அல்லாஹ் நமக்கு கொடையாக வழங்கியிருக்கிற இஸ்லாம் மனித சமூகத்திற்குத் தேவையான உயர்ந்த நற்பண்புகளையும் அறிவார்ந்த கருத்துக்களையும் கூறி அதன் மூலம் மனித உள்ளங்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. இஸ்லாம் மனித சமூகத்திற்குச் சொன்ன மிக அற்புதமான கருத்துக்களில் ஒன்று உனக்கு மட்டுமல்ல, பிறருக்கும் பயனுள்ளவனாக இரு. உனக்கு மட்டுமல்ல, பிறருக்கும் நன்மை செய்பவனாக இரு. உன்னைக் கொண்டு உனக்கு என்ன பயன் கிடைத்தது, கிடைக்கிறது என்பது முக்கியம் இல்லை. உன்னைக் கொண்டு உன் குடும்பம், உன் சொந்த பந்தம், உன் நண்பர்கள், உன் சமூகம் என்ன பயன்களை,பலன்களை அடைந்திருக்கிறது என்பது தான் முக்கியம்.
خير الناس انفعهم للناس
மக்களுக்கு அதிகம் பயன் தருபவரே அம்மக்களில் சிறந்தவர். (தப்ரானீ)
وَاَحْسِنُوْا اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُحْسِنِيْنَ
(பிறருக்கு உதவியும்) நன்மையும் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (பிறருக்கு) நன்மை செய்பவர்களை நேசிக்கின்றான். (அல்குர்ஆன் : 2:195)
மனிதனாகப் பிறந்தவன் பிறருக்கு உபகாரம் செய்ய வேண்டும், தேவைப்படுவோருக்கு உதவிகள் புரிய வேண்டும். அவனைச் சுற்றியிருப்பவர்கள் அவனைக் கொண்டு பலனடைய வேண்டும். இல்லையென்றால் அவன் மனிதனாகவும் இருக்க முடியாது, சிறந்தவனாகவும் இருக்க முடியாது.
ஸஹாபாக்களின் வாழ்வு முழுக்க முழுக்க மற்றவர்களுக்கு பயன் தரும் ஒரு அற்புத வாழ்வாகத்தான் இருந்தது என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது.
روى الترمذي عن أنس بن مالك رضي الله عنه، قال: لما قدم النبي صلى الله عليه وسلم المدينة أتاه المهاجرون، فقالوا: يا رسول الله، ما رأينا قومًا أبذل من كثير ولا أحسن مواساةً من قليل - (أي من مال قليل) - من قوم - (أي الأنصار) - نزلنا بين أظهرهم - (أي عندهم) - لقد كفونا المؤنة، وأشركونا في المهنأ - (أي: أحسنوا إلينا؛ سواء كانوا كثيري المال، أو فقيري الحال) - حتى لقد خفنا أن يذهبوا بالأجر كله، فقال النبي صلى الله عليه وسلم: ((لا، ما دعوتم الله لهم وأثنيتم عليهم
நபி ﷺ அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்த வந்த நேரத்தில் முஹாஜிர்கள் நபி ﷺ அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே அன்ஸாரிகளை விட தங்களுடைய பொருளாதாரத்தை அதிகம் செலவு செய்கின்ற ஒரு கூட்டத்தை நாங்கள் கண்டதில்லை. மேலும் அவர்களை விட பிறருக்கு ஆதரவளிக்கின்ற ஒரு சமூகத்தை நாங்கள் கண்டதில்லை. எங்களுக்காக அதிகம் அவர்கள் சிரமத்தை தாங்கிக் கொள்கிறார்கள். எங்களுக்கு அதிகம் உபகாரம் செய்கிறார்கள். அனைத்து நன்மைகளையும் அவர்களே எடுத்துச் சென்று விடுவார்களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம் என்று கூறினார்கள். அப்போது பெருமானார் ﷺ அவர்கள் கூறினார்கள் ; அவர்கள் செய்யும் நற்காரியங்களை நீங்கள் புகழ்ந்து அவர்களுக்காக நீங்கள் துஆ செய்து கொண்டிருந்தால் அவர்களின் உபகாரத்திற்கு நீங்கள் பிரதி உபகாரம் செய்தவர்களாக ஆகி விடுவீர்கள் என்றார்கள். (திர்மிதி ; 2487)
நன்மைகள் அனைத்தையும் அவர்களே எடுத்துச் சென்று விடுவார்களோ என்று அஞ்சும் அளவிற்கு அன்ஸாரிகளின் உபகாரங்கள் இருந்தது என்பதை பார்க்கிறோம்.
روى أبو نعيم عن مالك الداراني: أن عمر بن الخطاب رضي الله تعالى عنه أخذ أربعمائة دينار فجعلها في صرة، فقال للغلام: اذهب بها إلى أبي عبيدة بن الجراح، ثم انتظر ساعةً في البيت حتى تنظر ما يصنع، فذهب بها الغلام، فقال: يقول لك أمير المؤمنين: اجعل هذه في بعض حاجتك، فقال: وصله الله ورحمه، ثم قال: تعالي يا جارية، اذهبي بهذه السبعة إلى فلان، وبهذه الخمسة إلى فلان، وبهذه الخمسة إلى فلان، حتى أنفذها، فرجع الغلام إلى عمر رضي الله تعالى عنه، وأخبره فوجده قد أعد مثلها لمعاذ بن جبل، فقال: اذهب بها إلى معاذ وانتظر في البيت ساعةً حتى تنظر ما يصنع، فذهب بها إليه، فقال: يقول لك أمير المؤمنين: اجعل هذه في بعض حاجتك، فقال: رحمه الله ووصله، تعالي يا جارية، اذهبي إلى بيت فلان بكذا، اذهبي إلى بيت فلان بكذا، فاطلعت امرأة معاذ، فقالت: ونحن والله مساكين فأعطنا، ولم يبق في الخرقة إلا ديناران، فدحا - (ألقى) - بهما إليها - (أي: أعطاهما) - ورجع الغلام إلى عمر، فأخبره، فسُرَّ بذلك، وقال: "إنهم إخوة بعضهم من بعض"؛ (حلية الأولياء؛ لأبي نعيم، ج1، ص237).
உமர் ரலி அவர்கள் 400 தீனாரை ஒரு பையில் வைத்து தன் அடிமையிடம் கொடுத்து அபூஉபைதா ரலி அவர்களிடம் கொடுத்து விட்டு, அவர், அதை என்ன செய்கிறார் என்று நின்று பார்த்து வரும் படி சொன்னார்கள். அவரும் அதை கொடுத்து விட்டு அங்கு நின்று பார்த்துக் கொண்டிருந்தார். அபூஉபைதா ரலி அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டு அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து தேவையுடையோருக்கு கொடுத்து அனைத்தையும் முடித்து விட்டார்கள். பிறகு உமர் ரலி அவர்கள் மீண்டும் ஒரு பையில் அதேபோன்று 400 தீனாரை வைத்து முஆத் பின் ஜபல் ரலி அவர்களிடம் கொடுத்து வரும் படி சொன்னார்கள். அவர்களும் அபூஉபைதாவைப் போன்றே அனைத்தையும் கொடுத்து விட்டார்கள். முஆத் ரலி அவர்களின் மனைவி, நாமும் தேவையுடையவர்கள் தான். எங்களுக்கும் தாருங்கள் என்று சொன்ன போது மீதியிருந்த 2 தீனாரை மட்டும் கொடுத்தார்கள். நடந்த விஷயத்தை அந்த அடிமை உமர் ரலி அவர்களிடம் வந்து சொன்ன போது அவர்கள் ரொம்பவும் மகிழ்ச்சியடைந்தார்கள். (ஹுல்யதுல் அவ்லியா)
ஒரு முஃமின் மக்களுக்கு பயன் தரும் வாழ்க்கை வாழ்பவராக இருக்க வேண்டும். பணம் இருந்தால் அதைக் கொண்டு பயனளிக்க வேண்டும். அறிவு இருந்தால் அதைக் கொண்டு பயனளிக்க வேண்டும்.திறமை இருந்தால் அதைக் கொண்டு பயனளிக்க வேண்டும்.உடல் வலிமை இருந்தால் அதைக் கொண்டு பயனளிக்க வேண்டும்.கல்வி இருந்தால் அதைக் கொண்டு பயனளிக்க வேண்டும். ஆட்சி அதிகாரம் இருந்தால் அதைக் கொண்டு பயனளிக்க வேண்டும். ஆக ஏதாவது ஒரு வகையில் பிற மனிதர்களுக்கு பயன் தருபவனாக, சேவை செய்பவனாக இருக்க வேண்டும். அவனே சிறந்தவன் என்று இஸ்லாம் கூறுகிறது.
ஆனால் இன்றைக்கு சேவை மனப்பான்மை குறைந்து விட்டது. சுயநலம் பெருகி விட்டது.பணத்தை அடிப்படையாகக் கொண்டே எல்லா காரியங்களும் நடைபெறுகிறது.கடந்த காலங்களில் சமூக சேவைகள் என்று எதுவெல்லாம் அடையாளம் காணப்பட்டதோ அவைகளெல்லாம் இன்று வியாபாரமாக மாறி விட்டது. அதில் ஒன்று தான் மருத்துவம். ஒரு நேரத்தில் சேவையாக மட்டுமே செய்யப்பட்டு வந்தது.ஆனால் இன்று மருத்துவமும் அது சார்ந்திருக்கிற துறைகளும் அதாவது மருந்து மாத்திரைகளை கண்டுபிடிக்கும் ஆராட்சிக்கூடம்,மெடிக்கல்,மருத்துவ பரிசோதனை நிறுவனம் இப்படி அனைத்தும் தொழில் மயமாக மாறி விட்டது.
தொழில் புரட்சி ஏற்படுவதற்கு முன்பு கல்வியும் மருத்துவமும் உலகில் சேவைகளாக மட்டுமே இருந்தது. கல்விக்கோ மருந்துவத்திற்கோ காசு வாங்கும் பழக்கம் அன்றைக்கு இல்லை. சேவைகளுக்கு விலை நிர்ணயிப்பது இழிவான ஒன்றாக பார்க்கப்பட்ட அந்த நேரத்தில் தீட்ச்சணியம்மிக்க குருவுக்கு தட்சணையும், அனுபவமிக்க வைத்தியருக்கு அன்பளிப்பும் வழங்குவது மரபாக இருந்து வந்தது. அரசர்கள் நிலங்களை அன்பளிப்பாக வழங்குவார்கள். செல்வந்தர்கள் பொன் பொருட்களையும், விவசாயிகள் விளைச்சல் அறுவடைகளையும், பண்ணையார்கள் மாமிசத்தையும் ஆசிரியர்களுக்கும் வைத்தியர்களுக்கும் வழங்குவார்கள். ஒவ்வொருவரின் தரத்துக்கும், பொருளாதார வளத்திற்கும் ஏற்றாற் போல மனமுவந்து வழங்கப்படும் அன்பளிப்பாகவே அவைகள் காணப்பட்டது.
நபி ﷺ அவர்களின் காலத்திலும் எண்ணற்ற ஆண் மருத்துவர்களும் பெண் மருத்துவர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் அதை சேவையாகத்தான் செய்தார்கள். அவர்களில் சிகிச்சை செய்வதற்கு விலை நிர்ணயம் யாரும் காசு வாங்கியதாகவோ அல்லது அநியாயமாக பணம் வசூலித்ததாகவோ வரலாற்று குறிப்புகள் இல்லை.அதற்காக மக்கள் தரும் அன்பளிப்புகளைப் பெற்றுக் கொள்வார்கள். அல்லாஹ்விடத்தில் தான் அதற்கான கூலியை எதிர் பார்த்தார்கள்.
சிகிச்சைக்குப் பகரமாக ஷஹாதத்தைக் கேட்ட பெண்
عن أم ورقة بنت عبد الله بن نوفل الأنصارية، أن النبي صلى الله عليه وسلم لما غزا بدرا، قالت: قلت له: يا رسول الله، ائذن لي في الغزو معك أمرض مرضاكم، لعل الله أن يرزقني شهادة، قال: «قري في بيتك فإن الله تعالى يرزقك الشهادة»، قال: فكانت تسمى الشهيدة
பதர் போருக்காக நபி ﷺ அவர்கள் தயாராகிக் கொண்டிருந்த போது உம்மு வரகா என்ற பெண்மனி போர்க்களத்தில் கலந்து கொள்ள எனக்கு அனுமதி தாருங்கள். போரில் காயம் ஏற்படுபவர்களுக்கு நான் சிகிச்சையளிப்பேன். அல்லாஹ் நாடினால் எனக்கு ஷஹாதத்தும் கிடைக்கலாம் என்று கேட்டார்கள். அப்போது நபி ﷺ அவர்கள் இல்லை, நீ வீட்டிலேயே இரு. அல்லாஹ் உனக்கு ஷஹாதத்தைத் தருவான் என்று சொன்னார்கள். அதனால் அந்த பெண்மனிக்கு ஷஹீதா என்றே அழைக்கப்பட்டார்கள். அவர்கள் சொன்னதைப் போன்றே உமர் ரலி அவர்களின் ஆட்சி காலத்தில் அவர்களின் அடிமைகளின் மூலமே ஷஹீதாக்கப்பட்டார்கள்.
