ‌ وَاِنْ يُّرِدْكَ بِخَيْرٍ فَلَا رَآدَّ لِفَضْلِهٖ‌  يُصِيْبُ بِهٖ مَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ‌  وَهُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ

அல்லாஹ் உங்களுக்கு யாதொரு தீங்கிழைக்கும் பட்சத்தில் அதனை நீக்க அவனைத் தவிர மற்றெவராலும் முடியாது. அவன் உங்களுக்கு யாதொரு நன்மையை நாடினால் அவனுடைய அக்கருணையைத் தடை செய்ய எவராலும் முடியாது. அவன் அடியார்களில் அவன் விரும்பியவர்களுக்கே அதனை அளிக்கிறான். அவன் மிக்க மன்னிப்பவனும் கிருபையுடைய வனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் : 10:107)

இவ்வாறு பல்வேறு காரணங்களால் இன்றைக்கு உலகில் சாலை விபத்துக்கள் அதனால் உயிர் சேதங்கள் அனுதினம் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் தீர்வு என்ன?

1, முதலில் ஆட்சியாளர்கள் சமூகத்தின் பொறுப்பாளர்கள் தங்களின் பொறுப்புக்களை உணர்ந்து இறைவனுக்கு அஞ்சி செயல்பட வேண்டும்.

عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " كُلُّكُمْ رَاعٍ فَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، فَالْأَمِيرُ الَّذِي عَلَى النَّاسِ رَاعٍ

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப்படுவீர்கள். தலைவர் பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப் படுவார்கள். (புகாரி 2554)

குடிமக்களில் சிலரை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லாஹ் ஓர் அடியாருக்குக் கொடுக்க அவர் அந்த மக்களை ஏமாற்றி மோசடி செய்த நிலையில் இறந்துபோனால் அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தை தடை செய்யாமல் இருப்பதில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

أن عمر بن الخطاب كان يسير يوماً في الطريق فرأى رجلاً يتسول، فقال له مالك يا شيخ؟ فقال الرجل: أنا يهودي وأتسول لأدفع الجزية، فقال عمر: والله ما انصفناك نأخذ منك شاباً ثم نضيعك شيخاً والله لأعطينك من مال المسلمين، وأعطاه عمر ـ رضي الله عنه ـ من مال المسلمين

கடைத்தெருவில் வயோதிகர் ஒருவர் பிச்சை எடுப்பதை கண்ட கலீஃபா உமர் (ரலி) அவர்கள் அவரின் கரங்களைப் பிடித்து பிச்சை எடுக்கும் காரணத்தை கேட்க எனக்கு தளர்ச்சி ஏற்பட்டுவிட்டது. என் அடிப்படைத் தேவைகளுக்குக் கூட உழைக்க சக்தியில்லை. என் தேவைகளை நிறைவு செய்யவே இவ்வாறு பிச்சை எடுக்கவேண்டிய சூழ்நிலை எனக்கு ஏற்பட்டிருக்கிறது என்றார் அம்முதியவர். அதற்கு கலீஃபாவின் பதில் எவ்வாறிருந்தது என்பதை கவனிக்க வேணடும் முதியவரே நாங்கள் தங்களிடம் நியாயமாக நடக்கவில்லை. தாங்கள் வாலிபராக உழைத்த காலங்களில் தங்களிடமிருந்து பாதுகாப்பு வரியை வசூலித்த நாங்கள் தாங்கள் உழைக்கமுடியாத காலங்களில் கவனிக்காமல் விட்டுவிட்டோமே? எனக் கண்ணீர் மல்கக்கூறி அவர் இறக்கும் காலம் வரை அவருக்கும் அவரைச் சார்ந்து வாழ்வோருக்கும் பொது நிதியிலிருந்து கொடுக்கும்படி ஆணையிட்டார்கள். (ஜாமிவுல் அஹாதீஸ்)

யூப்ரடீஸ் நதிக்கரையில் ஒரு ஆடு அநியாயமாக இறந்தாலும் அதற்காக இந்த உமர் இறைவனால் விசாரிக்கப்படுவான் என கலீஃபா உமர்(ரலி) கூறினார்கள். அவர்கள் ஆண்டு கொண்டிருந்த மதீனாவிற்கும் இராக்கில் அமைந்த யூப்ரடீஸ் நதிக்கும் பல நூறு மைற்கள் இருந்தாலும் ஒரு ஆட்டின் உயிருக்கு எந்தளவு மதிப்பளித்தார்கள் என்பதற்கு இது ஒரு மிகப்பெரும் எடுத்துக்காட்டாகும்.

2. ஒவ்வொருவரும் சரியாக நடக்க வேண்டும்.

