Sunday, September 12, 2021

ஹதீஸ் எண் 4 ان بالمدينة لرجالا

 

عن أبي عبد الله جابر بن عبد الله الأنصاري رضي الله عنهما قال: كنا مع النبي صلى الله عليه وسلم في غزاة فقال: «إِنَّ بِالْمَدِينَةِ لَرِجَالًا مَا سِرْتُمْ مَسِيرًا، وَلَا قَطَعْتُمْ وَادِيًا، إِلَّا كَانُوا مَعَكُمْ، حَبَسَهُمُ الْمَرَضُ».

 

وفي رواية: «إِلَّا شَرِكُوكُمْ فِي الْأَجْرِ»

 

நாங்கள் நபி அவர்களுடன் ஒரு போரில் இருந்தோம்.

அப்போது (போருக்கு வராமல்) மதீனாவில் சில மனிதர்கள் இருக்கிறார்கள்.நீங்கள் நடக்கும் பாதையிலும் நீங்கள் கடந்து செல்லும் ஓடையிலும் அவர்கள் உங்களோடு தான் இருக்கிறார்கள்.அவர்களை (போருக்கு வர விடாமல்) நோய் தான் தடுத்து விட்டது என்று நபி அவர்கள் கூறினார்கள். மற்றொரு அறிவிப்பில் ; நன்மையில் அவர்கள்  உங்களுடன் கூட்டாகவே இருக்கிறார்கள். (முஸ்லிம் ; 1911)

இந்த ஹதீஸை நபியவர்கள் தபூக் போர்க்களத்தின் போது தான் சொன்னார்கள். ஏனென்றால் புகாரியின் இன்னொரு அறிவிப்பில் இவ்வாறு வருகிறது ; நபி  அவர்களுடன் தபூக் போரை முடித்து விட்டு திரும்பினோம். அப்போது நபி அவர்கள், சிலரை நாம் மதீனாவில் விட்டு வந்தோம். ஒரு கணவாய் அல்லது ஒரு ஓடையை நாம் கடக்கின்ற போது அவர்களும் நம்முடனேயே இருக்கிறார்கள். அவர்களை (போருக்கு வர விடாமல்) நோய் தான் தடுத்து விட்டது என்று கூறினார்கள்.

ஒருவர் சக்தி இருக்கின்ற போது வழமையாக ஒரு அமலை செய்து கொண்டு வருகிறார்.திடீரென்று அவரால் அந்த அமலை செய்ய முடியாமல் போய் விட்டால் அந்த அமலை செய்ததாகவே அல்லாஹ் எழுதி விடுகிறான்.

إِذَا مَرِضَ العَبْدُ، أَوْ سَافَرَ، كُتِبَ لَهُ مِثْلُ مَا كَانَ يَعْمَلُ مُقِيمًا صَحِيحًا

ஒரு அடியான் நோயாளியாகி விட்டாலோ அல்லது பயணத்தில் இருந்தாலோ அவர், ஆரோக்கியமாக இருக்கின்ற போதும் ஊரில் தங்கியிருந்த போதும் அவர் செய்து கொண்டிருந்த அமலைப்போன்றே எழுதப்படும். (புகாரி ; 2996)

ஜமாஅத்துடன் தொழுவதை வழமையாகக் கொண்ட ஒருவருக்கு ஒரு நாள் தூக்கத்தினாலோ நோயினாலோ ஜமாஅத் அவரை அறியாமல் யதார்த்தமாக தவறி விட்டால் ஜமாஅத்துடன் அவர் தொழுததாகவே அவருக்கு நன்மை எழுதப்படும். நஃபிலான தொழுகைகளை  வழமையாக தொழக்கூடிய ஒருவருக்கு பயணத்தின் காரணமாக அத்தொழுகைகளை தொழ முடியாமல் போய்  விட்டால் அவர் அந்த தொழுகைகளை தொழுது விட்டார் என்றே அவர் பதிவேட்டில் பதியப்படும்.

இது அல்லாஹ் அடியார்களுக்கு அளிக்கும் மாபெரும்  வெகுமதியாகும். உலகில் எந்த முதலாளியும் தன் தொழிலாளிக்கு இச்சலுகையை வழங்குவதில்லை. நோயினாலோ பயணத்தினாலோ பணிக்கு செல்ல வில்லையென்றால் அவரது ஊதியத்தை குறைப்பார்களே தவிர சேர்த்து தர மாட்டார்கள். நம்மைப் படைத்த ரப்புல் ஆலமீன் மட்டும் தான் இச்சலுகையை தன் அடியார்களுக்கு வழங்குகிறான்.

ஆனால், இதற்கு அவரது நிய்யத் தூய்மையாக இருக்க வேண்டும்  என்பது நிபந்தனையாகும். பயணத்தினாலோ நோயினாலோ வழமையாக செய்து கொண்டிருந்த  ஒரு அமலை  செய்ய முடிய  வில்லையென்றால் தவறி விட்டதே என உண்மையான மன வருத்தம் அவருக்கு இருக்க வேண்டும்.

مرفوعًا إلى النبي : من طلب الشهادة بصدق بلغه الله منازل الشهداء، وإن مات على فراشه

உண்மையான எண்ணத்துடன் ஒருவர் அல்லாஹ்விடம் ஷஹாதத்தைத் தேடினால் அவர் தன் விரிப்பிலேயே மரணித்தாலும் அல்லாஹ் அவருக்கு ஷஹாதத்தின் படித்தரங்களை அடையச் செய்து விடுகிறான். (திர்மிதி ; 1653)

நிய்யத்திற்கு இருக்கும் மதிப்பையும் மரியாதையையும் இந்த ஹதீஸ் நமக்கு தெளிவாக எடுத்துரைக்கிறது.

وقد صدق ابن المبارك -رحمه الله- حين قال: "رب عمل صغير تكثّره النية، ورب عمل كثير تصغره النية".

எத்தனையோ சிறிய அமல்கள் நிய்யத்தைக் கொண்டு பெரிய அமலாக ஆகி  விடும். எத்தனையோ பெரிய அமல்கள் நிய்யத்தைக் கொண்டு சிறிய அமலாக மாறி விடும் என்று இப்னுல் முபாரக் ரஹ் அவர்கள் குறிப்பிடுவார்கள்.

மேல் கூறப்பட்ட ஹதீஸில் நீங்கள் நடக்கும் பாதையிலும் நீங்கள் கடந்து செல்லும் ஓடையிலும் அவர்கள் உங்களோடு தான் இருக்கிறார்கள்என்ற வார்த்தையிலிருந்து ஒருவர் போருக்காக வீட்டிலிருந்து புறப்பட்டால் அவர் நடப்பது, உட்காருவது,படுப்பது,நிற்பது,ஏறுவது, இறங்குவது, உதவி செய்வது என அனைத்தும் நன்மையாகி விடும் என்ற செய்தி கிடைக்கிறது.

No comments:

Post a Comment