Thursday, September 23, 2021

ஹதீஸ் எண் ; 24 يضحك الله الي رجلين

 

عن ابي هريرة رض ان رسول الله قال يضحك الله إلى رجلين يقتل أحدهما الآخر كلاهما يدخل الجنة ، يقاتل هذا في سبيل الله فيستشهد ، ثم يتوب الله على القاتل فيسلم فيقاتل في سبيل الله فيستشهد

இரண்டு நபர்களில் ஒருவர் இன்னொருவரைக் கொன்று விடுகிறார். இருவரும் சொர்க்கத்தில் நுழைகின்றனர்.அந்த இருவரைப் பார்த்து அல்லாஹ் சிரிக்கிறான். ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு ஷஹீதாக்கப்படுகிறார்.அவரைக் கொன்றவரோ அல்லாஹ்விடம் தவ்பா செய்து இஸ்லாத்தை ஏற்று மற்றொரு போரில் ஷஹீதாக்கப்படுகிறார். (புகாரி ; 2826)

1 - பொதுவாக சிரிப்பு அழுகை மகிழ்ச்சி கவலை இதுவெல்லாம் மனிதர்களுக்கு இருக்கக்கூடிய பண்புகள். ஒருவன், தான் எதிர் பார்த்த விஷயம் நடக்கிறது என்றால் அவன் மகிழ்ச்சி அடைகிறான். அந்த உணர்வே கொஞ்சம் அதிகமாக இருந்தால் அது சரிப்பாக மாறுகிறது. ஒருவனுக்கு எதிர்பார்க்காத விஷயம் நடந்தால் கவலைப்படுகிறான். அந்த உணர்வு மேலிடுகிற போது அழுகையாக மாறுகிறது. இவ்வாறு அவ்வப்போது ஏற்படுகின்ற உணர்வுகள் எல்லாம் மனிதர்களுக்கு உரியவை. இறைவன் இந்த உணர்வுகளை விட்டும் அப்பாற்பட்டவன்.

எனவே ஹதீஸில் இறைவன் சிரித்தான் என்று வந்திருக்கிற இந்த வார்த்தைக்கு பொருள் தருகின்ற பொழுது சில மார்க்க அறிஞர்கள், சிரிப்பு என்பதற்கு பொருந்திக் கொள்ளுதல் என்று பொருள் தர வேண்டும். அதாவது அவ்விருவரையும் இறைவன் பொருந்திக் கொண்டான் என்று பொருள் கொடுக்க வேண்டும் எனக் குறிப்பிடுகிறார்கள். அல்லது மலக்குமார்கள் சிரித்தார்கள் என்று வைத்துக் கொள்ள வேண்டும். மலக்குமார்கள் சிரித்தார்கள் என்பதை இறைவன் சிரித்ததாக இங்கே சொல்லப்பட்டிருக்கிறது என்று கூறுகிறார்கள்.

மலக்குகள் சிரித்தார்கள் என்று வைத்துக் கொண்டால் அதற்கு காரணம், அவ்விருவரும் ஆரம்பத்தில் எதிரும் புதிருமாக இருந்தார்கள். ஒருவர் காஃபிராகவும் இன்னொருவர் ஈமான் கொண்ட இஸ்லாமியராகவும் இருந்தார். இவரை அவருக்கு பிடிக்காது. அவரை இவருக்குப் பிடிக்காது. இவரைப் பற்றிய தவறான எண்ணம் அவருக்கும் அவரைப் பற்றிய தவறான எண்ணம் இவருக்கும் இருந்தது. ஆனால் இப்பொழுது அவ்விருவரும் சொர்க்கம் செல்கிறார்கள். சொர்க்கவாதிகளைப் பொறுத்த வரை பிறரைப் பற்றிய தவறான எண்ணம் குரோதம் விரோதம் இவை அனைத்தும் நீக்கப்பட்டு தூய்மையான நிலையில் தான் அவர்கள் சுவனத்தில் நுழைவார்கள். எனவே ஆரம்பத்தில் எதிரியாக இருந்த இருவர் இப்போது சுவனத்தில் நண்பர்களாக மாறிப் போகிறார்கள். அதைப்பார்த்து மலக்குகள் சிரிக்கிறார்கள் என்று விளக்கம் தரப்படுகிறது.

இன்னும் சில மார்க்க அறிஞர்கள் சிரித்தல் என்று தன்மையும் இறைவனுக்கு இருக்கிறது. அல்லாஹ் சிரித்தான் என்றே பொருள் தர வேண்டும். ஆனால் எப்படி சிரித்தான், எதை வைத்து சிரித்தான் என்று யோசிக்காமல் அல்லாஹ் அவனுக்கு தகுதியான விதத்தில் அந்த சிரிப்பு அவனுக்கு ஏற்பட்டது என்று விளங்கிக் கொள்ள வேண்டும் என கூறுகிறார்கள்.

2 - ஒருவன் எவ்வளவு பெரிய குற்றம் புரிந்தவனாக இருந்தாலும் அவன் உரிய முறையில் அல்லாஹ்விடத்தில் தவ்பாவைத் தேடுகிற பொழுது அல்லாஹ் அதை மன்னித்து விடுகிறான் என்பதும் இந்த ஹதீஸ் சொல்லக்கூடிய செய்தியாகும்.

No comments:

Post a Comment