சாலைகளில் செல்லுகின்ற பொழுது அவசரம் இல்லாமல் வேகம் இல்லாமல் நிதானமாக அமைதியாக சொல்ல வேண்டும். எல்லா காரியங்களிலும் நிதானத்தை கடைபிடிக்கும் படி இஸ்லாம் சொல்கிறது. குறிப்பாக வாகனம் ஓட்டும் போது.

حَدَّثَنِي ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّهُ دَفَعَ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَرَفَةَ، فَسَمِعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَاءَهُ زَجْرًا شَدِيدًا وَضَرْبًا وَصَوْتًا لِلْإِبِلِ، فَأَشَارَ بِسَوْطِهِ إِلَيْهِمْ، وَقَالَ : " أَيُّهَا النَّاسُ، عَلَيْكُمْ بِالسَّكِينَةِ ؛ فَإِنَّ الْبِرَّ لَيْسَ بِالْإِيضَاعِ ".

அரஃபா தினத்தில் நபி(ஸல்) அவர்களுடன் நான் திரும்பும்போது, நபி(ஸல்) அவர்கள் தமக்குப் பின்னால் ஒட்டகத்தை அடித்து விரட்டக் கூடிய கடும் (அதட்டல்) சப்தத்தையும் ஒட்டகம் அலறுவதையும் செவியுற்றார்கள். உடனே தம் சாட்டையால் சைகை செய்து, மக்களே! அமைதியைக் கடைப்பிடியுங்கள்! நன்மையென்பது விரைவதிலோ ஒட்டகங்களை குதிரைகளை விரட்டுவதிலோ இல்லைஎனக் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள். (புகாரி 1671)

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ ، عَنْ أَبِيهِ ، قَالَ : بَيْنَمَا نَحْنُ نُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذْ سَمِعَ جَلَبَةَ رِجَالٍ، فَلَمَّا صَلَّى قَالَ : " مَا شَأْنُكُمْ ؟ " قَالُوا : اسْتَعْجَلْنَا إِلَى الصَّلَاةِ، قَالَ : " فَلَا تَفْعَلُوا ؛ إِذَا أَتَيْتُمُ الصَّلَاةَ فَعَلَيْكُمْ بِالسَّكِينَةِ، فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا، وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا ".

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்களுடன் தொழுது கொண்டிருக்கையில் (அவர்கள்) சில சப்தத்தை செவியுற்றார்கள். தொழுகையை முடித்துக்கொண்டு உங்களது விஷயம் என்ன? (ஏன் சப்தமிட்டீர்கள்) எனக் கேட்டார்கள். (அதற்கவர்கள்) தொழுகைக்கு அவசரமாக வந்தோம் என்றனர். அதைக் கேட்ட நபி அவர்கள் அவ்வாறு செய்யாதீர்கள். தொழுகைக்காக நீங்கள் வந்தால் அவசியம் அமைதியாக வாருங்கள். எதைப் பெற்றுக் கொண்டீர்களோ அதை (இமாமுடன் சேர்த்து) தொழுங்கள். எது உங்களுக்கு முந்திவிட்டதோ அதை (தொடர்ந்து) நிறைவு செய்யுங்கள் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி : 635)

உலக வாழ்க்கை என்பது இறைவன் நமக்கு வழங்கிய பொக்கிஷம். அதை பயனுள்ளதாக அமைத்துக் கொள்ள வேண்டியது நம்முடைய கடமை. அதை விட்டு விட்டு அற்ப சுகத்துக்காக வேகமாக வாகனங்களை ஓட்டி அந்த பொக்கிஷத்தை இழந்து விடக்கூடாது. அன்றாடம் நம் வாழ்வில் நாம் எவ்வளவோ கோர விபத்துக்களை, நேரிலோ அல்லது ஊடகங்களின் வழியாகவோ பார்க்கிறோம். அவற்றையெல்லாம் ஒரு  பாடமாக எடுத்துக் கொண்டு நிதானமாகவும் கவனமாகவும் செல்ல வேண்டும்.

3. விதிகளை மீறக்கூடாது

ஒவ்வொரு விஷயத்திலும் எப்போது விதிகள் மீறப்படுகிறதோ அப்போது ஆபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் உல்லாசப் படகு கவிழ்ந்ததில் 22 பேர் பலியானார்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 11 பேர் உயிரிழந்தார்கள். மற்றொரு குடும்பத்தில் தாய், குழந்தைகள் என 4 பேர் உயிரைப் பறிகொடுத்தனர். படகுச் சுற்றுலாவில் விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டதே அதிக உயிரிழப்புக்கு காரணமாக கூறப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை சேவை தொடங்கும் போது படகில் கூட்டம் அதிகமாக இருந்ததாகவும், ஆபத்தான முறையில் நகர்ந்ததாகவும் உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டினர்.

