Thursday, September 23, 2021

ஹதீஸ் எண் ; 23 لو ان لابن ادم واديا من ذهب

 

عن عبد الله بن عباس -رضي الله عنهما: أن رسول الله قال: لو أن لابن آدم وادياً من ذهب أحب أن يكون له واديان، ولن يملأ فاه إلا التراب، ويتوب الله على من تاب

நிச்சயமாக மனிதனுக்கு தங்கத்தினாலான ஒரு ஓடை இருந்தாலும் இரண்டு ஓடைகள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவான். மண்ணைத் தவிர அவனுடைய வாயை வேறு எதுவும் நிரப்பாது. யார் தவ்பா செய்கிறானோ அவனுடைய தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். (புகாரி ; 6437)

அல்லாஹ் மனிதனுக்கு பொருள் ஆசையையும் ஆயுளின் மீது ஆசையையும் கொடுத்திருக்கிறான். எல்லா மனிதர்களுக்கும் இவ்விரு ஆசையும் உண்டு. அதில் எல்லையும் இல்லை. முடிவும் இல்லை. சிறியவர்கள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை வயது வித்தியாசமில்லாமல் அனைவருக்கும் இந்த ஆசைகள் உண்டு. அதுவும் மரணம் வரை அந்த ஆசை அனைவரையும் பிடித்திருக்கும். மண்ணைத் தவிர அவனுடைய நாவை வேறு எதுவும் நிரப்பாது என்றால் இன்னும் வேண்டும் வேண்டும் என்ற மனிதனுடைய ஆசைக்கு முடிவு மரணம் தான் என்று குறிப்பிடுகிறார்கள்.

يَهْرَمُ ابنُ آدَمَ وتَشِبُّ منه اثْنَتانِ: الحِرْصُ علَى المالِ، والْحِرْصُ علَى العُمُر

மனிதன் வயது முதிர்ந்து விடுவான். அவரிடத்தில் இரண்டு விஷயங்கள் இளமையாகவே இருக்கும். ஒன்று பொருளின் மீது பேராசை. இரண்டாவது ஆயுட்காலத்தின் மீது பேராசை. (புகாரி ; 6421)

இன்றைக்கு சாதாரணமாக நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற ஆசை எல்லோருக்குமே இருக்கிறது. ஒருவருடைய அஸல் வயதை விட குறைத்து சொன்னால் சந்தோஷப்படுவார்.ஆனால் இரண்டு வயது அதிகமாக சொல்லி விட்டால், எனக்கு அவ்வளவு வயது ஆகிவிட்டதா என்று அவருக்கு கோபம் வந்து விடும். இரண்டு வயது அதிகமாக சொல்வதையே இன்றைக்கு பெரும்பாலும் மனிதர்கள் விரும்புவதில்லை. அப்படி என்றால், நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கிறது.

அதேபோன்றுதான் பொருளின் மீதும் ஆசை. நூறைப் பார்த்தவன் ஆயிரத்தைப் பார்க்க ஆசைப்படுகிறான். ஆயிரத்தைப் பார்த்தவன் இலட்சத்தைப் பார்க்க ஆசைப்படுகிறான். இலட்சத்தைப் பார்த்தவன் கோடியைப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறான். கோடியைப் பார்த்து விட்டவன் இன்னும் அதைப் பல கோடிகளாக்க வேண்டுமென்று முயற்சிக்கிறான். பொருளின் மீது மனிதனுக்கு இருக்கக்கூடிய ஆசைக்கு எல்லையே இல்லை. அதனால் தான் அவ்விரண்டும் மனிதர்களுக்கு இளமையாகவே இருக்கிறது என்று நபி அவர்கள் கூறினார்கள்.

நாம் படித்த அந்த ஹதீஸில் நபியவர்கள் ஆட்டின் ஒரு ஓடை என்றோ ஒட்டகத்தின் ஒரு ஓடை என்றோ குறிப்பிட வில்லை. தங்கத்தினாலான ஓடை என்று குறிப்பிடுகிறார்கள். தங்கத்தினாலான ஒரு ஓடை இருந்தாலும் இன்னொரு ஓடை வேண்டும் என்று மனிதன் விரும்புவான் என்றால், மனித ஆசை எவ்வளவு வீரியமாக இருக்கிறது என்பதை இந்த ஹதீஸிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

وتحبون المال حبا جما

நீங்கள் பொருளை அதிகமாக விரும்புகிறீர்கள். (அல்குர்ஆன் : 89 ; 20)

பொருளாசை என்பது அது புகழுக்குரிய விஷயமல்ல. மிகவும் ஆபத்தான விஷயம். மனிதனுடைய ஆசையைக் குறிப்பிட்டு விட்டு அதற்கு அடுத்து தவ்பாவை பற்றி நபி அவர்கள் கூறியதிலிருந்து, தவ்பா செய்ய வேண்டிய அளவிற்கு பொருளாசை என்பது ஆபத்தைத் தரக்கூடியது என்பதை இந்த வாசக அமைப்பிலிருந்து நமக்கு உணர்த்தப்படுகிறது.

ما ذئبان جائعان أرسلا في غنم بأفسد لها من حرص المرء على المال والشرف لدينه"

பொருளின் மீதான ஆசையும் பதவியின் மீதான ஆசையும் ஒருவனுடைய மார்க்கத்தை அழித்து விடுவதை விட ஆட்டு மந்தையில் விடப்பட்ட பசியான இரு ஓநாய்கள் அழிவை ஏற்படுத்துவதில்லை. (திர்மிதி ; 2376)

இன்றைக்கு உள்ள அதிகமான செல்வந்தர்களின் நிலையை நாம் சற்று உற்று நோக்கினால் பொருளின் மீதான ஆசை நமக்கு குறைந்து விடும். இன்றைக்கு நிறைய பேரிடம் பணம் இருக்கிறது. செல்வ செழிப்பு இருக்கிறது. எல்லா வசதி வாய்ப்புகளும் இருக்கிறது. அத்தோடு சேர்த்து ஷுகரும் இருக்கிறது. உப்பும் இருக்கிறது. எல்லா நோய்களும் இருக்கிறது. எல்லாம் இருந்தும் ஷுகர் சாப்பிடக்கூடாது. உணவில் உப்பை சேர்த்துக் கொள்ளக் கூடாது. இரண்டு இட்லிக்கு மேல் சாப்பிடக் கூடாது என்றெல்லாம் அவர்களுக்கு அறிவுறுத்தப் படுகிறது. எல்லா சுகங்களும் இருந்தும் அதை அனுபவிக்க முடியாத ஒரு துர்பாக்கிய நிலை தான் இன்றைக்குள்ள அதிகம் செல்வம் படைத்தவர்களுடைய நிலையாக இருக்கிறது.


No comments:

Post a Comment