இந்தியத் திருநாட்டின் 76 வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு நாடு தயாராகிக் கொண்டிருக்கிறது. டெல்லி செங்கோட்டையிலும் சென்னை தலைமைச் செயலகத்திலும் பள்ளி கல்லூரிகளில் மட்டுமே தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்த சூழ்நிலையில், தற்போது அரபி மதரஸாக்கள், இஸ்லாமிய அமைப்புக்கள், பள்ளிவாசல்கள் என அனைத்து இஸ்லாமிய சமூக மக்களும் கொடியேற்றி சுதந்திர தின விழாவை விமர்சையாக கொண்டாடும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இன்னும் மூன்றே தினங்களில் சுதந்திர தினத்தை சந்திக்கயிருக்கிற இந்த நேரத்தில் இந்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்கு என்ன ? அவர்கள் அந்த போராட்டத்தில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டதற்கான காரணம் என்ன ? இஸ்லாத்திற்கும் சுதந்திரத்திற்கும் உள்ள தொடர்பு என்ன ? என்பதை விரிவாக பார்க்க வேண்டும்.
இஸ்லாம் அடிப்படையிலேயே அடிமைத்துவத்திற்கு எதிரான மார்க்கம். சுதந்திர வேட்கையைக் கொண்ட மார்க்கம். இஸ்லாத்தின் அடிப்படை தத்துவமான “லா இலாஹ இல்லல்லாஹு” என்ற வார்த்தையில் சுதந்திரத்திற்கான அறைகூவல் இருக்கிறது. 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை’ என்ற அதன் பொருளில் நீ அல்லாஹ்வுக்கு மட்டுமே அடிமை. வேறு யாருக்கும் அடிமை இல்லை. அதாவது நீ அல்லாஹ்வையன்றி யாருக்கும் அடிமைப்படவும் கூடாது. நீ யாரையும் அடிமைப்படுத்தவும் கூடாது என்ற கருத்தும் உள்ளடக்கி இருக்கிறது.
இந்தக் கலிமாவின் பொருளை ஏற்றுக் கொண்டு அதை நாவால் மொழிந்தவன் மட்டுமே இஸ்லாமியனாக இருக்க முடியும்.நாம் அனைவரும் அந்தக் கலிமாவைச் சொல்லியிருக்கிறோம். சொல்லிக் கொண்டிருக்கிறோம். அதன் பொருளை உணர்ந்திருக்கிறோம். ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் முஸ்லிம்களாகிய நாம் சுதந்திர உணர்வை நம் வார்த்தைகளில் மட்டுமல்ல, நம் அடி மனதில் சுமந்திருப் பவர்கள் என்பதை நமக்கு தரப்பட்டிருக்கிற அடிப்படைக் கலிமாவே உணர்த்துகிறது.
யாரையும் அடிமைப்படுத்துவதை இஸ்லாம் விரும்ப வில்லை.
عن ابن عمرو بن العاص -رضي الله عنهما- الذي تسابق مع رجلٍ من أهل مصر فسبقه الرجل، فضربه ابن عمرو بن العاص، فأتى الرجل إلى أمير المؤمنين عمر بن الخطَّاب، وشكى له ما كان من ابن عمرو بن العاص، فاستدعى عمر عمرو بن العاص وابنه، وحضرا إليه، فأمر عمر بن الخطَّاب الرجل المصري بأن يضرب ابن عمرو بن العاص كما ضربه، وقال عمر مقولته الشَّهيرة التي غدت مثلاً يتردَّد في مواقف عدَّة: (مذ كم تعبدتم الناس وقد ولدتهم أمهاتهم أحرارا
எகிப்தில் கவர்னராக இருந்த அம்ரிப்னுல் ஆஸ் ரலி அவர்களது மகன் குதிரைப் பந்தயத்தில் ஒரு மனிதரோடு கலந்து கொண்டார். ஒரு கட்டத்தில் தன்னை முந்திப் போன அந்த மனிதரை அம்ரிப்னுல் ஆஸ் ரலி அவர்களது மகன் சாட்டையால் அடித்து விட்டார். கலீபா உமர் ரலி அவர்களை சந்தித்து நடந்த விஷயத்தைக் கூறினார் அவர், உமர் ரலி அவர்கள் அம்ரிப்னுல் ஆஸ் ரலி அவர்களையும் அவர்களின் மகனையும் மதீனாவிற்கு அழைத்து மக்களை அவர்களது தாய்மார்கள் சுதந்திரவான்களாக பெற்றெடுத்திருக்க நீங்கள் எப்போது அவர்களை அடிமைப்படுத்தினீர்கள்' எனக்கேட்டு கவர்னரின் மகனுக்கு உடன் தண்டனை வழங்கினார்கள். தனது கையிலிருந்த சாட்டையை அந்த மனிதரிடம் வழங்கி 'உன்னை அடித்தது போலவே நீயும் அவரை அடி' என்று கூறினார்கள். (ஹயாதுஸ் ஸஹாபா ; 88/2)
நபிமார்களின் மிக முக்கியமான பணி அடிமைகள் வாழ்வில் விளக்கேற்றுவதாகத்தான் இருந்தது.