படகு நகரும் போது ஒரு பக்கமாக வளைந்து காணப்பட்டது. இது ஒரு ஆபத்தான சூழ்நிலை. சேவையை நிறுத்துமாறு படகு ஓட்டுநரை நாங்கள் எச்சரித்தாலும், அவர் எச்சரிக்கையை புறக்கணித்துவிட்டார்,” என்று குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

தூவல் தீரம் கடற்கரையில் படகு விபத்தை நேரில் பார்த்த அப்பகுதி மீனவர் பிரகாசன் கூறுகிறார்

"படகில் தண்ணீர் புகுந்த போதும் ஓட்டுநர் தொடர்ந்து அழமான பகுதியிலேயே போட்டை செலுத்தினார் . படகை உடனடியாக கரைக்கு கொண்டு வந்திருந்தால் விபத்தை தடுத்திருக்கலாம்.

விபத்துக்குள்ளான படகில் 40 க்கும் மேற்பட்டோர் பயணித்ததாக உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள். மாலை 6 மணி வரை மட்டுமே படகு சவாரி செய்ய அரசு அனுமதித்துள்ளது. ஆனால், நாசர் என்பவருக்கு சொந்தமான ஈரடுக்கு கொண்ட அந்த உல்லாசப் படகு இரவு 7 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் 40க்கும் மேற்பட்டோருடன் புறப்பட்டுள்ளது. கடற்கரையில் இருந்து சுமார் 500 மீட்டர் சென்றபோது, இந்த படகு தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இரண்டு அடுக்கு கொண்ட படகில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றியதும், நேரம் கடந்த பிறகு இருளில் படகு சவாரி சென்றதும் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தி இருக்கிறது.மட்டுமல்ல படகில் உயிர் காக்கும் தற்காப்பு கருவிகள் எதுவும் இருக்கவில்லை.

4, நபியவர்கள் சொல்லித் தந்த பாதுகாப்பு துஆக்களை நாம் ஓத வேண்டும்.

ஒவ்வொரு காரியங்களிலும் பாதுகாப்பு பெறும் வழிமுறைகளையும் அதற்கான துஆக்களையும் நபி அவர்கள் கற்றுத் தந்திருக்கிறார்கள். இன்றைக்கு அதிகம் நடைபெறுகின்ற நாம் யாரும் எதிர் பார்க்காத அசம்பாவிதங்களிலிருந்தும் இந்த துஆக்கள் நிச்சயம் நம்மைப் பாதுகாக்கும்.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " إِذَا خَرَجَ الرَّجُلُ مِنْ بَيْتِهِ فَقَالَ : بِاسْمِ اللَّهِ، تَوَكَّلْتُ عَلَى اللَّهِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ " قَالَ : " يُقَالُ حِينَئِذٍ : هُدِيتَ وَكُفِيتَ وَوُقِيتَ. فَتَتَنَحَّى لَهُ الشَّيَاطِينُ، فَيَقُولُ لَهُ شَيْطَانٌ آخَرُ : كَيْفَ لَكَ بِرَجُلٍ قَدْ هُدِيَ وَكُفِيَ وَوُقِيَ ؟ "

ஒருவர் தன் வீட்டில் இருந்து வெளியேறும் நேரத்தில் இந்த வார்த்தையை சொன்னால் அப்போது நீ வழிகாட்டப்பட்டு விட்டாய் கவலைகள் நினைவூட்டும் நீங்கிவிட்டது நீ பாதுகாக்கப்பட்டு விட்டாய் என்று சொல்லப்படும் சைத்தான் அவரை விட்டும் தூரமாகி விடுவான் இன்னொரு விஷயம் தான் வழிகாட்டப்பட்ட கவலைகள் நீங்கிவிட்ட பாதுகாப்பை பெற்று விட்ட ஒரு மனிதனை எவ்வாறு வழிநெடுப்பாய் என்று கேட்பான். (அபூதாவூத் : 5095)

روى مسلم عن أبي هريرة أنه قال: جاء رجلٌ إلى النبي صلى الله عليه وسلم، فقال: يا رسول الله ما لقيت من عقرب لدغتني البارحة، قال: أما لو قُلت حين أمسيت: أعوذ بكلمات الله التامات من شر ما خلق، لم تضُرَّك

ஒரு மனிதர் நபியிடத்தில் வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே நேற்று இரவு என்னை ஒரு கேள் போட்டுவிட்டது என்று கூறினார் அப்போது நபியவர்கள் மாலையில் இந்து துவாவை ஓதி இருந்தால் உனக்கு எந்த ஆபத்தும் நேர்ந்திருக்காது என்று கூறினார்கள். (முஸ்லிம் ; 2709)

 


3 comments: