Thursday, January 15, 2026

அண்ணலாரின் அற்புதங்கள்

நபிமார்களை மக்கள் நம்ப வேண்டும். அவர்களின் நபித்துவத்தை சமூகம் ஏற்க வேண்டும் என்பதற்காக அந்த நபித்துவத்தின் சான்றாக சில அற்புதங்களை அல்லாஹுத்தஆலா அந்த நபிமார்களின் மூலமாக வெளிப்படுத்துகிறான். அதற்கு முஃஜிஸா என்று சொல்லப்படும்.

முஃஜிஸா என்ற வார்த்தைக்கு இமாம்கள் கூறு வரைவிலக்கணம்

أنها أمر خارق للعادة، مَقرون بالتحدي، سالم عن المعارضة، يظهر على يد مدعي النبوة موافقًا لدعواه

நபித்துவத்தை உண்மைப்படுத்துவதற்காக இறைவனின் அனுமதியோடு  மக்களால் செய்ய முடியாத மக்களிடத்தில் சவால் விடும்படியான, வழமையில் இல்லாத ஒரு அற்புதத்தை ஒரு இறைத்தூதர் வெளிப்படுத்தினால் அதற்கு முஃஜிஸா என்று சொல்லப்படும்.

 

இந்த வரைவிலக்கணத்தின் படி முஃஜிஸா என்பதில் நான்கு விஷயங்கள் இடம்பெற வேண்டும்.

1.       வழமையில் இல்லாத விஷயமாக இருக்க வேண்டும்.

2.        சவால் விடும் படியான காரியமாக இருக்க வேண்டும்.

3.       அதேபோன்று ஒரு காரியத்தை வேறு எவராலும் செய்ய முடியாத அளவிற்கு அற்புதமாக இருக்க வேண்டும்.

4.       அது இறைத்தூதரிடமிருந்து வெளிப்பட வேண்டும்.

 

நபிமார்களிடமிருந்து வெளிப்படக்கூடிய இந்த அற்புதங்களில் இரண்டு வகை உண்டு. புறக் கண்ணால் பார்த்து தெரிந்து கொள்ளும் படியான ஒரு அற்புதங்கள்.(சந்திரன் பிழந்தது,விரலிலிருந்து நீர் வெளிப்பட்டது)புறக் கண்ணால் பார்க்க முடியாத அறிவைக் கொண்டு மட்டுமே விளங்கிக் கொள்கிற அற்புதங்கள். (மறைவான விஷயங்களை அறிவிப்பது)

எல்லா நபிமார்கள் வாழ்விலும் இந்த அற்புதங்கள் நிகழ்ந்திருக்கிறது.நபி ஸல் அவர்களிடத்திலும் அல்லாஹ் பல அற்புதங்களை வெளிப்படுத்தினான்.

இரண்டுக்கும் வித்தியாங்கள்

1.       எல்லா நபிமார்களும் குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்கு நபியாக இருந்தார்கள். எனவே அந்த அற்புதங்களும் அந்த காலத்தோடு முடிந்து விட்டது. ஆனால் நபி ஸல் அவர்களின் நபித்துவம் இறுதி நபித்துவம்.உலக அழிவு நாள் வரைக்கும் நிலைத்திருக்கக்கூடியது. எனவே உலக அழிவு நாள் வரை நீடித்து நிலைத்திருக்கும் படியான அற்புதாக அல்லாஹ் அவர்களுக்கு குர்ஆனைக் கொடுத்தான்.

وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا كَآفَّةً لِّلنَّاسِ بَشِيْرًا وَّنَذِيْرًا وَّلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ‏

(நபியே!) நாம் உம்மை (இவ்வுலகில் உள்ள) எல்லா மனிதர்களுக்குமே நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவும்தான் அனுப்பிவைத்திருக்கிறோம். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்து கொள்ளவில்லை.(அல்குர்ஆன் : 34:28)

خْبَرَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

أُعْطِيتُ خَمْسًا لَمْ يُعْطَهُنَّ أَحَدٌ قَبْلِي: نُصِرْتُ بِالرُّعْبِ مَسِيرَةَ شَهْرٍ، وَجُعِلَتْ لِي الأَرْضُ مَسْجِدًا وَطَهُورًا، فَأَيُّمَا رَجُلٍ مِنْ أُمَّتِي أَدْرَكَتْهُ الصَّلاَةُ فَلْيُصَلِّ، وَأُحِلَّتْ لِي المَغَانِمُ وَلَمْ تَحِلَّ لِأَحَدٍ قَبْلِي، وَأُعْطِيتُ الشَّفَاعَةَ، وَكَانَ النَّبِيُّ يُبْعَثُ إِلَى قَوْمِهِ خَاصَّةً وَبُعِثْتُ إِلَى النَّاسِ عَامَّةً

எனக்கு முன்னர் யாருக்கும் கொடுக்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன.