فَاْتِيَا فِرْعَوْنَ فَقُوْلَاۤ اِنَّا رَسُوْلُ رَبِّ الْعٰلَمِيْنَۙ
ஆகவே, நீங்களிருவரும் ஃபிர்அவ்னிடம் சென்று "நிச்சயமாக நாங்கள் உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்ப்பவனின் தூதர்களாவோம்" என்றும், (அல்குர்ஆன் : 26:16)
اَنْ اَرْسِلْ مَعَنَا بَنِىْۤ اِسْرَآءِيْلَ
"இஸ்ராயீலின் சந்ததிகளை நீ எங்களுடன் அனுப்பிவிடு என்றும் கூறுங்கள்!" (என்றும் கட்டளையிட்டான்.) (அல்குர்ஆன் : 26:17)
மனிதர்கள் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருக்கும் அடிமையல்ல, யாரையும் அடிமைப்படுத்தக்கூடாது என்பதில் இஸ்லாம் உறுதியாக இருக்கிறது.
நபிﷺ அவர்கள் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்யத் துவங்கிய காலத்தில் அந்த மக்களிடையே அடிமை வழக்கமிருந்தது. அந்த நேரத்தில் அரபகத்தில் பலவகை அடிமைகள் இருந்தார்கள். போர்க் கைதிகள், அரபுக் குலங்களுக்கிடையே நடந்த சண்டைகளில் பிடிபட்டவர்கள், சந்தையில் வாங்கப்பட்ட அடிமைகள், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அடிமையானவர்கள் எனப் பலதரப்பட்ட அடிமைகள் இருந்து வந்தார்கள். இந்நிலையில் தான் அடிமைகளை விடுதலை செய்வதை வலியுறுத்தி அம்முறையைப் படிப்படியாக குறைத்தார்கள்.
سهل بن حنيف أن النبي صلى الله عليه وسلم قال: "من أعان مجاهداً في سبيل الله أو غارماً في عسرته أو مكاتباً في رقبته أظله الله في ظله يوم لا ظل إلا ظله"
அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவருக்கு அல்லது கடனாளிக்கு அவரின் கஷ்டத்தில் அல்லது எழுதித் தரப்பட்ட அடிமைக்கு அவர் உரிமையாகுவதில் யார் உதவி செய்கிறாரோ அவனுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத அந்நாளில் அல்லாஹ் அவருக்கு தன் நிழலில் நிழலளிப்பான். )அல்ஜாமிவு ; 5447(
இஸ்லாத்தின் முதல் போரான பத்ரில் கைதிகளாக பிடிபட்டவர்களை பிணைத்தொகை வாங்கி நபி ﷺ அவர்கள் விடுவித்தார்கள்.வேறு சில போர்களில் பிணைத்தொகை எதுவும் வாங்காமலும் விடுவித்திருக் கிறார்கள். மக்கா வெற்றியின் போது அம்மக்களைப் பார்த்து இன்று உங்கள் விஷயத்தில் நான் என்ன செய்வதாகக் கருதுகிறீர்கள் என்று கேட்டார்கள். நாங்கள் நல்லதையே கருதுகிறோம் என்றார்கள். அப்போது நபி ﷺ அவர்கள் இன்றைய நாளில் உங்கள் மீது எந்தப் பழிவாங்குதலும் இல்லை என்று யூசுஃப் அலை அவர்கள் தங்களின் சகோதரர்களைப் பார்த்து கூறியதையே நானும் உங்களிடம் கூறுகிறேன். நீங்கள் அனைவரும் விடுதலை பெற்றவர்கள், சுதந்திரமானவர்கள் என்று கூறினார்கள்.
மட்டுமல்ல, அடிமைகளை மிகவும் கேவலமாக நடத்தப்பட்டுக் கொண்டிருந்த அந்த காலத்தில் அடிமையாக இருந்த ஜைத் பின் ஹாரிஸா ரலி அவர்களை தன் வளர்ப்பு மகன் என்று அறிவித்து அவர்களுக்கு மகனுடைய அந்தஸ்தை பெருமானார் ﷺ அவர்கள் வழங்கினார்கள். அடிமைகளாக இருந்த ஸஃபிய்யா, ஜுவைரிய்யா, மாரிய்யா ரலி ஆகியோரை மனமுடித்து மனைவி என்ற அந்தஸ்தைக் கொடுத்தார்கள்.
எனவே இஸ்லாத்தின் அடிப்படையே அடிமைத்தனத்திற்கு எதிரானது. அடுத்தவர்களின் சுதந்திரத்தைப் பறிக்கவும் கூடாது.உங்கள் சுதந்திரத்தை விட்டுத்தரவும் கூடாது என்பது இஸ்லாத்தின் அறைகூவல். இஸ்லாத்தின் அடிப்படைத் தத்துவம். எனவே தான் அன்றைக்கு நம் நாடு ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு விடக்கூடாது. நம் நாட்டின் சுதந்திரம் பறிபோய் விடக்கூடாது என்பதற்காக இஸ்லாமியர்கள் சுதந்திரப் போராட்டத்தில் தங்களை மிக அதிகமாக இணைத்துக் கொண்டார்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது சிறைக்கு சென்றவர்களிலும் உயிர்களை தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள் அன்றைக்கு அவர்களின் மக்கள் தொகையின் சதவீதத்தை விட மிக அதிகமாகவே இருந்தார்கள் என்று பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் கூறியிருக்கிறார்.அந்தளவு மிகப்பெரிய அளவில் அனைவரும் சுதந்திர வேட்கை கொண்டவர்களாகவே இருந்தார்கள்.
1947 ம் ஆண்டு நம் நாடு சுதந்திரம் பெற்றது. 1900 க்கு பிறகு சுதந்திரத்திற்காக போராடியவர்களைத்தான் வரலாறு குறித்து வைத்திருக்கிறது. அவர்களைத்தான் உலகம் நினைவு கூறுகிறது. ஆனால் 1800 க்கு முன்பே இஸ்லாமியர்கள் களத்திற்கு வந்து விட்டார்கள். வியாபாரிகளாக வந்து நாட்டைப் பிடிக்க ஆங்கிலேயர்கள் முயற்சி செய்து கொண்டிருந்த அந்த நேரத்திலேயே இஸ்லாமியர்கள் இந்த நாட்டிற்காக போராட ஆரம்பித்து விட்டார்கள்.
வியாபாரம் செய்ய வந்தவர்களுக்கு நாடாளும் ஆசை வந்து விட்டது என்பதை முதலில் கணித்து, அதன் விபரீதத்தை உணர்ந்து ஆங்கிலேயர் களுக்கு எதிராக இந்த மண்ணில் முதன் முதலாக நிமிர்ந்து நின்றவர் தான் வங்காளத்தை ஆண்ட சிராஜுத்தவ்லா. 1757-ம் ஆண்டு நடந்த பிளாசிப் யுத்தம் தான் ஆங்கிலேயருக்கு எதிராக இம்மண்ணில் நடந்த முதல் பெரிய யுத்தம். அந்தப்போரில் கைதாகும் இந்திய வீரர்களை அடைப்பதற்காக ஆங்கிலேயர் கட்டிய சிறைக்கூடத்திலேயே ஆங்கிலேயர் களைக் கைது செய்து அடைத்த மாவீரர் தான் சிராஜுத்தவ்லா.
மாவீரர் திப்பு சுல்தான்
1782 ல் மைசூர் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர் மாவீரர் திப்பு சுல்தான். தொடக்க காலத்திலிருந்தே ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி தன்னுடைய கடைசி மூச்சு வரை அவர்களை எதிர்த்து மனஉறுதியுடன் போராடிய மாவீரர் திப்பு சுல்தான்.
இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் தமது டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலில், ”ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும், பெரும் சவாலாகவும் இருந்தவர்கள் ஹைதர் அலியும், திப்பு சுல்தானும். அவர்கள் பிரிட்டீஷாருக்கு கடுமையான தோல்வியின் மூலம் வேதனைமிக்க அனுபவத்தை ஏற்படுத்தினார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்கு அவர்கள் நெருங்கினார்கள்” எனக் குறிப்பிடுகிறார்.
ஸ்ரீரங்கப்பட்டினம் 30 நாட்களுக்கு மேலாக முற்றுகையிடப்பட்ட போதிலும் எதிரிகளால் திப்புவின் கோட்டைக்குள் நுழைய இயல வில்லை. இதனைக் குறித்து ஆங்கிலேய தளபதி மன்றோ கூறுகையில், ‘30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தக் கோட்டையையும், தீவையும் தூரத்திலிருந்துக் கொண்டு தரிசிக்கத்தான் முடிந்தது’என்று குறிப்பிட்டான்.
ஆங்கிலேயனுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போரில் தன்னந்தனியாக களமிறங்கினார் திப்பு. துரோகிகள் ஒரு பக்கம். கூட இருந்தவர்களின் குழிபறித்தல் ஒரு பக்கம் என எதிர்ப்புகள் ஒன்றிணைந்து தம்மை சந்தித்த பொழுதும் உதவிக்கு வருவதாக வாக்களித்திருந்த நெப்போலியனுக்கு வர இயலாத போதிலும் கலங்காமல் தமது 11 ஆயிரம் படை வீரர்களுடன் தானும் ஒரு போர் வீரனாக தீரமுடன் போரிட்டார் திப்பு.
இறுதியில் குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கும் திப்புவிடம். “அரசே! நீங்கள் தப்பித்து விடுங்கள் என்று கூறினான் அவருடைய பணியாள். “முட்டாள் வாயை மூடு” என்று உறுமுகிறார் திப்பு. ஆம்! “ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என்று பிரகடனம் செய்த அந்தப் வேங்கை போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.
மாவீரன் திப்பு சுல்தான் தலைமையில் இந்திய சுதந்திர போர் நடந்திருந்தால் இந்தியா அன்றே விடுதலை அடைந்திருக்கும் என்று மகாத்மா காந்தி கூறினார்.
அஞ்சா நெஞ்சம் கொண்ட மாமன்னர் பகதூர் ஷா
இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்களில் கடைசி மன்னராக இருந்தவர் பகதூர் ஷா. 1857 ல் ஆங்கிலேயர்களுடன் நடந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவரைப் பார்ப்பதற்கு ஹாட்சன் வருகிறான். அங்கே துணியால் மூடப்பட்ட தட்டைக் கொண்டு வந்தான் ஹட்சன். மன்னர் பகதூர்ஷாவைப் பார்த்து உங்களுக்கான காலை உணவு இது. எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறினான். துணியை விலக்கிப் பார்த்தார். அந்த தட்டில் பகதுர்ஷாவின் இரு மகன்களின் தலைகள் இருந்தன. இரு மகன்களின் தலைகளைப் பார்த்த போது கூட அவர்கள் கலங்க வில்லை. கண்ணீர் வடிக்க வில்லை.
சிப்பாய் கலகவாதிகளான புரட்சியாளர்களுக்கு உதவி செய்தார். 47 ஆங்கிலேயர்களைக் கொலை செய்தார் எனப் பல குற்றங்களைப் பகதுர்ஷா மேல் சுமத்தி, அவரை கண்கள் குருடாக்கப் பட்ட நிலையில் பர்மாவிலுள்ள ரங்கூனுக்கு அங்கிலேய அரசு நாடு கடத்தியது. தாய் மண்ணில் இனி சமாதியாகும் பாக்கியம் தனக்கு கிடைக்காது என வருந்தியவராக, இறந்த பின் தன்னை அடக்கம் செய்யும் சமாதியில் தூவ ஒரு பிடி இந்திய மண்ணை கையில் அள்ளியவராக ரங்கூனுக்கு கப்பல் ஏறினார்.
மன்னராக இருந்தவர் என்கிற காரணத்தினால் அவருக்கு மாதம் 600 ரூபாய் மானியம் வழங்க ஆங்கிலேய அரசு முன் வந்தது.“என் மண்ணின் செல்வத்தை எடுத்து எனக்கே கொடுப்பதற்கு நீ யார்.” – என்று அதனை ஏற்க மறுத்து விட்டார்.
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் தேச விடுதலைக்காக ஜப்பானியர் உதவி வேண்டி, பர்மாவைத் தளமாகக் கொண்டு படை திரட்டிக் கொண்டிருந்த காலத்தில் ரங்கூன் யார்க் சாலையில் உள்ள பகதுர்ஷாவின் சமாதியை பல லட்சரூபாய் செலவில் புதுப்பித்தார். பகதுர்ஷா சமாதியில் இருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து தமக்கு மக்கள் அன்புடன் அளித்த தங்க வாளின் பிடியில் அடைத்து, அவ்வாளினை ஓங்கிப் பிடித்தவராக, "நம் வீரர்களின் நெஞ்சில் நம்பிக்கையும், இம்மகானிடம் இருந்தது போல் தேசபக்தியும் அணுவளவாவது இருக்கும் வரையில், இந்துஸ்தான் வாள் மிகக் கூர்மையாக இருப்பதுடன், ஒரு நாள் லண்டனின் வாசற்படியையும் தட்டும்..!" - என்று சபதமேற்றார். இந்திய சுதந்திர வரலாற்றில் கம்பீரமிக்கப் போராளியான நேதாஜிக்கே ஒரு தூண்டுதலை ஏற்படுத்திய பெருமகன் மாமன்னர் பகதுர்ஷா.
சுதந்திரப் போராட்டத்தில் உலமா பெருமக்கள்
நபிகள் நாயகம் ﷺ அவர்களின் வாரிசுகளான உலமா பெருமக்கள் தேசத்திற்காக செய்த தியாகம் எண்ணிலடங்காதது. 1857 ஆம் ஆண்டில் ஒவ்வொரு வாரமும் ஜும்மா மேடைகளில் தேச விடுதலை பற்றி பேசி மக்களிடையே சுதந்திர தாகத்தை, சுதந்திர வேட்கையை அன்றைக்கு உருவாக்கினார்கள். அடிமைத்தனத்தை இஸ்லாம் எதிர்க்கிறது. நாம் இறைவனுக்கு மட்டுமே அடிமைகள். வேறு யாருக்கும் எவனுக்கும் நாம் அடிமைகளல்ல.யாரையும் அடிமைப்படுத்தக்கூடாது. யாரிடத்திலும் அடிமைப்பட்டுக்கிடக்கவும் கூடாது. யாரின் சுதந்திரத்தைப் பறிக்கவும் கூடாது. நம் சுதந்திரத்தை விட்டுக் கொடுக்கவும் கூடாது. தாய் நாட்டை நேசிக்க வேண்டும்.பாதுகாக்க வேண்டும்.தாய் நாட்டை நேசிப்பதும் பாதுகாப்பதும் ஈமானின் ஒரு அம்சம் என்றெல்லாம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை ஜும்ஆவிலும் உலமாக்கள் வீர முழக்கமிட்டார்கள்.
மேலும் ஆங்கிலம் படிப்பது கூடாது, ஆங்கிலேயர்களின் உடை, கலாச்சாரத்தை பின்பற்றுவது கூடாது, அவர்களின் ராணுவத்தில் பணியாற்றக் கூடாது என்று 20 கும் மேற்பட்ட ஃபத்வாக்களை ஆங்கிலேயர்களுக்கு எதிராக அன்றைக்கு இருந்த உலமாக்கள் கொடுத்தார்கள்.
ஷாஹ் அப்துல் அஜீஸ் தெஹ்லவி ரஹ் அவர்கள் இந்த தேசத்தை யுத்த பூமி என்று அறிவித்தார்கள்.