ஆனால் கால ஓட்டத்தில் எல்லாமே மாறிவிட்டன. சேவைகளும் பொருட்களைப் போன்றதொரு வணிகப் பண்டமாக, விலை குறிக்கப்பட்ட வியாபாரமாக மாறிய இன்றைய உலகில் மருத்துவம் மட்டுமின்றி எல்லா அடிப்படை சேவைகளும் விதி விலக்கில்லாமல் இந்த பொருளாதாரப் பிடிக்குள் சிக்கி விட்டது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.
கடந்த முப்பது, நாற்பது ஆண்டுகளில் மருத்துவத் துறையின் நிலை நிறைய மாறி விட்டது. இப்போது மருத்துவம் வியாபாரமாக மாறி விட்டது.மருத்துவம் செய்து கொள்ள வருபவர்களிடம் எப்படி பணத்தை கறப்பது என்ற நிலையே இருக்கிறது. அவர்களின் நலனைப் பற்றி கவலைப்படுவதில்லை. மருத்துவத் தொழிலில் சேவை மனப்பான்மை போய், பணம் பார்க்கும் தொழிலாக மாறி விட்டது. மருத்துவ தொழில் செய்பவர்கள், தாங்கள் இதில் போட்ட பணத்தை எவ்வளவு விரைவாக எடுக்க முடியும் என்று தான் பார்க்கிறார்கள். நோயாளிகள் மீது செலுத்தும் கவனத்தை விட, முழு கவனமும் பணம் சம்பாதிப்பதிலேயே இருக்கிறது என்று கூறுகிறார்கள் நடுநிலையாளர்கள்.
மருத்துவக் கல்வி என்பது தீனுடைய கல்விக்கு அடுத்து மிகச்சிறந்த கல்வியாக பார்க்கப்படுகிறது.
فعن الربيع سمعت الشافعي يقول: لا أعلم علما بعد الحلال والحرام أنبل من الطب
فقال رحمه الله: ” لا تسكنن بلدا لا يكون فيه عالم يفتيك عن دينك، ولا طبيب ينبئك عن أمر بدنك
ஹலால் ஹராமிற்குப் பிறகு மருத்துவத்தை விட மிகச்சிறந்த கல்வியை நான் அறிய வில்லை. உனக்கு மார்க்கத்தினுடைய விளக்கத்தைக் கூறுகின்ற மார்க்க அறிஞரும் உன் உடலைப் பற்றி உனக்கு எடுத்துச் சொல்கின்ற மருத்துவரும் இல்லாத ஊரில் நீ வசிக்க வேண்டாம் என்று இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
எனவே மார்க்க கல்விக்கு அடுத்த அந்தஸ்தை மருத்துவம் சார்ந்த கல்விக்குத் தருகிறார்கள்.அத்தகைய உயர்ந்த மருத்துவம் இன்றைக்கு வியாபாரமாக மாறி இருப்பது அபத்தமானது.
ஒரு சராசரி மனிதன் நோய்களைக் கண்டு அஞ்சுவது அதனால் ஏற்படும் வலி மற்றும் வேதனைக்காக என்பதைக் காட்டிலும் அதற்கு சிகிச்சை பெறுவதற்காக ஆகும் செலவை எண்ணித்தான் அதிகம் அஞ்சுகிறான். சாதாரண காய்ச்சல் என்று தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றாலே சில ஆயிரம் ரூபாய்களை கறந்து விடுகிறார்கள். ஆபரேஷன் என்றால் இலட்சக்கணக்கில் பிடுங்கி விடுகிறார்கள். அதனாலே தனியார் மருத்துவ மனையின் வாசலை மிதிக்கவே நடுத்தரவர்க்கத்தை சார்ந்தவன் பதறுகிறான். சாதாரண நோயுக்காக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றவன் அந்த மருத்துவமனையின் பில்லைப் பார்த்து நெஞ்சடைத்து அங்கேயே அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படும் அவலங்கள் தான் இன்று நடக்கிறது.
தனியார் மருத்துவமனைகளைப் பொறுத்த வரை நோயையும் அதற்கு ஆகும் சிகிச்சையையும் கவனித்து கட்டணம் நிர்ணயிக்கப்படுவதில்லை. மருத்துவமனையின் கம்பீரமான தோற்றம், அதன் அடுக்குமாடி கட்டிடம் ஆகியவற்றைக் கவனித்தே கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரே இட்லி தெருக்கடைகளில் 10 ரூபாய்க்கும் பெரிய ஹோட்டல்களில் 50 ரூபாய்க்கும் விற்கப்படுவதைப் போன்று குறிப்பிட்ட ஒரு வகை நோய்க்கு ஒரு மாடி கட்டிடம் என்றால் ஒரு கட்டணம். பத்து மாடி கட்டிடம் என்றால் அதே நோய்க்கு இன்னொரு கட்டணம்.ஒருவர் தம் குழந்தைக்கு ஒரு மேஜர் ஆபரேஷன் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டு திருநெல்வேலியில் உள்ள ஆஸ்பத்திரியை நாடி விசாரிக்கின்றார். அதற்கு 2 இலட்சம் வரை செலவாகும் என்று பதில் கூறப்பட்டது.அதே ஆபரேஷனுக்கு சென்னை யிலுள்ள வேறொரு ஆஸ்பத்திரியை நாடினால் 5 லட்சம் வரை செலவாகும் என்று பதில் கிடைக்கின்றது.நெல்லைக்கும் சென்னைக்கும் இருக்கும் தூரத்தை விட அவர்கள் இருவரும் கூறும் கட்டணம் அதிகமாக உள்ளது. நோய் ஒன்று. அதற்கான மருத்துவமும் ஒன்று. ஆனால் அதற்காக வசூலிக்கப்படும் கட்டணம் வேறு.
ஒரு மருத்துவமனையின் ஆண்டு வருமானம் பன்மடங்கானால் அதற்கு உருதுணையாக இருந்த காரணத்தினால் அங்கு பணி புரியும் மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகைகள், அன்பளிப்புகள் வங்கப்படுவது, ஒரு குறிப்பிட்ட நிறுவனம் தயாரித்த மருந்துகள் அதிகம் விற்பனை யானால் அதை அதிகமாக எழுதிக் கொடுத்த மருத்துவரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்காக செலவை அந்நிறுவனம் ஏற்றுக் கொள்வது, மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்து வந்தால் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு கமிஷன்கள் வழங்கப்படுவது, இதையெல்லாம் பார்க்கின்ற போது மருத்துவத்துறையைப் போன்று மிகப்பெரும் தொழில் வேறெதுவும் இல்லை என்று சொல்லி விடும் அளவிற்கு மருத்துவத்துறை தடம் மாறி விட்டது.
இன்றைக்கு தொலை தொடர்பு சாதனங்களில் வரும் விளம்பரங்களை நாம் கொஞ்சம் உற்று நோக்கினால் அவை இரண்டு வகையைச் சார்ந்ததாக இருக்கும். ஒன்று ஆசையைத் தூண்டும் விளம்பரங்கள். மற்றொன்று பயத்தை தூண்டும் விளம்பரங்கள்.ஆசையைத் தூண்டி ஒரு பொருளை விற்க முயற்சிப்பார்கள். அல்லது பயத்தைக் காட்டி விற்க முயற்சிப்பார்கள். இந்த இரண்டு வியாபார தந்திரங்களையும் இன்றைய மருத்துவத்துறை செய்து கொண்டிருக்கிறது. நோயைப்பற்றிய பயத்தை உண்டாக்குவார்கள் அல்லது ஆரோக்கியத்தைப் பற்றிய ஆசையை உண்டு பண்ணுவார்கள்.
பயத்தினால் தான் இன்றைக்கு நிறைய பேர் நோயாளிகளாக இருக்கிறார்கள். உதாரணத்திற்கு சர்க்கரை நோயை எடுத்துக் கொள்ளலாம். அந்த நோயின் பெயர் இனிப்பாக இருந்தாலும் அதனால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை கசப்பாகத்தான் இருக்கிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் சர்க்கரை நோயால் இறக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் பத்தில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. இன்றைய நிலையில் இந்தியாவில் 70 சதவீதம் பேர் தெரிந்தோ தெரியாமலோ சர்க்கரை நோய் உள்ளவர்களாக இருக்கிறார்கள். இந்த நிலை நீடித்தால் 10 ஆண்டுகளில் இந்தியா பொருளாதாரம் மற்றும் வருமானத்தின் பெரும்பகுதி சர்க்கரை நோய் சிகிச்சைக்கு செலவிட வேண்டியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
உண்மையில் பார்த்தால் சர்க்கரை என்பது நோயே அல்ல. மனித உடலில் சர்க்கரையின் அளவு ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு விதமாக இருக்கும். உடலின் மாற்றங்களுக்கேற்ப மனிதர்கள் செய்யும் செயல் களுக்கேற்ப அந்த சர்க்கரையில் கூடுதல் குறைவு ஏற்படும். சர்க்கரை கூடும் அந்த நிலையை நோய் என்று சொல்லி இன்றைக்கு மருத்துவ உலகம் மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. ஆக மொத்தத்தில் அவர்கள் நல்ல சம்பாதிக்கிறார்கள். சாமானிய மக்கள் ஏமாறுகிறார்கள்.