1. எதிரிகளுக்கும் எனக்குமிடையில் ஒரு மாத காலம் பயணம் செய்யும் இடைவெளியிருந்தாலும் அவர்களின் உள்ளத்தில் பயம் ஏற்படுத்தப்படுவதன் மூலம் நான் உதவப்பட்டுள்ளேன்.

2.  பூமி முழுவதும் சுத்தம் செய்யத் தக்கதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது.       என்னுடைய சமுதாயத்தில் தொழுகையின் நேரத்தை அடைந்தவர் (இருக்கும் இடத்தில்) தொழுதுகொள்ளட்டும்!

3. போரில் கிடைக்கிற பொருள்கள் எனக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளன. எனக்கு முன்பு ஹலாலாக்கப்பட்டதில்லை.

4. (மறுமையில்) சிபாரிசு செய்யும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளேன்.

5. ஒவ்வொரு நபியும் தங்களின் சமூகத்திற்கு மட்டுமே நபியாக அனுப்பட்டார்கள். ஆனால், மனித இனம் முழுமைக்கும் நபியாக அனுப்பப்பட்டுள்ளேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். (புகாரி: 335)

 

2.       மற்ற எல்லா நபிமார்களின் அற்புதங்களை விட மேலானது.

نقل عن الإمام الشافعي أنه كان يقول: ما أعطى الله نبيًا إلا وأعطى محمدًا صلى الله عليه وسلم ما هو أكثر منه، فقيل له: أعطى عيسى بن مريم إحياء الموتى، فقال الشافعي: حنين الجذع أبلغ، لأن حياة الخشبة أبلغ من إحياء الموتى؛ ولو قيل: كان لموسى فَلْقُ البحر عارضناه بفلْقِ القمر، وذلك أعجب، لأنه آية سماوية؛ وإن سئلنا عن انفجار الماء من الحجر عارضناه بانفجار الماء من بين أصابعه و صلى الله عليه وسلم، لأن خروج الماء من الحجر معتاد، أما خروجه من اللحم والدم فأعجب؛ ولو سئلنا عن تسخير الرياح لسليمان عارضناه بالمعراج. "انظر مناقب الإمام الشافعي ص 38"

இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் :

மற்ற எல்லா நபிமார்களுக்கு அல்லாஹ் வழங்கிய அற்புதங்களை விட நபி ஸல் அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய அற்புதம் மேலானதாக இருந்தது. ஈஸா நபி அவர்கள் மரணித்த மனிதர்களை உயிர்பித்தார்கள். ஆனால் நபியவர்கள் பயன்படுத்திய மரக்கட்டை அழுதது. இது அதை விட அற்புதமானது. மூசா நபி அவர்கள் கடலை பிளந்தார்கள். ஆனால் நபியவர்கள் சந்திரனையே பிளந்தார்கள். இது அதை விட பேரற்புதமானது. மூஸா நபி அலை அவர்கள் பாறையில் இருந்து தண்ணீரை வெளிப்படுத்தினார்கள். ஆனால் நபியவர்கள் விரல் இடுக்கில் இருந்து தண்ணீரை வெளிப்படுத்தினார்கள். இது அதை விட பேரற்புதமானது.

 

3.       மற்ற நபிமார்களை விட நபி ஸல் அவர்களிடம் வெளிப்பட்ட அற்புதங்கள் தான் அதிகம்.

وقال البيهقي: "بلغت ألفا"، وقال ابن حجر: "وذكر النووي في مقدمة شرح مسلم أن معجزات النبي صلى الله عليه وسلم تزيد على ألف ومائتين"

நபியிடமிருந்து 1000 அற்புதங்கள் வெளிப்பட்டதாக இமாம் பைஹகீ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.1200 அற்புதங்கள் வெளிப்பட்டன என இமாம் நவவி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

 

புறக்கண்ணால் பார்க்கும் படியான அற்புதங்களில் ஒன்று : விரல்களிலிருந்து நீர் வெளிப்படுதல்

 

عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ:

عَطِشَ النَّاسُ يَوْمَ الحُدَيْبِيَةِ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ يَدَيْهِ رَكْوَةٌ فَتَوَضَّأَ مِنْهَا، ثُمَّ أَقْبَلَ النَّاسُ نَحْوَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا لَكُمْ؟» قَالُوا يَا رَسُولَ اللَّهِ: لَيْسَ عِنْدَنَا مَاءٌ نَتَوَضَّأُ بِهِ وَلاَ  نَشْرَبُ، إِلَّا مَا فِي رَكْوَتِكَ، قَالَ: «فَوَضَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ فِي الرَّكْوَةِ، فَجَعَلَ المَاءُ يَفُورُ مِنْ بَيْنِ أَصَابِعِهِ كَأَمْثَالِ العُيُونِ». قَالَ: فَشَرِبْنَا وَتَوَضَّأْنَا فَقُلْتُ لِجَابِرٍ: كَمْ كُنْتُمْ يَوْمَئِذٍ؟ قَالَ: لَوْ كُنَّا مِائَةَ أَلْفٍ لَكَفَانَا، كُنَّا خَمْسَ عَشْرَةَ مِائَةً

 

ஜாபிர் (ரலி) அறிவித்தார்கள் :

ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது மக்களுக்குத் தாகம் ஏற்பட்டது. இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் தோலால் ஆன (நீர்க்) குவளை ஒன்று இருந்தது. அதிலிருந்து நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். அதன் பிறகு மக்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கி வந்தனர். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘உங்களுக்கு என்ன (நேர்ந்தது)?’ என்று கேட்டார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! தங்கள் குவளையிலிருக்கும் தண்ணீரைத் தவிர நாங்கள் உளூச் செய்வதற்கோ குடிப்பதற்கோ எங்களிடம் வேறு தண்ணீரில்லை’ என்று கூறினர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் தங்களின் கரத்தை அந்தக் குவளைக்குள் வைத்தார்கள். அவர்களின் விரல்களுக்கிடையிலிருந்து ஊற்றுக் கண் போன்று தண்ணீர் பொங்கி வரத் தொடங்கியது.

அப்போது நாங்கள் அந்தத் தண்ணீரை அருந்தவும் செய்தோம். மேலும், உளூவும் செய்தோம். (புகாரி: 4152)

 

மறைவானதை அறிவித்தல்

ففي السيرة النبوية لابن هشام أن صفوان بن أمية وعمير بن وهب الجمحي تذاكرا مصاب المشركين في بدر وكثرة قتلاهم فقال صفوان: "والله إن في العيش بعدهم خير، قال له عمير: صدقت والله، أما والله لولا دين على ليس له عندي قضاء، وعيال أخشي عليهم الضيعة بعدي لركبت إلى محمد حتى أقتله، فإن لي قبلهم علة، ابني أسير في أيديهم. فاغتنمها صفوان وقال: على دينك، أنا أقضيه عنك، وعيالك مع عيالي أواسيهم ما بقوا، لا يسعني شيء ويعجز عنهم. فقال له عمير: فاكتم عني شأني وشأنك، قال: أفعل. ثم أمر عمير بسيفه فشحذ له وسم، ثم انطلق حتى قدم به المدينة... فلما رآه رسول الله صلى الله عليه وسلم وعمر آخذ بحمالة سيفه في عنقه، قال: أرسله يا عمر، ادن (اقترب) يا عمير، فدنا وقال: أنعموا صباحا، فقال النبي صلى الله عليه وسلم: قد أكرمنا الله بتحية خير من تحيتك يا عمير، بالسلام تحية أهل الجنة، ثم قال: ما جاء بك يا عمير؟ قال: جئت لهذا الأسير الذي في أيديكم، فأحسنوا فيه، قال: فما بال السيف في عنقك؟ قال: قبحها الله من سيوف، وهل أغنت عنا شيئا؟ قال: اصدقني، ما الذي جئت له؟ قال: ما جئت إلا لذلك، قال: بل قعدت أنت وصفوان بن أمية في الحجر، فذكرتما أصحاب القليب من قريش، ثم قلت: لولا دين علي وعيال عندي لخرجت حتى أقتل محمدا، فتحمل صفوان بدينك وعيالك على أن تقتلني، والله حائل بينك وبين ذلك. قال عمير: أشهد أنك رسول الله، قد كنا يا رسول الله نكذبك بما كنت تأتينا به من خبر السماء، وما ينزل عليك من الوحي، وهذا أمر لم يحضره إلا أنا وصفوان، فوالله إني لأعلم ما أتاك به إلا الله، فالحمد لله الذي هداني للإسلام، وساقني هذا المساق، ثم تشهد شهادة الحق".

