Sunday, September 12, 2021

ஹதீஸ் எண் ; 1 انما الاعمال بالنيات

 

عن عُمَرَ بْن الْخَطَّابِ - رَضِيَ اللَّهُ عَنْهُ- قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَقُولُ: «إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ فَهِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ، وَمَنْ كَانَتْ هِجْرَتُهُ لدُنْيَا يُصِيبُهَا أَوْ امْرَأَةٍ يَنْكِحُهَا فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி  அவர்கள் இவ்வாறு அருளியதை நான் செவியுற்றிருக்கிறேன்:

செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே உள்ளன. மனிதன் எதை எண்ணினானோ அதுவே அவனுக்குக் கிடைக்கும். எனவே ஒருவன் அல்லாஹ்வுக்காக அவனுடைய தூதருக்காக ஹிஜ்ரத் மேற்கொண்டால் அது அல்லாஹ்-ரஸூலுக்காக மேற்கொள்ளப்பட்டதாக அமையும். ஒருவன் உலக நன்மையை அடைவதற்காகவோ ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதற்காகவோ ஹிஜ்ரத் மேற்கொண்டால் அவனது ஹிஜ்ரத் அது எந்நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டதோ அதற்காகவே அமையும்.‘ (புகாரி ; 1)

அல்லாமா இப்னு ஹஜர் ரஹ் அவர்கள் புகாரி ஷரீஃபின் விரிவுரையான ஃபத்ஹுல் பாரியிலே கூறுகிறார்கள் ;  ஒரு மனிதர், நான் உன்னை திருமணம் செய்ய வேண்டும் என்று தன் ஆசையை உம்மு கைஸ் என்ற பெண்ணிடம் வெளிப்படுத்திய பொழுது அந்தப் பெண் ஹிஜ்ரத் வந்தால் உங்களை திருமணம் முடித்துக் கொள்கிறேன் என்று கூறினாள். அந்த மனிதரும் அந்த பெண்ணை திருமணம் முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஹிஜ்ரத் மேற்கொண்டு அதற்குப் பிறகு அந்தப் பெண்ணையே திருமணம் முடித்துக்கொண்டார். நபி அவர்களின் இந்த ஹதீஸ் இந்நிகழ்வைத் தான் சுட்டிக் காட்டுகிறது.

இஸ்லாத்தைப் பொருத்த வரை எல்லாவற்றுக்கும் அடிப்படையும் அஸ்திவாரமும் நிய்யத் தான். ஒருவர் செய்யக்கூடிய அமலுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து அங்கீகாரத்தை பெற்றுத்தருவது நிய்யத் தான். நிய்யத்தின்றி அமல்கள் ஏற்கப்படுவதில்லை. நிய்யத் இல்லாமல் ஒருவர் தொழுதாலோ நோன்பு வைத்தாலோ குளித்தாலோ அவைகள் பயனற்றுப் போய் விடும். எனவே ஒரு அமலுக்கு அல்லாஹ்விடத்தில் அங்கீகாரத்தை பெற்றுத்தருவது நிய்யத் தான்.

அதேபோன்று ஒரு வழமைக்கும் வணக்கத்திற்கும் வித்தியாசத்தைத் தருவது நிய்யத் தான். குளித்தல் என்பது பல வகையாக இருக்கிறது. கடமையான குளிப்பு, சுன்னத்தான குளிப்பு, ஆகுமான குளிப்பு, உஷ்ணத்திற்கான குளிப்பு, இப்படி பல வகை உண்டு. இதில் ஒருவர் எதற்காக குளிக்கிறார் என்பதை அவருடைய உள்ளத்தில் இருக்கிற எண்ணத்தைக் கொண்டு தான் வித்தியாசப் படுத்தப்படும்.

வணக்கங்களில் கூட ஒன்றிலிருந்து இன்னொன்றை வித்தியாசப்படுத்துவது நிய்யத்தின் மூலம் தான். ஒருவர் பள்ளிக்குள் நுழைந்து இரண்டு ரக்கஆத் தொழுகிறார் என்றால், அது தஹிய்யத்துல் மஸ்ஜித் என்று சொல்லப்படுகிற பள்ளியின் காணிக்கைத் தொழுகையாக வந்திருக்கலாம். ஃபஜ்ருடைய கடமையான தொழுகையாகவும் இருக்கலாம். பஜ்ருடைய சுன்னத்தான தொழுகையாகவும் இருக்கலாம். அல்லது ஒரு தேவைக்காக தொழக்கூடிய தொழுகையாகவும் இருக்கலாம். அவர் தொழுத அந்த இரண்டு ரக்அத்துகள் எந்த தொழுகை என்பதை முடிவு செய்வது அவருடைய உள்ளத்தில் இருந்து வெளிப்படுகிற நிய்யத்தைக் கொண்டு தான்.

அதேபோன்று ஒருவர் செய்யக்கூடிய அமலுக்குக் கூலி கிடைப்பதும் கிடைக்காமல் போவதும் நிய்யத்தைக் கொண்டு தான். ஒரே வணக்கத்தை இரண்டு நபர்கள் செய்கிறார்கள். அதில் ஒருவர் மனத்தூய்மையுடன் செய்கிறார். இன்னொருவர் பெருமைக்காக செய்கிறார் என்றால் மனத்தூய்மையுடன் செய்பவருக்குத் தான் கூலி கிடைக்கும்.

சில நேரங்களில் ஒரு அமலை செய்ய வேண்டுமென்று நிய்யத் செய்து அது செய்ய முடியாமல் போய் விட்டாலும் நிய்யத்திற்காக கூலி வழங்கப்படும்.

عن أبى الدرداء رضى الله عنه يبلغ به النبي صلي الله عليه وسلم قال:  من أتى فراشه وهو ينوي أن يقوم فيصلي من الليل فغلبته عينه حتى يصبح كتب له ما نوى، وكان نومه صدقة عليه من ربه. رواه النسائي وابن ماجه

ஒருவர் அதிகாலை எழுந்து தஹஜ்ஜத் தொழுகை வேண்டும் என்ற எண்ணத்துடன் படுக்கைக்கு செல்கிறார். ஆனால் அவருக்கு தூக்கம் மிகைத்து தஹஜ்ஜத் தொழ முடியாமல் போய் விட்டால் தஹஜ்ஜத் தொழ வேண்டும் என்று அவர் எண்ணிய அந்த எண்ணத்திற்காக தஹஜ்ஜத் தொழுததாக அவருக்கு கூலி எழுதப்படும். அவர் உறங்கிய அந்த உறக்கம் அவருக்கு சதகாவாக ஆகி விடும். (இப்னு மாஜா ; 1344)

மேற்கூறிய விஷயங்கள் இஸ்லாத்தில் நிய்யத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது என்பதை நமக்கு தெளிவுபடுத்துகிறது. அந்த வகையில் இந்த ஹதீஸ் மிக மிக முக்கியமானது. இஸ்லாத்தை நான்கு பகுதியாக பிரித்தால் அதில் ஒன்று இந்த ஹதீஸ் என்று கூறுவார்கள். இன்னும் சிலர் இஸ்லாத்தின் அடிப்படை இரண்டு ஹதீஸில் அடங்கியிருக்கிறது. அதில் ஒன்று இந்த ஹதீஸ் என்று கூறுவார்கள். அதனால் புகாரி இமாம் உட்பட பல இமாம்கள் இந்த ஹதீஸை தங்கள் கிதாபுகளில் முதல் ஹதீஸாக பதிவு செய்திருக்கிறார்கள்.

 

 

 

 


 

 

3 comments: