Pages

Pages

Monday, June 29, 2020

அவசரம் கூடாது



நாம் வாழ்க்கையில் எந்தக் காரியத்தை செய்தாலும் அதில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். ஒரு குறிக்கோல் இருக்கும். ஒரு இலக்கு இருக்கும். எதிர்பார்ப்பு இல்லாமல் குறிக்கோல் இல்லாமல் எந்த காரியத்தையும் நாம் செய்வதில்லை. எந்தக் காரியத்திலும் நாம் இறங்குவதில்லை.அப்படி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எந்தக் குறிக்கோலும் இல்லாமல் இறங்குபவர்கள் நிச்சயம் புத்திசாலியாக இருக்க முடியாது.எனவே ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கிய பயணம் தான் நம் வாழ்க்கை.

பெரிய எதிர்பார்ப்பு இல்லா விட்டாலும் குறைந்தபட்சம் நாம் இறங்குகின்ற அந்த காரியம் நமக்கு எதாவது ஒரு வகையில் பலன் தர வேண்டும் என்ற எண்ணமாவது நிச்சயம் இருக்கும்.ஆனால் உண்மையில் ஒரு காரியம் நமக்கு பலன் தருவதற்கும் அந்த காரியத்தில் நாம் நினைத்த இலக்கை அடையவதற்கும் நம்மிடம் இருக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் நிதானம்.

வாழ்க்கையில் எந்தக் காரியத்தை செய்தாலும் நின்று நிதானமாக யோசித்து, செய்யலாமா? வேண்டாமா? அது நன்மையா? தீமையா? நமக்கு அது தேவையா? தேவை இல்லையா? என்று தீர்க்கமாக முடிவு செய்து அதுக்குப் பிறகு செய்ய வேண்டும். நாம் செய்வது உலகத்தின் காரியங்களாக இருந்தாலும் மறுமையின் காரியங்களாக இருந்தாலும் நிதானம் தேவை.

இன்றைக்கு நம் வாழ்கையில் எல்லாவற்றிலும் அவசரம் தான். சாப்பிடுவதிலும் அவசரம், சிறுநீர் கழிப்பதிலும் அவசரம்,வாகனம் ஓட்டுவதிலும் அவசரம், வாழுகிற வாழ்க்கையிலும் அவசரம்.எல்லாவற்றிலும் அவசரம். இன்றைக்குள்ள அவசரக் காலத்தில் என்றைக்காவது நாம் நிதானமாக சாப்பிட்டிருக்கிறோமா? வேகமாக எடுத்து வேகமாக வாயில் போட்டு வேகமாக ஓடுகின்ற கதையாகத் தான் இருக்கிறது. இதனால் சாப்பிடுகின்ற சாப்பாடு ஒழுங்காக செரிமானம் ஆகாமல் அதனால பெரிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. Fast food என்று சொல்கிறார்கள்.ஆனால் அதை சாப்பிட்டால் fast death வந்து விடுகிறது. வாகனத்தில் வேகமாக போகிறான். கடைசியில் அதை விட வேகமாக ஆம்புலன்ஸில் கொண்டு போக வேண்டியதாக இருக்கிறது.அவசரம் என்றைக்குமே ஆபத்து தான். அவசரமாக செய்கின்ற காரியங்கள், அவசரமாக முடிவெடுக்கிற விஷயங்கள் நிச்சயம் ஆபத்தில் போய் தான் முடியும்.

இன்றைக்கு நடக்கிற அதிகமான பிரச்சனைகளும் குடும்பத் தகராறுகளும் குறிப்பாக கணவன் மனைவிக்கு மத்தியில் ஏற்படுகின்ற மனக்கசப்புக்களும் அதனால் நிகழ்கின்ற தலாக்குகள் இவை அனைத்திற்கும் அடிப்படைக் காரணம் இந்த அவசரம் தான்.அவசரம் வாழ்க்கையில் எண்ணற்ற சிக்கலையும் பிரச்சனைகளையும் இழப்புக்களையும் ஏற்படுத்தி விடும்.

