عن أبي هريرة رضي الله عنه - قال: قال رسول
الله صلى الله عليه وسلم: إنَّ اللَّهَ لا يَنْظُرُ إلى اجسامكم ولا الي صُوَرِكُمْ
ولَكِنْ يَنْظُرُ إلى قُلُوبِكُمْ وأَعْمالِكُمْ (رواه مسلم
நிச்சயமாக அல்லாஹ் உங்களின் உடல்களையோ தோற்றங்களையோ பார்க்க மாட்டான். என்றாலும் உங்கள் உள்ளங்களையும் உங்களின் அமல்களையும் பார்ப்பான். (முஸ்லிம் ; 2564)
அல்லாஹுத்தஆலா தன் அடியார்களை, அவன் ஆரோக்கியமாக
இருக்கிறானா அல்லது நோயாளியாக இருக்கிறானா குண்டாக இருக்கிறானா அல்லது ஒல்லியாக இருக்கிறானா
அவன் அழகாக இருக்கிறானா அல்லது அழகில்லாமல் இருக்கிறானா அவன் செல்வம் படைத்தவனாக இருக்கிறானா
அல்லது ஏழையாக இருக்கிறானா அவன் உயர்ந்த குடும்பத்தைச் சார்ந்தவனாக இருக்கிறானா நல்லது
சாதாரண குடும்பத்தைச் சார்ந்தவனாக இருக்கிறானா என்றெல்லாம் பார்ப்பதில்லை. அவனுடைய
உள்ளம் எப்படி இருக்கிறது. அவனது உள்ளத்தில் எண்ணமும் நிய்யத்தும் எப்படி இருக்கிறது
மற்றும் அவனுடைய செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதைத் தான் பார்க்கிறான்.
பார்க்கிறான் என்பதற்கு பொருள் என்னவென்றால் அதற்குத்தான்
அவன் முக்கியத்துவம் தருகிறான். அதைக் கொண்டு தான் ஒருவன் அல்லாஹ்விடம் உயரவைப்
பெறுகிறான். என்பதாகும். எனவே ஒருவன் அல்லாஹ்விடம் உயர்வைப் பெறுவது அவனுடைய
உள்ரங்கத்தைக் கொண்டு தான்.
இன்றைக்கு பொதுவாக நாம் வெளி ரங்கத்தைப் பார்த்து
ஒருவரை எடை போட்டு விடுகிறோம். வெளிப்படையில் ஒருவர் தூய்மையாகவும் அழகாகவும் இருந்தால்
அவர் உயர்ந்தவர் என்றும் வெளித் தோற்றத்தில் ஒருவர் அழுக்காகவும் அழகில்லாதவராகவும்
இருந்தால் அவர் தாழ்ந்தவர் என்றும் முடிவுக்கு வந்து விடுகிறோம். ஆனால் இறைவன் நம்
உள்ளத்தையும் உள்ளத்தில் இருக்கிற நல்ல எண்ணங்களையும் மனத் தூய்மையையும் பிறரைப் பற்றிய
தூய்மையான எண்ணத்தையும் இறையச்சத்தையும் தான் பார்க்கிறான். இறையச்சத்தைக் கொண்டு தான்
ஒரு மனிதன் இறைவனிடத்தில் உயர்ந்தவனாக கணிக்கப்படுகிறான்.
لا فضلَ لعربيٍّ على عجميٍّ ، ولا لعجميٍّ
على عربيٍّ ، ولا لأبيضَ على أسودَ ، ولا لأسودَ على أبيضَ - : إلَّا بالتَّقوَى
அரபி அல்லாதவரை விட அரபிக்கோ அரபியை விட அரபி அல்லாதவருக்கோ
கருப்பரை விட வெள்ளையருக்கோ வெள்ளையரை விட கருப்பருக்கோ இறையச்சத்தைக் கொண்டே தவிர
வேறு எந்த உயர்வும் இல்லை. (ஷுஃபுல் ஈமான் ; 5137)
வலிமார்களை நேசிக்க வேண்டும், மதிக்க வேண்டும் என்பது
குர்ஆன் மற்றும் ஹதீஸ் கூறும் செய்தியாகும். ஆனால் எண்ணற்ற வலிமார்கள் வெளித்
தோற்றத்தில் சாதாரண மனிதர்களைப் போன்று தான் தெரிவார்கள். ஏன்! அதில்
சிலர் பங்கரையான தோற்றத்துடன் பார்ப்பதற்கு அலங்கோலமான நிலையில் கூட இருக்கலாம்.
அதனால் சாதாரணமாக தெரிகின்ற யாரையும் நாம் உதாசீனப்படுத்தி விடக்கூடாது.
அவர்களிடம் அவமரியாதையாக நடந்து விடக்கூடாது. உண்மையில் அவர்கள் இறை நேசத்தைப்
பெற்றவர்களாக இருந்தால் அதன் மூலம் நாம் அல்லாஹ்வின் கோபத்தைப் பெற வேண்டிய நிலை
ஏற்படும் என்பதையும் மேற்கூறப்பட்ட ஹதீஸின் வழியே நாம் அறிகிறோம்.
No comments:
Post a Comment