உமைர் இப்னு வஹப் மற்றும் ஸஃப்வான் இப்னு உமைய்யா ஆகிய இருவரும் கஅபாவிற்கருகில் அமர்ந்தனர். இது பத்ர் போர் முடிந்து, சில நாட்கள் கழித்து நடந்ததாகும். இந்த உமைர், குறைஷி ஷைத்தான்களில் மிகப் பெரிய ஷைத்தானாவான். நபி (ஸல்) அவர்களையும் நபித்தோழர்களையும் மக்காவில் அதிகம் நோவினை செய்தவர்களில் இவனும் குறிப்பிடத்தக்கவன். இவனது மகன் வஹப் இப்னு உமைரை முஸ்லிம்கள் பத்ர் போரில் சிறைப்பிடித்தனர். பத்ரில் கொலை செய்யப்பட்டவர்களையும், முஸ்லிம்களால் தங்களுக்கு ஏற்பட்ட சோதனைகளையும் ஸஃப்வானுக்கு உமைர் நினைவூட்டினான். அதற்கு ஸஃப்வான் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்களுக்குப் பின் வாழ்ந்து ஒரு பலனும் இல்லை” என்றான்.

அதற்கு, “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீ உண்மையே கூறினாய். அறிந்துகொள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்னால் நிறைவேற்ற முடியாத அளவுக்கு கடன் சுமையும் எனக்குப் பின் சீரழிந்து விடுவார்கள் என்று நான் பயப்படும் குடும்பமும் எனக்கு இல்லையெனில் நேரில் சென்று முஹம்மதை நானே கொல்வேன். எனது மகன் அவர்களிடம் கைதியாக இருப்பதால் நான் அவர்களிடம் செல்வதற்கு அது ஒரு காரணமாகவும் இருக்கிறது” என்றான் உமைர்.

ஸஃப்வான் இதை நல்ல சந்தர்ப்பமாகக் கருதி, “உனது கடனை நான் நிறைவேற்றுகிறேன். உனது குடும்பத்தை எனது குடும்பத்துடன் நான் சேர்த்துக் கொள்கிறேன். அவர்கள் வாழும் காலமெல்லாம் நான் அவர்களுக்கு உதவி செய்வேன். என்னிடம் இருக்கும் எதையும் அவர்களுக்கு நான் கொடுக்காமல் இருக்க மாட்டேன்” என நயமாகப் பேசி, உமைரை இத்தீய செயலுக்குத் தூண்டினான்.

சரி! “நமது பேச்சை மறைத்துவிடு. யாரிடமும் சொல்லாதே” என்று உமைர் கூற, “அப்படியே செய்கிறேன்” என்றான் ஸஃப்வான்.

உமைர் தனது வாளைக் கூர்மைப்படுத்தி அதில் நன்கு விஷம் ஏற்றினான். அந்த வாளுடன் மதீனா புறப்பட்டான். கொலை வெறியுடன் அதிவிரைவில் மதீனா சென்றடைந்தான். நபி (ஸல்) அவர்களின் பள்ளிக்கு அருகில் தனது ஒட்டகத்தைப் படுக்க வைத்தான். அப்போது உமர் (ரழி) பள்ளிக்குள் முஸ்லிம்களுடன் பத்ர் போரில் அல்லாஹ் தங்களுக்கு செய்த உதவியைப் பற்றிய பேச்சில் ஈடுபட்டிருந்தார்கள். சரியாக உமர் (ரழி) அவர்களின் பார்வை உமைர் மீது பட்டது. “இதோ நாய்! அல்லாஹ்வின் எதிரி! தனது வாளைத் தொங்கவிட்டவனாக வந்துள்ளான். இவன் ஒரு கெட்ட நோக்கத்திற்காகத்தான் வருகிறான்” என்று சப்தமிட்டவராக நபி (ஸல்) அவர்களிடம் சென்று “அல்லாஹ்வின் தூதரே! இதோ அல்லாஹ்வின் எதிரி உமைர், தனது வாளை அணிந்தவனாக இங்கு வருகிறான்” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) “என்னிடம் அவரை அழைத்து வாருங்கள்” என்றார்கள். உமர் (ரழி) அன்சாரிகளில் சிலரிடம் “நீங்கள் சென்று நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் அமருங்கள். இந்த கெட்டவனின் தீங்கிலிருந்து நபி (ஸல்) அவர்களைக் காத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் இவனை நம்ப முடியாது” என்று கூறியபின் உமைன் வாளுறையை அவரது பிடரியுடன் இழுத்துப் பிடித்தவராக நபி (ஸல்) அவர்களிடம் அழைத்து வந்தார்கள். இக்காட்சியைப் பார்த்த நபி (ஸல்) “உமரே! அவரை விட்டு விடுங்கள்” என்று கூறி, “உமைரே! இங்கு வாரும்” என்றார்கள். அப்போது உமைர் “உங்களின் காலைப் பொழுது பாக்கிய மாகட்டும்” என்று முகமன் கூறினார். அதற்கு நபி (ஸல்) “உமைரே! உமது இந்த முகமனை விட சிறந்த முகமனாகிய சுவனவாசிகளின் ‘ஸலாம்’ என்ற முகமனைக் கொண்டு அல்லாஹ் எங்களை சங்கைப்படுத்தி இருக்கிறான்” என்றார்கள்.