மருத்துவம் இந்தளவு வியாபாரமாக மாறியதற்கு மிக முக்கியமான காரணம் மருத்துப் படிப்பில் ஏற்படும் சிரமமும் அதற்காக செலவழிக்கும் பொருளாதாரமும் தான். குறைந்தபட்சம் 50 இலட்சம் இல்லாமல் ஒருவரால் மருத்துவராக ஆக முடியாது. அதுவும் இந்த நீட் வந்த பிறகு அதன் சிரமங்களும் அதற்காக ஆகின்ற செலவுகளும் இன்னும் அதிகம்.
இன்றைக்கு நீட் விவகாரம் சர்ச்சையாகி விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. முதன்முதலாக 2013 ல் இந்த நீட் என்ற மருத்துவ நுழைவுத் தேர்வு தொடங்கப்பட்டது. எண்ணற்ற சாமானிய குடும்பத்து மாணவ மாணவிகளின் மருத்துவ கனவை உடைத்தெறிந்ததில் நீட்டிற்கு மிகப்பெரும் பங்குண்டு.கடந்த பத்து வருட காலத்தில் நீட்டிற்காக பல உயிர்கள் பறிபோய் விட்டது.சமீபத்தில் நீட் எழுதி தோல்வியடைந்த குரோம்பேட்டையைச் சார்ந்த மாணவர் மற்றும் அவனின் தந்தையின் மரணம் தமிழகத்தை உலுக்கி இருக்கிறது.நண்பனை இழந்த ஃபயாஸுத்தீன் என்ற இஸ்லாமிய இளைஞரின் குரலும் அவன் எழுப்பிய கேள்விகளும் அவன் கூறிய கருத்துக்களும் இன்றைக்கு இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
என் நண்பனின் மரணத்திற்கு நீட் தான் காரணம். வசதி இருந்திருந்தால் அவனும் மருத்துவப் படிப்பில் சேர்ந்திருக்க முடியும். வசதி இல்லாததினால் அவன் உயிர் போய் விட்டது. மருத்துவத்தில் சேர விரும்பும் ஒரு மாணவன் ஸாகூல் படிப்பிற்கும் நீட் பயிற்சி வகுப்புகளுக்கும் மருத்துவப் படிப்புக்கும் கோடிக்கணக்கில் செலவழித்து மருத்துவராக வருபவருக்கு மக்கள் பணியில் எப்படி நாட்டம் இருக்கும். போட்ட காசை எடுக்கத்தானே யோசனை போகும். அப்படியென்றால் எதிர்கால சுகாதார சேவை கட்டமைப்பு எப்படி இருக்கும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.கோழியில் இருந்து முட்டை வந்ததா? இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா? என்பது போல் காசு போட்டதால் காசு பார்க்கிறானா? இல்லை காசு பார்ப்பதற்காக காசு போடுகிறானா என்று தெரியாத அளவிற்கு இன்று சூழ்நிலை இருக்கிறது என்று வருத்தத்துடன் தன் கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
அவர் சொன்னது முற்றிலும் உண்மை. மருத்துவ படிப்பிற்கு அவ்வளவு தூரம் செலவு செய்யும் ஒருவருக்கு மருத்துவத்தை சேவையாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்படி வரும்?
மருத்துவப் படிப்பு எப்போது எளிமையாக்கப்படுகிறதோ சாமானிய மக்களுக்கும் இலகுவாக்கப்படுகிறதோ அப்போது தான் மருத்துவம் சேவையாக பார்க்கப்படும்.
அபாரம்
ReplyDeleteஅருமையான பதிவு மௌலானா
ReplyDeleteஅருமையான குறிப்பு ஜஸாக்கல்லாஹ்
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDelete