Monday, September 27, 2021

ஹதீஸ் எண் 26 من يستعفف يعفه الله

 

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِي اللَّهم عَنْهم إِنَّ نَاسًا مِنَ الْأَنْصَارِ سَأَلُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ فَأَعْطَاهُمْ ثُمَّ سَأَلُوهُ فَأَعْطَاهُمْ ثُمَّ سَأَلُوهُ فَأَعْطَاهُمْ حَتَّى نَفِدَ مَا عِنْدَهُ فَقَالَ مَا يَكُونُ عِنْدِي مِنْ خَيْرٍ فَلَنْ أَدَّخِرَهُ عَنْكُمْ وَمَنْ يَسْتَعْفِفْ يُعِفَّهُ اللَّهُ وَمَنْ يَسْتَغْنِ يُغْنِهِ اللَّهُ وَمَنْ يَتَصَبَّرْ يُصَبِّرْهُ اللَّهُ وَمَا أُعْطِيَ أَحَدٌ عَطَاءً خَيْرًا وَأَوْسَعَ مِنَ الصَّبْرِ )) (صحيح البخاري)

அன்சாரிகளில் சிலர் நபியிடத்தில் வந்து உதவி கேட்டார்கள். நபியவர்கள் அவர்களுக்குக் கொடுத்தார்கள். மீண்டும் கேட்டார்கள். அப்போதும் கொடுத்தார்கள். மீண்டும் கேட்டார்கள். அப்போது நபியவர்கள் கொடுத்தார்கள். கடைசியாக அவர்கள் இடத்தில் இருந்து காலியாகி விட்டது. அப்போது என்னிடத்தில் உள்ள நலவானது எதையும் நான் உங்களுக்குத் தராமல் சேமித்து ஒளித்து வைக்க மாட்டேன். யார் பேணுதலாக நடக்கிறாரோ அவரை அல்லாஹ் பேணுதல் உள்ளவராக ஆக்கி விடுவான். யார் தேவையற்றவராக இருக்கிறாரோ அவரை தேவையற்றவராக ஆக்கிவிடுவான். யார் பொறுமையை மேற் கொள்கிறாரோ அவரை அல்லாஹ் பொறுமையாளர்களாக ஆக்கி விடுவான். பொறுமையை விட மிக விசாலமான சிறந்த கொடை எதையும் யாரும் வழங்கப்படுவதில்லை. (புகாரி ; 1469)

பொதுவாக நபியுடைய பண்பு என்னவென்றால் யார் எப்போது எதைக் கேட்டாலும் தன்னிடத்திலே உள்ளதை கொடுத்து விடுவார்கள். தேவையறிந்து யாருக்கு எதை கொடுக்க வேண்டுமோ அதை கொடுப்பார்கள். கேட்டவருக்கு இல்லை என்று சொல்லாத அளவிற்கு அதிகம் கொடுக்கும் கொடை வள்ளலாக நபிகள் பெருமானார் ஸல் அவர்கள் இருந்திருக்கிறார்கள். இங்கே மூன்று முறை கேட்டும் அவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இருந்தாலும் வாங்கியதில் அவர்களுக்கு தன் நிறைவு ஏற்படாத காரணத்தினாலும் பிறரிடத்தில் தேவையாகக் கூடிய அந்த நிலையின் விபரீதத்தை அவர்களுக்கு உணர்த்துவதற்காகவும் சில உபதேசங்களை செய்தார்கள்.

من يستعفف يعفه الله

இந்த வார்த்தைக்கு பொருள் ; யார் ஒழுக்கமாக பேணுதலாக நடக்கிறார்களோ, அல்லாஹ் தடுத்த விஷயங்களை விட்டும் தன்னை தூய்மைப்படுத்திக் கொள்கிறார்களோ அல்லாஹ் அவரை தூய்மையானவர்களாக ஆக்கி விடுவான்.

 

من يستغن يغنه الله

இந்த வார்த்தைக்கு பொருள் ; அல்லாஹ் அல்லாத வேறு யாரிடத்திலும் தேவையாகாமல் யார் தன்னை தடுத்துக் கொள்கிறாரோ அல்லாஹ் அவரை தேவையற்றவராக செல்வந்தராக ஆகிவிடுவான். தேவையாகுவதும் உதவி தேடுவதும் இறைவனிடத்தில் மட்டும் இருக்க வேண்டும். இறைவனல்லாத வேறு யாரிடத்திலும் தேவையாகக் கூடாது.

ليس الغني عن كثرة العرض ولكن الغني غني النفس

அதிகம் பொருள் இருத்தல் என்பது செல்வமல்லز மக்களிடத்தில் தேவையாகாமல் இருப்பது தான் செல்வமாகும். (புகாரி ; 6446)

يحسبهم الجاهل اغنياء من التعفف

அவர்களின் பேணுதலால் அவர்களைப் பற்றி தெரியாதவர்கள் அவர்களை செல்வந்தர்கள் என்று கருதிக் கொள்வார்கள். (அல்குர்ஆன் : 2 ; 273) என்று சஹாபாக்களைக் குறித்து அல்லாஹ் கூறுகிறான்.