தமிழகத்தின் அப்துல் ஹமீது பாகவீ அவர்கள் கதர் அணியாத மணமகன் திருமணத்தில் உலமாக்கள் யாரும் கலந்து கொள்ளக்கூடாது என்று பகிரங்கமாக முழங்கினார்கள்.
மௌலவி காசிம் நானூத்தவி ரஹ் அவர்கள் ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு விரட்டுவது மார்க்கக் கடமை என்று கூறினார்கள்.
பள்ளிவாசல்கள் மற்றும் ஊர் ஊராக சென்று கிராமங்களிலும் நகரங்களிலும் மக்களை சுதந்திரத்திற்காக போராட அழைத்தார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த வெள்ளையர்கள் டெல்லி நுஷாவர் பிரதான சாலையின் இரு புறங்களிலும் உள்ள மரங்களில் ஆலிம்களை தூக்கிலிட்டுக் கொன்றார்கள். சடலங்கள் இல்லாத எந்த மரமும் இல்லை என்ற அளவுக்கு அனைத்து மரங்களிலும் உலமாக்களின் சடலங்கள் தொங்கிக் கொண்டிருந்தன.
1831 மே 6 ல் நடைபெற்ற பாலகோட் யுத்தத்தில் ஆயிரக்கணக்கான உலமாக்கள் உயிரிழந்தார்கள்.
நான் டெல்லியில் ஒரு கேம்பில் தங்கி இருந்த போது மனித உடல் எரிக்கப்படும் வாடை வந்தது. நான் சற்று கலக்கத்துடன் பின்னால் சென்று பார்த்தேன். அப்போது பல பிணங்கள் எறிந்து கொண்டிருந்தன. 40 ஆலிம்களை நிறுத்தி வைத்து, வெள்ளையர்கள் நாங்கள் இனி உங்களோடு தான் இருப்போம் என்று உறுதி கொடுங்கள். உங்களை விட்டு விடுகிறோம் என்று கேட்ட போது, இந்த தேசம் எங்களுடையது. நீங்கள் முதலில் இந்த நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று கூறினார்கள் ஆலிம்கள். அவர்களை நெருப்புக் குண்டத்தில் தூக்கி போட்டார்கள். அதன் பின் மீண்டும் 40 பேர்களை அவ்வாறு கொன்றார்கள் என்று வரலாற்று ஆசிரியர் தாம்சன் தன் புத்தகத்தில் எழுதியுள்ளார்.
மௌலானா முஹம்மது அலி
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் அலி சகோதரர்கள் என்று அழைக்கப்படும் மௌலானா முஹம்மது அலி மற்றும் சௌகத் அலி ஆகியோருக்கு தனி இடம் உண்டு. மகாத்மா காந்தி இந்த சகோதரர்களைப் பற்றி கூறும் போது என் தோளின் மீது இரண்டு சிங்கங்கள் அமர்ந்திருக்கின்றன என்று குறிப்பிடுவார்.
ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்த மௌலானா முஹம்மது அலி மற்றும் சௌகத் அலி சிறையில் அடைக்கப்பட்டார்கள். அப்போது அவர்களுடைய தாயார் என் பிள்ளைகள் மன்னிப்பு கேட்டு விடுதலையானால் அவர்களது குரல் வளையை நானே நெறித்துக் கொல்வேன் என்று கர்ஜித்தார்.
அவரைப் போலவே அவர்களின் பிள்ளைகள் இரட்டை குழல் துப்பாக்கியாக வீரத்தோடு களமாடினார்கள். ஒருமுறை மௌலானா முஹம்மது அலி அவர்கள் கைது செய்யப்பட்ட நேரத்தில் தனது சகோதரர் கைகளில் விலங்கு மாட்டப்படுவதைப் பார்த்த மௌலானா சௌகத் அலி கண்கலங்கினார். அப்போது சகோதரரை நோக்கி ஒரு உறுமலுடன் ஏன் கண்ணீர் சிந்துகிறாய். இந்த நாட்டிற்காக நம் சுதந்திரத்திற்காக இந்த ஒரு முறை அல்ல, இன்னும் எத்தனை முறையானாலும் சிறைச்செல்ல தயாராக நானும் இருக்கிறேன். நீயும் இரு என்று கர்ஜித்து விட்டு சிறைக்கு சென்றார்.
1930 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரம் பற்றி பேச வட்ட மேஜை மாநாடு லண்டனில் நடை பெற்றது. அந்த மாநாட்டிற்கு காந்தியுடன் மௌலானா முஹம்மது அலி அவர்களும் சென்றார்கள். அந்த நேரத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. வட்ட மேஜை மாநாட்டில் அவருக்கு பேசுவதற்கு ஐந்து நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. ஆனால் ஆங்கில ஏகாதிபத்தியமே தனது மூக்கின் மேல் விரலை வைக்கும்படி தனது உடல் நிலையும் பொருட்படுத்தாமல் இரண்டு மணி நேரம் முழங்கினார். அப்போது என் தேசத்திற்கு நான் திரும்ப விரும்புகிறேன். ஆனால் என் தேசத்திற்கான விடுதலை உத்தரவை நீங்கள் எங்களின் கைகளில் கொடுத்தால் மட்டுமே நான் திரும்புவேன்.
ஏனென்றால் எதிரிகளிடத்தில் சிக்கி இருக்கிற என் நாட்டிற்கு ஒரு அடிமையாக செல்வதற்கு நான் விரும்பவில்லை. அந்நிய மண்ணாக இருந்தாலும் இது சுதந்திர மண்ணாக இருப்பதால் இங்கேயே மரணிக்க விரும்புகிறேன் என்று கூறினார். அவர் சொன்னதைப் போன்று அங்கே அவர்களுக்கு மரணம் ஏற்பட்டது. அவரது விருப்பப்படி ஒரு சுதந்திர மண்ணில் அவர்களது மரணம் நிகழ்ந்தாலும் அவர்களது ஜனாஸாவை ஆங்கில ஏகாதிபத்திய மண்ணில் அடக்கம் செய்ய இஸ்லாமிய நாடுகள் சம்மதிக்க வில்லை. சுமார் 22 நாடுகள் அவர்களது உடலை தங்கள் நாட்டில் அடக்கம் செய்ய வேண்டும் என்று போட்டியிட்டனர். இறுதியில் பைத்துல் முகத்தஸ்க்கு அருகில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.
தன் நாட்டு மண்ணிற்காக இத்தனை பெரிய தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் இஸ்லாமியர்கள் செய்வதற்கு லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவின் தாத்பரியம் ஒரு காரணம் என்றால் நபி ﷺ அவர்கள் ஏற்படுத்திய நாட்டுப்பற்று இன்னொரு காரணம். நபியவர்கள் தன் சொந்த மண்ணான மக்காவை உயிராக நேசித்தார்கள். அதன் மீது அளவு கடந்த பிரியம் வைத்திருந்தார்கள். எனவே தான் அதே வழியில் வந்த இஸ்லாமியர்கள் இந்த மண்ணை அதிகம் நேசித்தார்கள். இந்த மண்ணிற்காக அர்ப்பணிப்புகளை செய்தார்கள். இந்த மண்ணிற்காக உயிரை விட்டார்கள். அநத வகையில் நம் நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தது இஸ்லாமும் இஸ்லாமியர்களும் தான்.
இந்த தேசத்தின் உயர்வுக்கும், விடுதலைக்கும் உடலாலும், உணர்வு களாலும் உயிராலும், மாபெரும் அர்ப்பணிப்பை அளித்த ஓர் ஒப்பற்ற சமூகமான முஸ்லிம் சமூகத்தை இந்த நாடு சுதந்திரமாக வாழ விடுகிறதா என்றால் இல்லை. நாடு சுதந்திரம் பெற்று விட்டது.ஆனால் நாட்டு மக்கள் சுதந்திரமாக இல்லை. நாட்டு மக்களுக்கும் என்றைக்கு சுதந்திரம் கிடைக்கிறதோ அன்றைக்குத்தான் இது உண்மையான சுதந்திர இந்தியா. அத்தகைய நிலை ஏற்படுவதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்!
மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத்
ReplyDeleteமாஷா அல்லாஹ்..
ReplyDeleteماشاءاللهஉணர்வுப்பூர்வமான பல தகவல்கள் جزاك الله
ReplyDeleteما شاء الله، அருமை ஹழ்ரத்
ReplyDeleteبارك الله........
ReplyDelete