Sunday, September 12, 2021

ஹதீஸ் எண் ; 5 - لك ما نويت

 

عن أبي يزيد معن بن يزيد بن الأخنس قال: كان أبي يزيدُ أخرج دنانير يتصدق بها فوضعها عند رجل في المسجد، فجئت فأخذتها، فأتيته بها، فقال: والله ما إياك أردتُ، فخاصمته إلى رسول الله فقال: لك ما نويت يا يزيد، ولك ما أخذت يا معن[1]، أخرجه البخاري 

மஃன் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் ; என் தந்தை யஸீத் அவர்கள், சில தீனார்களை தர்மம் செய்வதற்காகக் கொண்டு வந்தார்கள்.

அதைப் பள்ளியில் இருந்த ஒருவரிடம் ஒப்படைத்து சென்று விட்டார்கள். அப்போது நான் அங்கு வந்து அதை எடுத்துக் கொண்டு என் தந்தையிடம் வந்தேன்.அல்லாஹ்வின் மீது சத்தியமாக உனக்குத் தர நான் நாட வில்லை என்று என் தந்தை கூறினார்.உடனே நான் நபி அவர்களிடம் இது பற்றி முறையிட்டேன்.அப்போது நபியவர்கள், யஸீதே! நீ எண்ணியது உனக்கு உண்டு. மஃனே! நீ எடுத்தது உனக்கு உண்டு என்றார்கள். (புகாரி ; 1422)

இந்த ஹதீஸில் தந்தை ஸதகாவின் நிய்யத்தில் கொண்டு வந்த பொருளை மகன் எடுத்துக் கொள்வது முறையா என்ற கேள்வி எழுகிறது. அதற்கு மார்க்க அறிஞர்கள், மகனும் தேவையுடையவர் தான். ஸதகா பொருளை பெற்றுக் கொள்ளும் தகுதியுள்ள ஏழையாகத்தான் அவரும் இருந்தார் என்று விளக்கம் தருகிறார்கள்.

ஒரு தந்தை தன் ஸதகா பொருளை தன் மகனுக்கு கொடுக்கலாமா என்று கேள்வி வருகிறது. தாராளமாக கொடுக்கலாம் என்பது தான் மார்க்க அறிஞர்களின் கூற்றாகும்.மட்டுமல்ல அது இரு நன்மையைப் பெற்றுத்தரும் காரியமாகும்.

قَالَتْ: يا نَبِيَّ اللَّهِ، إنَّكَ أمَرْتَ اليومَ بالصَّدَقَةِ، وكانَ عِندِي حُلِيٌّ لِي، فأرَدْتُ أنْ أتَصَدَّقَ به، فَزَعَمَ ابنُ مَسْعُودٍ: أنَّه ووَلَدَهُ أحَقُّ مَن تَصَدَّقْتُ به عليهم، فَقَالَ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ: صَدَقَ ابنُ مَسْعُودٍ، زَوْجُكِ ووَلَدُكِ أحَقُّ مَن تَصَدَّقْتِ به عليهم

ஜைனப் ரலி அவர்கள் நபி அவர்களிடம் வந்து  அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இன்று நீங்கள் ஸதகா செய்யும் படி ஏவினீர்கள்.எனக்குறிய ஆபரணம் என்னிடம் உள்ளது. அதை நான் ஸதகா செய்ய நினைக்கிறேன். நான் ஸதகா செய்யும் நபர்களில் தனது மகன் மிகவும் தகுதியுடையவர் என என் கணவரான இப்னு மஸ்வூத் ரலி அவர்கள் கருதுகிறார்கள் என்று கூறி அதற்கான விளக்கத்தைக் கேட்டார்கள். அப்போது நபியவர்கள், இப்னு மஸ்வூத் சொல்வது உண்மை தான். நீ ஸதகா செய்ய விரும்பும் நபர்களில் உனது கணவரும் உனது மகனும் தான் மிகவும் தகுதியுள்ளவர்கள் என்று கூறினார்கள். (புகாரி ; 1462)

الصَّدقةُ على المسكينِ صدقةٌ وعلى القريبِ صدقتان صدقةٌ وصِلةٌ

ஏழைக்கு கொடுப்பது தர்மம் என்ற ஒரு நன்மையை பெற்றுத்தரும். உறவினருக்குக் கொடுப்பது தர்மம் மற்றும் உறவை சேர்ந்து வாழுதல் என்ற இரு நன்மையை பெற்றுத் தரும். (திர்மிதி ; 658)

உபரியான சதகாவைத்தான் மகனுக்கு கொடுப்பது கூடும். கடமையான ஜகாத்தின் பொருளை மகனுக்கு கொடுப்பது கூடாது. பிள்ளைகள், பெற்றோர்கள், மனைவி, அடிமைகள், இப்படி யாருக்கு செலவு செய்வது நம்மீது கடமை இருக்கிறதோ அவர்களுக்கு நம் ஜகாத்தின் பொருளைத் தருவது ஆகுமானதல்ல என்று இஸ்லாம் கூறுகிறது.

இந்த ஹதீஸிலிருந்து கிடைக்கும் இன்னொரு செய்தியாகிறது, ஒருவர் ஜகாத் பெறுவதற்கு தகுதியானவர் என்று நினைத்து அவருக்கு நாம் ஜகாத் பொருளை கொடுத்தோம்.ஆனால் கொடுத்த பிறகு அவர் ஜகாத் வாங்குவதற்கு தகுதி இல்லாதவர் என்று தெரிந்தால், நம் ஜகாத் ஏற்றுக்கொள்ளப்படும். ஏனென்றால் நம் நிய்யத்து தகுதியானவருக்கு ஜகாத் கொடுக்க வேண்டும் என்பது தான்.

இன்றைய காலச் சூழலில் மதரஸாவிற்கு என்றும் தன் சொந்த தேவைக்கு என்றும் நிறைய பேர் உதவி தேடி வருகிறார்கள். அதில் பொய் சொல்பவர்களும் உண்டு. அவ்வாறு வருகின்றவர்களுக்கு நாம் உதவி செய்தோம். ஆனால் உண்மையில் அவர் அதற்கு தகுதி இல்லாதவராக இருந்தாலும் ஸதகா கொடுத்த நன்மை நமக்கு கிடைத்து விடும் என்பது மேற்கூறப்பட்ட ஹதீஸில் இருந்து நமக்கு கிடைக்கும் செய்தியாகும்.

No comments:

Post a Comment