இஸ்லாமிய வரலாற்றில் நடந்த இரண்டாவது போர்க்களமான உஹது போர்க்களம் தோல்வியில் முடிந்ததற்கு முக்கிய காரணமே இந்த அவசரம் தான்.உஹதுப் போர்க்களம் அன்றைக்கு மட்டுமல்ல இன்று வரை இஸ்லாமியர்களின் உள்ளத்தில் மிகப்பெரிய பாதிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்திய போர்க்களம். உஹது யுத்தத்தில் தான் அண்ணலம் பெருமான் அவர்கள் காயமடைந்தார்கள். அவர்களது பற்கள் ஷஹீதாக்கப்பட்டது. பத்ரு யுத்தத்தில் காபிர்களுக்கு ஏற்பட்ட அளவுக்கு நிகரான உயிர்சேதம் உஹது யுத்தத்தில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது. 70 முஸ்லிம்கள் வரை ஷஹீதானார்கள்.நபி அவர்களுக்கு எல்லா வகையிலும் உருதுணையாக இருந்த ஹம்ஸா, முஸ்அப் (ரலி) போன்ற முக்கிய சஹாபாக்கள் ஷஹீதானார்கள்.பத்ரு போர்க்களத்தில் வெற்றி பெற்று உற்சாகத்திலும் உத்வேகத்திலும் இருந்த ஸஹாபாக்களின் உள்ளத்தில் இந்த உஹதின் தோல்வி மிகப்பெரும் காயத்தை ஏற்படுத்தியதோடு, அவர்கள் கொஞ்சம் தடுமாறுவதற்கும் காரணமாக அமைந்தது.அல்லாஹ்விற்காக போரிடுகிற நாம் எப்படி தோற்றுப் போனோம்? முஹம்மது நபி அவர்கள் நம்மோடு இருக்கும் போது எப்படி நமக்கு தோல்வி ஏற்பட்டது ? என்பது போன்ற கேள்விகள் அவர்களுடையை மனதை உலுக்கி எடுத்தது.இப்படி எண்ணற்ற மோசமான விளைவுகளை ஏற்படுத்திய உஹதின் தோல்விக்குக் காரணம் அவசரம்.

நான் சொல்லும் வரை இந்த இடத்தை விட்டு நகரக்கூடாது என்று சொல்லி நபி அவர்கள் மலைக்கு மேல் அம்பு எறியும் வீரர்கள் சிலரை நிறுத்தி வைத்திருந்தார்கள்.ஆனால் அவர்கள் வெற்றி அடைந்து விட்டோம் என்று எண்ணி அந்த இடத்திலிருந்து கீழே இறங்கியது தான், புறமுதுகிட்டு ஓடிய நிராகரிப்பாளர்கள் திரும்பி வந்து மறுதாக்குதல் தொடுக்கக் காரணமாக அமைந்தது, அதுவே தோல்விக்கும் காரணமாக இருந்தது.

அவசரமாக செயல்படுவதும் யோசிக்காமல் அவசரமாக முடிவெடுப்பதும் கசப்பான சூழ்நிலைகளை ஏற்படுத்தி விடும் என்பதற்கு உஹதுப் போர்க்களம் ஒரு சான்று.

وعن أُسامةَ بنِ زَيْدٍ رضي اللَّه عنهما قَالَ: بعثَنَا رسولُ اللَّه إِلَى الحُرَقَةِ مِنْ جُهَيْنَةَ، فَصَبَّحْنا الْقَوْمَ عَلى مِياهِهمْ، وَلَحِقْتُ أَنَا وَرَجُلٌ مِنَ الأَنْصَارِ رَجُلًا مِنهُمْ، فَلَمَّا غَشيناهُ قَالَ: لا إِلهَ إلَّا اللَّه، فَكَفَّ عَنْهُ الأَنْصارِيُّ، وَطَعَنْتُهُ بِرُمْحِي حَتَّى قَتَلْتُهُ، فَلَمَّا قَدِمْنَا المَدينَةَ بلَغَ ذلِكَ النَّبِيَّ فَقَالَ لِي: يَا أُسامةُ! أَقَتَلْتَهُ بَعْدَمَا قَالَ: لا إِلهَ إِلَّا اللَّهُ؟! قلتُ: يَا رسولَ اللَّه إِنَّمَا كَانَ مُتَعَوِّذًا، فَقَالَ: أَقَتَلْتَهُ بَعْدَمَا قَالَ: لا إِلهَ إِلَّا اللَّهُ؟! فَما زَالَ يُكَرِّرُهَا عَلَيَّ حَتَّى تَمَنَّيْتُ أَنِّي لَمْ أَكُنْ أَسْلَمْتُ قَبْلَ ذلِكَ الْيَوْمِ. متفقٌ عَلَيهِ
ஹள்ரத் உஸாமா ரலி அவர்கள் ஒரு போர்க்களத்தில் ஒரு எதிரியை நெருங்கி அவனைத் தாக்க முற்பட்ட போது அவர் கலிமா சொல்லி விட்டார். இருந்தாலும் உஸாமா ரலி அவர்கள் அவரை ஈட்டியால் குத்தினார்கள். அவர் மரணித்து விட்டார்கள்.நபிக்கு இந்த செய்தி கிடைத்த போது கலிமா சொன்ன பிறகு அவரை கொன்று விட்டாயா என்று கேட்டார்கள்.அதற்கு உஸாமா ரலி அவர்கள் தன்னைப் பாதுகாக்கத்தான் அவர் கலிமா சொன்னார் அதனால் தான் அவரைக் கொன்றேன் என்று கூறினார்கள். இருந்தாலும் நபி ஸல் அவர்கள் அதே கேள்வியை திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டே இருந்தார்கள். ஹள்ரத் உஸாமா ரலி அவர்கள் கூறுகிறார்கள் ; நபி ஸல் அவர்கள் திரும்பத் திரும்ப கேட்டது எனக்கு மிகவும் சிரமத்தைக் கொடுத்தது. எந்தளவு என்றால் அந்த நாளுக்கு முன்னால் நான் இஸ்லாத்திற்கே வராமல் இருந்திருக்க வேண்டுமே என்று நான் எண்ணும் அளவு அது சிரமத்தைக் கொடுத்தது. (சுருக்கமான தர்ஜுமா) (புகாரி : 6872) 