நபி ஸல் அவர்களிடத்தில் பாடம் பயின்று கொண்டிருந்த திண்ணைத் தோழர்களைப் பற்றி நமக்கு நன்கு தெரியும். அவர்கள் எந்த வசதியும் இல்லாதவர்கள். உடுத்துவதற்கு ஓரிரு ஆடைகள் இருக்கும். அடுத்த நேர உணவுக்கு வழி இருக்காது. அடுத்த நேர உணவு கிடைக்குமா கிடைக்காதா என்று தெரியாது. உணவில்லாமல் பல நேரங்கள் பட்டினியாகவும் ஒட்டிய வயிறோடும் அவர்கள் இருந்திருக்கிறார்கள். இருந்தாலும் யாரிடத்திலும் தேவையான அளவிற்கு தன்னை தூய்மைப்படுத்திக் கொண்டவர்கள் தான் அவர்கள்.

ஒரு முறை அபூஹுரைராரா ரழி அவர்களுக்கு கடும் பசி ஏற்பட்டு வீதியில் விழுந்து  விடுகிறார்கள். அப்போது வழியில் வந்த அபூபக்ர் ரழி அவர்களிடம், தன்னை சாப்பாட்டுக்கு அழைத்துச் செல்ல  மாட்டார்களா? என்ற எண்ணத்தில் ஒரு ஆயத்தின் விளக்கத்தை அபூஹுரைரா ரழி அவர்கள் கேட்டார்கள். ஆனால் அபூபக்ர் ரழி அவர்கள் அதற்கான விளக்கத்தை மட்டும் சொல்லிவிட்டு சென்று விட்டார்கள். அதன் பின் உமர் ரழி அவர்கள் அவ்வழியே வந்ததும் அபூபக்ர் ரழி அவர்களிடம் ஆயத்தின் விளக்கத்தைக் கேட்டது போல் உமர் ரழி அவர்களிடமும் கேட்டார்கள். உமர் ரலி அவர்களும் அதற்கான விளக்கத்தை சொன்னார்களே தவிர அபூஹுரைராவின் பசியை புரிந்து கொள்ள வில்லை. மூன்றாவதாக கருணை நபி ஸல் அவர்கள் அவ்வழியே வந்ததும், அவர்களின் முக பாவனையை வைத்து அபூஹுரைரா வாருங்கள் போகலாம் என அவர்களை அழைத்து அவர்களுக்கு உணவு கொடுத்து அவர்களின் பசியைப் போக்கினார்கள்.

استغنِ عمن شئت تكن نظيره، واحتجْ إلى من شئت تكن أسيره، وأحسن إلى من شئت تكن أميره

நீ விரும்பக் கூடியவர்களிடத்தில் தேவையாகாமல் தேவையற்று இரு. நீ அவரைப் போன்று ஆகி விடுவாய். அவர்களிடத்தில் நீ தேவையானால் அவர்களுக்கு நீ அடிமையாகி விடுவாய். அவர்களுக்கு உபகாரம் செய்தால் அவர்களுக்கு நீ தலைவராகி விடுவாய் என்று பெருமக்கள் சொல்வார்கள்.

பொறுமையை மிகப்பெரிய கொடை என்று சொன்னதற்கு காரணம் ;  பொறுமையைக் கொண்டு தான் நாம் எல்லாவற்றையும் அடைந்து கொள்ள முடியும். உலக விஷயமாக இருந்தாலும் சரி மறுமை சார்ந்த விஷயமாக இருந்தாலும் சரி நாம் எதிர்பார்க்கின்ற அந்தஸ்தையும் படித்தரத்தையும் பெற வேண்டுமென்றால் சிரமப்பட வேண்டும். கஷ்டப்பட வேண்டும். பல சோதனைகளை சந்திக்க வேண்டும். அதில் பொறுமையை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் நம் இலக்கை அடைந்து கொள்ள முடியும். பொறுமை இன்றி எதையும் அடைந்து கொள்ள முடியாது. எனவே எல்லா சாதனைகளுக்கும் பின்னால் பொறுமை இருக்கிறது எனவே தான் பொறுமையை மிகச்சிறந்த கொடை என்றார்கள். அதுபோல நாம் ஏற்கனவே குறிப்பிட்டதை போல் பொறுமை மூன்று வகையாக இருக்கிறது. சோதனைகளில் பொறுமை. நன்மையைச் செய்வதில் பொறுமை. பாவத்தை விட்டும் விலகுவதில் பொறுமை. எனவே ஒருவர் சோதனைகளில் வெற்றி பெறுவதற்கும் நன்மையான காரியங்களைச் செய்வதற்கும் தீமைகளை விட்டு விலகுவதற்கும்  பொறுமை தேவைப்படுகிறது. எனவே தான் பொறுமை மிகச் சிறந்த கொடை என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.

No comments:

Post a Comment