பின்பு “உமைரே! நீர் எதற்காக இங்கு வந்தீர்” என்று கேட்டார்கள். அதற்கு, “உங்களிடம் இருக்கும் இந்த கைதிக்காக வந்திருக்கிறேன். அவருடன் நல்லமுறையில் நடந்து கொள்ளுங்கள்” என்றார் உமைர்.

அதற்கு நபி (ஸல்) “உமது கழுத்தில் ஏன் வாள் தொங்குகிறது” என்று கேட்டார்கள். அவர் “இந்த வாள் நாசமாகட்டும். இது எங்களுக்கு என்ன பலனை அளித்தது” என்று கூறினார்.

நபி (ஸல்), “என்னிடம் உண்மையை சொல். நீர் வந்ததன் நோக்கம் என்ன?” என்று கேட்டார்கள். அதற்கவர் “நான் அந்த நோக்கத்தில்தான் வந்தேன்” என்றார்.

அதற்கு நபி (ஸல்) “இல்லை. நீயும் ஸஃப்வானும் கஅபாவிற்கு அருகில் அமர்ந்து பத்ரில் கொல்லப்பட்ட குறைஷிகளைப் பற்றி பேசினீர்கள். பின்பு நீ “தன் மீது கடனும் தனது குடும்பத்தார்களின் பொறுப்பும் இல்லையெனில், தான் முஹம்மதை கொலை செய்து வருவேன் என்று கூறினீர்! நீ என்னைக் கொல்ல வேண்டுமென்பதற்காக உனது கடன் மற்றும் உனது குடும்ப பொறுப்பை ஸஃப்வான் ஏற்றுக்கொண்டான். ஆனால், இப்போது உனக்கும் உனது அந்த நோக்கத்திற்குமிடையில் அல்லாஹ் தடையாக இருக்கிறான்” என்று கூறினார்கள்.

இதைக் கேட்ட உமைர் “நீங்கள் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன். வானத்தின் செய்திகளையும், உங்களுக்கு இறங்கும் இறைஅறிவிப்பையும் நீங்கள் எங்களுக்கு கூறியபோது உங்களை நாங்கள் பொய்யர் என்று கூறினோம். ஆனால் உங்களை கொலை செய்ய வேண்டும் என முடிவு செய்த போது என்னையும் ஸஃப்வானையும் தவிர வேறு யாரும் அங்கு இருக்கவில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்தான் இந்த செய்தியை உங்களுக்கு அறிவித்தான் என்று நான் நன்கறிகிறேன். எனக்கு இஸ்லாமின் பக்கம் நேர்வழி காட்டிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்! அவனே இங்கு என்னை அனுப்பினான்” என்று கூறி, இஸ்லாமின் ஏகத்துவத்தை மனமாற மொழிந்தார்கள். அதற்குப் பின், நபி (ஸல்) அவர்கள் “உங்களின் சகோதரருக்கு மார்க்கச் சட்டங்களையும் குர்ஆனையும் கற்றுக் கொடுங்கள். அவரது கைதியை விடுதலைச் செய்யுங்கள்” என்று கூறினார்கள். (ஸீரத்து இப்னு ஹிஷாம்)  

அந்த வகையில் எந்த நபிக்கும் வழங்காத பேரற்புதமாக மிஃராஜ் என்ற அற்புதத்தை அல்லாஹ் நபி ஸல் அவர்களுக்கு வழங்கினான். அந்நிகழ்வை இந்த நேரத்தில் அதிகம் நினைவு கூர்ந்து அதன் மூலம் நம் ஈமானை புதுப்பித்துக் கொள்வோம்.... 

No comments:

Post a Comment