அந்த நேரத்தில் உஸாமா ரலி அவர்கள் அவசரப்படாமல் கொஞ்சம் நிதானமாக யோசித்து செயல்பட்டிருந்தால் ஒரு உயிர் அநியாயமாக கொல்லப்பட்டிருக்காது, இத்தனை பெரிய மனச்சங்கடங்களும் ஏற்பட்டிருக்காது.

அதனால் தான் இஸ்லாம் அவசரம் கூடாது என்று சொல்கிறது.வாழ்க்கையானாலும் வணக்கமானாலும் அவசரம் இல்லாமல் நிதானமாக செய்ய வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துவதோடு அவ்வாறு அவசரமாக செயல்படுபவர்களை வன்மையாக கண்டிக்கிறது.
وَيلٌ لِلأعْقابِ مِنَ النَّارِ
ஒழு செய்யும் போது கால்களை சரியாக கழுவாதவர்களுக்கு வேதனையுண்டு. (புகாரி : 60)
فصل فانك لم تصل
அவசரமாக தொழுத ஒருவரைப் பார்த்து நபி ஸல் அவர்கள் நீ தொழ வில்லை. எனவே திரும்பத் தொழு என்று கூறினார்கள். (திர்மிதி : 302)

أَمَا يَخْشَى الَّذِي يَرْفَعْ رَأَسَهُ قَبلَ الإِمَامِ أنْ يَجْعَلَ اللهُ صُورَتَهُ صورَةَ حَمارٍ؟
தொழுகையில் இமாமுக்கு முன்பு தன் தலையை உயர்த்துபவன், தன் தலையை அல்லாஹ் கழுதையின் தலையாக மாற்றுவதை பயந்து கொள்ள வேண்டாமா ? (புகாரி : 691)

ஆக ஒழுவானாலும் தொழுகையானாலும் எந்தக் காரியமானாலும் நிதானமாக செய்ய வேண்டும்.அதில் தான் நன்மையும் இருக்கிறது, பலனும் இருக்கிறது. அதைத்தான் இஸ்லாம் எதிர்பார்க்கிறது மட்டுமல்ல அவ்வாறு நிதானமாக செய்யப்படுகின்ற காரியங்களைத் தான் இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறது.அதில் அவசரம் காட்டுவதினாலோ அரைகுறையாக செய்வதினாலோ அதன் பலன்களை இழப்பதோடு அல்லாஹ்வின் கோபத்திற்கும் ஆளாக வேண்டிய சூழல் ஏற்படும்.

التا ني من الله والعجلة من الشيطان
நிதானம் அல்லாஹ்விடமிருந்தும் உள்ளது. அவசரம் ஷைத்தானிடமிருந்தும் உள்ளது (ஸஹீஹுல் ஜாமிவு : 3011)

إن فيك خَلَّتين يحبُّهما الله الحلم والأَناة
அஷஜ்ஜி அப்துல் கைஸ் என்ற நபித்தோழரைப் பார்த்து நபி ஸல் அவர்கள் உன்னிடம் இரு குணங்கள் உள்ளது. அவ்விரண்டையும் இறைவன் பிரியப்படுகிறான். 1, சகிப்புத்தன்மை. 2, நிதானம் என்றார்கள். (இப்னு ஹிப்பான் : 7204)

இங்கே நாம் ஒரு விஷயத்தை விளங்க வேண்டும்.அவசரம் கூடாது அவசரம் ஆபத்துக்களை விளைவிக்கும் என்று சொன்ன இஸ்லாம் ஒரு சில விஷயங்களை அவசரமாக செய்ய வேண்டும் துரிதமாக செய்ய வேண்டும் என்று வழிகாட்டுகிறது,வலியுறுத்துகிறது.
اكرام الضيوف
نكاح البكر
امور الجنازة
اقامة الصلاة
تعجيل الحج
التوبة
اداء الدين

அவசரம் கூடாது என்று சொன்ன அதே இஸ்லாம் தான் விருந்தாளிகளை உபசரிப்பது, திருமணம் செய்து வைப்பது,மய்யித்தை நல்லடக்கம் செய்வது, நேரம் வந்து விட்டால் தொழுகையை நிறைவேற்றுவது, ஹஜ் செய்வது, தவ்பா செய்வது, கடனை நிறைவேற்றுவது இந்த மாதிரியான காரியங்களை விரைவாகச் செய்ய வேண்டும் என்று சொல்கிறது, அப்படியென்றால் அவசரம் என்றால் என்ன? விரைவாக செய்தல் என்றால் என்ன ? என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அவசரம் என்றால் ஒரு செயலை செய்வதற்குரிய நேரம் காலம் வருவதற்கு முன்பு அதை செய்ய முற்படுவது,அதை செய்ய ஆசைப்படுவது.இன்றைக்கு சின்ன பசங்க சீக்கிரம் கல்யாணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். கல்யாண வயசு வருவதற்கு முன்பே கல்யாணம் செய்ய ஆசை இன்றைக்கு நிறைய பசங்களுக்கு இருக்கிறது. ஆனால் உண்மையில் கல்யாணத்திற்குப் பிறகு தான் பிரச்சனையே இருக்கிறது என்று அவர்களுக்கு தெரிவதில்லை. கல்யாணம் முடிக்காத வரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை, எந்தக் கவலையும் இல்லை,ஆனால் கல்யாணத்துக்குப் பிறகு பிள்ளைகளை கவனிக்க வேண்டும், மனைவியைக் கவனிக்க வேண்டும். பெற்றவர்களை கவனிக்க வேண்டும், மனைவி பக்கம் நின்றால் பெற்றவர்கள் கோவித்துக் கொள்வார்கள். பெற்றவர்கள் பக்கம் நின்றால் மனைவி கோவித்துக் கொள்வாள். இரண்டு பேரையும் சமாளித்து குடும்பம் நடத்த வேண்டும். நம்ம குடும்பத்தையும் அனுசரித்துப் போக வேண்டும். அவங்க குடும்பத்தையும் அனுசரித்துப் போக வேண்டும். இப்படி எண்ணற்ற பிரச்சனைகள் கல்யாணத்திற்குப் பிறகு இருக்கிறது. ஆனால் அது தெரியாமல் இன்றைக்குள்ள பசங்க அந்த வாழ்க்கையில் நுழைய ஆசைப் படுகிறார்கள், இதற்குப் பெயர் தான் அவசரம். ஒரு செயலுக்கான நேரம் வருவதற்கு முன்பு அதை செய்ய ஆசைப்படுவது.

ஆனால் விரைவாக செய்வது என்பதற்கு பொருள், ஒரு செயலை செய்வதற்குரிய நேரம் வந்த பிறகு அதை பிற்படுத்தாமல் அதை தள்ளிப் போடாமல் தாமதிக்காமல் அந்த நேரத்தில் அதை உடனே செய்வது. சில காரியங்களை விரைவாக செய்ய வேண்டும் என்று இஸ்லாம் சொன்னது இந்த அர்தத்த்தில் தான். எனவே விரைவாக செய்ய வேண்டிய காரியங்களை விரைவாக செய்ய வேண்டும், நிதானமாக செய்ய வேண்டிய காரியங்களை நிதானமாக செய்ய வேண்டும். 

இஸ்லாம் தாமதிக்காமல் விரைவாக செய்ய வேண்டும் என்று அடையாளப்படுத்திய விஷயங்களை அடுத்தடுத்து பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்.....  


இஸ்லாத்தின் பார்வையில் விரைவாக செய்ய வேண்டிய 6 விஷயங்களை இதோ உங்கள் பார்வைக்குத் தருகிறேன்.

1, தொழுகை
2, கடன்
3, விருந்தோம்பல்
4, திருமணம்
5, ஹஜ்
6, தவ்பா

3 comments: